Sunday 9 November 2014

தமிழ்த் தத்துவ மரபில் பட்டினத்தார்

         தமிழ்த் தத்துவ  மரபில் பட்டினத்தார்
                                     ந.முருகேசபாண்டியன்
   
                      தமிழ்த் தத்துவமரபில் சித்தர்களின் சிந்தனைப் போக்குகள் தனித்துவமானவை. வைதிக சமயமும் அவைதிக சமயங்களான ஜைனமும் பௌத்தமும் ஏற்படுத்தியிருந்த கருத்தியல்களுக்கு மாற்றாகப் புதிய போக்கினைச் சித்தர்கள் முன்னிறுத்தினர். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரையில் , சோழர் காலம் தொடங்கிப் புராணங்களும் வேதங்களும் சாஸ்திரங்களும்      ஒப்பீட்டளவில் முக்கியத்துவம்  பெற்றன. இயற்கையிறந்த அதியற்புத ஆற்றல்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக மனித உடல்கள் ஒடுக்கப்பட்டன. பால் அடிப்படையில் பெண்களும் பிறப்புரீதியில் தலித்துகளும் ஒதுக்கப்பட்டனர். பிறவி, கர்மம் பற்றிய கற்பிதங்களுடன் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் சொர்க்கம் குறித்த புனைவினை  மதங்கள் கட்டமைத்தன. சமூக அடுக்கில் மேலோங்கியிருந்த சநாதன தருமத்தினைப் புராணங்கள்  நியாயப்படுத்தின. பெண்ணுடல்களை வெறுமனே போகப்பொருளாக மாற்றியிருந்த ஆண்களின் உலகம்  வலுவாக இருந்தது. இத்தகு சூழலில் ஏற்கனவே தமிழகத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளின்மீது ஆழமான கேள்விகளை முன்வைத்த சித்தர்கள், மாற்று  மரபுகளை முன்வைத்தனர். தமிழ்ச் சித்தர் மரபு ஒற்றைத்தன்மையானது அல்ல; பல்வேறுபட்ட போக்குகள் நிலவுகின்றன.. வேதங்கள், சாஸ்திரங்கள் ,சம்பிரதாயங்கள்மீது கடுமையான விமர்சனங்களை வைத்த சிவவாக்கியர், திருமூலர் ஒருபுறம்      . நிலையாமை காரணமாக மனித இருப்பினையும் பெண்ணுடல்களையும் கண்டனம் செய்த பட்டினத்தார் இன்னொருபுறம். இருவேறு போக்குகளும் நிறுவனமயமாக்கத்திற்கு  எதிர்ப்பு என்ற நிலையில் ஒன்றுபடுகின்றன.  
      கோவில், ஆகம விதிகள், சடங்குகள் போன்றவற்றை மறுதலித்த சித்தர்கள் ஞானத்தை முதன்மையாகக் கருதினர். உருவ வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளாத சித்தர்கள், தாங்கள் கண்டறிந்த ஆன்மீக அனுபவத்தைப் பாமர மக்களின் மொழியில் பாடல்களாக எழுதினர். சித்தர்கள் நாத்திகக் கருத்தை வலியுறுத்தவில்லை. ஆனால் அவர்கள் புனிதம் என்ற பெயரில் நகரம், ,ஆறு, விலங்கு, மரம், கோவில் போன்றவற்றைப் புனிதமாக்குவதை மறுத்தனர். மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் அடையாளங்கள் சித்தர் நெறிக்கு முரணானவை.
      இதுவரை மதங்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள சட்ங்குகள், மரபுகள் போலியானவை என்பது சித்தர்களின் நம்பிக்கை.  அன்றைய காலகட்டத்தில் மதங்கள் செல்வாக்குச் செலுத்திய சூழலில், சித்தர்களின் கருத்துகள் கலகத்தன்மையுடையனவாக விளங்கின. வீடுபேறு அடைவதற்குச் சித்தர்கள் பின்பற்றிய ` தந்திர யோகம்` வைதிக சமயத்தினரால் ஏற்கப்படவில்லை. கஞ்சா போன்ற லாகிரிப் பொருளின்மூலம் சில சித்தர்கள் வேறு உலகில் உலாவிய உன்மத்தநிலையைக் கீழான செயலாக மத நிறுவனங்கள் கருதின.. மேலும் மருத்துவத்தின்மூலம் உடலை நலமாக்க முடியும் என்று  சித்தர் மரபு கருதியது. இதுவரை நோய் என்பது பாவபுண்ணியத்தினாலும், கருமவினையினாலும் உண்டானது என்று மதங்கள் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையைச் சித்தர்கள் ஏற்கவில்லை. உடலை வளர்ப்பதன்மூலம் உடலோடு வீடுபேறு அடையலாம் என்று சித்தர்கள் கருதினர்.
    தமிழ்ச் சிந்தனை மரபில் சித்தரான பட்டினத்தாரின் பாடல்கள் இன்றளவும் வெகுஜனரீதியில் பிரபலமாக விளங்குகின்றன. பட்டினத்தார் பற்றிச் செவி வழியாக வழங்கிவரும் வாழ்க்கை வரலாற்றுக்கதை ஆதாரமற்றது. பட்டினத்தாரின் பாடல்கள் கருத்து வெளிப்பாடு காரணமாகப் பிற சித்தர்களின் பாடல்களைவிட பாமரர்களிடமும் ஊடுருவியுள்ளன. ` ஒவ்வொரு சீவனிலும் சிவத்தைக் காண்பவனே சித்தன் ` என்ற திருமூலரின் கூற்று பட்டினத்தாருக்குப் பொருந்தும். கி.பி. 16-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பட்டினத்தார் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின் பொதுவான கருத்து. அன்றைய காலகட்டத்தில் தமிழகமானது முஸ்லிம், நாயக்கர், மராட்டியர் என வேற்று மொழியினரின் ஆளுகைகுட்பட்டிருந்தது. அதேவேளையில் வேள்வியை முன்வைத்த வைதிக சமயம் வருணாசிரம பின்புலத்தில் ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டது. சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  விடிவு எதுவுமில்லை. பெண்கள் ஒருபொருட்டாகக் கருதப்படவில்லை. வெறுமனே உடலுழைப்புத் தருவதற்கான அடிமையான ஆண் உடல்களும், போகத்திற்கான பெண்ணுடல்களும் என்றிருந்த சூழலில் பட்டினத்தாரின் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. அன்றைய சமூகச்சூழல் ஏற்படுத்தியிருந்த நெருக்கடி ,பட்டினத்தாரின் பாடல்களில் சூசகமாக வெளிப்பட்டுள்ளது.
     பண்டிதர்கள் சிலேடை, யமகம், சித்திரக்கவி எனச் சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டுச் செய்யுள்களைக் கடினமான நடையில் எழுதிக் கொண்டிருந்த சூழலில், எதிராளியை முன்னிறுத்தி எளிய சொற்களில் பாடிய பட்டினத்தார் பாடல்கள் வாய்மொழி மூலமாக மக்களிடம் பரவின. நம்பிக்கை வறட்சி, கசப்பு, வெறுமை, நிலையாமை, உடல்கள் பற்றிய இழிவான எண்ணம், பெண்ணுடலைக் கேவலமாகக் கருதுதல் என விரியும் பாடல்கள் தனிமனிதப் புலம்பல்கள் எனச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. பூமியில் மனித இருப்பிற்கான உடல்கள்மீது பட்டினத்தாருக்கு ஏன் இத்தனை வெறுப்பு?  அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான அனுபவங்கள் உடல்களைப் புறக்கணிக்கும் நிலைக்கு இட்டுச் சென்று விட்டனவா? அல்லது அன்றைய அரசியல் நிலைமைகள் கடுமையான நெருக்கடியைத் தந்தனவா? சித்தின்மூலம் சீவனைத் தேடும் பட்டினத்தாரின் சொற்களில் கசப்புப் பொங்கி வழிகின்றது.
    பட்டினத்தார் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். ஓயாமல் பொய் சொல்வார்/ நல்லோரை நிந்திப்பவர்/ தாயாரைத் திட்டுகின்றவர் / சதி செய்வார்/ சாத்திரங்கள் ஆராயார்/ பிறருக்கு உதவி செய்யாதவர்/ நாடி வந்தவருக்கு ஒன்றும் ஈயாதவர்.. போன்றோர் பூமியில் இருந்தால் என்ன இறந்தால் என்ன? போன்றவை சமூக வாழ்க்கைக்கு ஆதாரமானவை. பனை மரம் போல வளர்ந்து நல்லோரின் பேச்சுகளை அறியாத இடும்பரை ஏன் படைத்தாய் இறைவா என்ற பட்டினத்தாரின் ஆதங்கம் தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது.
     இறை வழிபாட்டினை மனம் ஒன்றாமால் வெறுமனே சடங்காகச் செய்வதினால் பயன் எதுவுமில்லை என்பது பட்டினத்தாரின் கருத்து. முழுமுதற் பொருளான பேராற்றலை நினைந்து வழிபடாமல் பூசை செய்வது பொருளற்றதுதான்.
                  கைஒன்று செய்ய விழிஒன்று
                        நாடக் கருத்தொன்றெண்ணப்
                  பொய்ஒன்று வஞ்சக நாஒன்று
                        பேசப் புலால்கமழும்
                  மெய்ஒன்று சாரச் செவிஒன்று
                        கேட்க விரும்புமியான்
                  செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்
                        வாய்வினை தீர்த்தவனே
     
       மனம்,மொழி,மெய்யினால் நினைந்து வழிபட வேண்டிய பரம்பொருளை மன ஓர்மையற்றுத் துதிப்பது  ஏற்புடையது அல்ல என்கிறார் பட்டினத்தார். சமுகச் சூழல் காரணமாகப் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனிதன் தனது இருப்பினையே மறக்கின்றான். இதனால் மன ஒருமைப்பாடு இல்லாமல் வெறுமனே வழிபடுவது கடமை போல நிகழ்கின்றது. இந்நிலை மாற வேண்டும் என்பது பட்டினத்தாரின் கருத்து. வழிபாட்டிற்கு மட்டுமல்ல எந்தவொரு விஷயத்திற்கும் இது பொருந்தும். நவீன வாழ்க்கைச் சூழலில் வேகம்வேகமாக மனிதன் இயங்க வேண்டியபோது ,அற்புதமானவற்றை நழுவ விட்டு விடுகின்றான் . மனிதன் தான் என்ற நிலையில் தன்னையும் சூழலையும் அவதானித்துச் செயல்படும்போது வாழ்க்கை செம்மை அடையும்.

      பூமியில்மனித இருப்பு நிலையானது என்ற நம்பிக்கையில் அதிகாரத்தைக் கட்ட்மைப்பவரும், சொத்துகளைச் சேர்ப்பவரும் பெருகுகின்றனர். இதனால் மனிதர்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகள், போர்களில் ஏற்பட்ட அழிவுகளுக்கு கணக்கேது? `காதுஅற்ற ஊசியும் வாராது/ காணும் கடை வழிக்கே ` என்ற போதனைமூலம் இருப்பின் அபத்தம்  பாடலில் பதிவாகியுள்ளது
.
    வாசி என்னும் மூச்சுக்காற்றினை அடக்கிச் சித்தர் நெறியில் வாழ்ந்த பட்டினத்தார் யோகத்தினைப் போற்றுகின்றார்
அட்டாங்க யோகமும் ஆதாரம்
   ஆறு அவத்தை ஐந்தும்
விட்டுஏறிப் போன வெளிதனி
   லேவியப்பு ஒன்று கண்டேன்
வட்டுஆகிச் செம்மதிப் பால்ஊறல்
   உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை
   விழுங்கி இருக்கின்றதே  
 .
எட்டு யோகங்களும் ஆறு அவத்தைகளும் என ஞான வழியில் இறைவனின் ஆற்றலை அறிய முயலுவது சித்தர் மரபு சார்ந்ததாகும். யோகத்தின்மூலம் கிடைப்பது பேரின்பம் என மனவெளிதனில் பட்டினத்தாரின் மனம் சிறகடிக்கின்றது.                   
               
                ஆசை என்ற கயிற்றினால் சுழற்றி விடப்பட்ட பம்பரம்போல உடலினைக் கருதும் பட்டினத்தார் , சீவனைத் தஞ்சமடைவதுதான் விடிவு என முடிவெடுக்கின்றார். பூமியில் மனித இருப்பு என்பது நிலையற்றது என்பதைக் குறிப்பிட  ` இறுதியில் சட்டகம் சுட்ட எலும்பாகும்` என்கிறார். தாயின் வழியே உயிராக வெளிப்பட்ட உடல் வளர்ந்து ,பின்னர் இறப்பது என்பது இயற்கையின் விதியாகும். எனினும் `தான்` அல்லது ஈகோ வின் முனைப்பினால் மரணத்தினை ஏற்றுக் கொள்ளவியலாத பட்டினத்தாரின் மனம் எதிர்மறையாக வெளிப்பட்டுள்ளது. ஊற்றைச் சரீரத்தை ஆபாசக்/ கொட்டிலை ஊன்பொதிந்த/ பீற்றல் துருத்தியைச் சோறிடும்/ தோற்பையைப் பேசரிய/ காற்றில் பொதிந்த நிலையற்ற/ பாண்டத்தைக் காதல் செய்தே/ எனத் தன்னையே விமர்சனம் செய்துகொள்ளும் பட்டினத்தாருக்கு உடல் கேவலமாகப்படுகின்றது. மதங்கள் மனித உடல்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களைப் பட்டினத்தார் ஏற்றுக் கொள்கின்றார்.

