Friday 9 October 2015

பயணம் நாவல் கட்டமைக்கும் மத அரசியல்


ந.முருகேசபாண்டியன்

        வரலாற்றில் தனியொரு ஆண் வகிக்கும் பாத்திரம் என்பது சமூக உருவாக்குதலில் வலுவானது. சமூகத்தின் அடிப்படை அலகான குடும்ப நிறுவனம், ஆணைச் சார்ந்து பெண்ணின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கணவன் - மனைவி உறவு, பெற்றோர்- குழந்தை உறவு எனக் காலந்தோறும் உருவாக்கப்படும் மதிப்பீடுகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆண்கள் அதிகாரப் போட்டியில் நாடுகளை ஆக்கிரமிக்க நடத்தும் போர்கள்தான்  அரசியல் வரலாறாகப் பதிவாகியுள்ளன. போன நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்களின் மேலாதிக்கப் போட்டிகளினால் நடைபெற்ற இரு உலகப் போர்களினால் கொல்லப்பட்ட மனித உயிர்களுக்குக் கணக்கேது? சகமனிதர்களைக் கொன்று குவிப்பதில் ஆண்கள்தான் என்றும் முன்னணியில் உள்ளனர். குடும்பத்திற்கு வெளியே ஆணின் உலகம் விரிந்திட, பெண் வீட்டினில் கணவனுக்காகக் காத்திருத்தல் தொடர்கின்றது.  பெண்களின் உலகமும் தேடலும் ஒப்பீட்டளவில் ஓர் எல்லைக்குள் அடங்கியுள்ளன. சமூக விரிவாக்கம் என்பது போர்களினால் நடைபெற்றபோது, இன்னொருபுறம் மகாவீரரும் புத்தரும் வேறு வகைப்பட்ட அறத்தினைப் போதித்தனர். துறவின் வழியே ஒவ்வொருவரும் வீடுபேறு அடைய முடியும் என்ற கருத்தானது, புதிய உலகினை அறிமுகப்படுத்தியது. வைதிக சமயம் பிரமச்சாரியம், கிரகஸ்தம், வானப்பிரதஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு நிலைகளைப் போதித்தது; வயதான காலத்தில் காட்டிற்குப் போய்த் துறவியாகி மோட்சம் அடையலாம் என்றது. எல்லாவற்றையும் துறந்து துறவியாகித் தவமிருத்தல் மேன்மையாகக் கருதப்பட்டது. குடும்ப வாழ்க்கையில் இருந்த கௌதமபுத்தர், நள்ளிரவில் மனைவியைப் பிரிந்து துறவியான கதையானது, ஆணும்பெண்ணும் இணைந்து வாழும் குடும்பத்திற்கு விடப்பட்ட சவால். பொதுவாக மதங்கள், பூமியில் உடல்கள் அடையும் புலன் இன்பங்களை அடக்குவதன்மூலம், பேரின்பம் அடையலாம் என வலியுறுத்துகின்றன. பெண்ணுடல்களை வெறுமனே போகப்பொருளாகக் கருதி ஒதுக்கி, பற்று அற்ற நிலைமூலம் சொர்க்கம் சென்றடையலாம் என்ற கருத்து இன்றுவரை வலுவாக உள்ளது.

