Wednesday 1 November 2017

காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்லும் மனுஷ்யபுத்திரன்: நம் காலத்து அரசியல் கவிதைகள் ந.முருகேசபாண்டியன் mpandi2004@yahoo.com அரசியல் இல்லாமல் எதுவுமில்லை என்ற நெருக்கடியான சூழலில் மனித இருப்பு, பூமியில் முன்னெப்போதையும்விட இன்று அதிகமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ஊடகங்கள்மூலம் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்படுகிற கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான அரசியல் பின்புலத்தில், தனிமனித சுதந்திரமும் இயக்கமும் சிதலமாகின்றன. அசலானதாகவும் சுயமானதாகவும் சிந்திப்பதற்கான சூழல் முழுக்க மறுதலிக்கப்படுகிற நிலையில், சமூக அக்கறையுள்ள மனிதர்கள், இன்னும் தீவிரமாக இயங்கிட வேண்டியுள்ளது. அதிகாரத்தின் கரம் எங்கும் பற்றிப் படர்கையில், உடல்கள் மீதான கண்காணிப்பின் அரசியல் வலுவடைந்துள்ளது. இன்னொருபுறம் அரசியலற்ற தன்மையைப் பரப்பி, எதற்கும் அடங்கியொடுங்கிடும் உடல்களைத் தயாரிப்பது துரிதமாக நடைபெறுகிறது. அந்நிய மூலதனத்திற்குச் சிவப்பு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தவாறு, தேசபக்தி பேசிக்கொண்டு ஆட்சியதிகாரத்தில் இருக்கிற பி.ஜே.பி.யின் அரசியல் செயல்பாடு, கபட நாடகத்தின் உச்சம். இன்னொருபுறம் இந்துத்துவா பின்புலத்தில் பாசிசத்திற்குத் தயாராகிடும் அடிமை உடல்களை உருவாக்கிடும் பணியைச் செய்திட மோடி தலைமையிலான அரசு துடிக்கிறது. நுகர்பொருள் பண்பாட்டின் மேலாதிக்கச் சூழலில் மரபான விழுமியங்களின் சிதலத்தில் மொழியும் படைப்புகளும் சந்தைக்கான சரக்காக உருமாற்றப்படுகின்றன. இலக்கியம் பற்றிய பேச்சுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாகப் படைப்பாளி படைப்புகளில் உன்னதம் தேடியலைவது பொருத்தமாக இல்லை. அதிலும் இரண்டாயிரமாண்டு அரசியல் பாரம்பரியமுடைய தமிழ்க் கவிதையின் தொடர்ச்சியாக இயங்குகிற நவீனமான கவிஞன், புதிய வகைப்பட்ட அரசியல் சூழலுடன் எதிர்வினையாற்றிட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இத்தகு சூழலில் சமகால அரசியல், பண்பாட்டுத் தளத்தில் கவிதைகள் வழியாக உடனுக்குடன் செயலாற்றுகிற கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனித்து விளங்குகிறார். அவருடைய அரசியல் கவிதைகள் முகநூல் உள்ளிட்ட மின்னணு ஊடகத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு, இளைய தலைமுறையினரின் கருத்தியலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உரைநடையின் செல்வாக்கு மேலோங்கியுள்ள சூழலில் கவித்துவமான மொழியுடன் சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்துகிற மனுஷின் கவிதைகள், ஆனந்த விகடன் உள்ளிட்ட வெகுஜனப் பத்திரிகைகளிலும் பிரசுரமாகிப் பரவலாகக் கவனம் பெற்றுள்ளன. கவிதை என்பது சொற்களால் ஆன மொழி விளையாட்டு. என்றாலும் கவிதை வாசிப்பில்தரும் அனுபவம், அதிர்ச்சி, மகிழ்ச்சி காரணமாக இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழில் நீடித்துள்ளது. கவிதையை உருப்பளிங்கு போலவும், கதவு இல்லாத இரும்புப் பெட்டகம் போல மாற்றி விநோத வஸ்துவாக்கும் முயற்சி காலந்தோறும் தொடர்ந்து நடைபெறுகிறது. இறுக்கமும் செறிவும்மிக்க புதிரானதுதான் கவிதை என்ற பார்வைக்கு மாற்றாக நெகிழ்ச்சியுடனும் எளிமையாகவும் இருப்பது சிறந்த கவிதையின் அடையாளம் என்பது சங்க இலக்கியப் படைப்புகள் தொடங்கி நடைமுறையில் உள்ளது. பாரதியாரின் அரசியல் கவிதைகள் பொதுப்புத்தியில் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள், தமிழ்க் கவிதையில் புதிய போக்கினைக் கட்டமைத்தன. தமிழகச் சமூகச் சூழலில் கவிதையின் மூலம் நிகழ்காலச் சம்பவங்களை விமர்சனத்திற்குள்ளாக்கி, கவிதை என் கைவாள் என அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல், இன்று வலிவடைந்துள்ளது. அந்தவகையில் கவிதைசொல்லியான மனுஷ் தன்னைச் சுற்றிலும் அன்றாடம் நடைபெறுகிற சம்பவங்களினால் பாதிப்பிற்குள்ளாகி, எளிய