Saturday 10 June 2017

வேல ராமமூர்த்தி கதைகள் சித்திரிக்கும் புனைவுலகு

                                                            ந.முருகேசபாண்டியன்
                                                     mpandi2004@yahoo.com


                பண்டைய தமிழிலக்கியமான சங்க இலக்கியப் பாடல்கள் நிலம் சார்ந்து வாழ்ந்திட்ட மக்களின்  வாழ்க்கையினைப் பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மக்களின் பண்பாடானது நிலம் சார்ந்து விரிந்துள்ளது. இயற்கையின் பின்புலத்தில் மனிதமனமானது இறுக்கமாகவோ அல்லது நெகிழ்வாகவோ இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன. வறண்ட பாலை நிலத்தின் கடவுளாக வழிபடப்படும் உக்கிரமான கொற்றவைக்கும், வளமான முல்லை நிலத்தின் கடவுளான மாயோனுக்கும் வேற்றுமை உள்ளது. நிலமானது ஏதோ ஒருவகையில் மனித இருப்பினைத் தீர்மானிக்கின்றது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் நிலத்தை முன்வைத்த வாழ்க்கைமுறை மாறிக் கொண்டிருக்கும் சூழலில், ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த புனைவெழுத்து இன்றும் தமிழில் தொடர்கின்றது. தமிழக நிலவெளியானது  தஞ்சை, கொங்கு, கரிசல் எனத் தனித்த அடையாளத்தைப் பேணும் நிலையில், மண் சார்ந்து உருவாக்கப்படும் எழுத்தில் வட்டாரச் சாயல் பதிவாவது தவிர்க்க முடியாததது. வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகள் வானம் பார்த்த பூமி. வளமான ஆறு எதுவும் பாயாத காரணத்தினால், மழையை நம்பி விவசாயம் செய்து வாழும் சம்சாரிகள் பொருளியல்ரீதியில் சிரமப்படுகின்றனர். இளைய தலைமுறையினர் வேறு தொழில்கள் செய்வதற்காகக் கிராமத்தினரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். வறுமையான சூழலில் கிராமங்களில் வாழும் மக்கள் தங்களுடைய அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயலுகின்றனர், ஆதிக்க பின்புலமுடைய மறவர் சாதியினர்  பழம்பெருமையில் வீர மரபினர் எனப் பெருமையில் மூழ்கியுள்ளதை வேல ராமமூர்த்தி தனது கதைகளில் பதிவாக்கியுள்ளார். பல்லாண்டுகளாக  ஒருவிதமான முரட்டுத்தனமும் துணிச்சலுமாக வாழ்கின்றவர்கள், சின்ன விஷயங்களுக்குக்கூட உணர்ச்சி வயப்பட்டு எடுக்கும் முடிவுகளின்  விளைவுகள் கரிசல் மண்ணின் கவிச்சியுடன் கதைகளாகியுள்ளன.

        வருடத்தில் பெரும்பாலான காலத்தில் வெய்யிலடிக்கும் கரிசல் காடு எனப்படும்  வறட்சியான பூமியில் செழுமையும் பசுமையும் மிகக்குறைவு. பல்லுயிர்ப் பெருக்கம் என்பது இல்லாத நிலையில் அங்கு உயிர்த்திருக்கும் தாவரங்களும் உயிரினங்களும் போராடி தங்களுடைய இருப்பினைத் தக்க வைத்துக்கொள்கின்றன. சம்சாரிகள் போதிய நீராதரமின்றி இருந்தாலும் நிலத்திலிருந்து ஏதாவது விளைவித்து விடலாம் எனத் தொடர்ந்து முயலுகின்றனர். சில வருடங்களில் நல்ல மகசூலும் சில வருடங்களில் சாவியாகிப் போனாலும் சம்சாரிகள் தங்களுடைய முயற்சியை ஒருபோதும் கைவிடுவதில்லை. மீண்டும்மீண்டும் நிலத்துடன் போராடுகின்ற குணாம்சம்தான் கரிசல்காட்டுவாசிகள் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக உள்ளது. இழப்பினை எதிர்கொள்கின்ற மனநிலை இயற்கையாகவே அவர்களுக்கு வாய்த்துள்ளது. நிலத்துடனான போராட்டம் சார்ந்த வாழ்க்கையானது அன்றாட வாழ்க்கையிலும் இயல்பாகிப் போன நிலையில் அவர்களுடைய வாழ்க்கையானது மூர்க்கம் நிரம்பியதாகி விட்டது.  பொருளியியல் நிலையில் வறண்டிருந்தாலும், வீரம், மானம், துணிச்சல் போன்றவற்றின்மூலம் தங்களுடைய இருப்பினை அர்த்தப்படுத்த விழைகின்றனர். அதிலும் ஆண்களின் உலகம் சாராயம், அடிதடி என வன்முறை சார்ந்து எப்பொழுதும் விரிந்து கொண்டிருக்கின்றது.