             ஜைன, பௌத்த, வைதிக மத மரபுகள்  துறவினைப் போதிப்பது இதிகாசங்கள், புராணங்கள் தொடங்கிப் பண்டைய இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் சாமியார்கள் பெண் துணை இல்லாமல் தனித்து வாழ்வது உயர்வாகக் கருதப்படுகிறது. பழமையான மடங்களின் பீடாதிபதிகளான சாமியார்கள் முதலாகக் கார்ப்பரேட் சாமியார்கள் வரை பெண்ணை ஒதுக்குகின்றனர். ஆனால் அவர்கள்  குடும்பத்தில் பெண்கள் எப்படி வாழவேண்டுமென  ஆலோசனையைத் தாரளமாக வாரி வழங்குகின்றனர். இன்னொருபுறம் குடும்ப நிறுவனத்தில் காலந்தோறும் கடுமையாக உழைத்திடும் ஆண்களில் சிலர், குடும்பத்தைத் துறந்து, சாமியார் வேஷம் தரித்துக் கோவில்கள்தோறும் சென்று பிச்சையெடுத்து வாழ்கின்றனர். ஆண்கள் குடும்பப் பொறுப்பினைத் துறந்து பெண்ணின்மீது பாரத்தினை ஏற்றிவிட்டுச் செல்வது நியாயம்தானா? துறவு என்றால் எல்லாவற்றையும் துறந்து அக்கடா என வாழ்வது, ஆண்களுக்குக் கவர்ச்சிகரமாக உள்ளது. ஒப்பீட்டளவில் துறவினுக்கு வக்காலத்து வாங்கித் துறவியான பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. பொதுவாகப் பெண்கள், புலன் இன்பங்களை இழிவானதாகக் கருதி வெறுத்து ஒதுக்குவது கிடையாது. பால் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாக ஆண்களைக் கவர்ந்திழுக்கும் துறவு வழியில் இன்றைய இளைஞன் பயணித்தால் என்ன நிகழும் என்பது அரவிந்தனின் மொழியில் பயணம் நாவலாகியுள்ளது. நுகர்பொருள் பண்பாடு மேலோங்கியுள்ள நிலையில் வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கி எறி என்பது தாரக மந்திரமாக ஒலிக்கும்போது துறவு எடுபடுமா? ஆனால் கார்ப்பரேட் சாமியார்களின் பேச்சைக் கேட்கவும் அருளாசி பெறவும் கூடுகின்ற மக்கள்திரளின் மந்தை மனோபாவத்தினை அவதானித்தால்., இன்றும் துறவு கவர்ச்சிகரமானதாக உள்ளதை அறியலாம். உழைப்பினில் இருந்து அந்நியப்பட்டுள்ள துறவியரின் உலகம், இன்றைய சூழலில் என்னவாக உள்ளது என்ற நாவலாசிரியர் அரவிந்தனின் புனைவு, பேசாப் பொருளைப் பேசியுள்ளது

   இந்துத்துவ அடிப்படைவாதிகள் பண்பாட்டுத்தளத்தில் செய்கின்ற செயல்கள், இன்று இந்தியாவெங்கும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மதம் என்ற போர்வையில் நடைபெறுகின்ற அரசியலுக்கு முற்றிலும் மாறாக ஆன்மீகத்தையும் நன்னெறிகளையும் போதிக்கின்ற மடாதிபதிகள் வசிக்கின்ற மடங்கள் வேறு தளத்தில் செயல்படுகின்றன. பொருளியல் நெருக்கடியினால் அவதிப்படுகின்ற விளிம்புநிலையினருக்கு ஆறுதலும் சேவையும் அளிக்கின்ற மடங்களின் உள்ளரசியல் வலுவாக உள்ளது இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி, ரகசியமாக மடத்தில் சேர்ந்து, இளம்துறவியான ராமநாதனை மையமாகக்கொண்டு பயணம் நாவலின் கதை சுழலுகின்றது. பள்ளிப் பருவதிலிருந்தே விவேகானந்தரின் புத்தகங்ளை வாசித்த ராமநாதன் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் லட்சிய பிம்பம், ஆன்மீகம் சார்ந்து விரிகின்றது. ஸ்வாமிஜி சிவானந்த சங்கர யோகி யினால் நடத்தப்பட்ட சாந்தி யோகா முகாமில் கலந்துகொண்டபோது அவனுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், துறவுமீது ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றன. ஆன்மீகத்தின்மூலம் சமூக சேவை செய்திட முயலுகிறவன், வறுமையில் உழலும் பெற்றோரைரைப் புறக்கணிப்பது, ஒருவகையில் முரண்.

