Friday 2 June 2017

ந.முருகேசபாண்டியன் நேர்காணல்

ந.முருகேசபாண்டியன் நேர்காணல் 

கேள்விகள்எஸ்.செந்தில்குமார்.

2017,ஜூன் மாத புதிய பேசும் சக்தி  இதழில் எஸ்.செந்தில்குமாரினால் குதறப்பட்டு வெளியாகியுள்ள எனது நேர்காணலின் அசல் வடிவம்

வாசிப்பு முறையே எழுத்து முறையை உருவாக்குகிறது

1. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சிறுகதையின் கச்சிதமான வடிவம் இப்போது நீர்த்துப்போய்க்  கச்சிதமற்ற வடிவத்தில், ஒழுங்கற்ற மொழியில் இயங்குகிறது. நீங்கள் தொடர்ந்து சமகால எழுத்தை வாசித்து வருகிறீர்கள். இந்தச்சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?
   இப்போது போஸ்புக்கில் நாலுவரி எழுதியவர்கள் எழுத்தாளர்களாக வலம் வருகிறார்கள். பேஸ்புக் நண்பர்களுடன் அதைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அவர்களை வைத்துக் கூட்டம் நடத்துகிறார்கள். அது சரிதான். அதேவேளையில் அது போதாதது. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான எழுத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது குறித்துப் பெரும்பாலான பேஸ்புக் எழுத்தாளர்களுக்கு அபிப்ராயமில்லை. பொதுவாக முந்தைய தலைமுறை எழுத்தாளர்களிடமிருந்த மெனக்கடல் இப்போது குறைந்து வருகிறது. தீவிரமான எழுத்தை வாசிப்பது, எங்கிருந்து தொடங்குவது என்பதைப் பற்றிய அடிப்படையான தேடுதல் பலரிடம் இல்லை. இதில்  கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம். எனக்குத் தெரிந்து இன்றைய கவிஞர்களில் சிலர் கலாப்ரியா, பிரம்மராஜன், சுகுமாரன் போன்றவர்களின் காலம் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். அது எப்படி முடியும்? வெள்ளிவீதியார், கபிலர், பரணர், காரைக்கால் அவ்மையார், ஔவை, இளங்கோ ஆகியோர் இன்றும் படைப்புகளின் வழியாக நம்மிடம் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியிருக்கும்போது நவீன கவிஞர்களின் படைப்புகள் எப்படி காலாவதியாகும்? கலாப்ரியா போன்றவர்கள் இன்றைய தலைமுறைக் கவிஞர்களுக்குத்  தடைக்கல் என்று கருதுவது சரியல்ல. அவர் மட்டுமல்ல பல சீனியர் கவிஞர்களின் கவிதைகள் இளம் கவிஞர்களுக்கு ஒவ்வாமையைத் தருகின்றன.
        எதற்காகப் படைப்பை வாசிக்கிறோம்? எதற்காக வாசித்ததைக்  கொண்டாடுகிறோம்?      ஒரு சிறுகதையை வாசிக்கிறேன். அதிலுள்ள உலகத்தை அதன் கதாபாத்திரத்தைக் கொண்டாடுகிறேன். அதை எழுதிய மனதுக்கு சொந்தக்காரரை நேரில் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து கொண்டாடுகிறேன். அதுதான் எழுத்தாளர்களிடம் நெருங்கி உரையாடுவதற்கான அடிப்படைக் காரணம். ஆனால் இப்போது அந்த உரையாடல் இல்லை. எப்போதும் ஸ்மார்ட்ஃபோனுடன் இருப்பவர்களுக்குப் பொறுமை இல்லை. வாசிக்க நேரமில்லை. அதுதான் அவர்களது பிரச்சினை. அப்படியானவர்களின் கதைகளில் மட்டும்தான் நீங்கள் கூறிய பிரச்சனை இருப்பதாக உணர்கிறேன். மற்றபடி தீவிரமான சூழலில் எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டிருக்கும் பலரின் கதைகள் நேர்த்தியாக வருகிறதை உணர முடிகிறது.
2.அப்படி தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் இளந்தலைமுறைப் படைப்பாளிகளைப் பற்றியும் அவர்களது புனைவுலகத்தைப் பற்றியும் உங்களது மதிப்பீடு என்ன?
    புனைவு எழுத்தில் இளந்தலைமுறையினர் உத்வேகத்துடன் எழுதுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக அவர்கள் நாவலாக்கத்தில் வெவ்வேறு வடிவங்களில் கதைசொல்லத் தொடங்கியுள்ளனர். தமிழ்ப் படைப்புகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. இரா.முருகவேள், ஏக்நாத், எஸ்.செந்தில்குமார், வா.மு.கோமு. கீரனூர் ஜாகிராஜா,  விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி, சரவணன் சந்திரன், பாஸ்கர் சக்தி, கரன் கார்க்கி, குமாரசெல்வா, லக்ஷ்மி சரவணக்குமார், நக்கீரன், ஆர்.அபிலாஷ், அரவிந்தன், எஸ்.அர்ஷியா, சைலபதி, கலைச்செல்வி, அப்பண்ணசாமி என  நாவலாசிரியர்களின் அட்டவணை நீள்கிறது. சிறுகதை ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: கார்த்திகைப் பாண்டியன், பாலசுப்பிரமணியன், கவிதா சொர்ணவல்லி, பா.திருச்செந்தாழை, குமார் அம்பாயிரம்,என்.ஸ்ரீராம்,காலபைரவன், சந்திரா, கே.என்.செந்தில், விஜய்மகேந்திரன் ஜே.பி.சாணக்யா, சுதாகர் கத்தக்.  