சொற்களால் உருவாக்கியுள்ள அரசியல் கவிதைகள், வாசிப்பில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அழுத்தமானவை. கவிதை எனச் சிறுபத்திரிகை உலகு இதுவரை உருவாக்கியுள்ள புனிதத்தைக் கட்டுடைத்து, கவிதை வடிவத்தை அரசியல், சமூகப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்துவது மனுஷ் கவிதைகளின் தனித்துவம். காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன் எனத் தன்னையும் உள்ளடக்கிய மனுஷின் கவிதை, இன்றைய கார்ப்பரேட் அரசியல் குறித்த பகடியாகியுள்ளது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைராக்கியத்துடன் போராடிய காந்தியை முன்வைத்துக் கவிஞர் உருவாக்கிடும் பேச்சுகள் காத்திரமானவை. இரவுவேளையில் உணவு சாப்பிடும் வழக்கமற்ற காந்தியுடன் விருந்திற்குச் செல்கிற கவிஞர் மனுஷ், இன்றைய சூழலில் காந்தியின் இருப்பினையும் அடையாளத்தையும் அர்த்தமிழக்கச் செய்கிற மதஅடிப்படைவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்குகிறார். இரவில் விருந்து, கொண்டாட்டம் என்ற மேட்டுக்குடி மனநிலைக்கு எதிரான மனப்பான்மையுடைய காந்தி, இன்றிருந்தால் எப்படி செயல்படுவார்? யோசிக்க வேண்டியுள்ளது. எப்பொழுதெல்லாம் அக்கிரம், அநியாயம் தலையெடுக்கிறதோ அப்போது காந்தி, உண்ணாநோன்பை அறிவித்ததுடன், எளிய மக்களைத் திரட்டி எதேச்சதிகாரத்திற்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்குவது வழக்கம். எளிமையைத் தனது வாழ்க்கையின் ஆதாரமாகக் கருதிய காந்தி, இன்றைய நுகர்பொருள் பண்பாட்டுச் சூழலுக்கு முற்றிலும் அந்நியமானவர்தான். வர்க்க அரசியலை அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு மாற்றாக மதஅடிப்படைவாதத்தை முன்வைக்கிற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் போராடுகிற மக்களின் மனநிலை மழுங்கடிக்கப்பட்ட சூழலில், காந்தியை முன்வைத்த மனுஷின் கவிதை வரிகள் அழுத்தமானவை. புலால் மறுத்தலை வாழ்நாளெல்லாம் போதித்த காந்தி புலால் உண்டதற்காக மனிதர்கள் தோல் உரிக்கப்படுவதைக் கண்டதும் என் தட்டிலிருந்த மாமிசத் துண்டைக் கடித்து தன் உண்ணாநோன்பை முடித்துக்கொள்கிறார் இறந்த விலங்கின் இறைச்சியை உண்டதற்காக இந்துத்துவ அடிப்படைவாதிகள் எளிய மனிதர்களைக் கொன்ற சம்பவத்தைக் காந்தி எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பது முக்கியமான கேள்வி. அகிம்சையைப் போதித்த காந்தி, புலால் சாப்பிட்டுத் தனது எதிர்ப்பைக் காட்டியிருப்பார் என்ற மனுஷின் நம்பிக்கை, கசப்பின் வெளிப்பாடு. தனது வாழ்க்கையை லட்சிய போதத்துடன் மாற்றி நுண்ணரசியல் செய்த காந்தியை விமர்சிப்பது மட்டும் மனுஷின் நோக்கமல்ல. யோசிக்கும்வேளையில் இன்றைய இந்திய அரசியல் சூழலில் காந்தி தேவைப்படுகிறார் எனத் தோன்றுகிறது. காந்தியின் கையினால் சுற்றப்படும் ராட்டை பழுதடைந்த நிலையில், அவருக்கு எலக்ட்ரானிக் ராட்டையைப் பரிசளிக்க வேண்டுமென நினைக்கிற கவிஞர், இன்றிரவு/ அவரது தோழிகள் படைசூழ/ அவருடன் விருந்திற்குச் செல்கிறேன் என்கிறார். கையால் சுற்றப்பட்ட ராட்டை என்பது வழக்கொழிந்த சூழலில், எலக்ட்ரானிக் ராட்டை என்பது வெறும் பகடி மட்டுமல்ல. மாறிவருகிற நெருக்கடியான அரசியலின் ஆதிக்கம் வலுவடைந்த நிலையில் காந்தியத்தின் மறுபிரவேசம் குறித்தத் தேடலாகக் கவிதையைக் கருத முடியுமா? தொண்ணூறுகளின் முற்பகுதியில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பாசிஸ்டாகச் செயல்பட்டபோது, பிரசுரமான மனுஷின் அரசி கவிதை, துணிச்சலுடன் நடப்பு அரசியலை விமர்சனத்திற்குள்ளாக்கியது. அன்றைய வெகுமக்கள் ஊடகங்கள் ஜெ பற்றிக் கள்ள மௌனம் சாதித்தன. நடப்புச் சமூகத்தில் அதிகாரம் எந்த வடிவில் நிலவினாலும் அது குறித்துக் கவிதையின்மூலம் எதிர்க்கருத்தைப் பதிவு செய்திடும் புலமை மரபு, தமிழைப் பொருத்தவரையில் சங்க இலக்கியத்தில் தொடங்கியுள்ளது. ஆள்கிறவரின் அதிகார வெறியின் விளைவு மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கும்போது, அதற்கெதிராகக் கவிதையின்மூலம் குரலெழுப்புவதுதான் புலமை