Wednesday 30 December 2015

ஜல்லிக்கட்டு அரசியல்: வீரமா? விளையாட்டா?

        ஜல்லிக்கட்டு அரசியல் : வீரமா? விளையாட்டா?
                                                                         
        ஜல்லிக்கட்டில் பாய விடுவதற்காகக் கன்றுக்குட்டியிலிருந்து  வெளியாட்கள் பார்வையிலிருந்து தனித்து வளர்க்கப்பட்ட,  யாருக்கும் அடங்காத காளை, உசுப்பேற்றி விடப்பட்டு வாடியிலிருந்து விரட்டப்படுகின்றது. சுற்றுப் பட்டிகளிலிருந்து திரண்டு வந்துள்ள ஆண்களின் கூட்டம் ஆரவாரமிடுகின்றது. பெரிய திமிலும் திமிருகின்ற உடலுமெனக் களத்தில் இறங்கும் காளையின் கூர்மையான கொம்புகள் உக்கிரத்துடன்  காற்றில் அலைகின்றன. அந்தக் காளையை அடக்கிப் பிடிப்பது வீரம் என நம்பிக் காளையை நெருங்குகின்றவரின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் எதுவுமில்லை. இருத்தலா?  இறத்தலா? கேள்விகளுக்கு அப்பால் மனித இருப்புக் கேள்விக்குள்ளாகின்றது.

        கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வந்த மஞ்சு விரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டினுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையினால்  தென் மாவட்டங்களில் கிராமப்புறத்தினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழரின் தொன்மையான அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டினைத் தடை செய்தது குறித்துத் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு தடையை எதிர்த்து அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளது. தொன்மையானது, பாரம்பரியமாக நடைபெற்று வந்தது என்ற நிலையில் ,ஜல்லிக்கட்டினைத் தடை செய்வது நியாயமற்றது எனச் சிலர் கருதுகின்றனர்.. விளையாட்டு என்ற பெயரில் கூட்டத்தில் முரட்டுக் காளையை அவிழ்த்து விடுவதும் அதை இளைஞர்கள் தாவி அடக்குவதுமான நிகழ்வின் பின்னர் காத்திரமான அரசியல் பொதிந்துள்ளது.

       சங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் எனக் காளையை அடக்குதல் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. முல்லை நில மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு என்பதற்காக அது இன்றளவும் தொடர வேண்டுமெனப் பேராசிரியர் தொ.பரமசிவம் போன்றோர் சொல்வது சரிதானா? யோசிக்க வேண்டியுள்ளது. தமிழர் என்ற அடையாளம் மொழியினால் ஏற்படுத்தப் படுகின்றது. அப்புறம் பண்பாடு சார்ந்து உருவாக்கப்படும் தமிழ்ப் பண்பாடு என்பது முழுக்க நுண்ணரசியல் வயப்பட்டது. தொன்மை என இன்று உருவாக்கப்படும் கற்பிதங்களுக்குப் பின்னர் குறிப்பிட்ட குழுவினரின் நலன் உள்ளது. தமிழர் என்ற சொல் பயன்பாடு கூட அரசியல் சார்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் தமிழர் என்ற வரையறையில் தலித்துகள் இடம் பெறவில்லை. தமிழரின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என உருவாக்கப்படும் பேச்சின் இன்னொருபுறம் முக்கியமானது.

      எழுபதுகளில்   தென் மாவட்டங்களில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு சாதரணமாக நடத்தப்பெற்றன. பெரிய அளவில் ஜல்லிக்கட்டு பிரபலமடையவில்லை. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பிரபலமடைந்ததற்குக் காரணம்  ஊடகங்களும் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி துறையும்தான்.   பொதுவாகப் பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டினைப் பார்க்க இளைஞர்கள் உற்சாகத்துடன் கிளம்புவார்கள். பெரிதும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையில் ஜல்லிக்கட்டு முக்கிய இடம் பெற்றது. வேடிக்கை பார்க்கவும் பொழுதுபோக்கினுக்காகவும் கும்பலாகக் கிளம்புவதில் மகிழ்ச்சி பொங்கும். அன்றைய காலகட்டத்திலே ஜல்லிப்பையலுக தான் ஜல்லிக்கட்டு பார்க்க போவானுக என எங்கள் ஊரான சமயநல்லூரில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பெரும்பாலான பெண்களும் ஜல்லிக்கட்டுக்குப் போகக் கூடாது எனத்  தங்கள் பிள்ளைகளைத் தடுப்பார்கள்.

       அற்பமானது  என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ஜல்லித்தனம் என்பது ஒருவகையில் ஜல்லிக்கட்டுடன் தொடர்புடையது.  ஆனால் ஊர் மந்தையில் ஒரு கும்பலாக உட்கார்ந்து ஜல்லிக்கட்டின் அருமைபெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். சீறிப் பாயும் காளை முதலில் உரிமையாளரையும் பின்னர் அந்த ஊர்ப் பெயரையும் தாங்கி நிற்கும். போன மூன்றாம் வருஷம் அவனியாபுரம் மஞ்சிவிரட்டில் கொண்டையம்பட்டி சொக்கலால் ராமசாமி காளை நின்னு விளையாண்டுச்சு பாரு. ஒரு பயலைக் கிட்ட அண்ட விடலையே எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். அதை விடு, வயலூர் மாரி மச்சானோட மயிலைக் காளை பாலமேடு ஜல்லிக்கட்டில் என்ன போக்கு போச்சு பாரு. கொம்பை இப்படின்னு அசைச்சு பாரு. அந்த வருஷம் மட்டும் நாலு பேரைக் குத்தித் தூக்கிடுச்சில்லே? மாட்டின் நிறம், சுழி, கொம்பின் அமைப்பு, பாய்ச்சல் என மீண்டும்மீண்டும் பேசுவது ஒருவகையில் பொழுதுபோக்கு. ஜல்லிக்கட்டில் கலந்து மாட்டினை அடக்குகிறவர்கள் ஒப்பீட்டளவில் கொஞ்ச பேர்தான் இருப்பார்கள், ஆனால் ஜல்லிக்கட்டினைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிப்  பேசுகின்றவர்களுக்கு அளவேது? சிலர் ஜல்லிக்கட்டுச் சம்பவங்கள், காளைகள் பற்றிய தகவல் சேகரிப்பில் கலைகளஞ்சியமாக இருப்பார்கள். ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சுகள் ஒருவகையில் போதைதான். கிரிக்கெட் பற்றி மணிக்கணக்கில் பேசுகின்றவர்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகின்றவர்களுக்கும் வேறுபாடு பெரிய அளவில்  இல்லை.

       ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்ற என வழக்குத் தொடுத்த விலங்கு வதை தடுப்பு சங்கத்தினருக்கும், தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்களுக்கும் அடிபடையான புரிதல் இல்லை. இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டுகளில் காளைகளினால் குத்திக் கொல்லப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஒரு காளையாவது ஜல்லிக்கட்டினால் கொல்லப்பட்டது எனச் சொல்வதற்கில்லை. பொதுவாகத் தமிழகக் கிராமங்களில் வாயில்லா ஜீவன்கள் நம்மை அண்டி இருக்கின்றன என்ற இரக்க உணர்வுடன்தான் மாடுகளை நடத்துவார்கள். குடும்பத்தில் மாட்டின் இறைச்சியைக்கூட உண்ணுவது வழக்கினில் இல்லை. வயல் வேலை, வண்டியில் பாரம் இழுத்தல் என அன்றாடம் பெரிதும் பயன்படுத்தப்படும் காளைகள் கடுமையாக உழைக்கின்றன. வேகாத வெய்யிலில் சுமை ஏற்றப்பட்ட வண்டியை இழுக்க முடியாமல் திணறும் காளைகள் சாட்டை அடியை வாங்கிக்கொண்டு நகர்கின்றன. இப்படியான சித்திரவதைகள் எதுவும் ஜல்லிக்கட்டில் பாயும் காளைகளுக்கு இல்லை. கன்றுக்குட்டியாக இருக்கும் போதிலிருந்து நல்ல ஊட்டச்சத்து மிக்க தீவனம் தந்து வளர்க்கப்படுகின்றன. எனக்குத் தெரிந்த அளவில் பல வீடுகளில் காளைகளைச் செல்லப் பிள்ளைகளைப் போன்று ப்ரியமுடன் வளர்க்கின்றனர். நேரத்திற்குத் தீவனம் தந்து வளர்க்கப்படும் காளைகள் ஒருவகையில் சுகவாசிகள். அவை ஒருபோதும் பிற காளைகள் போல கடுமையான உழைப்பினில் ஈடுபட வேண்டியதில்லை. அவ்வப்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் கலந்து, யாரிடமும் பிடிப்டாமல் தப்பித்து வர வேண்டும். தொடர்ந்து பல ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாத காளைகளுக்கு ராஜமரியாதை. அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில். இன்னொருபுறம் பரம்பரையாக காளைமாடுகளை வளர்த்துவரும் குடும்பத்தினரின் கௌரவமும் ஜல்லிக்கட்டில் காளை சீறிப் பாய்வதில் அடங்கி இருக்கின்றது
   
      ஜல்லிக்கட்டில் வதைக்குள்ளாவது மனிதர்கள்தான். காளையை அடக்கப்போய் குத்துப்பட்டு இறந்து போனவரின் குடும்பம் வருமானம் இல்லாமல் வறுமைக்குள்ளாகிவிடும். காளைகளினால் கால் ஒடிந்து, குடல் சரிந்து காயம் பட்டவர்கள் சில வாரங்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் பார்க்கும்போது அந்தக் குடும்பத்தின் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும். அதிலும் பெண்கள் வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் அலைந்து திரிந்து சிரமப்படுவார்கள். உதவ யாரும் இருக்க மாட்டார்கள். அன்றாடம் வயல் வேலை, கூலி வேலை என உடல் உழைப்பு செய்து வாழும்போதே  கஷ்டப்பட்ட  குடும்பம் ஆண்  மருத்துவமனையில் படுத்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். ,ஜல்லிக்கட்டில் கடுமையான காயமடைந்தவரின் மனைவி, குழந்தைகளின் நிலை துயரமானது.. உண்மையில் ஜல்லிக்கட்டினால் மனித உடல்களுக்குத்தான் கடுமையான சேதங்கள் ஏற்படுகின்றன..

       மனிதர்களுக்கு ஏற்படும் கொடுமைகளைப் பற்றி அக்கறைப்படாத புளு கிராஸ் போன்ற அமைப்புகளின் நீலிக்கண்ணீர் அருவருப்பானது. குடிநீர் பற்றக்குறை , வேலைவாய்ப்பு இன்மை ,மின்சாரம் தட்டுப்பாடு போன்ற அடிப்படைப்  பிரச்சினைகளைத் தீர்க்க இயலாத சூழலில், ஜல்லிக்கட்டுதான் முதன்மையான பிரச்சினை போல முன்னிறுத்துவது திசை திருப்பும் வேலை. மாடுகளை இறைச்சிக்காகக் கொல்லும் கூடங்களில் அவற்றின் நெற்றியில் பெரிய சுத்தியலினால் அடித்துக் கொல்வது புளு கிராஸ் அமைப்பினுக்குத் தெரியாதா என்ன? ஜல்லிக்கட்டு கூடவேகூடாது என அழுத்தமான நீதி வழங்கிய நீதியரசருக்கு இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடுகள் படும் வதை தெரியாது என நம்புவோம் ..மாட்டின் உடலினைவிட மனித உடல் மலிவானதா என்ன? ஜல்லிக்கட்டினால் மனிதர்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர் எனத் தடை விதித்திருந்தால் தருக்கரீதியில் ஏற்புடையதாக இருக்கும்.
 