         ஆசிரமம் என்ற நிறுவனம், திட்டமிடப்பட்ட நெறிமுறைகளும் விதிகளும் கலந்து இறுக்கமாக உள்ளது. கேள்விகள் எதுவுமற்ற பணிவு என்பது இளமையில் துறவினை மேற்கொள்ள விழையும் ராமநாதனுக்கு ஏற்புடையதாக இல்லை. அங்குச் சிறிய விதிமீறல்கூட ஒழுங்கீனமாகக் கருதப்படுகிறது. புதுமையாகவும் தன்னெழுச்சியாகவும் முனைப்புடன் செயல்படுகின்ற ராமநாதனின் போக்குஸ்வாமிஜி உள்ளிட்ட ஆசிரமத்தினரால் அத்துமீறலாகக் கண்டனதிற்குள்ளாகிறது. காவிய நாயகர்களின் தனித்துவமானது, எதிர்கொள்கிற போராட்ட வாழ்க்கையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதுதான். ராமநாதனுக்குள் கனலும் கங்கு, அவனை இடைவிடாமல் தூண்டிக் கொண்டிருக்கிறது. அவனுடைய கனவு ஸ்தலமான ஆசிரமம், எல்லாநிலைகளிலும் அவனுடைய இயக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது, லாவகமாகத் தாண்டிச் செல்கிறான். அவனுடைய கட்டற்ற மனதின் வேகம், புதிய தளங்களில் பயணிக்கத் தூண்டுகிறது. ஒருபோதும் முடிவற்ற பயணம் என்பதைப் புரிந்திட்ட நிலையில், ஆசிரமத்தைவிட்டு வெளியேறுகிறான். நீண்ட பயணத்திற்குப் பின்னர் சென்னையில் ஆசிரமம் அமைத்து மடாதிபதியாகிறான். அவனுடைய லட்சிய வேட்கை அந்த ஆசிரமத்தில் நிறைவேறுமா? அல்லது யோகா பின்புலத்தில் சமூகசேவை அளித்து ஆறுதலை அளிக்கின்ற நிறுவனமயமாகி விடுவானா

     கோவையில் இருக்கும் சாந்தி யோகா ஆசிரமத்தில் சேர்ந்த ராமநாதன், ஆசிரமத்தின் கிளைகள் இருக்கும் சுசீந்திரம், கொல்லிமலை போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெறுகிறான். மருத்துவமனை, யோகாசன மையம், இயற்கை வேளாண்மை, மருத்துவமுகாம், பள்ளிக்கூடம், கைவினைப் பொருள் தயாரிப்பு என  ஆசிரமம் நடத்தும் சேவைகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறான். இத்தகைய சேவைகளின்மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் யோகாசனம் போதிப்பதை முன்னிலைப்படுத்துகிறான். நாவல் முழுக்க யோகாசனத்தின் மேன்மைகள், ராமநாதனின்மூலம் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. மனிதனின் உடலுக்கும் மனதிற்கும் யோகாசானத்தினால் விளையும் நலன்கள் குறித்த கருத்துகள், வாசிப்பினில் புதிய திறப்பினைத் ஏற்படுத்துகின்றன. .
       ராமநாதன் சுசீந்திரத்தில் கணவனை இழந்த பேரழகியான காயத்திரியைக் கண்டு மனம் தடுமாற்கிறான். இதுவரை பெண் என்றால் ஒதுங்கியிருந்தவனின் இயற்கையான ஆண்மையின் விழிப்பிற்கு முன்னால், அவனது மனம் தத்தளிக்கிறது. இரவுவேளையில் படுக்கையில் காயத்திரியை நினைத்தவாறு, சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். துறவு, பிரமச்சாரியம் குறித்த புனைவுகள் தகர்கின்றன. ஒருவிதமான குற்றமனத்தில் குமைந்தாலும், காயத்திரியைத் தேடிப்போய் அவளுடன் பாலுறவு கொள்கிறான். மீண்டும் மடத்தின் பணியில் எப்பொழுதும்போல ஈடுபடுகிறான். ``நினைவெழுந்தால் நல்ல மாதருண்டு இந்த மேதினியில்`` எனப் பாடியுள்ள பட்டினத்தாருடன் ஒப்பிடும்போது ராமநாதனின் செயல் சாதரணமானதுபிரமச்சாரியம் மேன்மையானது என்ற நம்பிக்கை சிதைந்தாலும், துறவியெனத் தன்னை நினைத்துக்கொள்கிறான். ஸ்வாமிஜியின் மறைவினுக்குப் பின்னர், அங்கிருக்கும் மூத்தத் துறவியரின் செயல்களினால்  வெறுப்படைந்து ஆசிரமத்தைவிட்டுத் திடீரெனக் கிளம்புகிறான்.  

