Saturday 8 November 2014

சங்க இலக்கியம் கட்டுரை

நவீன தமிழ்க் கவிதைகளும் செம்மொழிக் கூறுகளும்

                                                                                      ந.முருகேசபாண்டியன்
                                                                                                               mpandi2004@yahoo.com



                                மனித நினைவுகளின் வழியே கடந்த காலத்தை மீட்டுருவாக்கும் மொழியானது, வரலாற்றைச் சாத்தியப்படுத்துகின்றது. சமூகமயமாக்கலின் அடிப்படையில் மொழி, காலந்தோறும் பண்பாட்டுப் பதிவாகவும் விளங்குகின்றது. மனிதனின் ஆறாவது புலனாக விளங்கும் மொழியின் மூலம் சமூகமயமாக்கல் துரிதமாக நடைபெறுகின்றது. பண்டைய இலக்கியப் படைப்புகள் தொடங்கிப் பதிவாகியுள்ள விழுமியங்களின் தொடர்ச்சியானது, அம்மொழியின் வளத்திற்குச் சான்றாக உள்ளது. தொன்மை வாய்ந்த செம்மைமிக்க மேன்மையான அம்சங்கள், செவ்வியல் தன்மையுடையதாக்க் கருதப்படுகின்றன. இன்று பேச்சு வழக்கிலிருந்து அழிந்திருந்தாலும், பண்டைக்காலத்தில் வளமான இலக்கியப் படைப்புகளுடன் சிறந்திருந்த மொழிகளும் செவ்வியல் தன்மையுடையனவாகக் கருதப்படுகின்றன. பொதுவாகச் செம்மொழி எனத் தனித்த அங்கீகாரம் ஒரு மொழிக்கு அரசினால் வழங்கப்படுவது அரசியல் பின்புலமுடையது. பன்னெடுங்காலமாகப் பாரம்பரியமான  இலக்கியப் படைப்புகளினால் அறியப்படும் மொழியானது செவ்வியல் தன்மையுடையதாகக் குறிப்பிடப்படுகின்றது. மேலை இலக்கியத்தின் தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட செம்மொழி என்ற கருத்தியலினால் அடையாளப்படுத்தப்படும் போதுதான் தமிழ் போன்ற இரண்டாயிரமாண்டுப் பழமையான மொழிக்குச் சிறப்பு எனக் கருதப்படுவது ஒருவகையில் விநோதம்தான். தமிழின் தொன்மையான இலக்கியமான சங்க இலக்கியமும் காப்பியங்களும் மறுவாசிப்பினுக்குட்படும் வேளையில்,பண்பாட்டு மாற்றங்களுக்கப்பால்       சங்கக்கவிதை மரபின் தொடர்ச்சியை நவீன வாழ்கையில்  கண்டறிய முடிகின்றது.  சங்கப் படைப்புகளில் இடம் பெற்றுள்ள செம்மொழிக் கூறுகள், இன்றைய நவீன கவிதையிலும் தொடர்வது, வாழ்க்கையின் ஆதாரமான விஷயங்களில் பெரிய மாற்றமில்லை என்பதை உணர்த்துகின்றது.

                ஒரு மொழி பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வழக்கினில் உள்ளதெனில், அம்மொழியில் வெவ்வேறு காலகட்டங்களில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளில் ஒத்திசைவைக் கண்டறிய முடியும். வடிவம் சார்ந்த நிலையில் புதிய வடிவங்களை ஏற்றுக்கொள்கின்ற சுழலில், கருத்துரீதியிலும் தொடர்ச்சி வெளிப்படுகின்றது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழி சார்ந்த தமிழர் வாழ்க்கையின் தொன்மையான அம்சங்கள் சங்கப் படைப்புகளில் பரவலாகப் பதிவாகியுள்ளன.  தமிழ் மனம் காலந்தோறும் எவ்வாறு நுட்பமாக இயங்கியுள்ளது என்பது, சங்க இலக்கியம் தொடங்கி, நவீன கவிதை வரையிலும் முக்கியமானது. செம்மொழி இலக்கியமாகக் கருதப்படும் சங்கப் படைப்புகள் இன்றளவிலும் மொழியில் செலுத்துகின்ற ஆளுகை கவனத்திற்குரியது. சங்க மரபு, பாரம்பரியம், தொன்மை போன்றவற்றின் அடிப்படையில் செவ்வியல் அம்சங்களைக் கண்டறியலாம்.
       செவ்வியல் மொழிகள் எனற வரையறைக்கு ஆதாரமாக விளங்குகின்ற படைப்புகள் முக்கியமானவை. பண்டைய கிரேக்க, ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிப்  படைப்புகளில் புராணம், தொன்மம், கட்டுக்கதை, தொன்மம், இயற்கையிறந்த நிகழ்ச்சிகள், கடவுளர்களின் அதியற்புத ஆற்றல்கள் சார்ந்து இறையியல் அம்சங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டிருந்தது. சங்க இலக்கியப் புலவர்கள் வைதிக, அவைதிக மரபு சார்ந்த புராணிகக் கதைகளைப் புறந்தள்ளிவிட்டு, நடப்பியல் சார்ந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்தனர். கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, விண்ணுலகம் பற்றிய கற்பனைகளுக்கு முன்னுரிமை தராமல், காதலையும் வீரத்தையும் போற்றியது தமிழ்ச் செவ்வியலின் தனித்துவம்.
         