மரபின் அறமாகும். அம்மரபில் தோய்ந்திருக்கும் அறம் இன்றுவரை தொடர்கிறது. வரம்பற்ற அதிகாரத்தினால் தமிழகத்தை ஆட்டிப்படைத்த ஜெயலலிதாவை அப்போலா தினங்கள் கவிதை வரிகள்மூலம் கடுமையாக விமர்சித்து, அரசியலதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிடுவது, கவிஞர் மனுஷின் முதன்மை நோக்கமாகும். மது பானங்கள் தயாரிப்பாளர்களும் சசிகலா கும்பலும் பின்னிருந்து இயக்கிட எதுவும் செய்வேன் எனச் சர்வாதிகாரியாகக் கொக்கரித்த அன்றைய முதல்வரான ஜெயலலிதாவின் செயல்களைத் தொடர்ந்து கவிதையின் வழியாகக் கவிஞரான மனுஷ் விமர்சிப்பது அவருடைய அரசியல் ஈடுபாடுதான். உடல்நலமின்மை என முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென அப்போலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதலாக நடைபெற்ற மர்மான நிகழ்வுகள் சாதரணமானவை அல்ல. அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது கவர்னரும் அறியாத நிலையில், ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்ட அறிக்கைகள், திகில் நாடகத்தின் காட்சிகள் போல இருந்தன. எழுபத்தைந்து நாட்களில் தமிழக அரசியல் பின்புலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த கேள்விகளுக்கு இன்றளவும் விடையில்லை. தமிழகத்தில் எல்லோரும் திருதிராஷ்டர்களாக என்ன நடக்கிறது என்ற புரிதலற்றுத் திணறுகையில், ஒரு கவிஞராக மனுஷ் எழுதிக் குவித்த கவிதைகள் உக்கிரமான மொழியில் வெளிப்பட்டுள்ளன. ’அப்போலா தினங்கள்’ என்ற தலைப்பில் மனுஷ் படைத்திட்ட கவிதை வரிகள், சமகால அரசியலைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. அவை ஒருவகையில் காத்திரமான சமகால அரசியல் விமர்சனங்கள். இந்த நகரத்தை இப்போது ஆள்வது யார் என்று கேட்கிறார்கள் எப்போதும் போல இந்த இருட்டு இந்த பயம் அப்போலாவின் தீவிர சிகிட்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை பூடகமாக்கப்பட்ட நிலையில், எங்கும் பயத்தின் நிழல் பற்றிப்படர்ந்திட்ட சூழல், கவிதை வரிகளாகியுள்ளது. அரசியல் என்றால் சதிகளும் மந்திராலோசனைகளும், கவிழ்ப்புகளும் நிரம்பியது என்பது அப்போலா தினங்களில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் வெற்றி, எப்போதும் பயத்தை ஏதோ ஒருவழியில் வெகுஜனங்களின்மீது தூவுதில்தான் இருக்கின்றது. பரந்துபட்ட மக்களின் விதைக்கப்பட்ட சந்தேகத்தின் விதை விருட்சமாக உயர்ந்தபோது, எங்கும் கள்ள அமைதி நிலவிய சூழலை, மனுஷின் கவிதைகள் பதிவாக்கியுள்ளன. துண்டிக்கப்பட்ட நாவுகளின் குரல் என விரிந்திடும் கவிதையில் மக்களின் சந்தேகங்களும் கேள்விகளும் முடிவற்ற நிலையில், அரசி பற்றிய பேச்சுகள் தடைசெய்யப்பட்ட சூழலில், மனுஷின் ஆதங்கம் நியாயமானது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் எழுதிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், அரசாங்கம் எல்லா ஊடகங்களையும் கண்காணித்தது, சூழலில் பீதியைக் கிளப்பியது. எங்கும் வதந்திகள் பரவியபோதும் முதல்வரின் உடல்நிலை ரகசியமாக இருந்தது. அப்போலாவில் நடந்தது என்னவென்பது மக்கள் யாரும் அறியாத சூழலில், ஜெயலலிதாவை முன்வைத்துச் சசிகலாவும் அவருடைய அடியாட்களும் நிழலாக இருந்து ஆட்சியதிகாரத்தைச் செலுத்திய காலகட்டத்தில் நடைபெற்ற காட்சிகள் முக்கியமானவை. அவர்கள் சிரித்தார்கள் எதையும் கேட்க வேண்டியதில்லை இந்த நகரமே எதைப் பேசுகிறது என்று எங்களுக்குத் தெரியும் நான்கு பேரின் நாக்கை அறுத்தால் எல்லா நாக்குகளும் தானே அடங்கிவிடும் அரசியல் சூழல் குறித்து நியாயமாகப் பேசுகிறவர்களின் நாக்குகளை வெட்டியபிறகு, அரசியைப் பற்றி மக்கள் யோசிப்பதைத் தடுத்திட முடியுமா என்ற மனுஷின் வரியில் அதிகாரத்திற்கெதிரான குரல் அழுத்தமானது. சமூக வலைத்தளங்களில் எழுந்த கேள்விகளை முடக்கிட முயன்ற அரசியந்திரத்தின் பின்புலம் என்னவென்பது இன்றுவரை யாரும் அறியாத மர்மமாக உள்ளது. ஜனநாயக நாட்டில் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன என்பதன் வெளிப்பாடுதான் அப்போலா தினங்கள். சமகால அரசியல் நெருக்கடியின் குரலாகப் பதிவாகியுள்ள நீண்ட கவிதைகளில் கசப்பும் வெறுப்பும் கலந்த சொற்கள் ததும்பி வழிகின்றன. அரசி பற்றிய அதிகார பிம்பத்தைக் கட்டமைத்திடும்போது, வெறுமனே பார்வையாளன் போல கவிஞர் கவிதை சொன்னாலும் சமகாலத்தின் அவலக்குரல் நுட்பமானது. அரசிக்கு என்ன நடந்தது/ என்பதைப் பற்றிய கேள்விகளை/அவளது சமாதிக்கு மேல் பறக்கும்/வண்ணத்துப்பூச்சிகள்/ இன்னும் கேட்டவண்ணம் இருக்கின்றன. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் இன்றும் நிழலெனப் பரவிக்கொண்டிருக்கிற சூழலில், மனுஷின் கவிதை வரிகள் முடிவற்ற கேள்விகளை எழுப்புகின்றன. நம்பத்தகுந்த வட்டாரங்கள் என ஊடகங்கள் தெரிவிக்கிற உண்மைத் தகவல்கள் அல்லது சம்பவங்கள் பின்னர் பொதிந்திருக்கிற அரசியல் உருவாக்கிட முயன்றிடும் கருத்தியல் நுண்ணரசியலானது. மனுஷ், நம்பத்தகுந்த வட்டாரம் எப்படி இருக்கும் என்று அப்பாவியாக எழுப்புகிற கேள்விக்கான விடை பகடியான மொழியில் அமைந்துள்ளது. ஐ.சி.யூனிட்டில் உற்சாகத்துடன் பேசுகிறார், சாப்பிடுகிறார் ஜெயலலிதா என நம்பத்தகுந்த வட்டாரம் உருவாக்கிய தோற்றம் உண்மையானதுதானா? பெரும்பான்மை மக்களைத் தங்களுடைய நோக்கத்திற்கேற்ப உருவாக்கிட அதிகார வர்க்கத்தினருக்கு எப்போதும் நம்பத்தகுந்த வட்டாரம் என்ற பேச்சு, உதவுகிறது. நம்பத்தகுந்த வட்டாரத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த கவிதைசொல்லியான மனுஷைச் சுற்றுலா வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக/ ரகசிய இடத்திற்கு/ அழைத்துச் சென்றான்/ அங்கே பொட்டலில்/ பசி மயக்கத்துடன் படுத்திருந்த/ பூனை/ எங்களைப் பார்த்து/ மியாவ்/ என்று ஒரே ஒருமுறை கத்திவிட்டு/ மறுபடி தூங்க ஆரம்பித்துவிட்டது. புனைவுகள் மீது கட்டமைக்கப்பட்ட அப்போலா தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை விமர்சிக்கிற கவிதையில் கேலியும் கிண்டலும் பொங்குகின்றன. அரசி-2 கவிதையானது அன்றைய அப்போலாவின் மர்ம தினங்கள் குறித்த காத்திரமான விமர்சனம். அவள் நிஜமாக இருந்தபோது/ உருவாக்கிய அச்சத்தைவிட/ அவள் நிழலாக மாறியபோது/ உருவான அச்சத்தின் கனம்/ தாங்க முடியாததாக இருந்தது என்ற வரிகளின் பின்புலத்தில் அரசியின் இறுதி நாட்கள் பதிவாகியுள்ளன. அதிகாரத்தின் வழிமுறைகளில் எப்போதும் இருள் படர்ந்திருக்கிறது அதிகாரத்தின் வாள் நுனிகளில் எப்போதும் நஞ்சு தடவியிருக்கிறது. அதிகாரம் கட்டமைத்த பிம்பமான அரசி, இறுதியில் பதுமையைப் போல அந்த வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார். அவள் கடைசியாக இருந்த வீட்டில்/ அவள் கடைசியாக இருந்த அறைச்சுவரில் இருந்த/ பல்லி ஒன்றுக்கும் மட்டுமே/ அந்த உண்மை தெரிந்திருந்தது/ அந்தப் பல்லி எப்போது பேசும்/ யாருக்கும் தெரியாது. இன்று வரையிலும் அரசிக்கு என்ன நடந்தது மர்மமான சூழலில் பல்லி பேசினால் உண்மை தெரியும் என்பது, கவிதையை அமானுஷ்யத்திற்கு நகர்த்துகிறது. ஒரு நாள் இரவில் ரூபாய் மதிப்பு நீக்கப்பட்டதாக வெளியான பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏடிஎம் வாசலில் இரண்டாயிரம் ரூபாய் எடுப்பதற்காகக் காத்திருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் நிலவிய பீதி அளவற்றது. கருப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறேன் என்ற பொய்யான தகவலுடன் களத்தில் இறங்கிய நடுவண் அரசாங்கம், எளிய மக்களின் பணத்தை வங்கிகளில் முடக்கியதில் உள்நோக்கமுண்டு. ஏற்கனவே வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகளுக்கு மீண்டும் கடன் கொடுப்பதற்கான பருண்மையான நோக்கம் உள்ளது. ஆனால் மக்கள் தேசநலனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மோடி கூறியது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். வங்கியில் சேமித்துள்ள தங்களுடைய சொந்தப் பணத்தை எடுப்பதற்காக இந்திய மக்கள் பட்ட துயரங்களைக் குறித்து மனுஷ் எழுதியுள்ள கவிதைகள், அவருடைய சமூக அக்கறையின் விளைவாகும். இருண்டகாலக் குறிப்புகள் என்ற