Thursday 23 April 2015

ஜல்லிக்கட்டு அரசியல் : வீரமா? விளையாட்டா?

        ஜல்லிக்கட்டு அரசியல் : வீரமா? விளையாட்டா?
                                         .முருகேசபாண்டியன்
                                        murugesapandian2011@gmail.com


        ஜல்லிக்கட்டில் பாய விடுவதற்காகக் கன்றுக்குட்டியிலிருந்து  வெளியாட்கள் பார்வையிலிருந்து தனித்து வளர்க்கப்பட்ட,  யாருக்கும் அடங்காத காளை, உசுப்பேற்றி விடப்பட்டு வாடியிலிருந்து விரட்டப்படுகின்றது. சுற்றுப் பட்டிகளிலிருந்து திரண்டு வந்துள்ள ஆண்களின் கூட்டம் ஆரவாரமிடுகின்றது. பெரிய திமிலும் திமிருகின்ற உடலுமெனக் களத்தில் இறங்கும் காளையின் கூர்மையான கொம்புகள் உக்கிரத்துடன்  காற்றில் அலைகின்றன. அந்தக் காளையை அடக்கிப் பிடிப்பது வீரம் என நம்பிக் காளையை நெருங்குகின்றவரின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் எதுவுமில்லை. இருத்தலாஇறத்தலா? கேள்விகளுக்கு அப்பால் மனித இருப்புக் கேள்விக்குள்ளாகின்றது.

        கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வந்த மஞ்சு விரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டினுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையினால்  தென் மாவட்டங்களில் கிராமப்புறத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழரின் தொன்மையான அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டினைத் தடை செய்தது குறித்துத் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு தடையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளது. தொன்மையானது, பாரம்பரியமாக நடைபெற்று வந்தது என்ற நிலையில் ,ஜல்லிக்கட்டினைத் தடை செய்வது நியாயமற்றது எனச் சிலர் கருதுகின்றனர்.. விளையாட்டு என்ற பெயரில் கூட்டத்தில் முரட்டுக் காளையை அவிழ்த்து விடுவதும் அதை இளைஞர்கள் தாவி அடக்குவதுமான நிகழ்வின் பின்னர் காத்திரமான அரசியல் பொதிந்துள்ளது.

       சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் எனக் காளையை அடக்குதல் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. முல்லை நில மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு என்பதற்காக அது இன்றளவும் தொடர வேண்டுமெனப் பேராசிரியர் தொ.பரமசிவம் போன்றோர் சொல்வது சரிதானா? யோசிக்க வேண்டியுள்ளது. தமிழர் என்ற அடையாளம் மொழியினால் ஏற்படுத்தப் படுகின்றது. அப்புறம் பண்பாடு சார்ந்து உருவாக்கப்படும் தமிழ்ப் பண்பாடு என்பது முழுக்க நுண்ணரசியல் வயப்பட்டது. தொன்மை என இன்று உருவாக்கப்படும் கற்பிதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட குழுவினரின் நலன் உள்ளது. தமிழர் என்ற சொல் பயன்பாடு கூட அரசியல் சார்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் தமிழர் என்ற வரையறையில் தலித்துகள் இடம் பெறவில்லை. தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என உருவாக்கப்படும் பேச்சின் இன்னொருபுறம் முக்கியமானது.

      எழுபதுகளில்   தென் மாவட்டங்களில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு சாதரணமாக நடத்தப்பெற்றன. பெரிய அளவில் ஜல்லிக்கட்டு பிரபலமடையவில்லை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரபலமடைந்ததற்குக் காரணம்  ஊடகங்களும் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி துறையும்தான்.   பொதுவாகப் பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டினைப் பார்க்க இளைஞர்கள் உற்சாகத்துடன் கிளம்புவார்கள். பெரிதும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையில் ஜல்லிக்கட்டு முக்கிய இடம் பெற்றது. வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கினுக்காகவும் கும்பலாகக் கிளம்புவதில் மகிழ்ச்சி பொங்கும். அன்றைய காலகட்டத்திலே ஜல்லிப்பையலுக தான் ஜல்லிக்கட்டு பார்க்க போவானுக என எங்கள் ஊரான சமயநல்லூரில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலான பெண்களும் ஜல்லிக்கட்டுக்குப் போகக் கூடாது எனத்  தங்கள் பிள்ளைகளைத் தடுப்பார்கள்.