                நிலமும் வெளியும் பற்றிய புரிதலுடன் விரியும் சங்கப் புலவர்களின் ஐந்திணை நிலப் பாகுபாட்டிலான திணைசார் வாழ்க்கையை முன்னிலைப்படுத்திய சங்கத்திணை மரபு இன்றளவும் தொடர்கின்றது. பூமியில் மனித இருப்பின் மீதான நம்பிக்கை, துணிவுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம், சக உயிரினங்களை நேசித்தல், இய்ற்கையைப் போற்றுதல் எனச் சங்கப் பாடல்களின் பொதுமைப் பண்புகள் குறிப்பிடத்தக்கன. சங்கப் பாடல்களுடன் ஒப்பிடத்தக்க பிற செவ்வியல் மொழிப் படைப்புகள் மதம் சார்ந்து, தங்கள் குழுவினர் நலனுக்கு முன்னுரிமை தந்தபோது, ‘ யாதும்  ஊரே யாவரும் கேளிர்என்ற வரியின்மூலம் உருவாக்கப்பட்ட தமிழ்த் தொல் மனம் ஒப்புவமை அற்றது. பொது நலன் சார்ந்து உலகம் குறித்த க்கறையுடன் பாடும் மரபு, இன்று வரை தமிழில்  தொடர்கின்றது.

`               தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி தர முனைந்தபோது, மொழியிலாளர் வகுத்தளித்த வரையறைகளின் அடிப்படையில் அணுகும் நிலை உருவானது. ஒவ்வொரு மொழியும், அம்மொழியில் எழுதப்பட்டுள்ள படைப்புகளும் தனித்துவமானவை; பிற மொழிகளுடன் கறாராக ஒப்பிட இயலாதவை. என்றாலும் ஒற்றைத்தன்மையுடன் விதிகளின் அடிப்படையில் அணுகி, செம்மொழி என வரையறுப்பது நடைமுறையில் உள்ளது. ஒரு மொழியைச் செம்மொழி என வரையறுக்கப்  பின்வரும் பண்புகள் அடிப்படைகளாகக் கருதப்படுகின்றன. அவை: தொன்மை, தனித்துவம், பொதுமை, நடுநிலைமை , தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலையறிவு, பிற மொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்துவம், மொழிக் கோட்பாடு.

                                தமிழைப் பொறுத்தவரையில் செம்மொழி எனக் குறிப்பிட தமிழுக்கே உரித்தான தனித்துவமான அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
*உலக மொழிகளில் எதிலும் காணப்படாத திணைக் கோட்பாடு தமிழுக்கு மட்டும் உரியது என்ற நிலையில் சிறப்பிற்குரியது.
*சங்க காலத்தில் வாழ்ந்த பல்வேறு இனக்குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளை அப்படியே ஏற்றுக்கொள்வது தமிழ் திணை மரபின் தனித்துவம்.

*இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான இலக்கிய வளத்துடன், காலந்தோறும்             தொடர்ந்து காத்திரமான இலக்கியப் படைப்புகள் தமிழில் வெளியாதல்.

*இலக்கியப் படைப்புகளின் அடிப்படையில் வளமான பண்பாட்டு மரபினுக்குச் சொந்தமானவர்கள் என்ற கருத்து, தமிழர்களிடம் தலைமுறைகள்தோறும் கடந்து செல்லுதல்.

*ஒப்பீட்டளவில் பிற மொழிப் படைப்புகளைவிடத் தனித்து விளங்கும் படைப்புகளைத் தமிழ் மொழி  கொண்டிருத்தல்.

*தமிழுக்கு உரித்தான தொடர்ச்சியான இலக்கிய பாரம்பரியம், பண்பாட்டு ஆளுகை

                 சங்க காலம் முதலாக யாப்பிலக்கண மரபில் எழுதப்பட்ட தமிழ்ச் செய்யுள்கள், காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. யாப்பறிந்துப் பாடல்கள் புனையும் புலவர் கூட்டம் 1960-களில்கூட தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கியது. பாரதிதாசன் கவிதை மரபினர், திராவிட இயக்கக் கருத்தியலுடன் மரபுக் கவிதையாக்கத்தில் தனித்திருந்தனர். பாரதியினால் வசன கவிதை தமிழுக்கு அறிமுகமானாலும், பெரிய வீச்சாகப் புதுக்கவிதை பரவிடாத சூழலில், 1959-இல் சி.சு.செல்லப்பா தொடங்கிய எழுத்து பத்திரிகையில் வெளியான புதுக்கவிதைகள் மெல்ல அதிர்வை ஏற்படுத்தின. மேலை இலக்கியச் செல்வாக்கின் காரணமாகத் தமிழில் உருவான புதுக்கவிதை அபத்தம், இருண்மை, விரக்தி போன்ற தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்தது. தொடக்ககாலத்தில் கோவேறுக் கழுதை, விஜிடேபிள் பிரியாணி எனக் கேவலமாகக் குறிப்பிடப்பட்ட புதுக்கவிதை, காலப்போக்கில் பரவலாகக் கவனம் பெற்றது. இன்று தமிழில் கவிதை என்றால் அது புதுக்கவிதையையே குறிக்கின்றது. இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை மரபின் நீட்சி இன்றளவும் வீர்யத்துடன் தொடர்கின்றது.  பெண்ணியக் கவிதைகள், தலித்தியக் கவிதைகள், ஈழப் போராட்டக் கவிதைகள், சுழலியல் கவிதைகள், தனிமனித அகம் சார்ந்த தத்துவக் கவிதைகள் எனக் கருத்தியல்ரீதியில் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சி  நீள்கின்றது.