பெயரில் வெளியான மனுஷின் கவிதைகளை இன்று மறுவாசிப்பிற்குள்ளாக்கிடும்போது, அன்றைய சூழலின் வெக்கையினால், போதமிழந்த நிலையில் அவர் எழுதிக் குவித்துள்ளது புலப்படுகிறது. மக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் ஒரு பைத்தியக்காரக் கும்பலின் நோக்கங்களுக்கு தேசமே பைத்தியமாக்கப்படுவதை ஒரு இலக்கற்ற போலி இலட்சியத்திற்கு ஒவ்வொரு மனிதனும் பலியாக்கப்படுவதை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் மக்கள்மீது ஓரிரவில் திணிக்கப்பட்ட வன்முறையைப் பொறுத்துக்கொள்ளல் குறித்த அதிகார வர்க்கத்தின் அறிவுரையின் பின்னால் பொதிந்திருக்கிற நுண்ணரசியலைக் கேள்விக்குள்ளாக்கிடும் மனுஷின் கவிதை வரிகள், நுட்பமானவை. சிரமத்திற்கு வருந்துகிறேன்/ மாடு மேய்ப்பவர்களை/ ஒரே இரவில் கடன் அட்டைகளை/ பயன் பயன்டுத்துபவர்களாக/ மாற நிர்பந்திப்பதற்காக என்ற வரிகள் அன்றைய இருண்ட காலத்தின் பதிவாக என்றும் விளங்கும். வங்கியில் பணம் எடுப்பவர்களின் கைவிரலில் கறுப்பு மை வைக்கப்படும் என்பது சிவில் சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட கொடூரம். சராசரி மக்களின்மீது அவசரநிலையைத் திணித்திட்ட மோடி அரசின் கொடூரச் செயல்பாட்டினுக்குப் பின்னர் பொதிந்திருக்கிற அரசியலில் கார்ப்பரேட்டுகளின் நலன் உள்ளது. இந்நிலையில் கவிஞர் மனுஷ் ஏன் அத்தோடு விட்டீர்கள்/ நெற்றியில் கறும்புள்ளி/ செம்புள்ளி குத்தி அனுப்புங்கள்/ ஒரு காதை அறுத்து அனுப்புங்கள்/ உங்கள் தேசபக்திக்காக/ இதைக்கூட பொறுக்க மாட்டோமா? என்கிறார். இந்தியப் பொருளதாரத்தைப் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றிவிட்டு, தேசபக்தி என எளிய மக்களிடம் போதிப்பது எதற்காக? தரகு அதிகாரவர்க்க முதலாளிகளான அம்பானி, விஜய் மல்லையா போன்றோரின் ஆதாயத்திற்காக எதையும் செய்திட முயலுகிறப் பிரதமர் மோடி குழுவினர், விளிம்பு நிலையினரின் நலனுக்காகப் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்வது அண்டப்புளுகு. மக்களின் எந்தவொரு நியாயமான எதிர்ப்பையும் மலினப்படுத்துவதற்காகப் போலியான தேசபக்தி என்ற சொல்மூலம் காவிக் கும்பல் கட்டமைக்கிற புனைவின் பின்னர் பொதிந்திருக்கிற அரசியலை எதிர்ப்பதற்கான கலகமாக மனுஷின் இருண்டகாலக் குறிப்புகள் கவிதைகள் உள்ளன. காவிரி என்பது அன்னையின் பெயர் என்ற கவிதை, உருக்கமான மொழியில் தமிழகத்து மக்களின் எதிர்பார்ப்புகளைப் பேசுகிறது. தண்ணீரில் கிடக்கிறது/ காவிரியின் நீதி கேட்கும் சிலம்பு எனத் தொடங்குகிற கவிதை, நியாயத்தின் பின்புலத்தில் தமிழக மக்களின் வலியைப் பதிவாக்கியுள்ளது. காவிரி என்பது அன்னையின் பெயர் அவளைப் பைத்தியக்காரியாக்கி உங்கள் அடிமையாக்கி நீங்கள் அடைத்து வைத்திருக்கும் சுவர்களுக்குப் பின்னே அவளது பசித்த மக்கள் கதவு திறப்பதற்காகக் கண்ணீருடன் நின்றுகொண்டிருக்கிறார்கள் மண்ணில் இயற்கையாகப் பாய்ந்தோடுகிற ஆற்றைத் தங்களுக்கு மட்டும் உரியது எனச் சிறையிலிட முயலுகிற கர்நாடகா மாநில அரசியல்வாதிகளின் நியாயமற்ற அடாவடிச் செயல்கள் கண்டனத்திற்குரியன. ஒருக்கால் பெரும் மழை பொழிந்து கர்நாடகா மாநிலம் முழுக்க வெள்ளக்காடானால், அப்போதும் தமிழகத்திற்குத் தண்ணீர் தரமாட்டேன் எனத் தேக்கி வைப்பது சாத்தியமானால், அவர்கள் எதுவும் பேசலாம். காலங்காலமாக இயற்கையாகப் பாய்கிற காவிரியைத் தடுத்து வைத்துக்கொண்டு, வெட்டி நியாயம் பேசுவதனால், பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். தமிழகத்து டெல்டா நிலப்பகுதியில் வறண்ட நிலத்தைப் பார்த்தவாறு பசியோடு காத்திருக்கிற விவசாயிகளின் கண்ணீ,ர் துயரமான மொழியில் கவிதையாகியுள்ளது உடல் பற்றிய அளவுக்கதிகமான மதிப்பீடுகளும் புனிதங்களும் கட்டமைக்கப்பட்ட இன்றைய சமூகச் சூழலில், குறிப்பாகப் பெண்ணுடல் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏராளம். பெண்ணுடல் அரசியலை முன்வைத்துப் பெண்ணியவாதிகள் முன்வைக்கிற கேள்விகள் ஒருபுறம் என்றால், டிஜிடல் வெளியில் காட்சியளிக்கிற