    பூமியில் மனித இருப்பு என்பது முழுக்க உடல் சார்ந்தது. மொழியினால் உருவான சமூகமயமாக்கல் சமூகத்தின் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளது. மனித உடல் மொழியினால் தனக்கு வெளியே பரந்திருக்கும் நிலமும் வெளியும் குறித்த புரிதல்மூலம் பிரபஞ்சத்தைக் கண்டறிந்தது. இயற்கையிறந்த பேராற்றல் பற்றிய கருத்தினைக் கட்டமைத்த மதங்கள் மனித உடல்களையும் அதிகாரம் செய்கின்றன.  இயற்கையின் உந்துதலால் ஆணுடலும் பெண்ணுடலும் சேர்ந்து துய்க்கும் பாலியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மறுஉற்பத்தியில் ஈடுபடும் ஆற்றல்மிக்க பெண்ணுடலை வெறுமனே போகப்பொருளாகச் சுருக்கிப் பாலியல் கொண்டாட்டத்தினைக் கட்டமைத்த ஆண் மேலாதிக்க மனம் இன்று வரை வலுவாக உள்ளது..
   
     இயற்கையான பாலியல் துய்ப்பை விடுத்து ஆண் மனம் புனைந்திட்ட பெண் பற்றிய பிம்பங்கள் பட்டினத்தாருக்கு எரிச்சல் தருகின்றன.. எனவே அவர்  பெண் பற்றிய மாற்றுப் பிரதியை உருவாக்கினார். பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாமல் அவளை வேறுபட்ட உறுப்புகளின் தொகுதியாகப் பார்த்துக் கிளுகிளுப்படையும் ஆண் மேலாதிக்க மனநிலையைத் தகர்க்க முயன்றுள்ளார். கயல் போன்ற கண்கள் எனப்  பெண்னைப் பாராட்டப்படும் நிலைக்கு மாற்றாகப் பீளை ஒழுகும் கண்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கச்சித் திருஅகவல் பகுதியில் பெண்ணின் உறுப்புகள் குறித்து ஆண் மனம் கட்டமைத்துள்ள புனைவுகள் சிதலமாக்கப்பட்டுள்ளன.

                   வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
                  பாரினில் இனிய கமுகுஎனப் பகிர்ந்தும்
                  வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
                  துப்பு முருக்கின் தூயமலர் என்றும்
                  உள்ளும் குறும்பி ஒழுகும் காதை
                  வள்ளைத் தண்டின் வளம் வாழ்த்தியும்
                  …   …   …
                  சொற்பல பேசித் துதித்து நீங்கள்
                  நச்சிச் செல்லும் நரக வாயில்

பெண்ணைப் பற்றிப் புலவர்கள் புனைந்துரைத்து உருவாக்கும் பிரேமைக்கு மாற்றாகவும் பட்டினத்தாரின் பாடல்களைக் கருதலாம். பெண் பற்றிய  பட்டினத்தாரின் கண்டனம் முழுக்க ஆண்  மேலாதிக்க மொழியில் அமைந்துள்ளது. பெண்ணை மனுஷியாகப் பார்க்காமல் உடலின் உறுப்புகளாகப் பார்க்கும் பார்வை அவரின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.
      
       பட்டினத்தாரின் காலகட்டத்தில் விலைமகளிர் எங்கும் பரவியிருந்தனர் .` நினைவெழுந்தால் நல்ல மாதருண்டு இந்த மேதினியிலே` என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள் அதனை உறுதி செய்கின்றன. `பெண்ணாகி வந்த மாயப் பிசாசு`  எனத் திட்டுவது பொருளைப் பறிக்கமுயலும் பெண்ணைத்தான். பெண் மயக்கத்தில் மயங்கித் திரிந்த ஆண்களின் நிலையைக் கண்டிப்பது பட்டினத்தாரின் பாடல்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது. எத்தனை பேர் நட்ட குழி/ எத்தனை பேர் தொட்ட முலை/ எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்/ நித்தநித்தம் பொய் பேசும் புலைமாதர்..எனப் பட்டினத்தார் சித்திரிக்கும் பெண் விலைமகளிர்தான். அன்றைய காலகட்டத்தில் பெரு வழக்காக இருந்த விபசாரத்தை முன்னிறுத்தி ஆண்களிடம் எதிர்மறையான கருத்தினை உருவாக்க விழைந்துள்ளார்
.
        பெண்களைக் கேவலப்படுத்துவது பட்டினத்தாரின் நோக்கமல்ல. பெண்ணை இயல்பானவளாகக் கருதாமல் பாலியியல்ரீதியில் அணுகும் ஆண் மனநிலையைக் கண்டனம் செய்ய முயன்றவர் ,பெண்ணுடலை விமர்சனம் செய்து மாற்றுக் கருத்தினை உருவாக்க முயன்றுள்ளார். `நல்ல மங்கையரைத் தாய் போல் கருதுகினறவர் ஞானம் மிக்கவர்` என்ற பட்டினத்தாரின் பார்வை கவனத்திற்குரியது.

      அன்னையார் இறந்த பின்னர் துயரத்தில் வருந்திப் பட்டினத்தார் பாடியுள்ள பாடல்கள் சோகத்தின் உச்சம்.  தாய்க்கும் தனக்குமான உறவினைச் சொல்லி  அப்படிப்பட்ட தாயின் உடலுக்கா கொள்ளி வைக்கின்றேன் எனக் கதறி அழுவது அவரை மனிதனாகக் காட்டுகின்றது. துறவு மனநிலையில் வாழ்ந்தாலும் பாடினாலும் தாயின் மரணம் ஏற்படுத்தும் வேதனையைத் தவிர்க்க முடியாது என்பதற்குப் பட்டினத்தாரின் பாடல் வரிகள் சான்று.

    முடியணிந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவது கண்டும் சிவனின் அடியைப் பரவி உய்ய வேண்டுமென்ற எண்ணம் பலரிடமும் இல்லையே என்ற பட்டினத்தாரின் ஆதங்கம் நிலையாமையைப் பற்றியது மட்டுமல்ல: மனித உயிருக்கும் பூமிக்கும் இடையிலான உறவினைக் கண்டறியும் முயற்சியுமாகும்    
  
      எல்லாவற்றையும் துறந்து ஒதுங்கிப்போய் மௌனமாக உறைந்து போகாத மனநிலை பட்டினத்தாருக்கு வாய்த்திருந்தது. அவருடைய சொந்த அனுபவங்களின் விளைவாகச் சிவனை நாடிச் சித்தராக மாறினாலும் தனது  கருத்துகளைத் துணிச்சலுடன் பாடியுள்ளார். தமிழ்த் தத்துவ மரபில் தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கியுள்ள பட்டினத்தார் இறைவனைப் பற்றிப் பாடியுள்ளதைவிட மனிதனைப் பற்றிப் பாடியவை அதிகம். சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகளை விசாரணைக்குட்படுத்திய பட்டினத்தார் கலகக்காரராகவும் விளங்குகின்றார்.
                        தி இந்து சிறப்பு மலர்
                                               murugesapandian2011@gmail.com    

      

            

Saturday 8 November 2014

சென்னை மாநகர்வெளியில் ராஜீவ்காந்திசாலை மதிப்புரை

     சென்னை மாநகரவெளியில் ராஜீவ்காந்திசாலை
                                ந.முருகேசபாண்டியன்
  நகரம் என்பது புவியியல்ரீதியில் திசைகளெங்கும் விரிந்திடும் நிலப்பரப்பில், காங்கிரிட் காடுகளாகப் பரவியிருக்கும் கட்டடங்கள் மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களின் விருப்புவெறுப்பு சார்ந்து ஒவ்வொரு நகரமும் தனக்கெனத் தனித்த முகத்துடன் விளங்குகின்றது. இன்று பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள சென்னை நகரத்தின் பூர்வீகக்கதை விநோதமானது. சோழமண்டலம் எனப்படும் வங்காள விரிகுடாவிலுள்ள தீவுத்திடலைக் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பெனியார் 1639 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியபோது நெய்தல் நிலப்பரப்பில் வாழ்ந்த பூர்வீகக்குடிகள் யார்? ஆங்கிலேயர், கோட்டை கொத்தளம் கட்டியபோது, புனிதஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் மாபெரும் கட்டடம்தான் எதிர்காலத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்றது என யாராவது நினைத்திருக்க முடியுமா? எல்லாமே நினைவுகளின் வழியே மங்கலாகக் குழம்பித் தோன்றுகின்றன. எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ?  கோட்டையிலிருந்து அதிகாரத்தின் நெடி இன்றளவும் வீசுகின்றது. தொடக்கத்தில் ஆங்கிலேயரின் எடுபிடிகளாகக் குற்றேவல் செய்யக் குடியேறியவர்களால் கருப்பு நகரமென விரிவடைந்த சென்னப்பட்டினம் இன்று  மக்களால் ததும்பி வழிகின்றது.
                       
      கி.பி.9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் பகல்வேளையில் நரிகள் ஊளையிடுமளவு அடர்ந்த காட்டுப் பகுதியாக மயிலாப்பூர் இருந்திருக்கின்றது. இன்று  வானளாவிய கட்டடங்களால் மயிலைநாதர் கோவில் சூழப்பட்டிருந்தாலும், மக்கள் அவரவருக்கான வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ்கின்றனர். இன்னொருபுறம் கிராமப்புறத்திலிருந்து கிளம்பிச் சென்னையை நாடித் தினமும் வருகின்றவர்களை உள்வாங்கிக்கொண்டு  நகரம் இயல்பாக இருக்கின்றது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசுகின்றவர்கள்கூடச் சென்னையைப் பூர்வீகம் என்று சொல்லுமளவு சூழல் மாறியுள்ளது. என்ன இனம்? என்ன மதம்? என்ன சாதி? என்ன மொழி? போன்ற கேள்விகள் நகரத்துப் பரப்பில் அர்த்தமிழக்கின்றன. அவசரமான நகரத்து இயக்கத்தில் தனிப்பட்ட குறுகிய மனத்தடைகள் மறைகின்றன. ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக உறைந்துள்ள சாதியப் பெருமை அல்லது அடையாளங்களை கிராமத்திலே விட்டுவிட்டுத்தான் நகருக்குள் நுழைய வேண்டியுள்ளது. அலுவலக நேரத்தில் பிதுங்கி வழியும் மின்சார ரயில்களும், நகரப் பேருந்துகளும் அவரவர் சாதிய அடையாளங்களைச் சிதலமாக்குகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் இயங்கினாலும், ஒவ்வொருவரின் புழங்குவெளியும் தடைகள் அற்று விரிந்து கொண்டே போகின்றது.  சென்னை மாநகரம் தன்னை நாடி வந்தவர்களைக் கை விடாது என்பதற்கு அடையாளமாக மேன்சன்களும் மெஸ்களும் உள்ளன. கண்களில் கனவுகளுடன் கையில் சிறிய தொகையுடன் சென்னை நகருக்குள் நுழைந்தவர்கள் சில பத்தாண்டுகளில் மாபெரும்  ஸ்டோர்ஸின் முதலாளிகளாகும் விந்தை நகரத்தில்தான் சாத்தியம்.
               
      பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள். சாப்ட்வேர் கம்பெனிகள் எனப் புதிய வகைப்பட்ட கம்பெனிகளால் சென்னையின் முகம் மாறிக் கொண்டிருக்கின்றது. கட்டட வேலை செய்யப் பீகார், ஓடிசா, ஆந்திர மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் நகருக்குள் கணிசமாகக் குவிந்துள்ளனர். ஏதோவொரு வட இந்தியக் கிராமத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், மனைவி, பெற்றோர் பசியைப் போக்கிடக் கட்டுமான வேலையில் கடினமாக உழைக்கின்றவர்களின் துயரத்தினுக்கு அளவேது? ஓப்பீட்டளவில் சிரமமான வாழ்க்கை எனினும் நகரம் யாரையும் கைவிட்டு விடவில்லை. எல்லோருக்கும் ஏதாவது செய்திட வாய்ப்புவசதிகள் உள்ளதனால், நகரம் கவர்ச்சிகரமாக உள்ளது. அதியற்புதப் புனைகதையில் வரும் அண்டரண்டப் பறவை போலச் சென்னை நகரம், திசைகள் எங்கும் தனது பிரமாண்டமான சிறகுகளை விரித்துள்ளது.