       அற்பமானது  என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ஜல்லித்தனம் என்பது ஒருவகையில் ஜல்லிக்கட்டுடன் தொடர்புடையது.  ஆனால் ஊர் மந்தையில் ஒரு கும்பலாக உட்கார்ந்து ஜல்லிக்கட்டின் அருமைபெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். சீறிப் பாயும் காளை முதலில் உரிமையாளரையும் பின்னர் அந்த ஊர்ப் பெயரையும் தாங்கி நிற்கும். போன மூன்றாம் வருஷம் அவனியாபுரம் மஞ்சிவிரட்டில் கொண்டையம்பட்டி சொக்கலால் ராமசாமி காளை நின்னு விளையாண்டுச்சு பாரு. ஒரு பயலைக் கிட்ட அண்ட விடலையே எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். அதை விடு, வயலூர் மாரி மச்சானோட மயிலைக் காளை பாலமேடு ஜல்லிக்கட்டில் என்ன போக்கு போச்சு பாரு. கொம்பை இப்படின்னு அசைச்சு பாரு. அந்த வருஷம் மட்டும் நாலு பேரைக் குத்தித் தூக்கிடுச்சில்லே? மாட்டின் நிறம், சுழி, கொம்பின் அமைப்பு, பாய்ச்சல் என மீண்டும்மீண்டும் பேசுவது ஒருவகையில் பொழுதுபோக்கு. ஜல்லிக்கட்டில் கலந்து மாட்டினை அடக்குகிறவர்கள் ஒப்பீட்டளவில் கொஞ்ச பேர்தான் இருப்பார்கள், ஆனால் ஜல்லிக்கட்டினைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிப்  பேசுகின்றவர்களுக்கு அளவேது? சிலர் ஜல்லிக்கட்டுச் சம்பவங்கள், காளைகள் பற்றிய தகவல் சேகரிப்பில் கலைகளஞ்சியமாக இருப்பார்கள். ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சுகள் ஒருவகையில் போதைதான். கிரிக்கெட் பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றவர்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகின்றவர்களுக்கும் வேறுபாடு பெரிய அளவில்  இல்லை.

       ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்ற என வழக்குத் தொடுத்த விலங்கு வதை தடுப்பு சங்கத்தினருக்கும், தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்களுக்கும் அடிபடையான புரிதல் இல்லை. இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் காளைகளினால் குத்திக் கொல்லப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஒரு காளையாவது ஜல்லிக்கட்டினால் கொல்லப்பட்டது எனச் சொல்வதற்கில்லை. பொதுவாகத் தமிழகக் கிராமங்களில் வாயில்லா ஜீவன்கள் நம்மை அண்டி இருக்கின்றன என்ற இரக்க உணர்வுடன்தான் மாடுகளை நடத்துவார்கள். குடும்பத்தில் மாட்டின் இறைச்சியைக்கூட உண்ணுவது வழக்கினில் இல்லை. வயல் வேலை, வண்டியில் பாரம் இழுத்தல் என அன்றாடம் பெரிதும் பயன்படுத்தப்படும் காளைகள் கடுமையாக உழைக்கின்றன. வேகாத வெய்யிலில் சுமை ஏற்றப்பட்ட வண்டியை இழுக்க முடியாமல் திணறும் காளைகள் சாட்டை அடியை வாங்கிக்கொண்டு நகர்கின்றன. இப்படியான சித்திரவதைகள் எதுவும் ஜல்லிக்கட்டில் பாயும் காளைகளுக்கு இல்லை. கன்றுக்குட்டியாக இருக்கும் போதிலிருந்து நல்ல ஊட்டச்சத்து மிக்க தீவனம் தந்து வளர்க்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்த அளவில் பல வீடுகளில் காளைகளைச் செல்லப் பிள்ளைகளைப் போன்று ப்ரியமுடன் வளர்க்கின்றனர். நேரத்திற்குத் தீவனம் தந்து வளர்க்கப்படும் காளைகள் ஒருவகையில் சுகவாசிகள். அவை ஒருபோதும் பிற காளைகள் போல கடுமையான உழைப்பினில் ஈடுபட வேண்டியதில்லை. அவ்வப்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் கலந்து, யாரிடமும் பிடிப்டாமல் தப்பித்து வர வேண்டும். தொடர்ந்து பல ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாத காளைகளுக்கு ராஜமரியாதை. அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில். இன்னொருபுறம் பரம்பரையாக காளைமாடுகளை வளர்த்துவரும் குடும்பத்தினரின் கௌரவமும் ஜல்லிக்கட்டில் காளை சீறிப் பாய்வதில் அடங்கி இருக்கின்றது
   