      செம்மொழியின் அடிப்படையான பதினொரு பண்புகளும் நவீனத் தமிழ்க் கவிதையில் பொருத்துவது சாத்தியமற்றது. இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் எல்லாவிதமான அடையாளங்களும் அழிக்கப்பட்டு ஒற்றைத்தன்மை வலியுறுத்தப்படுகினறது. இன்னொருபுறம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை, பாரம்பரியமான வாழ்க்கை முறையில் சிதலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைக்குத் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய நிலையில் சங்க இலக்கியத்தில் காணப்பெறும் செம்மொழிப் பண்புகள்  அல்லது மரபின் தொடர்ச்சி நவீன கவிதையில் எங்ஙனம் வெளிப்படுகின்றன என்பது முக்கியமானது. மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கும் என்பது நவீனத் தமிழ்க் கவிதைக்கும் பொருந்தும்.

தொன்மை: சிறு கோட்டுப் பெரும் பழம்என்ற இயறகைக் காட்சியை இளைஞியின் மனதில் ஏற்பட்டுள்ள காமத்துக்கு உவமையாகச் சொல்லும் சங்கப் பாடல்மூலம் இயறகைக்கும் மனிதர்களுக்குமிடையிலான நெருங்கிய உறவினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. பொதுவாகச் சங்கப் பாடல்கள் இயற்கைப் பின்புலத்துடன் மனித இருப்பினை விசாரிகின்றன. இயற்கையைச் சூழல் என்ற சொல்லால் அறிந்திருந்த பண்டைத்தமிழர், சூழலைப் பேணியதுடன், தங்களையும் காத்துக் கொண்டனர். தான் சிறுமியாக இருந்தபோது, செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தன்னுடன் பிறந்தவளாகக் கருதி, அம்மரத்தின் அடியில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கின்றாள் இளம்பெண் (நற்றிணை:172). தன்னை விட்டுப் பிரிந்துபோன காதலனை நினைந்து வருந்தும் இளம்பெண், `` இரவு நேரத்தில் தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம்கூடவா பிரிவு சொல்லக் காதலன் மறந்துவிட்டான்`` என நினைக்கின்றாள்.(குறுந்தொகை: 260) இயற்கையுடன் தன் மனநிலையை இயைபுபடுத்துவதன்மூலம், மனதைத் தேற்றுவது இயல்பாக நடந்தேறியுள்ளது. இத்தகைய தொன்மையான மனநிலையின் தொடர்ச்சி நவீன கவிதையிலும் வெளிப்பட்டுள்ளது
        மனிதர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு காலந்தோறும் தொடர்கின்றது. மரம், செடி, கொடியைத் தனக்கு நெருக்கமாகக் கருதும் மனநிலை, சங்கத்திணை மரபின் தொடர்ச்சியாக நவீன கவிதையிலும் வெளிப்படுகின்றது. இன்றைய வாழ்க்கையானது பதற்றத்தையும் அவசரத்தையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏதோ ஒன்றின் பின்னால், வேகம்வேகமாகப் பின் தொடரும் நிலையில், ஒவ்வொருவரும் சூழலிலிருந்து அந்நியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இயற்கையுடன் தன்னை இயைபுபடுத்தும் சண்முகம் சரவணனின் கவிதை வரிகள் சங்கமரபின் நீட்சியாக நீள்கின்றன.
               பின்பனிக் காலத்தில்
               அன்று மரங்களிடையே
               சுமையற்று அலைந்து திரிந்தேன்
               ஒலியின் வடிவில் பறவைகளும்
               சிள் வண்டுகளும் உருவற்று
               என் நடையின் வேகம் கூட்டின
               எண்ணங்கள் ஒருங்க
               இளைப்பாறாது உடல் அமைதி கொள்ள
               நடந்து நடந்து ஆனந்தமுற்றேன்
               ஆளரவமற்ற நீண்ட வெளி
               பெருமரங்களின்
               இசையில் அமைதி கொள்ள
               நேற்றையும் நாளையும்
                துறந்து அமைதியுற்றேன்
                           (துறவியின் இசைக்குறிப்புகள்)

   இயற்கையை இசையாக உருவகிக்கும் கவிதையானது, தமிழ்த் தொல் மனம் சார்ந்து விரிந்துள்ளது. சஙகத் திணை மரபின் தொடர்ச்சியானது, கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பல கவிதைகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது.