        . சதுப்பு நிலங்களும் ஏரிகளும் வயல்களும் நிரம்பிய கடற்கரையைத் தழுவிய கிராமங்கள்  சென்னையைச் சுற்றி முன்னர்  இருந்தன.  நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய  கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதலமாகிக் கொண்டிருக்கின்றன  இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ்காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இருவேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ்காந்தி சாலை விளங்குகின்றது . பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாயமுருகன் எழுதியுள்ள ராஜீவ்காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும். கடந்த நானூறு ஆண்டுகளாகச் சென்னை நகரம் அடைந்துள்ள வளர்ச்சியில், இன்றைய சூழலில் ஐ,டி.கம்பெனிகள் எத்தகைய போக்குகளை முன்னிறுத்துகின்றன என்பது பற்றிய நாவலின் விவரிப்பு, அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்ளடக்கியுள்ளது.

     கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப்பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகினுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள்  அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது. கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமையாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின்மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன்றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன. முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தில் இன்று விரைத்து நிற்கும் அடுக்குமாடிக் கட்டடத்தினைத் தள்ளி நின்று ஏக்கத்துடன் பார்க்கிறவர்களின் நடப்பு வாழ்க்கை, துயரம் தோய்ந்துள்ளது. தொண்ணூறுகளில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம் எல்லாவற்றையும் சந்தைக்கான சரக்காக மாற்றிவிட்டது. இன்னொருபுறம் வலுவடைந்துள்ள நுகர்பொருள் பண்பாட்டில் செம்மஞ்சேரி போன்ற கிராமங்கள் வேகம்வேகமாக அழிகின்றன.
     
        நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்பவும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணியாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கின்றது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடைபெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மனஅமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம்பெண்கள் ,காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன்  வாழ முயலுகின்றனர். வரவுக்கு மீறிய செலவு, நுகர்பொருள் மீதான ஈடுபாடு பலரையும் பாடாய்ப்படுத்துகின்றது. இதனால் வாழ்வதற்குத் தேவையான மகிழ்ச்சியை இழக்கின்றனர். கணவன் மனைவிக்கிடையிலான இயல்பாக இருக்கவேண்டிய உறவினைக்கூடப் போற்றாத ப்ரணவ் கம்பெனியின் வேலைப்பளுவில் மூழ்கித் தனது குடும்பத்தைப் புறக்கணிக்கிறான். அவனது மனைவி சுஜாவிற்குக் கௌசிக்குடன் ஏற்படும் தொடர்பின் விளைவுகள் கொடூரமானவை. பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப்பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார்.  சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும்  அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள்  பற்றிய விவரிப்பு ஐ.டி,நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

       ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும்  பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும்  மனிதர்கள்.  இப்படியெல்லாம்  தங்களுடைய  வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன்  என வாசிப்பினில் நாவல் யோசிக்க வைக்கின்றது.

    வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. இளைஞர்கள், காலங்காலமாக இந்திய வைதிக சநாதனம் உருவாக்கியுள்ள விதிகளை எளிதில் புறக்கணிக்கின்றனர். சாதியை மறுக்கும் காதல் திருமணம் எனப் புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

              மனப்பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டடதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. ராஜீவ்காந்தி சாலையில் விரைந்திடும் வாகன்ங்கள் ஒருபுறம் எனில் வீட்டைவிட்டுத் துரத்தப்படும் மனப்பிறழ்வினர் இன்னொருபுறம். விரையும் வாகனங்களின் டயர்களில் சிக்கி மரணமடையும் எளிய மனிதர்களின் துயரம் அளவற்றது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாக தேடி அலையும் மனிதர்கள் மனப்பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கின்றார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவியலாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது. மனித இருப்பில் ஒவ்வொரு கணமும் பொங்கி வழியும் கசப்பின் வழியே, மனித இருப்புக் குறித்துத் தோன்றும்  கேள்விகள் முக்கியமானவை.

      சென்னை மாநகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சிக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்கின்ற இழப்புகள் தவிர்க்கவியலாதவை. தினமும் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வரும் மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் எதுவும் உள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது. இத்தகு சூழலில், நகரமயமாதலினால்  சிதலமாகிக் கொண்டிருக்கும்  நகரத்து வாழ்க்கை பற்றிய விநாயக முருகனின் கவலை அல்லது அக்கறை புனைகதையாகியுள்ளது,. நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்து கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ்காந்தி சாலை  நாவல் நீள்கின்றது எனவும் வாசிக்கலாம்.


  ராஜீவ்காந்தி சாலை (நாவல்). விநாயக முருகன். உயிர்மை பதிப்பகம். சென்னை .பக்கம்:328: விலை:ரு.240/- :தொலைபேசி:044-24993448
                                               தி இந்து 2014
             
 

     
                                                                     