3.நீங்கள் விமர்சன கட்டுரைகள் எழுதத் தொடங்கும் காலத்திலும் இப்போதும் உங்களது அனுகுமுறை நேர்மையாகவும், எழுத்தின் மேல் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்குவதாகவும் இருக்கிறது. இந்த விமர்சன நிலையை உருவாக்கியதுதான் உங்களது எல்லையா?
    எல்லை என்று எதையும் சொல்லமுடியாது. தீவிரமான மனோபாவம் இருந்தது. அதற்குக் காரணம் எனக்கு முந்தைய காலகட்டத்தில் மூத்த விமர்சகர்கள் வெங்கட்சுவாமிநாதன், கா.நா.சு. சு.ரா. விமர்சித்த கட்டுரைகளை வாசித்தால் அவர்களது ஈடுபாட்டைப் புரிந்துகொள்ள முடியும். அவங்க எழுதுன விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தார்கள். துல்லியமான மதிப்பீட்டை முன் வைத்தார்கள். பிரதியை அழகியல், ரசனை என அர்த்தப்படுத்தினார்கள். அதுமட்டுமல்ல எனது வாசிப்பு முறைதான் என்னை உருவாக்கியது. சோவியத் நாட்டு இலக்கிய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் என்னைப் பாதித்தன. நான் எழுதத்தொடங்கிய காலத்தில் பேச்சும் மறுபேச்சும் இருந்தன. அன்றைய எழுத்தாளர்கள் தங்களைப் பற்றிய கருத்தை முன்னிறுத்துவதைப் பார்க்கமுடியாது. முக்கியமாக இரண்டாயிரத்திற்குப்பிறகு உலகமயமாக்கல் காலத்தில் எல்லாமே சந்தைமயமானது. நுகர்வுப் பொருள் போல இலக்கியமும் சந்தைப்படுத்தப்பட்டது. இலக்கியத்திலும் அந்தப் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

4.அனுபவமும் ரசனையும் சார்ந்த விமர்சனக் காலத்தில் நீங்கள் மட்டும் அல்ல பலரும் பின்நவீனத்துவம், பின் காலனியத்துவம் என்று புதிய விமர்சன கோட்பாட்டுச் சூழலை முன் வைத்தார்கள். எதனடிப்படையில் இது தமிழில் நிகழ்ந்தது?
சிறுபத்திரிகை மரபுதான். வேறெதுவாகவும். இருக்கமுடியாது. 1970களின் தொடக்கத்தில் பிரமீள் இது சார்ந்த கட்டுரைகள் எழுதிவிட்டார். அதற்கான தளம் அப்போதிருந்தே தொடங்கி கட்டமைக்கப்பட்டுவிட்டது. தமிழில் சோஷலிஸ எதார்த்தவாதத்திற்கு எதிராகக் கம்யூனிசத்திற்கு எதிராக மையத்தைச் சிதைத்து விளிம்பு xமையம் என்கிற விஷயத்தைப் பற்றி எழுதினார்கள். நாகார்ஜூனன், தமிழவன், அ.மார்க்ஸ்,  க.பூரணசந்திரன், பிரேம் ரமேஷ் போன்றவர்கள் கோட்பாடுரீதியில்  இலக்கியத்தை அணுகியது புதிய போக்கினுக்கு வழிவகுத்தது.