     உலகம் மாயை, உடல் என்பது பாவத்தின் விளைநிலம், எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் அழிந்துவிடும், ஆசையே துக்கத்திற்குக் காரணம், ஊரும் நிலையானது அல்ல, உற்றாரும் நிலயானது அல்ல  போன்ற போதனைகளைப் போதிக்கும் சாமியார்களின் மடங்களுக்குக் கோடிக்கணக்கில் சொத்துகள் இருக்கின்றன. அன்றாடம் உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகள், நிலையாமைத் தத்துவத்தை நம்புவது வேடிக்கையானது. பொருளியல் ஏற்றத்தாழ்வு, பிறப்பின் அடைப்படையில் மேல் கீழ், பால் அடிப்படையில் பெண்களின் இரண்டாம் நிலை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில், இருப்பினை நியாயப்படுத்தும் பணியைச் சமய நிறுவனமான மடங்கள் அழுத்தமாகச் செய்கின்றன. இன்று அரசியல் விழிப்புணர்வு, பகுத்தறிவு காரணமாகக் காலங்காலமாகச் செல்வாக்குப் பெற்றிருந்த  மடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் புதிய வகைப்பட்ட ஆசிரமங்கள் உருவாக்கப்படுகின்றன. யோகாசனம், சமூகசேவை என்ற பெயரில் வைதிக சமயத்தின் கருத்துகள் புதிய பேக்கேஜில் முன்வைக்கப்படுகின்றன. தியானம், யோகாசனம்மூலம் மனம், உடல் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனப் போதிப்பது ஏற்புடையதுதானா? .அறுவை சிகிட்சை அல்லது மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீருமென்ற நிலையில் இருக்கும் நோயாளிக்கு யோகாசனம் தீர்வாகாது. ஏற்கனவே மனநலமற்று இருக்கிறவருக்குத் தியானத்தினால் எவ்விதமான பயனும் இல்லை. ஓரளவு ஆரோக்கியமான நிலையில் இருக்கிறவரை இன்னும் மேம்படுத்திட யோகாவும் தியானமும் பயன்படும். புறநிலையில் நெருக்கடியான பணிச்சூழல், மன அழுத்தம் காரணமாகப் பலரும் அந்நியமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கார்ப்பரேட் சாமியார்களின் வருடலான பேச்சுகள் ஆறுதலாகத் தோன்றுகின்றன. கூட்டுக்குடும்பம் தந்த பாதுகாப்பின்மை சிதைந்தநிலையில், நுகர்ப்பொருள் மாயைக்குள் சிக்கிக்கொண்ட மனிதனுக்கு மனவளக்கலை எனத் தொடங்கும் பேச்சு  சுவராசியத்தைத் தருகிறது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல ஆன்மீகம் மாறி விட்டது. ராமநாதன் போன்ற புதிய வகைப்பட்ட சாமியார்களின் யோகாவை முன்வைத்த வணிகம் இன்று கொடி கட்டிப் பறப்பதற்குச் சூழலின் வெக்கைதான் காரணம் என்று சொல்லலாமா?

