Wednesday 1 November 2017

தமிழின் முதல் திணைசார் சூழலியல் நாவல்: சொ. தர்மனின் சூல் நாவலை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் mpandi2004@yahoo.com பூமியில் மனித இருப்பு, ஐம்பூதங்களுடன் தொடர்புடைய நிலையில் நிலமும் நீரும் ஏற்படுத்துகிற உறவென்பது, ஒருபோதும் முடிவற்றது. உயிரினங்களுக்கும் தண்ணீருக்குமான நெருக்கமானது உயிர் வாழ்தலுக்கு ஆதாரமான நிலையில், நீர் பற்றிய பதிவுகள், தமிழைப் பொறுத்தவரையில், சங்க காலம் தொடங்கி, இன்றுவரை தொடர்கின்றன. சங்கத் திணைசார் வாழ்க்கையில் நிலமும் நீரும் நெருக்கமானவை என்ற புரிதலுடன், பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை தனித்து விளங்குகிறது. ஆறு, ஏரி, கண்மாய், குளம், ஊறணி, குட்டை, ஏந்தல் என இயற்கையுடன் நெருக்கமான சூழலில் நீர் சேகரிப்பு, பராமரிப்பு, பயன்பாடு பற்றிய புரிதலின் விளைவுதான், நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாசகம். ஐவகையான நிலப் பாகுபாடு என்பது ஒருவகையில் நீருடன் தொடர்புடையது. சமூக வாழ்க்கை மேம்பட்ட சூழலில், மருதம் என அழைக்கப்படுகிற வயலும் வயல் சார்ந்த நிலமும் நாகரிக வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றன. வானம் பார்த்த வேளாண்மையுடன் ஏரி, கண்மாய்ப் பாசனம் என்ற நிலை, ஒருவகையில், குறிப்பிட்ட சமூகத்தின் பொருளியல் வளர்ச்சியைக் குறிக்கிறது. நிலம், நீர், வேளாண்மை என்ற சமன்பாட்டில் உழுது பயிர் விளைவித்திடும் உழவர்களின் சமூகச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தினைக் அறிந்திட்ட திருவள்ளுவர், மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்கிறார். வேளாண்மையின் சிறப்புகளைக் கொண்டாடிய பாரம்பரியமான தமிழர் வாழ்க்கையில், எப்பொழுது விவசாயம் குறித்து எதிர்மறையான சிந்தனை தோன்றியது என்பது ஆய்விற்குரியது. கி.பி.10-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் மேலாதிக்கம் பெற்றிருந்த வைதிக சமயம், மனுதர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் மண்ணைக் கீறி உழுகிற உழவுத் தொழிலை இழிவானதாகக் கருதிய நிலை பரவலானது. என்றாலும், தமிழகத்தின் மருத நிலத்தில் வழமையான முறையில் நடைபெற்றுவந்த வேளாண்மையின் விரிவினால் நிலையான அரசுகள் மேலாதிக்கம் பெற்றன. தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட பிரமாண்டமான கோவில்கள் கட்டப்பட்டதற்கும், சோழ மன்னர்களின் தென்கிழக்காசிய நாடுகளின் படையெடுப்பினுக்கும் பின்புலமாக விளங்கியது, வளமான நஞ்சை விவசாயம்தான். தமிழகத்தின் அரசியலதிகாரம் பின்னர் சுல்தான், தெலுங்கர், மராட்டியர், ஆங்கிலேயர் போன்ற வேற்று மொழியினரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த போதிலும், நிலத்தின் மூலம் கிடைத்த வருவாய் ஆட்சியாளர்களுக்கு முக்கியமாக இருந்தது. தொடர்ந்து மழை பொழியாத சூழலில் நிலவிய கடுமையான வறட்சியின் காரணமாகத் தமிழகத்தின் விவசாயக் கூலிகள் மொரிஷியஸ், இலங்கை, பிஜி போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தது, தனிக்கதை. ஆங்கிலேயரின் ஆட்சியிலும் செழித்திருந்த கிராமத்து வேளாண்மையானது, இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் எதிர்கொண்ட மாற்றங்கள் அளவற்றவை. சூழலியல் சார்ந்து வளத்துடன் செழித்திருந்த மருத நிலமானது, இன்று பொட்டல் தரிசாக மாறி, எங்கும் சீமைக் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இத்தகு சூழலில் எழுபதாண்டு காலகட்டத்தில் விவசாயம் சிதலமாக்கப்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிந்திடும் முயற்சியாக சோ.தர்மனின் சூல் நாவல் விரிந்துள்ளது. கரிசல் பூமியில் எட்டையாபுரம் ஜமீந்தாரின் ஆளுகைக்குட்பட்டிருந்த உருளைக்குடி கிராமமும் அந்த ஊர்க் கண்மாயும் எனத் தர்மன் விவரிப்பது, வரலாற்றை மீளுருவாக்கம் செய்துள்ளது. கரிசல் பூமியில் செழிப்போடிருந்த கண்மாய்களின் சீரழிவுகள் எப்படி நிகழ்ந்தன என்பதைக் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சம்பவங்களின் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள கதை, தமிழகம் எதிர்கொண்ட சீரழிவு குறித்த நுட்பமான பதிவு. சூழல் சார்ந்து செழித்தோங்கிய நிலவெளியானது காலப்போக்கில் நசிவடைந்ததில், நிலத்துடன் பொருந்தி வாழ்ந்த கிராமத்து மக்கள் அடைந்த துயரத்தைப் பதிவாக்கியுள்ள தர்மனின் நாவல், இழப்பின் அவலத்தைப் பேசுகிறது. கடந்த அறுபதுகளில்கூடத் தமிழகக் கிராமங்களில் குடிமராமத்து முறை வலுவாக நிலவியது. மரபான முறையில் இயற்கை வேளாண்மை நடைபெற்ற சூழலில், பாசன வசதி பெறுகிற நிலவுடமையாளர்கள் கால்வாய்கள், ஏரிகள், கண்மாய்களை முறையாகப் பராமரித்தனர். அரசாங்கத்தின் தயவை நம்பியிராமல், ஒவ்வொரு கிராமத்து விவசாயிகளும் கண்மாயைத் தங்களுக்கான உடைமையாகக் கருதினர். அவர்கள் வேளாண்மையின் ஆதாரமான நீர்நிலைகளைக் கண்காணிக்கும் தொழிநுட்பத்தை முன்னோர்களிடமிருந்து அறிந்திருந்தனர். நாவலாசிரியர் தர்மனின் மொழியில் சொல்வதெனில் நிறைசூலிப் பெண்ணாகத் ததும்பிடும் கண்மாயைச் சார்ந்து பறவைகளும் கால்நடைகளும், மீன்களும் மனிதர்களும் வாழ்ந்தனர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் எட்டையாபுரம் ஜமீந்தாரின் ஆளுகைக்குட்பட்டிருந்த காலகட்டத்தில் கிராமத்தினருக்கும் பொதுச்சொத்தான கண்மாய்க்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு நிலவியது. கண்மாய்க் கரையை வெட்டி ஏற்படுத்திய வழியில் கரம்பை மண்ணை வண்டியில் அள்ளிச் செல்வதற்கு ராஜா தொட்டுக் கொடுத்த மண்வெட்டிதான் முதல் வெட்டு வெட்டிடப் பயன்படுத்தப்பட்டது. விவசாய வேலைகள் தொடங்கிடும்போது ஒவ்வொன்றையும் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் கிராமத்தினர் கருதினர். சுதந்திர இந்தியாவில் மக்களின் நலன்களைக் காப்பதற்கென்று உருவாக்கப்பட்ட துறைகள், காலப்போக்கில் மக்கள்மீது மொட்டை அதிகாரம் செய்கின்றனவாக உருமாறியதற்கு