Wednesday, 1 November 2017

கரிசல்காட்டுச் சம்சாரி வாழ்க்கைச் சீரழிவுகள்: கி.ராஜநாராயணன் புனைகதைகளை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோல் மிஞ்சாது என்ற சொலவடை எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றாலும், நிலத்தில் உழுகிறவரைத் தொழுதுண்டு வாழ்கிற சூழலைக் கொண்டாட்டமாகக் குறிப்பிடுகிற திருக்குறளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆயிரமாயிரமாண்டுகளாகக் கிராமத்தில் சம்சாரித்தனம் செய்து வாழ்ந்திட்ட இயற்கைச் சூழல் கடந்த அறுபதாண்டுகளில் ஆட்டங் கண்டுள்ளது. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் ஆறு, ஏரி, கண்மாய்ப் பாசனம் மூலம் நடைபெற்ற விவசாயமானது, நாட்டின் விடுதலைக்குப் பின்னர் பெரும் மாற்றமடைந்துள்ளது. நிலம், கண்மாய் பற்றி எதுவும் அறியாத வேளாண் துறை அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் விவசாய மேம்பாட்டிற்கென வகுத்த திட்டங்கள், விவசாயிகளிடம் போய்ச் சேரவில்லை. அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த செய்கிற முயற்சிகள், பொதுவாக விவசாயிகளுக்குச் சார்பாக இல்லை. குடி மராமத்து என்ற பெயரில் பராம்பரியமாகச் செய்த நீர் மேலாண்மை கைவிடப்பட்டபோது, கிணறுகள் வெட்டப்பட்டன. இன்று ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பி வாழ்கிற நெருக்கடியான சூழலில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். பசுமைப் புரட்சி என்ற பெயரில் அறிமுகமான வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லியான நச்சுப் பொருட்கள் தமிழகத்து விவசாயத்தை மெல்ல அழித்துக்கொண்டிருக்கின்றன. பன்னாட்டு உரக் கம்பெனிகள், பூச்சிக்கொல்லி தயாரிப்புத் தொழிற்சாலைகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தயாரிக்கிற ஆராய்ச்சி நிறுவனங்கள் எனத் தமிழகத்து விவசாயத்தைத் தீர்மானிக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ள சம்சாரிகள் மீளவியலாத நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இத்தகு சூழலில் கி.ராஜநாராயணன் கிராமத்து வாழ்க்கையை முன்னிறுத்தி எழுதியுள்ள கதைகளை மறுவாசிப்பிற்குள்ளாக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் விவசாயம் அழிவிற்குள்ளாகிட நேரிடும் என முன்அறிவிப்புச் செய்யும்வகையில் 1950களில் புனைகதைகள் எழுதியுள்ள கி.ராஜநாராயணனின் தொலைநோக்குப் பார்வை, வியப்பளிக்கிறது. அவர் கரிசல் பூமியை முன்வைத்து விவரித்துள்ள கதைகள், ஒருவகையில் தீர்க்கதரிசனம். வானம் பார்த்த பூமியான கரிசல் மண்ணில் சம்சாரிகள் படுகிற பாடுகளைச் சொல்கிற கி.ரா.வின் கதைகள், அடிப்படையில் இனவரைவியல் தன்மையுடையன. கரிசல் நிலவெளியில் கிளைத்தெழுகிற படைப்புகளுக்குச் சொந்தக்காரரான முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனின் 95வது அகவை நிறைவைக் கொண்டாடும்வகையில், அவருடைய சிறுகதைகளில் வெளிப்பட்டுள்ள கரிசல் சம்சாரிகளின் சீரழிவுகளைப் பற்றிய பதிவுக.ள் பண்டைய நாட்டார் மரபின் தொடர்ச்சியில் கதைசொல்லியாகியுள்ள கி.ரா. சொல்கிற கதைகள் இயல்பிலே மண்ணின் நெடியடிப்பவை. கி.ரா. தான் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்த கரிசல் பூமியில் கண்ட காட்சிகளை அழகியல்தன்மையுடன் விவரிப்பதன் மூலம், அந்தச் சமூகத்தின் வரலாறும் மதிப்பீடுகளும் கதைகளில் இடம் பெற்றுள்ளன. கி.ரா. தான் சார்ந்த தெலுங்கு பேசுகிற மக்களின் பண்பாட்டு அடையாளத்தைப் புனைவாக்கும்போது, இனவரைவியல் தன்மைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார். அவருடைய கதையாடல் மொழியும் விவரிப்பும் அழகியல் தோய்ந்துள்ளன. கி.ரா. புனைவாக்கத்தில் தான் சார்ந்த இனக்குழுவின் எழுத்து, சமூகத்தின் நினைவிலி எழுத்து, கரிசல் பூமியின் எழுத்து என விவரிக்கும்போது, அவர் மற்றமையாகி விடுகிறார். மரபான மொழியில் ஒருவிதமான பகடியை முன்னிறுத்துகிற கி.ரா. வின் சிறுகதைகள், அன்றாட வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும் குறித்து நுட்பமான கேள்விகளை எழுப்புகின்றன. கிராமம் என்ற அமைப்பு ஒருவகையில் வெளிப்படையாகவும் அதேவேளையில் மூடுண்டதாகவும் இருக்கிறது. எல்லோரும் அறிந்திட்ட கிராமத்து வெளிக்கு அப்பால், யாருக்கும் புலப்படாத ரகசியங்களைப் பொதிந்திருக்கிற கிராமத்துச் சம்பவங்களை எழுத்தாக்குகிற கிரா.வின் முயற்சி, தனித்துவமானது. கரிசல் மண்ணையும் மக்களையும் நேசிக்கிற கி.ரா. தொடர்ந்து எழுதிய புனைவுகள் மண்ணின் குரலாக வெளிப்பட்டுள்ளன. வெறுமனே தகவல்களைத் தொகுத்து வட்டார எழுத்து என்று உருவாக்குவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. சராசரியான கிராமிய வாழ்க்கையில் இப்படியாகத்தான் மனிதர்கள் வாழ்ந்தனர் எனக் காட்சிப்படுத்துகிற கி.ரா.வின் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை; ஒப்பீடு அற்றவை. கரிசல் மண்ணுக்கெனத் தனித்த அடையாளம் இருக்கிறது என்று கண்டறிந்திட்ட கி.ரா.வின் புனைகதைகள், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதிய போக்கினுக்கு வழி வகுத்துள்ளன. விவசாயத்தையே நம்பி வாழ்ந்த சம்சாரிகள், பெண்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், மனப்பிறழ்வாளர்கள், விளிம்புநிலையினர் சிறிய கடைக்காரர்கள் எனக் கி.ரா. சித்திரிக்கிற மனிதர்கள், அன்றாட வாழ்க்கையினைத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். பொருளியல் வளமற்ற சூழலினால் வறுமை விடாமல் துரத்தி வந்தாலும், கௌரவமாக வாழ்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கி.ரா. எழுதியுள்ள தொடக்ககாலக் கதைகளில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த நுண்ணரசியல் பிரச்சினைகள் கதைக் களன்களாகியுள்ளன. மார்க்சிய சித்தாந்தத்தின் மீது இளம் வயது முதலாக ஈடுபாடுகொண்ட கி.ரா. அன்றாட கிராமத்து வாழ்க்கையில் சம்சாரிகள் எதிர்கொண்ட சிக்கல்களை அணுகுவதிலும் படைப்புகளாகச் சித்திரிப்பதிலும் அரசியல் நோக்குடன் செயல்பட்டுள்ளார். எல்லாம் தலையெழுத்து, நேரம் சரியில்லை என்று கிராமத்து சம்சாரிகள் புலம்புவதற்கு மாற்றாக அவர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளுக்கான காரணங்களை அரசியல்ரீதியில் புனைகதைகளில் கி.ரா. அம்பலப்படுத்தியுள்ளார். ஐம்பதுகளின் பிற்பகுதியில் சரஸ்வதி பத்திரிகையில் பிரசுரமான கி.ரா.வின் மாயமான் (1958) கதை, இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடங்கி இன்றைய அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் ஓட்டாண்டித்தனம் வெளிப்படையானது. விவசாயம் நலிவடைந்ததால் கூலி விவசாயிகளும் கொல்லர், தச்சர் போன்ற கைவினைஞர்களும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்குப் போய்விட்டனர். நான்கைந்து ஏக்கர் நிலத்தை வைத்துச் சாகுபடி செய்து பருத்தி, கம்பு, மிளகாய், கேழ்வரகு விளைவித்த கரிசல் காட்டு சம்சாரிகள், விவசாயம் கட்டுபடியாகாத காரணத்தினால், நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டனர். அருமையாகச் சாகுபடி செய்யக்கூடிய வளமான கரிசல் நிலத்தில் தீப்பெட்டி ஆபீஸ்களும் வெடி மருந்து தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. இத்தகைய நிலத்தை ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் மலிவான விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தருவதற்கு அரசாங்கம் முயலுகிறது. விவசாயம் செய்தால் நஷ்டம் என்ற சூழலை ஏற்படுத்தியதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு கணிசமானது. பன்னாட்டுக் கம்பெனிகளின் கையாளாகச் செயல்படுகிற அரசாங்கத்தின் கபட வேடத்தைக் கி.ரா. மாயமான் எனச் சுட்டுகிறாரா? யோசிக்க வேண்டியுள்ளது. கரிசல் மண்ணில் நாலரை ஏக்கரில் புஞ்சை வேளாண்மை செய்து, அதன்மூலம் கிடைக்கிற தானியத்தை உணவிற்கும், கிராமத்தில் வைத்திருக்கிற சின்னக் கடையின் மூலம் கிடைக்கிற வருவாயில் குடும்பச் செலவுகளையும் சரிக்கட்டுகிற அப்பாவு செட்டியாரின் வாழ்க்கை எளிமையானது; கௌரவமானது அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட கிணறு வெட்ட அரசாங்கம் இலவசமாகத் தருகிற ரூ.400/- என்ற விளம்பரம், மாயமானாக மாறியதுதான் கதை. அரசாங்கம் கிணறு வெட்டுவதற்கு இரண்டாயிரம் ரூபாய் கடனாகத் தந்து, அதைப் பத்து வருடத்திற்குள் திருப்பிக் கட்டலாம் எனச் செட்டியாரின் தந்தை சொல்வதுதான் சரியானது. சராசரி கிராமத்துச் சம்சாரிக்குத் தெரிந்த விஷயம் கூடத் தெரியாத அதிகாரிதான் இலவசத் திட்டத்தை வகுத்துள்ளார். புஞ்சையில் தோட்டம் போடலாம் என்று ஆசைப்படுகிற செட்டியார் கிராமத்து அதிகாரிகள், தாலுகா அலுவலகத்தினரைச் சரிக்கட்டுவதில் ஐம்பது ரூபாய் செலவழித்ததுடன் நடையாய் நடக்கிறார். கடைசியில் அவர் கைக்குக் கிடைத்தது ரூபாய் முந்நூறுதான். அரசாங்கம் அறிவிக்கிற இலவசத் திட்டங்களில் கணிசமான தொகையானது, இன்றளவும் ஊழலில் திளைத்திருக்கிற அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்குத்தான் போய்ச் சேர்கிறது. அந்தப் பணம் போதாமல் நாயக்கரிடம் நூறுக்கணக்கில் கடன் வாக்கி வெட்டிய கிணற்றில் பெரிய அளவில் தண்ணீர் ஊற்றெடுக்கவில்லை. விவசாயத்திற்கான செலவீனம் பெருகியதால் நாயக்கரிடம் வாங்கிய கடனும் வட்டியும் அதிகமாகின. அந்த வருடம் மழையும் சரியாகப் பொழியவில்லை. மகசூல் சாவியாகிப் போனது. வட்டி கட்ட முடியாமல் மனைவியின் நகைகளை விற்ற செட்டியார், கடைசியில் அசலுக்காக நிலத்தையும் வீட்டையும் நாயக்கருக்கு எழுதிக் கொடுத்துவிட்டுப் பஞ்சம் பிழைப்பதற்காகத் தஞ்சாவூருக்கு ரயிலேறினார். அரசாங்கம் போட்ட திட்டம், கிராமத்தில் கண்ணியமாக வாழ்ந்திட்ட சிறு விவசாயின் வாழ்க்கையைச் சிதைத்து ஓட்டாண்டியாக்கி விட்டது எனக் கி.ரா. சொல்கிற கதை, அழுத்தமான குரலில் கரிசல் சம்சாரியின் துயரத்தைப் பதிவாக்கியுள்ளது. விவசாயத்தின் யதார்த்த நிலையை அறிந்திடாமல், அப்பாவு செட்டியார் இலவசமாகக் கிடைத்த சிறிதளவு பணத்தினால் கிணறு தோண்டிட விரும்பியதனால் அடைந்த இழப்புகள், மாயமானைப் பிடித்திட விரும்பிய சீதைக்கு ஏற்பட்ட துயரங்கள் போன்றன. இலவசத் திட்டத்தின் மறுபக்கத்தினைக் கி.ரா. அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளார். மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியுடன் இலவச கிரைண்டர், மிக்சி, தொலைக்காட்சி பெட்டி வழங்குவதுடன் வருடத்திற்கு 100 நாட்கள் வேலைத்திட்டம் என ஒரு தலைமுறையைச் சார்ந்த தமிழகத்து இளைய தலைமுறையினர் உழைப்பிலிருந்து அந்நியப்பட்டுள்ளனர். இன்று கிராமத்தில் வயல் வேலை செய்வதைக் கேவலமாகக் கருதுகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. எந்தவொரு சமூகம் உழைப்பிலிருந்து விலகுகிறதோ, அது காலப்போக்கில் சிதலமாகிடும் என்ற சூழலில், தமிழர்களின் வளமான எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையை ஊகித்தறிந்து, எதிர்காலத்தில் தமிழகத்துச் சம்சாரிக்கு ஏற்படலாம் என 1958 இல் மாயமான் கதை சொன்ன கி.ரா. ஒருவகையில் தீர்க்கதரிசி. காலங்காலமாக கமலையினால் நீர் இறைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த ராமசாமி நாயக்கர், இரண்டாயிரம் ரூபாய் செலவில் பம்புசெட் நிறுவி கரண்டு இணைப்பு வாங்கிய பின்னர் எதிர்கொண்ட பிரச்சினைகள், கரண்டு(1962) கதையாகியுள்ளன. மின்சார விநியோகம் ஷிப்ட் முறையில் ஒரு வாரம் மத்தியானம் வரையிலும் அடுத்த வாரம் மத்தியானத்திற்கு மேலும் நடைபெறுகிறது. விதைக்கப்பட்ட சோளம் முளைக்கட்டிட இன்னும் தண்ணீர் தேவை என்ற நிலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைகிற சம்சாரியின் வேதனையை எந்த அதிகாரி பொருட்படுத்தப் போகிறார். பம்ப்ஷெட்டை ஓட்டினாலும் ஓட்டாவிட்டாலும் வருடத்திற்கு ரூ.160/- கட்ட வேண்டும். ஆனால் எப்படி ஓட்டினாலும் அறுபது ரூபாய்க்கு மேல் ஓட்ட முடியாது. மாதாமாதம் கரண்டு பில்லுக்கான தொகையைக் கட்டுவதற்காகக் கிராமத்திலிருந்து கோவில்பட்டிக்குப் போக வேண்டும். அங்கேயும் பணத்தை வசூலிக்கிற அலுவலர் செய்கிற நொம்பலம் வேறு. ‘நாள் முழுவதும் கரண்ட் வேண்டும். சோளம் முளைக்கட்ட தற்காலிகமாவது நாள்பூராவும் கரண்ட் வேண்டும்’ என ராமசாமி நாயக்கர் மனு எழுதி, மின் துறை அதிகாரிகளைப் பார்த்துத் தரும்போது அவர் அடைந்த அனுபவங்கள் கசப்பானவை. சமூக இருப்பின் ஆதாரமான தானியத்தை உற்பத்தி செய்கிற மிகவும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிற சம்சாரியைக் கன்ஸ்யூமராக்கியதுடன், அற்ப மானவர்களாகக் கருதி அலட்சியப்படுத்துகிற நிலைமையில் இன்றுவரையிலும் மாற்றமில்லை. நகரத்தில் திரையரங்குகளில் மூன்று காட்சிகள் திரைப்படங்கள், ரைஸ்மில்கள், பகல்வேளையிலும் மின் விளக்குகள் ஒளிர்ந்திடும் கடைகள், இரவினில் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் என எங்கும் பிரகாசமாக இருந்திட, சம்சாரியான ராமசாமி நாயக்கர் மன இருட்டில் புழுங்கித் தவித்தார் எனக் கி.ரா. சொல்லியுள்ள கதை, இன்றைக்கும் தொடர்கிறது. டிரான்ஸ்பார்மரை இயக்கி மின்சாரத்தைப் பெறலாம் என்று யோசித்த நாயக்கர், செய்ய வேண்டிய காரியம் சக விவசாயிகளை நோக்கி நடப்பதுதான் என்ற முடிவினுக்கு வருகிறார். தனிமனிதனாகப் போராடுவதைவிட சம்சாரிகள் ஒன்று சேர்ந்து போராடினால், தீர்வு கிடைக்குமென்ற விஷயம் கதையில் சூட்சுமாகச் சொல்லப்பட்டுள்ளது. சம்சாரிகளின் நலன் குறித்து அக்கறையற்ற அரசு இயந்திரத்தின் போக்கினையும், முதலாளிகளுக்குச் சார்பான திட்டமிடுதலையும் கரண்டு கதையின் மூலம் பதிவாக்கியுள்ள கி.ரா.வின் சமூக அக்கறை அழுத்தமானது. போத்திநாயுடுவுக்கு இன்னும் விடியவில்லை எனத் தொடங்கும் விடிவு(1980) கதை, கரிசல் காட்டுச் சம்சாரித்தனத்தின் அவலத்தைப் பதிவாக்கியுள்ளது. கரிசல் காட்டில் கரண்டு கட் வர்றதுக்கும் பருத்தி வெடிக்கிறதுக்கும் சரியாக இருக்கும்போது, விளைச்சலைக் கொள்முதல் செய்கையில் விலையைக் குறைப்பது சாதாரணமாக நடைபெறுகிறது. பருத்தி, அவுரி என எந்தவொரு வேளாண்மைப் பயிருக்கும் விலையை நிர்ணயம் பண்ணுற உரிமை மில்லுக்காரனுக்கும் வியாபாரிக்கும்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் சம்சாரிகளைப் பற்றி அக்கறை இல்லாமல், முதலாளிகளுக்கு அடிமையாகி விட்டனர் என நினைக்கிற நாயுடுவின் எண்ணம், சரியானது. ஊருக்குள் இருந்த விவசாயக் கூலிகள் தீப்பெட்டி போடப் போய்விட்டதால், களையெடுப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. ‘’ புஞ்சைக் காடுகள் விதைக்காமலே தரிசுகள் விழுந்து போகிறது. வருஷா வருஷம் இந்த தரிசுகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. லட்சக்கணக்கான கரிசல்காட்டு விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் போண்டியாகிக்கொண்டு வருகிறார்கள். இந்த நெருக்கடி எந்த அரசியல்காரனின் கண்ணிலும் பட்டதாகத் தெரியலையே. அவன்களுக்கு வேண்டியதெல்லாம் ஓட்டு…’’ கி.ரா. எழுபதுகளின் இறுதியில் எழுதிய கதை இன்னமும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல். நடப்பில் இன்னும் வலுவாக நிலவுகிறது. ஏர் எழுபது எனப் பாடிய கம்பன் இப்பொழுது எதிரே வந்தால் சாட்டைக்கம்பால் அடி வாங்காமல் போகமாட்டான் எனச் சம்சாரியான நாயுடு பகடி செய்வது, ஒருவகையில் கதையை அழகியலுடன் வெளிப்படுத்துகிறது. விவசாயி யதார்த்ததில் படுகிற பாடுகள் நாளும் பெருகிடும்போது, கம்பன் விவசாயியைப் புகழ்ந்து பாடியது ஏமாற்று வேலை என்ற கருத்து, வெறுமனே வெறுப்பினால் விளைவு அல்ல. விடிவு என்பது கரிசல் காட்டு சம்சாரிக்கு ஒருபோதும் இல்லை என்பதுதான் கி.ரா. சொல்ல விரும்புவதா? மாவட்டக் கலெக்டருக்குப் பெண் தர மறுத்த பாரம்பரியமான விவசாயக் குடும்பமான கோனேரி செங்கன்னா இருநூறு நெய்க்கரிசல் பூமிக்குச் சொந்தக்காரர். சம்சாரிகள் புஞ்சையிலிருந்து தலைச்சுமையாகப் பருத்தியைத் தூக்கிச் சென்றபோது, தினமும் வண்டியில் பருத்தியைக் வீட்டிற்குக் கொண்டு வருகிற வளமையான குடும்பம். முன்னர் நான்கு ஏக்கர் நிலம் சொந்தமாக இல்லாத கலெக்டருக்கு எப்படி பெண் தருவது யோசித்த கோனேரியின் முப்பத்தோரு வயதான மூத்த பேரனுக்குப் பெண் தர யாரும் இன்று முன்வரவில்லை. ’’காத்துட்டுச் சம்பளமானாலும் கவர்மெண்டு சம்பளம் இருக்கணும்; மாசம் இருநூறு சம்பாதிக்கிற வாட்ச்மேனாக இருந்தாலும் சரி அவனுகளைக் கட்டத்தயார்’’ என்ற நிலையில் சம்சாரியால் என்ன செய்ய முடியும்? ‘’ காப்படி அரிசி பொங்க; தின்னுட்டு லாந்தலா ஒரு சினிமாவோ நாடகமோ போக, நல்லாப் படுத்து எந்திரிக்க; ஒரு பிள்ளையோ ரண்டோ பெத்துக்கிட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கிட: இப்படி ஆயிட்டது பிழைப்பு’’. இத்தகைய சூழலில் ’’சம்சாரிகளுக்கு இனிமேல் நம்ப பொட்டைப்பிள்ளைகள் வாக்கப்படாது; வந்து கேக்காதீங்க’’ என்று பெண்களைப் பெற்ற தகப்பன்மார்கள் கோனேரியிடம் சொன்னது வெறுமனே நுகர்பொருள் சம்பந்தபட்ட விஷயம் அல்ல. முன்னர் தாட்டியமாகக் கரிசல் காட்டில் வாழ்ந்த சம்சாரியின் நிலையானது, இன்று கொத்தைப் பருத்தியிலும் கேவலமாகப் போய்விட்டது என்ற கோனேரியின் வேதனையான சிரிப்பினுக்குப் பின்னால் பொதிந்திருக்கிறது பேரவலம். பாரம்பரியமான சம்சாரிக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த 31 வயதான முதிர்இளைஞனுக்கு யாரும் பெண் தர முன் வராத சூழல்தான், சம்சாரி வாழ்க்கை சீரழிந்துள்ளதன் காத்திரமான வெளிப்பாடு. முன்னர் சமூக மதிப்பீட்டில் உயர்ந்திருந்த சம்சாரியின் நிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம், அதல பாதாள வீழ்ச்சியாகும். மனித இருப்பின் ஆதாரமான விவசாயத்தைப் புறக்கணிக்கிற சூழல் உருவானதற்குக் காரணத்தைத் தேடுகிற கொத்தைப் பருத்தி(1982) புனைகதை, அவல நாடகமாக வெளிப்பட்டுள்ளது.. கரிசல் நிலத்தில் அவுரிப் பயிரை விதைத்துவிட்டுக் களையெடுக்கப் போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்பட்டு, ஒருவழியாக அறுவடை செய்த அவுரிக்கு விலையில்லாமல் போனதால், தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற தாசரி நாயக்கர் பற்றிய பதிவுதான் அவுரி(1982) கதை. ஆட்சியாளர்கள் சம்சாரிகளைக் கைவிட்டதைக் குறித்த கி.