5.இதே காலத்தில்தான் கட்டுடைத்தல் என்கிற வார்த்தையும் அதன் அதிகாரமும் பெரிய அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தன. பிரம்மராஜன், நகுலன் ஆகியோரின் கவிதைகளை இம்மாதியான விமர்சகர்கள் கட்டுடைக்கிறேன் என்று புதிய அர்த்தங்களை வாசகனது மண்டை மூளைக்குள் திணிக்க முயற்சி செய்தார்கள். இது எந்தளவுக்குச் சாத்தியமானது?
   உண்மைதான். கவிதையைக் கட்டுடைத்தல் ரொம்பவும் அபத்தமானது. தமிழிலுள்ள இத்தனை உரையாசிரியர்களின் கவிதை சார்ந்த கட்டுடைத்தல் கட்டுரைகளை உரைகளை வாசித்து வருகிறேன். வாசகன் கவிதையை எப்படி வாசிக்கிறானோ அதன் அர்த்தத்தின் வழியாகத்தான் கவிதையின் கட்டமைப்பு, காலம் காலமாகப் போய்க் கொண்டிருக்கிறது. கவிதையைக் கட்டுடைத்தல் என்கிற விஷயத்தை தமிழவன், க.பூரணசந்திரன் ஆகியோர் தொடர்ந்து செய்து வந்தனர். கவிதை தவிர்த்து சிறுகதை, நாவல் ஆகியவற்றிலும் இது தொடர்ந்து நடந்தது. அவர்கள் கட்டுடைத்த கவிதைகள் வேறொரு வகையான கவிதையாக இருந்தது. அதே சமயம் பூரணசந்திரன் கட்டுடைத்த சங்ககாலப் பாடல்கள் சிறப்பான பணியாகும். அது ஆய்வாள்ர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவைப்பட்டது.
  அன்றைக்கு அழகியல் சார்ந்த விஷயம் என்கிற விமர்சனமுறை இருந்தது. அழகியல் என்பதே அது பார்ப்பனர் அல்லது உயர் சாதியினரின் அழகியல்தான். கவிதை, சிறுகதையில் இரண்டு வரிகள் அல்லது சொற்கள் கூடுதலாக இருந்தால் அதன் உன்னதத்தை அது இழந்துவிடுகிறது என்ற விமர்சன மரபு வலுவாக நிலவியது. அதுதான் அழகியல்கூறு. செய்நேர்த்தி என்பதுதான் அழகியல். அந்தப் பார்ப்பனிய அழகியலைத்தான் அப்போதைய தமிழ்ச் சூழலில் முன்வைத்தார்கள். அந்த அழகியலை ஒருபோதும் அடையமுடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

6. ஏன் முடியாது. அதற்கான காரணம்?
   வீணையை வாசிப்பதற்கான விரலும் அதைக் கேட்பதற்கான செவியும் அதுசார்ந்த வாழ்வியலும் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். என்னைப் போன்று கிராமத்திலிருந்து வந்தவர்கள், பறை அடியைத்தான் கேட்டுக்கொண்டிருந்திருக்க முடியும். பறை இசை மேன்மையானது என்று பேசவரவில்லை. சூழல்தான் ரசனையைத் தீர்மானிக்கிறது. கலைக்கு வாழ்க்கை அனுபவம்தான்தான் முக்கியம் . இந்த ரசனை மரபு உருவானது எப்படி? அறுபதுகளில்கூட ஆங்கில அறிவு கொண்டவர்களாகவும் படிப்பறிவு உள்ளவர்களாகவும் பிராமணர்கள் மட்டுமே இருந்தனர். பிராமணர்கள் போஜனபிரியர்கள் என்றனர். வயிறு இருக்கிற எல்லோரும் போஜனபிரியர்கள்தான். அன்று உணவு விளிம்புநிலையினருக்குக் கிடைக்கவில்லை. அவர்களுக்குக் கிடைத்தது. அரசர்கள் அவர்களுக்கு உணவைத் தந்தார்கள். இதுதான் அந்த ரசனைக்கு ஆதாரம். இதைத்தான் வாழ்வு சார்ந்த கலை அனுபவம் என்று சொல்கிறேன். பசிக்கும்போது எப்படி ரசிக்கமுடியும்? உயர்சாதியினர் வாழ்க்கை சார்ந்து ரசனை சார்ந்து ஒரு அடிப்படையை முன்வைத்தார்கள். அவர்கள் அளவில் அது சரியானது. அதை நாம் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்வது என்பது நம்முடைய வாழ்வனுபவம் சார்த்தது.

7.ஒரே காலகட்டத்தில் நீங்கள் சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, ரமேஷ்பிரேமின் சொல் என்றொரு சொல் ஆகிய நாவல்களுக்கு மதிப்புரை எழுதுகிறீர்கள். எதனடிப்படையில் நீங்கள் பிரதியைத் தேர்வு செய்கிறீர்கள்? 
என்னுடைய பார்வை ஒவ்வொரு காலத்திலும் மாறிவருகிறது. வாடாமல்லி நாவலைப் பற்றி இந்தியாடுடே இதழில் ஒரு விமர்சனம் வந்தது. அந்த மதிப்புரை மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்திருந்தது. நான் அந்த நாவலை வாசித்தேன். அந்த நாவலை எழுதிய சமுத்திரத்திற்கும், மதிப்புரை எழுதியவருக்கும் அரவாணி என்றால் யார்? அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. அடிப்படையெதுவும் புரியவில்லை. சமயநல்லூரில் எங்கள் தந்தையார் கடை வைத்திருந்தபோது அங்கு வரும் அரவாணிகளுடன் எனக்கு நட்பு உண்டு. அவர்களுடன் பேசியிருக்கிறேன். நாவலில் வரும் விளையாட்டு வீரனுக்காக மீரா என்கிற அரவாணி காத்திருப்பது போல அவனுக்காக அவள் ஏங்குகிறாள் எனச் சமுத்திரம் எழுதியிருப்பார். இது அபத்தமானது. இதை ஏன் கொண்டாடினார்கள் என்று புரியவில்லை. இதனை உடைக்க வேண்டுமென விரும்பி மதிப்புரை எழுதினேன். காலச்சுவடு கண்ணன் அதை வாசித்துவிட்டுப் பாண்டியன் ரொம்பவும் கடுமையா இருக்கே என்று சொன்னார். பரவாயில்லை எதிர்வாதம் வந்தால் வரட்டுமெனச் சொன்னேன். அவரும் பிரசுரம் செய்தார். ஆனால் சொல் என்றொரு சொல் நாவல் அப்படியல்ல. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரமேஷ்பிரேமின் கதை சொல்லும்முறை வித்தியாசமானதாக இருந்தது. மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவர்களது விருப்பத்திற்கு கதை சொன்னார்கள். அந்தத் தன்மை எனக்குப் பிடித்திருந்தது. புலிவால் கடற்கரையில் மிதந்து கொண்டிருந்தது என்று சொன்ன கதை அற்புதமானது. ஆச்சரியத்தைத் தந்தது. அதனால் அந்த நாவலுக்கு மதிப்புரை எழுதினேன்.