அடையாளமாகக் கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் சீரழிவுகள், சாட்சியமாக உள்ளன. பொதுப்பணித் துறை கண்மாயைக் கண்காணிக்கவும், வனத்துறையானது கண்மாயில் முளைத்திருக்கிற மரங்களைப் பராமரிக்கவும், கண்மாய்க்குள் படிந்திருக்கிற வணடல் மண் கனிமத் துறையின் கட்டுப்பாட்டிற்குள்ளும், கண்மாய் நீரைப் பாசனதாரர்களுக்குப் பகிர்ந்தளிப்பது வேளாண்மைத் துறையினரின் அதிகாரத்திற்குள்ளும் என்ற நிலைமை இன்றளவும் நீடிக்கிறது. ஊழல் பெருச்சாளிகளான அரசியல்வாதிகளின் கைகோர்த்திருக்கிற அரசு அதிகாரிகள் பலருக்கும் கண்மாய், சம்சாரித்தனம் என்றால் என்னவென்று எதுவும் தெரியாது. இத்தகைய அதிகாரிகளின் தலைமையில் இயங்குகிற துறைகளின் கட்டுப்பாட்டிற்குள்ளான கண்மாய்கள், தூர் வாருதல் இன்றி, மண் மேடிட்டு, கருவேலம் முட்கள் மண்டிய புதர்களாக மாறிவிட்டன. கிராமத்தினர் தங்களுடைய கண்மாய் என்று கருதிய மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது என்று சூழலியலாளர்கள் கூப்பாடு போட்டாலும் கண்டுகொள்ளாத அரசாங்கம், ஆற்றிலிருந்து தண்ணீரை 200 கி.மீ. தொலைவிலுள்ள நகரத்திற்குக் கொண்டு செல்கிறது. சுமார் 1000 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்றால் அதில் கைமாறும் பணத்தில் அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் கணிசமான பங்கிருக்கிறது. அதேவேளையில் வேதியியல் உரம், பன்னாட்டுக் கம்பெனிகளின் பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நாசகாரக் கும்பல்களின் பேராசைக்குப் பலியாகியுள்ள சம்சாரிகள் இன்றும் நம்பிக்கையுடன் நிலத்தில் உழுதுகொண்டிருக்கின்றனர். இயற்கையான நீர் என்பது போய் லட்சக்கணக்கில் பணம் செலவழித்து அறுநூறு அடி ஆழத்தில் ஆழ்குழாய்க் கிணறு தோண்டி விவசாயம் செய்கிற சம்சாரிக்கு கடைசியில் என்னதான் மிச்சமாகும்? கடந்த நூற்றாண்டு காலகட்டத்தில் பாசனத்திற்கான இயற்கையான தண்ணீர் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற துயர வரலாற்றைச் சொல்கிற கதைசொல்லியான தர்மனின் படைப்பு நோக்கம், சூழலியல் சார்ந்தது. கடந்த காலத்தில் தமிழகத்தின் திணைசார் சூற்றுச்சூழல் எப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளது என்பது சூல் நாவலின் கதையாடலில் விரிவாகப் பதிவாகியுள்ளது. முன்னோர்களின் பாரம்பரியமான இயற்கை பற்றிய புரிதலை மறுதலித்துவிட்டு, அறிவியலினால் எதையும் சாதிக்க முடியுமென்ற போக்கின் விளைவுதான், அயனான விளைநிலங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாவலாசிரியரான தர்மனின் நிலமும் கண்மாயும் எனப் பின்னிப் பிணைந்திருந்த இயற்கைச் சூழலின் பேரழிவு குறித்த சமகாலத்தின் பதிவு, காத்திரமானது. விளக்கி வைத்த வெங்கலச் செம்பு போன்றிருந்த கண்மாய்கள் இன்று கைவிடப்பட்ட அரசியலை வலியுடன் பேசுகிறது நாவல். சப்பாத்திக் கள்ளிகளும் சங்கம் புதர்களும் மண்டிக் கிடந்த கண்மாய்க் கரையில், அரசாங்கத்தின் முயற்சியினால் சீமைக் கருவேல