சுதீர் செந்திலின் கவிதைவெளி கட்டுரை


சுதீர் செந்திலின் கவிதை வெளி



மொழியின் அதிகபட்ச சாத்தியங்களைப் படைப்பாக்கும் கவிதையின் வீச்சு நுட்பமானது. சொற்களைக் குடைந்து, மங்கலான மொழியமைப்பில் வெளிப்படும் நவீனகவிதை முன்னெப்போதையும்விட அர்த்தத்திலிருந்து விலகியுள்ளது. தனிமனித உணர்வு சார்ந்தநிலையில், கவிதையானது சொற்களில் இருந்து விலகித் தானாகவே வேறு ஒன்றாக வடிவெடுக்க முயலுகின்றது. மேலும் நவீன வாழ்க்கையில் பெருங்கதையாடல்கள் உருவாக்கியுள்ள கசடுகள்மீது கவிதை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுவரை மரபுரீதியில் உருவாக்கப்பட்ட அளவுகோல்கள் தகர்க்கப்படும் சூழலில், சுதீர்செந்திலின் கவிதைகள் தனித்து விளங்குகின்றன. வாழ்வின் நெருக்கடி, சூழலின் இறுக்கம் காரணமாக இருப்பிலிருந்து அந்நியப்படும் மனதின் வெக்கையானது சுதீரின் கவிதை வரிகளாக வெளிப்பட்டுள்ளது. ஒன்றுமற்ற ஒன்று (2002) கவிதைத்தொகுப்பு மூலம் அடியெடுத்து வைத்த  செந்தில் குமார் என்ற சுதீர்செந்தில் உயிரில் கசியும் மரணம்(2008), யாருடைய இரவெனத் தெரியவில்லை(2010), பூப்படைந்த மலர்களைக் கனியச் செய்கையில்(2011) என அடுத்தடுத்துத்  தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சுதீர் தனது விரலிடுக்கில் கசியும் வாழ்க்கையைக் கவிதையாக்க முயலுகின்றாரா?  யோசிக்க வேண்டியுள்ளது .
              சுதீர் தனது கவிதைகள்மூலம் சித்திரிக்கும் உலகில் எப்பொழுதும் அவரே உரையாடி கொண்டிருக்கின்றார். அவருக்குச் சக மனிதர்களுக்குச் சொல்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன. அவர் தனக்குள் படிந்துள்ள யதார்த்தவாழ்வின் வண்டலையும் விசாரிப்புகளையும் கவிதை வரிகளாக்கியுள்ளார். மரபுரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ள புறவுலகின்மீது அவருக்கு நிரம்பக் கேள்விகள் தோன்றுகின்றன. முடிந்தால் இரண்டு அவுன்ஸ் மார்பீஸ் பிராந்தி அருந்திவிட்டுச் சுதீருடன்  பேச்சைத் தொடங்கலாம்.  சுழல் ஏணியில் ஏறி உள் வெளி என்ற போதம் அற்றுச்  சுற்றிச்சுழலும் விநோத உலகினுக்குள் பயணித்துப் பார்க்கலாம். அதற்கான எல்லாச் சாத்தியப்பாடுகளும் சுதீரின் கவிதைகளுக்குள் பொதிந்துள்ளன. எல்லாமே அலகிலா விளையாட்டுத்தான். ஆதிசிவன் உன்மத்த நிலையில் ஆடிய ஆட்டம், கவிதை வரிகளாக மாறினால், விளையாட்டைத் தொடங்க வேண்டியதுதான்.
           நவீன மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்களும் சவால்களும் அளவற்றவை. புத்திரீதியில் வாழ முயலும் சுதீரின் கெட்டிக்காரத்தனம்  நசிவடையும் சூழலில், கசப்பும் சலிப்பும்  கவிதை வரிகளில் பொங்கி வழிகின்றன. வாழ்வின் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சியின் மீதும் நம்பிக்கை இழந்த சுதீர் ஒன்றுமற்ற உலகில் தனது இருப்பினை அடையாளப்படுத்த முயலுகின்றார். தனது சொந்த வாழ்வின் பரவசங்கள், சோகங்கள், வெறுப்புகள் இழப்புகள் எனத் தன்னிலை சார்ந்து விரியும் கவிதைகள் வழியே உருவாக்க விழையும் உலகு வரையறைக்குட்பட்டது. பெரும்பாலான இளம் கவிஞர்களின் தடத்திலேயே சுதீரின் தொடக்ககாலக் கவிதைகளும் உள்ளன.                      
            என்
            சுவாசப் பையை
            என் குழந்தை
            எடுத்துக் கொண்டது
            என்
            கால்களை எரித்து
            என் மனைவி
            உணவு சமைக்கிறாள்                
      குடும்பம் என்ற அமைப்புடன் வேறுபடும் ஒற்றையான ஆணின் மன முரண் தன்னுடலே சிதைக்கப்படுவதாகக் கற்பிதம் செய்கின்றது. உறவினர் வட்டத்தில்  இருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு அவதிப்படும் ஆணின், வலியான துயரத்தைப்  பதிவு செய்வது இக்கவிதையில் நிகழ்ந்துள்ளது.
       மனித இருப்பின் ஆதாரமான காமம் உடலில் நிகழ்த்துகின்ற விந்தைகள் அளவற்றவை.  ஒரு குறிப்பிட்ட கணத்தில் உடல் வேறு  மனம் வேறு என்ற பேதமற்றுக் காமம் ஏற்படுகின்ற வேதியியல் மாற்றங்கள் நுட்பமானவை. காமம் உடல் சார்ந்து  உருவாக்கும் மனப்பதிவுகள் கவிதையின் வழியே புனைவின் விளையாட்டை உருவாக்குகின்றன. காமத்தை நூலறுந்த பட்டமாகக் கருதும் சுதீரின் மனம் ததும்புகின்றது.
            எரிக்கப்படாத
            காமத்தின் வேர்களில்
            இருந்து
            எப்படியும் துளிர்த்து விடுகிறது
            ஒருபோதும்
            மணம் வீசாத பூக்கள்
   காமம் பற்றிய மரபு வழிப்பட்ட போக்கினுக்கு மாற்றாகக் காமத்தின் விளைவு மணம் வீசாத பூக்கள் என்பது சுயம் சார்ந்த சலிப்பின் வெளிப்பாடு. இரவும் பகலுமற்ற /காலவெளியில்/நம்முடன்/நாம் கலப்போம் எனக் காத்திருக்கும் சுதீரின் தேடல் ,இன்னொரு முனையில் மரணத்துடன் உறவாடுகின்றது. வேட்கை கவிதையில் பாலியல் விழைவினை முன்னிறுத்திய நிலை மாறுகின்றது. காமத்தின் உச்சநிலையில் மரணம் இசைந்திடுவது ஒருவகையில் விநோதமானது.
            கண்மூடி
            யோசிக்க யோசிக்க
            தலைசுற்றித் தலைசாய்க்க
            முடிவிலாது அழைக்கும்
            மரணம்
   காமமும் மரணமும் கையற்று மயங்கும் நிலை, சுதீரின் முதல் தொகுப்பிலேயே வெளிப்பட்டுள்ளது.
    2010-ஆம் ஆண்டில் வெளியான யாருடைய இரவெனத் தெரியவில்லை கவிதைத்தொகுப்பு, சுதீரின் கவிதையாக்கத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைப் பதிவாக்கியுள்ளது. விழுமியங்கள் அர்த்தமிழந்த நிலையில் எதன்மீது நம்பிக்கை கொள்வது ? கடந்தகாலம் என்ற  வெளியில் நடைபெற்ற சம்பவங்களின் நினைவுத் தொகுப்பாக இருக்கும் நடப்பு வாழ்க்கையில் எதைச் சார்ந்து இருப்பது? எல்லாக் கேள்விகளும் அடிவானத்துக்கப்பால் பறந்திடும் பறவைகளாக மிதக்கின்றன .இத்தகு சூழலில் சுதீரின் கவிதையுலகு வெறுமையாக விரிகின்றது. குடும்ப உறவுகளில் கசியும் கசப்பின் சுவையைப் பருகியபடி காமம் பற்றிப் பேசும் சுதீருக்கு மரணத்தின்மீது தீராத பயம். பெரும் காமத்தில் மூழ்கித் தவிக்கும் வேளையில், மரித்துப் போனாலும் பெண்ணின் அல்குல் மயிர்க்கால்களில் உயிர்த்திருப்பேன் என நம்புவது அபத்தமன்றி வேறு என்ன?
    பூமியில் பிறப்பு என்ற நிலையில் நுழையும்போது, மரணம் தவிர்க்கவியலாத தொடர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம் துயரத்தினால் வாடுகின்றது. காலந்தோறும் மரணத்தை முன்வைத்துப் புனையப்பட்ட தத்துவங்களுக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் அளவேது?  இன்றைய வாழ்க்கைப் பரப்பில் மந்தையிலிருந்து பிரிந்து வாழ்ந்திடும் சூழலில், தனிமனிதரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் மன உளைச்சலுக்குக் காரணமாக அமைகின்றன. மரணத்தைவிட மரணபயம் பெரும்பான்மையினரை உலுக்குகின்றது. காண்பதற்கு ஒன்றுமில்லாவிடில் விளக்கை அணைப்பதுபோல பூமியில் இருப்பதற்கு மனம் விரும்பாவிடில் மரணத்தைத் தழுவலாம் என்பது சிலரின் கருத்து. மரணத்தின் நிழல் தொடர்ந்திடும் வேளையில் என்ன செய்ய முடியும்? மரணத்தின் வாசம் பரவும் சூழலில் சுதீரின் கவிதை வரிகள் கவனத்திற்குரியன.
      மரணத்தை முத்தமிடுதல் /அத்தனை தித்திப்பானது எனத் தொடங்கும் கவிதை மரணத்தையும் துரோகத்தையும் ஒருங்கிணைக்கிறது. ருசித்துப் பார்த்தது உண்டா/ மரணத்தின் சுவையை என்ற கேள்வி எளிதில் புறக்கணிக்கக்கூடியது அல்ல. மரணம்/ அத்தனை ருசியாக இருக்கிறது என முடியும் மரணச்சுனை கவிதை அழுத்தமானது. காலியான பாத்திரத்தில் ததும்பி வழியும் வெறுமையைப் போல உடலில் கசிந்து கொண்டிருக்கும் மரண வாசத்தின் மீதான ப்ரியம் உயிரோட்டமானது.
      மரணத்தின் பிம்பம், உயிர்த்திருக்கும் மரணம், மரணத்தின் ஒத்திகை,        மரணத்தின் நகர்தல்,  மரணத்தின் கதை எனச் சுதீரின் கவிதைகள் மரணத்தை முன்வைத்து விரிந்துள்ளன.
           தூக்கம் என்பது
            உறக்கம் மட்டுமா
            அது
            மரணத்தின் ஒத்திகை
            மரணம் என்பது
            தூக்கத்தின் தொடர்ச்சி
   மரணம் பற்றிய கருத்தியலைக் கவிதையாக்க முயன்றது வெறுமனே குறிப்புகளாகத் தேங்கி விட்டது. என்றாலும் தனக்கும் மரணத்துக்குமான உறவினைச் சுதீர் எளிய வரிகளில் கவிதையாக்கியுளார்.
                  ஒவ்வொரு நாளும் முகத்தில்
                  தரிசிக்கும் மரணத்தை
                  பவுடர் பூச்சால் மறைத்தபடி
                  இதழ்களில் புன்னகையை             
                 நெளிய விடுகிறேன் 
   கண்ணாடியில் தினமும் பார்க்கும் முகத்தில் தெரியும் மரணம் என்பது கவிதையை வேறு தளத்தினுக்கு மாற்றுகின்றது. கண்ணாடிக்குள் தெரியும் பிரதிபிம்பம் ஸ்பரிசிக்க இயலாதாததுபோல மரணமும் மறைந்திருக்கின்றது. ஒருவனின் முகம்தான் அடையாளம் என்ற நிலையில், மாயபிம்பமாக ஒளிர்ந்திடும் முகத்தில் மரணத்தின் சாயல் படிந்திருப்பதாகக் கவிஞருக்குத் தோன்றுவது விரக்தியின் உச்சம்.
      உயிரில் கசியும் மரணம் என்ற தொகுப்பின் தலைப்பு கவனத்திற்குரியது. எனினும் மரணத்தை முன்வைத்துச் சுதீர் சொல்ல விழைந்தவை பிந்தைய கவிதைகளில் ஒன்றுமற்றதாக உருமாறுகின்றன. காமம், காதல் ஆகியவற்றுடன் மரணத்தினை ஒத்திசைந்து தத்துவநோக்கில் ஆராய்கின்றனவாகக் கவிதைகள் மாற்றம் பெற்றுள்ளன. பாலியல் வேட்கையை முன்னிலைப்படுத்தும் நிலையில் கவிதைகள் புதிய திசைவழியில் பயணிக்கின்றன. மரணமும் காமமும் ஏதோ ஒரு புள்ளியில்  ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் வேதியியல் மாற்றங்கள் கவனத்திற்குரியன.
              வெயில் காயும் கொக்குகள்  கவிதை வரிகள், ஆண்-பெண் உறவின் சாத்தியப்பாட்டினை உடல்ரீதியாக மாற்றுகின்றது.  கடந்து செல்லும் பெண்ணுடலைத் தொடரும் நினைவின் வழியே மனம் புனைந்திடும் உலகு வெளியெங்கும் மிதகின்றது.            
           காற்றும் ஒலியும்
      `      புயலாயும் உணர்வாயும்
            மாறியபின்
            என் உடல் பொசுங்க
           முத்தமிட்டாய்
            பூமியின் சுழற்சி
            ஒரு கணம் நிற்க
            வெடித்த வெடிப்பில்
            உன்னுள் புகுந்தேன்
    பாலியல் வேட்கையின் விளைவாக வெளிப்பட்டுள்ள   வரிகள் அந்தப் பனிக்காலப் புலர்தலில்/ வெண்கொக்குகள்/ வெளியெங்கும்/ வெயிலில் காய்ந்து கொண்டிருந்தன என முடிகின்றன. அடக்க முடியாத காமம் உடலில் இருந்து பொங்குவது  மன வதையாகியுள்ளது.
       சூரியனும் நிலவும் கவிதையில் எதிரிணையின் வேட்கைக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. காதல் அல்லது காமம் எதுவாகினும் மனம் புனைந்திடும் காட்சிகள் வெளியெங்கும் மிதக்கின்றன. தன்னை மறத்தல் என்பது காலங்காலமாக யோகிகளின் முயற்சி மட்டுமல்ல. தாந்திரிக வழியில் உடலைப் பூசித்தவர்களின் நிலையும் அதுதான். ஒருநிலையில் உடலைச் சுமந்து கொண்டிருப்பதாகத் தோன்றும்போது , உடலை மறந்து வேறு நிலையை அடைவது பேரின்பமாகக் கருதப்பட்டது. சக உடல்மீது அத்துமீறலின் அதிகாரத்தைக் கட்டமைக்கும் சூழலில், எதிர்பாலினரின் உடலை நேசிப்பது மேன்மையானது. சுதீருக்குக் கூடல் என்பது தன்னை அறிதலாக உள்ளது.
                  முயக்கத்தில் மயங்கிய
                  அவன் கண்களில்
                  ஒரு முலை சூரியனாகவும்
                  இன்னொன்று நிலவாகவும்
                  சுடர்ந்து கொண்டிருக்கையில்
                  அவர்களுக்கு நேர் மேலே
                  வானத்தின் உச்சிக்கு
                  நெருப்புக் கோளம் வந்திருந்தது
      பெண்னை நிலவாக உருவகிக்கும் தமிழ்மரபில், அவளது பால் அடையாளமான முலைகளைச் சூரியனாகவும் நிலவாகவும் கருதுவது விந்தையானது. பெண்ணுடலின் வழியே இயற்கையை தர்சிக்கின்ற மனோபாவம் கவிதையில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. ஒரே நேரத்தில் வெம்மையும் குளிர்ச்சியையும் தரும் அதியற்புதம் பெண்ணுடலில் நிகழ்வது, காம விழைவினை உச்சநிலைக்கு இட்டுச் செல்கின்றது.
    பொதுவாகக் காதலும் காமமும் பற்றிய சுதீரின் அறிதல் எளிய வரிகளில் வெளிப்பட்டுள்ளது. ஆயிரம் கால்களோடு/ நகர்ந்து செல்லும்/ மேகத்தில்/ கரையும் காதல்/ கடலாய்த் தளும்புகிறது/ கடல் போல் பெருகும்/ காமத்தில்/ ஊறும் நீர்த் துளிகள்/ பனியாய் மிதக்கின்றன. தண்ணீர் வெப்பத்தினால் ஆவியாகி, குளிரினால் பனிக்கட்டியாகி, பின்னர் மீண்டும் தண்ணீராகி நடைபெறும் மாயாஜாலம் போல காதலும் காமமும் சூழலினால் வேறுவேறு நிலைகளை அடைகின்றன. எது காதல் எது காமம் எனத் துல்லியமாக வரையறுத்துவிட முடியாதபடி வாழ்க்கை நகர்கின்றது. காதல் மேமையானது போலவும் காமம் கீழானது போலவும் சமூகம் கட்டமைத்திருப்பது அபத்தமாகின்றது.
          காதலென்பது காதல்தான்/ காதலென்பது காதலே இல்லை/ காதல் படும் பாட்டை../ காதல் பார்த்துக் கொண்டிருக்க/ காமம் நீள்துயில் கொண்டிருக்கிறது எனச் சுதீரின் கவிதை வரிகள் நீள்கின்றன. வேட்கையின் வழியே உடல்களின் அறிதல் பற்றிய பிரக்ஞையைக் கவிதை நகலெடுத்துள்ளது. மனித வாழ்க்கையின் ஆதாரமான காமமும் மரணமும் சுதீர் செந்திலின் தேடலில் முக்கிய இடம் வகிக்கின்றன.
     வெளிச்சம் ஏற்படுத்தும் உணர்வினுக்கு மாற்றாக இரவு புதிர்களின் தோற்றுவாயாக உள்ளது. இருள் ,அச்ச உணர்வினை உருவாக்குவதுடன் நினைவுகளை முடக்கிப் போடுகின்றது. உடம்பின் வாசனையான காமத்தின் வீச்சம் எங்கும் பரவும் வேளையில் மனித உயிர் உறைகின்றது. உறங்குவதற்கு மட்டுமல்ல இரவு என்ற கருதுகோளின் வழியே இரவை உடலெங்கும் அள்ளிப் பூசிக்கொள்ளத் தோது உள்ளது. யாருடைய இரவெனத் தெரியவில்லை எனக் குழம்பும் சுதீரின் மனம் அற்புதமான கவிதை வரிகளாகியுள்ளது.
            யாருடைய இரவெனத் தெரியவில்லை/ அத்தனை வெளிச்சமாக இருக்கிறது/  புளிப்பின் சுவை போலவும்/ தீர்க்க முடியாத வன்மத்தைப் போலவும்/ கோப்பை மதுவில்/ வழியும் கசப்பைப் போலவும்/ இந்த இரவு சுடர்கின்றது/ இரவின் ஆடையைப் பறித்துக் கொண்டவனிடம்/ மன்றாடுகிறேன்/ என் இரவைத் திருப்பித் தரும்படி/ வெற்று மதுக் கோப்பைகளில்/ நிரம்பி வழியும்/ இந்த இரவு/ என்னை நீங்கிச் செல்கிறது/ மதுவின் வாசனையோடு. இரவு குறித்த சுதீரின் விவரணை மங்கலான நிலையில் ததும்புகின்றது. தனக்கான இரவு என்ற நிலையிலிருந்து விலகி, இரவை வெளிச்சம் எனவும் சுடர்கின்றது எனவும் அவதானிக்கும்போது இரவு வேறு ஒன்றாக உருமாறுகின்றது. ஒருபோதும் ஸ்பரிசிக்கவியலாத இருள் பற்றிய மர்மம் சூழ்கின்ற கணம், விந்தையான மொழியில் கவிதையாகியுள்ளது.   இரவுக்கும் தனக்குமான உறவினைப் போதமற்ற நிலையில் விவரிப்பது சுவராசியமானது.
    தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒப்பனை கவிதை நுட்பமான தளத்தில் விரிகின்றது
                  எவ்வாறு அறிது கொண்டாய் இந்த முகத்தை
                  அரிதாரம் இல்லாத முகத்தை எனக்குப் பிடிக்காது
                  நீ சொல்கிறாய்
                  அரிதாரத்தைக் கலைத்துவிட்டு வாவென
                  மேலும் நீ கேட்பதைக் கொடுகிறேன் என்றும்
                  எவ்வாறு என் அரிதாரத்தைக் கலைப்பது
                  உனக்காகக் கலைக்க முயல்கிறேன்
                  நீ உன் அரிதாரத்தைக் கலைத்துவிட்டு வா
     ஒப்பனை என்ற சொல்லினை முன்வைத்துச் சுதீர் புனைந்திடும் உலகு மனவெளிக்கு நெருக்கமானது. யதார்த்ததில்அரிதாரம் ஒருபோதும் கலைக்க முடியாத நிலையில், வாழ்க்கை கசிந்து கொண்டிருக்கின்றது. இயல்பு எது அரிதாரம் பூசிய முகம் எது எனப் பகுக்கவியலாமல் நாளும் முகத்தின் பாவனை மாறுகின்ற நெருக்கடியில் அசலானது எதுவென்ற கேள்வி தோன்றுகின்றது. எல்லாம் துல்லியம் என்ற பிரக்ஞையின் அபத்தம் குறித்த விசாரணை கவிதை வரிகளாகியுள்ளது.  கண்ணாடி கவிதையும் முழுமை அடைந்த நிலையில் இருப்பினை விசாரிக்கின்றது.
     பொதுவாகச் சுதீர், தனது கவிதைகளின் வழியே  தன்னைக் கண்டறிவதுடன் சூழலையும் கேள்விக்குள்ளாக்க முயலுகின்றார் இருப்பின் அபத்தமும். சூழலின் வெக்கையும் , உருவாக்கும் தொட்டாச்சிணுங்கி மனநிலையின்      வெளிப்பாடான வெறுமையும் சலிப்பும் சுதீரின் கவிதையாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.     
      இரண்டாயிரமாண்டுப் பழமையான தமிழ்க்கவிதைப் பரப்பில் இவைதான் கவித்துவச் செறிவுடையவை என வரையறுப்பது சிரமம். என்றாலும் ஏதோவொரு அளவுகோலினால் கவிதையை மதிப்பிடுவது தொடர்கின்றது. கவிதை எழுதுவது வேறு கவிஞனாக இருப்பது வேறு என்பது நிதர்சனம். அடுத்தடுத்தத் தொகுப்புகளின் வழியே தனக்கான கவிதையினை அடையாளம் காண்பது ,சுதீருக்குக் கைவரப் பெற்றுள்ளது. பல்வேறு மனநிலைகளில் கொந்தளிக்கும் மன உணர்வுகளைக் கவிதைகளாக்கும்போது ஏற்றஇறக்கமான வடிவங்களைச் சுதீர் கையாண்டுள்ளார். சில கவிதைகள் தத்துவத்தின் வாகனமாக உள்ளன: சில கவிதைகள் காட்சிப் படிமங்களாக வெளிப்பட்டுள்ளன: சில வெறுமனே சொற்களாகத் தேங்கியுள்ளன. என்றாலும்  மொழி ஆளுகையில் சுதீரின் கவித்துவம் தனித்துவமானது. கவிதைப் பெருவெளியில் இன்னும் செல்ல வேண்டிய பயணம் குறித்த பிரக்ஞையுடன் சுதீரின் கவிதையாக்க முயற்சி தொடர்கின்றது..
     