நிர்வாணப் பெண்ணுடல்கள் இன்னொருபுறம் வலுவாக உள்ளன. இன்று மின்னணு ஊடகம் எங்கும் பரவலான சூழலில், இணைய வெளியில் காட்சிப்படுத்தப்படுகிற நிர்வாண உடல்களின் மாயத்தோற்றங்கள் பண்பாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாகப் பெண்ணுடல்கள், இதுவரை தமிழ்ச் சமூகம் உருவாக்கியுள்ள விழுமியங்களை அர்த்தமிழக்கச் செய்கின்றன. திடீரென ஒருநாளில் virtual வெளியில் காட்சியளிக்கிற தனது நிர்வாண உடலைக் காண நேரிடுகிற பெண்ணின் மனம், அதைத் தாங்கவியலாமல் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறது. ஏதோ ஒரு விளையாட்டுப்போல லென்ஸின் முன்னர் தனது நிர்வாண உடலை எந்தக் கூச்சமுமின்றிக் காண்பித்த பெண்ணுக்கு, நிஜம் தகிக்கிறது. ஸ்மார்ட் மொபைல் போன்கள், கணினியுடன் இணைக்கப்பட்ட காமிராக்கள் எந்த மூலையில் இருந்தும் கண்காணிக்கிற இக்கட்டான சூழலில், அந்தரங்கம் அர்த்தமிழக்கிறது. நிர்வாண உடல்களின் கதை என்ற கவிதையானது இன்று இளைஞர்களும் இளைஞிகளும் எப்போதும் எதிர்கொள்ளவிருக்கிற அபாயத்தை வேறு கோணத்தில் விவரிக்கிறது. நீங்கள் ஒரு நிர்வாண உடலைப்/ பார்க்க விரும்பினால்/ கண்ணாடியின் முன்/ உங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு/ நிற்பதே சிறந்தது என்ற நடிகையான ராதிகா ஆப்தேயின் கருத்து, வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். அதேவேளையில் நிர்வாணம் பற்றிப் பதற்றமின்றி, அதைப் புரிந்துகொள்வதன் திறவுகோலாகவும் அவருடைய ஆலோசனை உதவுகிறது எனச் சொல்லலாமா? நிர்வாணம் பற்றிச் சொல்வதற்கு ஏராளம் இருக்கின்றன தங்கள் சொந்த நிர்வாணத்தை காணொளியாகவோ புகைப்படமாகவோ காண நேர்கிறவர்கள் தங்கள் நிர்வாண உடலை உடனே தூக்கில் தொங்கவிட்டு விடுகிறார்கள் அல்லது ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள் உடல் பற்றிய சமூக மதிப்பீட்டிற்கும் நடப்புச் சூழல் குறித்தான முரண் காரணமாகக் காவு வாங்கப்படுகிற பெண்ணுடல்கள் பெருகுகிற சூழல் குறித்த அழுத்தமான கேள்விகளை எழுப்புகிறது மனுஷின் கவிதை. இதுவரை நிர்வாணம் குறித்துப் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிரேமைகளையும் புனைவுகளையும் மறுபரீசிலனை செய்ய்ய வேண்டிய நெருக்கடியான காலகட்டமிது. ஒருநிலையில் டிஜிடல் வெளியில் காட்சிப்படுத்தப்படுகிற நிர்வாணத் தோற்றத்தை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வியைப் பாடுபொருளாகக்கொண்ட கவிதை, நவீன சமூகம் எதிர்கொண்டுள்ள முக்கியமான பிரச்சினையாகும். கி.பி.3016 ஆம் ஆண்டில் அழிந்த தமிழர் நகரத்தை அகழ்வாய்வு மேற்கொண்டபோது, கிடைத்தவை பற்றிய மனுஷின் கவிதை, சமகாலத் தமி்ழர்கள் குறித்த நுட்பமான பதிவு. இதுவரை அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள், பண்டைத் தமிழரின் பண்பாடுச் செறிவினுக்கு ஆதாரமாக இருப்பதனால், இன்று தமிழ்ப் பெருமை பேசுவோர் புளகாங்கிதம் அடைகின்றனர். கி.பி.3016-ஆம் ஆண்டில் தமிழகத்தின் மண்ணைத் தோண்டும்போது, தொல்லியல் ஆராய்ச்சி மாணவி கண்டறிந்த ரகசியக்கூடம் பற்றிய பதிவுகள், நடப்பில் பெண்ணுடல்கள் மீது நிகழ்த்தப்பட்ட வதைக்களத்தைச் சித்திரிக்கின்றன. வீட்டை விட்டு ஓடிப்போன பெண்கள் பிடித்து வரப்பட்டுப் பாதாள அறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது கணவர்கள் கொல்லப்பட்டு/ தண்டவாளத்தில் வீசப்பட்டார்கள்/அல்லது கொல்லப்படுவதற்கு முன்னர்/ தற்கொலை செய்துகொள்வதாக/வாக்குமூலம் அளித்தார்கள்…. அந்தப் பெண்களைத் தீ வைத்து உயிரோடு எரிக்கப்பட்டதற்கும்/ ஒரு மாமிசத்தைப் போல வெட்டப்பட்டதற்கும்/ காதில் விஷம் ஊற்றிக் கொன்றதற்கும்/ மயக்க ஊசிகள்மூலம்/ அரைப் பைத்தியமாக்கப்பட்டதற்கும்/ஏராளமான சான்றுகள் இருக்கின்றன என நீளும் கவிதை, பெண்ணின் வலியையும் இருப்பினையும் பதிவாக்கியுள்ளது. தமிழர் நாகரிகம், பண்பாடு, மரபு, பாரம்பரியம் போன்ற சொல்லாடல்கள் முன்னிறுத்தப்படுகிற இன்றைய காலகட்டத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு காரணமாகப் பெண்ணுடல்களை வதைக்குள்ளாக்கிடும் தமிழர் அரசியலைப் பகடியான