மரங்கள் முளைத்தன. அவை ஆடு மாடுகள் உண்ணுவதற்குக்கூடப் பயன்படாத விஷச் செடிகள். ஆப்பிரிகாவில் இருந்து அரசினால் கொண்டுவரப்பட்ட ஜிலேபி மீன், ஏற்கனவே இங்கிருந்த உழுவை, கெழுத்தி போன்ற பாரம்பரியமான மீன்களின் அழிவிற்குக் காரணமானது. இன்னொருபுறம் கிராமத்தில் புதிதாக உருவான கட்சிகளும் அரசியல்வாதிகளும் விளிம்புநிலையினர்மீது அதிகாரம் செலுத்துவதுடன், கிராமத்து வளங்களைக் கொள்ளையடிக்க முயன்றபோது, மரங்கள் வெட்டப்பட்டன; கண்மாய்கள் சீரழிவிற்குள்ளாயின; மணல் கடத்தப்பட்டது; குளங்கள், ஊறணிகள் ஆக்கிரமிப்பிற்குள்ளாகின. இன்றையச் சூழலியல் சீர்கேட்டினுக்கு மூலகாரணம் அரசாங்கம்தான் என்ற கருத்தியலுக்குச் சூல் நாவல் வலுச் சேர்த்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் திட்டமிடுகிற அரசின் விவசாயம் பற்றிய திட்டங்கள், பெரிய அளவில் சம்சாரிகளைப் போய்ச் சேர்வதில்லை என்பதுதான் உண்மை. . பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. கரிசல் மண் சார்ந்த நிலவெளியில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிற மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. கண்மாய்ப் பாசனத்தில் செழித்திருக்கும் கரிசல் பூமியில் நிலத்துடனான உற்பத்தி உறவுமுறையானது, பண்பாட்டுரீதியில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலமான்ய அமைப்பு உருவாக்கியிருக்கும் ஆண்டான் – அடிமை உறவு ஒருபுறம் எனில், இந்திய மண்ணிற்கே உரித்தான வைதிக சநாதனம் உருவாக்கி இருக்கும் சாதிய மேல்-கீழ் அடுக்கு இன்னொருபுறம் ஆதிக்கம் செலுத்துகிறது. வயலின் உரிமையாளர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் அல்லது உயர் சாதியினர் என்றால், வயலில் இறங்கி வேலை செய்கிற விளிம்புநிலையினர் ஒடுக்கப்பட்ட சாதியினராகவே உள்ளனர். இத்தகைய சூழலில் கரிசல் வட்டரத்திற்கு உரித்தான நிலவுடமைப் பின்புலத்தில் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ள சூல் நாவல், இனவரைவியல் தன்மையுடன் விரிந்துள்ளது. அன்றாடம் கடினமான வயல் வேலை என்றாலும் சம்சாரிகள் எந்தவொரு சூழலிலும் பகடி செய்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக இரட்டை அர்த்தம் தொனிக்கிற பாலியல் பேச்சுகள் மாமன் - மச்சான் உறவினரிடையே இயல்பாகப் பேசப்படுகின்றன. இத்தகைய பேச்சுகளுக்காக யாரும் கோபித்துக்கொள்வதில்லை. காமம் குறித்த வெளிப்படையான பேச்சுகள், ஒருவகையில் அலுப்பான கிராமிய வாழ்க்கையில் சுவராசியத்தை ஏற்படுத்துகின்றனவா? யோசிக்க வேண்டியுள்ளது. கண்மாயில் நாமக் கோழி தென்பட்டால் அந்த வருடம் நல்ல மழை பொழிந்து கண்மாய் நிரம்பும் என்பது சம்சாரிகளின் நம்பிக்கை. பனை மரத்தில் கூடு கட்டியிருக்கிற தூக்காணங்குருவிகள் எந்தப் பக்கம் வாசல் வைத்துள்ளன என்பதைக் கண்டறிந்து, அந்த வருடம் வடக்கத்தி மழையா, தெற்கத்தி மழையா எனச் சொல்கிற கிராமத்துப் பெரியவர்களின் கணிப்பு சரியாக