தனித்துவம்: நெடிய கவிதை மரபின் தொடர்ச்சியானது, நவீன கவிதையாக வெளிப்படுவது தனித்துவமானது. ஐந்திணை நிலம் சார்ந்து அகம் புறம் என்ற எதிரிணைகள் மூலம்  சூழலை விளங்கிக்கொள்ள முயன்றது, கட்டமைக்கப்பட தமிழர் வாழ்க்கையின் தனித்துவம். காதலும் வீரமும் அற்ற நிலை என்பது தமிழைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் இல்லை. ஆண் பெண் உறவில் இரு மனங்களுக்கிடையில் தோன்றும் காதல் என்பது வெளியெங்கும் மிதக்கின்றது. மனசில் ஈரம் ததும்பிடும் காதல் நினைவுகளின் வழியே தன்னை அறிதல் நுட்பமாக நிகழ்கின்றது.
               “நினைவுகள்” கவிதையின்மூலம் எஸ்.வைத்தீஸ்வரன் காதலின் வேட்கையை வெதுவெதுப்பான மொழியில் நினைவு கொள்கின்றார்.
                 நினைவு மறைந்த பின்னும் அதன் ஒலி
               தித்திக்கின்றது உள்ளத்தில்
               மலர்வாடிய பின்னும்
               மணம் கமழ்கின்றது ஞாபகத்தில்
               உறக்கம் கலைந்த பின்னும்
               கனவுகள் நீடிக்கிறது நெஞ்சத்துக்குள்
               விடை பெற்றுச் சென்ற பின்னரும்
               உன் நேசம் பிரிவதில்லை ஒருக்காலும்
               நீ மறைந்த பின்னும்
               உன் காதல் என்னைத் தழுவிக் கொள்கிறது
               காற்றைப் போல
                                           (கால்-மனிதன்)

    பூமியில் உடல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் கருதும் சங்க மரபில், எதிர்ப்பாலின் மீதான காமம் கவிதையாக வடிவெடுத்துள்ளது. உடலை இழிவானதாகக் கருதி, பிறவி வேண்டாத நிலையை முன்னிறுத்தி, புலன்களின் வாயிலான இன்பத்தைக் கீழானதாகக் கருதி ஒதுக்கும் மதம் சார்ந்த பார்வைக்கு மாற்றாக, காதல் என்பது எப்பொழுதும் தமிழ் மரபில் உயர்வானதுதான். இக்கவிதையில் காதல் என்பது  காற்றைப்போல மனித மனத்தில் சுகமாகத் தழுவிச் செல்லுவது நடந்தேறியுள்ளது.
   சங்க மரபின் தொடர்ச்சியாகக் காதலை மையமிட்டுக் குவியும் சக்திஜோதியின் கவிதை வரிகள் வாசிப்பில் மயிலிறகினால் வருடுவதுபோல விரிகின்றன. பிரிவு, காத்திருத்தல் எனப் பெண்ணின் மனம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் காலந்தோறும் தொடர்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவும் நேசத்தின் குரலாகவும் பரிணமிக்கும் பெண்ணின் மனப்புதிர்கள் கட்டமைக்கும் உலகம், பூமியின்மீது நெருக்கம் கொள்ளச் செய்கின்றன. வேர் பரப்பிய நினைவுகள் என்ற கவிதையின் வழியே சக்திஜோதி புனையும் காட்சி வசீகரமானது.
         ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலையென
         சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை
         என்றறிந்திருந்த மனம்
         விம்மிக் கசிகின்றது
         பழுத்த மஞ்சளும்
         வெளிர் பச்சையும் கலந்து
         மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை
         நதியில் மிதந்து கொண்டிருக்க
         அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது
         என்னுள் விருட்சமென வளரத் துவங்கின
         அவனது வேர்கள்
         புலனிகப்படாமல் கிளைத்துப் பரவின
         நிலமெங்கும்
         நதியின் போக்கில் செல்லும் அவ்விலை
         கண்களிலிருந்து மறைய
         நிசப்தமாகிறது காற்று
                     (காற்றில் மிதக்கும் நீலம்)
இலை, நீர், வேர் என இயற்கை சார்ந்து, மன விழைவினைக் காமம் கசிந்திட பதிவாகியுள்ள வரிகள் ஈரத்துடன் ததும்புகின்றன. பெண் மனதின் வேட்கையைக் கவிதையாக்கியுள்ள சக்திஜோதியின் வரிகள் அக மரபிலானவை