ரா.வின் ஆதங்கம்தான் கதையாடலின் மையம். வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் அவுரியினால் கிடைக்கிற அந்நியச் செலவாணியினால் ஆதாயமடைகிற நடுவண் அரசு, அவுரியை விளவிக்கிற சம்சாரிக்கு ஏற்படுகிற நஷ்டம் குறித்து ஒருபோதும் அக்கறை கொள்ளவில்லை. ஒரு காலத்தில் பக்கா படி நூறு ரூபாய்க்கு விற்ற அவுரியை இன்று ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும் குறைவாகக் கேட்கிற வியாபாரிகளின் கபடமான தந்திரத்தினால் ஏற்படுகிற இழப்பினை எப்படி ஈடு செய்வது? நாயக்கர், காய் அறுவடை செய்த கூலிக்குக்கூட கட்டுபிடியாகாத நிலையில், பொன்னரிவுக் காய்களைக் குப்பைக்குழியில் போடுகிறார். கதைசொல்லியான கி.ரா. கதைகளின் வழியாக எழுப்புகிற சம்சாரியின் வாழ்க்கை குறித்த கேள்விகள், இன்றுவரை தொடர்வது அவலத்தின் உச்சமாகும். ஊர் மடத்தில் யாரோ புது ஆள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவனைக் கூட்டிட்டுப் போய் தனது வீட்டு வேலைக்கு வைத்துக்கொண்ட சுப்பா நாயுண்டு, அவனுக்குச் சம்பளம் என எதுவும் தரவில்லை. ஒருவகையில் அவனுடைய உழைப்பைச் சுரண்டுகிற நாயுண்டுவின் மறுபக்கம் கசப்பானது. அவருடைய வயலில் விளைந்த பருத்தியை வாங்கிய வியாபாரி செல்லையா நாயக்கர், வெங்கடாசலபதி முன்னிற்க லாபம் என நிறுக்கிறார். அந்த வருடம் பஞ்சு விலை இறங்கியதால், செல்லையாவினால் உடனடியாகச் சம்சாரிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் வெங்கிடாசலபதி மில் நிர்வாகம் புதிதாக ஜப்பான் மிஷின்களை நிறுவிப் புதியதாகப் பெரிய மில்லைத் தொடங்குகிறது. பருத்தியை உற்பத்தி செயத சம்சாரியும் வாங்கி விற்கிற வியாபாரியும் கஷ்டப்படும்போது, ஆலை முதலாளியின் லாபம் மட்டும் கோடிக்கணக்கில் அதிகரிப்பதன் சூட்சுமம் என்னவென்ற கேள்வியை முன்வைக்கிறது தாவைப் பார்த்து(1984) புனைகதை. கார்ப்பரேட்டுகளின் மூலதன ஆதிக்கம் எதிர்காலத்தில் வலுவான நிலையில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதுதான் கி.ரா. புனைவின் வழியாகச் சொல்ல விரும்பியதா? சம்சாரித்தனம் சீரழிந்த சூழலில் கரிசல் மண்ணில் வாழ்வது என்பது ஒருவகையில் சவால்தான். கரிசல் கிராமத்தின் முகம் முழுக்க மாறிவிட்ட சூழலைச் சித்திரிக்கிற ஒரு செய்தி(1982) கதையானது, வளமான வண்டல் பகுதிகளான வைகை, காவிரி பாய்ந்திடும் பிரேதசங்களிலும் இன்று நடைமுறையாகி விட்டது. அதிகாலையில் கிராமத்திற்குள் நுழைந்திடும் பஸ்கள் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு நகரத்திற்குப் போகிறது. அங்கு நாள் முழுக்கத் தீப்பெட்டி ஆபிஸில் வேலை. விட்டில் இருக்கிற பெண்களும் தீப்பெட்டியை ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போன இளைஞர்களில் மிச்சமிருப்பவர்களும் துபாய், குவைத் எனக் கனவு காண்கின்றனர். தச்சாசாரிகளும் கொல்லாசாரிகளும் டவுன் பஸ் பிடித்து நகருக்குப் போகிறார்கள். அப்படியே கொத்தனார்களும் சித்தாள் பெண்களும் நகரத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். எருமைகளை வளர்த்துப் பாலைக் கூட்டுறவு பால் பண்ணை அல்லது தனியார் பால் டிப்போ மூலம் நகரத்திற்கு அனுப்பும் வேலை மும்மரமாக நடைபெறுகிறது. என்றாலும் இன்னும் சில பைத்தியக்கார விவசாயிகள் களையெடுக்க ஆள் கிடைக்க மாட்டார்களா எனத் தேடி அலைகின்றனர். ’இன்னும் சில வருஷங்களில் இந்தக் கரிசல் காடு பூராவும் நிஜமாகவே ஒரு வனம்போல் ஆகிவிடும்’ எனக் கதைசொல்லி விருப்பு வெறுப்பற்றுச் சொல்கிற கதைக்குப் பின்னால், மாறிப்போன சமூகத்தின் வலி பதிவாகியுள்ளது. சம்சாரிகள் உற்சாகத்துடன் ஈடுபட்ட விவசாயமும், நிலத்தில் உழைத்த கூலி விவசாயிகளும், துணையாக இருந்த கைவினைஞர்களும் என நிலத்துடன் தொடர்புடைய வாழ்க்கையை, ஒட்டுமொத்தமாகச் சீரழிவிற்குள்ளாக்கிய அரசியல், வலுவானது. அதேவேளையில் குழந்தைகள், பெண்களின் கொண்டாட்டமான உலகத்தைக் கையில் பிசுபிசுப்பான பசையுடன் எப்பொழுதும் தீப்பெட்டி ஒட்டுதல் எனச் சுருக்கிவிட்ட சூழல், வெக்கையானது. கரிசல் நிலத்தின் மீது காலங்காலமாகக் கிராமத்தினருக்கு இருந்த உரிமையைப் பறிப்பதுடன், அதிகார மையமாக வளர்ச்சியடைந்துள்ள அரசானது, கிராமத்து வாழ்க்கை முறையையும் மண்ணையும் நீரையும் இயற்கைச் சூழலையும் சீரழிவிற்குள்ளாக்கியுள்ளதைக் கதைகளாக்கியுள்ள கி.ரா.வின் எதிர் கதையாடல், தனித்துவமானது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், அவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களையும் சொல்வது மட்டும் கி.ரா.வின் நோக்கம் அல்ல. ஐம்பதுகள் தொடங்கி கி.ரா. தொடர்ந்து கவனித்துவந்த கரிசல் பூமியில் சீரழிவிற்குள்ளான சம்சாரித்தனம் குறித்து 1958 முதல் 1982 வரையிலும் தொடர்ந்து எழுதியுள்ள எழுத்துகள், ஒப்பனை அற்றவை. கி.ரா. தான் பிறந்து வளர்ந்த கிராமத்துச் சூழலையும் அங்கு வாழ்ந்த மனிதர்கள், சக உயிரினங்களைத் தள்ளி நின்று ரசித்ததுள்ளார், எல்லாவற்றையும் உற்று நோக்குகிற இயல்புடைய கி.ரா. தான் கண்டறிந்த விஷயங்களைச் சுவராசியமாகச் சொல்வது கதைகளில் நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது. ஐம்பதுகளில் கரிசல் பூமியில் நிகழ்ந்த மாற்றங்களின் அளவு சிறியதாக இருப்பினும், படைப்பாளி என்ற நிலையில் நடப்பு வாழ்க்கை குறித்த கி.ரா.வின் கண்டுபிடிப்புகள் தனித்துவமானவை. ஒருவகையில் கி.ரா. சமூக விஞ்ஞானி போலச் செயற்பட்டு, விவசாயச் சூழலையும் சம்சாரிகளின் கையறு நிலையையும் நுட்பமாகக் கண்டறிந்துள்ளார். இதனால் சம்சாரிகளின் வாழ்க்கை குறித்த பல்வேறு சம்பவங்கள் சிறப்பான கதைகளாக வடிவெடுத்துள்ளன. இன்று வெங்காயம், துவரம் பருப்பு, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகிற சூழல் ஏற்பட்டுள்ளது. கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கிற பல்லாரி வெங்காயம், திடீரென நூறு ரூபாய்க்கு விற்கிற நிலை ஏற்பட்டதற்குக் காரணம், இணையத்தில் ஊக வணிகம் செய்கிற தரகு அதிகார வர்க்கச் சூதாடிகள் என்று சொல்வதுதான் கையலாகாத இந்திய அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. இன்னொருபுறம் விவசாயத்தையே நம்பி இருக்கிற சிறு விவசாயிகளின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையைக் கண்டும் காணாமல் இருக்கிற அரசாங்கத்தின் செயல்பாட்டினால் நசித்துப்போனது மரபான சம்சாரித்தனம் மட்டுமல்ல, பாரம்பரியமாகச் சூழலியலுடன் இயைந்து வாழ்ந்த தமிழகத்தின் திணைசார் வாழ்க்கையும்தான். உதவிய நூல் கி.ராஜநாராயணன் கதைகள். தஞ்சாவூர்: அன்னம், 2015.
மலையகத் தமிழரின் புலம்பெயர்தலின் வலி : தமிழ்மகனின் வனசாட்சி நாவலை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் அறுபதுகளில்கூட மதுரை வட்டாரத்தில் தாடியும் மீசையுமாகச் சோர்ந்த முகத்துடன் வறுமையான தோற்றத்துடன் யாராவது எதிர்பட்டால், ‘என்ன கண்டிக்குப்போன ஆளு மாதிரி இருக்கீங்க’ என்று சொல்வது வழக்கம். அன்றைய காலகட்டத்தில் இலங்கைக்குப் போய் ஏதாவது வேலை செய்து, பணம் சம்பாரிப்பதுவிட்டுத் திரும்புவது, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவலாகக் காணப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் நகருக்குச் செல்ல ராமேஸ்வரம் வரை ரயிலிலும், அங்கிருந்து கப்பலிலும் பயணம் செய்திட ரூ.10/-தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது. என்ற தகவல் இளைய தலைமுறையினர் அறியாததது. இலங்கைக்கும் தமிழகத்திற்குமான தொடர்புகள் இரண்டாயிரமாண்டுகளாகத் தொடர்கின்றன. இடையில் கடல் பிரிவை ஏற்படுத்தினாலும், தமிழகத்துத் தமிழர்களைப் பொருத்தவரையில், இலங்கையை நேச நாடாகவே கருதினர். தூத்துக்குடியில் இருந்து தோணிகள்மூலம் இலங்கைக்குச் சரக்குகளைக் கொண்டுசென்ற தமிழ் வியாபாரிகள், கொழும்பு மாநகரில் வளமாக வாழ்ந்தனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட நிலப்பகுதியில் பூர்விகக் குடிகளாக வாழ்ந்துவந்த தமிழர்களின் நிலை, செல்வாக்குடன் விளங்கியது. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்திற்குப் பின்னர் தேயிலை, ரப்பர் போன்ற பணப்பயிர்களை இலங்கையின் மலையகப் பகுதியில் விவசாயம் செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட விளிம்புநிலையினரான தமிழர்களின் அவல வாழ்க்கை, துயரம் தோய்ந்தது. பொருளியல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் காரணமாகத் தமிழர்களிடையே வலுவாக நிலவிய பாகுபாடுகள் கவனத்திற்குரியன. சிறிய தீவான இலங்கையில் இன அடிப்படையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கும், சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்களும் அதன் விளைவான ஆயுதப் போராட்டமும் அழுத்தமான வரலாற்றுப் பின்புலமுடையன. ஐந்தாறு தலைமுறைகளுக்கும் கூடுதலாகக் கடுமையாக உழைத்திட்ட மலையகத் தமிழர்களைக் கட்டாயமாக நாடு கடத்திய சிங்கள அரசாங்கத்தின் முயற்சியின் போது, தலை தூக்கிய இனஅடிப்படைவாதம், பின்னர் வலுவடைந்தது. சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி கணிசமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்ட பின்னரும், அங்கேயே தங்கி மலையகத்தி வாழ்கிறவர்களின் பொருளியல் நிலைமையும் பெரிய அளவில் வளமாக இல்லை. கடந்த இருநூறு ஆண்டு வரலாற்றுப் பின்புலத்தில், இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் போய் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்கிற தமிழர்கள் குறித்த பதிவுகள், படைப்புகளாகப் பதிவாகியுள்ளன. துன்பக்கேணி என உருவகமாக மலையகத் தமிழர்களின் சீரழிவான வாழ்க்கையை எழுதியுள்ள புதுமைப்பித்தன் ’முன்னத்தி ஏர்’ ஆவார். பொதுவாக மலையகத் தமிழரின் வாழ்க்கை குறித்து ஆய்வுகளும் படைப்புகளும் கணிசமான எண்ணிக்கையில் தமிழில் எழுதப்படாமைக்கான காரணங்கள் ஆய்விற்குரியன. இத்தகு சூழலில் தமிழ் மகன் எழுதிய வனசாட்சி (2011) நாவல் சித்திரித்துள்ள மலையகத் தமிழரின் வரலாற்றுச் சம்பவங்களும் கதைகளும் தனித்துவமானவை. முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை, என்ற தொல்காப்பியரின் பதிவுடன் திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற சொலவடையைப் பொருத்திக் காண வேண்டியுள்ளது. சோழரின் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் இலங்கை உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடற்படை வலுவாக இருந்தது. மும்மடிச் சோழமண்டலம் என்பதில் இலங்கை தீவும் உள்ளடங்கியதுதான். கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் ஏற்பட்ட டில்லி சூல்தானின் ஆட்சியைத் தொடங்கி, தெலுங்கர், மராட்டியர், போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என அறுநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவிய வேற்றுமொழியினரின் ஆட்சியதிகாரத்தில், அடிப்படைத் தொழிலான வேளாண்மை நலிவடைந்தது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற சூழலில்தான் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கோல் மிஞ்சாது என்ற பழமொழி தோன்றியிருக்க வேண்டும். பாளையக்காரர், ஜமீந்தாரின் ஆட்சியில், ஈவிரக்கமற்றவாறு வசூலிக்கப்பட்ட வரியினால் சிறு விவசாயிகள் கைவிடப்பட்ட சூழல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக மழை பொழியாமல், பஞ்சம் நிலவியபோது, நிலத்துடன் தொடர்புடைய உழைப்பாளர்களும், கைவினைஞர்களும் வறுமைக்குள்ளாயினர். அதேவேளையில் வைதிக சமயத்தின் மேலாதிக்கம் காரணமாகத் தீண்டாமையும் பால்ரீதியில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் அதிகரித்தன. நிலத்தில் பாரம்பரியமாக உழுது, பயிர் விளைவித்த பள்ளர் போன்ற உழைக்கும் மக்கள் தீண்டத்தகாதவரென ஒதுக்கப்பட்டனர். அன்றாட உணவிற்குக்கூட குடும்பத்துடன் சிரமப்பட்ட விளிம்புநிலையினர், தமிழகத்தில் நாளும் துயரப்படுவதைவிட, வேறு எங்காவாது சென்று வாழலாம் என்ற முடிவெடுத்துப் புலம்பெயரத் தொடங்கினர். செல்லும் இடத்திலாவது வயிறார உணவு உண்ணலாம் என்பது கப்பலேறியவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கும். கிராமத்தில் வாழ்ந்த எழுதப் படிக்க அறியாத தமிழர்கள் புலம்பெயர்ந்ததில், அன்றைய சாதியக் கொடூரமும், வறுமையும் முக்கியக் காரணிகளாகும். ஐரோப்பியரின் காலனிய நாடுகளில் கடுமையான உடலுழைப்புச் செய்வதற்காக மந்தைகளாக ஓட்டிச் செல்லப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையினர் தலித்துகளும் இடைநிலைச் சாதியினரும்தான். சொந்த மண்ணில் நாயைவிடக் கேவலமாக நடத்தப்படுவதைவிட, கங்காணிகளின் பேச்சுகளை நம்பி, ஏதோ ஒரு நாட்டுக்குக் கப்பலேறிய தமிழர்கள், அங்கும் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காடுகளை அழித்தல், காப்பி, தேயிலை, ரப்பர் எஸ்டேட் உருவாக்குதல், சாலைகள் போடுதல் போன்ற வேலைகளில் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். ஒருவகையில் கொத்தடிமைகளாகப் புலம்பெயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்துவிட்டு, மீண்டும் தமிழகம் வரலாம் என்ற நம்பிக்கையுடன்தான் பயணமாயினர். ஆனால் பெரும்பாலானோர் அந்த மண்ணிலே மடிந்து போயினர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் உலகமெங்கும் கூலிகளாகப் பயணமான தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள், சோகங்கள் காற்றில் மிதக்கின்றன. இலங்கைத் தீவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றைப் புனைவாக்கி நாவல் வடிவில் தந்துள்ள தந்துள்ள தமிழ்மகனின் படைப்பாக்க முயற்சி, குறிப்பிடத்தக்கது. கடந்த ஐம்பதாண்டுகளில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குக் கட்டாயமாகத் துரத்தப்பட்ட மலையகத் தமிழர்களைப் பற்றிப் பெரிய அளவில் பதிவுகள் வெளியாகாத சூழலில், வனசாட்சி நாவல், கடந்த காலத்தின் சாட்சியமாக விளங்குகிறது. இன்று தென்மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் குற்றேவல் செய்தும், கொடைக்கானல், ஊட்டி, கூடலூர் போன்ற மலைப் பிரேதசங்களில் உள்ள எஸ்டேட்டுகளில் வேலை செய்துகொண்டிருக்கிற மலையகத் தமிழர் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. தமிழகப் படைப்பாளர்களும் மலையகத் தமிழர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் கவனமற்று உள்ளனர். தமிழ்மகனின் வனசாட்சி நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரிய படகுகள் மூலம் இலங்கைக்குப் பயணமான தமிழகக் கிராமத்தினர் பற்றிய விவரிப்புடன் தொடங்குகிறது. இராமேஸ்வரம் அருகிலுள்ள மண்டபம் என்ற இடத்திலிருந்து கங்காணி வைத்தியின் ஆசை வார்த்தைகளை உண்மையென நம்பிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சீறுகிற கடலில் பயணிக்கின்றனர். இதுவரை கடலை நேரில் பார்க்காதவர்கள், திடீரெனப் படகில் இரவுவேளையில் பயணிப்பது, அவர்கள் மனதில் பீதியைக் கிளப்பியிருக்கும். இதுவரை சொந்தபந்தமென வாழ்ந்தவர்கள், பூர்வீகக் கிராமத்தைவிட்டுப் பிரிவது, மனதில் ஏக்கத்தையும் வலியையும் தவித்திருப்பார்கள். ஏதோவொரு நம்பிக்கையினால் இலங்கைக்குக் கிளம்புவது சாதாரணமானது அல்ல. இருப்பதைவிட எங்காவது சென்று வாழ்ந்திடலாம் என்ற விருப்பம்தான் அவர்களைப் புலம்பெயர்ந்திடத் தூண்டியிருக்க வேண்டும். இலங்கையின் கடற்கரையில் இறங்கியவுடன் கங்காணியின் அதிகாரக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. வெள்ளைச் சிப்பாய்கள் காவலுடன் கால்நடையாக அழைத்துச் செல்லப்படுகிறவர்கள், வழி முழுக்கத் துயரங்களை எதிர்கொள்கின்றனர். கிராமத்தினர், உடலில் உயிர் தங்கிடுவதற்காகத் தரப்படுகிற உணவை உண்டுவிட்டுக் குளிரிலும் கொட்டுகிற மழையிலும் நனைந்தவாறு மலையகத்தை நோக்கி நடக்கின்றனர். வளமான வாழ்க்கை காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் கிளம்பியவர்கள், காட்டு வழியில் கங்காணியின் அதிகாரத்தினுக்குக் கட்டுப்படுகின்றனர். சிறிய அளவில் உலகநாதன் கிளப்பிய முணுமுணுப்புக்கூட தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. கைக்குழந்தையுடன் வந்த கங்கம்மா நோயின் பாதிப்பினால், வழியிலே இறந்திட, பிணத்தை இரண்டடி ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, துயரத்துடன் நடக்கின்றனர். நடு ஆறு தோட்டம் என்று அழைக்கப்பட்ட தேயிலை எஸ்டேட்டில் சிறிய வீடுகளில் குடியேறியவர்கள், எஸ்டேட் வாழ்க்கையில் படுகிற பாடுகள் அளவற்றவை. இதுவரை மனிதர்களின் கரங்கள் தொட்டிராத காட்டை அழித்துத் தோட்டமாக்கியதில் ஆண்களும், தேயிலைக் கொழுந்து பறிப்பதில் பெண்களும் என அன்றாடம் கடுமையான உழைப்பில் ஈடுபடுகிற சூழலில், நாளை மற்றுமொரு நாளாகக் கழிகிறது. மலைநாட்டிற்குரிய கொட்டுகிற பனியிலும், அட்டைக் கடியிலும் வாடி வதங்குகிற சூழலில், பொருளியல் நிலையிலும் மாற்றம் எதுவுமில்லை. எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தில் இளம்பெண் ரத்தினம், கங்காணியின் ஆலோசனையின்பேரில், எஸ்டேட்டின் உரிமையாளரான ஆங்கிலேயருடன் நிரந்தரமாகப் பாலுறவு வைத்துக்கொள்கிறாள். தமிழகத்தின் கிராமப்புறத்தில் நிலவிய கொடுமைகளுக்குப் பயந்து, இலங்கைத் தீவுக்குப் போனவர்களின் துயரம் வெவ்வேறு வழிகளில் தொடர்கிறது. காம்பெரா என அழைக்கப்படுகிற லைன் வீடுகளில் வசிக்கிறவர்கள் எப்பொழுதும் கைக்கும் வாய்க்கும் போதாத வருமானத்தில், கஷ்டப்பட, தோட்டத் துரைமார்களும் கங்காணிகளும் வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிக் கூலி வேலைக்குப் போனது வெறுமனே வறுமை மட்டுமல்ல. சாதிய இழிவின் அடையாளத்தைத் தொலைதூரப் பிரேதசத்திற்குச் செல்வதன்மூலம் மறைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என நாவலாசிரியர் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. சிறிய அளவில் முன் பணம் தந்து அழைத்து வரப்பட்டவர்களின் அபிப்ராயங்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லாத கங்காணிகள், சந்தையில் மாடுகளைக் கைமாற்றி விடுவதுபோல தோட்ட உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் என்பது, அன்றைய காலகட்டத்தில் மனித உயிர்கள் பற்றிய மதிப்பீட்டினை வெளிப்படுத்துகிறது. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாத சூழலில், பெரிய கங்காணி இதுவரை சம்பாதித்த பணத்துடன், தமிழக்திலுள்ள திருச்சி நகருக்குப் போய் செட்டில் ஆனார். திடீரெனத் துரை, மாரப்படைப்பால் மரண்மடைந்தவுடன், துரைசாணி சுமாரான விலைக்குத் தோட்டத்தைச் சில்லறை கங்காணியான வைத்திக்கு விற்றுவிட்டு லண்டனுக்குப் பயணமானார். ஆங்கிலேயரின் வசமிருந்த தேயிலை எஸ்டேட் தமிழனுக்கு உரிமையான பிறகும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாறம் எதுவுமில்லை. இந்தியாவில் இருந்து வந்த நடேசய்யரும் அவருடைய மனைவி மீனாட்சியும் தோட்டத்திற்குத் துணி விற்பது போல வந்து, தொழிலாளர்களைச் சம்மேளனத்தில் உறுப்பினர்களாக்க முயன்றனர் என்ற வரலாற்றுத் தகவல், நாவலில் இடம் பெற்றுள்ளது. ஓரளவு அரசியல் விழிப்புணர்வு பெற்றாலும், கல்வியறிவற்ற தோட்டத் தொழிலாளர் நிலைமை வழமை போலத் தொடர்ந்தது. 1931 ஆம் ஆண்டை ஹட்டன் தொகுதியில் பெரி.சுந்தரம் போட்டியின்றி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தோட்டத் தொழிலாளர் அமைப்பு வலுவானது. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையான இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழரசுக் கட்சியின் துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வந்தேறிகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை என்ற சட்டத்தை இயற்றி அமல்படுத்திய பிரதமர் டி.எஸ். சேன் நாயகாவின் முடிவு, இலஙகையின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. தமிழகத்தில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கையின் மலையகப் பகுதியில் குடியேறி, மண்ணுடன் போராடிய தமிழர்களின் வாழ்க்கை இன்னும் சிரமத்திற்குள்ளானது. கள்ளத்தோணி, பனங்கொட்டை, வடக்கத்திக்காரன், தோட்டத்துக்காரன் போன்ற பெயர்களால் இழிவாகக் குறிப்பிடப்படுகிற மலையகத் தமிழர்கள், வெளி உலகம் அறியாமல், மலைத் தோட்டத்திற்குள்ளேயே வாழ்கின்றனர். மலேரியா காய்ச்சல், கொசுக்கடி, குளிர் என உடல்நலப் பாதிப்பிற்குள்ளானாலும், உழைப்பைத் தவிர வேறு எதுவும் அறியாத அப்பாவிகளாக இருக்கின்றனர். தொண்டைமான் தலைமையிலான தொழிலாளர் அமைப்பினாலும் பெரிய அளவில் விடிவு எதுவுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி பல தோட்டங்களுக்கும் உரிமையாளரான தொண்டைமான், மலையகத் தமிழர்கள் பற்றிய ஆளும் வர்க்கத்தினரின் முடிவுகளுக்கு உடன்படுகிறார். ’’இந்த மொத்த மலையிலும் பத்து லட்சம் பேர் இருக்கோம். கேட்டியா? அதில் பாதிப்பேர் இங்கன கெடந்து சாகணும். பாதிப்பேர் இந்தியா போய்ச் சாகணும்னு இரண்டு ராஜாங்கமும் சேர்ந்து முடிவு பண்ணி வெச்சுப்புட்டாங்க’’ எனக் காசி சொல்வது அரசியல் பின்புலமுடையது. நூறாண்டுகளுக்கும் கூடுதலாக மலையகத்தில் தங்கியிருந்து, தேயிலையை உற்பத்திசெய்து, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திய தோட்டத் தொழிலாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல், சரிபாதியான எண்ணிக்கையினரான ஐந்து லட்சம் பேர்கள் உடனடியாகக் கிளம்பிட வேண்டுமென இலங்கை அரசின் உத்திரவு போட்டது, பாசிசமாகும். தோட்டத்தினரின் நினைவுகளில் இந்தியாவிலுள்ள தமிழகம் இருந்தாலும், பல்லாண்டுகள் பிரிந்திருந்த பின்னர், மீண்டும் அங்கே போனால் என்ன செய்ய என்பது முக்கியமான கேள்வி. அரசின் ஆணைக்கேற்ப கடவுச்சீட்டு பெற்று உடனடியாகக் கிளம்பாவிட்டால், சிறைக்குள்ளாக நேரிடும் என்ற பயத்தினால், தோட்டத்தை விட்டு வேண்டா வெறுப்பாகக் கிளம்பியவர்கள், மீண்டும் ஒரு புலம்பெயர்வை எதிர்கொள்கின்றனர். பெரியசாமியின் பதின் பருவ மகள் லட்சுமிக்குக் கிளம்பிட ஆணை கிடைக்காத காரணத்தினால், அவளைத் தோட்டத்திலே விட்டுவிட்டு தாங்கமுடியாத வருத்தத்துடன் குடும்பத்தினர் கிளம்பிட நிர்பந்திக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தினரை அனுப்பாமல், அதிகாரிகள் செய்த தவறினால், பிரிந்திட்ட குடும்பங்கள் பிரிவின் வலியினால் துடித்தன. தாய்நாடு என இந்தியாவைச் சொன்னாலும் முற்றிலும் புதிய நிலத்திற்குப் போய், அங்கே எப்படி வாழ்வது என்ற கேள்வி, புலம்பெயர்ந்தவர்களை விடாமல் துரத்துகிறது. ஓரளவு கல்வியறிவினை மலையக இளைய தலைமுறையினர் பெற்றிருந்தாலும், அரசியல் சூதாட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் தத்தளிப்பதுதான் யதார்த்தம். மலைத்தோட்டம் சிங்கள முதலாளிமார் வசம் கைமாறும்போது, அங்கே சிங்களத் தொழிலாளர்களை குடியேற்றிட முயலுகின்றனர். இன்னொருபுறம் மலையகத் தமிழர்களுக்குத் தேர்தலில் வாக்குரிமை அளிக்கும் உரிமை தரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்களுடைய பிரநிதித்துவம் அதிகரிக்கும். இந்நிலையில் ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிற தமிழர்களின் ஆதிக்கம் இன்னும் மேலோங்கிடும் எனக் கண்டறிந்திட்ட சிங்களப் பேரினவாதத்தின் அரசியல் சூழ்ச்சிதான், மலையகத் தமிழர்கள் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டதற்கு முதன்மைல் காரணம். நடேசய்யர் ஒன்று திரட்டிய மலைத்தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடத் தலைவர் தொண்டைமான் இருக்கும்போது, இலங்கை குடியுரிமை பெற்றவர்களைச் சிங்களக் காடையர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையையும் மலையகத்தில் நிலவியது. அதேவேளையில் ‘’… சிங்களவன், தமிழன் எல்லாம் ஒத்துமையாத்தான் வேலை பார்த்தானுக. எல்லாம் தொழிலாளிதானேய்யா? தொழிலாளி, முதலாளி பிரச்சினையை இப்ப தமிழன் சிங்களவன் பிரச்சினையா மாத்தியாச்சுன்னா முடிஞ்சது. யாழ்ப்பாணத்துலயும் கொழும்புலயும் இருக்கவன் சிங்களவன் மேலே கோபபடறான் செரி.. இங்க இருக்கிறவனுக்கு என்ன வந்தது? … எனத் தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஆத்திரத்துடன் சொல்வது புலம்பெயர்ந்த மக்களின் யதார்த்த நிலையைச் சுட்டுகிறது. ஓரளவு அரசியல் விழிப்புணர்வு மலையகத்தில் நிலவினாலும், அரசை எதிர்த்து எதுவும் செய்யவியலாமல், தலைமுறைகளாக வாழ்ந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும்போது, கையறு நிலையில் தவிப்பது மாபெரும் சோகம். நாவலாசிரியர் தமிழ்மகன் மலையக மக்களின் துயர வாழ்க்கையைச் சித்திரிப்பதுடன் நுண்ணரசியல் சார்ந்த கேள்விகளை வாசிப்பில் எழுப்பியுள்ளார். அரசியல் சூதாட்டத்தில் தன்னிலை இழந்த மலையக மக்களின் புலம்பெயர்வு பற்றிய விவரிப்பு, நுணுக்கமான பதிவாக வெளிப்பட்டுள்ளது. மலையகத் தமிழரான பெரியசாமி, தந்து மகள் லட்சுமியைப் பிரிந்த வேதனையுடன் இந்தியாவிற்கு வந்து, கூடலூர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். அவருடைய பேரனான முருகன், கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். நவீன கங்காணியான கல்லூரி முதல்வரின் அதிகாரத்தின்கீழ் முருகன் ஒருவகையில் கொத்தடிமையாக இருக்கிறார். அவர் கல்லூரி நூலகத்தில் தற்செயலாகப் பார்த்த சி.வி.வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை என்ற புத்தகத்தில் இருந்த லட்சுமியின் கடிதம், அவருடைய தேடுதலைத் துரிதப்படுத்தியது. பின்னர் முருகன் இலங்கைக்குக் கல்லூரிப் பணியின் காரணமாகச் சென்றபோது, தனது அத்தை லட்சுமியைத் தேடிச் செல்கிறார். லட்சுமி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி, முள்ளிவாய்க்கால் போரில் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்படுகிறார். மலையகத் தமிழர் என்றால் உலகம் அறியாமல் விவரக் குறைச்சலானவர் என்று பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பத்தை லட்சுமியின் கதை சிதலமாக்குகிறது. சிங்களப் பேரினவாதத்திற்கெதிரான ஈழத் தமிழரின் ஆயுதமேந்திய போரில், மலையகத் தமிழர்கள் கணிசமாக இணைந்திருந்தனர் என்பது தமிழ்மகன் சொல்ல விரும்புவதா? யோசிக்க வேண்டியுள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழவழியற்ற நெருக்கடியான சுழலில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்திட்ட தமிழர்களில் முதல் தலைமுறையினர் அனுபவித்த கொடுமைகளும் உயிரிழப்புகளும் பற்றிய விவரிப்புடன் தொடங்கியுள்ள வனசாட்சி நாவல் காத்திரமான பதிவாகும். அடுத்த நிலையில் மலையகத்தமிழர் அநியாயமாக இந்தியாவை நோக்கி விரட்டப்பட்ட கதையில், நாடற்றவரின் குரல்கள் வெளிப்பட்டுள்ளன. இன்றும் மலையகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழர்கள், பூர்வீகத் தமிழர்களுடன் இணைந்து போராடி உயிரைத் துறந்தது அண்மைக்காலத் தகவல்கள். காலந்தோறும் அதிகாரத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிற சூழலில் மனித உயிர்கள் எதிர்கொண்ட வலிகளைப் புலம்பெயர்ந்த தமிழர்களை முன்வைத்துத் தமிழ்மகன் விவரித்துள்ள வனசாட்சி நாவல், வரலாற்றைப் புனைவுடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளது.
தமிழின் முதல் திணைசார் சூழலியல் நாவல்: சொ. தர்மனின் சூல் நாவலை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் mpandi2004@yahoo.com பூமியில் மனித இருப்பு, ஐம்பூதங்களுடன் தொடர்புடைய நிலையில் நிலமும் நீரும் ஏற்படுத்துகிற உறவென்பது, ஒருபோதும் முடிவற்றது. உயிரினங்களுக்கும் தண்ணீருக்குமான நெருக்கமானது உயிர் வாழ்தலுக்கு ஆதாரமான நிலையில், நீர் பற்றிய பதிவுகள், தமிழைப் பொறுத்தவரையில், சங்க காலம் தொடங்கி, இன்றுவரை தொடர்கின்றன. சங்கத் திணைசார் வாழ்க்கையில் நிலமும் நீரும் நெருக்கமானவை என்ற புரிதலுடன், பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை தனித்து விளங்குகிறது. ஆறு, ஏரி, கண்மாய், குளம், ஊறணி, குட்டை, ஏந்தல் என இயற்கையுடன் நெருக்கமான சூழலில் நீர் சேகரிப்பு, பராமரிப்பு, பயன்பாடு பற்றிய புரிதலின் விளைவுதான், நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாசகம். ஐவகையான நிலப் பாகுபாடு என்பது ஒருவகையில் நீருடன் தொடர்புடையது. சமூக வாழ்க்கை மேம்பட்ட சூழலில், மருதம் என அழைக்கப்படுகிற வயலும் வயல் சார்ந்த நிலமும் நாகரிக வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றன. வானம் பார்த்த வேளாண்மையுடன் ஏரி, கண்மாய்ப் பாசனம் என்ற நிலை, ஒருவகையில், குறிப்பிட்ட சமூகத்தின் பொருளியல் வளர்ச்சியைக் குறிக்கிறது. நிலம், நீர், வேளாண்மை என்ற சமன்பாட்டில் உழுது பயிர் விளைவித்திடும் உழவர்களின் சமூகச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தினைக் அறிந்திட்ட திருவள்ளுவர், மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்கிறார். வேளாண்மையின் சிறப்புகளைக் கொண்டாடிய பாரம்பரியமான தமிழர் வாழ்க்கையில், எப்பொழுது விவசாயம் குறித்து எதிர்மறையான சிந்தனை தோன்றியது என்பது ஆய்விற்குரியது. கி.பி.10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் மேலாதிக்கம் பெற்றிருந்த வைதிக சமயம், மனுதர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் மண்ணைக் கீறி உழுகிற உழவுத் தொழிலை இழிவானதாகக் கருதிய நிலை பரவலானது. என்றாலும், தமிழகத்தின் மருத நிலத்தில் வழமையான முறையில் நடைபெற்றுவந்த வேளாண்மையின் விரிவினால் நிலையான அரசுகள் மேலாதிக்கம் பெற்றன. தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட பிரமாண்டமான கோவில்கள் கட்டப்பட்டதற்கும், சோழ மன்னர்களின் தென்கிழக்காசிய நாடுகளின் படையெடுப்பினுக்கும் பின்புலமாக விளங்கியது, வளமான நஞ்சை விவசாயம்தான். தமிழகத்தின் அரசியலதிகாரம் பின்னர் சுல்தான், தெலுங்கர், மராட்டியர், ஆங்கிலேயர் போன்ற வேற்று மொழியினரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த போதிலும், நிலத்தின் மூலம் கிடைத்த வருவாய் ஆட்சியாளர்களுக்கு முக்கியமாக இருந்தது. தொடர்ந்து மழை பொழியாத சூழலில் நிலவிய கடுமையான வறட்சியின் காரணமாகத் தமிழகத்தின் விவசாயக் கூலிகள் மொரிஷியஸ், இலங்கை, பிஜி போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தது, தனிக்கதை. ஆங்கிலேயரின் ஆட்சியிலும் செழித்திருந்த கிராமத்து வேளாண்மையானது, இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் எதிர்கொண்ட மாற்றங்கள் அளவற்றவை. சூழலியல் சார்ந்து வளத்துடன் செழித்திருந்த மருத நிலமானது, இன்று பொட்டல் தரிசாக மாறி, எங்கும் சீமைக் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இத்தகு சூழலில் எழுபதாண்டு காலகட்டத்தில் விவசாயம் சிதலமாக்கப்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்திடும் முயற்சியாக சோ.தர்மனின் சூல் நாவல் விரிந்துள்ளது. கரிசல் பூமியில் எட்டையாபுரம் ஜமீந்தாரின் ஆளுகைக்குட்பட்டிருந்த உருளைக்குடி கிராமமும் அந்த ஊர்க் கண்மாயும் எனத் தர்மன் விவரிப்பது, வரலாற்றை மீளுருவாக்கம் செய்துள்ளது. கரிசல் பூமியில் செழிப்போடிருந்த கண்மாய்களின் சீரழிவுகள் எப்படி நிகழ்ந்தன என்பதைக் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சம்பவங்களின் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள கதை, தமிழகம் எதிர்கொண்ட சீரழிவு குறித்த நுட்பமான பதிவு. சூழல் சார்ந்து செழித்தோங்கிய நிலவெளியானது காலப்போக்கில் நசிவடைந்ததில், நிலத்துடன் பொருந்தி வாழ்ந்த கிராமத்து மக்கள் அடைந்த துயரத்தைப் பதிவாக்கியுள்ள தர்மனின் நாவல், இழப்பின் அவலத்தைப் பேசுகிறது. கடந்த அறுபதுகளில்கூடத் தமிழகக் கிராமங்களில் குடிமராமத்து முறை வலுவாக நிலவியது. மரபான முறையில் இயற்கை வேளாண்மை நடைபெற்ற சூழலில், பாசன வசதி பெறுகிற நிலவுடமையாளர்கள் கால்வாய்கள், ஏரிகள், கண்மாய்களை முறையாகப் பராமரித்தனர். அரசாங்கத்தின் தயவை நம்பியிராமல், ஒவ்வொரு கிராமத்து விவசாயிகளும் கண்மாயைத் தங்களுக்கான உடைமையாகக் கருதினர். அவர்கள் வேளாண்மையின் ஆதாரமான நீர்நிலைகளைக் கண்காணிக்கும் தொழிநுட்பத்தை முன்னோர்களிடமிருந்து அறிந்திருந்தனர். நாவலாசிரியர் தர்மனின் மொழியில் சொல்வதெனில் நிறைசூலிப் பெண்ணாகத் ததும்பிடும் கண்மாயைச் சார்ந்து பறவைகளும் கால்நடைகளும், மீன்களும் மனிதர்களும் வாழ்ந்தனர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் எட்டையாபுரம் ஜமீந்தாரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலகட்டத்தில் கிராமத்தினருக்கும் பொதுச்சொத்தான கண்மாய்க்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு நிலவியது. கண்மாய்க் கரையை வெட்டி ஏற்படுத்திய வழியில் கரம்பை மண்ணை வண்டியில் அள்ளிச் செல்வதற்கு ராஜா தொட்டுக் கொடுத்த மண்வெட்டிதான் முதல் வெட்டு வெட்டிடப் பயன்படுத்தப்பட்டது. விவசாய வேலைகள் தொடங்கிடும்போது ஒவ்வொன்றையும் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் கிராமத்தினர் கருதினர். சுதந்திர இந்தியாவில் மக்களின் நலன்களைக் காப்பதற்கென்று உருவாக்கப்பட்ட துறைகள், காலப்போக்கில் மக்கள்மீது மொட்டை அதிகாரம் செய்கின்றனவாக உருமாறியதற்கு அடையாளமாகக் கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் சீரழிவுகள், சாட்சியமாக உள்ளன. பொதுப்பணித் துறை கண்மாயைக் கண்காணிக்கவும், வனத்துறையானது கண்மாயில் முளைத்திருக்கிற மரங்களைப் பராமரிக்கவும், கண்மாய்க்குள் படிந்திருக்கிற வணடல் மண் கனிமத் துறையின் கட்டுப்பாட்டிற்குள்ளும், கண்மாய் நீரைப் பாசனதாரர்களுக்குப் பகிர்ந்தளிப்பது வேளாண்மைத் துறையினரின் அதிகாரத்திற்குள்ளும் என்ற நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகளின் கைகோர்த்திருக்கிற அரசு அதிகாரிகள் பலருக்கும் கண்மாய், சம்சாரித்தனம் என்றால் என்னவென்று எதுவும் தெரியாது. இத்தகைய அதிகாரிகளின் தலைமையில் இயங்குகிற துறைகளின் கட்டுப்பாட்டிற்குள்ளான கண்மாய்கள், தூர் வாருதல் இன்றி, மண் மேடிட்டு, கருவேலம் முட்கள் மண்டிய புதர்களாக மாறிவிட்டன. கிராமத்தினர் தங்களுடைய கண்மாய் என்று கருதிய மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது என்று சூழலியலாளர்கள் கூப்பாடு போட்டாலும் கண்டுகொள்ளாத அரசாங்கம், ஆற்றிலிருந்து தண்ணீரை 200 கி.