இருக்கிறது. பிற உயிரினங்களின் செயல்களை வைத்து மழை பற்றி அறிந்திட முயலுகிற சம்சாரிகளின் இயற்கை பற்றிய புரிதலை நாவல் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது. சம்சாரித்தனம் என்பது இயற்கையுடன் முழுக்க நெருங்கிய தொடர்புடையது, கதைசொல்லல் முழுக்க வெளிப்பட்டுள்ளது. இயற்கையைக் குறியீட்டு நிலையில் புரிந்துகொள்ள முயலுகிற கிராமத்தினர், அதியற்புத ஆற்றல்களுடன் சமரசம் செய்திட விழைகின்றனர். பருவ மழை பொழிந்து கண்மாய் மறுகால் போனவுடன் மகிழ்ச்சியடைகிற கிராமத்தினர், விடாமல் மழை கொட்டியபோது செய்கிற சடங்கு, இயற்கை மீதான நெருக்கத்தினை வெளிப்பாடாகும். மழை வேண்டாமெனக் கிராமத்தினர் நடத்தும் பாவனைச் சடங்கு, மானுடவியல்ரீதியில் முக்கியமானது. மழை வேண்டுமெனக் கிராமத்தினர் நடத்துகிற சடங்குகள் போலவே மழையை வழியனுப்புகிற சடங்கு, ஒருவகையில் இயற்கையுடன் கை குலுக்குகிற மனித முயற்சிதான். அம்மனை வழிபட்ட பெண்கள், கூடையில் மாவைக் கையால் அள்ளி, காற்றில் வீசியெறிந்து மழைக்கு விடை தருகிற காட்சி, சுவராசியமானது. மாவு புகையாகக் காற்றில் மிதந்து, மேகங்களை ஊரைவிட்டு விரட்டிவிடும் என்ற நம்பிக்கைதான் ஒருவகையில் எளிய மக்களின் இருப்பினுக்கான ஆதாரமாகும். அமானுட சக்திகளின் ஆதிக்கம் எப்படிக் கதைகளாகக் கிராமத்து வெளியில் மிதக்கிறது என்பதைக் கதைசொல்லியான தர்மன் முடிவற்றுக் கதைக்கிறார். பரம்பரைகள்தோறும் வாய் மொழியாகப் பரவிடும் நாட்டார் கதைகள் கட்டமைத்திடும் புனைவுகள் குறித்துக் கேள்விகள் கேட்பதற்கு யாருக்கும் துணிச்சலற்ற வாழ்க்கையை அசலாகப் பதிவாக்கியுள்ள தர்மனின் முயற்சி, கவனத்திற்குரியது. பேய், முனி, காத்து கருப்பு துடியான தெய்வங்கள் போன்றவை எந்த நேரத்திலும் தங்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட நேரிடலாம் என்ற புரிதல் நாட்டார் பண்பாட்டில் முக்கியமான அம்சம். இரவில் கிடையைக் காவல் காக்கிற கீதாரியுடன் காம இச்சை நிறைவேறாமல் அலைகிற பெண் பேயானது, அவருடைய மனைவி உருவில் வந்த உடலுறவு கொள்கிறது என்ற கிராமத்து வெளியில் மிதந்திடும் கதைக்குப் பின்னால் சபிக்கப்பட்ட பெண்ணின் வேதனை பொதிந்திருக்கிறது. கண்மாயைக் காக்கிற அய்யனார், கண்மாய் மடையைத் திறந்திடும் முயற்சியில் உயிரைத் தந்த நீர்ப்பாய்ச்சிக் கட்டக் கருப்பன் சாமி, கண்மாயில் இறந்துபோன கள்ளனுக்குக் குலதெய்வமான உளிக்கருப்பன் கோவிலில் சிலை, கிணற்றின் சொருகு கல் உடைந்திட இறந்துபோன மகாலிங்கம் பிள்ளையின் கொடிக்கால் பிள்ளை கோவில் என ஊரெங்கும் பரவியிருக்கிற கோவில்கள் இறந்துபோன மனிதர்கள்தான். ஏதோவொரு இக்கட்டான சூழலில் இறந்தவர்கள், தங்களை வணங்குகிறவர்களுக்கு நல்லது செய்வார்கள் என்பது கிராமத்தினரின் நம்பிக்கை. சூல் நாவலின் அடியோட்டமாக அறம்/ஒழுங்கு பற்றிய சொல்லாடல்கள் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. பகுத்தறிவின் வலிமை முன்னிறுத்தப்படுகிற காலகட்டத்தில், இப்படியெல்லாம் நடைபெறுகின்ற