தாய்மை: செம்மொழி என்ற வரையறைக்கும் தாய்மைப் பண்பிற்குமான தொடர்பு ஆய்விற்குரியது. சக உயிர்கள் மீதான  நேசம் பூமியில் மனித இருப்பிற்கான ஆதாரம் என்ற நிலையில், தாய்மைப் பண்பு முதன்மையிடம் பெறுகின்றது. சங்க காலத்தில் தொடங்கி இன்று வரையிலும் மனித உறவின் மேன்மையானது தாய்மைப் பண்பில் பொதிந்துள்ளது. ஈழத்துக் கவிஞரான ஃபஹீமா ஜஹானின் அழிவின் பின்னர் கவிதை வரிகள் வெளிப்படையாகத் தாய்மைப் பண்பினைச் சித்திரிக்கின்றன.
                 வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
               அடிக்கட்டை மீது
               அமர்ந்துள்ளது பறவை               
               இன்று அதனிடம்
               பறத்தலும் இல்லை
               ஒரு பாடலும் இல்லை
               அதன் விழிகள் எதிரே
               வெயில் காயும்
               ஒரு பெருவெளி விரிந்துள்ளது
               அந்த மனிதர்களைச் சபிக்கிற்தோ
               தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ
                                       ( ஆதித் துயர்)
      தாய்மைப் பண்பின் பதிவினுக்குக் கலாப்ரியாவின்  கவிதை அருமையான சான்று. எந்த வகையிலும் கவிஞர் பொறுப்பில்லை என்ற நிலையிலும் வழி தவறிப் பறக்கும் ஒற்றைப் பறவையின் சோகக் குரலில் இயற்கையின் துயரமாகப் பொங்கி வழிகின்றது. எல்லாம் முடியும் என்ற அதிகாரக் குரலின் மறு பக்கமாக மனிதன் கையறு நிலையில் விதி எனக் கலங்கி நிற்பது இருப்பின் அபத்தம்.
                  அந்திக் கருக்கலில்
                  இந்தத் திசை தவறிய பெண் பறவை
                  தன் கூட்டுக்காய்
                  தன் குஞ்சுக்காய்
                  அலைமோதிக் கரைகிறது
                  எனக்கதன் கூடும் தெரியும்
                  குஞ்சும் தெரியும்
                  இருந்தும்
                  எனக்கதன்
                  பாஷை புரியவில்லை
                        (கலாப்ரியா கவிதைகள்)
      இயற்கை சார்ந்த நிலையில் குஞ்சுக்காக அலைமோதுகின்ற தாய்ப் பறவையின் வலியைக் கவிதையாக்கியுள்ள கலாப்ரியாவின் வரிகள் சோகத்தின் உச்சம்.
இலக்கிய வளம்: கவிதை என்பது இலக்கிய ரசனை சார்ந்து, மனதில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஒருபோதும் முடிவற்ற காட்சிகளின் வழியே பதிவாகிடும் சொற்களின் சேர்க்கை உருவாக்கும் கிளர்ச்சி அளவற்றது. ஒவ்வொரு கவிஞரும் படைத்திடும் கவிதையின் வளமானது இலக்கிய ஆக்கத்தில் நுட்பமானது. இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை மரபில் இன்று நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இலக்கியச் செறிவுடன் கவிதை படைக்கின்றனர். இதுதான் கவிதையின் வளம் எனத் துல்லியமாக வரையறுப்பதற்கு இயலாத நிலையில், தொடரும் கவிதை மரபு தனித்து விளங்குகின்றது. பருகத் தந்த சௌந்தர்யம் எனக் கவித்துவ ஆலாபனை செய்யும் ரவிசுப்ரமணியனின் வரிகள் வாசிப்பினில் உற்சாகம் அளிக்கின்றன.
            தியானிக்கும் தபஸியாய் அமர்ந்திருந்தேன்
            மூங்கில் சதங்கையின் முதல் அசைவை
            நீதான் துவக்கி வைத்தாய்
            பின்
            காற்று பார்த்துக் கொண்டது
            வெள்ளை முயல்களாய்
            குறுக்கும் நெடுக்குமாக
            தவ்விக் கொண்டிருந்தன ப்ரியங்கள்
            மன வெளியில் சுவாதீனமாய் வந்தமர்ந்து
            ஒரு கோப்பை சௌந்தர்யத்தைப் பருகத் தந்தாய்
            அன்பின் ஆழ்புலம் புரியாது
            மேல்பரப்பில் நின்றவாறு
            தவிதவித்துக் கொண்டிருந்தேன்
            நீயோ
            ரகசியக் குளத்தில் மூழ்கித்துழாவியபடி இருந்தாய்
            அமைதியான இசைமை கமழ்ந்து கொண்டிருந்தது
            ஜன்னலில் திரைச்சீலை சன்னமாய் படபடத்தபடியிருந்தது
            கடைசியில் ஒரு புன்னகையின் வரியில் எழுதிப் போனாய்
                                         (சீம்பாலில் அருந்திய நஞ்சு)