                   உயிர்மை,2014. அக்டோபர்

     
                             
               
       


                                    

மக்களை துரத்தும் மஞ்சள் பிசாசு

மக்களைத் துரத்தும் மஞ்சள் பிசாசு
                              ந.முருகேசபாண்டியன்
                                         murugesapandian2011@gmail.com

      தங்கம் என்ற சொல் புதிர்த்தன்மை மிக்கது. பூமிக்குள் இயற்கையாகப் பொதிந்திருக்கும் உலோகத்தினைத் தோண்டியெடுத்து அதற்குத் தங்கம் எனப் பெயர் சூட்டி, அதை அடைவதற்காக மனிதர்கள் படுகின்ற பாடுகளுக்கு அளவேது? யோசிக்கும்வேளையில் இரும்புக்கும் தங்கத்திற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. என்றாலும் மனிதகுல வரலாறு முழுக்க ஏதோ ஒருவகையில் தங்கம் என்ற உலோகத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது விநோதம்தான். அக்ஷ்ய திரிதியை நாளில் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் வாழ்க்கை வளமடைந்துவிடும் என நகைக்கடைகளின் முன்னர் கூடுகின்றவர்களின் நம்பிக்கையை என்னவென்று சொல்ல? பொதுவாகத் தங்கம் வாங்கிச் சேர்ப்பது வளமான வாழ்விற்கு ஆதாரம், சமூக மதிப்பு என்ற நிலையில் பலரும் தங்கத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றனர்..
      நெல்,கோதுமை போன்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது, தங்கம் மனித வாழ்க்கைக்கு ஆதாரமான பொருள் அல்ல. இந்த சாதாரண உண்மை எல்லோருக்கும் தெரிந்தது என்றாலும், தங்கம் என்ற மஞ்சள் உலோகம்  பொருளாதாரரீதியில் ஆளுகை செலுத்துகின்றது.
     தங்கம், உலோகம் என்ற நிலையிலிருந்து மாறி மக்களின் அன்றாட வாழ்வில் உன்னத இடம் பெற்றுள்ளது. தாய் தன்னுடைய குழந்தையின்மீது ப்ரியத்தை வெளிப்படுத்த தங்கமே என்கிறார். இளம்பெண்ணின் அழகினை உயர்வாக வர்ணிக்க தங்கச்சிலை போன்ற அழகு என்று சொல்வது வழக்கினில் உள்ளது. மேன்மையான குணமுடையவர் என்பதைக் குறிக்க` ஆள் தங்கமானவர்`என்றும் நேர்மையானவர் என்பதைக் குறிக்க ` சொக்கத்தங்கம்` என்றும் சொல்வது தங்கம்மீது சுமத்தப்பட்டுள்ள அர்த்தச்சுமைகள்.
       வெறுமனே மஞ்சளாக மின்னும் உலோகமான தங்கம் சமூகரீதியிலும் மேலாதிக்கம் பெற்றுள்ளது. பூமிக்குள் இருந்து கிடைக்கும் எரிபொருளான பெட்ரோலுடன் ஒப்பீடும்போது தங்கத்தின் பயன்பாடு மிகவும் அற்பமானது. என்றாலும் வரலாறு முழுக்க தங்கம் அதிகாரத்துடன் நெருக்கமாகி பொருளாதாரரீதியில் உலகையே ஆட்டிப் படைக்கின்றது. தனிமனித நிலையில் ஒவ்வொருவரையும் கனவுலகில் ஆழ்த்துகின்ற மஞ்சள் பிசாசு, பலரையும் தனது காலடியில் மண்டியிட வைக்கின்றது.
            உலோகம் என்ற நிலையில்  தங்கம் அடர்த்தியான மஞ்சள் வண்ணம் காரணமாக ஒளிர்கின்றது. அது இரும்பினைப் போலத் துருப்பிடிப்பது இல்லை: செம்பினைப் போலப் பச்சைக்களிம்பு படர்வதில்லை. எப்படியோ தங்கத்தின் பிரகாசத்தில் ஒருவிதமான மாயத்தன்மை கசிந்து கொண்டிருக்கின்றது. அதனுடைய வசீகரிக்கும்  மஞ்சள் ஒளியினால் ஈர்க்கப்பட்ட மனிதர்கள் காலந்தோறும் தங்கவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் பிசாசினைக் கட்டித் தழுவிட மக்கள் விழைவது,  பொருளாதாரரீதியில்  தங்கத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சமூகமதிப்புதான் காரணம்.
       வேதகால இந்தியாவில் பழக்கத்திலிருந்த தங்க நாணயத்தின் பெயர் `கிஷ்கம்`. யாகம் வளர்க்கும் பிராமணர்களுக்குத் தட்சணையாகத் தங்கம் தர வேண்டும்  என வேதம் வரையறுத்துள்ளது. சங்க இலக்கியத்தில் பொன் பற்றிய குறிப்பானது பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. நற்றிணையில்  குறிப்பிடப்பட்டுள்ள `பொன்செய் கொல்லன்` என்பது தங்கநகை செய்யும் ஆசாரியையே குறிக்கின்றது. கி.பி.2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரம் காப்பியத்தில் கண்ணகியை `மாசறு பொன்னே ` என வருணிக்கும் கோவலன் இறுதியில் கொல்லப்படுவதற்குப் பொன்னாலான சிலம்பு காரணமாக உள்ளது. கிரேக்கப் பழங்கதையில் வரும் தொட்டதை எல்லாம் பொன்னாக்கும் வரம் பெற்ற மைதாஸின் கதை, தங்கம் பற்றிய எதிர்மறைச் சிந்தனையின் வெளிப்பாடு.
         சித்தர்கள் ரசவாதம்மூலம் இரும்பினைத் தங்கமாக்கும் வித்தையை அறிந்திருந்தனர் என்று நம்பி, போலியான ஆட்கள் பின்னால் அலைந்து சொத்தை இழந்து பித்துப்பிடித்து அலைந்தவர்கள் தமிழகத்தில் உண்டு.
      உலக வரலாறு என்பது ஒருபுறம் நாடுகளைக் கைப்பற்றுவதற்கான போர்களில் இருந்து தொடங்குகின்றது. இன்னொருபுறம் தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக நடைபெற்ற போர்கள்? பண்டைய  இந்தியாவில் கோவில்களில் தங்க விக்கிரங்களாகவும், அவற்றுக்கு அணிவிக்கப்படும் தங்கநகைகளாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருந்த விலை மதிப்பற்ற பொருட்கள்தான் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களைக் கவர்ந்திழுத்தன. கஜினிமுகமது இந்தியாவிற்குள் பதினேழு முறை படையெடுத்து வந்தது தங்கத்தைச் சூறையாடுவற்குதான்.
       ஐரோப்பியர்கள் கி.பி.16-ஆம் நூற்றாண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணமானதற்கு முக்கியக் காரணம் தங்கவேட்டைதான். இன்றளவும் ஆப்பிரிக்காவிலுள்ள தங்கச்சுரங்கங்களில் அதிகாரப் போட்டி தொடர்கின்றது. அமெரிக்காவின் கையிருப்பில் மட்டும் 1980-ஆம் ஆண்டில் 24,542 டன்கள் தங்கம் இருந்தது. டாலரின் மதிப்பு சர்வதேசரீதியில் உயர்வாக இருந்தமைக்குக் காரணம் தங்கத்தின் சேமிப்புதான். வல்லரசு நாடாக இன்று அமெரிக்கா செய்யும் அடாவடி அரசியலதிகாரத்திற்குப் பின்புலமாகத் தங்கம் உள்ளது.

      தங்கத்தைச் சொந்தம் கொண்டாடுவதற்கான போட்டியில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கைக்கு அளவேது? வரலாறு முழுக்க சிந்தப்பட்ட  மனித ரத்தத்தில் தங்கத்தின் வாசனை உள்ளது. மஞ்சள் உலோகத்திற்காக ஒருவரையொருவர் கொன்று குவித்தது ,தங்கத்தின் வரலாற்றைச் சொல்வதாகும்.  ஒருவகையில் மஞ்சள் பிசாசு மக்களைப் பேராசைக்காரர்களாக மாற்றுகின்றது: கஞ்சர்களாக்குகிறது: ஈவிரக்கமற்றவர்களாக்குகிறது. அடிப்படையில் வேதியியல் பண்புகளைக் கொண்ட மூலகமான தங்கத்தைச் செல்வத்திற்கான ஆதாரமாக்கியது சமூக அமைப்புதான்.
       வளமான வாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் தங்கம் இன்றைய சமூகத்தின்மீது செலுத்தும் அதிகாரம் குறித்துக் கேள்விகள் தோன்றுகின்றன. மனித வாழ்க்கைக்கு ஆதாரமான உணவு, உடை, இல்லம் போன்றவற்றுக்கும் தங்கதிற்கும் தொடர்பு எதுவுமில்லை. மனிதர்களுடைய மேனாமினுக்கு, பகட்டு. ஆடம்பரம் போன்ற இரண்டாம்நிலைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தங்கத்திற்கு நிகர் எதுவுமில்லை.
         தங்கத்தின் விலை மதிப்பு புதிர்த்தன்மை மிக்கது. 1926-ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2/-. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரு.2,820/-. தங்கத்தின் விலை நாள்தோறும் ஏறிக்கொண்டே போனாலும் தங்கநகையின் மீதான  மோகம் இந்தியாவில் குறையவில்லை. இளம்பெண்ணின் எதிர்காலம் அதாவது அவளுடைய  திருமணம் தங்கத்துடன்   சம்பந்தப்பட்டிருப்பது பிரச்சினையை அதிகப்படுத்துகின்றது. இத்தகு சூழலில் தங்கமயமான எதிர்காலம் என்பதே தங்கத்துடன் தொடர்புடையதாக இருப்பது வேடிக்கையாக உள்ளது.
         காரல் மார்க்ஸ் தங்கத்தினை ` மஞ்சள் பிசாசு` என வருணித்தது பொருத்தமானது. மனிதர்களை மயக்கும் மஞ்சள் பிசாசு ஏற்படுத்தியுள்ள புனைவுகளும் விநோதங்களும் முடிவற்றுப் பொங்கி வழிகின்றன. மனிதர்களை அதிகாரம் செய்யும் மஞ்சள் பிசாசு இடைவிடாமல் துரத்துகின்றது. தப்பித்தல் சாத்தியமா?