  ஜல்லிக்கட்டினை விளையாட்டு எனப் பார்த்தால் காயங்கள் தவிர்க்க முடியாதவை. குத்துச் சண்டையில் பட்ட காயங்களினால் உலகின் முத்ன்மையான குத்துச் வீரர் முகமது அலியின்  உடல்நிலை இன்று  மோசமாகி விட்டது ,மராத்தான் உள்பட பல விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் காயங்கள் ஒருபுறம், மரணமும் இன்னொருபுறம் என நிழலாகத் தொடர்கின்றன. ஜல்லிக்கட்டினை விளையாட்டு என்பது புரிந்து கொள்ளக்கூடியது. வீர விளையாட்டு என மகிமைப்படுத்தும்போது பிரச்சினைகள் தோன்றுகின்றன. விளையாட்டினுக்கு எனத் தனியே விதிகள் இருக்க வேண்டியது அவசியம். ஜல்லிக்கட்டுக்கான விதிகள் ஊர்கள்தோறும் வேறுபடுகின்றன. .காளையின் கூர்மையான கொம்பினுக்கும் அதனைப் பிடிக்க முயலும் இளைஞனின் உடலுக்குமான இடைவெளி மனித இருப்பினைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் ஜல்லிக்கட்டு எப்படி விளையாட்டு ஆக முடியும்?
    
   காளையை அடக்குவது வீரம் என்பதற்குத் தரப்பட்ட முக்கியத்துவம் போய் இன்று ஏகப்பட்ட பரிசுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுவது மாடுபிடி வீரர்களை உசுப்பி விடுகின்றது. சைக்கிள், மிக்சி கிரைண்டர், இரும்பு அலமாரி, ரொக்கப் பணம், தங்கக் காசு, தங்க மோதிரம்  என அறிவிப்பது பார்வையாளர்களை நோக்கி வீசப்படும் தூண்டில்கள். வேடிக்கை பார்க்க போனவர்களில் சிலர் மது தந்த போலியான வீரத்தில் வாடியில் இறங்கி அநியாயமாக உயிரை இழப்பது   நடைபெறுகின்றது.

     ஜல்லிக்கட்டில் காளையை அடக்குகிற மாடுபிடி வீரர்களைவிட வேடிக்கை பார்க்கப் போனவர்கள் காளைகளினால் குத்தப்படுவது அதிகம், சில சமயங்களில் தெருவில் நடந்து போகின்றவர் மாட்டினால் குத்துப்பட்டு இறப்பது நிகழ்கின்றது.  கிராமத்தில் பாரம்பரியமாகக் கோவிலுக்கு முன்னர் பெரிய தெருவில் ஜல்லிக்கட்டு நடத்துகின்றனர். வெளியூர்களில் இருந்து கூடுகின்ற ஆண்கள் வேடிக்கை பார்ப்பதற்குப் போதுமான இடம் இருக்காது. மிரண்ட காளைகள் எந்த நேரத்தில் எந்தப் பக்கத்தில் இருந்து பாயுமோ என்ற பயத்துடன்தான் பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சரி போரடிக்கிறது என அங்கிருந்து கிளம்பிச் செல்லுவதிலும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அவிழ்த்து விடப்பட்டு  அங்குமிங்கும் அலையும் கொண்டிருக்கும் காளைகளினால் குத்தப்பட நேரிடலாம். இத்தகைய சூழலை விளையாட்டு,  வீரம் எனச் சொல்வது எந்த வகையில் நியாயம்?

    ஜல்லிக்கட்டு என்ற சொல்லின் பின்னால் சாதி அரசியல் பொதிந்துள்ளது.  தமிழர் வீரம் என்ற சொல்லினைக் கட்டுடைத்தால் தமிழகக் கிராமங்களில் இன்றளவும் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு புலப்படும். தருமபுரியில் திவ்யா- இளவரசன் காதல் விவகாரம், அம்மாவின் அலையை மீறி இன்று அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராக வழி வகுத்துள்ளது. சாதியப் பெருமை ,ஆண்ட பெருமை பேசும் ஆதிக்க சாதியினரை எதிர்த்துச் செயல்படுவது இன்றளவும் கிராமங்களில் சிரமமானது. இந்நிலையில் மரபு, தொன்மை போன்றவற்றின்மூலம் ஆளூகை செலுத்துவது பல்வேறு வழிகளில் நடைபெறுகின்றது. குறிப்பாகக் கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை, முதலில் தேர் வடம் பிடித்தல்,  தக்கார், எனப் பல்வேறு நிலைகளில் தங்கள் பூர்வீகப் பெருமையை நிலை நிறுத்துகின்றனர்.  கிராமபுறங்களில் கடந்த பல நூற்றாண்டாக ஆதிக்கம் செலுத்தும் சாதியினருக்குக் காளைகள் வளர்ப்பது அந்தஸ்து, ஆதிக்கத்தின் அடையாளம். ரேக்ளா ரேஸ் மாடுகள். ஜல்லிக்கட்டுக் காளைகள் போன்றவற்றைப் பெரும்பாலும் ஆதிக்க சாதியினர்தான் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். வயலில் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட சாதியினர்,  இடைநிலைச் சாதியினர் ,தலித்துகள் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில்லை. கிராமப்புறத்தில் தனது செல்வாக்கு எங்கும் நீக்கமறப் பரவியிருப்பதை நிரூபிக்க ஆதிக்க சாதியினருக்குக் காளைகள் குறீயிடுகள். சுற்று வட்டாரத்தில் எங்கே ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் மேற்படி ஊரைச் சேர்ந்தவரின் காளைகளை யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது ஒருவகையில் அறிவிக்கப்படாத சவால். எங்கும் என் கொடி பறக்கின்றது என்பதை அறிவிக்க ஜல்லிக்கட்டுக் காளைகள் பயன்படுகின்றன. லட்சம் ரூபாய் பெறும் காளைகள் கிராமத்துப் பண்ணையாரின் தொழுவத்தில் நான்கு நிற்கின்றன என்பது ஊர் முழுக்கப் பரவியிருப்பது சமூக மரியாதையைத் தீர்மானிக்கின்றது.  அவரது சொல்லுக்கு ஊர் கட்டுப்படும் என்பதைக் காளைகளின் இருப்பும் தீர்மானிக்கின்றன.