       சங்கத்திணை சார்ந்த வாழ்க்கையில் பாலை எனப்பட்ட வறண்ட நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின்  வாழ்க்கையானது, தமிழகத்தின் பிற நிலப்பகுதிகளுடன் ஒப்பீட்டளவில் வேறுபாடுகள் மிக்கது. பாலை நிலத்தில் பயணிக்கின்றவர்களிடமிருந்து ஆறலைக்களவு எனப்படும் வழிப்பறியின்மூலம் பொருளைக் கவர்தல்,  அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக்கான ஆதாரமாக இருப்பதை  இலக்கண நூலான தொல்காப்பியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னொரு இனக்குழுவினரின் மாடுகளைத் திருடிச் செல்லுதல் ஆநிரை கவர்தல் எனக் குறிப்பிடப்பட்டது. அதுவே பண்டைத்தமிழரின்  வீரம் எனப் போற்றப்பட்டுப் புறத்திணை இலக்கியத்தின் தொடக்க நிகழ்வாகியது. வேறொரு ஊருக்கு இரவோடு இரவாகச் சென்று ஆடுகளைத் திருடி வரும் கிராமத்தினரின் மனநிலையில் அந்தச் செயல் பொருளீட்டுவதற்கான வழிமுறையாகும். இத்தகைய திருட்டுகளின்மூலம் கிடைக்கும் வருவாய் என்பது அன்றாட பொழுதைப் போக்கிட உதவும். அவ்வளவுதான். ஒழுக்கம் சார்ந்த இன்றைய மதிப்பீடுகள் குறித்துப் பெரிதும் அக்கறையற்ற கிராமத்தினரின் செயல்பாட்டினைக் கதையாக்கியுள்ள  ராமமூர்த்தியின் எழுத்து, இனவரைவியல் தன்மையுடையது. வேட்டை கதையில் ஆட்டுக்கிடாய் திருடப்போன கும்பலுடன் போன வில்லாயுதம், நாயினால் குதறப்பட்டு இறந்து போனான். இருளாயியைத் திருமணம் செய்து முழுக்க மூன்று மாதங்கள் முடியாத நிலையில் வில்லாயுதம் மரணமடைவதற்கான காரணம் வறுமைதான். வேறு தொழில் தெரியாமலும், மரபு வழிப்பட்ட நிலையில் திருட்டினைச் செய்து வாழும் கிராமத்தினரைப் பொறுத்தவரையில், நவீன வாழ்க்கையின் நியதிகள் அற்பமானவை.  கவுல்பட்டி கிராமத்திற்குப் போய் இரவோடு இரவாக ஆட்டுக்கிடாய்களைத் திருடி வந்தவர்களின் வம்சத்தில் முதன்முதலாகச் சேது என்ற இளைஞன் காவல்துறையில் எஸ்.ஐ. ஆகப் பணியில் சேரவிருப்பதை அறிந்த உறவினர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். குலதெய்வமான இருளப்பசாமிக்கு ஊராரின் சார்பில் 21 கிடாய்களை வெட்ட வேண்டுமென உத்தரவிடுகிறார் முருகேசத்தேவர். பெருநாழிக் காவல்நிலையத்தில் போலீசாரால் சூடு வைக்கப்பெற்றவர்கள் தங்கள் உறவினரில் ஒருவர் காவல்துறையில் அதிகாரியாகச் சேரவிருப்பதைக் கொண்டாடுகின்றனர். போலீஸ் உடுப்பணிந்து வீட்டிற்குள்ளிருந்து சேது வெளியே வந்தவுடன், திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள் பதறியடித்து எழுந்து நின்றவாறு, தோளில் இருக்கும் துண்டினைக் கக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கைமுறைக்கு முற்றிலும் எதிராகவுள்ள காவல்துறையில் அவர்களில் ஒருவன் சேர்வதைக் கிடாய் வெட்டிக் கொண்டாடுவது நகைமுரண். இத்தகைய களவு வாழ்க்கைமுறை இன்னும் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது என்பதை ராமமூர்த்தி சூசகமாகப் பதிவாக்கியுள்ளார்.