      ***   ***   ****

சங்க இலக்கியம் கட்டுரை

நவீன தமிழ்க் கவிதைகளும் செம்மொழிக் கூறுகளும்

                                                                                      ந.முருகேசபாண்டியன்
                                                                                                               mpandi2004@yahoo.com



                                மனித நினைவுகளின் வழியே கடந்த காலத்தை மீட்டுருவாக்கும் மொழியானது, வரலாற்றைச் சாத்தியப்படுத்துகின்றது. சமூகமயமாக்கலின் அடிப்படையில் மொழி, காலந்தோறும் பண்பாட்டுப் பதிவாகவும் விளங்குகின்றது. மனிதனின் ஆறாவது புலனாக விளங்கும் மொழியின் மூலம் சமூகமயமாக்கல் துரிதமாக நடைபெறுகின்றது. பண்டைய இலக்கியப் படைப்புகள் தொடங்கிப் பதிவாகியுள்ள விழுமியங்களின் தொடர்ச்சியானது, அம்மொழியின் வளத்திற்குச் சான்றாக உள்ளது. தொன்மை வாய்ந்த செம்மைமிக்க மேன்மையான அம்சங்கள், செவ்வியல் தன்மையுடையதாக்க் கருதப்படுகின்றன. இன்று பேச்சு வழக்கிலிருந்து அழிந்திருந்தாலும், பண்டைக்காலத்தில் வளமான இலக்கியப் படைப்புகளுடன் சிறந்திருந்த மொழிகளும் செவ்வியல் தன்மையுடையனவாகக் கருதப்படுகின்றன. பொதுவாகச் செம்மொழி எனத் தனித்த அங்கீகாரம் ஒரு மொழிக்கு அரசினால் வழங்கப்படுவது அரசியல் பின்புலமுடையது. பன்னெடுங்காலமாகப் பாரம்பரியமான  இலக்கியப் படைப்புகளினால் அறியப்படும் மொழியானது செவ்வியல் தன்மையுடையதாகக் குறிப்பிடப்படுகின்றது. மேலை இலக்கியத்தின் தாக்கத்தினால் உருவாக்கப்பட்ட செம்மொழி என்ற கருத்தியலினால் அடையாளப்படுத்தப்படும் போதுதான் தமிழ் போன்ற இரண்டாயிரமாண்டுப் பழமையான மொழிக்குச் சிறப்பு எனக் கருதப்படுவது ஒருவகையில் விநோதம்தான். தமிழின் தொன்மையான இலக்கியமான சங்க இலக்கியமும் காப்பியங்களும் மறுவாசிப்பினுக்குட்படும் வேளையில்,பண்பாட்டு மாற்றங்களுக்கப்பால்       சங்கக்கவிதை மரபின் தொடர்ச்சியை நவீன வாழ்கையில்  கண்டறிய முடிகின்றது.  சங்கப் படைப்புகளில் இடம் பெற்றுள்ள செம்மொழிக் கூறுகள், இன்றைய நவீன கவிதையிலும் தொடர்வது, வாழ்க்கையின் ஆதாரமான விஷயங்களில் பெரிய மாற்றமில்லை என்பதை உணர்த்துகின்றது.

                ஒரு மொழி பல நூற்றாண்டுகளாக மக்களிடையே வழக்கினில் உள்ளதெனில், அம்மொழியில் வெவ்வேறு காலகட்டங்களில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகளில் ஒத்திசைவைக் கண்டறிய முடியும். வடிவம் சார்ந்த நிலையில் புதிய வடிவங்களை ஏற்றுக்கொள்கின்ற சுழலில், கருத்துரீதியிலும் தொடர்ச்சி வெளிப்படுகின்றது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழ் மொழி சார்ந்த தமிழர் வாழ்க்கையின் தொன்மையான அம்சங்கள் சங்கப் படைப்புகளில் பரவலாகப் பதிவாகியுள்ளன.  தமிழ் மனம் காலந்தோறும் எவ்வாறு நுட்பமாக இயங்கியுள்ளது என்பது, சங்க இலக்கியம் தொடங்கி, நவீன கவிதை வரையிலும் முக்கியமானது. செம்மொழி இலக்கியமாகக் கருதப்படும் சங்கப் படைப்புகள் இன்றளவிலும் மொழியில் செலுத்துகின்ற ஆளுகை கவனத்திற்குரியது. சங்க மரபு, பாரம்பரியம், தொன்மை போன்றவற்றின் அடிப்படையில் செவ்வியல் அம்சங்களைக் கண்டறியலாம்.
       செவ்வியல் மொழிகள் எனற வரையறைக்கு ஆதாரமாக விளங்குகின்ற படைப்புகள் முக்கியமானவை. பண்டைய கிரேக்க, ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிப்  படைப்புகளில் புராணம், தொன்மம், கட்டுக்கதை, தொன்மம், இயற்கையிறந்த நிகழ்ச்சிகள், கடவுளர்களின் அதியற்புத ஆற்றல்கள் சார்ந்து இறையியல் அம்சங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டிருந்தது. சங்க இலக்கியப் புலவர்கள் வைதிக, அவைதிக மரபு சார்ந்த புராணிகக் கதைகளைப் புறந்தள்ளிவிட்டு, நடப்பியல் சார்ந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தந்தனர். கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, விண்ணுலகம் பற்றிய கற்பனைகளுக்கு முன்னுரிமை தராமல், காதலையும் வீரத்தையும் போற்றியது தமிழ்ச் செவ்வியலின் தனித்துவம்.
         
                நிலமும் வெளியும் பற்றிய புரிதலுடன் விரியும் சங்கப் புலவர்களின் ஐந்திணை நிலப் பாகுபாட்டிலான திணைசார் வாழ்க்கையை முன்னிலைப்படுத்திய சங்கத்திணை மரபு இன்றளவும் தொடர்கின்றது. பூமியில் மனித இருப்பின் மீதான நம்பிக்கை, துணிவுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம், சக உயிரினங்களை நேசித்தல், இய்ற்கையைப் போற்றுதல் எனச் சங்கப் பாடல்களின் பொதுமைப் பண்புகள் குறிப்பிடத்தக்கன. சங்கப் பாடல்களுடன் ஒப்பிடத்தக்க பிற செவ்வியல் மொழிப் படைப்புகள் மதம் சார்ந்து, தங்கள் குழுவினர் நலனுக்கு முன்னுரிமை தந்தபோது, ‘ யாதும்  ஊரே யாவரும் கேளிர்என்ற வரியின்மூலம் உருவாக்கப்பட்ட தமிழ்த் தொல் மனம் ஒப்புவமை அற்றது. பொது நலன் சார்ந்து உலகம் குறித்த க்கறையுடன் பாடும் மரபு, இன்று வரை தமிழில்  தொடர்கின்றது.

`               தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதி தர முனைந்தபோது, மொழியிலாளர் வகுத்தளித்த வரையறைகளின் அடிப்படையில் அணுகும் நிலை உருவானது. ஒவ்வொரு மொழியும், அம்மொழியில் எழுதப்பட்டுள்ள படைப்புகளும் தனித்துவமானவை; பிற மொழிகளுடன் கறாராக ஒப்பிட இயலாதவை. என்றாலும் ஒற்றைத்தன்மையுடன் விதிகளின் அடிப்படையில் அணுகி, செம்மொழி என வரையறுப்பது நடைமுறையில் உள்ளது. ஒரு மொழியைச் செம்மொழி என வரையறுக்கப்  பின்வரும் பண்புகள் அடிப்படைகளாகக் கருதப்படுகின்றன. அவை: தொன்மை, தனித்துவம், பொதுமை, நடுநிலைமை , தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலையறிவு, பிற மொழித் தாக்கமின்மை, இலக்கிய வளம், உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித்துவம், மொழிக் கோட்பாடு.

                                தமிழைப் பொறுத்தவரையில் செம்மொழி எனக் குறிப்பிட தமிழுக்கே உரித்தான தனித்துவமான அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
*உலக மொழிகளில் எதிலும் காணப்படாத திணைக் கோட்பாடு தமிழுக்கு மட்டும் உரியது என்ற நிலையில் சிறப்பிற்குரியது.
*சங்க காலத்தில் வாழ்ந்த பல்வேறு இனக்குழுக்களின் பண்பாட்டுக் கூறுகளை அப்படியே ஏற்றுக்கொள்வது தமிழ் திணை மரபின் தனித்துவம்.

*இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான இலக்கிய வளத்துடன், காலந்தோறும்             தொடர்ந்து காத்திரமான இலக்கியப் படைப்புகள் தமிழில் வெளியாதல்.

*இலக்கியப் படைப்புகளின் அடிப்படையில் வளமான பண்பாட்டு மரபினுக்குச் சொந்தமானவர்கள் என்ற கருத்து, தமிழர்களிடம் தலைமுறைகள்தோறும் கடந்து செல்லுதல்.

*ஒப்பீட்டளவில் பிற மொழிப் படைப்புகளைவிடத் தனித்து விளங்கும் படைப்புகளைத் தமிழ் மொழி  கொண்டிருத்தல்.

*தமிழுக்கு உரித்தான தொடர்ச்சியான இலக்கிய பாரம்பரியம், பண்பாட்டு ஆளுகை

                 சங்க காலம் முதலாக யாப்பிலக்கண மரபில் எழுதப்பட்ட தமிழ்ச் செய்யுள்கள், காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்துள்ளது. யாப்பறிந்துப் பாடல்கள் புனையும் புலவர் கூட்டம் 1960-களில்கூட தமிழகத்தில் செல்வாக்குடன் விளங்கியது. பாரதிதாசன் கவிதை மரபினர், திராவிட இயக்கக் கருத்தியலுடன் மரபுக் கவிதையாக்கத்தில் தனித்திருந்தனர். பாரதியினால் வசன கவிதை தமிழுக்கு அறிமுகமானாலும், பெரிய வீச்சாகப் புதுக்கவிதை பரவிடாத சூழலில், 1959-இல் சி.சு.செல்லப்பா தொடங்கிய எழுத்து பத்திரிகையில் வெளியான புதுக்கவிதைகள் மெல்ல அதிர்வை ஏற்படுத்தின. மேலை இலக்கியச் செல்வாக்கின் காரணமாகத் தமிழில் உருவான புதுக்கவிதை அபத்தம், இருண்மை, விரக்தி போன்ற தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தந்தது. தொடக்ககாலத்தில் கோவேறுக் கழுதை, விஜிடேபிள் பிரியாணி எனக் கேவலமாகக் குறிப்பிடப்பட்ட புதுக்கவிதை, காலப்போக்கில் பரவலாகக் கவனம் பெற்றது. இன்று தமிழில் கவிதை என்றால் அது புதுக்கவிதையையே குறிக்கின்றது. இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை மரபின் நீட்சி இன்றளவும் வீர்யத்துடன் தொடர்கின்றது.  பெண்ணியக் கவிதைகள், தலித்தியக் கவிதைகள், ஈழப் போராட்டக் கவிதைகள், சுழலியல் கவிதைகள், தனிமனித அகம் சார்ந்த தத்துவக் கவிதைகள் எனக் கருத்தியல்ரீதியில் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சி  நீள்கின்றது.

      செம்மொழியின் அடிப்படையான பதினொரு பண்புகளும் நவீனத் தமிழ்க் கவிதையில் பொருத்துவது சாத்தியமற்றது. இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் எல்லாவிதமான அடையாளங்களும் அழிக்கப்பட்டு ஒற்றைத்தன்மை வலியுறுத்தப்படுகினறது. இன்னொருபுறம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை, பாரம்பரியமான வாழ்க்கை முறையில் சிதலத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைக்குத் தமிழ் மொழியும் தமிழ்ப் பண்பாடும் விதிவிலக்கு அல்ல. இத்தகைய நிலையில் சங்க இலக்கியத்தில் காணப்பெறும் செம்மொழிப் பண்புகள்  அல்லது மரபின் தொடர்ச்சி நவீன கவிதையில் எங்ஙனம் வெளிப்படுகின்றன என்பது முக்கியமானது. மிகப் புதியதில் மிகப் பழையதின் சாயல் இருக்கும் என்பது நவீனத் தமிழ்க் கவிதைக்கும் பொருந்தும்.