மீ. தொலைவிலுள்ள நகரத்திற்குக் கொண்டு செல்கிறது. சுமார் 1000 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்றால் அதில் கைமாறும் பணத்தில் அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கணிசமான பங்கிருக்கிறது. அதேவேளையில் வேதியியல் உரம், பன்னாட்டுக் கம்பெனிகளின் பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நாசகாரக் கும்பல்களின் பேராசைக்குப் பலியாகியுள்ள சம்சாரிகள் இன்றும் நம்பிக்கையுடன் நிலத்தில் உழுதுகொண்டிருக்கின்றனர். இயற்கையான நீர் என்பது போய் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அறுநூறு அடி ஆழத்தில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டி விவசாயம் செய்கிற சம்சாரிக்கு கடைசியில் என்னதான் மிச்சமாகும்? கடந்த நூற்றாண்டு காலகட்டத்தில் பாசனத்திற்கான இயற்கையான தண்ணீர் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற துயர வரலாற்றைச் சொல்கிற கதைசொல்லியான தர்மனின் படைப்பு நோக்கம், சூழலியல் சார்ந்தது. கடந்த காலத்தில் தமிழகத்தின் திணைசார் சூற்றுச்சூழல் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளது என்பது சூல் நாவலின் கதையாடலில் விரிவாகப் பதிவாகியுள்ளது. முன்னோர்களின் பாரம்பரியமான இயற்கை பற்றிய புரிதலை மறுதலித்துவிட்டு, அறிவியலினால் எதையும் சாதிக்க முடியுமென்ற போக்கின் விளைவுதான், அயனான விளைநிலங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாவலாசிரியரான தர்மனின் நிலமும் கண்மாயும் எனப் பின்னிப் பிணைந்திருந்த இயற்கைச் சூழலின் பேரழிவு குறித்த சமகாலத்தின் பதிவு, காத்திரமானது. விளக்கி வைத்த வெங்கலச் செம்பு போன்றிருந்த கண்மாய்கள் இன்று கைவிடப்பட்ட அரசியலை வலியுடன் பேசுகிறது நாவல். சப்பாத்திக் கள்ளிகளும் சங்கம் புதர்களும் மண்டிக் கிடந்த கண்மாய்க் கரையில், அரசாங்கத்தின் முயற்சியினால் சீமைக் கருவேல மரங்கள் முளைத்தன. அவை ஆடு மாடுகள் உண்ணுவதற்குக்கூடப் பயன்படாத விஷச் செடிகள். ஆப்பிரிகாவில் இருந்து அரசினால் கொண்டுவரப்பட்ட ஜிலேபி மீன், ஏற்கனவே இங்கிருந்த உழுவை, கெழுத்தி போன்ற பாரம்பரியமான மீன்களின் அழிவிற்குக் காரணமானது. இன்னொருபுறம் கிராமத்தில் புதிதாக உருவான கட்சிகளும் அரசியல்வாதிகளும் விளிம்புநிலையினர்மீது அதிகாரம் செலுத்துவதுடன், கிராமத்து வளங்களைக் கொள்ளையடிக்க முயன்றபோது, மரங்கள் வெட்டப்பட்டன; கண்மாய்கள் சீரழிவிற்குள்ளாயின; மணல் கடத்தப்பட்டது; குளங்கள், ஊறணிகள் ஆக்கிரமிப்பிற்குள்ளாகின. இன்றையச் சூழலியல் சீர்கேட்டினுக்கு மூலகாரணம் அரசாங்கம்தான் என்ற கருத்தியலுக்குச் சூல் நாவல் வலுச் சேர்த்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் திட்டமிடுகிற அரசின் விவசாயம் பற்றிய திட்டங்கள், பெரிய அளவில் சம்சாரிகளைப் போய்ச் சேர்வதில்லை என்பதுதான் உண்மை. . பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. கரிசல் மண் சார்ந்த நிலவெளியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிற மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. கண்மாய்ப் பாசனத்தில் செழித்திருக்கும் கரிசல் பூமியில் நிலத்துடனான உற்பத்தி உறவுமுறையானது, பண்பாட்டுரீதியில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலமான்ய அமைப்பு உருவாக்கியிருக்கும் ஆண்டான் – அடிமை உறவு ஒருபுறம் எனில், இந்திய மண்ணிற்கே உரித்தான வைதிக சநாதனம் உருவாக்கி இருக்கும் சாதிய மேல்-கீழ் அடுக்கு இன்னொருபுறம் ஆதிக்கம் செலுத்துகிறது. வயலின் உரிமையாளர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் அல்லது உயர் சாதியினர் என்றால், வயலில் இறங்கி வேலை செய்கிற விளிம்புநிலையினர் ஒடுக்கப்பட்ட சாதியினராகவே உள்ளனர். இத்தகைய சூழலில் கரிசல் வட்டரத்திற்கு உரித்தான நிலவுடமைப் பின்புலத்தில் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ள சூல் நாவல், இனவரைவியல் தன்மையுடன் விரிந்துள்ளது. அன்றாடம் கடினமான வயல் வேலை என்றாலும் சம்சாரிகள் எந்தவொரு சூழலிலும் பகடி செய்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக இரட்டை அர்த்தம் தொனிக்கிற பாலியல் பேச்சுகள் மாமன் - மச்சான் உறவினரிடையே இயல்பாகப் பேசப்படுகின்றன. இத்தகைய பேச்சுகளுக்காக யாரும் கோபித்துக்கொள்வதில்லை. காமம் குறித்த வெளிப்படையான பேச்சுகள், ஒருவகையில் அலுப்பான கிராமிய வாழ்க்கையில் சுவராசியத்தை ஏற்படுத்துகின்றனவா? யோசிக்க வேண்டியுள்ளது. கண்மாயில் நாமக் கோழி தென்பட்டால் அந்த வருடம் நல்ல மழை பொழிந்து கண்மாய் நிரம்பும் என்பது சம்சாரிகளின் நம்பிக்கை. பனை மரத்தில் கூடு கட்டியிருக்கிற தூக்காணங்குருவிகள் எந்தப் பக்கம் வாசல் வைத்துள்ளன என்பதைக் கண்டறிந்து, அந்த வருடம் வடக்கத்தி மழையா, தெற்கத்தி மழையா எனச் சொல்கிற கிராமத்துப் பெரியவர்களின் கணிப்பு சரியாக இருக்கிறது. பிற உயிரினங்களின் செயல்களை வைத்து மழை பற்றி அறிந்திட முயலுகிற சம்சாரிகளின் இயற்கை பற்றிய புரிதலை நாவல் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது. சம்சாரித்தனம் என்பது இயற்கையுடன் முழுக்க நெருங்கிய தொடர்புடையது, கதைசொல்லல் முழுக்க வெளிப்பட்டுள்ளது. இயற்கையைக் குறியீட்டு நிலையில் புரிந்துகொள்ள முயலுகிற கிராமத்தினர், அதியற்புத ஆற்றல்களுடன் சமரசம் செய்திட விழைகின்றனர். பருவ மழை பொழிந்து கண்மாய் மறுகால் போனவுடன் மகிழ்ச்சியடைகிற கிராமத்தினர், விடாமல் மழை கொட்டியபோது செய்கிற சடங்கு, இயற்கை மீதான நெருக்கத்தினை வெளிப்பாடாகும். மழை வேண்டாமெனக் கிராமத்தினர் நடத்தும் பாவனைச் சடங்கு, மானுடவியல்ரீதியில் முக்கியமானது. மழை வேண்டுமெனக் கிராமத்தினர் நடத்துகிற சடங்குகள் போலவே மழையை வழியனுப்புகிற சடங்கு, ஒருவகையில் இயற்கையுடன் கை குலுக்குகிற மனித முயற்சிதான். அம்மனை வழிபட்ட பெண்கள், கூடையில் மாவைக் கையால் அள்ளி, காற்றில் வீசியெறிந்து மழைக்கு விடை தருகிற காட்சி, சுவராசியமானது. மாவு புகையாகக் காற்றில் மிதந்து, மேகங்களை ஊரைவிட்டு விரட்டிவிடும் என்ற நம்பிக்கைதான் ஒருவகையில் எளிய மக்களின் இருப்பினுக்கான ஆதாரமாகும். அமானுட சக்திகளின் ஆதிக்கம் எப்படிக் கதைகளாகக் கிராமத்து வெளியில் மிதக்கிறது என்பதைக் கதைசொல்லியான தர்மன் முடிவற்றுக் கதைக்கிறார். பரம்பரைகள்தோறும் வாய் மொழியாகப் பரவிடும் நாட்டார் கதைகள் கட்டமைத்திடும் புனைவுகள் குறித்துக் கேள்விகள் கேட்பதற்கு யாருக்கும் துணிச்சலற்ற வாழ்க்கையை அசலாகப் பதிவாக்கியுள்ள தர்மனின் முயற்சி, கவனத்திற்குரியது. பேய், முனி, காத்து கருப்பு துடியான தெய்வங்கள் போன்றவை எந்த நேரத்திலும் தங்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட நேரிடலாம் என்ற புரிதல் நாட்டார் பண்பாட்டில் முக்கியமான அம்சம். இரவில் கிடையைக் காவல் காக்கிற கீதாரியுடன் காம இச்சை நிறைவேறாமல் அலைகிற பெண் பேயானது, அவருடைய மனைவி உருவில் வந்த உடலுறவு கொள்கிறது என்ற கிராமத்து வெளியில் மிதந்திடும் கதைக்குப் பின்னால் சபிக்கப்பட்ட பெண்ணின் வேதனை பொதிந்திருக்கிறது. கண்மாயைக் காக்கிற அய்யனார், கண்மாய் மடையைத் திறந்திடும் முயற்சியில் உயிரைத் தந்த நீர்ப்பாய்ச்சிக் கட்டக் கருப்பன் சாமி, கண்மாயில் இறந்துபோன கள்ளனுக்குக் குலதெய்வமான உளிக்கருப்பன் கோவிலில் சிலை, கிணற்றின் சொருகு கல் உடைந்திட இறந்துபோன மகாலிங்கம் பிள்ளையின் கொடிக்கால் பிள்ளை கோவில் என ஊரெங்கும் பரவியிருக்கிற கோவில்கள் இறந்துபோன மனிதர்கள்தான். ஏதோவொரு இக்கட்டான சூழலில் இறந்தவர்கள், தங்களை வணங்குகிறவர்களுக்கு நல்லது செய்வார்கள் என்பது கிராமத்தினரின் நம்பிக்கை. சூல் நாவலின் அடியோட்டமாக அறம்/ஒழுங்கு பற்றிய சொல்லாடல்கள் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. பகுத்தறிவின் வலிமை முன்னிறுத்தப்படுகிற காலகட்டத்தில், இப்படியெல்லாம் நடைபெறுகின்ற சம்பவங்கள் எவற்றின் அடைப்படையில் நிகழ்கின்றன என்ற கேள்வியைக் கதையாடல் முன்வைத்துள்ளது. ஏதோவொரு நம்பிக்கை சார்ந்து கிராமத்தினரால் உருவாக்கப்படுகிற ஒழுங்கு பற்றிய புரிதல் முக்கியமானது. சூலியாகத் ததும்பிய கண்மாய் நீரைச் சொந்த பகையின் காரணமாக வெட்டிவிட்டுக் கிராமத்தினரையும் பிற உயிரினங்களையும் தவிக்கவிட்ட சொக்கலிங்கபுரம் சித்தாண்டியின் செயல் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுடைய மனைவி மயில் பெற்ற இரு குழந்தைகளும் ஊமையாகப் பிறந்தன. அவன் செய்த செயல் பாவமானது என்று மனம் குமைந்த நிலையில், கீழ்நாட்டுக் குறிச்சி அய்யரிடம் பரிகாரம் கேட்கச் செல்கிறான். அவனைப் பார்த்தவுடனே அய்யர், ’’பாவக் கைகள் தீண்டிய தேங்காயும் பழமும் என் கண்ணில் பட வேண்டாம். ஊரைச் சுற்றிலும் மரங்கள் நடு..’’ எனப் பரிகாரம் சொல்கிறார். புல மாடன் தனது பங்காளியான பன்னி மாடனை ஊர்ப் பஞ்சாயத்தில் எல்லோர் முன்னாலும் காலில் கும்பிட்டு விழ வைத்தான். அதற்குப் பழி வாங்குவதற்காகப் புல மாடனின் மகன் கண்ணாடி விரியனால் கொத்தப்பட்டு அநியாயமாக இறப்பதற்குப் பன்னி மாடன் தந்திரமாகச் செயலாற்றினான். அந்தச் சம்பவம் யாருக்கும் தெரியாது. பன்னி மாடனின் மனைவி மாரி பெற்ற குழந்தையின் உடலில் கண்ணாடி விரியன் பாம்பின் தோல் போலச் செதில்களாக உதிர்ந்ததைப் பார்த்ததும் பயந்து போனான். அவனது செயலுக்குப் பரிகாரம் சொன்ன கீழ்க்குறிச்சி அய்யர், உனது மனதில் விஷமேறி விட்டது, ஓடைகளைத் தூர் வாரு, உசுப்பிராணிகள் வாழ்ந்திட வழிவகை செய் என்கிறார், எட்டையாபுரத்து அரண்மனையில் பசுக்களைப் பராமரித்துவருகிற நங்கிரியான், இறைச்சி உணவிற்காகத் தந்திரமான செயலினால் பசுக்களைக் கொல்கிறான். அவனது செயலைக் கேள்விப்பட்ட மன்னர், அவனைத் தண்டிக்காமல் பாவத்தில் மூழ்கட்டுமென வெளியே அனுப்பி விட்டார். ஏன் அரண்மனை வேலையில் இருந்து நங்கிரியான் நீக்கப்பட்டான் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தான் செய்த செயலினால் வருந்துகிறவனின் நடுமுதுகில், தண்டுவடம் முடிகிற இடத்தில் முளைத்த சிலந்திக் கட்டியினால், எப்பொழுதும் குனிந்தவனாக மாறினான். அவனுடைய மகனின் முதுகிலும் சிலந்திக்கட்டி முளைத்தபோது, தனது வம்சமே பாவத்தினால் அழியப் போவதை நினைத்துத் தீராத கவலைக்குள்ளானான். வயலில் புகுந்து மேய்ந்த ஆட்டுக்குட்டியைச் சுட்டுக் கொன்றதுடன், கிராமத்தினர் வழக்கமாக நடந்து செல்கிற பாதையில் செல்லக்கூடாது எனத் தடுத்த பயனாரெட்டியார் ஊராரின் வயிறெரிச்சலுக்கும் பழிப்பினுக்கும் ஆளானார். ராணுவத்திற்குச் சென்றவரின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து மூளை சிதறி இறந்து போனார். ஆத்தூர் வெற்றிலைக் கொடிக்கால் நாடாரிடம் பொய் சொல்லி, அவரிடமிருந்து வெற்றிலை பற்றிய தகவல்களைப் பெற்று வந்த மகாலிங்கம் பிள்ளை, கொடிக்காலில் தோண்டிய கிணற்றின் சொருகு பலகைக் கல் தலையில் விழுந்ததினால் செத்துப்போனார். அவர் இறப்பினுக்கு முன்னர் தலையில் எச்சத்தைப் போட்ட பறவை, நொடிப்பொழுதில் காற்றில் பரவவிட்ட சேதியை யார் அறிவார்? நாவல் முழுக்க விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு சம்பவங்கள் அறத்தினுக்கெதிராகச் செயல்படுகிறவர்கள் அடைந்த துயரங்களை நாட்டார் கதை மரபில் சொல்கிறது. இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தன எனக் கிராமத்தினரின் பேச்சுகளில் மிதந்திடும் கதைகள், சமூக ஒழுங்கினை நுணுக்கமாகக் கட்டமைக்கின்றன. கதைசொல்லியான தர்மன் எந்த இடத்திலும் தனது அபிப்ராயத்தை முன்வைக்காமல் விலகி நிற்கிறார். முடிவற்ற கதைகளின் மூலம் உயிர்த்திருக்கிற கிராமத்தினர், ஒழுங்கின்மை/அறமற்றவை நிச்சயம் அழியும் என்ற நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரமா? மார்க்ஸ் கணித்தது போல சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மோன தவத்தில் உறைந்திருந்த தமிழகக் கிராமங்களில் ஒன்றான உருளைக்குடியின் பின்புலத்தில் தர்மன் விவரிக்கிற வாழ்க்கை, பன்முகத்தன்மையுடையது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் வலுவாக நிலவினாலும் சேவை சாதியினரின் உழைப்பு, சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது. நிலத்தில் விவசாயம் செய்கிற பள்ளர்கள், மண்பாண்டங்கள் செய்கிற குயவர்கள், மர வேலை செய்கிற தச்சாசாரிகள், இரும்பு வேலை செய்கிற கொல்லர்கள் எனக் கிராமத்தினரின் தேவைகள், குறுகிய வட்டத்திற்குள் அழுத்தமாகச் சுழன்றன. உழவு முதன்மையான கிராமத்து வாழ்க்கையில் மக்களின் தேவைகளை நிறைவு செய்கிற சேவைத் தொழிலாளர்கள், ஒப்பீட்டளவில் இழிவாகக் கருதப்பட்டனர். இந்நிலையில் நிலத்தில் தானியங்களை விளைவிக்கிற ஆதாரமாக விளங்குகிற பள்ளர்களைச் சமூக அடுக்கில் இழிந்தவர்களாக ஒடுக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன. கிராமத்து விவசாயத்தின் அடிப்படையான கண்மாயைப் பராமரிக்கிற வேலையைச் செய்வதற்கு நீர்ப்பாய்ச்சி அல்லது மடையன் எனப் பள்ளர் சாதியினர் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டனர். பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து, அதிகாரம் செலுத்திய வைதிக சமயத்தின் மேலாதிக்கம் வலுவாக நிலவியபோதும், பள்ளர் சாதியினர் நீர் மேலாண்மை செய்தனர். தர்மனின் சூல் நாவலில் இடம்பெற்றுள்ள நீர்ப்பாய்ச்சியான முத்துக்கருப்பன், பரம்பரைரீதியாக வேலை செய்கிறார். மடையின் வழியாகக் கண்மாய் நீரை வயல்களுக்குத் திறந்துவிடும் பணியுடன், கண்மாயைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் செய்கிற பணியை மனவிருப்பத்துடன் செய்கிறார். மழை பொழிந்து தண்ணீர் நிரம்பி நிறைசூலியாகத் ததும்பிடும் கண்மாய் நீரை முறைவைத்து நிலத்திற்குப் பாய்ச்சுகிற நீர்ப்பாய்ச்சியின் பணியானது, ஊரின் செழிப்பினுக்கு ஆதாரமாகும். கிராமத்து சம்சாரிகளின் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமான நீர்ப்பாய்ச்சி பற்றிய விவரிப்பு, நாவல் முழுக்கத் தனித்து விளங்குகிறது. பிரமாண்டமான கண்மாயை நிர்வகிக்கிற நீர்ப்பாய்ச்சியான பள்ளர் சாதியினரான முத்துக்கருப்பன் சுயமரியாதையுடன் விளங்குகிறார். பல்வேறு சாதியினர் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த சூழலில், பள்ளர்களும் தங்களுக்கு உடைமையான நிலத்தில் கௌரவத்துடன் விவசாயம் செய்தனர். இந்நிலையில் பிற சேவை சாதியினர் போல பள்ளர்களும் சமமதிப்புடையவர்கள் என்ற நிலையில், அவர்கள் எப்படி அட்டவணை சாதியினர் வரிசையில் சேர்க்கப்பட்டனர் என்ற கேள்வியை வாசிப்பில் நாவல் நுட்பமாக எழுப்புகிறது. உணவு உண்ணும் பழக்கத்தில் மாட்டிறைச்சியைத் தவிர்த்திடும் பள்ளர்கள், பிற இடைநிலைச் சாதியினரைப் போல ஆட்டிறைச்சி மட்டும் உண்ணுகின்றனர். ஒரு நிலையில் நாடார் சாதியினரிடமிருந்து தின்பண்டம் வாங்குவதை விலக்காகக் கொண்டிருந்தனர். இன்று நாடார் சாதியினர், சாதிய இழிவிலிருந்து விலகித் தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக மாற்றிக்கொண்ட சூழலில், பள்ளர்கள் மட்டும் ஏன் இன்னும் ஆதி திராவிடர் அல்லது தலித் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது நியாயம்தானா என்ற கேள்வியைக் கதையாடலின் மூலம் தர்மன் எழுப்பியுள்ளார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக இன்றளவும் நிலத்தில் உழைக்கிற பள்ளர்கள் பற்றி மறுஆய்வு செய்ய வேண்டிய நேரமிது. கிராமத்து வாழ்க்கையில் தங்களுக்கான இடத்துடன் மரியாதையுடன் வாழ்கிற பள்ளர்களைத் தலித் என்ற சொல்லாடலுக்குள் அடக்குவது பொருத்தம் இல்லை என்ற நுண்ணரசியலை வாசிப்பில் நாவல் முன்வைக்கிறது. கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகச் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கிட கிராமத்துச் சம்சாரிகளின் அயனான விளைநிலங்களைப் பறித்திடத் துடிக்கிற அரசாங்கங்களின் மக்கள் விரோதப் போக்கின் இன்னொரு முகத்தைச் சூல் நாவல் பதிவாக்கியுள்ளது. சூழலியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, டி.செல்வராஜின் தோல், சுப்ரபாரதி மணியனின் சாயத்திரை, இரா.முருகவேளின் முகிலினி போன்ற நாவல்கள் குறிப்பிட்ட தொழில் காரணமாக ஏற்படுகிற சுற்றுப்புறச் சீரழிவுகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளன. சூல் நாவல் திணைசார் சூழலியல் மரபின் தொடர்ச்சியை முன்னிலைப்படுத்திய நிலையில், புதிய போக்கினுக்கு வழி வகுத்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமான கிராமிய வாழ்க்கைமுறையையும், அதனைச் சிதலமாக்கிய அதிகாரத்தின் மேலாதிக்கத்தையும் முன்வைத்து சோ.தர்மன் எழுதியுள்ள சூல் நாவல்தான், தமிழின் முதல் திணைசார் சூழலியல் நாவல். தமிழ் அடையாளத்தையும் பண்பாட்டையும் வலியுறுத்துகிறவர்கள் அவசியம் சூல் நாவலை வாசித்து விவாதிக்க வேண்டும். சூல் (நாவல்).சோ.தர்மன். அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம். பக்கம்:500; விலை: ரூ.380/-. தொடர்புக்கு: 04332-2734
காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்லும் மனுஷ்யபுத்திரன்: நம் காலத்து அரசியல் கவிதைகள் ந.முருகேசபாண்டியன் mpandi2004@yahoo.com அரசியல் இல்லாமல் எதுவுமில்லை என்ற நெருக்கடியான சூழலில் மனித இருப்பு, பூமியில் முன்னெப்போதையும்விட இன்று அதிகமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ஊடகங்கள்மூலம் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்படுகிற கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான அரசியல் பின்புலத்தில், தனிமனித சுதந்திரமும் இயக்கமும் சிதலமாகின்றன. அசலானதாகவும் சுயமானதாகவும் சிந்திப்பதற்கான சூழல் முழுக்க மறுதலிக்கப்படுகிற நிலையில், சமூக அக்கறையுள்ள மனிதர்கள், இன்னும் தீவிரமாக இயங்கிட வேண்டியுள்ளது. அதிகாரத்தின் கரம் எங்கும் பற்றிப் படர்கையில், உடல்கள் மீதான கண்காணிப்பின் அரசியல் வலுவடைந்துள்ளது. இன்னொருபுறம் அரசியலற்ற தன்மையைப் பரப்பி, எதற்கும் அடங்கியொடுங்கிடும் உடல்களைத் தயாரிப்பது துரிதமாக நடைபெறுகிறது. அந்நிய மூலதனத்திற்குச் சிவப்பு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தவாறு, தேசபக்தி பேசிக்கொண்டு ஆட்சியதிகாரத்தில் இருக்கிற பி.ஜே.பி.யின் அரசியல் செயல்பாடு, கபட நாடகத்தின் உச்சம். இன்னொருபுறம் இந்துத்துவா பின்புலத்தில் பாசிசத்திற்குத் தயாராகிடும் அடிமை உடல்களை உருவாக்கிடும் பணியைச் செய்திட மோடி தலைமையிலான அரசு துடிக்கிறது. நுகர்பொருள் பண்பாட்டின் மேலாதிக்கச் சூழலில் மரபான விழுமியங்களின் சிதலத்தில் மொழியும் படைப்புகளும் சந்தைக்கான சரக்காக உருமாற்றப்படுகின்றன. இலக்கியம் பற்றிய பேச்சுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாகப் படைப்பாளி படைப்புகளில் உன்னதம் தேடியலைவது பொருத்தமாக இல்லை. அதிலும் இரண்டாயிரமாண்டு அரசியல் பாரம்பரியமுடைய தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியாக இயங்குகிற நவீனமான கவிஞன், புதிய வகைப்பட்ட அரசியல் சூழலுடன் எதிர்வினையாற்றிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழலில் சமகால அரசியல், பண்பாட்டுத் தளத்தில் கவிதைகள் வழியாக உடனுக்குடன் செயலாற்றுகிற கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனித்து விளங்குகிறார். அவருடைய அரசியல் கவிதைகள் முகநூல் உள்ளிட்ட மின்னணு ஊடகத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு, இளைய தலைமுறையினரின் கருத்தியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உரைநடையின் செல்வாக்கு மேலோங்கியுள்ள சூழலில் கவித்துவமான மொழியுடன் சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்துகிற மனுஷின் கவிதைகள், ஆனந்த விகடன் உள்ளிட்ட வெகுஜனப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகிப் பரவலாகக் கவனம் பெற்றுள்ளன. கவிதை என்பது சொற்களால் ஆன மொழி விளையாட்டு. என்றாலும் கவிதை வாசிப்பில்தரும் அனுபவம், அதிர்ச்சி, மகிழ்ச்சி காரணமாக இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழில் நீடித்துள்ளது. கவிதையை உருப்பளிங்கு போலவும், கதவு இல்லாத இரும்புப் பெட்டகம் போல மாற்றி விநோத வஸ்துவாக்கும் முயற்சி காலந்தோறும் தொடர்ந்து நடைபெறுகிறது. இறுக்கமும் செறிவும்மிக்க புதிரானதுதான் கவிதை என்ற பார்வைக்கு மாற்றாக நெகிழ்ச்சியுடனும் எளிமையாகவும் இருப்பது சிறந்த கவிதையின் அடையாளம் என்பது சங்க இலக்கியப் படைப்புகள் தொடங்கி நடைமுறையில் உள்ளது. பாரதியாரின் அரசியல் கவிதைகள் பொதுப்புத்தியில் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள், தமிழ்க் கவிதையில் புதிய போக்கினைக் கட்டமைத்தன. தமிழகச் சமூகச் சூழலில் கவிதையின் மூலம் நிகழ்காலச் சம்பவங்களை விமர்சனத்திற்குள்ளாக்கி, கவிதை என் கைவாள் என அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல், இன்று வலிவடைந்துள்ளது. அந்தவகையில் கவிதைசொல்லியான மனுஷ் தன்னைச் சுற்றிலும் அன்றாடம் நடைபெறுகிற சம்பவங்களினால் பாதிப்பிற்குள்ளாகி, எளிய சொற்களால் உருவாக்கியுள்ள அரசியல் கவிதைகள், வாசிப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அழுத்தமானவை. கவிதை எனச் சிறுபத்திரிகை உலகு இதுவரை உருவாக்கியுள்ள புனிதத்தைக் கட்டுடைத்து, கவிதை வடிவத்தை அரசியல், சமூகப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்துவது மனுஷ் கவிதைகளின் தனித்துவம். காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் எனத் தன்னையும் உள்ளடக்கிய மனுஷின் கவிதை, இன்றைய கார்ப்பரேட் அரசியல் குறித்த பகடியாகியுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைராக்கியத்துடன் போராடிய காந்தியை முன்வைத்துக் கவிஞர் உருவாக்கிடும் பேச்சுகள் காத்திரமானவை. இரவுவேளையில் உணவு சாப்பிடும் வழக்கமற்ற காந்தியுடன் விருந்திற்குச் செல்கிற கவிஞர் மனுஷ், இன்றைய சூழலில் காந்தியின் இருப்பினையும் அடையாளத்தையும் அர்த்தமிழக்கச் செய்கிற மதஅடிப்படைவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இரவில் விருந்து, கொண்டாட்டம் என்ற மேட்டுக்குடி மனநிலைக்கு எதிரான மனப்பான்மையுடைய காந்தி, இன்றிருந்தால் எப்படி செயல்படுவார்? யோசிக்க வேண்டியுள்ளது. எப்பொழுதெல்லாம் அக்கிரம், அநியாயம் தலையெடுக்கிறதோ அப்போது காந்தி, உண்ணாநோன்பை அறிவித்ததுடன், எளிய மக்களைத் திரட்டி எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்குவது வழக்கம். எளிமையைத் தனது வாழ்க்கையின் ஆதாரமாகக் கருதிய காந்தி, இன்றைய நுகர்பொருள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமானவர்தான். வர்க்க அரசியலை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு மாற்றாக மதஅடிப்படைவாதத்தை முன்வைக்கிற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் போராடுகிற மக்களின் மனநிலை மழுங்கடிக்கப்பட்ட சூழலில், காந்தியை முன்வைத்த மனுஷின் கவிதை வரிகள் அழுத்தமானவை. புலால் மறுத்தலை வாழ்நாளெல்லாம் போதித்த காந்தி புலால் உண்டதற்காக மனிதர்கள் தோல் உரிக்கப்படுவதைக் கண்டதும் என் தட்டிலிருந்த மாமிசத் துண்டைக் கடித்து தன் உண்ணாநோன்பை முடித்துக்கொள்கிறார் இறந்த விலங்கின் இறைச்சியை உண்டதற்காக இந்துத்துவ அடிப்படைவாதிகள் எளிய மனிதர்களைக் கொன்ற சம்பவத்தைக் காந்தி எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பது முக்கியமான கேள்வி. அகிம்சையைப் போதித்த காந்தி, புலால் சாப்பிட்டுத் தனது எதிர்ப்பைக் காட்டியிருப்பார் என்ற மனுஷின் நம்பிக்கை, கசப்பின் வெளிப்பாடு. தனது வாழ்க்கையை லட்சிய போதத்துடன் மாற்றி நுண்ணரசியல் செய்த காந்தியை விமர்சிப்பது மட்டும் மனுஷின் நோக்கமல்ல. யோசிக்கும்வேளையில் இன்றைய இந்திய அரசியல் சூழலில் காந்தி தேவைப்படுகிறார் எனத் தோன்றுகிறது. காந்தியின் கையினால் சுற்றப்படும் ராட்டை பழுதடைந்த நிலையில், அவருக்கு எலக்ட்ரானிக் ராட்டையைப் பரிசளிக்க வேண்டுமென நினைக்கிற கவிஞர், இன்றிரவு/ அவரது தோழிகள் படைசூழ/ அவருடன் விருந்திற்குச் செல்கிறேன் என்கிறார். கையால் சுற்றப்பட்ட ராட்டை என்பது வழக்கொழிந்த சூழலில், எலக்ட்ரானிக் ராட்டை என்பது வெறும் பகடி மட்டுமல்ல. மாறிவருகிற நெருக்கடியான அரசியலின் ஆதிக்கம் வலுவடைந்த நிலையில் காந்தியத்தின் மறுபிரவேசம் குறித்தத் தேடலாகக் கவிதையைக் கருத முடியுமா? தொண்ணூறுகளின் முற்பகுதியில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பாசிஸ்டாகச் செயல்பட்டபோது, பிரசுரமான மனுஷின் அரசி கவிதை, துணிச்சலுடன் நடப்பு அரசியலை விமர்சனத்திற்குள்ளாக்கியது. அன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் ஜெ பற்றிக் கள்ள மௌனம் சாதித்தன. நடப்புச் சமூகத்தில் அதிகாரம் எந்த வடிவில் நிலவினாலும் அது குறித்துக் கவிதையின்மூலம் எதிர்க்கருத்தைப் பதிவு செய்திடும் புலமை மரபு, தமிழைப் பொருத்தவரையில் சங்க இலக்கியத்தில் தொடங்கியுள்ளது. ஆள்கிறவரின் அதிகார வெறியின் விளைவு மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும்போது, அதற்கெதிராகக் கவிதையின்மூலம் குரலெழுப்புவதுதான் புலமை மரபின் அறமாகும். அம்மரபில் தோய்ந்திருக்கும் அறம் இன்றுவரை தொடர்கிறது. வரம்பற்ற அதிகாரத்தினால் தமிழகத்தை ஆட்டிப்படைத்த ஜெயலலிதாவை அப்போலா தினங்கள் கவிதை வரிகள்மூலம் கடுமையாக விமர்சித்து, அரசியலதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிடுவது, கவிஞர் மனுஷின் முதன்மை நோக்கமாகும். மது பானங்கள் தயாரிப்பாளர்களும் சசிகலா கும்பலும் பின்னிருந்து இயக்கிட எதுவும் செய்வேன் எனச் சர்வாதிகாரியாகக் கொக்கரித்த அன்றைய முதல்வரான ஜெயலலிதாவின் செயல்களைத் தொடர்ந்து கவிதையின் வழியாகக் கவிஞரான மனுஷ் விமர்சிப்பது அவருடைய அரசியல் ஈடுபாடுதான். உடல்நலமின்மை என முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென அப்போலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலாக நடைபெற்ற மர்மான நிகழ்வுகள் சாதரணமானவை அல்ல. அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது கவர்னரும் அறியாத நிலையில், ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்ட அறிக்கைகள், திகில் நாடகத்தின் காட்சிகள் போல இருந்தன. எழுபத்தைந்து நாட்களில் தமிழக அரசியல் பின்புலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த கேள்விகளுக்கு இன்றளவும் விடையில்லை. தமிழகத்தில் எல்லோரும் திருதிராஷ்டர்களாக என்ன நடக்கிறது என்ற புரிதலற்றுத் திணறுகையில், ஒரு கவிஞராக மனுஷ் எழுதிக் குவித்த கவிதைகள் உக்கிரமான மொழியில் வெளிப்பட்டுள்ளன. ’அப்போலா தினங்கள்’ என்ற தலைப்பில் மனுஷ் படைத்திட்ட கவிதை வரிகள், சமகால அரசியலைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அவை ஒருவகையில் காத்திரமான சமகால அரசியல் விமர்சனங்கள். இந்த நகரத்தை இப்போது ஆள்வது யார் என்று கேட்கிறார்கள் எப்போதும் போல இந்த இருட்டு இந்த பயம் அப்போலாவின் தீவிர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை பூடகமாக்கப்பட்ட நிலையில், எங்கும் பயத்தின் நிழல் பற்றிப்படர்ந்திட்ட சூழல், கவிதை வரிகளாகியுள்ளது. அரசியல் என்றால் சதிகளும் மந்திராலோசனைகளும், கவிழ்ப்புகளும் நிரம்பியது என்பது அப்போலா தினங்களில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் வெற்றி, எப்போதும் பயத்தை ஏதோ ஒருவழியில் வெகுஜனங்களின்மீது தூவுதில்தான் இருக்கின்றது. பரந்துபட்ட மக்களின் விதைக்கப்பட்ட சந்தேகத்தின் விதை விருட்சமாக உயர்ந்தபோது, எங்கும் கள்ள அமைதி நிலவிய சூழலை, மனுஷின் கவிதைகள் பதிவாக்கியுள்ளன. துண்டிக்கப்பட்ட நாவுகளின் குரல் என விரிந்திடும் கவிதையில் மக்களின் சந்தேகங்களும் கேள்விகளும் முடிவற்ற நிலையில், அரசி பற்றிய பேச்சுகள் தடைசெய்யப்பட்ட சூழலில், மனுஷின் ஆதங்கம் நியாயமானது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் எழுதிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், அரசாங்கம் எல்லா ஊடகங்களையும் கண்காணித்தது, சூழலில் பீதியைக் கிளப்பியது. எங்கும் வதந்திகள் பரவியபோதும் முதல்வரின் உடல்நிலை ரகசியமாக இருந்தது. அப்போலாவில் நடந்தது என்னவென்பது மக்கள் யாரும் அறியாத சூழலில், ஜெயலலிதாவை முன்வைத்துச் சசிகலாவும் அவருடைய அடியாட்களும் நிழலாக இருந்து ஆட்சியதிகாரத்தைச் செலுத்திய காலகட்டத்தில் நடைபெற்ற காட்சிகள் முக்கியமானவை. அவர்கள் சிரித்தார்கள் எதையும் கேட்க வேண்டியதில்லை இந்த நகரமே எதைப் பேசுகிறது என்று எங்களுக்குத் தெரியும் நான்கு பேரின் நாக்கை அறுத்தால் எல்லா நாக்குகளும் தானே அடங்கிவிடும் அரசியல் சூழல் குறித்து நியாயமாகப் பேசுகிறவர்களின் நாக்குகளை வெட்டியபிறகு, அரசியைப் பற்றி மக்கள் யோசிப்பதைத் தடுத்திட முடியுமா என்ற மனுஷின் வரியில் அதிகாரத்திற்கெதிரான குரல் அழுத்தமானது. சமூக வலைத்தளங்களில் எழுந்த கேள்விகளை முடக்கிட முயன்ற அரசியந்திரத்தின் பின்புலம் என்னவென்பது இன்றுவரை யாரும் அறியாத மர்மமாக உள்ளது. ஜனநாயக நாட்டில் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என்பதன் வெளிப்பாடுதான் அப்போலா தினங்கள். சமகால அரசியல் நெருக்கடியின் குரலாகப் பதிவாகியுள்ள நீண்ட கவிதைகளில் கசப்பும் வெறுப்பும் கலந்த சொற்கள் ததும்பி வழிகின்றன. அரசி பற்றிய அதிகார பிம்பத்தைக் கட்டமைத்திடும்போது, வெறுமனே பார்வையாளன் போல கவிஞர் கவிதை சொன்னாலும் சமகாலத்தின் அவலக்குரல் நுட்பமானது. அரசிக்கு என்ன நடந்தது/ என்பதைப் பற்றிய கேள்விகளை/அவளது சமாதிக்கு மேல் பறக்கும்/வண்ணத்துப்பூச்சிகள்/ இன்னும் கேட்டவண்ணம் இருக்கின்றன. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் இன்றும் நிழலெனப் பரவிக்கொண்டிருக்கிற சூழலில், மனுஷின் கவிதை வரிகள் முடிவற்ற கேள்விகளை எழுப்புகின்றன. நம்பத்தகுந்த வட்டாரங்கள் என ஊடகங்கள் தெரிவிக்கிற உண்மைத் தகவல்கள் அல்லது சம்பவங்கள் பின்னர் பொதிந்திருக்கிற அரசியல் உருவாக்கிட முயன்றிடும் கருத்தியல் நுண்ணரசியலானது. மனுஷ், நம்பத்தகுந்த வட்டாரம் எப்படி இருக்கும் என்று அப்பாவியாக எழுப்புகிற கேள்விக்கான விடை பகடியான மொழியில் அமைந்துள்ளது. ஐ.சி.யூனிட்டில் உற்சாகத்துடன் பேசுகிறார், சாப்பிடுகிறார் ஜெயலலிதா என நம்பத்தகுந்த வட்டாரம் உருவாக்கிய தோற்றம் உண்மையானதுதானா? பெரும்பான்மை மக்களைத் தங்களுடைய நோக்கத்திற்கேற்ப உருவாக்கிட அதிகார வர்க்கத்தினருக்கு எப்போதும் நம்பத்தகுந்த வட்டாரம் என்ற பேச்சு, உதவுகிறது. நம்பத்தகுந்த வட்டாரத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த கவிதைசொல்லியான மனுஷைச் சுற்றுலா வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக/ ரகசிய இடத்திற்கு/ அழைத்துச் சென்றான்/ அங்கே பொட்டலில்/ பசி மயக்கத்துடன் படுத்திருந்த/ பூனை/ எங்களைப் பார்த்து/ மியாவ்/ என்று ஒரே ஒருமுறை கத்திவிட்டு/ மறுபடி தூங்க ஆரம்பித்துவிட்டது. புனைவுகள் மீது கட்டமைக்கப்பட்ட அப்போலா தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை விமர்சிக்கிற கவிதையில் கேலியும் கிண்டலும் பொங்குகின்றன. அரசி-2 கவிதையானது அன்றைய அப்போலாவின் மர்ம தினங்கள் குறித்த காத்திரமான விமர்சனம். அவள் நிஜமாக இருந்தபோது/ உருவாக்கிய அச்சத்தைவிட/ அவள் நிழலாக மாறியபோது/ உருவான அச்சத்தின் கனம்/ தாங்க முடியாததாக இருந்தது என்ற வரிகளின் பின்புலத்தில் அரசியின் இறுதி நாட்கள் பதிவாகியுள்ளன. அதிகாரத்தின் வழிமுறைகளில் எப்போதும் இருள் படர்ந்திருக்கிறது அதிகாரத்தின் வாள் நுனிகளில் எப்போதும் நஞ்சு தடவியிருக்கிறது. அதிகாரம் கட்டமைத்த பிம்பமான அரசி, இறுதியில் பதுமையைப் போல அந்த வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார். அவள் கடைசியாக இருந்த வீட்டில்/ அவள் கடைசியாக இருந்த அறைச்சுவரில் இருந்த/ பல்லி ஒன்றுக்கும் மட்டுமே/ அந்த உண்மை தெரிந்திருந்தது/ அந்தப் பல்லி எப்போது பேசும்/ யாருக்கும் தெரியாது. இன்று வரையிலும் அரசிக்கு என்ன நடந்தது மர்மமான சூழலில் பல்லி பேசினால் உண்மை தெரியும் என்பது, கவிதையை அமானுஷ்யத்திற்கு நகர்த்துகிறது. ஒரு நாள் இரவில் ரூபாய் மதிப்பு நீக்கப்பட்டதாக வெளியான பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏடிஎம் வாசலில் இரண்டாயிரம் ரூபாய் எடுப்பதற்காகக் காத்திருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் நிலவிய பீதி அளவற்றது. கருப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்ற பொய்யான தகவலுடன் களத்தில் இறங்கிய நடுவண் அரசாங்கம், எளிய மக்களின் பணத்தை வங்கிகளில் முடக்கியதில் உள்நோக்கமுண்டு. ஏற்கனவே வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகளுக்கு மீண்டும் கடன் கொடுப்பதற்கான பருண்மையான நோக்கம் உள்ளது. ஆனால் மக்கள் தேசநலனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மோடி கூறியது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். வங்கியில் சேமித்துள்ள தங்களுடைய சொந்தப் பணத்தை எடுப்பதற்காக இந்திய மக்கள் பட்ட துயரங்களைக் குறித்து மனுஷ் எழுதியுள்ள கவிதைகள், அவருடைய சமூக அக்கறையின் விளைவாகும். இருண்டகாலக் குறிப்புகள் என்ற பெயரில் வெளியான மனுஷின் கவிதைகளை இன்று மறுவாசிப்பிற்குள்ளாக்கிடும்போது, அன்றைய சூழலின் வெக்கையினால், போதமிழந்த நிலையில் அவர் எழுதிக் குவித்துள்ளது புலப்படுகிறது. மக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் ஒரு பைத்தியக்காரக் கும்பலின் நோக்கங்களுக்கு தேசமே பைத்தியமாக்கப்படுவதை ஒரு இலக்கற்ற போலி இலட்சியத்திற்கு ஒவ்வொரு மனிதனும் பலியாக்கப்படுவதை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் மக்கள்மீது ஓரிரவில் திணிக்கப்பட்ட வன்முறையைப் பொறுத்துக்கொள்ளல் குறித்த அதிகார வர்க்கத்தின் அறிவுரையின் பின்னால் பொதிந்திருக்கிற நுண்ணரசியலைக் கேள்விக்குள்ளாக்கிடும் மனுஷின் கவிதை வரிகள், நுட்பமானவை. சிரமத்திற்கு வருந்துகிறேன்/ மாடு மேய்ப்பவர்களை/ ஒரே இரவில் கடன் அட்டைகளை/ பயன் பயன்டுத்துபவர்களாக/ மாற நிர்பந்திப்பதற்காக என்ற வரிகள் அன்றைய இருண்ட காலத்தின் பதிவாக என்றும் விளங்கும். வங்கியில் பணம் எடுப்பவர்களின் கைவிரலில் கறுப்பு மை வைக்கப்படும் என்பது சிவில் சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட கொடூரம். சராசரி மக்களின்மீது அவசரநிலையைத் திணித்திட்ட மோடி அரசின் கொடூரச் செயல்பாட்டினுக்குப் பின்னர் பொதிந்திருக்கிற அரசியலில் கார்ப்பரேட்டுகளின் நலன் உள்ளது. இந்நிலையில் கவிஞர் மனுஷ் ஏன் அத்தோடு விட்டீர்கள்/ நெற்றியில் கறும்புள்ளி/ செம்புள்ளி குத்தி அனுப்புங்கள்/ ஒரு காதை அறுத்து அனுப்புங்கள்/ உங்கள் தேசபக்திக்காக/ இதைக்கூட பொறுக்க மாட்டோமா? என்கிறார். இந்தியப் பொருளதாரத்தைப் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, தேசபக்தி என எளிய மக்களிடம் போதிப்பது எதற்காக? தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான அம்பானி, விஜய் மல்லையா போன்றோரின் ஆதாயத்திற்காக எதையும் செய்திட முயலுகிறப் பிரதமர் மோடி குழுவினர், விளிம்பு நிலையினரின் நலனுக்காகப் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்வது அண்டப்புளுகு. மக்களின் எந்தவொரு நியாயமான எதிர்ப்பையும் மலினப்படுத்துவதற்காகப் போலியான தேசபக்தி என்ற சொல்மூலம் காவிக் கும்பல் கட்டமைக்கிற புனைவின் பின்னர் பொதிந்திருக்கிற அரசியலை எதிர்ப்பதற்கான கலகமாக மனுஷின் இருண்டகாலக் குறிப்புகள் கவிதைகள் உள்ளன. காவிரி என்பது அன்னையின் பெயர் என்ற கவிதை, உருக்கமான மொழியில் தமிழகத்து மக்களின் எதிர்பார்ப்புகளைப் பேசுகிறது. தண்ணீரில் கிடக்கிறது/ காவிரியின் நீதி கேட்கும் சிலம்பு எனத் தொடங்குகிற கவிதை, நியாயத்தின் பின்புலத்தில் தமிழக மக்களின் வலியைப் பதிவாக்கியுள்ளது. காவிரி என்பது அன்னையின் பெயர் அவளைப் பைத்தியக்காரியாக்கி உங்கள் அடிமையாக்கி நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சுவர்களுக்குப் பின்னே அவளது பசித்த மக்கள் கதவு திறப்பதற்காகக் கண்ணீருடன் நின்றுகொண்டிருக்கிறார்கள் மண்ணில் இயற்கையாகப் பாய்ந்தோடுகிற ஆற்றைத் தங்களுக்கு மட்டும் உரியது எனச் சிறையிலிட முயலுகிற கர்நாடகா மாநில அரசியல்வாதிகளின் நியாயமற்ற அடாவடிச் செயல்கள் கண்டனத்திற்குரியன. ஒருக்கால் பெரும் மழை பொழிந்து கர்நாடகா மாநிலம் முழுக்க வெள்ளக்காடானால், அப்போதும் தமிழகத்திற்குத் தண்ணீர் தரமாட்டேன் எனத் தேக்கி வைப்பது சாத்தியமானால், அவர்கள் எதுவும் பேசலாம். காலங்காலமாக இயற்கையாகப் பாய்கிற காவிரியைத் தடுத்து வைத்துக்கொண்டு, வெட்டி நியாயம் பேசுவதனால், பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். தமிழகத்து டெல்டா நிலப்பகுதியில் வறண்ட நிலத்தைப் பார்த்தவாறு பசியோடு காத்திருக்கிற விவசாயிகளின் கண்ணீ,ர் துயரமான மொழியில் கவிதையாகியுள்ளது உடல் பற்றிய அளவுக்கதிகமான மதிப்பீடுகளும் புனிதங்களும் கட்டமைக்கப்பட்ட இன்றைய சமூகச் சூழலில், குறிப்பாகப் பெண்ணுடல் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏராளம். பெண்ணுடல் அரசியலை முன்வைத்துப் பெண்ணியவாதிகள் முன்வைக்கிற கேள்விகள் ஒருபுறம் என்றால், டிஜிடல் வெளியில் காட்சியளிக்கிற நிர்வாணப் பெண்ணுடல்கள் இன்னொருபுறம் வலுவாக உள்ளன. இன்று மின்னணு ஊடகம் எங்கும் பரவலான சூழலில், இணைய வெளியில் காட்சிப்படுத்தப்படுகிற நிர்வாண உடல்களின் மாயத்தோற்றங்கள் பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகப் பெண்ணுடல்கள், இதுவரை தமிழ்ச் சமூகம் உருவாக்கியுள்ள விழுமியங்களை அர்த்தமிழக்கச் செய்கின்றன. திடீரென ஒருநாளில் virtual வெளியில் காட்சியளிக்கிற தனது நிர்வாண உடலைக் காண நேரிடுகிற பெண்ணின் மனம், அதைத் தாங்கவியலாமல் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறது. ஏதோ ஒரு விளையாட்டுப்போல லென்ஸின் முன்னர் தனது நிர்வாண உடலை எந்தக் கூச்சமுமின்றிக் காண்பித்த பெண்ணுக்கு, நிஜம் தகிக்கிறது. ஸ்மார்ட் மொபைல் போன்கள், கணினியுடன் இணைக்கப்பட்ட காமிராக்கள் எந்த மூலையில் இருந்தும் கண்காணிக்கிற இக்கட்டான சூழலில், அந்தரங்கம் அர்த்தமிழக்கிறது. நிர்வாண உடல்களின் கதை என்ற கவிதையானது இன்று இளைஞர்களும் இளைஞிகளும் எப்போதும் எதிர்கொள்ளவிருக்கிற அபாயத்தை வேறு கோணத்தில் விவரிக்கிறது. நீங்கள் ஒரு நிர்வாண உடலைப்/ பார்க்க விரும்பினால்/ கண்ணாடியின் முன்/ உங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு/ நிற்பதே சிறந்தது என்ற நடிகையான ராதிகா ஆப்தேயின் கருத்து, வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். அதேவேளையில் நிர்வாணம் பற்றிப் பதற்றமின்றி, அதைப் புரிந்துகொள்வதன் திறவுகோலாகவும் அவருடைய ஆலோசனை உதவுகிறது எனச் சொல்லலாமா? நிர்வாணம் பற்றிச் சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன தங்கள் சொந்த நிர்வாணத்தை காணொளியாகவோ புகைப்படமாகவோ காண நேர்கிறவர்கள் தங்கள் நிர்வாண உடலை உடனே தூக்கில் தொங்கவிட்டு விடுகிறார்கள் அல்லது ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள் உடல் பற்றிய சமூக மதிப்பீட்டிற்கும் நடப்புச் சூழல் குறித்தான முரண் காரணமாகக் காவு வாங்கப்படுகிற பெண்ணுடல்கள் பெருகுகிற சூழல் குறித்த அழுத்தமான கேள்விகளை எழுப்புகிறது மனுஷின் கவிதை. இதுவரை நிர்வாணம் குறித்துப் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிரேமைகளையும் புனைவுகளையும் மறுபரீசிலனை செய்ய்ய வேண்டிய நெருக்கடியான காலகட்டமிது. ஒருநிலையில் டிஜிடல் வெளியில் காட்சிப்படுத்தப்படுகிற நிர்வாணத் தோற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வியைப் பாடுபொருளாகக்கொண்ட கவிதை, நவீன சமூகம் எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கி.