      ஜல்லிக்கட்டில் வதைக்குள்ளாவது மனிதர்கள்தான். காளையை அடக்கப்போய் குத்துப்பட்டு இறந்து போனவரின் குடும்பம் வருமானம் இல்லாமல் வறுமைக்குள்ளாகிவிடும். காளைகளினால் கால் ஒடிந்து, குடல் சரிந்து காயம் பட்டவர்கள் சில வாரங்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் பார்க்கும்போது அந்தக் குடும்பத்தின் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். அதிலும் பெண்கள் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து திரிந்து சிரமப்படுவார்கள். உதவ யாரும் இருக்க மாட்டார்கள். அன்றாடம் வயல் வேலை, கூலி வேலை என உடல் உழைப்பு செய்து வாழும்போதே  கஷ்டப்பட்ட  குடும்பம் ஆண்  மருத்துவமனையில் படுத்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். ,ஜல்லிக்கட்டில் கடுமையான காயமடைந்தவரின் மனைவி, குழந்தைகளின் நிலை துயரமானது.. உண்மையில் ஜல்லிக்கட்டினால் மனித உடல்களுக்குத்தான் கடுமையான சேதங்கள் ஏற்படுகின்றன..

       மனிதர்களுக்கு ஏற்படும் கொடுமைகளைப் பற்றி அக்கறைப்படாத புளு கிராஸ் போன்ற அமைப்புகளின் நீலிக்கண்ணீர் அருவருப்பானது. குடிநீர் பற்றாக்குறை , வேலைவாய்ப்பு இன்மை ,மின்சாரம் தட்டுப்பாடு போன்ற அடிப்படைப்  பிரச்சினைகளைத் தீர்க்க இயலாத சூழலில், ஜல்லிக்கட்டுதான் முதன்மையான பிரச்சினை போல முன்னிறுத்துவது திசை திருப்பும் வேலை. மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லும் கூடங்களில் அவற்றின் நெற்றியில் பெரிய சுத்தியலினால் அடித்துக் கொல்வது புளு கிராஸ் அமைப்பினுக்குத் தெரியாதா என்ன? ஜல்லிக்கட்டு கூடவேகூடாது என அழுத்தமான நீதி வழங்கிய நீதியரசருக்கு இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகள் படும் வதை தெரியாது என நம்புவோம் ..மாட்டின் உடலினைவிட மனித உடல் மலிவானதா என்ன? ஜல்லிக்கட்டினால் மனிதர்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் எனத் தடை விதித்திருந்தால் தருக்கரீதியில் ஏற்புடையதாக இருக்கும்.
 
  ஜல்லிக்கட்டினை விளையாட்டு எனப் பார்த்தால் காயங்கள் தவிர்க்க முடியாதவை. குத்துச் சண்டையில் பட்ட காயங்களினால் உலகின் முத்ன்மையான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின்  உடல்நிலை இன்று  மோசமாகி விட்டது ,மராத்தான் உள்பட பல விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் காயங்கள் ஒருபுறம், மரணமும் இன்னொருபுறம் என நிழலாகத் தொடர்கின்றன. ஜல்லிக்கட்டினை விளையாட்டு என்பது புரிந்து கொள்ளக்கூடியது. வீர விளையாட்டு என மகிமைப்படுத்தும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. விளையாட்டினுக்கு எனத் தனியே விதிகள் இருக்க வேண்டியது அவசியம். ஜல்லிக்கட்டுக்கான விதிகள் ஊர்கள்தோறும் வேறுபடுகின்றன. .காளையின் கூர்மையான கொம்பினுக்கும் அதனைப் பிடிக்க முயலும் இளைஞனின் உடலுக்குமான இடைவெளி மனித இருப்பினைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி விளையாட்டு ஆக முடியும்?
    
   காளையை அடக்குவது வீரம் என்பதற்குத் தரப்பட்ட முக்கியத்துவம் போய் இன்று ஏகப்பட்ட பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுவது மாடுபிடி வீரர்களை உசுப்பி விடுகின்றது. சைக்கிள், மிக்சி கிரைண்டர், இரும்பு அலமாரி, ரொக்கப் பணம், தங்கக் காசு, தங்க மோதிரம்  என அறிவிப்பது பார்வையாளர்களை நோக்கி வீசப்படும் தூண்டில் இரைகள். வேடிக்கை பார்க்கப் போனவர்களில் சிலர் மது தந்த போலியான வீரத்தில் வாடியில் இறங்கி அநியாயமாக உயிரை இழப்பது   நடைபெறுகின்றது.