8.தமிழ் நாவல்களில் காலம், வெளி ஒவ்வொரு எழுத்தாளர்களிடம் ஒவ்வொரு விதமாக செயல்பட்டது. ஜெயகாந்தன், அசோகமித்ரன், சுந்தரராமசாமி, ஆகிய மூத்த எழுத்தாளர்களின் கதையுலகம் அதற்குள் இயங்கும் காலம், வெளி ஒரு காலத்தின் குரலாக இருந்தது. அதுவே பிரமிப்பாக வாசிப்பதற்கு இருந்தது. இதற்கு நேர்மாறாக எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கி ஆகியோரின் நாவல்களின் காலமும் வெளியும் மிகப்பெரிய விஸ்தாரமானது. ஒருநூற்றாண்டு இரண்டு நூற்றாண்டு என்று அவர்கள் காலத்தை விரித்து எழுதுகிறார்கள். உண்மையிலே தமிழ் நாவல்களின் முகம் என்ன?
   தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள், அசோகமித்ரனின் கரைந்த நிழல்கள், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதைபோன்ற  நாவல்கள் ஏதோ ஒரு மையம் சார்ந்து துல்லியமாகக் கதையை அதன் ஆசிரியர்கள் கட்டமைத்திருப்பார்கள். அது ஒரு காலகட்டம். இலக்கியத்தில் துல்லியமானது என்று எதுவுமில்லை. எழுபதுகளில் வெளியான ப.சிங்காரத்தின் புயலில் ஒருதோணி நாவலைப் பற்றி விமர்சனக் கட்டுரையை மதுரைக் கூட்டத்தில் வாசித்தேன். சுந்தரராமசாமிக்கு அது நாவலாக தோன்றவில்லை. அதைப் பற்றி என்னிடம் கேட்டார். சி.மோகனும் நீங்களும் அந்த சிறந்த நாவல்ன்னு மாதிரி என்னாலே ஏத்துக்க முடியலை பாண்டியன்னு சொன்னார். அவருக்கு அது நாவலாகத் தோன்றவில்லை. அது எப்படி நாவலாகும் என்று கேட்ட நேர்மை எனக்குப் பிடித்திருந்தது.   ஆனால் இன்று வாசிப்பு நிலமை அப்படி இல்லை. காலம் மாறமாற வேற்று மொழி நாவல்களின் தாக்கம் உருவாக உலகமயமாக்கலின் வருகை எனத் தமிழின் நாவலின் மரபான கதைசொல்லல் சிதைந்தது. காப்ரியல் கார்ஸியா மார்கோஸின் ஒரு நூறாண்டுகளின் தனிமை நாவலில் தொடங்கிப் பல நாவல்களின் தாக்கம், தமிழ் எழுத்தாளர்களிடம் உண்டு. ஜெயமோகனின் ரப்பர் நாவல் சு.ரா.வின் புளியமரத்தின் கதையின் தாக்கம் என்று உறுதியாகச் சொல்வேன். ஆனால் விஷ்ணுபுரம் அப்படியல்ல. விஷ்ணுபுரம் என்கிற பிரம்மாண்டமான கற்பனை உலகத்தின் மூலம் வாழ்க்கையில் அவர் சந்தித்த அனுபவங்களின் மூலமாகச் சிலபல கேள்விகளை முன் வைக்கிறார். அது ஒரு காவிய மரபின் தொடர்ச்சி. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய கதைகளில் நிறைய துணைக் கதாபாத்திரங்கள் வரும் கிளைக் கதைகள் இருக்கும். அதேமாதிரியான போக்கு விஷ்ணுபுரத்திலும் உள்ளது.
    கோணங்கியின் எழுத்து முடிவற்ற கதைகளின் வழியாக விநோத உலகினுக்கு இட்டுச் செல்கிறது. அவர் கடந்து சென்ற நிலமும் வெளியும் கோணங்கிக்குள் கொப்பளித்துக் கொண்டிருக்கின்றன. பாழி, பிதுரா நாவல்களில் காலமும் இடமும் சிதைந்த நிலையில் கோணங்கி சித்திரிக்கும் காட்சிகளும் தருணங்களும் அபூர்வமானவை.
   எஸ்.ராமகிருஷ்ணன் அவரோட நாவல்களில் நிறையக் கதைகளை முன் வைக்கிறார். நெடுங்குருதி நாவலில் நாடோடிகள், விசித்திரமான பயணிகள் அவர்களுடைய கதைகள், வாழ்வியலைக் குறிப்பிடுகிறார்.  யாமம், துயில், இடக்கை என ராமகிருஷ்ணன் எழுத்தின் வழியாகப் பின்னோக்கிப் பயணிப்பது, மஞ்சு படிந்த மலைமுகடுகள்  போல இருக்கின்றன. பொதுவாக வாசிப்புமுறைதான் அவர்களது எழுத்துமுறை என்று சொல்வேன். இவர்களுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களின் வாசிப்புகள், தங்களது படைப்புலகை விரிவு செய்துகொள்ள முனைந்துள்ளன.