பி.3016 ஆம் ஆண்டில் அழிந்த தமிழர் நகரத்தை அகழ்வாய்வு மேற்கொண்டபோது, கிடைத்தவை பற்றிய மனுஷின் கவிதை, சமகாலத் தமி்ழர்கள் குறித்த நுட்பமான பதிவு. இதுவரை அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள், பண்டைத் தமிழரின் பண்பாடுச் செறிவினுக்கு ஆதாரமாக இருப்பதனால், இன்று தமிழ்ப் பெருமை பேசுவோர் புளகாங்கிதம் அடைகின்றனர். கி.பி.3016-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மண்ணைத் தோண்டும்போது, தொல்லியல் ஆராய்ச்சி மாணவி கண்டறிந்த ரகசியக்கூடம் பற்றிய பதிவுகள், நடப்பில் பெண்ணுடல்கள் மீது நிகழ்த்தப்பட்ட வதைக்களத்தைச் சித்திரிக்கின்றன. வீட்டை விட்டு ஓடிப்போன பெண்கள் பிடித்து வரப்பட்டுப் பாதாள அறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது கணவர்கள் கொல்லப்பட்டு/ தண்டவாளத்தில் வீசப்பட்டார்கள்/அல்லது கொல்லப்படுவதற்கு முன்னர்/ தற்கொலை செய்துகொள்வதாக/வாக்குமூலம் அளித்தார்கள்…. அந்தப் பெண்களைத் தீ வைத்து உயிரோடு எரிக்கப்பட்டதற்கும்/ ஒரு மாமிசத்தைப் போல வெட்டப்பட்டதற்கும்/ காதில் விஷம் ஊற்றிக் கொன்றதற்கும்/ மயக்க ஊசிகள்மூலம்/ அரைப் பைத்தியமாக்கப்பட்டதற்கும்/ஏராளமான சான்றுகள் இருக்கின்றன என நீளும் கவிதை, பெண்ணின் வலியையும் இருப்பினையும் பதிவாக்கியுள்ளது. தமிழர் நாகரிகம், பண்பாடு, மரபு, பாரம்பரியம் போன்ற சொல்லாடல்கள் முன்னிறுத்தப்படுகிற இன்றைய காலகட்டத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு காரணமாகப் பெண்ணுடல்களை வதைக்குள்ளாக்கிடும் தமிழர் அரசியலைப் பகடியான மொழியில் மனுஷ் பதிவாக்கியுள்ளார். உபயோகிக்க முடியாத கருவி என அன்பினை முன்வைத்திட்ட கவிதை வரிகளில் சக மனிதர்களுக்கிடையிலான உறவு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அன்பு என்ற சொல்லின் பின்னல் புதைந்திருக்கிற அரசியல் அழுத்தமானது. அன்பின் பட்டன் கத்தியை மடக்கு தம்பி என ப்ரியத்துடன் தொடங்கிடும் கவிதை வரிகள் வாசிப்பில் சுவராசியமளிக்கின்றன. உனக்கு யாரோ/சொல்லித் தந்திருக்கிறார்கள்/அன்பு என்பது/ ஆற்றில் இறங்குவது போல என்று/… அன்பின் துருப்பிடித்த வாளோடு/ நான் இங்கே நெடுங்காலமாக/ செய்வதறியாது அமர்ந்திருக்கிறேன். அன்பின் மறுபக்கம் ஆதிக்கம், அதிகாரம், வெறுப்பு எனப் படர்ந்திடும் உணர்வுகள் என்ற பார்வை நுட்பமான அவதானிப்பு. உலகிலுள்ள எல்லா மதங்களும் அன்பு என்ற சொல்லின் பின்புலத்தில்தான் வரலாறு முழுக்க லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்துள்ளன. எவ்விதமான விமர்சனங்களுக்கும் அப்பால்பட்ட தூய அன்பு என்று காலந்தோறும் உருவாக்கப்பட்டுள்ள புனைவினைக் கேள்விக்குள்ளாக்கும் மனுஷின் கவிதைமொழியில் அரசியல் தோய்ந்துள்ளது. சர்க்கஸில் புலிகளைப் பழக்குகிறவன் பற்றிய கவிதை, மனித இருப்புக் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. விருந்தினர் விடுதியில் இப்பொழுது எடுபிடியாக வேலை செய்கிற கிழவன், முன்னர் சர்க்கஸில் புலிகளைப் பழக்கியதை விவரிப்பது சுவராசியமானது. அதைக் கேட்டவுடன் கவிதைசொல்லி மனமுடைந்து சொல்கிறார். நான் இப்படித்தான் ஒவ்வொரு அதிகாரத்திற்கும்/ பழக்கப்படுத்தப்பட்டேன்/ அந்தக் கிழவனிடம் சொல்ல/ எனக்கு அவமானமாக இருக்கிறது. வலிமையான புலியைப் பழக்குவதுபோல தீவிரமான கருத்தியல் சார்புடையவரையும் அதிகாரத்தின் நலனுக்கேற்ப மாற்றுவது, இங்குத் திட்டமிட்ட முறையில் நடைபெறுகிறது. கொம்பாதி கொம்பனையும் அடக்கியொடுக்கித் தொழுவத்தில் கட்டுவதற்குக் காத்திருப்போர் முன்னால் என்ன செய்ய முடியும்? அவனிடம் உன் குடும்பம் எங்கே என்று கேட்கப்பட்ட கேள்விக்குத் சொன்ன விடை முக்கியமானது. ஒரு காலத்தில் இருந்தது இப்போது இல்லை சர்க்கஸில் புலிகளைப் பழக்குவது போல அத்தனை எளிதில்லை ஒரு குடும்பத்தைப் பழக்குவது. அடர்ந்த வனத்தில் சுயேச்சையாகத் திரியும் புலிக்குட்டியைப் பிடித்து வந்து பழக்குகிற விநோதமான வேலை செய்கிறவனின் குடும்பம், அவனை விட்டுத் தள்ளிப் போய்க்கொண்டிருப்பது நகைமுரண். சிறுகதைக்குரிய விஷயத்தைக் கவித்துத்துடன் நெடுங்கவிதையாகச் சொல்லியுள்ள மனுஷின் கவிதைமொழி நுட்பமானது. எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பவன்/ திடீரென ஒரு நாள்/ தனிமையின் நரகத்தில் வீழ்ந்தான் எனத் தொடங்கும் காதுகளைத் தின்பவன் கவிதை, அதியற்புதப் புனைவாக அரசியலை முன்வைக்கிறது. பொதுவாக எப்பொழுதும் யாரிடமாவது எதையாவது பேசுவதில் ஆர்வமுடையவர்களுக்குப் பிறர் சொல்வதைக் கேட்பதற்குக் காதுகள் இருக்காது. அவன் திருமணமானபோது, இளம் மனைவியின் முலைகளைவிட அவளுடைய காதுகளை நேசித்துப் பேசுகிறான் என்ற விவரிப்பு, காதுகளைத் தேடியலைகிறவனின் அவஸ்தையைச் சொல்கிறது. இன்று பலரும் ஏதோ ஒரு காரணத்தினால் பிறரை நோக்கிப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். எதிராளியிடம் கலந்துறவாடுவதைவிடத் தனது பேச்சு மேன்மையானது, சரியானது என்ற நம்பிக்கை வலுவடைந்த மனிதர்களின் எண்ணிக்கை பெருகுவதை மனுஷ் நீண்ட கவிதையாக்கியுள்ளார். பேசிக்கொண்டே இருப்பவன்/ ஒருநாள் தனிமையில் நரகத்தில் வீழ்ந்தபோது/ முதலில் தற்கொலை செய்துகொள்ளலாம்/என்று நினைத்தான்… பிறகு அவன் அறையின் சுவரில் ஒரு பெரிய காதை வரைந்தான் அருகே மேலும் பல சிறிய காதுகளை வரைந்தான் அவனுக்கு அது போதுமானதாக இருந்தது நிஜக் காதுகளைவிட வரையப்பட்ட காதுகள் சௌகர்யமானவையாகவும் பணிவு மிக்கவையாகவும் இருந்தன சுவர் முழுக்க வரையப்பட்ட காதுகள் முன்னால் அவன் தன் உரையைத் தொடங்கினான் அதுதான் அவன் வாழ்நாளின் மிகச்சிறந்த உரையாக அமைந்திருந்தது காதுகள், தனிமனிதன் இயற்கையோடும் சகமனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கான கருவி என்ற நிலை, இன்று மாறியுள்ளது வெளியில் இருந்து ஒவ்வொரு கணத்திலும் திணிக்கப்படுவதற்கான/கொட்டப்படுவதற்கான தொட்டியாகக் காதுகள் மாற்றப்பட்டு விட்டன. அதிலும் மதஅடிப்படைவாதிகளாலும் ஆதிக்க அரசியல்வாதிகளாலும் இடைவிடாமல் செய்யப்படுகிற பிரச்சாரங்களினால் நிரம்பித் ததும்புகிற காதுகள், ஒருநிலையில் தங்களுடைய இயல்பினை இழக்கின்றன. இன்னொருபுறம் பேசு, பேசிக்கொண்டேயிரு, கேளு ,கேட்டுக்கொண்டேயிரு, பார், பார்த்துக்கொண்டேயிரு என ஊடகங்கள் தருகிற நெருக்கடியினால், அசலான கருத்து எதுவுமற்ற மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இருபத்து நான்கு மணி நேரமும் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகிடும் பிரேக்கிங் நியூஸ் கேட்கிறவனின் மூளை நாளடைவில் துருப்பிடித்துவிடும். இப்படியாக ஊடகங்களினால் தகவமைக்கப்படுகிற பெரும்பாலான மனிதர்கள், தொலைக்காட்சி சேனல்கள் முன்னர் உறைந்திருப்பது வழமையான விஷயமாக மாறிவிட்டது. எப்போதும் பேசுவதைக் கேட்பதற்காக மட்டும் காதுகள் மாறிக்கொண்டிருப்பது அரசியல் சார்ந்தது என்பதைக் கவித்துவத்துடன் பதிவாக்கியுள்ள மனுஷின் கவிதை வரிகள், வாசிப்பில் புதிய உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. போர்முனைச் செய்திகள், வெறுமனே மண்டியிட வந்திருக்கிறேன், வீட்டிற்குத் திரும்புவதற்கான காரணங்கள், கலவரம், கள்ளத் தீர்க்கதரிசிகள், கலவரம் உள்ளிட்ட பெரும்பாலான கவிதைகள் சமகால அரசியலை முன்வைத்துள்ளன. கவிதையில் அரசியல் கூடாது என்ற பம்மாத்தின் பின்னர் பொதிந்திருக்கும் அரசியல் பாசாங்கானது. கவிதை என்ற வடிவத்திற்குப் பொருத்தமற்ற புனிதத்தைப் புனைந்துரைப்பது, ஒருவகையில் அபத்தம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவரும் யாருடைய கைப்பாவைகளாகவோ மாற்றப்படும் நெருக்கடியான சூழலில், அந்தரங்கம் என ஒன்று இருக்க முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. காதல், அகம் எனத் தோய்ந்திருக்கிற கவிதைக்கும் புறம் சார்ந்து தனிமனிதன் எதிர்கொள்கிற அரசியல், பண்பாட்டு நெருக்கடிகள் சார்ந்த கவிதைக்கும் சமூகப் பயன்பாட்டில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் மனிதர்களுடைய அரசியல், பண்பாடு, சமூக வாழ்க்கை எப்படி இருந்தது? கார்ப்பரேட் அரசியலின் ஆதிக்கம் வலுவடைந்தபோது விளிம்புநிலையினருக்கு என்ன நிகழ்ந்தது? எந்தக் குற்றமும் செய்யாத காரணத்தினால், பாதகம் எதுவும் ஏற்படாது என்ற நடுத்தர வர்க்கத்தினரின் நன்னம்பிக்கை எந்த நேரத்திலும் சிதைக்கப்படுவதற்கான சாத்தியமுண்டு என்பது மனுஷின் கவிதை தருகிற எச்சரிக்கை. எப்போதும் யாரும் பலியாடுகளாக மாற்றப்படலாம் என்பதற்குச் சாட்சியமாக இளவரசன், ராம்குமார் சம்பவங்கள் ஏற்படுத்திய பதற்றத்தை மனுஷ் முன்னிலைப்படுத்தியுள்ளார். இருத்தல் பாதுகாப்பானது என நம்புகிற சமகாலத்தினர், அரசியல்ரீதியில் எதிர்கொண்ட முடிவற்ற கேள்விகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்திட மனுஷின் கவிதைகள், சமூக ஆவணமாக விளங்குகின்றன தனிப்பட்ட கவிஞரின் குரல் என்ற போதிலும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுக்குரலாகத்தான் கவிதையானது காலந்தோறும் வெளிப்படுகிறது. இருளின் நிழல் எங்கும் பற்றிப் படர்ந்திடும் இன்றையத் தமிழக அரசியல் சூழலில், மனுஷின் கவிதைகள் வாசிப்பின் வழியாகத் தொந்தரவு செய்கின்றன; வாசகரின் சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கின்றன. எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்ற நுகர்பொருள் சார்ந்த அற்பமான பிலிஸ்டைன் மனநிலையினைக் கேள்விக்குள்ளாக்கிற மனுஷின் அரசியல் கவிதைகள், நம் காலத்தின் குரலாக விரிந்துள்ளன. காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்( கவிதைத் தொகுதி). மனுஷ்ய புத்திரன். சென்னை: உயிர்மை பதிப்பகம்.பக்கம்:270; விலை:ரூ.300/-. தொடர்புக்கு: 044-24993448
தமிழரின் அடையாள அரசியலும் பாலியல் மறுபேச்சுகளும்: சாருவின் புதிய எக்ஸைல் நாவலை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் mpandi2004@yahoo.com காத்திரமான நாவல்கள் எழுதியுள்ள நாவலாசிரியரான எனது நண்பர் ’’இன்றைய தேதியில் பாண்டியன் நீங்கதான் அதிகமாகத் தமிழ் நாவல்களை வாசிக்கிறீங்க” என்று அலைபேசியில் பேச்சுவாக்கில் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 2010-ஆம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட ‘பத்தாண்டுகளில் தமிழ் நாவல்கள்’ என்றொரு கட்டுரை, காலச்சுவடு பத்திரிகையில் பிரசுரமானவுடன், இலக்கிய நண்பர்களில் சிலர் எப்படி இவ்வளவு நாவல்களை உங்களால் வாசிக்க முடிந்தது என்று கேட்டனர். அந்தக் கட்டுரையில் மொத்தம் 40 நாவல்கள் பற்றிய விமர்சனம் இடம் பெற்றிருந்தது. அவை இல்லாமல் இன்னும் நான் வாசித்த நாவல்களின் எண்ணிக்கை சுமார் 60 இருக்கும். வருடத்துக்கு பத்து நாவல்கள் வாசித்தது என்ன பெரிய சாதனையா? அப்புறம் எனது வாசிப்புப் பழக்கம், பத்து வயதில் வாண்டுமாமாவின் சிறுத்தைச் சீனன் நாவலில் இருந்துதான் தொடங்கியது.. என்னைப் பொருத்தவரையில் நாவல் என்பது இதுவரை கேள்விப்பட்டிராத புதிய உலகிற்குள் பயணிப்பது. ஒவ்வொரு நாவலும் வாசிப்பில் ஏற்படுத்துகிற உற்சாகமும் கொண்டாட்டமும் அளவற்றவை. திராபையான வெகுஜன நாவல்களை விட்டுவிடலாம். மற்றபடி தீவிரமாக எழுதப்படுகிற நாவல்கள், கதைசொல்லல் வழியாக இதுவரை கண்டிராத புதிய உலகினுக்கு இட்டுச் செல்கின்றன; நினைவுகளின் மூலம் மனதில் படிந்திருக்கிற மதிப்பீடுகளையும் கடந்த காலத்தையும் தொந்தரவு செய்கின்றன. நாவலின் கதைப்போக்கு உருவாக்குகிற மனப்பதிவுகள் வாசகனை மீண்டும்மீண்டும் முடிவற்ற விநோதமான சூழலுக்குள் மூழ்கடிக்கின்றன. உலகமெங்கும் நாவல் என்ற இலக்கிய வடிவம் கொண்டாடப்படுகிற சூழலில், அண்மைக்காலமாகத் தமிழில் பிரசுரமாகிற நாவல்கள் கவனத்திற்குரியன. குடும்பம் என்ற அலகிலிருந்து வெளியேறி, நினைவுகளின் வழியாகச் சம்பவங்களைப் பதிவாக்குகிற நாவல்கள் ஒருவகையில் சமூக விமர்சனங்கள். தமிழைப் பொருத்தவரையில் எழுத்துத் தொழில்நுட்பம் சார்ந்து கொண்டாடப்பட்ட ஒரு புளிய மரத்தின் கதை, அம்மா வந்தாள், வாடி வாசல், புத்தம் வீடு, வேரும் விழுதும், சாயாவனம் போன்ற நாவல்கள் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. அதே காலகட்டத்தில் பரந்துபட்ட கேன்வாசில் தமிழர் வாழ்வியல் குறித்துக் காத்திரமாக எழுதப்பட்ட ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எண்பதுகளுக்குப் பின்னர் சிறுபத்திரிகைச் சூழலில் அறிமுகமான கோட்பாடுகளும், அவற்றையொட்டிய புதியதான கதைசொல்லலும் மாற்றங்களை உருவாக்கின. குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்துகள் ஏற்படுத்திய பாதிப்புகளினால், நானும் நாலு தலைமுறைக் கதை சொல்கிறேன் எனக் கிளம்பியவர்களால், தண்டியான அளவில் பிரசுரமான நாவல்கள் வாசிப்பில் வெறுப்பை ஏற்படுத்தின. மொக்கையான நாவல்களை அச்சடிப்பதற்காகக் காடுகளில் வெட்டப்பட்ட மரங்களை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் 862 பக்கங்களில் வெளியாகியுள்ள சாரு நிவேதிதாவின் புதிய எக்ஸைல் நாவலைப் பார்த்தவுடன் எனக்குப் பதற்றமேற்பட்டது. ’என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை’ என நடிகர் பாலையா போல என் மனசு சொன்னது. எப்ப வாசித்து முடிப்பது என்ற தயக்கத்துடன் நாவலைத் திறந்த என்னால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. பக்கத்துக்குப் பக்கம் புதிய கதையாடல் என மாறுபட்ட தளங்களில் விரிந்திட்ட புதிய எக்ஸைல், அண்மையில் தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான நாவல் எனத் தொடக்கத்திலே குறிப்பிடுவதில் எனக்குத் தயக்கம் எதுவுமில்லை. பின்நவீனத்துவம் குறிப்பிடுகிற வாசிப்பு உருவாக்குகிற மகிழ்ச்சியானது, நாவலின் தொடக்கம் முதலாக எனக்குள் ஏற்படுத்திய பரவசம் அளவற்றது. நாவல் என்றால் வாசித்தவுடன், சரி, முடிந்தது கதை என்ற மனோபாவம் பொதுவாகச் சராசரித் தமிழ் வாசகர்களிடம் பரவலாக இருக்கிறது. அது சரியல்ல. சிறந்த நாவல், முடிவற்ற பேச்சுகளையும் அதிர்வுகளையும் வாசகரின் மனதில் உருவாக்கிடும் வல்லமையுடையது. நாவலாசிரியர் சாரு தன்வரலாற்றுப் பாணியில் சொல்கிற கதையின் மையமற்ற தன்மை, சுவராசியம் என்பதற்கப்பால் மனித இருப்பினைப் பரிசீலிக்கத் தொடங்குகிறது. கதையாடலின் தொடர்ச்சியறு எழுத்துமுறை, வாசகனைப் பிரதியிலிருந்து வெளியேற்றுகிறது. நாவல் முழுக்க நிறைய கிளைக் கதைகளும் துணைக் கதைகளும் இடம் பெற்றிருப்பதால், காப்பிய மரபிலான கதைசொல்லல் முறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மையமான கதைசொல்லி பாத்திரத்தில் இருந்து விலகி, கட்டுரைகளும் இடம் பெற்றிருப்பது நாவலை வெறுமனேக் கேளிக்கையாகத் துய்ப்பதில் இருந்து தடுக்கிறது. சாரு நாவலின் கதையாடல் வழியாக விவாதிக்கிற விஷயங்களுக்காக, வாசகர் பிரதியோடு ஒன்றிப்போய்த் தன்னிலை மறப்பதைத் தடுத்திட காப்பிய பாணியை நாவலாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். வெறுமனே கதைசொல்லல் என்பது சாருவின் நோக்கமல்ல. தமிழ் மொழி உருவாக்கிய அரசியல் பின்புலத்திலான நிலவெளியில் தொல்காப்பியம், சங்கக் கவிதை தொடங்கிப் பக்தி மரபு, சித்தர் மரபின் வழியாகச் சித்திரிக்கிற சம்பவங்கள், நாவலுக்குக் காவிய மரபிலான தன்மையினை அளிக்கின்றன. சமகாலத் தமிழர் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் அணுகியுள்ள சாருவின் நாவல், மேலைநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரமானால், சமகாலத் தமிழர்களின் கதை என அறிமுகமாக வாய்ப்புண்டு. நாவலின் கதையோட்டத்தில் உன்னதமான படைப்புப் படைத்திருந்தாலும், தமிழ் மொழியில் கதைப்பதனால் ஏற்படுகிற புறக்கணிப்புக் குறித்த கதைசொல்லியின் புலம்பல், சாருவின் குரல்தான். பொதுவாகச் சாருவின் நாவல்களில் பாலியல் அம்சங்கள் கூடுதலாக