சம்பவங்கள் எவற்றின் அடைப்படையில் நிகழ்கின்றன என்ற கேள்வியைக் கதையாடல் முன்வைத்துள்ளது. ஏதோவொரு நம்பிக்கை சார்ந்து கிராமத்தினரால் உருவாக்கப்படுகிற ஒழுங்கு பற்றிய புரிதல் முக்கியமானது. சூலியாகத் ததும்பிய கண்மாய் நீரைச் சொந்த பகையின் காரணமாக வெட்டிவிட்டுக் கிராமத்தினரையும் பிற உயிரினங்களையும் தவிக்கவிட்ட சொக்கலிங்கபுரம் சித்தாண்டியின் செயல் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுடைய மனைவி மயில் பெற்ற இரு குழந்தைகளும் ஊமையாகப் பிறந்தன. அவன் செய்த செயல் பாவமானது என்று மனம் குமைந்த நிலையில், கீழ்நாட்டுக் குறிச்சி அய்யரிடம் பரிகாரம் கேட்கச் செல்கிறான். அவனைப் பார்த்தவுடனே அய்யர், ’’பாவக் கைகள் தீண்டிய தேங்காயும் பழமும் என் கண்ணில் பட வேண்டாம். ஊரைச் சுற்றிலும் மரங்கள் நடு..’’ எனப் பரிகாரம் சொல்கிறார். புல மாடன் தனது பங்காளியான பன்னி மாடனை ஊர்ப் பஞ்சாயத்தில் எல்லோர் முன்னாலும் காலில் கும்பிட்டு விழ வைத்தான். அதற்குப் பழி வாங்குவதற்காகப் புல மாடனின் மகன் கண்ணாடி விரியனால் கொத்தப்பட்டு அநியாயமாக இறப்பதற்குப் பன்னி மாடன் தந்திரமாகச் செயலாற்றினான். அந்தச் சம்பவம் யாருக்கும் தெரியாது. பன்னி மாடனின் மனைவி மாரி பெற்ற குழந்தையின் உடலில் கண்ணாடி விரியன் பாம்பின் தோல் போலச் செதில்களாக உதிர்ந்ததைப் பார்த்ததும் பயந்து போனான். அவனது செயலுக்குப் பரிகாரம் சொன்ன கீழ்க்குறிச்சி அய்யர், உனது மனதில் விஷமேறி விட்டது, ஓடைகளைத் தூர் வாரு, உசுப்பிராணிகள் வாழ்ந்திட வழிவகை செய் என்கிறார், எட்டையாபுரத்து அரண்மனையில் பசுக்களைப் பராமரித்துவருகிற நங்கிரியான், இறைச்சி உணவிற்காகத் தந்திரமான செயலினால் பசுக்களைக் கொல்கிறான். அவனது செயலைக் கேள்விப்பட்ட மன்னர், அவனைத் தண்டிக்காமல் பாவத்தில் மூழ்கட்டுமென வெளியே அனுப்பி விட்டார். ஏன் அரண்மனை வேலையில் இருந்து நங்கிரியான் நீக்கப்பட்டான் என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தான் செய்த செயலினால் வருந்துகிறவனின் நடுமுதுகில், தண்டுவடம் முடிகிற இடத்தில் முளைத்த சிலந்திக் கட்டியினால், எப்பொழுதும் குனிந்தவனாக மாறினான். அவனுடைய மகனின் முதுகிலும் சிலந்திக்கட்டி முளைத்தபோது, தனது வம்சமே பாவத்தினால் அழியப் போவதை நினைத்துத் தீராத கவலைக்குள்ளானான். வயலில் புகுந்து மேய்ந்த ஆட்டுக்குட்டியைச் சுட்டுக் கொன்றதுடன், கிராமத்தினர் வழக்கமாக நடந்து செல்கிற பாதையில் செல்லக்கூடாது எனத் தடுத்த பயனாரெட்டியார் ஊராரின் வயிறெரிச்சலுக்கும் பழிப்பினுக்கும் ஆளானார். ராணுவத்திற்குச் சென்றவரின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து மூளை சிதறி இறந்து போனார். ஆத்தூர் வெற்றிலைக் கொடிக்கால் நாடாரிடம் பொய் சொல்லி, அவரிடமிருந்து வெற்றிலை பற்றிய தகவல்களைப் பெற்று வந்த மகாலிங்கம் பிள்ளை, கொடிக்காலில் தோண்டிய கிணற்றின் சொருகு பலகைக் கல் தலையில் விழுந்ததினால் செத்துப்போனார். அவர் இறப்பினுக்கு