     காளையை வளர்த்துத் தனது குலப்பெருமையையும் ஆண்மையையும் வெளிப்படுத்தும் வசதியான பின்புலமுடையவர் ஒருபோதும் வாடியில் இறங்குவதில்லை. கிராமத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலவுடமையாளர் யாரும் காளையை  அடக்கிட முயலுவதில்லை. ஆனால் ஆதிக்க சாதியைச் சார்ந்த அன்றாடங்காய்ச்சிகள்தான் உசுப்பேற்றப்பட்டு வீரம் என்ற போலியான புனைவில்  களத்தில் நிற்கின்றனர். காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடி வாசலில் பந்தாவாக நின்று போஸ் கொடுக்கும் உரிமையாளர்கள் வெகுமானத்திற்காகப் பரிசுகள் அறிவிப்பதோடு சரி.  ஒருவரின் காளை பிடிபட்டால் அந்தக்காளையின் உரிமையாளரின் கௌரவத்திற்கு இழுக்கு வந்து விடும். எனவே மாடுபிடிப்பதில் முண்ணணியில் உள்ளவர்களிடம் ரகசிய ஒப்பந்தம் போடப்படும். சில வேளைகளில் வேறு சிலரின் திட்டத்தினால் காளை பிடிபட்டால் பிரச்சினை ஊர்ச் சண்டையாகி விடும்.
         சில  ஊர்க் காளையின் பின்னால் குறைந்தது ஐம்பது பேராவது டிராக்டரில் திரண்டு வருவார்கள். அந்தக் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்னால் பரப்பபடும் பீதியினால் ஏன் வம்பு எனப் பலர் ஒதுங்கி விடுவார்கள்.   வேறு ஊரைச் சேர்ந்த  பண்ணையாருடன் ஏற்பட்ட சொந்த முரண்பாட்டினைத் தீர்க்க சிலருக்கு  ஜல்லிக்கட்டு பயன்பட்டது. இதுவரை பல ஜல்லிக்கட்டுகளில் பிடிபடாத எதிராளியின் காளையை எப்படியாவது பிடிக்க ஏற்பாடுகள் நடைபெறும். ஒருக்கால் அந்தக் காளையைப் பலர் ஒன்றுகூடிப் பிடித்துவிட்டால், அன்று மாலைக்குள் அடிதடி, வெட்டுக்குத்து நிகழும். இரு பக்கங்களிலும் பண்ணையார்கள் நேரடியாகச் சண்டையில் ஈடுபடுவதில்லை. பண்ணையாரின் சாதியைச் சார்ந்த விளிம்புநிலையினர்தான் பலி கடாக்களாகப் படுவார்கள். இன்று வாகனப் போக்குவரத்துப் பரவலானாதால் வெளியூர்களில் இருந்துகூட கிராங்களுக்கு காளைகளை அடக்கிப் பரிசுகளைப் பெற ஆட்கள் வருகின்றனர். என்றாலும் கிராமத்துச் சண்டியர், மைனர், மிட்டா மிராசு, அம்பலகாரர் என்ற பெயரில் அதிகாரத்தைக் காட்ட ஜல்லிக்கட்டு பயன்படுகின்றது.

    ஜல்லிக்கட்டினுக்குத் தடை என்றவுடன் அதற்கு எதிராகக் கிளம்பியுள்ள அமைப்புகள் பெரிதும் ஆதிக்க சாதியினரின் , கட்டுப்பாட்டில் உள்ளவை. தமிழர் வீர விளையாட்டினத் தடை செய்யாதே என ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்களின் பின்புலத்தின் குறிப்பிட்ட சாதியினரின் நலன்கள் பொதிந்துள்ளன.   கிராமங்களில் வாழும் இடைநிலைச் சாதியினர், தலித்துகள் ஜல்லிக்கட்டு குறித்துப் பெரிதும் அக்கறை கொள்வதில்லை. ஆதிக்க சாதியினரிலும் ஒருசிலரின் அதிகாரத்தை வெளிப்படுத்தப் பயன்படும் ஜல்லிக்கட்டு எப்படி ஒட்டுமொத்தத் தமிழர்களின் விளையாட்டாகும்? தமிழர் வீர விளையாட்டு என்ற தொடர் உருவாக்கும் புனைவின் பின்னர் பொதிந்துள்ள அரசியலைக் கண்டறிய வேண்டியுள்ளது.
  
   கி.பி.14-ஆம் நூற்றாண்டு தொடங்கி டில்லி சுல்தான்கள், தெலுங்கர்கள், மராட்டியர்கள், நவாபுகள், ஐரோப்பியர்கள் என யார்யாரோ தமிழகத்தின்மீது படையெடுத்து வந்து    தமிழர்களை அடிமையாக்கியபோது  தமிழர் வீரம் எங்கே போனது? ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மருது சகோதரர்களைக் காட்டிக் கொடுத்து, ஆங்கிலேய அடிவருடிகளாக விளங்கிய மருதுவின் உறவினர்கள் தமிழர்கள் தானே? ஆங்கிலேயரின் கைப்பாவையாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்து மன்னர்களின் வாரிசுகள் இன்று சட்டசபை உறுப்பினராகவும், மேயராகவும் வலம் வருவதை எப்படித்  தமிழர் வீரத்துடன் பொருத்துவது? தமிழர் வீரம் என்பது ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளையை அடக்குவதில் இருக்கிறது என்பது அபத்தமின்றி வேறு என்ன?
                                         உயிர் எழுத்து, ஜூன், 2014


 
    