இருப்பதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. சாருவின் முந்தைய நாவல்களான ஜீரோ டிகிரி, ராஸலீலா போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, புதிய எக்ஸைல் நாவலில் பாலியல் தொடர்பான விவரிப்புகள், கதையோட்டத்துடன் இயைந்துள்ளன. பாலியல் என்பது பேசாப்பொருளாகவும் மந்தனமாகவும் உறைந்திருக்கும் தமிழ்ச் சமூகத்தில் சாருவின் பால் தொடர்பான எழுத்து, பலருக்கு அதிர்ச்சியளிக்கிறது. இன்று பாலியல் தமிழ்ச் சமூகத்தில் எங்ஙனம் ஊடுருவியுள்ளது எனக் கண்டறிந்திட வேண்டிய நேரமிது. இணையத்தில் கொட்டிக்கிடக்கிற லட்சகணக்கான போர்னாகிராபி தளங்கள் கையெட்டும் தொலைவில் இருக்கும்போது, பதின்பருவத்தினரின் மனமும் உடலும் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏராளமானவை. கிராமத்து மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிற பெண் ஆசிரியை, ”பசங்க வச்சிருக்கிற செல்போனில் எல்லாக் கண்றாவிப் படங்களும் இருக்குது” என்று பேச்சுவாக்கில் என்னிடம் சொன்னார். உடலை மர்மமாக போற்றிய சமூகம் என்பது மாறிப்போய், டிஜிட்டல் வெளியில் மிதந்திடும் நிர்வாண உடல்களின் ஆதிக்கத்தில், இதுவரை கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுகள் அர்த்தமிழக்கின்றன. அறுபதுகளில் மேலைநாடுகளில் அறிமுகமான கட்டற்ற பாலியல் விழைவு, இன்று தமிழகத்தில் அரையும்குறையுமாக ஊடுருவியுள்ளது. உடலுறவு என்ற சொல் ஊடகங்களில் சாதாரணமாக இடம்பெறும் சூழலில், பாலியல் பற்றிய புதிய பேச்சுகளை உருவாக்க வேண்டியுள்ளது. உடல் என்பது புதிர் அல்ல எனப் பதின்பருவத்தினர் அறிந்திடும்வகையிலான படைப்புகள் இன்றைய தேவை. நள்ளென் யாமத்திலும் சாட்டிங்கில் ஈடுபட்டிருக்கிற இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் செல்பி மூலம் தன்னுடலைக் கோவில் சிலையின் முன்னால் பதிவாக்குகிற வேட்கையானது, நாளடைவில் தனது நிர்வாண உடலையும் கணினியில் பதிவாக்கி ரசிக்கிறது. காலப்போக்கில் தனது துணையுடன் கொள்கிற அந்தரங்கமான உறவையும் டிஜிட்டலில் படமாக்கிக் காண்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். அப்புறம் delete மூலம் அந்தரங்கமான காட்சிகளை நீக்கி விட்டேன் என்ற நம்புவது பாமரத்தனம்; அர்த்தமற்றது. பின்னொருநாளில் அந்தக் காட்சியை இணையவெளில் தற்செயலாகக் காண்கிறபோது அவர்களால் என்ன செய்யமுடியும்? (தனிப்பட்ட மென்பொருள் மூலம் டெலிட் செய்யப்பட்டதாக நம்புகிற எந்தவொரு காட்சியையும் மீளுருவாக்கம் செய்வது சாத்தியம்). மனிதர்களைப் போல அற்பமான, கேவலமான உயிரினம் உலகில் எதுவும் இல்லை. எந்தவொரு விலங்கினமும் சக உயிரினங்கள் பாலுறவுகொள்வதைப் படம் பிடித்துப் பில்லியன்கணக்கில் வியாபாரம் செய்வதில்லை. கூகுள் தேடுபொறியில் ஒருவர் சற்று முயன்றால் அது காட்டும் முடிவுகள், அவரை காமவுலகினுக்குள் அழைத்துச் செல்கின்றன. மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லாதே எனத் தொடங்கி, இந்தியாவைப் பின்னுக்கிழுக்கிற ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி இந்துத்துவா அரசியலை வலியுறுத்துகிற அதிகார வர்க்கத்தினர், டிஜிட்டல் பாலியல் விஷயத்தில் எதையும் கண்டுகொள்வதில்லை. எங்கும் ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருகியுள்ள சூழலில் சாட்டிங்கில் தொடங்குகிற தற்செயலான உறவு, முகநூலில் ஏற்படுகிற முன்பின் அறியாதவரின் உறவு எனப் பெருகிவரும் சமூக அமைப்பில் பாலியல் என்பது மூடுண்டது எனக் கட்டமைப்பது சாத்தியம்தானா? யோசிக்க வேண்டியுள்ளது. சாட்டிங்குகள் மூலம் ஏற்பட்ட தொடர்புகள், இன்று கொலையில் போய் முடிந்துகொண்டிருக்கின்றன. இணையத்தில் போலியான பெயர்களில் பெயர், பால், முகம் அற்று ஆவியைப் போல அலைந்திடும் ஆட்கள் நிரம்ப உள்ளனர். யாரையும் எந்தக் கேவலத்திற்குள்ளாகிடும் பறிகள் விதைக்கப்பட்டுள்ள இணையவெளியில் நிகழ்ந்திடும் பாலியல் வன்கொடுமைகள் அளவற்றவை. எங்கோ ஓரிடத்தில் நடப்பது என யாரும் ஒதுங்கிட முடியாது. பருவ வயதான உங்கள் மகனோ அல்லது மகளோ அல்லது நீங்களோ அந்தப் பொறிக்குள் சிக்குவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளன. சாரு சித்திரிக்கிற பாலியல் சாட்டிங்குகள், மரபான மனங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்; ஆபாசமான எழுத்தின்மூலம் சமூகத்தைக் சீரழிக்கிறார் எனக் கதற வைக்கும். ஆனால் யதார்த்தமோ, சாருவின் பாலியல் கதையாடலைவிடக் கற்பனை செய்ய இயலாதவாறு மோசமாக இருக்கிறது. ஆடையினால் மூடப்பட்ட உடல்களை முன்வைத்து நடைபெறுகிற உடலரசியல், மனித மதிப்பீடுகளைத் தீர்மானிக்கிறது. பாலியல் பற்றிய பேச்சுகள் வேறு பாலியல் செயல்பாட்டினைச் சொற்களால் வர்ணிப்பது என்ற புரிதல் அற்ற நிலையில் சாரு எல்லாவற்றையும் வெளிப்படையாகக் கதைத்துள்ளார். உலகில் பிற உயிரினங்களைப் பொருத்தவரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு என்பது இனவிருத்திக்கான ஆதாரம். அவ்வளவே. மனிதர்கள் மட்டும்தான் 07x24 என்ற ரீதியில் பாலுறவை மகிழ்ச்சிக்கான முழுநீளக் கொண்டாட்டமாக்கி விட்டனர். என்றாலும் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் நிகழ்த்தப்படுகிற பாலியல் செயல்பாடு, குறுகிய நேர வரையறைக்குட்பட்டது. சாரு சித்திரிக்கிற அஞ்சலி – உதயா இருவருக்கிடையிலான உறவில் காமம் பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. முதல் கணவனான சுரேஷிடமிருந்து பிரிந்துவந்த அஞ்சலியின் பாலியல் தேடல் அளவற்றுப் பெருகிறது. சாரு குறிப்பிடுகிற மேலை இலக்கிய நாவல்களில் பாலியல் பேச்சுகள் நிரம்பித் ததும்பிட வாய்ப்புண்டு. தமிழிலக்கியச் சூழலில் பாலியலை முன்வைத்துக் கதைப்பது எளிதானது அல்ல. இரண்டாயிரமாண்டு பாரம்பரியமுடைய தமிழர்களிடையே சங்கம் மருவிய காலம் முதலாக மனைவியுடன் மட்டும் பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும். பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜைன, பௌத்த, வைதிக மதங்கள் உடல்கள் மூலம் அடைகிற புலன் இன்பங்களை இழிவானதாகச் சித்தரித்து, உடல்களைத் துறப்பதற்கான மனநிலையை விதிகளாக வகுத்துத் துறவினை வலியுறுத்துகின்றன. அவை மரபிலக்கியப் பிரதிகளின் மூலம் தமிழரின் மனோபாவத்தில் இன்றுவரையில் ஆழமாக ஊடுருவியுள்ளன. செக்ஸ் என்பது கெட்ட வார்த்தை என்று நம்புகிற பெரும்பான்மையான தமிழர்கள், சாருவின் கதையாடலையும் மேம்போக்கான நிலையில் புறந்தள்ளுகின்றனர். சாருவின் காமம் சார்ந்த சொல்லாடல்கள், சித்திரிப்புகள் பண்பாட்டுரீதியில் ஏற்படுத்துகிற விளைவுகள் ஆய்விற்குரியன. கிராமத்துச் சொலவடைகள் முதலாக விரிந்திடும் பேச்சுகளில் கெட்ட வார்த்தைகள் எனக் குறிப்பிட்ட சொற்களை விலக்காக்கிடும் போக்கு, பெரிய அளவில் இன்றளவும் இல்லை. ஆனால் பொது வெளியில் உடல்கள் எப்படி செயல்பட வேண்டும் எவற்றைப் பேசக் கூடாது என்ற வரையறை, கறாராக நிலவுகிறது. மேல் x கீழ் என அதிகாரத்திற்குச் சார்பாக உருவாக்கப்படும் உடல்களும் பேச்சுகளும் காலங்காலமாக ஆதிக்க அரசியலின் வெளிப்பாடுகள். நிதம்பம், யோனி, புணர்ச்சி, புண்டை போன்ற உச்சரிக்கப்படாத சொற்களை நாவல் முழுக்கச் சாரு பயன்படுத்தியதில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. அவை கிளுகிளுப்பானவையாகக் கையாளப்படாமல், பல்வேறு பொருண்மைகளாகவும் குறியீடுகளாகவும் பிரதியில் இடம் பெற்றுள்ளன. பீப் பாடல் மூலம் பெண்ணுறுப்பை வசையாகக் குறிக்கிற சொல்லைப் பிரபலப்படுத்திய நடிகர் சிம்பு வகையறாவினர் இன்றும் தமிழகத்தில் சௌகரியமாக உலவிவரும் சூழலில், சாருவின் பிரதி, பாலியல் சொற்களைக் கலைத்துப் போடுகிறது. பாலியல் சார்ந்த உறுப்புகள் பற்றிச் சமூகம் கட்டமைத்துள்ள மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்குவது நாவலில் காத்திரமாக இடம் பெற்றுள்ளது. ’’ஒருவனுக்கு இருபது வயதில் காதல் வரவில்லை என்றால் அவனுடைய உடலில் கோளாறு என்று அர்த்தம். ஒருவனுக்கு நாற்பது வயதில் காதல் என்றால் அவன் மனதில் கோளாறு என்று அர்த்தம் என்று ஒரு புகழ் பெற்ற பேச்சாளர் பேசுகிறார். அதைக் கேட்டு ஆயிரம் பேர் கரகோஷம் செய்கிறார்கள். இது என்ன மாதிரியான நாடு’’ என்ற சாருவின் ஆதங்கம் நியாயமானது. புதிய எக்ஸைல் பிரதியானது, வாசிப்பின் வழியாக ஒற்றையாக நுழைகிற வாசகரின் மனநிலையைச் சிதலமாக்கி, வேறுபட்ட மனிதர்களாக உருமாற்றுகிற தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது. கதைசொல்லி முடிவற்று விவரிக்கிற கதைகள், ஒருநிலையில் வாசகர் தனக்கான பிரதிகளை உருவாக்குவதன்மூலம் வலிகள், கசப்புகள், கொண்டாட்டம் ததும்பிய உலகில் பயணிக்கிறார். எங்கும் கதைகள் நிரம்பி வழிந்திடும் சூழலை உருவாக்குவதில் சாருவின் எழுத்து, தனித்து விளங்குகிறது. செக்ஸ் சாட்டிங்கிற்காக அழைக்கப்படுகிற இக்கட்டான சூழலில், யார் வேண்டுமானாலும் எந்த விநாடியிலும் பங்கேற்றிடும் நிலையில் என்ன செய்ய முடியும்? வாசகர் என்ற சொல் இன்னும் எவ்வளவு காலம் தனித்து நின்று வேடிக்கை பார்க்கும் என்ற கேள்வி தோன்றுகிறது. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியத்துடன் தமிழ் என்ற நிலவெளியின் மரபுகளையும் நம்பிக்கைகளையும் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு, திணறுகிற வரலாற்றையும் புனைவுகளையும் உயிர்த்துடிப்புடன் பதிவாக்கியுள்ள சாருவின் மொழி, சுவராசியமானது. மொழி கட்டமைத்திடும் வரலாற்றின் விநோதங்களுக்குள் பயணிக்கிற சாரு, எல்லாவற்றையும் விலகி நின்று கேள்விக்குள்ளாக்கியிருப்பது நாவலின் தனித்துவமாகும். கலகத்தின் மொழியிலான பிரதியில் இதுவரை சமூகம் கட்டமைத்திருக்கிற புனிதமான வாழ்க்கை பகடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சிவில் சமூகத்தின் மையத்தில் ஆதிக்கத்துடன் வாழ்கிறவர்களின் நடைமுறை வாழ்க்கையைக் கடுமையான விமர்சனத்துடன் நாவல் பதிவாக்கியுள்ளது. வரலாறைப் புனைவாக்குகிறபோது ஒருவகையில் இதுவரை மனித சமூகம் கட்டமைத்த தத்துவம் சிந்தனைகளின் தொகுப்பாகிறது. நல்லது x கெட்டது என்ற முரணில், மனித இருப்பினுக்காகச் சிந்திய குருதியின் கவிச்சி நெடி, வரலாற்றின் பக்கங்களில் வீசுகிறது. நவீன சமூகத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தையும் அரசியல் பின்புலத்தில் கதைக்குள் கதையாக விரிந்திடும் கதைசொல்லலில் சாருவிற்குப் பருண்மையான நோக்கம் உள்ளது. ஊழல் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ள தமிழர்களின் அசலான மனநிலை வறண்டுபோய்ச் சப்பையாக இருப்பதுடன், ஆதிக்க அரசியலுக்குப் பணிந்து அடிமைகளாக மாறியுள்ள சூழல் குறித்த சாருவின் கவலை, கதைகளாகியுள்ளன. எழுபதுகளில் நவீன எழுத்தின் பிதாமகராகக் கருதப்பட்ட நகுலன், மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கும் எனக் குறிப்பிட்டது, சாருவிற்குப் பொருந்துகிறது. சுயபுராணமாக விவரிக்கப்படும் நாவலில் உலகத்துப் படைப்புகள் பற்றித் தொடர்ந்து கதைக்கிற சாருவின் கதையுலகு, ஒப்பீடு அற்றது. ஒருநிலையில் இப்படியெல்லாம் நாவல்கள் பிரசுரமாகி இருக்கின்றனவா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. தமிழில் இதுவரை வெளியான நவீன இலக்கியம் குறித்துச் சாருவுக்கு அக்கறை எதுவுமில்லை என்பது கதையோட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளையில் சாருவின் பண்டைய இலக்கியத் தேடல் வியப்பளிக்கிறது. தொல்காப்பியர் மரபியல் இயலில் குறிப்பிட்டுள்ள உயிரினங்கள் பற்றிய விவரிப்பை நவீன அறிவியலுடன் ஒப்பிட்டுச் சாரு அடைந்திருக்கிற பிரமிப்பு, வாசகரையும் தொற்றுகிறது. சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியுள்ளார். கபிலர் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 பூக்களின் பட்டியலும் தரப்பட்டுள்ளது. கொன்றை மலரின் அழகில் ஈடுபட்ட கதைசொல்லி மடவமன்ற தடவுநிலைக் கொன்றை எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை உற்சாகத்துடன் குறிப்பிடுகிறார். சில குறுந்தொகைப் பாடல்களைக் கதைப் பிரதியில் தந்துள்ள சாருவின் நோக்கம் தமிழ் அடையாளத்துடன் தொடர்புடையது. ஆனைமலையில் மாசானி மயானி சயனி அம்மன் கோவிலைக் குறுந்தொகையில் பரணர் பாடிய பாடலுடன் தொடர்புப்படுத்திய ’மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை’ என்ற பாடல், வரலாறு மட்டுமின்றி தொன்மக்கதையுடன் தொடர்புடையதாகும் ’தசைபெரிது உடையர் நல்கலும் நல்குவ’ர் என்ற குறுந்தொகைப் பாடலைக் குறிப்பிடுகிற நாவலாசிரியர் சாரு, காஞ்சி எனக் குறிப்பிடப்படுகிற பூவரசு மரத்தின் இலையில் செய்த பீப்பியை ஊதி மகிழ்ந்த செய்தியைப் பதிவாக்குவதன்மூலம் நடப்பு வாழ்க்கையுடன் பொருத்துகிறார். இன்றைய தமிழர்களின் கசடு நிரம்பிய அபத்த வாழ்க்கை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் சாருவின் அடையாள அரசியல் சிக்கலின் வெளிப்பாடுதான் சங்க இலக்கியத் தேடல் என்று குறிப்பிடலாமா? யோசிக்க வேண்டியுள்ளது. தமிழின் வேர்களைத் தேடிய பயணத்தில் சங்கப் புறப்பாடல்களை வாசித்த சாரு, சங்கக் கவிகள் பெரும்பாலும் பிச்சை கேட்டு வாழ்ந்ததுடன், மன்னர்கள் தருகிற பிச்சைக்காக அவர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கின்றனர் என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது. பாணர் மரபில் இனக்குழுத்தலைவனுக்கும் பாணர், புலவருக்குமான உறவு அழுத்தமானது. ஊர்கள்தோறும் பயணித்த பாணர் குடும்பத்தினர் பிச்சைக்காரர்கள் அல்ல. ஆடலுடன் பாடல்கள் புனைந்திட்ட பாணர்கள் தனித்த மரியாதையுடன் விளங்கினர். 1970களின் பிற்பகுதியிலும் வயலில் விளைந்த நெற்கட்டுகளைக் களத்தில் குவித்தபோது, அதிலிருந்து ’புலவர் அரி’ என ஒரு கட்டு நெல்தாளினைப் புலவர் பரம்பரையினருக்கு மகிழ்ச்சியுடன் வழங்கிய மரபு தமிழகத்தில் நிலவியது. வட இந்தியாவில் வசிக்கிற திராவிடப் பழங்குடியினரான சந்தால், கோண்டா போன்றோரிடம் பாணர் மரபு இன்றளவும் செல்வாக்குடன் விளங்குகிறது. மன்னனைப் புலவர் பாடியதை ’அவனை அவர் பாடியது’ எனக் குறிப்பிடுவது தமிழில் வழக்கு. ’எத்திசை செலினும் அத்திசைச் சோறே’ எனப் பாடிய ஔவையின் வரிகள் வெற்றுச் சொற்கள் அல்ல. மானுடவியல்ரீதியில் பாணர் மரபு பற்றிக் காத்திரமான ஆய்வுகள் வெளிவந்துள்ள நிலையில், அதைப் பற்றி அறியாமல் சாரு, பரிசிலைப் பிச்சை எனக் குறிப்பிடுவது தவறானது; சங்க மரபு அறியாமல் அபத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். சரி போகட்டும். புதிய எக்ஸைல் நாவலின் தொடக்கத்தில் நன்றி எனச் சாரு குறிப்பிடுகிற நல்லி குப்புச்சாமி செட்டியார், தினமலரைச் சார்ந்த ரமேஷ், வெங்கடேஷ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி என விரிந்திடும் நூற்றுக்கும் மேற்பட்டோரில் ஸ்பான்சர்கள் இருக்கின்றனர். இன்றைய ஸ்பான்சர்களுக்கு ஒருவகையில் முன்னோடிகள் அன்றையப் புரவலர்கள். இத்தகையோர் படைப்பாளி மீதான அக்கறையினால் செய்கிற உதவிகளைப் பிச்சை என்று சொன்னால் ஏற்றுகொள்வீர்களா சாரு? ஆழ்வார்களின் பக்திமயமான பாடல்கள், திருமூலரின் தத்துவப் பாடல்கள், சித்தர்களின் ஆவேசமான பாடல்கள், வள்ளலாரின் தத்துவச் சரடு என நாவல் முழுக்கப் பரவியிருக்கிற மரபிலக்கிய பயன்பாடு, சாருவின் புதிய எழுத்துமுறைக்குச் சான்றாகும். பூம்பாவை இறைவனுக்குத் தொண்டு செய்து கன்னியாகவே வாழ்ந்த கதையைச் சம்பந்தரின் ‘மட்டிட்ட புன்னையங் கானல் மடம்யிலை/ கட்டிடங் கண்டான் கபலீச்சுரம் அமந்தான்/ ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல் கணத்தார்க்கு/ அட்டிடல் காணாதே பூம்பாவாய் என்ற பதிகத்துடன் விவரிக்கிற பாங்கு நேர்த்தியானது. போகர் நிகண்டுவில் இடம் பெற்றுள்ள தேரையர் கதை சுவராசியமானது. அகத்தியரின் மாணவரான தொல்காப்பியருக்கு ஏற்பட்ட தீராத தலைவலியைத் தீர்த்திடத் தேரையர் செய்த செயல், விநோதமானது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் உண்டுவர கோலையூன்றி நடப்பவன் கோலை வீசிக் குதித்து நடப்பான். உடலைப் பேணுவதற்கான மரபான வழிமுறைகளைக் குறிப்பிட்டிருப்பதில் சாருவின் தேடல் புலனாகிறது. முட்கள் நிரம்பிய மூலிகைகளின் பூக்களில் நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உண்டு எனச் சொல்கிற சாரு, வயக்ராவைவிட தமிழகத்தில் உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன எனக் குறிக்கிறார். வள்ளலார் எழுதியுள்ள நித்ய கரும விதியை வாசித்தால், தேக சம்பந்தம் பற்றிப் புரிந்திட முடியுமெனச் சாரு தருகிற வள்ளலாரின் நீண்ட மேற்கோள், வாசிப்பில் புதிய அனுபவத்தைத் தருகிறது. சுக்கிலம் வெளியேறுவது குறித்துத் தமிழ்ச் சித்தர்கள் தந்துள்ள விளக்கங்கள் அபூர்வமானவை. நாட்டார் மரபிலான தொன்மக்கதைகளை உற்சாகத்துடன் பதிவாக்கியுள்ள சாருவின் நாவல், வேறுபட்ட அனுபவங்களை வாசிப்பில் தருகிறது. அறிவொளிக் காலம் வலியுறுத்திய பகுத்தறிவின் எல்லை வரையறைக்குட்பட்டது என்ற புரிதலின் ஊடாகச் கடவுள் மறுப்புச் சிந்தாந்தம் புதிய நோக்கில் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஈரோடு நகருக்கருகில் உள்ள தங்கமேடு கிராமத்தில் இருக்கிற தம்பிக்கலை அய்யன் கோவில் பற்றிய தொன்மக் கதையில் சித்தர் உருவான கதை குறிப்பிடத்தக்கது. புற்றிலிருக்கிற நாகம் பசுவின் மடியில் பால் குடித்த இடத்தில் அமர்ந்தவர் சித்து தம்பணம் கற்றுச் சித்தரானார். அங்கிருக்கிற நாகங்கள் இன்றளவும் யாரையும் தீண்டியதில்லை என்ற புனைவு, அமானுடத்தன்மையுடையதாக மாறுகிறது. பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்றவை ஏதோ ஒரு நிலையில் வாழ்க்கையில் ஊடுருவி, அன்றாட வாழ்வில் ஏற்படுத்துகிற தொந்தரவுகள் அல்லது பாதகச் செயல்கள் பற்றிய நம்பிக்கையை எளிதில் புறந்தள்ளிட முடியாது எனச் சாரு முன்வைக்கிற கருத்தியல் ஆய்விற்குரியது. இயற்கையின் அங்கமான மனிதன், இயற்கையை எப்படி எதிர்கொள்வது எனப் புலப்படாமல், பூமியில் தன்னிருப்பைப் பற்றிக் கட்டமைத்திடும் புனைவுகள் ஏராளம். யோசிக்கும்வேளையில் இயற்கையின் பெருங்கருணையினால்தான் பூமியில் மனித