                ஒரு ஆபூர்வமான தருணம் மொழியின் வழியே அழகியலாகப் பதிவாகியுள்ளது. மௌனத்தின் இசையில் மனதின் தவிப்பை இலக்கிய வளத்துடன் ரவிசுப்ரமணியன் பதிவாக்கியுள்ளது நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது.
நடுநிலைமை: அதிகாரப் போட்டியில் மன்னர்களுக்கிடையிலான போர்கள் வலுப்பெற்ற நிலையிலும் புலவர்கள் துணிந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுவது சங்க கால அரசியலில் முக்கியமானது. அரசியலற்ற தன்மை என எதுவுமில்லை என்ற புரிதலுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகும்போது, நடுநிலைமை என்ற சொல்லின் அர்த்தம் கேள்விக்குள்ளாகிவிடும். ஒரு இக்கட்டான நேரத்தில் எது சரி எனக் கவிஞர் கருதுகின்றாரோ அதைத் துணிந்து கவிதையில் சொல்லுவது என்பது சங்கப் பாடல்கள் தொடங்கி இன்றுவரை தொடர்கின்றது. அரசியல் சார்ந்து முடிவெடுத்துத் தருக்கத்துடன் கவிதை படைக்கும் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் ஒருவகையில் நடுநிலைமையானவை என்று சொல்ல முடியும். அரசி என்ற கவிதையின்மூலம் வெக்கையடிக்கும் தமிழக அரசியல் சூழலில் மனுஷ்யபுத்திரன் சொல்ல விழைவது முக்கியமானது.
            கூந்தல் முடித்தெழுந்த அரசி
            வென்ற நகருக்குள் பிரவேசித்தபோது
      `      நகரம் ஸ்தம்பித்து நின்றது
            அரசி கண்ணுக்கெட்டியவரை
            ஸ்தம்பித்த நகரையே பார்த்தாள்
            எங்கோ ஒரு மரம் அசைந்தது
            பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது
            அது தன்னுடைய நகரமே என்று
            நிச்சயப்படுத்திக் கொண்டாள்.
            அரசி எப்பொழுதும் ஸ்தம்பிக்கும் நகரங்களை
            மிகவும் நேசித்தாள்
            ஸ்தம்பித்தல் சக்தியின் வெளிப்பாடு
            மெதுவாக கையை உயத்தி
            `இனி நகரம் வழக்கம் போல இயங்கலாம்`
            என்றபோது அதை யாரும் நம்பவில்லை
            மகத்தான அரசி
            மகத்தான மக்கள் சக்திக்கு
            மகத்தான தன் முதல் செய்தியை
            மீண்டும் வலியுறுத்துகிறாள்
`வாகனங்களும் மனிதர்களும்
            வழக்கம் போல சாலைகளிலே செல்லலாம்`
                                         (நீராலானது)
      பண்டைக் காலத்தில் அதிகாரத்தின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி வாடி வதங்கியபோது, புலவர்கள் நடுநிலைமையுடன் பாடல்கள் பாடியுள்ளனர். புலவர்களின் பாடல்களால் மக்களுக்கு விடிவு கிடைத்ததா என்பது தெரியவில்லை. என்றாலும் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொ’ல்லும் என்ற மரபில் தமிழ்க்கவிதைகள் பரவலாகக் கவனம் பெற்றன  இத்தகைய மரபில் மனுஷ்யபுத்திரன் நிலவும் அரசியல் சூழல் குறித்தத் தனது கருத்தினைக் கவிதையாக்கியுள்ளார். பின்னொரு காலத்தில் எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் நடுநிலைமையான கவிதைகள் எழுதப்பட்டன என்ற வரலாற்றுப் பதிவை உருவாக்கும் வல்லமை அரசி கவிதைக்கு உண்டு.

பொதுமை: செவ்வியல் பண்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பொதுமை அம்சமானது மரபுடன் நெருங்கிய தொடர்புடையது. எந்தவொரு விஷயத்தையும் பொதுமை நோக்கில் அணுகிடும்போது அந்தக் கவிதை புதிய வடிவெடுக்கின்றது. சூரியச்சாறு  எனத் ததும்பிடும் நரனின் கவிதை, வழக்கமான சூரியன் பற்றி மாறுபட்ட புதிய பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது.
            சூரியனின் ஆரஞ்சு நிறம் பற்றி
            பேசிக் கொண்டிருக்கும் போதே
            உரித்து அதன் சுளைகளைப் பங்கிட்டுக் கொடுத்தாய்
அதன் எலுமிச்சை நிறத்தைப்பற்றி…
அதன் சாறு ததும்பத் ததும்ப
இரு கண்ணாடி தம்ளர்களில் வந்தன.
            தாங்கவொண்ணா புளிப்பு
            கொஞ்சம் உப்பிட்டுக் கொள்ளலாம் நண்பா…
            விரைந்து அங்கே பார்
            இரு மலைகளின் நடுவே மறையும் சூரியன்
            ஒரு ‘’பீட்சா துண்டைப் போலுள்ளது.
            ஏன் இன்று ஒரு இந்திய சூரியன்
            இந்தியஆயிரம் ரூபாய் தாளைப்போல் இருக்கக் கூடாது நண்பா
            இந்த முறை
            உன் காதலி சூரியனைப்போல் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறாள்
இல்லையா நண்பா.
                               (எழாம் நூற்றாண்டின் குதிரைகள்)
சூரியன் பற்றிய புனைவைக் கவிதையாக்கியுள்ள நரனின் கவிதை, புதிய வகைப்பட்ட பொதுமைப் பண்பைக் கட்டமைத்துள்ளது. இயற்கையை இவ்வளவு பொதுமைப்படுத்த முடியுமா? என்ற கேள்வி தோன்றுகின்றது.