          கிராமம் என்றால் பசுமை, தூய காற்று, எளிமை எனப் பொதுப்புத்தியில் கட்டமைக்கபட்டுள்ளதற்கு மாற்றாக அங்கு வேறு உலகம் அழுத்தமாக இயங்குகிறது. சாதியத்தின் கண்காணிப்பில் ஒவ்வொரு அசைவும் நுட்பமாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதரின் நெற்றியிலும் இன்ன சாதி, இன்னாரின் மகன் என்பது எழுதி ஒட்டப்படாவிடிலும் கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும். சாதியை முன்வைத்து விரியும் உலகில் மனித உடல்கள் படும் வதைகள் அளவற்றவை. அதிலும் ஆதிக்க சாதியினரான தேவர் சாதியினர் செலுத்தும் அதிகாரத்தினால் நாவிதர், வண்ணார், தலித்துகள் போன்ற சேவை சாதியினர் எப்பொழுதும் அடங்கியொடுங்கி இருக்க வேண்டிய நிலை இன்றளவும் நிலவுகின்றது. சக மனிதர்களைக் கேவலமாகக் கருதும் சாதிய அமைப்பின் கொடூரம் ஆசை தோசை கதையில் பதிவாகியுள்ளது. கிராமத்து நாவிதரான வெள்ளையன் தோசை தின்ன ஆசைப்பட்டுப் பக்கத்து ஊரான பெருநாழிக்குச் சென்று கிளப்புக்கடையில் சாப்பிடுகின்றார். அப்பொழுது அங்கு தற்செயலாக வந்த ரத்னவேல் ’’ சிரைச்சுப் பிழைக்கிற சின்ன சாதிப் பயலுக்கெல்லாம் சேர் டேபிள் கேக்குதோ..’’ எனக் கோபத்துடன் திட்டி, வெள்ளையனைச் செருப்பினால் அடிக்கிறார். வெள்ளையன் செருப்பைக் கையில் பிடித்துக்கொள்ள ரத்னவேலினால் அதிலிருந்து மீள முடியவில்லை. அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு பணிந்து போக வேண்டுமென்று காலங்காலமாக விதிக்கப்பட்டிருந்த விதியானது வெள்ளையனால் மீறப்படுகின்றது. வெள்ளையன் அதற்குத் தர வேண்டிய விலை அதிகமாக இருக்கும். என்றாலும்  சாதியின் பெயரால் விளிம்புநிலையினரை ஒடுக்குவது தொடர்ந்து நடைபெறாது என்பதற்கு அடையாளம்தான் வெள்ளையனின் எழுச்சி.

       எங்க அய்யாமாருக்காக.. கதையில் சலவைத் தொழிலாளியான மாடசாமி பற்றிய விவரணை முக்கியமானது. விளாத்திகுளத்தில் இருந்து பேருந்தில் வரும்போது ஏற்பட்ட சண்டையில் சிலர் இருளாண்டியை அடித்து விட்டதைக் கேள்விப்பட்டவுடன் கிராமத்தினர் வேல்கம்பு, அரிவாள் என அடித்தவர்களைத் தேடிக்  கிளம்பிய கும்பலில் மாடசாமியும் கிளம்புகிறார். சும்மா இருக்கும் ஆண்களை உசுப்பேற்றிவிட்டு நர வேட்டையாடத் தூண்டுகின்றனர் பெண்கள். வீரம் என்ற செருக்கில் சாராயத்தைக் குடித்துவிட்டுக் கொந்தளிப்புடன் கிளம்பியவர்கள், அடித்தவர்கள் அதே சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து எப்படியோ ஒத்துப் போகின்றனர். இதை அறியாமல் மாடசாமி ‘’ எங்க அய்யா மகனை அடிச்சவன் எவன்னாலும் .. எனப் போதையில் பேசுகிறான். அதைக் கேட்டவர்கள் அவனை ’’ எங்காளுகளை அவன் இவன்னு சொல்லுவே’’ எனச் செருப்பினால் அடித்துப் புழுதியில் போட்டனர். கொலை வெறியுடன் அலைந்தவர்கள், தாங்கள் தேடுவது தங்களுடைய சாதிக்காரன் என அறிந்தவுடன் பின் வாங்குகின்றனர். கையில் வேல்க்கம்பு கிடைத்தவுடன் துள்ளிக் குதித்த மாடசாமியின் நிலை பரிதாபகரமானது. ஒருபோதும் அழியாத சாதியத்தின் பிடியில் நசுங்கிடும் வண்ணார் சாதியினருக்கு விடிவு என்பது இல்லை.  விளிம்பு நிலையில் வாழ்கின்றவர்கள் தங்களுடைய இருப்பில் இருந்து சற்று விலகினாலும் ஆதிக்க சாதியினரால் நசுக்கப்படுவார்கள் என்பதை ராமமூர்த்தி அப்பட்டமாகக் கதைகளாகியுள்ளார். முரட்டுத்தனமாக ஒரே சாதிக்குள் மோதுதல் ஏற்பட்டாலும் ஒருநிலையில் எதிரெதிராக மோதியவர்ளைச் சாதி என்ற அடையாளம் ஒருங்கிணைக்கும்போது, விளிம்புநிலை சாதியினர் வன்முறைக்குள்ளாக்கப்படுவது  கதையாக்கப்பட்டுள்ளது. தமிழக நிலப்பரப்பில் சாதியின் ஆதிக்கம் இன்றளவும் நுட்பமாகச் செயலாற்றுவது வேலராமமூர்த்தியின் பெரும்பாலான கதைகளில் பதிவாகியுள்ளது.

       கன்னிதானம் கதையில் பெண்ணை முன்வைத்து ஒரே சாதிக்குள் நிகழும் வெட்டுக்குத்து பற்றிய விவரணை, மனித உடல்கள் பற்றிய மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்கிறது. சேது, தமயந்தி ஆகிய இருவரும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ள விழைகின்றனர். சேதுவின் மாமன் பால்பாண்டியின் மகள் முத்துமீனாள் மாப்பிள்ளைக்காரியாக இருப்பதனால், சிக்கல் உருவாகின்றது. சேதுவின் தகப்பனார் ரொக்கம் ஐந்தாயிரம், மேட்டுப் புஞ்சை ஐந்து குறுக்கம் நிலம் தந்து மாப்பிள்ளைக்காரியிடம் சம்மதம் பெறுகின்றனர். ஆனால் பால்பாண்டியின் மனதில் முறைப்பையன் சேதுவுக்கும் தனது மகள் மீனாளுக்கும் திருமணம் நடக்கவில்லையே என்ற ஆத்திரம். திருமணத்தில் தாலிகட்டு முடிந்தவுடன், பால்பாண்டி வேல்கம்பினைச் சபையில் வீசிவிட்டு, பொண்ணு மசுரு மாதிரி இருக்கு எனப் போதையில் கத்தியவுடன், அடிதடி, வெட்டுக்குத்து நடைபெறுகின்றது. சின்ன சொல் போதும் எல்லோரையும் உசுப்பிவிட. பெரும்பாலான மனிதர்களின் குருதியில் டார்வின் சொன்னதுபோல மூதாதையரான ஆதி விலங்கினுடைய குருதியின் எச்சம் இன்னும் இருக்கிறது. நாகரிகமடைந்து சமூக மனிதனாக வாழும் சூழலிலும் எவ்விதமான நியாயம் , ஒழுங்கு இல்லாமல் அற்பமான விஷயத்திற்கு ஒருவர் மீது ஒருவர் விழுந்து வெட்டிச் சாய்க்க முயலுவதை என்னவென்று சொல்ல? எவ்விதமான ஒழுங்கினுக்குள்ளும் கட்டுப்பட மறுத்துப் போதையின் மிதப்பில் மனதில் தோன்றியதைச் செய்ய முயலும் பால்பாண்டியின் செயலின் பின்னால் கோபம் பொதிந்துள்ளது. திருமண வீட்டில் அவனது பேச்சினைக்கேட்டு ஆத்திரமடையும் தமயந்தியின் அப்பா ராமசாமிக்கும் பொறுமை என்பது துளியும் இல்லை. சண்டைச் சேவல்களாக சிலும்பித் திரிகின்ற மனிதர்களின் முரட்டுத்தனத்தில் ஒருவரையொருவர் அன்புடன் நேசிக்கும் இரு அன்பு உள்ளங்கள் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.  