9.நீங்கள் பெரும்பாலும் கவிஞர்களின் தொகுப்பை முன்னிலைப்படுத்தியே விமர்சனம் எழுதுகிறீர்கள். உங்களுக்குக் கவிதையின் மேல் ஈடுபாடு அதிகமா?
  கவிஞர் யவனிகாஸ்ரீராம் ஒருதடவை என்கிட்டே சொன்னாரு. அண்ணாசி நீங்க கவிஞர்களுக்குத் துரோகம் செய்யுறீங்கன்னு. எனக்கு அவருக்கும் சண்டையே வந்தது. என்ன காரணத்திற்காக இப்படி சொல்லுறீங்கன்னு கேட்டேன். நீங்க நாவலாசிரியர்களுக்கும் சிறுகதையாசிரியர்களும்தான் முக்கியத்துவம் தந்து மதிப்புரை எழுதுறீங்க. கவிஞர்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டுறீங்கன்னு சொன்னாரு. ஆனா நீங்க இப்போ மாத்திச் சொல்றீங்க. உண்மையிலே என்ன விஷயமுன்னா, எனது விமர்சனத்தில் அதிகமாகப் புனைவுகளுக்கும் கட்டுரைகளுக்கும்தான் முக்கியத்துவம் தந்திருக்கிறேன். கவிஞர்கள் இப்பத் தமிழில் நிரம்ப இருக்கின்றனர். ஆனால் தமிழ்க் கவிதையிலே நிறைய பிரச்சினைகள் இருக்கு. தீடீர்ன்னு ஒருத்தர் வந்து ஆறாவது கவிதைத்தொகுப்பு அல்லது  ஏழாவது தொகுப்புன்னு ஒரு புத்தகத்தை நீட்டுறாரு. அந்தக் கவிதைத்தொகுப்பை வாசிச்சா, அவரோட முதல் தொகுப்புத் தரத்திலேதான் இருக்கு. அதுகூட சில சமயத்திலே இருக்காது. தமிழ்க் கவிதையிலே ஒன்றுபோலப் பிரதி செய்தல் செய்தல் அதிகம். ஒரே மாதிரி கவிதைத் தொகுப்புகள் நிறைய வெளிவருது. குறிப்பிட்ட கவிஞரின் கவிதை உலகம் என்று தனியான அடையாளம் மிகவும் முக்கியம். சிலரின் கவிதைத்தொகுதிகளுக்குத் தரப்பட்டுள்ள அணிந்துரையை வாசித்தால் தலை சுற்றுகிறது. என்ன சொல்ல வருகிறார்கள் எனக் குழப்பமாக இருக்கிறது.       நாவலாசிரியன், சிறுகதையாளன் தங்களது புனைவுலகத்தைப் புதிதாகக் கண்டுபிடித்து வைத்திருக்கிறான்; அதற்காக மெனக்கெடுகிறான்; கடுமையாக உழைக்கிறான். அது புனைவில் தெரிகிறது. படைப்பில் பொறுக்கானது காலப்போக்கில் உதிர்ந்துவிடும்.