மொழியில் மனுஷ் பதிவாக்கியுள்ளார். உபயோகிக்க முடியாத கருவி என அன்பினை முன்வைத்திட்ட கவிதை வரிகளில் சக மனிதர்களுக்கிடையிலான உறவு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அன்பு என்ற சொல்லின் பின்னல் புதைந்திருக்கிற அரசியல் அழுத்தமானது. அன்பின் பட்டன் கத்தியை மடக்கு தம்பி என ப்ரியத்துடன் தொடங்கிடும் கவிதை வரிகள் வாசிப்பில் சுவராசியமளிக்கின்றன. உனக்கு யாரோ/சொல்லித் தந்திருக்கிறார்கள்/அன்பு என்பது/ ஆற்றில் இறங்குவது போல என்று/… அன்பின் துருப்பிடித்த வாளோடு/ நான் இங்கே நெடுங்காலமாக/ செய்வதறியாது அமர்ந்திருக்கிறேன். அன்பின் மறுபக்கம் ஆதிக்கம், அதிகாரம், வெறுப்பு எனப் படர்ந்திடும் உணர்வுகள் என்ற பார்வை நுட்பமான அவதானிப்பு. உலகிலுள்ள எல்லா மதங்களும் அன்பு என்ற சொல்லின் பின்புலத்தில்தான் வரலாறு முழுக்க லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்துள்ளன. எவ்விதமான விமர்சனங்களுக்கும் அப்பால்பட்ட தூய அன்பு என்று காலந்தோறும் உருவாக்கப்பட்டுள்ள புனைவினைக் கேள்விக்குள்ளாக்கும் மனுஷின் கவிதைமொழியில் அரசியல் தோய்ந்துள்ளது. சர்க்கஸில் புலிகளைப் பழக்குகிறவன் பற்றிய கவிதை, மனித இருப்புக் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. விருந்தினர் விடுதியில் இப்பொழுது எடுபிடியாக வேலை செய்கிற கிழவன், முன்னர் சர்க்கஸில் புலிகளைப் பழக்கியதை விவரிப்பது சுவராசியமானது. அதைக் கேட்டவுடன் கவிதைசொல்லி மனமுடைந்து சொல்கிறார். நான் இப்படித்தான் ஒவ்வொரு அதிகாரத்திற்கும்/ பழக்கப்படுத்தப்பட்டேன்/ அந்தக் கிழவனிடம் சொல்ல/ எனக்கு அவமானமாக இருக்கிறது. வலிமையான புலியைப் பழக்குவதுபோல தீவிரமான கருத்தியல் சார்புடையவரையும் அதிகாரத்தின் நலனுக்கேற்ப மாற்றுவது, இங்குத் திட்டமிட்ட முறையில் நடைபெறுகிறது. கொம்பாதி கொம்பனையும் அடக்கியொடுக்கித் தொழுவத்தில் கட்டுவதற்குக் காத்திருப்போர் முன்னால் என்ன செய்ய முடியும்? அவனிடம் உன் குடும்பம் எங்கே என்று கேட்கப்பட்ட கேள்விக்குத் சொன்ன விடை முக்கியமானது. ஒரு காலத்தில் இருந்தது இப்போது இல்லை சர்க்கஸில் புலிகளைப் பழக்குவது போல அத்தனை எளிதில்லை ஒரு குடும்பத்தைப் பழக்குவது. அடர்ந்த வனத்தில் சுயேச்சையாகத் திரியும் புலிக்குட்டியைப் பிடித்து வந்து பழக்குகிற விநோதமான வேலை செய்கிறவனின் குடும்பம், அவனை விட்டுத் தள்ளிப் போய்க்கொண்டிருப்பது நகைமுரண். சிறுகதைக்குரிய விஷயத்தைக் கவித்துத்துடன் நெடுங்கவிதையாகச் சொல்லியுள்ள மனுஷின் கவிதைமொழி நுட்பமானது. எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பவன்/ திடீரென ஒரு நாள்/ தனிமையின் நரகத்தில் வீழ்ந்தான் எனத் தொடங்கும் காதுகளைத் தின்பவன் கவிதை, அதியற்புதப் புனைவாக அரசியலை முன்வைக்கிறது. பொதுவாக எப்பொழுதும் யாரிடமாவது எதையாவது பேசுவதில் ஆர்வமுடையவர்களுக்குப் பிறர் சொல்வதைக் கேட்பதற்குக் காதுகள் இருக்காது. அவன் திருமணமானபோது, இளம் மனைவியின் முலைகளைவிட அவளுடைய காதுகளை நேசித்துப் பேசுகிறான் என்ற விவரிப்பு, காதுகளைத் தேடியலைகிறவனின் அவஸ்தையைச் சொல்கிறது. இன்று பலரும் ஏதோ ஒரு காரணத்தினால் பிறரை நோக்கிப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். எதிராளியிடம் கலந்துறவாடுவதைவிடத் தனது பேச்சு மேன்மையானது, சரியானது என்ற நம்பிக்கை வலுவடைந்த மனிதர்களின் எண்ணிக்கை பெருகுவதை மனுஷ் நீண்ட கவிதையாக்கியுள்ளார். பேசிக்கொண்டே இருப்பவன்/ ஒருநாள் தனிமையில் நரகத்தில் வீழ்ந்தபோது/ முதலில் தற்கொலை செய்துகொள்ளலாம்/என்று நினைத்தான்… பிறகு அவன் அறையின் சுவரில் ஒரு பெரிய காதை வரைந்தான் அருகே மேலும் பல சிறிய காதுகளை வரைந்தான் அவனுக்கு அது போதுமானதாக இருந்தது நிஜக் காதுகளைவிட வரையப்பட்ட காதுகள் சௌகர்யமானவையாகவும் பணிவு மிக்கவையாகவும் இருந்தன சுவர் முழுக்க வரையப்பட்ட காதுகள் முன்னால் அவன் தன் உரையைத் தொடங்கினான் அதுதான் அவன் வாழ்நாளின் மிகச்சிறந்த உரையாக அமைந்திருந்தது