ஒரு சொல் போதும். இரு பக்கமும் இருக்கின்ற மனிதர்களின் குருதியைச் சூடாக்கி மனித உடல்களை வதைக்குள்ளாக்குவது தானாக நடைபெறுகின்றது. உடைமையும் சாதியமும் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் ஒருவரையொருவர் விரும்புகின்ற இளைஞன்- இளைஞி  பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. வறட்டுக் கௌரவத்தின் நிழலில் ஒருவரையொருவர் பழி வாங்கத் துடிக்கும் மனங்களின் வெக்கை உக்கிரமானது. சூடு சொரணை, மானம் போன்ற சொற்களின் வழியே தங்களையே உசுப்பேத்திக்கொள்ளும் ஆதிக்க சாதியினரின் மனம் வன்முறையின் களமாக உள்ளது. எந்நிலையிலும்  சமரசம் என்பது கிடையாது என நம்புகிறவர்கள் அதற்காக எதையும் செய்யத் துணிகின்றனர். முடுக்கி விடப்பட்ட சுருள் விசை போல எந்த நேரத்திலும் விடைத்துக் கொண்டிருக்கும் ஆண்களின் உடலானது வீரம் பற்றிய போதையில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒரு நிலையில் வீரத்தை முன்வைத்துச் செய்யப்படும் செயல்கள் சாகசங்கள் எனத் தோன்றுகின்றன. ஊர்ப்பஞ்சாயத்தின் மூலம் மகள் தமயந்திக்கு மணவிலக்குப் பெறுவதன்மூலம் தனக்கேற்பட்ட அவமானம் நீங்கும் என ராமசாமி நம்புகிறார். பஞ்சாயத்தின்போது சண்டை வந்தால் வெட்டிச் சாய்க்க ஆட்களை இரு பக்கத்தினரும் தயார் செய்கின்றனர். சாராயம், கிடாய்க் கறிச்சோறு எனப் போதையில் எதையும் செய்ய முயலும் கூட்டத்தினர் ஆவேசத்துடன் காத்திருக்கின்றனர். பஞ்சாயத்தினரின் அமைதிப் பேச்சைக் கேட்காமல்  ஆயுதங்களுடன் மோதுவதற்காக இரு குழுவினரும் வம்புப் பேச்சில் ஈடுபடுகின்றனர். வன்முறையின் உச்சத்தில் கதையை ரத்தமாக்க விரும்பாத வேல ராமமூர்த்தி, தம்பதியினரான ’’சேதுவும் தமயந்தியும் கட்டிப்பிடித்து இறுகி.. இறுகி.. விக்கி.. கண்ணீராய்’’ என முடிவு சொல்கிறார். கதையின் இறுதியில் நாடகியத்தன்மையான முடிவு சொல்லப்பட்டுள்ளதற்குக் காரணம் ராமமூர்த்திக்கு மனிதர்கள் மீதான ப்ரியம்தான். யதார்த்தத்தில் இரு தரப்பினரிடையிலும் அடிதடி வலுத்து, மண் ரத்தத்தில் சிவப்பது நடைபெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம். நம்பிக்கையின் ஒளிக்கீற்றினை முன்னிறுத்துவதுதான் மேன்மையான படைப்பின் அடையாளம் என்பது கன்னி தானம் கதையில் வெளிப்பட்டுள்ளது.