     ஆசையே அனைத்துத் துயரங்களுக்கும் மூலகாரணம் என்ற பண்டைய கருத்தியல் மாறி விட்டது. இன்று எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, உன்னால் முடியும் என கார்ப்பரேட் சாமியார்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆசிரமத்தில் நடைபெறும் சத்சங்கத்தில் ஸ்வாமிஜியின் உரை: ``… நீங்கள் ஒரு விஷயத்தை உண்மையிலே விரும்பினால், அதில் தீவிரமாக இருந்தால், அது உங்களுக்குக் கிடைத்தே தீரும். உலகில் எந்த சக்தியாலும் அதைத் தடுக்கவே முடியாது. விரும்புங்கள், தேடுங்கள், அடைவீர்கள். நீங்கள் அடைவீர்கள்.``  நவீன சாமியார்கள் எதையும் அடைய முடியும் என்ற போலியான நம்பிக்கையை விதைப்பதன்மூலம் தன்னை நாடி வருகின்றவர்களுக்குத் தற்காலிகமான அமைதியைத் தருகின்றனர். விரும்பியவற்றை அனுபவித்துவிட்டுக் கடந்து செல்க என மனரீதியில் தரும் அறிவுரை, நுகர்பொருள் பண்பாட்டிற்கும் பொருந்தும். இருப்பினை நியாயப்படுத்தும் நிலையில், பண்டைய புராண இதிகாசங்கள், பகவத்கீதை போன்றவற்றை மறுவியாக்கியானம் செய்கின்ற சாமியார்களின் பேச்சை முன்வரிசையில் இருந்து கேட்பதற்கு ஆயிரக்கணக்கில்  பணம் செலுத்த வேண்டியுள்ளது. யோகாசன முகாம்களுக்குப் பணம் செலுத்தினால்தான் உள்ளே நுழையவே முடியும்.  பெரும் தொழிலதிபர்களின் தயவினால் இயங்குகின்ற கார்ப்பரேட் சாமியார்கள், பத்தாண்டுகளில் ஊடகங்களின் உதவியுடன் மகான் நிலைக்கு உயர்ந்து விடுகின்றனர். அவர்களைப் பற்றிய ஒளிவட்டம் ஊதிப் பெருக்கப்பபடுகிறது; கையை ஆட்டினாலோ, தலையை அசைத்தாலோ, எல்லாம் புனிதமாகக் கருதப்படுகிறதுசாதரணமாகப் பேசுவதுகூட, உயர்ந்த ஞானமாகப் போற்றப்படுகிறது. இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் உருவாவது பற்றிய சித்திரத்தை நாவல் நுணுக்கமாகப் பதிவாக்கியுள்ளது. சாமியார்களின் மோசமான வாழ்க்கையைச் சித்திரிப்பது நாவலாசிரியர் அரவிந்தனின் நோக்கம் இல்லை. இப்படியெல்லாம் நடைபெறுகின்றன எனப் புதிய காட்சிகளை விவரித்து, வாசிப்பின் வழியே முடிவற்ற சிந்தனைக்கு வாசகரை நகர்த்துகின்றார்நவீன ஆசிரம வாழ்க்கைமுறைக்கு அடிப்படையாகத் தியானமும் யோகாசனமும் இருப்பது நாவலில் பதிவாகியுள்ளது.

   பயணம் நாவல் குறியீட்டு நிலையில் ராமநாதனின் பயணத்தைக் குறிக்கிறது. அதேவேளையில் நாவலாசிரியர் அரவிந்தனும் மதம், மடம், துறவு எனத் தனது தேடுதலைக் கதைபோக்கினில் தொடங்கியுள்ளார். யோகாசனம், சமூக சேவை, துறவு போன்றவை குறித்து ஒருவகையான நம்பிக்கையுடன் சொல்லப்பட்டுள்ள கதையானது, விவரிப்பில் புதிய விசாரணைகளை முன்வைத்துள்ளது. மதத்தின்  இன்றைய இடம் அல்லது நிலை குறித்து விமர்சிக்கும்போது, ஆசிரமத்தில்  நிலவும் அரசியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமி, பாபர் மசூதி இடிப்பு என ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரத்தின் அரசியல் குறித்த அரசியல் விவாதங்கள், நாவலைச் சமகாலத்திய தன்மையுடனவாக மாற்றுகின்றன. இதழியல் நுட்பத்துடன் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தினை அரவிந்தன் அணுகியுள்ளார். இந்து மத அடிப்படைவாதம் ஏற்படுத்தும் அரசியல் பற்றிய தீர்க்கமான அறிவுடைய ராமநாதன், பாபர் மசூதி இடிக்கின்ற நிகழ்ச்சியை நேரில் காணச் செல்கிறான். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறையில், மசூதி இடிக்கப்படுகிறது. முகத்தில் ரத்தம் வழிந்திட ஆவேசத்துடன் குரல் எழுப்புகிறவனின் பிம்பம் முக்கியமானது. கூட்டத்தின் நெரிசலில் சிக்கித் தவித்த ராமநாதனுக்குக் காவித்துணியில் படிந்த ரத்தம் அதிர்ச்சியைத் தருகிறது. எல்லாவற்றின்மீதும் பற்றினைத் துறந்த துறவியர் அணியும் காவி உடையில் ரத்தம் என்பது, நுட்பமான கேள்விகளை எழுப்புகிறது. இதுவரையிலும் காவி என்றால் புனிதம் எனக் கட்டமைக்கப்பட்டிருந்த ராமநாதனின் மனம் சிதலமாகிறது. விவேகானந்தர் மீதான லட்சியத்தில் அக்கறைகொண்டு, தேச சேவையாற்றுவதற்காகப் பதின்பருவத்தில் வீட்டை விட்டுக் கிளம்பி மடத்தில் சேர்ந்த ராமநாதனின் கனவு, அயோத்தியில் அபத்தமாக மாறுகிறது.