தொன்மை: சிறு கோட்டுப் பெரும் பழம்என்ற இயறகைக் காட்சியை இளைஞியின் மனதில் ஏற்பட்டுள்ள காமத்துக்கு உவமையாகச் சொல்லும் சங்கப் பாடல்மூலம் இயறகைக்கும் மனிதர்களுக்குமிடையிலான நெருங்கிய உறவினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. பொதுவாகச் சங்கப் பாடல்கள் இயற்கைப் பின்புலத்துடன் மனித இருப்பினை விசாரிகின்றன. இயற்கையைச் சூழல் என்ற சொல்லால் அறிந்திருந்த பண்டைத்தமிழர், சூழலைப் பேணியதுடன், தங்களையும் காத்துக் கொண்டனர். தான் சிறுமியாக இருந்தபோது, செடியாக இருந்து, இன்று பெரிய மரமாக வளர்ந்துவிட்ட புன்னை மரத்தைத் தன்னுடன் பிறந்தவளாகக் கருதி, அம்மரத்தின் அடியில் தனது காதலனைச் சந்திக்க மறுக்கின்றாள் இளம்பெண் (நற்றிணை:172). தன்னை விட்டுப் பிரிந்துபோன காதலனை நினைந்து வருந்தும் இளம்பெண், `` இரவு நேரத்தில் தோட்டத்தில் இனிய துணையாக விளங்கிய வேங்கை மரத்திடம்கூடவா பிரிவு சொல்லக் காதலன் மறந்துவிட்டான்`` என நினைக்கின்றாள்.(குறுந்தொகை: 260) இயற்கையுடன் தன் மனநிலையை இயைபுபடுத்துவதன்மூலம், மனதைத் தேற்றுவது இயல்பாக நடந்தேறியுள்ளது. இத்தகைய தொன்மையான மனநிலையின் தொடர்ச்சி நவீன கவிதையிலும் வெளிப்பட்டுள்ளது
        மனிதர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு காலந்தோறும் தொடர்கின்றது. மரம், செடி, கொடியைத் தனக்கு நெருக்கமாகக் கருதும் மனநிலை, சங்கத்திணை மரபின் தொடர்ச்சியாக நவீன கவிதையிலும் வெளிப்படுகின்றது. இன்றைய வாழ்க்கையானது பதற்றத்தையும் அவசரத்தையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஏதோ ஒன்றின் பின்னால், வேகம்வேகமாகப் பின் தொடரும் நிலையில், ஒவ்வொருவரும் சூழலிலிருந்து அந்நியப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் இயற்கையுடன் தன்னை இயைபுபடுத்தும் சண்முகம் சரவணனின் கவிதை வரிகள் சங்கமரபின் நீட்சியாக நீள்கின்றன.
               பின்பனிக் காலத்தில்
               அன்று மரங்களிடையே
               சுமையற்று அலைந்து திரிந்தேன்
               ஒலியின் வடிவில் பறவைகளும்
               சிள் வண்டுகளும் உருவற்று
               என் நடையின் வேகம் கூட்டின
               எண்ணங்கள் ஒருங்க
               இளைப்பாறாது உடல் அமைதி கொள்ள
               நடந்து நடந்து ஆனந்தமுற்றேன்
               ஆளரவமற்ற நீண்ட வெளி
               பெருமரங்களின்
               இசையில் அமைதி கொள்ள
               நேற்றையும் நாளையும்
                துறந்து அமைதியுற்றேன்
                           (துறவியின் இசைக்குறிப்புகள்)

   இயற்கையை இசையாக உருவகிக்கும் கவிதையானது, தமிழ்த் தொல் மனம் சார்ந்து விரிந்துள்ளது. சஙகத் திணை மரபின் தொடர்ச்சியானது, கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள பல கவிதைகளில் நுட்பமாகப் பதிவாகியுள்ளது.

தனித்துவம்: நெடிய கவிதை மரபின் தொடர்ச்சியானது, நவீன கவிதையாக வெளிப்படுவது தனித்துவமானது. ஐந்திணை நிலம் சார்ந்து அகம் புறம் என்ற எதிரிணைகள் மூலம்  சூழலை விளங்கிக்கொள்ள முயன்றது, கட்டமைக்கப்பட தமிழர் வாழ்க்கையின் தனித்துவம். காதலும் வீரமும் அற்ற நிலை என்பது தமிழைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் இல்லை. ஆண் பெண் உறவில் இரு மனங்களுக்கிடையில் தோன்றும் காதல் என்பது வெளியெங்கும் மிதக்கின்றது. மனசில் ஈரம் ததும்பிடும் காதல் நினைவுகளின் வழியே தன்னை அறிதல் நுட்பமாக நிகழ்கின்றது.
               “நினைவுகள்” கவிதையின்மூலம் எஸ்.வைத்தீஸ்வரன் காதலின் வேட்கையை வெதுவெதுப்பான மொழியில் நினைவு கொள்கின்றார்.
                 நினைவு மறைந்த பின்னும் அதன் ஒலி
               தித்திக்கின்றது உள்ளத்தில்
               மலர்வாடிய பின்னும்
               மணம் கமழ்கின்றது ஞாபகத்தில்
               உறக்கம் கலைந்த பின்னும்
               கனவுகள் நீடிக்கிறது நெஞ்சத்துக்குள்
               விடை பெற்றுச் சென்ற பின்னரும்
               உன் நேசம் பிரிவதில்லை ஒருக்காலும்
               நீ மறைந்த பின்னும்
               உன் காதல் என்னைத் தழுவிக் கொள்கிறது
               காற்றைப் போல
                                           (கால்-மனிதன்)

    பூமியில் உடல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் கருதும் சங்க மரபில், எதிர்ப்பாலின் மீதான காமம் கவிதையாக வடிவெடுத்துள்ளது. உடலை இழிவானதாகக் கருதி, பிறவி வேண்டாத நிலையை முன்னிறுத்தி, புலன்களின் வாயிலான இன்பத்தைக் கீழானதாகக் கருதி ஒதுக்கும் மதம் சார்ந்த பார்வைக்கு மாற்றாக, காதல் என்பது எப்பொழுதும் தமிழ் மரபில் உயர்வானதுதான். இக்கவிதையில் காதல் என்பது  காற்றைப்போல மனித மனத்தில் சுகமாகத் தழுவிச் செல்லுவது நடந்தேறியுள்ளது.
   சங்க மரபின் தொடர்ச்சியாகக் காதலை மையமிட்டுக் குவியும் சக்திஜோதியின் கவிதை வரிகள் வாசிப்பில் மயிலிறகினால் வருடுவதுபோல விரிகின்றன. பிரிவு, காத்திருத்தல் எனப் பெண்ணின் மனம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள் காலந்தோறும் தொடர்கின்றன. அன்பின் வெளிப்பாடாகவும் நேசத்தின் குரலாகவும் பரிணமிக்கும் பெண்ணின் மனப்புதிர்கள் கட்டமைக்கும் உலகம், பூமியின்மீது நெருக்கம் கொள்ளச் செய்கின்றன. வேர் பரப்பிய நினைவுகள் என்ற கவிதையின் வழியே சக்திஜோதி புனையும் காட்சி வசீகரமானது.
         ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலையென
         சலனப்படுத்துவதில்லை நீரின் போக்கினை
         என்றறிந்திருந்த மனம்
         விம்மிக் கசிகின்றது
         பழுத்த மஞ்சளும்
         வெளிர் பச்சையும் கலந்து
         மையம் அகன்று முனை குறுகிய அந்த இலை
         நதியில் மிதந்து கொண்டிருக்க
         அவன் கண்களை நினைவூட்டியபடியிருந்தது
         என்னுள் விருட்சமென வளரத் துவங்கின
         அவனது வேர்கள்
         புலனிகப்படாமல் கிளைத்துப் பரவின
         நிலமெங்கும்
         நதியின் போக்கில் செல்லும் அவ்விலை
         கண்களிலிருந்து மறைய
         நிசப்தமாகிறது காற்று
                     (காற்றில் மிதக்கும் நீலம்)
இலை, நீர், வேர் என இயற்கை சார்ந்து, மன விழைவினைக் காமம் கசிந்திட பதிவாகியுள்ள வரிகள் ஈரத்துடன் ததும்புகின்றன. பெண் மனதின் வேட்கையைக் கவிதையாக்கியுள்ள சக்திஜோதியின் வரிகள் அக மரபிலானவை

தாய்மை: செம்மொழி என்ற வரையறைக்கும் தாய்மைப் பண்பிற்குமான தொடர்பு ஆய்விற்குரியது. சக உயிர்கள் மீதான  நேசம் பூமியில் மனித இருப்பிற்கான ஆதாரம் என்ற நிலையில், தாய்மைப் பண்பு முதன்மையிடம் பெறுகின்றது. சங்க காலத்தில் தொடங்கி இன்று வரையிலும் மனித உறவின் மேன்மையானது தாய்மைப் பண்பில் பொதிந்துள்ளது. ஈழத்துக் கவிஞரான ஃபஹீமா ஜஹானின் அழிவின் பின்னர் கவிதை வரிகள் வெளிப்படையாகத் தாய்மைப் பண்பினைச் சித்திரிக்கின்றன.
                 வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்
               அடிக்கட்டை மீது
               அமர்ந்துள்ளது பறவை               
               இன்று அதனிடம்
               பறத்தலும் இல்லை
               ஒரு பாடலும் இல்லை
               அதன் விழிகள் எதிரே
               வெயில் காயும்
               ஒரு பெருவெளி விரிந்துள்ளது
               அந்த மனிதர்களைச் சபிக்கிற்தோ
               தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ
                                       ( ஆதித் துயர்)
      தாய்மைப் பண்பின் பதிவினுக்குக் கலாப்ரியாவின்  கவிதை அருமையான சான்று. எந்த வகையிலும் கவிஞர் பொறுப்பில்லை என்ற நிலையிலும் வழி தவறிப் பறக்கும் ஒற்றைப் பறவையின் சோகக் குரலில் இயற்கையின் துயரமாகப் பொங்கி வழிகின்றது. எல்லாம் முடியும் என்ற அதிகாரக் குரலின் மறு பக்கமாக மனிதன் கையறு நிலையில் விதி எனக் கலங்கி நிற்பது இருப்பின் அபத்தம்.
                  அந்திக் கருக்கலில்
                  இந்தத் திசை தவறிய பெண் பறவை
                  தன் கூட்டுக்காய்
                  தன் குஞ்சுக்காய்
                  அலைமோதிக் கரைகிறது
                  எனக்கதன் கூடும் தெரியும்
                  குஞ்சும் தெரியும்
                  இருந்தும்
                  எனக்கதன்
                  பாஷை புரியவில்லை
                        (கலாப்ரியா கவிதைகள்)
      இயற்கை சார்ந்த நிலையில் குஞ்சுக்காக அலைமோதுகின்ற தாய்ப் பறவையின் வலியைக் கவிதையாக்கியுள்ள கலாப்ரியாவின் வரிகள் சோகத்தின் உச்சம்.
இலக்கிய வளம்: கவிதை என்பது இலக்கிய ரசனை சார்ந்து, மனதில் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஒருபோதும் முடிவற்ற காட்சிகளின் வழியே பதிவாகிடும் சொற்களின் சேர்க்கை உருவாக்கும் கிளர்ச்சி அளவற்றது. ஒவ்வொரு கவிஞரும் படைத்திடும் கவிதையின் வளமானது இலக்கிய ஆக்கத்தில் நுட்பமானது. இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை மரபில் இன்று நூற்றுக்கணக்கான கவிஞர்கள் இலக்கியச் செறிவுடன் கவிதை படைக்கின்றனர். இதுதான் கவிதையின் வளம் எனத் துல்லியமாக வரையறுப்பதற்கு இயலாத நிலையில், தொடரும் கவிதை மரபு தனித்து விளங்குகின்றது. பருகத் தந்த சௌந்தர்யம் எனக் கவித்துவ ஆலாபனை செய்யும் ரவிசுப்ரமணியனின் வரிகள் வாசிப்பினில் உற்சாகம் அளிக்கின்றன.
            தியானிக்கும் தபஸியாய் அமர்ந்திருந்தேன்
            மூங்கில் சதங்கையின் முதல் அசைவை
            நீதான் துவக்கி வைத்தாய்
            பின்
            காற்று பார்த்துக் கொண்டது
            வெள்ளை முயல்களாய்
            குறுக்கும் நெடுக்குமாக
            தவ்விக் கொண்டிருந்தன ப்ரியங்கள்
            மன வெளியில் சுவாதீனமாய் வந்தமர்ந்து
            ஒரு கோப்பை சௌந்தர்யத்தைப் பருகத் தந்தாய்
            அன்பின் ஆழ்புலம் புரியாது
            மேல்பரப்பில் நின்றவாறு
            தவிதவித்துக் கொண்டிருந்தேன்
            நீயோ
            ரகசியக் குளத்தில் மூழ்கித்துழாவியபடி இருந்தாய்
            அமைதியான இசைமை கமழ்ந்து கொண்டிருந்தது
            ஜன்னலில் திரைச்சீலை சன்னமாய் படபடத்தபடியிருந்தது
            கடைசியில் ஒரு புன்னகையின் வரியில் எழுதிப் போனாய்
                                         (சீம்பாலில் அருந்திய நஞ்சு)