 10.இதற்கான காரணம், வேலை காரணமாக வீட்டிலிருந்து வெளியேறித் தனியாக இருக்கிற சூழலா? வீட்டில் தனது உறவுகளுடன் இருக்கும்போதும் வீட்டிலிருந்து வெளியேறி அதாவது குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறி தன்னைத் துண்டித்துவிட்டுத் தனிமையில் எழுதும்போது அவனது சிந்தனைமுறை, உலகம் மாறிவிடக்கூடியதாக இருப்பதுதான் இதற்கான காரணமா? இன்று  பெரும்பாலும் எழுத வருகிறவர்களின் பின்புலத்தை வைத்துப் பார்க்கும்போது எனக்கு இப்படியாகத் தோன்றுகிறது?
   எண்பதுகளுக்குப் பிறகு கூட்டுக்குடும்பம் என்கிற கம்யூன் மாறித் தனிக் குடும்பம் என்றாகிவிட்டது. தமிழர் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் இது பொருந்திவிட்டது. கூட்டுக்குடும்பத்திலிருந்த போதும் தனித்தனியாக வாழும் போதும் இருவேறு சிந்தனாமுறைகளில் மனிதன் இயங்குகிறான் என்பது உண்மைதான். இருவேறு உலகம்தான். உலகமயமாக்கலுக்குப் பிறகு கணவன்- மனைவி பிரிந்து சென்று தனித்தனியாக வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இது சகஜமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது மரணப்படுக்கையிலிருக்கும் தங்களது பெற்றோர்களை Hospiceகளில் கொண்டு சேர்ப்பது பிள்ளைகளுக்கு இயல்பாகிவிட்டது. வயதான நெருங்கிய உறவினர்களை வீட்டில் வைத்துக் கவனித்துக்கொள்வதைத் தொந்தரவு எனக் கருதுமாறு தமிழர் வாழ்க்கை மாறியுள்ளது. இந்தச் சூழலைத் தமிழ்  எழுத்தாளர்கள் விமர்சிக்கிறார்கள். தங்களுடைய பூர்விகம், மரபு, பாரம்பரியம், இருப்பு குறித்துப் படைப்புகளின் வழியாகக் கேள்விகள் கேட்கிறார்கள். இநதக் கோணத்தில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் பழமையைப் போற்றுகிற பிற்போக்குவாதிகள்தான். ஏனென்றால் யதார்த்த வாழ்க்கையானது, எழுத்தாளரின்  புனைவைவிடக் கொடூரமாக உள்ளது.

11.பிற்போக்குவாதிகள் என்கிற விமர்சனம் இருக்கத்தான் செய்கிறது என்ற போதிலும் தமிழ் எழுத்தாளர்களிடம் ஆகப்பெரிய பிரச்சினையாகச் சமகால அரசியலில் தங்களைப் பொருத்திக்கொள்வதில்லை. கேரளாவிலுள்ள எழுத்தாளர்கள் உடனுக்குடன் சமூக எதிர்வலைகளை உருவாக்குகிறார்கள். பணமாற்றம் பிரச்சினைக்கு அவர்கள் குரல் கொடுத்துள்ளனர். முல்லைப் பெரியார் அணை தொடர்பான வாதங்களை எழுப்புகின்றனர். ஊடகங்களுக்குப் பேட்டி தருகிறார்கள். குறிப்பாகக் கதையாகப் பதிவு செய்கிறார்கள். இது தமிழில் சாத்தியமில்லாமல் போனது ஏன்?
   கேரளாவில் இடதுசாரிகளின் அரசியல் அமைப்பு வலுவானது. சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரலெழுப்புகிற மனோபாவம் சராசரி மலையாளிகளிடம் பரவலாக இருக்கிறது.  எளிமை, பாரம்பரியத்தைப் போற்றுதல் எனப் பெரும்பாலான  மலையாளிகளின் வாழ்க்கைமுறை அரசியலிலும் அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போக்கு மலையாள இலக்கியவாதிகளிடம் காணப்படுகிறது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள்தான். 1996 நடைபெற்ற போராட்டதில் அரசு ஊழியர்கள் 6.5 லட்சம் பேர் நீக்கப்பட்டார்கள். ஆனால் அரசு 1.8 லட்சம் பேர் மட்டும்தான் நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அதையொட்டி நடைபெற்ற சம்பவங்களை இதுவரை எந்த எழுத்தாளரும் ஏன் இடதுசாரி எழுத்தாளர்கள்கூடப் பதிவு செய்யவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக உச்சத்தில் அதிகாரம் செய்தபோது தமிழக எழுத்தாளர்கள் தங்களை ஒடுக்கிக்கொண்டனர். அரசியல் என்பது இலக்கியத்திற்கு எதிரானது என்ற எழுத்து காலகட்ட பத்திரிகை மனோபாவம், பெரும்பாலான எழுத்தாளர்களைக் கோழையாக்கியுள்ளது. தமிழ் எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சினையில் கருத்துச் சொல்வதற்கு அச்சமும் பதற்றமும் மிக்கவர்களாக இருக்கின்றனர்.

12. இந்தச் சூழலில்தான் கவிஞர் மனுஷ்யபுத்திரன் 500 பக்கங்கள்கொண்ட கவிதைத் தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். நாவலின் தோற்றத்தைப்போல கவிதைப்புத்தகம் தோற்றம் தருகிறது என்ற போதிலும் அவருடைய கவிதைகள் இச்சூழலில் பொருட்ப்படுத்த வேண்டியவையா?
     நிச்சயமாக. ஜெயலலிதா முதலமைச்சராகிச் சர்வாதிகாரி போலச் செயல்பட்டபோது, அதை விமர்சித்து மனுஷ்யபுத்திரன் எழுதிய அரசி கவிதை வரிகள், ஆழமான அரசியல் பின்புலமுடையவை. கடந்த ஆண்டில் தமிழகம் எதிர்கொண்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளின்போது, ஒவ்வொருதடவையும் தனது எதிர்வினையைக் கவிதையில் வெளிப்படுத்திய மனுஷின் நேர்மையும் துணிச்சலும் முக்கியமானவை. அவரைப் போன்று நிரம்பப் பேர் அரசியல் கவிதைகள் எழுத முன் வரும்போது, கவிதை கைவாளாகி விடும்.