     ஜல்லிக்கட்டில் காளையை அடக்குகிற மாடுபிடி வீரர்களைவிட வேடிக்கை பார்க்கப் போனவர்கள் காளைகளினால் குத்தப்படுவது அதிகம், சில சமயங்களில் தெருவில் நடந்து போகின்றவர் மாட்டினால் குத்துப்பட்டு இறப்பது நிகழ்கின்றதுகிராமத்தில் பாரம்பரியமாகக் கோவிலுக்கு முன்னர் பெரிய தெருவில் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். வெளியூர்களில் இருந்து கூடுகின்ற ஆண்கள் வேடிக்கை பார்ப்பதற்குப் போதுமான இடம் இருக்காது. மிரண்ட காளைகள் எந்த நேரத்தில் எந்தப் பக்கத்தில் இருந்து பாயுமோ என்ற பயத்துடன்தான் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சரி போரடிக்கிறது என அங்கிருந்து கிளம்பிச் செல்லுவதிலும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அவிழ்த்து விடப்பட்டு  அங்குமிங்கும் அலையும் கொண்டிருக்கும் காளைகளினால் குத்தப்பட நேரிடலாம். இத்தகைய சூழலை விளையாட்டுவீரம் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

    ஜல்லிக்கட்டு என்ற சொல்லின் பின்னால் சாதி அரசியல் பொதிந்துள்ளது.  தமிழர் வீரம் என்ற சொல்லினைக் கட்டுடைத்தால் தமிழகக் கிராமங்களில் இன்றளவும் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு புலப்படும். தருமபுரியில் திவ்யா- இளவரசன் காதல் விவகாரம், அம்மாவின் அலையை மீறி இன்று அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராக வழி வகுத்துள்ளது. சாதியப் பெருமை ,ஆண்ட பெருமை பேசும் ஆதிக்க சாதியினரை எதிர்த்துச் செயல்படுவது இன்றளவும் கிராமங்களில் சிரமமானது. இந்நிலையில் மரபு, தொன்மை போன்றவற்றின்மூலம் ஆளூகை செலுத்துவது பல்வேறு வழிகளில் நடைபெறுகின்றது. குறிப்பாகக் கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை, முதலில் தேர் வடம் பிடித்தல்தருமகர்த்தா, எனப் பல்வேறு நிலைகளில் தங்கள் பூர்வீகப் பெருமையை நிலை நிறுத்துகின்றனர்கிராமபுறங்களில் கடந்த பல நூற்றாண்டாக ஆதிக்கம் செலுத்தும் சாதியினருக்குக் காளைகள் வளர்ப்பது அந்தஸ்து, ஆதிக்கத்தின் அடையாளம். ரேக்ளா ரேஸ் மாடுகள். ஜல்லிக்கட்டுக் காளைகள் போன்றவற்றைப் பெரும்பாலும் ஆதிக்க சாதியினர்தான் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். வயலில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சாதியினர்,  இடைநிலைச் சாதியினர் ,தலித்துகள் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில்லை. கிராமப்புறத்தில் தனது செல்வாக்கு எங்கும் நீக்கமறப் பரவியிருப்பதை நிரூபிக்க ஆதிக்க சாதியினருக்குக் காளைகள் குறீயிடுகள். சுற்று வட்டாரத்தில் எங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் மேற்படி ஊரைச் சேர்ந்தவரின் காளைகளை யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது ஒருவகையில் அறிவிக்கப்படாத சவால். எங்கும் என் கொடி பறக்கின்றது என்பதை அறிவிக்க ஜல்லிக்கட்டுக் காளைகள் பயன்படுகின்றன. லட்சம் ரூபாய் பெறும் காளைகள் கிராமத்துப் பண்ணையாரின் தொழுவத்தில் நான்கு நிற்கின்றன என்பது ஊர் முழுக்கப் பரவியிருப்பது சமூக மரியாதையைத் தீர்மானிக்கின்றதுஅவரது சொல்லுக்கு ஊர் கட்டுப்படும் என்பதைக் காளைகளின் இருப்பும் தீர்மானிக்கின்றன.