                ஒரு ஆபூர்வமான தருணம் மொழியின் வழியே அழகியலாகப் பதிவாகியுள்ளது. மௌனத்தின் இசையில் மனதின் தவிப்பை இலக்கிய வளத்துடன் ரவிசுப்ரமணியன் பதிவாக்கியுள்ளது நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது.
நடுநிலைமை: அதிகாரப் போட்டியில் மன்னர்களுக்கிடையிலான போர்கள் வலுப்பெற்ற நிலையிலும் புலவர்கள் துணிந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுவது சங்க கால அரசியலில் முக்கியமானது. அரசியலற்ற தன்மை என எதுவுமில்லை என்ற புரிதலுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகும்போது, நடுநிலைமை என்ற சொல்லின் அர்த்தம் கேள்விக்குள்ளாகிவிடும். ஒரு இக்கட்டான நேரத்தில் எது சரி எனக் கவிஞர் கருதுகின்றாரோ அதைத் துணிந்து கவிதையில் சொல்லுவது என்பது சங்கப் பாடல்கள் தொடங்கி இன்றுவரை தொடர்கின்றது. அரசியல் சார்ந்து முடிவெடுத்துத் தருக்கத்துடன் கவிதை படைக்கும் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் ஒருவகையில் நடுநிலைமையானவை என்று சொல்ல முடியும். அரசி என்ற கவிதையின்மூலம் வெக்கையடிக்கும் தமிழக அரசியல் சூழலில் மனுஷ்யபுத்திரன் சொல்ல விழைவது முக்கியமானது.
            கூந்தல் முடித்தெழுந்த அரசி
            வென்ற நகருக்குள் பிரவேசித்தபோது
      `      நகரம் ஸ்தம்பித்து நின்றது
            அரசி கண்ணுக்கெட்டியவரை
            ஸ்தம்பித்த நகரையே பார்த்தாள்
            எங்கோ ஒரு மரம் அசைந்தது
            பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது
            அது தன்னுடைய நகரமே என்று
            நிச்சயப்படுத்திக் கொண்டாள்.
            அரசி எப்பொழுதும் ஸ்தம்பிக்கும் நகரங்களை
            மிகவும் நேசித்தாள்
            ஸ்தம்பித்தல் சக்தியின் வெளிப்பாடு
            மெதுவாக கையை உயத்தி
            `இனி நகரம் வழக்கம் போல இயங்கலாம்`
            என்றபோது அதை யாரும் நம்பவில்லை
            மகத்தான அரசி
            மகத்தான மக்கள் சக்திக்கு
            மகத்தான தன் முதல் செய்தியை
            மீண்டும் வலியுறுத்துகிறாள்
`வாகனங்களும் மனிதர்களும்
            வழக்கம் போல சாலைகளிலே செல்லலாம்`
                                         (நீராலானது)
      பண்டைக் காலத்தில் அதிகாரத்தின் கோரப்பிடியில் மக்கள் சிக்கி வாடி வதங்கியபோது, புலவர்கள் நடுநிலைமையுடன் பாடல்கள் பாடியுள்ளனர். புலவர்களின் பாடல்களால் மக்களுக்கு விடிவு கிடைத்ததா என்பது தெரியவில்லை. என்றாலும் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொ’ல்லும் என்ற மரபில் தமிழ்க்கவிதைகள் பரவலாகக் கவனம் பெற்றன  இத்தகைய மரபில் மனுஷ்யபுத்திரன் நிலவும் அரசியல் சூழல் குறித்தத் தனது கருத்தினைக் கவிதையாக்கியுள்ளார். பின்னொரு காலத்தில் எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் நடுநிலைமையான கவிதைகள் எழுதப்பட்டன என்ற வரலாற்றுப் பதிவை உருவாக்கும் வல்லமை அரசி கவிதைக்கு உண்டு.

பொதுமை: செவ்வியல் பண்புகளில் ஒன்றாகக் கருதப்படும் பொதுமை அம்சமானது மரபுடன் நெருங்கிய தொடர்புடையது. எந்தவொரு விஷயத்தையும் பொதுமை நோக்கில் அணுகிடும்போது அந்தக் கவிதை புதிய வடிவெடுக்கின்றது. சூரியச்சாறு  எனத் ததும்பிடும் நரனின் கவிதை, வழக்கமான சூரியன் பற்றி மாறுபட்ட புதிய பிம்பத்தைக் கட்டமைத்துள்ளது.
            சூரியனின் ஆரஞ்சு நிறம் பற்றி
            பேசிக் கொண்டிருக்கும் போதே
            உரித்து அதன் சுளைகளைப் பங்கிட்டுக் கொடுத்தாய்
அதன் எலுமிச்சை நிறத்தைப்பற்றி…
அதன் சாறு ததும்பத் ததும்ப
இரு கண்ணாடி தம்ளர்களில் வந்தன.
            தாங்கவொண்ணா புளிப்பு
            கொஞ்சம் உப்பிட்டுக் கொள்ளலாம் நண்பா…
            விரைந்து அங்கே பார்
            இரு மலைகளின் நடுவே மறையும் சூரியன்
            ஒரு ‘’பீட்சா துண்டைப் போலுள்ளது.
            ஏன் இன்று ஒரு இந்திய சூரியன்
            இந்தியஆயிரம் ரூபாய் தாளைப்போல் இருக்கக் கூடாது நண்பா
            இந்த முறை
            உன் காதலி சூரியனைப்போல் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறாள்
இல்லையா நண்பா.
                               (எழாம் நூற்றாண்டின் குதிரைகள்)
சூரியன் பற்றிய புனைவைக் கவிதையாக்கியுள்ள நரனின் கவிதை, புதிய வகைப்பட்ட பொதுமைப் பண்பைக் கட்டமைத்துள்ளது. இயற்கையை இவ்வளவு பொதுமைப்படுத்த முடியுமா? என்ற கேள்வி தோன்றுகின்றது.

பண்பாட்டுச் சிறப்பு: பண்பாட்டுக் கூறுகள் கவிதையாக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. சூழல் சார்ந்து விரியும் பண்பாட்டு அம்சங்கள் சங்க இலக்கியம் முதலாகவே தமிழில் தளித்து விளங்குகின்றன. வாழ வழியற்றுத் தோணி ஏறிப் பயணமான தமிழர் குறித்த றியாஸ் குரானாவின் களளத்தோணி கவிதை தமிழ்ப் பண்பாட்டில் முக்கியமானது. கள்ளத்தோணி என்பது வெறுமனே தமிழர் அடையாளம் மட்டுமல்ல; காத்திரமான அரசியல் பின்புலமுடையது.
            கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில்
            அசைகிற பிறையைத் தந்து கொடியாய்
            பறக்கவிடும் கொடியை
            அறியாதவர் எவருமிருக்க முடியாது
             தோணியில் அமர்ந்த வண்ணம்,
            உணவு தேடும் கடற்பறவைகளின் சாகசங்களை
            நினைவுகூரும் குழந்தைகள் இன்றுமிருக்கின்றனர்
            மிகமிகப் பழமையான அது.
            தோணி என்று இன்று
            சொல்லப்படுவது எதுபோலவுமில்லை.
            துடுப்பு இல்லை திசைகாட்டி இல்லை.
            அது வழி தவறிப் பயணித்ததுமில்லை.
            இன்னுமது கடலின் பயங்கரம்
            நிறைந்த கொந்தளிப்புகளுக்கிடையேயும்
            சீறிப் பெருகும் பெருங்காற்றிடையேயும்
            நிலை குலைந்திடாது விடாமல் கம்பீரமாகவே
            நிற்கிறது. ஒவ்வொரு பயணியின் நெஞ்சிலும்
            ஆறாத காயத்தின் வரலாறு
            புதிதுபுதிதாய் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
                            (நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு)
 சங்ககாலத்தில் நிலவிய வறுமைச் சூழல் பற்றிப் பாணர்கள் பாடிய பாடல்கள் தமிழ்ப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழர்கள் தமிழகத்தில் வாழ வழியற்றுக் கள்ளத்தனமாகத் தோணியில் பயணித்து இலங்கைக்குப் போய்த் தேயிலைத் தோட்டம் என்ற துன்பக்கேணிக்குள் சிக்கிக் கொண்ட வரலாறு ஒருபுறம். இன்று அரசியல் சிங்கள இன மேலாதிக்கம் காரணமாகக் கள்ளத்தோணி என இழிவு படுத்தப்பட்ட மலையகத் தமிழர் நிலையினை றியாஸ் குரானாவின் கவிதை துயரம் கசியப் பதிவாக்கியுள்ளது.

உயரிய சிந்தனை: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சிந்தனை மரபின் தொடர்ச்சி இன்றளவும் தொடர்கின்றது. பல நூற்றாண்டுகளாகத் தமிழைப் பேசி வருகின்ற மக்களின் வாழ்க்கையானது, மொழியின் வழியே அரிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது. நல்ல சிந்தனைப் போக்கு  என்பது மக்களின் பண்பட்ட மனநிலையின் வெளிப்பாடு. வாழ்வின் விழுமியங்கள் குறித்துப் பதிவாக்குவது, அடுத்த தலைமுறையினருக்கு மேன்மையானவற்றைக் கடத்துவதாகும். சங்க காலத்திலிருந்து உயரிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தந்துள்ள தமிழ்க் கவிதை மரபு இன்றளவும் தொடர்கின்றது. கரிகாலனின் மின்னலின் தீண்டல் குழந்தையை முன்வைத்து எளிய முறையில் வாழ்வு பற்றிய மதிப்பீட்டினை உருவாக்குகின்றது.
            கருணையைக் கொண்டு வருகிறீர்கள்
            சொர்க்கத்தின் சாவியை
            எடுத்து வருகிறீர்கள்
            ஒரு மலரைத் தாங்கி வருகிறீர்கள்
            கேள்வியின் வெளிச்சத்தால்
            உங்கள் இருளை அழிக்கும்
            ஜோதியை ஏந்தி வருகிறீர்கள்
            அலுப்பெனும் தீரா நோயின்
            மருந்துடன் வருகிறீர்கள்
            அருவியின் குளிர்ச்சியை
            நதியின் மலர்ச்சியை
            நிலவின் ஒளியை
            நட்சத்திரங்களின் அழைப்பை
            மின்னலின் தீண்டலை
            உன்னதத்தின் முழுமையை
            அள்ளியெடுத்து அரவணைத்து வருகிறீகள்
            ஒரு குழந்தையை ஏந்தி வரும் நீங்கள்
                                    (கரிகாலன் கவிதைகள்)
      மனித இருப்புப் பற்றிய கவிதையில், குழந்தை என்பது பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்ற நிலையில் கரிகாலனின் வரிகள் நுட்பமானவை. வெறுமனே குழந்தை குறித்த மனப்பதிவுகள் போல கவிதை தோன்றினாலும், சமூக இயக்கத்தின் தொடர்ச்சியான கண்ணியாக விளங்கும் குழந்தை பற்றிய சிந்தனை பதிவாகியுள்ளது. குழல் இனிது யாழ் இனிது என்ற வள்ளுவரின் சிந்தனை மரபின் தொடர்ச்சியை கரிகாலனிடம் காணமுடிகின்றது. நவீன தமிழ்க் கவிதை தொடக்கத்தில் இருந்து தத்துவ வாகனமாக உள்ளது என்ற கருத்து கவனத்திற்குரியது.

இலக்கிய தனித்துவம்: செவ்வியல் இலக்கியம் மட்டுமல்ல எல்லா இலக்கிய படைப்புகளும் ஏதோ ஒருவகையில் தனித்து விளங்குகின்றன. பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளில் தொனிக்கும் புராதன நெடி, செவ்வியல் தன்மையுடையது என அறிய உதவுகினறது. ஆனால் உலகமயமாக்கல் காலகட்டத்தில் நுகர்பொருள் பண்பாடு ஆளுகை செலுத்தும் நிலையில், நவீன கவிதையானது இலக்கியரீதியில் தனித்து விளங்குகின்றது. அய்யப்ப மாதவனின் பாடல் இசைக்கும் கூந்தல் கவிதை வரிகள் முன்னிறுத்தும் இலக்கிய தனித்துவம் நுட்பமானது.
            இரவில் புரளும் கூந்தலில் பூக்கள்
            தானாகவே பூக்கத் தொடங்கி விட்டன
            பூத்துப்பூத்துச் சொல்ல முடியாத
            நறுமணம் பரவுகின்றது
            எங்கிருந்தோ பட்டாம் பூச்சிகள் வந்து
            மலர்களிடம் காதல் புரிகின்றன
            அறை வண்ணத் தோட்டமாகின்றது
            ஆகாயம் உள்ளிறங்கி மிதக்கிறது
            பறவைகள் கூந்தல் பற்றிய
            ரகசியப்பாட்லை இசைக்கின்றன
            நிலவில் வெண்ணிற நதிக் கோடுகளாய்
            பிரகாசிக்கிறது கூந்தல்
            மேகம் கலைந்து சிறுதூறல்
            தேகத்தை மேதுவாக
            அசைக்கிறபோது
            மலர்களும் பறவைகளும் ஆகாயமும்
            மழைத்துளியும்
            அவள் புத்தொளியில் ஸ்தம்பிக்கின்றன
            அடர்ந்த கானகத்தின் தனிமையில்
            தேவதை போல் துயிலுகின்றாள்
            கேசம் பூத்துக் கொண்டிருக்கிறது
                                  (நீர்வெளி)
   இளம் பெண்ணை முன்னிறுத்தி விரியும் அய்யப்ப மாதவனின் அதியற்புதப் புனைவு, கவிதையை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றது. தூங்கும் அழகிய பெண்ணின் கூந்தல் வழியே காட்சியாகும் கவிதை  வரிகள் செழுமையான படைப்பினுக்கு ஆதாரமாக உள்ளன.

            தமிழைச் செம்மொழியாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள அறிவிப்பின் பின்புலமாக உள்ள வரையறையானது நவீன கவிதைக்குச் சாத்தியப்படுகின்றதா என்ற தேடலின் விளைவாகச் சில கவிதைகள் மட்டும் மாதிரிக்காக இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தேர்ந்த வாசகரால் இன்னும் சிறப்பான கவிதைகளை அடையாளப்படுத்த முடியும்.  என்னால் குறிப்பிடப்பட்டுள்ள கவிதைகளைப் போல நிரம்பத் தொகுப்பதன்மூலம் புதிய பேச்சுகளை உருவாக்கலாம். இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அளவற்றவை. மரபு வழிப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் தமிழர் வாழ்க்கையில் தொடரும் நிலையில் நவீன கவிதையில் செம்மொழிக் கூறுகள் இடம் பெறுவது இயல்பானதுதான்.

                                    உயிர்மை,2014, நவம்பர்