பண்பாட்டுச் சிறப்பு: பண்பாட்டுக் கூறுகள் கவிதையாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. சூழல் சார்ந்து விரியும் பண்பாட்டு அம்சங்கள் சங்க இலக்கியம் முதலாகவே தமிழில் தளித்து விளங்குகின்றன. வாழ வழியற்றுத் தோணி ஏறிப் பயணமான தமிழர் குறித்த றியாஸ் குரானாவின் களளத்தோணி கவிதை தமிழ்ப் பண்பாட்டில் முக்கியமானது. கள்ளத்தோணி என்பது வெறுமனே தமிழர் அடையாளம் மட்டுமல்ல; காத்திரமான அரசியல் பின்புலமுடையது.
            கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில்
            அசைகிற பிறையைத் தந்து கொடியாய்
            பறக்கவிடும் கொடியை
            அறியாதவர் எவருமிருக்க முடியாது
             தோணியில் அமர்ந்த வண்ணம்,
            உணவு தேடும் கடற்பறவைகளின் சாகசங்களை
            நினைவுகூரும் குழந்தைகள் இன்றுமிருக்கின்றனர்
            மிகமிகப் பழமையான அது.
            தோணி என்று இன்று
            சொல்லப்படுவது எதுபோலவுமில்லை.
            துடுப்பு இல்லை திசைகாட்டி இல்லை.
            அது வழி தவறிப் பயணித்ததுமில்லை.
            இன்னுமது கடலின் பயங்கரம்
            நிறைந்த கொந்தளிப்புகளுக்கிடையேயும்
            சீறிப் பெருகும் பெருங்காற்றிடையேயும்
            நிலை குலைந்திடாது விடாமல் கம்பீரமாகவே
            நிற்கிறது. ஒவ்வொரு பயணியின் நெஞ்சிலும்
            ஆறாத காயத்தின் வரலாறு
            புதிதுபுதிதாய் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
                            (நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு)
 சங்ககாலத்தில் நிலவிய வறுமைச் சூழல் பற்றிப் பாணர்கள் பாடிய பாடல்கள் தமிழ்ப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழர்கள் தமிழகத்தில் வாழ வழியற்றுக் கள்ளத்தனமாகத் தோணியில் பயணித்து இலங்கைக்குப் போய்த் தேயிலைத் தோட்டம் என்ற துன்பக்கேணிக்குள் சிக்கிக் கொண்ட வரலாறு ஒருபுறம். இன்று அரசியல் சிங்கள இன மேலாதிக்கம் காரணமாகக் கள்ளத்தோணி என இழிவு படுத்தப்பட்ட மலையகத் தமிழர் நிலையினை றியாஸ் குரானாவின் கவிதை துயரம் கசியப் பதிவாக்கியுள்ளது.

உயரிய சிந்தனை: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சிந்தனை மரபின் தொடர்ச்சி இன்றளவும் தொடர்கின்றது. பல நூற்றாண்டுகளாகத் தமிழைப் பேசி வருகின்ற மக்களின் வாழ்க்கையானது, மொழியின் வழியே அரிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது. நல்ல சிந்தனைப் போக்கு  என்பது மக்களின் பண்பட்ட மனநிலையின் வெளிப்பாடு. வாழ்வின் விழுமியங்கள் குறித்துப் பதிவாக்குவது, அடுத்த தலைமுறையினருக்கு மேன்மையானவற்றைக் கடத்துவதாகும். சங்க காலத்திலிருந்து உயரிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ள தமிழ்க் கவிதை மரபு இன்றளவும் தொடர்கின்றது. கரிகாலனின் மின்னலின் தீண்டல் குழந்தையை முன்வைத்து எளிய முறையில் வாழ்வு பற்றிய மதிப்பீட்டினை உருவாக்குகின்றது.
            கருணையைக் கொண்டு வருகிறீர்கள்
            சொர்க்கத்தின் சாவியை
            எடுத்து வருகிறீர்கள்
            ஒரு மலரைத் தாங்கி வருகிறீர்கள்
            கேள்வியின் வெளிச்சத்தால்
            உங்கள் இருளை அழிக்கும்
            ஜோதியை ஏந்தி வருகிறீர்கள்
            அலுப்பெனும் தீரா நோயின்
            மருந்துடன் வருகிறீர்கள்
            அருவியின் குளிர்ச்சியை
            நதியின் மலர்ச்சியை
            நிலவின் ஒளியை
            நட்சத்திரங்களின் அழைப்பை
            மின்னலின் தீண்டலை
            உன்னதத்தின் முழுமையை
            அள்ளியெடுத்து அரவணைத்து வருகிறீகள்
            ஒரு குழந்தையை ஏந்தி வரும் நீங்கள்
                                    (கரிகாலன் கவிதைகள்)
      மனித இருப்புப் பற்றிய கவிதையில், குழந்தை என்பது பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்ற நிலையில் கரிகாலனின் வரிகள் நுட்பமானவை. வெறுமனே குழந்தை குறித்த மனப்பதிவுகள் போல கவிதை தோன்றினாலும், சமூக இயக்கத்தின் தொடர்ச்சியான கண்ணியாக விளங்கும் குழந்தை பற்றிய சிந்தனை பதிவாகியுள்ளது. குழல் இனிது யாழ் இனிது என்ற வள்ளுவரின் சிந்தனை மரபின் தொடர்ச்சியை கரிகாலனிடம் காணமுடிகின்றது. நவீன தமிழ்க் கவிதை தொடக்கத்தில் இருந்து தத்துவ வாகனமாக உள்ளது என்ற கருத்து கவனத்திற்குரியது.