     காளையை வளர்த்துத் தனது குலப்பெருமையையும் ஆண்மையையும் வெளிப்படுத்தும் வசதியான பின்புலமுடையவர் ஒருபோதும் வாடியில் இறங்குவதில்லை. கிராமத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலவுடமையாளர் யாரும் காளையை  அடக்கிட முயலுவதில்லை. ஆனால் ஆதிக்க சாதியைச் சார்ந்த அன்றாடங்காய்ச்சிகள்தான் உசுப்பேற்றப்பட்டு வீரம் என்ற போலியான புனைவில்  களத்தில் நிற்கின்றனர். காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடி வாசலில் பந்தாவாக நின்று போஸ் கொடுக்கும் உரிமையாளர்கள் வெகுமானத்திற்காகப் பரிசுகள் அறிவிப்பதோடு சரிஒருவரின் காளை பிடிபட்டால் அந்தக்காளையின் உரிமையாளரின் கௌரவத்திற்கு இழுக்கு வந்து விடும். எனவே மாடுபிடிப்பதில் முண்ணணியில் உள்ளவர்களிடம் ரகசிய ஒப்பந்தம் போடப்படும். சில வேளைகளில் வேறு சிலரின் திட்டத்தினால் காளை பிடிபட்டால் பிரச்சினை ஊர்ச் சண்டையாகி விடும்.
         சில  ஊர்க் காளையின் பின்னால் குறைந்தது ஐம்பது பேராவது டிராக்டரில் திரண்டு வருவார்கள். அந்தக் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்னால் பரப்பபடும் பீதியினால் ஏன் வம்பு எனப் பலர் ஒதுங்கி விடுவார்கள்.   வேறு ஊரைச் சேர்ந்த  பண்ணையாருடன் ஏற்பட்ட சொந்த முரண்பாட்டினைத் தீர்க்க சிலருக்கு  ஜல்லிக்கட்டு பயன்பட்டது. இதுவரை பல ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாத எதிராளியின் காளையை எப்படியாவது பிடிக்க ஏற்பாடுகள் நடைபெறும். ஒருக்கால் அந்தக் காளையைப் பலர் ஒன்றுகூடிப் பிடித்துவிட்டால், அன்று மாலைக்குள் அடிதடி, வெட்டுக்குத்து நிகழும். இரு பக்கங்களிலும் பண்ணையார்கள் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுவதில்லை. பண்ணையாரின் சாதியைச் சார்ந்த விளிம்புநிலையினர்தான் பலி கடாக்களாகப் படுவார்கள். இன்று வாகனப் போக்குவரத்துப் பரவலானதால் வெளியூர்களில் இருந்துகூட கிராமங்களுக்கு காளைகளை அடக்கிப் பரிசுகளைப் பெற ஆட்கள் வருகின்றனர். என்றாலும் கிராமத்துச் சண்டியர், மைனர், மிட்டா மிராசு, அம்பலகாரர் என்ற பெயரில் அதிகாரத்தைக் காட்ட ஜல்லிக்கட்டு பயன்படுகின்றது.

    ஜல்லிக்கட்டினுக்குத் தடை என்றவுடன் அதற்கு எதிராகக் கிளம்பியுள்ள அமைப்புகள் பெரிதும் ஆதிக்க சாதியினரின் , கட்டுப்பாட்டில் உள்ளவை. தமிழர் வீர விளையாட்டினைத் தடை செய்யாதே என ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களின் பின்புலத்தின் குறிப்பிட்ட சாதியினரின் நலன்கள் பொதிந்துள்ளன.   கிராமங்களில் வாழும் இடைநிலைச் சாதியினர், தலித்துகள் ஜல்லிக்கட்டு குறித்துப் பெரிதும் அக்கறை கொள்வதில்லை. ஆதிக்க சாதியினரிலும் ஒருசிலரின் அதிகாரத்தை வெளிப்படுத்தப் பயன்படும் ஜல்லிக்கட்டு எப்படி ஒட்டுமொத்தத் தமிழர்களின் விளையாட்டாகும்? தமிழர் வீர விளையாட்டு என்ற தொடர் உருவாக்கும் புனைவின் பின்னர் பொதிந்துள்ள அரசியலைக் கண்டறிய வேண்டியுள்ளது.
  
   கி.பி.14-ஆம் நூற்றாண்டு தொடங்கி டில்லி சுல்தான்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், நவாபுகள், ஐரோப்பியர்கள் என யார்யாரோ தமிழகத்தின்மீது படையெடுத்து வந்து    தமிழர்களை அடிமையாக்கியபோது  தமிழர் வீரம் எங்கே போனது? ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்களைக் காட்டிக் கொடுத்து, ஆங்கிலேய அடிவருடிகளாக விளங்கிய மருதுவின் உறவினர்கள் தமிழர்கள் தானே? ஆங்கிலேயரின் கைப்பாவையாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்து மன்னர்களின் வாரிசுகள் இன்று சட்டசபை உறுப்பினராகவும், மேயராகவும் வலம் வருவதை எப்படித்  தமிழர் வீரத்துடன் பொருத்துவது? தமிழர் வீரம் என்பது ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையை அடக்குவதில் இருக்கிறது என்பது அபத்தமின்றி வேறு என்ன?