              ’ரைட் போகலாம்’ கதை சுவராசியமான மொழியில் விளிம்பு நிலையினரின் மனநிலையினைப் பதிவாக்கியுள்ளது. லட்சுமிபுரம் ஜனங்கள் ரொம்ப நாட்கள் போராடி மனு கொடுத்துத் தங்கள் ஊருக்குப் பேருந்து வருவதற்குப் போராடி வெற்றியும் பெற்றனர். அந்தப் பேருந்து தினமும் தங்கள் ஊருக்கு வர வேண்டுமென்பதற்காகச் சிலர் எவ்விதமான வேலையும் இல்லாவிட்டாலும் பக்கத்து ஊர்களான சாயல்குடி, பெருநாழிக்குப் பயணிக்கின்றனர். ‘’ மழை தண்ணி இல்லே. காட்டுச் சோலியும் கெடையாது. காளியம்மன் கோயில் ஆலமரத்தடியில் கூடி ஊர்க்கதை பேசுறதுதான் சோலி’’  என ராமமூர்த்தி கிராமத்துச் சூழலை நாசுக்காக விவரித்துள்ளார். அந்த மாதிரி கிராமத்திற்குப் பேருந்து போவது என்பது ஒருவகையில் அதிசயம்தான். ஊராருக்கோ பேருந்தைத் திடீரென நிறுத்தி விடுவார்களோ என்ற சந்தேகம். இத்தகு சூழலில் இன்வாய்ஸில் லட்சுமிபுரம் என ஸ்டேஜ் எழுதாமல் பெருநாழி என எழுதியதற்காக சண்டை பிடித்த முனியசாமி. தனது செருப்பைக் கழற்றி டிரைவரை நோக்கிச் வீசினார். அடுத்த நாள் பேருந்து ஊருக்குள் போகாமல் லட்சுமிபுரம் விலக்குப் பாதையுடன் திரும்பியது. கையிடுக்கில் குழந்தையுடன் கோணிச்சாக்கு மூட்டையுடன் இறங்கிய  பெண், ‘’ அந்தக் கூறு கெட்ட முனியசாமியை…  பழைய விளக்கமாத்தாலேயே நாலு சாத்து சாத்தணும்’’ எனத் திட்டியவாறு மண் பாதையில் நடந்தாள் எனக் கதை முடிகிறது. விவசாயம் , தண்ணீர் என எதுவும் இல்லாவிட்டாலும்  தங்களுடைய ஊர் என்ற பெருமிதத்தில் வாழ்கின்ற கிராமத்தினர் சாதாரண விஷ்யத்தினுக்குக்கூட எளிதில் உணர்ச்சி வயப்படுகின்றனர். அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த புரிதலற்று, தங்களுடைய வீராப்பினை வெளிக்காட்டுவதன் விளைவுதான் ஊருக்குள் பேருந்து வராமல் கடந்து போவது நிகழ்கின்றது. வெட்டி நியாயம் பேசும் மனிதர்களின் செயலினால் பாதிக்கப்படுவது கிராமத்தினர்தான். முனியசாமியின் செயலில் பொதுநலன் பொதிந்திருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்காகப் பின்பற்றிய முறை சிக்கலானது. முனியசாமியை விளக்கமாற்றினால் நாலு சாத்து சாத்த வேண்டுமெனச்  சொல்வது அந்தப் பெண் மட்டுமல்ல, வேல ராமமூர்த்தியும்தான்.

       கரிசல் காட்டில் எப்பொழுது மழை பொழியும் என்பது யாரும் அறிந்திராத சங்கதி. வெக்கையடிக்கும் பூமியில் திடீரென மழை கொட்ட ஆரம்பித்தால் அங்கு வாழும் மனிதர்களின் இயல்பு முழுக்க மாறிப் போகின்றது. ஈரம் ததும்பும் நிலத்தின் மீதான ப்ரியம் மனதிலும் கசிவை ஏற்படுத்துகின்றது. கிராமத்தினரின் மனதில் படிந்திருந்த இறுக்கம் தளர்ந்து எல்லோருடனும் உற்சாகத்துடன் பேசுகின்றனர். மழையைப் பார்த்தவுடன் இன்னும் ஆறு மாதத்திற்குக் காட்டில் வேலை, உணவுக்கு உத்திரவாதம் என்ற நம்பிக்கையுடன் இளகிப் போகிறார்கள், மழை ஏதோ மாயம் செய்தது போல ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்த்தும் விந்தையான அனுபவங்கள் கிராமம் எங்கும் மிதக்கின்றன. இடைவிடாமல் கொட்டுகின்ற மழையினால் கண்மாய்க்கு வருகின்ற வெள்ளத்தின் வரத்து அதிகரித்ததினால், கண்மாய் கரை உடையும் அபாய நிலை ஏற்படுகின்றது. கிழக்குப் பக்கம் கண்மாய் உடைப்பெடுத்தால் ராவுத்தமாரும் பகடைகளும் அழிவார்கள் என நினைத்து  மேற்குக் கரையைக் கிராமத்தினர் உயர்த்துகின்றனர். முஸ்லீம்களும் அருந்ததியர்களும் ஒன்று சேர்ந்து கிழக்குக் கரையை உயர்த்துகின்றனர். தொடர்ச்சியான மழையினால் காட்டுப் பகுதியிலிருக்கும் கரை உடைந்து வெள்ளம் விளைச்சல் நிலம் இருக்கும் பகுதியில் பாய்கிறது. அதனையறிந்த கிராமத்தினர் இப்பொழுது சாதி, மதம் பாராமல் ஒன்று சேர்ந்து கண்மாயை நோக்கி ஓடுகின்றனர். வறண்ட பூமியில் ஆண்டுதோறும் பொழியாமல் விவசாயத்தைச் சீரழிக்கும் மழையானது, திடீரென இடைவிடாமல் பொழிந்து கண்மாய்களை உடைத்து எல்லாவற்றையும் நாசமாக்குவதும் நடைபெறுகிறது. இத்தகு சூழலில் காடுகரையினை நம்பி வாழ்கின்ற சம்சரிகளின்  பிழைப்பு துயரமானது. இயற்கையுடன் கரிசல்காட்டுவாசிகள் போராடுகின்ற நிலையினை விவரிக்கும்போது சாதி, மதம் பற்றிய விமர்சனமானது ’தடம்’ கதையில் முன் வைக்கப்பட்டுள்ளது.