முன்னர் தலையில் எச்சத்தைப் போட்ட பறவை, நொடிப்பொழுதில் காற்றில் பரவவிட்ட சேதியை யார் அறிவார்? நாவல் முழுக்க விவரிக்கப்பட்டுள்ள பல்வேறு சம்பவங்கள் அறத்தினுக்கெதிராகச் செயல்படுகிறவர்கள் அடைந்த துயரங்களை நாட்டார் கதை மரபில் சொல்கிறது. இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்தன எனக் கிராமத்தினரின் பேச்சுகளில் மிதந்திடும் கதைகள், சமூக ஒழுங்கினை நுணுக்கமாகக் கட்டமைக்கின்றன. கதைசொல்லியான தர்மன் எந்த இடத்திலும் தனது அபிப்ராயத்தை முன்வைக்காமல் விலகி நிற்கிறார். முடிவற்ற கதைகளின் மூலம் உயிர்த்திருக்கிற கிராமத்தினர், ஒழுங்கின்மை/அறமற்றவை நிச்சயம் அழியும் என்ற நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரமா? மார்க்ஸ் கணித்தது போல சுயதேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மோன தவத்தில் உறைந்திருந்த தமிழகக் கிராமங்களில் ஒன்றான உருளைக்குடியின் பின்புலத்தில் தர்மன் விவரிக்கிற வாழ்க்கை, பன்முகத்தன்மையுடையது. சாதிய ஏற்றத்தாழ்வுகள் வலுவாக நிலவினாலும் சேவை சாதியினரின் உழைப்பு, சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது. நிலத்தில் விவசாயம் செய்கிற பள்ளர்கள், மண்பாண்டங்கள் செய்கிற குயவர்கள், மர வேலை செய்கிற தச்சாசாரிகள், இரும்பு வேலை செய்கிற கொல்லர்கள் எனக் கிராமத்தினரின் தேவைகள், குறுகிய வட்டத்திற்குள் அழுத்தமாகச் சுழன்றன. உழவு முதன்மையான கிராமத்து வாழ்க்கையில் மக்களின் தேவைகளை நிறைவு செய்கிற சேவைத் தொழிலாளர்கள், ஒப்பீட்டளவில் இழிவாகக் கருதப்பட்டனர். இந்நிலையில் நிலத்தில் தானியங்களை விளைவிக்கிற ஆதாரமாக விளங்குகிற பள்ளர்களைச் சமூக அடுக்கில் இழிந்தவர்களாக ஒடுக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆய்விற்குரியன. கிராமத்து விவசாயத்தின் அடிப்படையான கண்மாயைப் பராமரிக்கிற வேலையைச் செய்வதற்கு நீர்ப்பாய்ச்சி அல்லது மடையன் எனப் பள்ளர் சாதியினர் ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டனர். பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து, அதிகாரம் செலுத்திய வைதிக சமயத்தின் மேலாதிக்கம் வலுவாக நிலவியபோதும், பள்ளர் சாதியினர் நீர் மேலாண்மை செய்தனர். தர்மனின் சூல் நாவலில் இடம்பெற்றுள்ள நீர்ப்பாய்ச்சியான முத்துக்கருப்பன், பரம்பரைரீதியாக வேலை செய்கிறார். மடையின் வழியாகக் கண்மாய் நீரை வயல்களுக்குத் திறந்துவிடும் பணியுடன், கண்மாயைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் செய்கிற பணியை மனவிருப்பத்துடன் செய்கிறார். மழை பொழிந்து தண்ணீர் நிரம்பி நிறைசூலியாகத் ததும்பிடும் கண்மாய் நீரை முறைவைத்து நிலத்திற்குப் பாய்ச்சுகிற நீர்ப்பாய்ச்சியின் பணியானது, ஊரின் செழிப்பினுக்கு ஆதாரமாகும். கிராமத்து சம்சாரிகளின் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமான நீர்ப்பாய்ச்சி பற்றிய விவரிப்பு, நாவல் முழுக்கத் தனித்து