13 .சாதிய அரசியலைப் போல அதனடிப்படையில் தமிழ் விமர்சனம் இருக்கிறதா?
   இருக்கலாம். உயர்சாதிக்காரர்கள் தமிழில் பரிசு தருகிறார்கள். விருது வழங்குகிறார்கள். யாருக்குத் தருகிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்பதைக் கூர்ந்து பாருங்கள். உங்களுக்குப் புரியும். ஒருவிதமான சாதிய மனோபாவத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இது அருவருப்பானதுதான். கையறுநிலையில்தான் இதை எதிர்கொள்ள வேண்டும். வேறு வழியில்லை. ஒருகாலத்தில் பிராமணர்களும் பிள்ளைமார்களும்தான் அதிக அளவில் எழுதினார்கள். அவர்கள்தான் குறிப்பிட்ட காலத்தில் அதிகமாகப் படித்தவர்கள். 1990வரை அவர்களது ஆதிக்கம்தான் தமிழ்ப் படைப்பிலக்கியச் சூழலில் இருந்தது. அதற்குப் பிறகுதான் தலித் படைப்பாளிகள் எழுத வருகிறார்கள். இதில் இமையம், சோ.தர்மன் ஒருவகைப்பாட்டில் இருக்கிறார்கள்; எழுதுவதைத் தவிர வேறு எந்த அரசியலையும் நிர்பந்திக்காதவர்கள். சில தலித் படைப்பாளர்கள் தங்களுடைய படைப்புகளை அரசியல் பிரதியாக உருமாற்றி ஆதிக்க அரசியலுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.  சில தலித்திய கோட்பாட்டுவாதிகளும் விமர்சகர்களும் தலித்தியத் தத்துவக் கண்ணாடியுடன் எல்லாவற்றையும் அணுகுகிறார்கள்; பிறரை ஒதுக்குகிறார்கள்; கறாரான விமர்சனத்தை முன்வைக்கின்றனர். அவர்களுடைய அணுகுமுறை இன்றைய சூழலில் தேவைப்படுகிறது. இன்றைய சூழல் நெருக்கடியான காலகட்டம். சாதி, மதம் போன்ற அடையாளங்களை மீறித் தமிழ்ப் படைப்புலகம் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது சாதாரணமான காரியமல்ல.

14. தமிழில் விமர்சனம்  என்னவாக இருக்கிறது?
   நவீன இலக்கியத்தில் விமர்சனத்திற்கான காலகட்டம் முடிந்துவிட்டது. விமர்சகர் என்ற வகையானது, இன்று அருகிவரும் உயிரினமாகி விட்டது. இப்போது அனைவரும் விமர்சகர்கள்தான். குறிப்பாகப் பின்நவீனத்துவ விமரசன மரபு வந்த பிறகு அனைவரும் தங்களது கையில் கத்தியைத் தூக்க ஆரம்பித்து விட்டார்கள். முன்பு விமர்சகர்களாக ஒருசிலர் மட்டும்தான் இருந்தார்கள். அவர்களது வேலை, அதுமட்டும்தான். சுந்தரராமசாமி போன்றவர்களும் அதே காலகட்டத்தில் விமர்சகர்களாக இருந்தனர். இன்று படைப்பாளி ஒருவர் ஒரு கையில் தனது கொடியை ஏற்றியபடி, மற்றொரு கையில் எதிராளியின் கொடியை வெட்டி வீழ்த்திட ஆயத்தமாகிறார். எல்லாரும் விமர்சனம் செய்யும்போது காத்திரமான அம்சம் என்னவென்றால் நிறைய பேச்சுகள் உருவாக வேண்டும். இப்போது அவரவர்கள் அணி சார்ந்து, குழு சார்ந்து பேசப்படுகிற பொதுவான பேச்சு ஆரோக்கியமானதாக இல்லை. நான் எழுதத்தொடங்கிய காலத்தில் யாருடைய நாவல் சிறுகதைத்தொகுப்பு முக்கியமானது என்று பேச்சு எழுத்தாளர்களிடையில் தொடர்ந்து நிகழும். இப்போது அத்தகைய பேச்சுகள் இல்லை. யாரும் மனம் திறந்து பொதுவான இடத்தில் முக்கியமான படைப்புகள் பற்றிக் கருத்துச் சொல்வதில்லை. பேச்சு இல்லாது போனதற்கு காரணம் மது என்று சொல்லத் தோன்றுகிறது. முன்னர் மதுவைக்  குடித்துவிட்டு விடியவிடியப் பிறருடைய படைப்புகள் பற்றிப் பேசியிருக்கிறோம். இன்று மதுபாட்டில்கள் எழுத்தாளனைக் குடிக்கின்றன. அப்புறம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? அப்புறம் ஸ்மார்ட்போன், வாட்ஸப், பேஸ்புக் காரணமாக வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. இன்று கவிதையைத் தவிர  வேறு எதையும் வாசிக்க  நேரமில்லையெனத் தம்பிமார்கள் புலம்புவதைக் கேட்க எனக்கு வருத்தமாக இருக்கிறது.
   ஒரு வருடத்தில் வெளியாகிற தமிழ் நூல்களில் அவசியம் வாசிக்க வேண்டியவை மொத்தம் நூறு தேறும். இதில் 20 நாவல்கள், 10 சிறுகதை நூல்கள், 30 கவிதைத் தொகுதிகள் அடங்கும். முக்கியமான படைப்புகளைத் தமிழ்நாட்டில் எத்தனை பேர் உடனுக்குடன் வாங்கி வாசிக்கிறார்கள்? சுமார் 800 பக்க நாவல்கள் 300லிருந்து 500 பிரதிகள்வரை ஓராண்டில் விற்பனையாகின்றன என்று பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். அநதப் புத்தகத்தை வாங்குகிறவர்களைக் கேட்டால் இன்னமும் படிக்கவில்லையென இரண்டு வருடங்களாகச் சொல்கிறார்கள். பிறகு என்ன காரணத்திற்காக வாங்கி அடுக்குகிறார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக வாசிப்பு என்பதே தமிழகத்தில் கணிசமாகக் குறைந்துவிட்டது.  இந்தச்சூழலில் விமர்சனமும் இதே போலாகிவிட்டது என்றுதான் சொல்வேன்..