      
        Image result for ஜல்லிக்கட்டு காளைImage result for ஜல்லிக்கட்டு காளை

Friday 9 October 2015

பயணம் நாவல் கட்டமைக்கும் மத அரசியல்


ந.முருகேசபாண்டியன்

        வரலாற்றில் தனியொரு ஆண் வகிக்கும் பாத்திரம் என்பது சமூக உருவாக்குதலில் வலுவானது. சமூகத்தின் அடிப்படை அலகான குடும்ப நிறுவனம், ஆணைச் சார்ந்து பெண்ணின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கணவன் - மனைவி உறவு, பெற்றோர்- குழந்தை உறவு எனக் காலந்தோறும் உருவாக்கப்படும் மதிப்பீடுகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆண்கள் அதிகாரப் போட்டியில் நாடுகளை ஆக்கிரமிக்க நடத்தும் போர்கள்தான்  அரசியல் வரலாறாகப் பதிவாகியுள்ளன. போன நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்களின் மேலாதிக்கப் போட்டிகளினால் நடைபெற்ற இரு உலகப் போர்களினால் கொல்லப்பட்ட மனித உயிர்களுக்குக் கணக்கேது? சகமனிதர்களைக் கொன்று குவிப்பதில் ஆண்கள்தான் என்றும் முன்னணியில் உள்ளனர். குடும்பத்திற்கு வெளியே ஆணின் உலகம் விரிந்திட, பெண் வீட்டினில் கணவனுக்காகக் காத்திருத்தல் தொடர்கின்றது.  பெண்களின் உலகமும் தேடலும் ஒப்பீட்டளவில் ஓர் எல்லைக்குள் அடங்கியுள்ளன. சமூக விரிவாக்கம் என்பது போர்களினால் நடைபெற்றபோது, இன்னொருபுறம் மகாவீரரும் புத்தரும் வேறு வகைப்பட்ட அறத்தினைப் போதித்தனர். துறவின் வழியே ஒவ்வொருவரும் வீடுபேறு அடைய முடியும் என்ற கருத்தானது, புதிய உலகினை அறிமுகப்படுத்தியது. வைதிக சமயம் பிரமச்சாரியம், கிரகஸ்தம், வானப்பிரதஸ்தம், சந்நியாசம் ஆகிய நான்கு நிலைகளைப் போதித்தது; வயதான காலத்தில் காட்டிற்குப் போய்த் துறவியாகி மோட்சம் அடையலாம் என்றது. எல்லாவற்றையும் துறந்து துறவியாகித் தவமிருத்தல் மேன்மையாகக் கருதப்பட்டது. குடும்ப வாழ்க்கையில் இருந்த கௌதமபுத்தர், நள்ளிரவில் மனைவியைப் பிரிந்து துறவியான கதையானது, ஆணும்பெண்ணும் இணைந்து வாழும் குடும்பத்திற்கு விடப்பட்ட சவால். பொதுவாக மதங்கள், பூமியில் உடல்கள் அடையும் புலன் இன்பங்களை அடக்குவதன்மூலம், பேரின்பம் அடையலாம் என வலியுறுத்துகின்றன. பெண்ணுடல்களை வெறுமனே போகப்பொருளாகக் கருதி ஒதுக்கி, பற்று அற்ற நிலைமூலம் சொர்க்கம் சென்றடையலாம் என்ற கருத்து இன்றுவரை வலுவாக உள்ளது.

             ஜைன, பௌத்த, வைதிக மத மரபுகள்  துறவினைப் போதிப்பது இதிகாசங்கள், புராணங்கள் தொடங்கிப் பண்டைய இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இந்தியாவில் சாமியார்கள் பெண் துணை இல்லாமல் தனித்து வாழ்வது உயர்வாகக் கருதப்படுகிறது. பழமையான மடங்களின் பீடாதிபதிகளான சாமியார்கள் முதலாகக் கார்ப்பரேட் சாமியார்கள் வரை பெண்ணை ஒதுக்குகின்றனர். ஆனால் அவர்கள்  குடும்பத்தில் பெண்கள் எப்படி வாழவேண்டுமென  ஆலோசனையைத் தாரளமாக வாரி வழங்குகின்றனர். இன்னொருபுறம் குடும்ப நிறுவனத்தில் காலந்தோறும் கடுமையாக உழைத்திடும் ஆண்களில் சிலர், குடும்பத்தைத் துறந்து, சாமியார் வேஷம் தரித்துக் கோவில்கள்தோறும் சென்று பிச்சையெடுத்து வாழ்கின்றனர். ஆண்கள் குடும்பப் பொறுப்பினைத் துறந்து பெண்ணின்மீது பாரத்தினை ஏற்றிவிட்டுச் செல்வது நியாயம்தானா? துறவு என்றால் எல்லாவற்றையும் துறந்து அக்கடா என வாழ்வது, ஆண்களுக்குக் கவர்ச்சிகரமாக உள்ளது. ஒப்பீட்டளவில் துறவினுக்கு வக்காலத்து வாங்கித் துறவியான பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. பொதுவாகப் பெண்கள், புலன் இன்பங்களை இழிவானதாகக் கருதி வெறுத்து ஒதுக்குவது கிடையாது. பால் அடிப்படையில் ஆண்டாண்டு காலமாக ஆண்களைக் கவர்ந்திழுக்கும் துறவு வழியில் இன்றைய இளைஞன் பயணித்தால் என்ன நிகழும் என்பது அரவிந்தனின் மொழியில் பயணம் நாவலாகியுள்ளது. நுகர்பொருள் பண்பாடு மேலோங்கியுள்ள நிலையில் வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கி எறி என்பது தாரக மந்திரமாக ஒலிக்கும்போது துறவு எடுபடுமா? ஆனால் கார்ப்பரேட் சாமியார்களின் பேச்சைக் கேட்கவும் அருளாசி பெறவும் கூடுகின்ற மக்கள்திரளின் மந்தை மனோபாவத்தினை அவதானித்தால்., இன்றும் துறவு கவர்ச்சிகரமானதாக உள்ளதை அறியலாம். உழைப்பினில் இருந்து அந்நியப்பட்டுள்ள துறவியரின் உலகம், இன்றைய சூழலில் என்னவாக உள்ளது என்ற நாவலாசிரியர் அரவிந்தனின் புனைவு, பேசாப் பொருளைப் பேசியுள்ளது