விளங்குகிறது. பிரமாண்டமான கண்மாயை நிர்வகிக்கிற நீர்ப்பாய்ச்சியான பள்ளர் சாதியினரான முத்துக்கருப்பன் சுயமரியாதையுடன் விளங்குகிறார். பல்வேறு சாதியினர் வேளாண்மையில் ஈடுபட்டிருந்த சூழலில், பள்ளர்களும் தங்களுக்கு உடைமையான நிலத்தில் கௌரவத்துடன் விவசாயம் செய்தனர். இந்நிலையில் பிற சேவை சாதியினர் போல பள்ளர்களும் சமமதிப்புடையவர்கள் என்ற நிலையில், அவர்கள் எப்படி அட்டவணை சாதியினர் வரிசையில் சேர்க்கப்பட்டனர் என்ற கேள்வியை வாசிப்பில் நாவல் நுட்பமாக எழுப்புகிறது. உணவு உண்ணும் பழக்கத்தில் மாட்டிறைச்சியைத் தவிர்த்திடும் பள்ளர்கள், பிற இடைநிலைச் சாதியினரைப் போல ஆட்டிறைச்சி மட்டும் உண்ணுகின்றனர். ஒரு நிலையில் நாடார் சாதியினரிடமிருந்து தின்பண்டம் வாங்குவதை விலக்காகக் கொண்டிருந்தனர். இன்று நாடார் சாதியினர், சாதிய இழிவிலிருந்து விலகித் தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக மாற்றிக்கொண்ட சூழலில், பள்ளர்கள் மட்டும் ஏன் இன்னும் ஆதி திராவிடர் அல்லது தலித் என்ற ஒற்றைச்சொல்லுக்குள் சிக்கிக்கொண்டிருப்பது நியாயம்தானா என்ற கேள்வியைக் கதையாடலின் மூலம் தர்மன் எழுப்பியுள்ளார். சமூகத்தின் மேம்பாட்டிற்காக இன்றளவும் நிலத்தில் உழைக்கிற பள்ளர்கள் பற்றி மறுஆய்வு செய்ய வேண்டிய நேரமிது. கிராமத்து வாழ்க்கையில் தங்களுக்கான இடத்துடன் மரியாதையுடன் வாழ்கிற பள்ளர்களைத் தலித் என்ற சொல்லாடலுக்குள் அடக்குவது பொருத்தம் இல்லை என்ற நுண்ணரசியலை வாசிப்பில் நாவல் முன்வைக்கிறது. கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகச் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கிட கிராமத்துச் சம்சாரிகளின் அயனான விளைநிலங்களைப் பறித்திடத் துடிக்கிற அரசாங்கங்களின் மக்கள் விரோதப் போக்கின் இன்னொரு முகத்தைச் சூல் நாவல் பதிவாக்கியுள்ளது. சூழலியல் நோக்கில் எழுதப்பட்டுள்ள எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, டி.செல்வராஜின் தோல், சுப்ரபாரதி மணியனின் சாயத்திரை, இரா.முருகவேளின் முகிலினி போன்ற நாவல்கள் குறிப்பிட்ட தொழில் காரணமாக ஏற்படுகிற சுற்றுப்புறச் சீரழிவுகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ளன. சூல் நாவல் திணைசார் சூழலியல் மரபின் தொடர்ச்சியை முன்னிலைப்படுத்திய நிலையில், புதிய போக்கினுக்கு வழி வகுத்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரியமான கிராமிய வாழ்க்கைமுறையையும், அதனைச் சிதலமாக்கிய அதிகாரத்தின் மேலாதிக்கத்தையும் முன்வைத்து சோ.தர்மன் எழுதியுள்ள சூல் நாவல்தான், தமிழின் முதல் திணைசார் சூழலியல் நாவல். தமிழ் அடையாளத்தையும் பண்பாட்டையும் வலியுறுத்துகிறவர்கள் அவசியம் சூல் நாவலை வாசித்து விவாதிக்க வேண்டும். சூல் (நாவல்).சோ.தர்மன். அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம். பக்கம்:500; விலை: ரூ.380/-. தொடர்புக்கு: 04332-2734

No comments:

Post a Comment