இலக்கிய தனித்துவம்: செவ்வியல் இலக்கியம் மட்டுமல்ல எல்லா இலக்கிய படைப்புகளும் ஏதோ ஒருவகையில் தனித்து விளங்குகின்றன. பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளில் தொனிக்கும் புராதன நெடி, செவ்வியல் தன்மையுடையது என அறிய உதவுகினறது. ஆனால் உலகமயமாக்கல் காலகட்டத்தில் நுகர்பொருள் பண்பாடு ஆளுகை செலுத்தும் நிலையில், நவீன கவிதையானது இலக்கியரீதியில் தனித்து விளங்குகின்றது. அய்யப்ப மாதவனின் பாடல் இசைக்கும் கூந்தல் கவிதை வரிகள் முன்னிறுத்தும் இலக்கிய தனித்துவம் நுட்பமானது.
            இரவில் புரளும் கூந்தலில் பூக்கள்
            தானாகவே பூக்கத் தொடங்கி விட்டன
            பூத்துப்பூத்துச் சொல்ல முடியாத
            நறுமணம் பரவுகின்றது
            எங்கிருந்தோ பட்டாம் பூச்சிகள் வந்து
            மலர்களிடம் காதல் புரிகின்றன
            அறை வண்ணத் தோட்டமாகின்றது
            ஆகாயம் உள்ளிறங்கி மிதக்கிறது
            பறவைகள் கூந்தல் பற்றிய
            ரகசியப்பாட்லை இசைக்கின்றன
            நிலவில் வெண்ணிற நதிக் கோடுகளாய்
            பிரகாசிக்கிறது கூந்தல்
            மேகம் கலைந்து சிறுதூறல்
            தேகத்தை மேதுவாக
            அசைக்கிறபோது
            மலர்களும் பறவைகளும் ஆகாயமும்
            மழைத்துளியும்
            அவள் புத்தொளியில் ஸ்தம்பிக்கின்றன
            அடர்ந்த கானகத்தின் தனிமையில்
            தேவதை போல் துயிலுகின்றாள்
            கேசம் பூத்துக் கொண்டிருக்கிறது
                                  (நீர்வெளி)
   இளம் பெண்ணை முன்னிறுத்தி விரியும் அய்யப்ப மாதவனின் அதியற்புதப் புனைவு, கவிதையை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது. தூங்கும் அழகிய பெண்ணின் கூந்தல் வழியே காட்சியாகும் கவிதை  வரிகள் செழுமையான படைப்பினுக்கு ஆதாரமாக உள்ளன.

            தமிழைச் செம்மொழியாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள அறிவிப்பின் பின்புலமாக உள்ள வரையறையானது நவீன கவிதைக்குச் சாத்தியப்படுகின்றதா என்ற தேடலின் விளைவாகச் சில கவிதைகள் மட்டும் மாதிரிக்காக இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தேர்ந்த வாசகரால் இன்னும் சிறப்பான கவிதைகளை அடையாளப்படுத்த முடியும்.  என்னால் குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகளைப் போல நிரம்பத் தொகுப்பதன்மூலம் புதிய பேச்சுகளை உருவாக்கலாம். இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அளவற்றவை. மரபு வழிப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் தமிழர் வாழ்க்கையில் தொடரும் நிலையில் நவீன கவிதையில் செம்மொழிக் கூறுகள் இடம் பெறுவது இயல்பானதுதான்.

                                    உயிர்மை,2014, நவம்பர்
                     







 
       
                 



                 

               




4 comments:

  1. இந்தக் கட்டுரை எனது ஒருங்கிணைப்பிலும் திட்டமிடலிலும் அண்ணன் ந.முருகேச பாண்டியன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவரால் எழுதப்பட்ட கட்டுரை . ' தமிழ்ச் செம்மொழிக்கூறுகள் : தொன்மைக்காலம் முதல் அண்மைக்காலம் வரை " என்ற தலைப்பில் புதுக்கோட்டை , மா.மன்னர் கல்லூரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் அது ....

    தேர்ந்த தேடலும் ஆழ்ந்த நோக்குநிலையும் கூர்ந்த திறனாய்வுப் பாறையும் கொண்ட கட்டுரை இது .

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்தக் கட்டுரை எனது ஒருங்கிணைப்பிலும் திட்டமிடலிலும் அண்ணன் ந.முருகேச பாண்டியன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவரால் எழுதப்பட்ட கட்டுரை . ' தமிழ்ச் செம்மொழிக்கூறுகள் : தொன்மைக்காலம் முதல் அண்மைக்காலம் வரை " என்ற தலைப்பில் புதுக்கோட்டை , மா.மன்னர் கல்லூரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் அது ....

    தேர்ந்த தேடலும் ஆழ்ந்த நோக்குநிலையும் கூர்ந்த திறனாய்வுப் பார்வையும் கொண்ட கட்டுரை இது .

    ReplyDelete
  4. இந்தக் கட்டுரை எனது ஒருங்கிணைப்பிலும் திட்டமிடலிலும் அண்ணன் ந.முருகேச பாண்டியன் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவரால் எழுதப்பட்ட கட்டுரை . ' தமிழ்ச் செம்மொழிக்கூறுகள் : தொன்மைக்காலம் முதல் அண்மைக்காலம் வரை " என்ற தலைப்பில் புதுக்கோட்டை , மா.மன்னர் கல்லூரியில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் அது ....

    தேர்ந்த தேடலும் ஆழ்ந்த நோக்குநிலையும் கூர்ந்த திறனாய்வுப் பார்வையும் கொண்ட கட்டுரை இது .

    ReplyDelete