   இந்துத்துவ அடிப்படைவாதிகள் பண்பாட்டுத்தளத்தில் செய்கின்ற செயல்கள், இன்று இந்தியாவெங்கும் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மதம் என்ற போர்வையில் நடைபெறுகின்ற அரசியலுக்கு முற்றிலும் மாறாக ஆன்மீகத்தையும் நன்னெறிகளையும் போதிக்கின்ற மடாதிபதிகள் வசிக்கின்ற மடங்கள் வேறு தளத்தில் செயல்படுகின்றன. பொருளியல் நெருக்கடியினால் அவதிப்படுகின்ற விளிம்புநிலையினருக்கு ஆறுதலும் சேவையும் அளிக்கின்ற மடங்களின் உள்ளரசியல் வலுவாக உள்ளது இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறி, ரகசியமாக மடத்தில் சேர்ந்து, இளம்துறவியான ராமநாதனை மையமாகக்கொண்டு பயணம் நாவலின் கதை சுழலுகின்றது. பள்ளிப் பருவதிலிருந்தே விவேகானந்தரின் புத்தகங்ளை வாசித்த ராமநாதன் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் லட்சிய பிம்பம், ஆன்மீகம் சார்ந்து விரிகின்றது. ஸ்வாமிஜி சிவானந்த சங்கர யோகி யினால் நடத்தப்பட்ட சாந்தி யோகா முகாமில் கலந்துகொண்டபோது அவனுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், துறவுமீது ஈர்ப்பினை ஏற்படுத்துகின்றன. ஆன்மீகத்தின்மூலம் சமூக சேவை செய்திட முயலுகிறவன், வறுமையில் உழலும் பெற்றோரைரைப் புறக்கணிப்பது, ஒருவகையில் முரண்.

         ஆசிரமம் என்ற நிறுவனம், திட்டமிடப்பட்ட நெறிமுறைகளும் விதிகளும் கலந்து இறுக்கமாக உள்ளது. கேள்விகள் எதுவுமற்ற பணிவு என்பது இளமையில் துறவினை மேற்கொள்ள விழையும் ராமநாதனுக்கு ஏற்புடையதாக இல்லை. அங்குச் சிறிய விதிமீறல்கூட ஒழுங்கீனமாகக் கருதப்படுகிறது. புதுமையாகவும் தன்னெழுச்சியாகவும் முனைப்புடன் செயல்படுகின்ற ராமநாதனின் போக்குஸ்வாமிஜி உள்ளிட்ட ஆசிரமத்தினரால் அத்துமீறலாகக் கண்டனதிற்குள்ளாகிறது. காவிய நாயகர்களின் தனித்துவமானது, எதிர்கொள்கிற போராட்ட வாழ்க்கையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதுதான். ராமநாதனுக்குள் கனலும் கங்கு, அவனை இடைவிடாமல் தூண்டிக் கொண்டிருக்கிறது. அவனுடைய கனவு ஸ்தலமான ஆசிரமம், எல்லாநிலைகளிலும் அவனுடைய இயக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது, லாவகமாகத் தாண்டிச் செல்கிறான். அவனுடைய கட்டற்ற மனதின் வேகம், புதிய தளங்களில் பயணிக்கத் தூண்டுகிறது. ஒருபோதும் முடிவற்ற பயணம் என்பதைப் புரிந்திட்ட நிலையில், ஆசிரமத்தைவிட்டு வெளியேறுகிறான். நீண்ட பயணத்திற்குப் பின்னர் சென்னையில் ஆசிரமம் அமைத்து மடாதிபதியாகிறான். அவனுடைய லட்சிய வேட்கை அந்த ஆசிரமத்தில் நிறைவேறுமா? அல்லது யோகா பின்புலத்தில் சமூகசேவை அளித்து ஆறுதலை அளிக்கின்ற நிறுவனமயமாகி விடுவானா

     கோவையில் இருக்கும் சாந்தி யோகா ஆசிரமத்தில் சேர்ந்த ராமநாதன், ஆசிரமத்தின் கிளைகள் இருக்கும் சுசீந்திரம், கொல்லிமலை போன்ற இடங்களுக்குச் சென்று பயிற்சி பெறுகிறான். மருத்துவமனை, யோகாசன மையம், இயற்கை வேளாண்மை, மருத்துவமுகாம், பள்ளிக்கூடம், கைவினைப் பொருள் தயாரிப்பு என  ஆசிரமம் நடத்தும் சேவைகளில் ஆர்வத்துடன் பங்கேற்கிறான். இத்தகைய சேவைகளின்மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் யோகாசனம் போதிப்பதை முன்னிலைப்படுத்துகிறான். நாவல் முழுக்க யோகாசனத்தின் மேன்மைகள், ராமநாதனின்மூலம் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. மனிதனின் உடலுக்கும் மனதிற்கும் யோகாசானத்தினால் விளையும் நலன்கள் குறித்த கருத்துகள், வாசிப்பினில் புதிய திறப்பினைத் ஏற்படுத்துகின்றன. .
       ராமநாதன் சுசீந்திரத்தில் கணவனை இழந்த பேரழகியான காயத்திரியைக் கண்டு மனம் தடுமாற்கிறான். இதுவரை பெண் என்றால் ஒதுங்கியிருந்தவனின் இயற்கையான ஆண்மையின் விழிப்பிற்கு முன்னால், அவனது மனம் தத்தளிக்கிறது. இரவுவேளையில் படுக்கையில் காயத்திரியை நினைத்தவாறு, சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். துறவு, பிரமச்சாரியம் குறித்த புனைவுகள் தகர்கின்றன. ஒருவிதமான குற்றமனத்தில் குமைந்தாலும், காயத்திரியைத் தேடிப்போய் அவளுடன் பாலுறவு கொள்கிறான். மீண்டும் மடத்தின் பணியில் எப்பொழுதும்போல ஈடுபடுகிறான். ``நினைவெழுந்தால் நல்ல மாதருண்டு இந்த மேதினியில்`` எனப் பாடியுள்ள பட்டினத்தாருடன் ஒப்பிடும்போது ராமநாதனின் செயல் சாதரணமானதுபிரமச்சாரியம் மேன்மையானது என்ற நம்பிக்கை சிதைந்தாலும், துறவியெனத் தன்னை நினைத்துக்கொள்கிறான். ஸ்வாமிஜியின் மறைவினுக்குப் பின்னர், அங்கிருக்கும் மூத்தத் துறவியரின் செயல்களினால்  வெறுப்படைந்து ஆசிரமத்தைவிட்டுத் திடீரெனக் கிளம்புகிறான்.  