காதுகள், தனிமனிதன் இயற்கையோடும் சகமனிதர்களுடன் தொடர்புகொள்வதற்கான கருவி என்ற நிலை, இன்று மாறியுள்ளது வெளியில் இருந்து ஒவ்வொரு கணத்திலும் திணிக்கப்படுவதற்கான/கொட்டப்படுவதற்கான தொட்டியாகக் காதுகள் மாற்றப்பட்டு விட்டன. அதிலும் மதஅடிப்படைவாதிகளாலும் ஆதிக்க அரசியல்வாதிகளாலும் இடைவிடாமல் செய்யப்படுகிற பிரச்சாரங்களினால் நிரம்பித் ததும்புகிற காதுகள், ஒருநிலையில் தங்களுடைய இயல்பினை இழக்கின்றன. இன்னொருபுறம் பேசு, பேசிக்கொண்டேயிரு, கேளு ,கேட்டுக்கொண்டேயிரு, பார், பார்த்துக்கொண்டேயிரு என ஊடகங்கள் தருகிற நெருக்கடியினால், அசலான கருத்து எதுவுமற்ற மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர். இருபத்து நான்கு மணி நேரமும் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகிடும் பிரேக்கிங் நியூஸ் கேட்கிறவனின் மூளை நாளடைவில் துருப்பிடித்துவிடும். இப்படியாக ஊடகங்களினால் தகவமைக்கப்படுகிற பெரும்பாலான மனிதர்கள், தொலைக்காட்சி சேனல்கள் முன்னர் உறைந்திருப்பது வழமையான விஷயமாக மாறிவிட்டது. எப்போதும் பேசுவதைக் கேட்பதற்காக மட்டும் காதுகள் மாறிக்கொண்டிருப்பது அரசியல் சார்ந்தது என்பதைக் கவித்துவத்துடன் பதிவாக்கியுள்ள மனுஷின் கவிதை வரிகள், வாசிப்பில் புதிய உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. போர்முனைச் செய்திகள், வெறுமனே மண்டியிட வந்திருக்கிறேன், வீட்டிற்குத் திரும்புவதற்கான காரணங்கள், கலவரம், கள்ளத் தீர்க்கதரிசிகள், கலவரம் உள்ளிட்ட பெரும்பாலான கவிதைகள் சமகால அரசியலை முன்வைத்துள்ளன. கவிதையில் அரசியல் கூடாது என்ற பம்மாத்தின் பின்னர் பொதிந்திருக்கும் அரசியல் பாசாங்கானது. கவிதை என்ற வடிவத்திற்குப் பொருத்தமற்ற புனிதத்தைப் புனைந்துரைப்பது, ஒருவகையில் அபத்தம். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவரும் யாருடைய கைப்பாவைகளாகவோ மாற்றப்படும் நெருக்கடியான சூழலில், அந்தரங்கம் என ஒன்று இருக்க முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. காதல், அகம் எனத் தோய்ந்திருக்கிற கவிதைக்கும் புறம் சார்ந்து தனிமனிதன் எதிர்கொள்கிற அரசியல், பண்பாட்டு நெருக்கடிகள் சார்ந்த கவிதைக்கும் சமூகப் பயன்பாட்டில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் மனிதர்களுடைய அரசியல், பண்பாடு, சமூக வாழ்க்கை எப்படி இருந்தது? கார்ப்பரேட் அரசியலின் ஆதிக்கம் வலுவடைந்தபோது விளிம்புநிலையினருக்கு என்ன நிகழ்ந்தது? எந்தக் குற்றமும் செய்யாத காரணத்தினால், பாதகம் எதுவும் ஏற்படாது என்ற நடுத்தர வர்க்கத்தினரின் நன்னம்பிக்கை எந்த நேரத்திலும் சிதைக்கப்படுவதற்கான சாத்தியமுண்டு என்பது மனுஷின் கவிதை தருகிற எச்சரிக்கை. எப்போதும் யாரும் பலியாடுகளாக மாற்றப்படலாம் என்பதற்குச் சாட்சியமாக இளவரசன், ராம்குமார் சம்பவங்கள் ஏற்படுத்திய பதற்றத்தை மனுஷ் முன்னிலைப்படுத்தியுள்ளார். இருத்தல் பாதுகாப்பானது என நம்புகிற சமகாலத்தினர், அரசியல்ரீதியில் எதிர்கொண்ட முடிவற்ற கேள்விகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்திட மனுஷின் கவிதைகள், சமூக ஆவணமாக விளங்குகின்றன தனிப்பட்ட கவிஞரின் குரல் என்ற போதிலும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுக்குரலாகத்தான் கவிதையானது காலந்தோறும் வெளிப்படுகிறது. இருளின் நிழல் எங்கும் பற்றிப் படர்ந்திடும் இன்றையத் தமிழக அரசியல் சூழலில், மனுஷின் கவிதைகள் வாசிப்பின் வழியாகத் தொந்தரவு செய்கின்றன; வாசகரின் சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கின்றன. எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்ற நுகர்பொருள் சார்ந்த அற்பமான பிலிஸ்டைன் மனநிலையினைக் கேள்விக்குள்ளாக்கிற மனுஷின் அரசியல் கவிதைகள், நம் காலத்தின் குரலாக விரிந்துள்ளன. காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்( கவிதைத் தொகுதி). மனுஷ்ய புத்திரன். சென்னை: உயிர்மை பதிப்பகம்.பக்கம்:270; விலை:ரூ.300/-. தொடர்புக்கு: 044-24993448

No comments:

Post a Comment