இருப்பு சாத்தியப்பட்டுள்ளது. குறியீட்டு முறையில் இயற்கையைப் புரிந்திட முயன்றதன் விளைவுதான் கடவுள் உள்ளிட்ட நம்பிக்கைகள். வெறுமனே மூடநம்பிக்கை என ஒதுக்கிடாமல், சாரு கண்டறிந்திட முயலுவதன் நீட்சியாகத்தான் சோழிகளை உருட்டிப் பணிக்கர் சொல்கிற எதிர்காலம் குறித்த புனைவுகளைக் கருத வேண்டியுள்ளது. மேட்டுப்பாளையம் அருகிலுள்ள வனபத்ரகாளியிடம் வேண்டுகிற கதைசொல்லி, திடீரென ஆரவல்லி சூரவல்லி கதைக்குள் பயணிக்கிறார். பெரும்பாலான நாட்டார் கதைகள் போலவே முன்னர் எப்பொழுதோ நடைபெற்றதாகத் தொடங்கும் கதையில் பெண்களின் சாகசம் முன்னிறுத்தப்பட்டுள்ளது. அல்லிமுத்து பில்லி சூனியத்தினால் கொல்லப்படுகிறான். ஆரவல்லி கதையின் ஊடாகக் கதைசொல்லி, அவரைப் பயமுறுத்துகிற இருபத்தோராம் நூற்றாண்டுப் பெண்ணியச் சகோதரிகளை வீழ்த்துவதற்கான வரத்தை வனபத்ரகாளியிடம் கேட்கிறார். கதைசொல்லி அல்லது அல்லிமுத்து ஆரவல்லி சகோதரிகளின் அரண்மனையை அடைந்து பந்தயங்களில் கலந்துகொள்கிறார். அல்லிமுத்துவுக்குப் பெண்களைப் பிடிக்கும் என்பதால், அவனுடைய பாஸ்வேர்டைத் திருடி நிஜமும் கற்பனையும் கலந்த செக்ஸ் உரையாடல் தொடங்கப்படுகிறது. திரும்பத்திரும்ப அழைக்கிற செக்ஸ் உரையாடலின் வழியாக கதைசொல்லி தோற்றுப் போகிறார். ஆரவல்லி சகோதரிகள் கதையை மறுவாசிப்புச் செய்துள்ள சாரு எது நிஜம் எது புனைவு என வாசகரையும் குழப்புவது சுவராசியமானது. அமெரிக்கா பற்றிய புனைவின் மறுபக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சாரு, கார்ப்பரேட் சாமியார்கள், இந்தியா ஆன்மீக நாடு என ஆசி வழங்குவதுடன், அமெரிக்கா குறித்து மட்டமாகச் சொல்கிற சொற்களின் அபத்தத்தைக் கதையாக்கியுள்ளார். குஷால்தாஸ் என்ற கார்ப்பரேட் சாமியாரின் பிரசங்கத்தைக் கேட்டுப் புளகாகிங்கதம் அடைகிற நடுத்தர வர்க்கத்தினர், துரித உணவு போல உடனடி நிவாரணம் தேடியலைகின்றனர், இலக்கியம் அதிகார மையத்தைத் தகர்த்திடும்போது, ஆன்மீகமோ புதிய அதிகார மையத்தை உருவாக்குகிற எனச் சொல்கிற கதைசொல்லி, குஷால்தாஸின் டூபாக்கூர் செயல்பாடுகளை அம்பலப்படுத்துகிறார். விதம்விதமான ஆடைகளில் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிற ஷோக் பேர்வழியான குஷால்தாஸ், சிஷ்யையான இளம்பெண்களின் தலைமுடியைச் சிரைத்துவிட்டுக் காவி ஆடையை உடுத்த வேண்டுமெனப் போதிப்பது, ஆன்மீகப் பைத்தியத்தின் இன்னொருநிலைதான். அமெரிக்காவில் நாற்பத்தைந்து சதவீதம் மனநோய்க்கு மருந்து சாப்பிடுகிறார்கள் என மட்டப்படுத்திப் பேசுகிற குஷால்தாஸ், இந்தியாவில் எண்பது சதவீதம் பேர் மனநோய் இருப்பது தெரியாமல் திரிகின்றனர்; பல்லாயிரக்கணக்கான் கோடிகளில் ஊழல் செய்கிற அரசியல்வாதிகள்; எங்கும் அராஜகம்; குழந்தைக் கல்வி முதலாக ஏற்றத்தாழ்வுகள்; பெண்கள் இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படுதல்; வன்புணர்வு; தொலைக்காட்சி ஒளிபரப்பிடும் ஆபாசங்கள் என எங்கும் அடக்குமுறை நிலவும் இந்தியாவை ஞானபூமி எனச் சொல்ல முடியுமா? அன்றாட வாழ்க்கையில் உணவுக்கே திண்டாடும் கோடிக்கணக்கான விளிம்புநிலை மக்களின் துயரம் அளவற்றது. தேசபக்தி, ஆன்மீகம் எனப் போதித்து கல்லா கட்டுகிற கார்ப்பரேட் சாமியார்கள் ஒருவகையில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரிகள் எனத் தருக்க அடைப்படையில் சாரு விளக்குவது, கொந்தளிப்பின் உச்சம். குஷால்தாஸ் எல்லாவற்றுக்கும் ஆசைப்படு; சந்தோசமாக இரு எனப் போதிப்பதின் மறுபக்கம் அடிமைகளை உருவாக்கும் பாசிஸம் பொதிந்துள்ளது. பொருளாதாரரீதியில் சிரமப்படுகிற மக்களுக்கு இந்திய ஆன்மீகம், புனித பூமி, தியானம், யோகா என்ற பெயரில் புதிய சொல்லாடல்கள்மூலம் போதையில் ஆழ்த்துகிற பணியைச் செய்கிற நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ், ஸ்ரீசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் இன்னொருபுறம் சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவ அமைப்புகளை வலுப்படுத்துகின்றனர். ஆன்மீக அரசியலை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தைக் கார்ப்பரேட் சாமியர்களை முன்வைத்துள்ள சாருவின் எழுத்து, நுண்ணரசியல் பின்புலமுடையது. ஐரோப்பாவில் இரு உலகப் போர்களினால் நடைபெற்ற கொடூரங்களின் விளைவுகளை இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். 1944 ஜூன் 10ஆம் தேதியன்று ஓரத்தூரில் நாஜிப் படையினரால் 641 கிராமத்தினர் கொல்லப்பட்டனர். அந்த ஊரும் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. அந்தக் காட்சி, இன்றளவும் காட்சிப்பொருளாகக் காத்து வரப்படுகிறது. தமிழகத்தில் 1968 டிசம்பர் 25 அன்று கீழ் வெண்மணிக் கிராமத்தில் நிலப்பிரபுக்கள் 44 தலித் கூலி விவசாயத் தொழிலாளர்களை உயிரோடு கொளுத்தப்பட்டனர். கொலைகளுக்கு மூலகாரணமான கோபாலகிருஷ்ண நாயுடு, போதுமான சாட்சியம் இல்லையென நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இருவேறு சம்பவங்களையும் ஒப்பீட்டு, கீழ்வெண்மணி சம்பவம் இன்று தமிழர்களின் நினைவில் இல்லையெனக் குறிப்பிடுகிற கதைசொல்லி, கொல்லப்பட்ட 44 பேர்களின் பெயர்களையும் தந்துள்ளார். நடந்து முடிந்த கொடூரமான சம்பவங்களைப் பரிசீலனையற்று மறந்திடும் தமிழர்களின் வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளார் சாரு. இந்தியாவில் மனித உயிர்கள் குறித்த அலட்சியமும் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிய விவரிப்புகளும் நாவலில் முக்கியமானவை. மருத்துவக் கல்லூரி மாணவனின் உடலைத் துண்டுதுண்டாக வெட்டிப் பல ஊர்களில் கொண்டுபோய் வீசியவன், ஐந்தாண்டுகளில் சிறையில் இருந்து வெளியே வந்து விட்டான்.’’ இந்தியாவில் நீங்கள் உயிர் பிழைத்திருப்பதே ஒரு அதிர்ஷ்டம்; தற்செயல் நிகழ்வு’’ எனச் சொல்கிற சாரு, ரவுடிகளின் அதிகாரத்தைக் குமார் என்கிற ரவுடியின் வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்த விவரணையின் மூலம் நிழல் உலகின் கோர முகத்தைக் காட்டுகிறார். அரசியல் பினாமி உருவாக்கத்தைப் பக்கிரிசாமி சொல்வதாக விவரித்துள்ள பகுதி நிழல் உலகில் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியத்தை முன்னிறுத்துகிறது. வீட்டுத் தரகனாகத் தொடங்கிய பக்கிரிசாமி பின்னர் வீடுகளைக் கைமாறுவதில் பெரும் பணம் கமிஷனாகப் பெறுகிறான். நாளடைவில் அமைச்சரின் நிழலாக மாறிக் கோடிக்கணக்கில் புரள்கிறவன், நெருக்கடியான சூழலில், அப்ரூவராக மாறினால், மனைவியும் பிள்ளையும் கொல்லப்படுவார்கள் என அறிந்து, தற்கொலை செய்துகொள்கிறான். பினாமியானவரின் மரணம் ஒருவகையில் கொலைதான். தமிழக அரசியல் சூழலின் இன்னொருமுகம் பக்கிரிசாமியின் வாக்குமூலமாக நாவலில் பதிவாகியுள்ளது. சாருவின் நாவல் வெறுமனே கதைசொல்லலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரவில்லை. புதிய எக்ஸைல் நாவலை வாசிக்கிற இளம் வாசகர்கள் இது என்ன தில்லுமுல்லு என்று யோசிப்பார்கள். கட்டுரைக்கும் புனைகதைக்கும் இடையிலான வேறுபாடு தகர்ந்து வேறுபட்ட அனுபவங்களைக் குவிக்கிற சாருவின் எழுத்து, புதிய வகைப்பட்ட வாசிப்பைக் கோருகிறது. ’’தமிழ்நாட்டில் எழுத்தாளனாக இருப்பது கண்ணில்லாதவர்களின் தேசத்தில் ஓவியனாகவும், காது இல்லாதவர்களின் தேசத்தில் பாடகனாகவும், பிச்சைக்காரர்களின் தேசத்தில் பொற்கொல்லனாகவும் இருப்பதைப் போன்றது’’ என்ற கதைசொல்லியின் குரல், சாருவினுடையதுதான். திரைப்படம் தமிழ்ச் சமூகத்தினைப் புற்று நோயைப் போல அழித்திருப்பதனால், கலைஞர்கள், தத்துவவாதிகள், துறைசார்ந்த வல்லுநர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை இயல்பாகக் கருதுகிற சூழல் வலுவாக நிலவுகிறது. ’’எந்த மொழியில் எழுதினாலும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிற பிராந்தியத்தின் காற்றுதானே என் எழுத்தின் சுவாசமாக இருக்கும்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்ன ஒருவனின் வாரிசாகப் பிறந்திருக்கும் என்னைத் தேசம், மொழி, ஜாதி, இனம், பாலினம் போன்ற அடையாளங்களால் கட்டுப்படுத்த முடியுமா?’’ சாருவின் அரசியல் பேச்சுகள் முழுக்க நாவலில் வெளிப்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய பிரதியில் கடவுச்சொற்கள் இடம்பெறுள்ளன. கும்பகோணத்தில் மாட்டுத் தொழுவத்தைப் போன்ற பள்ளிக்கூடம் நடத்துவதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யாருக்கும் இன்னும் தண்டனை தரப்படவில்லை, நடைபாதையில் கடைகள் போடுவதால், தெருவில் நடக்கிறவர்கள் வாகனப் போக்குவரத்திற்கிடையில் ஒவ்வொருநாளும் உயிர் தப்பிப் பிழைக்கின்றனர். வாகனம் ஓட்டுகிறவர்களின் கவனக்குறைவினால் நாளும் கொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை பெருகினாலும், சாலை விபத்துக்குக் காரணமான டிரைவர்களுக்குப் பெரிய அளவில் தண்டனை கிடையாது, பள்ளிக்கூடத்தில் நிர்வாகம், ஆசிரியர்களின் அலட்சியத்தினால் குழந்தைகள் இறந்திடும்போது, வசதியானவர்கள் எளிதாக வெளியே வந்து விடுகின்றனர். இப்படி சிவில் சமூகத்தில் அன்றாடம் கொலைகள் குறித்து அக்கறையற்ற பொதுமக்களின் மனோபாவம் கொடூரமானது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குப்பைகளை வீசியெறியலாம் என்ற நிலையில், தெருவில், மாடிப்படிக்கட்டு மூலையில் எச்சிலைத் துப்பலாம். நான்கு வழிப் பாதை மட்டுமின்றி, சற்று மறைவான எந்தவொரு இடத்திலும் ஜிப்பைக் கழற்றிவிட்டுக் கூச்சநாச்சமில்லாமல் குறியைக் கையில் பிடித்துக்கொண்டு சிறுநீர் கழிக்கிற ஆண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருப்பது கேவலமானது. நாய்களைப் போல எந்த இடத்திலும் சிறுநீர் கழிப்பது அருவருப்பானது என்ற எண்ணம், படித்த ஆண்களிடம்கூட இல்லை. நகை வாங்கிச் சேர்ப்பதில் அக்கறை காட்டும் தமிழர்கள், வீட்டிற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள்கூட வாங்குவது இல்லை எனச் சாரு குற்றம் சாட்டுகிறார். உலகின் மிக நீளமான மெரினா கடற்கரையில் காலைவேளையில் ஆயிரக்கணக்கானோர் அலைகள் தொடும் தொலைவில் மலம் கழித்துக் கொண்டிருக்கிற காட்சி எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. ஐந்து கி.மீ. தொலைவு பரவியிருக்கிற கடல் மணல் பரப்பில் பாலீதீன் கவர்கள், சிகரெட் துண்டுகள், பியர், விஸ்கி போத்தல்கள் என நிரம்பியிருக்கிற சூழலுக்கு யாரைக் குற்றம் சொல்வது? சாரு தன்னைச் சுற்றிலும் நடக்கிற சம்பவங்கள் குறித்த எதிர்வினையைப் படைப்பின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். நளினியைத் திருமணம் செய்துகொண்டு தில்லியில் வாழ்ந்த கதைசொல்லி அவளிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பெருந்தேவியுடன் வாழ்கிறார். உதயாவிற்கும் அஞ்சலிக்குமான உறவு தொடர்கிறது. அஞ்சலிக்கும் கதைசொல்லிக்கும் இடையில் நிலவுகிற பாலியல் கொண்டாட்டம் தனித்துவமானது. கணவனான சுரேஷ் ஏன் இப்படி அஞ்சலியை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டுமென்ற கேள்வி வாசிப்பில் தோன்றுகிறது. அஞ்சலியின் பதின்பருவ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், துயரம் தோய்ந்தவை. ஏன் இப்படியெல்லாம் அஞ்சலியின் வாழ்க்கையில் சம்பவங்கள் நிகழ்ந்தன என்ற கேள்விக்கு விடை எதுவுமில்லை. கதைசொல்லியின் தம்பியான செல்வத்தின் வாழ்க்கை முழுக்கத் துயரம்தான். அவனுடைய பொருளியல் தேடலுக்கான முயற்சிகள் எல்லாம் தோல்வி. வசதியான குடும்பத்தைச் சார்ந்த ரதி போன்ற பெண்ணை மறுத்துவிட்டு, வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். அவள் குட்டை, வறண்ட தோல், ஒல்லி, தெற்றுப் பல்லுடன் காட்சியளிக்கிறாள். செல்வத்தைவிடப் பத்து வயது மூத்தவளான அவள் விவாகரத்தானவள். கடைசியில் புற்று நோயினால் வதங்கி இறந்து போனவனின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது என்ற கேள்வி மட்டும்தான் மிச்சம். வெறும் கதை சொல்வது மட்டும் சாருவின் நோக்கமல்ல. குடும்ப உறவுகளில் அன்றாடம் நடைபெறுகிற சம்பவங்களின் அபத்தம், செல்வத்தை முன்வைத்துச் சித்திரிக்கப்பட்டுள்ளது நாகூர் நகரின் நிலவெளி குறித்த விவரிப்பு, தில்லியில் வாழ்க்கை, சென்னை, தஞ்சை, புதுவை என வெவ்வேறு பின்புலத்தில் விரிந்திடும் நாவல், நுணுக்கமான பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளது. இடைவிடாது தொடர்ந்திடும் சம்பவங்களின் குவியலால் நாவல் நிரம்பி வழிகிறது. கலைக்களஞ்சியம், விவரச்சுவடிகள், பயணக் குறிப்புகள், பூகோள விவரணைகள் போலச் சாரு பதிவாக்கியிருப்பது, ஒருவகையில் சமகாலத்தின் குரல். நாகூரைப் பற்றிய நுணுக்கமான பதிவுகள் விரிவான பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. தாவர சங்கமம் இயலில் இடம் பெற்றுள்ள புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்/ பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்/ கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்.. என்ற மாணிக்கவாசகரின் பாடல், ஐம்பூதங்கள் மட்டுமின்றி மனிதர்கள், இயற்கையிறந்த ஆற்றல்கள் குறித்தும் பேசுகிறது. நண்பர் கொக்கரக்கோ உள்ளிட்ட பலரின் கதைகள் நாவலில் நிரம்ப இடம் பெற்றுள்ளன. குறிப்பாகச் சாருவின் பதின்பருவ நண்பனான சிவாவின் வாழ்க்கை புதிய கோணத்தில் விரிந்துள்ளது. எண் கணிதம், ஜோதிடம் கற்ற சிவா பாலயோகியாக இருந்து பின்னர் அம்பாவாக மாறினான். கொங்கணவர் என்ற சித்தர் பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள நாகவேதையினால் பாதரசத்தை மணியாகக் கட்டிச் சாரணைகள் செய்தால் தங்கமாகும் என்று சொல்கிற சிவாவின் தேடல் முடிவற்றது. சராசரியான சிவா தன்னைச் சித்தனாகவும் எதிர்காலம் அறிந்த ஞானியாகவும் கருதிக்கொண்டு வாழ்ந்ததற்கான முகாந்திரம் என்ன? தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதுதான் நடுத்தர வர்க்கத்துத் தமிழர்களின் கனவாக இருக்கிறது. அது நிறைவேறியவுடன் குதூகலமடைந்து பேரன் அல்லது பேத்தியைப் பார்த்துக்கொள்வதற்காக ஆறு மாதங்கள் அமெரிக்காவில் தங்கிடப் போகிறேன் எனக் கிளம்பியவர்கள், ஒரே மாதத்தில் திரும்புவது இன்று வழமையாகி விட்டது. இரண்டாயிரமாண்டு வரலாற்றுத் தொன்மையுடைய தமிழகத்து நிலவெளியெங்கும் பரந்திருக்கிற கோவில்கள் வெறுமனே இறைநம்பிக்கை சார்ந்தவை மட்டுமல்ல. சென்னை போன்ற மாநகரத்தில் நிலைத்திருக்கிற கோவில்கள், முதியவர்களின் மனவெறுமையைப் போக்கி, ஆன்மபலத்தைத் தருகின்றன என்ற சாருவின் விவரிப்பு கவனத்திற்குரியது. ஹம் தும் எக் கம்ரேஎ மே பந்த் ஹோ என்ற இயலில் ஹிந்தித் திரைப்படங்களின் பாடல்களும் படங்களும் எழுபதுகளில் தமிழகத்தில் பெற்றிருந்த செல்வாக்கு விரிவாக இடம் பெற்றுள்ளன. பாபி, ஷோலே, ஆராதனா போன்ற ஹிந்தித் திரைப்படங்கள் தமிழர் வாழ்க்கையில் ஊடுருவியிருந்த சூழல் பற்றிய பதிவுகள் காத்திரமானவை. ’’1976 இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எண்பதுகளில்தான் இந்திப்பட ஆதிக்கம் தமிழ்நாட்டில் குறைந்து, ஒரு கட்டத்தில் இல்லாமல் போனது’’ எனச் சாரு குறிப்பிடுவது சரியான கணிப்பு. தமிழரின் இசைப் பயணத்தில் ஹிந்தித் திரையிசைப் பாடல்கள் பற்றிய விவரிப்பு, இன்றைய தலைமுறையினர் அறியாததது. நாவலின் கதையோட்டத்தில் இசைப் பாடல்கள் என்பதற்கப்பால் என்ன நடந்தது என்பது என்ற கேள்வி, வரலாற்றில் முக்கியமானது தில்லி நாட்குறிப்புகள் இயலில் வேலை செய்து பிழைப்பதற்காகச் சென்ற கதைசொல்லி எதிர்கொண்ட அனுபவங்கள் சுவராசியமாகப் பதிவாகியுள்ளன. சிவில் சப்ளைத் துறையில் பணியாற்றியபோது அலுவலக அதிகாரிகள், மதராசிகள் பற்றிய மனப்பதிவுகள் விரிவானவை. பிரதமரான இந்திரா காந்தி, அவருடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தில்லி முழுக்கச் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வெறியாட்டத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்த பதிவுகள் வரலாறின் இருண்ட பக்கங்களைப் பதிவாக்கியுள்ளன. இதுநாள் வரையிலும் சகமனிதர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் விளங்கிய சீக்கியர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் கட்டவிழ்த்துவிட்ட அராஜகம், கொலைக்கான நியாயங்கள் இன்றளவும் நீடித்திருக்கின்றன. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்காகப் பழி வாங்குவதற்காக ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் துயரங்கள் இன்றளவும் காற்றில் மிதக்கின்றன. எல்லாக் கூட்டக் கொலைகளின்போதும் போலீஸ் வேடிக்கைதான் பார்க்கிறது; போலீசின் முன்னால்தான் எல்லாக் கொலைகளும் நடக்கின்றன. இந்தியாவில் இதுபோன்ற ரத்தக் களறியான சம்பவங்கள் எப்பொழுதும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என்பதைச் சாருவின் சீக்கியப் படுகொலைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. தமிழரின் வாழ்க்கை குறித்த பன்முகப் பதிவாக விளங்குகிற புதிய எக்ஸைல் நாவல் கட்டற்ற சம்பவங்களின் பதிவாக விவரிக்கிற உலகம், கொலேஜ் பாணியில் விரிந்துள்ளது. அகத்தியர் தொடங்கி இன்றைய இணையத்தளத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலியல் உரையாடல்கள் வரை அழுத்தமான கேள்விகளை வாசிப்பில் எழுப்புகிற கதையாடல், சமகாலத்தின் விமர்சனமாகப் பதிவாகியுள்ளது. நாவலாசிரியராகச் சாரு பிரதியின் வழியாக எழுப்பியுள்ள கேள்விகள் முடிவற்றவை. அவை இன்னொரு நிலையில் தமிழ்ச் சமூகம் குறித்த காத்திரமான விமர்சனங்கள், பதிவுகள். இறுதியாகச் சில சொற்கள்: புதிய எக்ஸைல் நாவலில் பாலியல் செயல்பாடுகள் குறித்த சம்பவங்களையும் விவரிப்புகளையும் அலசி ஆராய்ந்து, வெட்டப்பட்ட புதிய பிரதியை உருவாக்கிட வாய்ப்பு இருக்குமெனில், புதிய வகைப்பட்ட கதையாடல், பரந்துபட்ட வாசகரிடம் சென்று சேர்ந்திட வாய்ப்புண்டு. பாலியலைப் பொருத்தவரையில் இன்றளவும் தமிழர்கள் மூடுண்ட சமூகத்தினர். புதிய எக்ஸைல் (நாவல்). சாரு நிவேதிதா. சென்னை: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 862; விலை: ரூ.700/-.