     உலகம் மாயை, உடல் என்பது பாவத்தின் விளைநிலம், எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் எல்லாம் அழிந்துவிடும், ஆசையே துக்கத்திற்குக் காரணம், ஊரும் நிலையானது அல்ல, உற்றாரும் நிலயானது அல்ல  போன்ற போதனைகளைப் போதிக்கும் சாமியார்களின் மடங்களுக்குக் கோடிக்கணக்கில் சொத்துகள் இருக்கின்றன. அன்றாடம் உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகள், நிலையாமைத் தத்துவத்தை நம்புவது வேடிக்கையானது. பொருளியல் ஏற்றத்தாழ்வு, பிறப்பின் அடைப்படையில் மேல் கீழ், பால் அடிப்படையில் பெண்களின் இரண்டாம் நிலை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில், இருப்பினை நியாயப்படுத்தும் பணியைச் சமய நிறுவனமான மடங்கள் அழுத்தமாகச் செய்கின்றன. இன்று அரசியல் விழிப்புணர்வு, பகுத்தறிவு காரணமாகக் காலங்காலமாகச் செல்வாக்குப் பெற்றிருந்த  மடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் புதிய வகைப்பட்ட ஆசிரமங்கள் உருவாக்கப்படுகின்றன. யோகாசனம், சமூகசேவை என்ற பெயரில் வைதிக சமயத்தின் கருத்துகள் புதிய பேக்கேஜில் முன்வைக்கப்படுகின்றன. தியானம், யோகாசனம்மூலம் மனம், உடல் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் எனப் போதிப்பது ஏற்புடையதுதானா? .அறுவை சிகிட்சை அல்லது மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீருமென்ற நிலையில் இருக்கும் நோயாளிக்கு யோகாசனம் தீர்வாகாது. ஏற்கனவே மனநலமற்று இருக்கிறவருக்குத் தியானத்தினால் எவ்விதமான பயனும் இல்லை. ஓரளவு ஆரோக்கியமான நிலையில் இருக்கிறவரை இன்னும் மேம்படுத்திட யோகாவும் தியானமும் பயன்படும். புறநிலையில் நெருக்கடியான பணிச்சூழல், மன அழுத்தம் காரணமாகப் பலரும் அந்நியமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கார்ப்பரேட் சாமியார்களின் வருடலான பேச்சுகள் ஆறுதலாகத் தோன்றுகின்றன. கூட்டுக்குடும்பம் தந்த பாதுகாப்பின்மை சிதைந்தநிலையில், நுகர்ப்பொருள் மாயைக்குள் சிக்கிக்கொண்ட மனிதனுக்கு மனவளக்கலை எனத் தொடங்கும் பேச்சு  சுவராசியத்தைத் தருகிறது. புதிய மொந்தையில் பழைய கள் என்பது போல ஆன்மீகம் மாறி விட்டது. ராமநாதன் போன்ற புதிய வகைப்பட்ட சாமியார்களின் யோகாவை முன்வைத்த வணிகம் இன்று கொடி கட்டிப் பறப்பதற்குச் சூழலின் வெக்கைதான் காரணம் என்று சொல்லலாமா?

     ஆசையே அனைத்துத் துயரங்களுக்கும் மூலகாரணம் என்ற பண்டைய கருத்தியல் மாறி விட்டது. இன்று எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, உன்னால் முடியும் என கார்ப்பரேட் சாமியார்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆசிரமத்தில் நடைபெறும் சத்சங்கத்தில் ஸ்வாமிஜியின் உரை: ``… நீங்கள் ஒரு விஷயத்தை உண்மையிலே விரும்பினால், அதில் தீவிரமாக இருந்தால், அது உங்களுக்குக் கிடைத்தே தீரும். உலகில் எந்த சக்தியாலும் அதைத் தடுக்கவே முடியாது. விரும்புங்கள், தேடுங்கள், அடைவீர்கள். நீங்கள் அடைவீர்கள்.``  நவீன சாமியார்கள் எதையும் அடைய முடியும் என்ற போலியான நம்பிக்கையை விதைப்பதன்மூலம் தன்னை நாடி வருகின்றவர்களுக்குத் தற்காலிகமான அமைதியைத் தருகின்றனர். விரும்பியவற்றை அனுபவித்துவிட்டுக் கடந்து செல்க என மனரீதியில் தரும் அறிவுரை, நுகர்பொருள் பண்பாட்டிற்கும் பொருந்தும். இருப்பினை நியாயப்படுத்தும் நிலையில், பண்டைய புராண இதிகாசங்கள், பகவத்கீதை போன்றவற்றை மறுவியாக்கியானம் செய்கின்ற சாமியார்களின் பேச்சை முன்வரிசையில் இருந்து கேட்பதற்கு ஆயிரக்கணக்கில்  பணம் செலுத்த வேண்டியுள்ளது. யோகாசன முகாம்களுக்குப் பணம் செலுத்தினால்தான் உள்ளே நுழையவே முடியும்.  பெரும் தொழிலதிபர்களின் தயவினால் இயங்குகின்ற கார்ப்பரேட் சாமியார்கள், பத்தாண்டுகளில் ஊடகங்களின் உதவியுடன் மகான் நிலைக்கு உயர்ந்து விடுகின்றனர். அவர்களைப் பற்றிய ஒளிவட்டம் ஊதிப் பெருக்கப்பபடுகிறது; கையை ஆட்டினாலோ, தலையை அசைத்தாலோ, எல்லாம் புனிதமாகக் கருதப்படுகிறதுசாதரணமாகப் பேசுவதுகூட, உயர்ந்த ஞானமாகப் போற்றப்படுகிறது. இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் உருவாவது பற்றிய சித்திரத்தை நாவல் நுணுக்கமாகப் பதிவாக்கியுள்ளது. சாமியார்களின் மோசமான வாழ்க்கையைச் சித்திரிப்பது நாவலாசிரியர் அரவிந்தனின் நோக்கம் இல்லை. இப்படியெல்லாம் நடைபெறுகின்றன எனப் புதிய காட்சிகளை விவரித்து, வாசிப்பின் வழியே முடிவற்ற சிந்தனைக்கு வாசகரை நகர்த்துகின்றார்நவீன ஆசிரம வாழ்க்கைமுறைக்கு அடிப்படையாகத் தியானமும் யோகாசனமும் இருப்பது நாவலில் பதிவாகியுள்ளது.