        கிராமத்துக் கதைகளின்மூலம் வேல ராமமூர்த்தி புனைந்திடும் உலகு என்பது பொதுவாக மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாக உள்ளது. சிறந்த கதைசொல்லியாக விளங்குகின்ற ராமமூர்த்தி எந்தவொரு நிகழ்வினை விவரிப்பது என்றாலும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் கதைக்குள் மூழ்கி விடுகிறார். ஏற்கனவே கதையின் விளைவு அவருக்குள் ஏற்படுத்தியுள்ள அனுபவங்களைப் பரபரப்பான மொழியில் கதைகளாக்கியுள்ளார். பெரும்பாலான கதைகளில் இடம் பெற்றுள்ள அலங்காரமான சொற்கள் வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்துகின்றன. அவை ஒருநிலையில் கதையுடன் ஒன்ற விடாமல் தடுக்கின்றன. இக்கட்டான சம்பவத்தினை விவரிக்கும்போது அழுத்தமான மொழி நடையைக் கையாண்டால், யதார்த்த எழுத்து நுட்பமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. வெற்று உணர்ச்சிகளும் சம்பவங்களும் ஒருபோதும் சிறந்த கதையாக உருவெடுக்காது என்பதை ராமமூர்த்தி புரிந்து கொள்ள வேண்டும். கரிசல் மண்ணிற்கே உரிய வாழ்க்கையினைப் பதிவாக்குவதில் எவ்விதமான சமரசமும் இல்லாமல் தனக்குத் தோன்றிய மொழியில் பதிவாக்கியுள்ள ராமமூர்த்தியின் எழுத்து பிசிறாக இருப்பது வட்டார எழுத்தினுக்குரிய தன்மையாகும்.

       வேல ராமமூர்த்தி எழுதியுள்ள கதைகளின் மொழியானது உணர்ச்சி வயப்பட்ட நிலையில் ஆதிக்க சாதியினரின் செயல்பாடுகளைப் பதிவாக்கியுள்ளது. சாதிப் பெருமையை முன்னிறுத்தி, வீரம் என்ற புனைவினை ஆதாரமாகக்கொண்டு கரிசல் காட்டுவாசிகள் செய்கின்ற செயல்கள் ஒருவகையில் நகரத்து மனிதர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும். மண்ணோடு சேர்ந்து நாடோடித்தன்மையின் எச்சங்களுடன் வாழ்கின்ற மனிதர்களின் பலமும் பலவீனமும் பாரம்பரியமான கண்ணியில் ஒன்றிணைகின்றன. வேட்டை சமூகத்தின் மனநிலையில் இன்றும் சின்ன விஷயத்திற்காகவும் ஆயுதமேந்தும் மனநிலையுடைய மனிதர்களின் வாழ்க்கையை எளிதில் புறக்கணிக்க முடியாது. ஆதி சமூகத்தினரின் நிழல்களாக நடமாடுகின்ற மனிதர்கள் பற்றிய வேல ராமமூர்த்தி சித்திரிக்கும் கதைகளை வெறும் புனைவுகளாக ஒதுக்கிவிட முடியாது.