         ராமநாதன்- காயத்திரி இருவருக்கிடையிலான பாலுறவு பற்றிய நேர்மறையான அபிப்ராயம் கதையில் பதிவாகியுள்ளது. ராமாமிர்த யோகி என்ற ராமநாதன் புதிதாக உருவாக்கியுள்ள அமிர்தா யோகா கேந்திரத்தின் வரவேற்பறையில் காயத்திரி வரவேற்பாளராகப் பணியாற்றுவது, கதையின் போக்கில் இயல்பாக இடம் பெற்றுள்ளது. உடலில் இயல்பூக்கமாகத் தோன்றும் பாலியல் வேட்கையைப் புறக்கணித்துத் துறவியாக வாழ்வது, நடைமுறை சாத்தியமற்றது என்பது ராமநாதனின் வாழ்க்கை வழங்கும் செய்தியா? காயத்திரியின் பெண்ணுடல் மட்டும் வேண்டும், அவளுடன் சேர்ந்து  குடும்ப வாழ்க்கை வாழ இயலாது என ராமநாதன் நினைத்து, அதனை நடைமுறைப்படுத்துவது  ஆண் மேலாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும். யதார்த்தத்தில் ஒருபோதும் தீராத பிரச்சினைகளின் சிக்கித் தவிக்கும்போது மக்களுக்கு ஏதோவொரு மகான் தேவைப்படுகிறார். அவ்வப்போது தோன்றி அருளாசி வழங்கினால் போதும் என்ற நிலையில், இன்று ராமநாதன், ராமாமிர்த யோகியாகக் காட்சி  அளிக்கிறார்..

  மத அடிப்படைவாத அரசியல், நாட்டில் எல்லா மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவிவரும் வேளையில், எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. தனிமனிதரீதியில்  நிறுவனமயமான மதம் ஏற்படுத்தும் உணர்வுகள், நாளடைவில் வன்முறையினை ஏற்றுக்கொள்வதுதான் துயரமானது. நவீனமயமான ஆசிரமங்கள், கார்ப்பரேட் சாமியார்கள், தியானம், யோகாசனம் போன்றவற்றுக்குப் பின்னால் பொதிந்துள்ள வாழ்க்கையை விருப்புவெறுப்பு இன்றி விவரித்துள்ள பயணம் நாவல், சமகாலத்தின் அரசியல் பதிவாக விளங்குகிறது. வெறுமனே ஏதோ ஆசிரமத்துச் சாமியார்களின் கதை என ஒதுக்கிவிட இயலாதவாறு நுட்பமாக விவரித்துள்ள அரவிந்தனின் கதையாடலில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது.

  பயணம்(நாவல்), அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். தொடர்புக்கு: 04652 -278525,  பக்கம்:392; விலை:350/-

                                  உயிர் எழுத்து, அக்டோபர்,2015