   பயணம் நாவல் குறியீட்டு நிலையில் ராமநாதனின் பயணத்தைக் குறிக்கிறது. அதேவேளையில் நாவலாசிரியர் அரவிந்தனும் மதம், மடம், துறவு எனத் தனது தேடுதலைக் கதைபோக்கினில் தொடங்கியுள்ளார். யோகாசனம், சமூக சேவை, துறவு போன்றவை குறித்து ஒருவகையான நம்பிக்கையுடன் சொல்லப்பட்டுள்ள கதையானது, விவரிப்பில் புதிய விசாரணைகளை முன்வைத்துள்ளது. மதத்தின்  இன்றைய இடம் அல்லது நிலை குறித்து விமர்சிக்கும்போது, ஆசிரமத்தில்  நிலவும் அரசியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ராம ஜென்மபூமி, பாபர் மசூதி இடிப்பு என ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரத்தின் அரசியல் குறித்த அரசியல் விவாதங்கள், நாவலைச் சமகாலத்திய தன்மையுடனவாக மாற்றுகின்றன. இதழியல் நுட்பத்துடன் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தினை அரவிந்தன் அணுகியுள்ளார். இந்து மத அடிப்படைவாதம் ஏற்படுத்தும் அரசியல் பற்றிய தீர்க்கமான அறிவுடைய ராமநாதன், பாபர் மசூதி இடிக்கின்ற நிகழ்ச்சியை நேரில் காணச் செல்கிறான். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படுகின்ற வன்முறையில், மசூதி இடிக்கப்படுகிறது. முகத்தில் ரத்தம் வழிந்திட ஆவேசத்துடன் குரல் எழுப்புகிறவனின் பிம்பம் முக்கியமானது. கூட்டத்தின் நெரிசலில் சிக்கித் தவித்த ராமநாதனுக்குக் காவித்துணியில் படிந்த ரத்தம் அதிர்ச்சியைத் தருகிறது. எல்லாவற்றின்மீதும் பற்றினைத் துறந்த துறவியர் அணியும் காவி உடையில் ரத்தம் என்பது, நுட்பமான கேள்விகளை எழுப்புகிறது. இதுவரையிலும் காவி என்றால் புனிதம் எனக் கட்டமைக்கப்பட்டிருந்த ராமநாதனின் மனம் சிதலமாகிறது. விவேகானந்தர் மீதான லட்சியத்தில் அக்கறைகொண்டு, தேச சேவையாற்றுவதற்காகப் பதின்பருவத்தில் வீட்டை விட்டுக் கிளம்பி மடத்தில் சேர்ந்த ராமநாதனின் கனவு, அயோத்தியில் அபத்தமாக மாறுகிறது.

         ராமநாதன்- காயத்திரி இருவருக்கிடையிலான பாலுறவு பற்றிய நேர்மறையான அபிப்ராயம் கதையில் பதிவாகியுள்ளது. ராமாமிர்த யோகி என்ற ராமநாதன் புதிதாக உருவாக்கியுள்ள அமிர்தா யோகா கேந்திரத்தின் வரவேற்பறையில் காயத்திரி வரவேற்பாளராகப் பணியாற்றுவது, கதையின் போக்கில் இயல்பாக இடம் பெற்றுள்ளது. உடலில் இயல்பூக்கமாகத் தோன்றும் பாலியல் வேட்கையைப் புறக்கணித்துத் துறவியாக வாழ்வது, நடைமுறை சாத்தியமற்றது என்பது ராமநாதனின் வாழ்க்கை வழங்கும் செய்தியா? காயத்திரியின் பெண்ணுடல் மட்டும் வேண்டும், அவளுடன் சேர்ந்து  குடும்ப வாழ்க்கை வாழ இயலாது என ராமநாதன் நினைத்து, அதனை நடைமுறைப்படுத்துவது  ஆண் மேலாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும். யதார்த்தத்தில் ஒருபோதும் தீராத பிரச்சினைகளின் சிக்கித் தவிக்கும்போது மக்களுக்கு ஏதோவொரு மகான் தேவைப்படுகிறார். அவ்வப்போது தோன்றி அருளாசி வழங்கினால் போதும் என்ற நிலையில், இன்று ராமநாதன், ராமாமிர்த யோகியாகக் காட்சி  அளிக்கிறார்..

  மத அடிப்படைவாத அரசியல், நாட்டில் எல்லா மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவிவரும் வேளையில், எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. தனிமனிதரீதியில்  நிறுவனமயமான மதம் ஏற்படுத்தும் உணர்வுகள், நாளடைவில் வன்முறையினை ஏற்றுக்கொள்வதுதான் துயரமானது. நவீனமயமான ஆசிரமங்கள், கார்ப்பரேட் சாமியார்கள், தியானம், யோகாசனம் போன்றவற்றுக்குப் பின்னால் பொதிந்துள்ள வாழ்க்கையை விருப்புவெறுப்பு இன்றி விவரித்துள்ள பயணம் நாவல், சமகாலத்தின் அரசியல் பதிவாக விளங்குகிறது. வெறுமனே ஏதோ ஆசிரமத்துச் சாமியார்களின் கதை என ஒதுக்கிவிட இயலாதவாறு நுட்பமாக விவரித்துள்ள அரவிந்தனின் கதையாடலில் நுண்ணரசியல் பொதிந்துள்ளது.

  பயணம்(நாவல்), அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். தொடர்புக்கு: 04652 -278525,  பக்கம்:392; விலை:350/-

                                  உயிர் எழுத்து, அக்டோபர்,2015