15. இப்போது பிரதியைப் பற்றி விமர்சனம் என்பது சகப் படைப்பாளிகள் அல்லது மூத்த படைப்பாளிகளில் இணக்கமானவர்களை மேடையேற்றுவதுதான். 90களின் தொடக்கத்தில் விமர்சனத்தில் எழுத்தாளனின் பங்களிப்பே இல்லை. எழுதுவதோடு அவனது ஜோலி முடிந்துவிட்டது. இச்சூழலில் நீங்கள் விமர்சனத்தைத் தொடங்குகிறீர்கள். அப்போது உங்களது மனநிலை என்னவாக இருந்தது?
   என்னுடைய சுயம் சார்ந்துதான் எனது மதிப்பீடுகளை நான் உருவாக்குகிறேன். எனக்குப் பிடித்திருக்கிறது. எதற்காகப் பிடித்திருக்கிறது? எனக்குப் பிடிக்கவில்லை. எதற்காகப் பிடிக்கவில்லை? இத்தகைய போக்கில்தான் விமர்சனத்தை முன் வைக்கிறேன். ஒரு விஷயம் நான் விமர்சகனானது தற்செயல் நிகழ்வு. சுரேஷ் குமார இந்திரஜித்தின் மறைந்து திரியும் கிழவன் சிறுகதைத் தொகுப்புக்கு நான் எழுதிய கடிதம்தான், என்னுடைய முதல் மதிப்புரை. அது தினமணிக் கதிரில் வெளியானது. சுரேஷ்சுக்கு நான் எழுதிய கடிதத்தை வாசித்த நண்பர் ராஜமார்த்தாண்டன் அது நன்றாக இருக்கிறது என்று சொல்லி, சில பகுதிகளை நீக்கிவிட்டுப் பிரசுரித்தார். இலக்கியக் கூட்டங்களுக்கு அழைக்கும் நண்பர்களின் கட்டாயத்தினாலும் விமர்சனம் எழுதும்படி நேர்கிறது. சூழல்தான் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. ஆனால் அதேநேரம் அடிப்படையில் நான் தேர்ந்த வாசகன். நாவல், சிறுகதையைப் பற்றிப் பேசும்போது எந்த நெருக்கடியும் இல்லை. கவிதையைப் பற்றிப் பேசும்போதுதான் சிக்கல் உருவாகிறது. கவிதையில் சொற்கள் மங்கலாகவும் குழம்பிய நிலையிலும் இருக்கிறது. அந்தக் கவிதையின் மேல் சிறிது வெளிச்சத்தைப் பாய்ச்சக்கூடிய வேலையைச் செய்பவன் தான் விமர்சகன் என்று நான் கருதுகிறேன். இப்போது இளம் விமர்சகர்கள் கவிதையைப் பற்றிப் பிரசுரிக்கிற விமர்சனக் கட்டுரைகளை வாசிக்கும்போது அதற்கு அந்தக் கவிதையையே நேரடியாக வாசித்தால் நல்லது என்று தோன்றுகிறது. கவிதைத் தொகுப்பின் பின்னட்டை வரிகளைப் பலமுறை வாசித்தாலும் இறுதியில் குழப்பம்தான் மிச்சமாகிறது. என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரியலை. நேரடியாகக் கவிதைக்குள்ளே போய்விடுகிறேன். கவிதைகள் சார்ந்த சிலரின் கட்டுரைகள், கவிதையின் மேல் ஈடுபாட்டை வளர்ப்பதற்குப் பதிலாக விலகி ஓடச் செய்கின்றன.

16. அபிப்ராயம் என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு என்பது உங்களுக்குத் தெரியாதா?
   அபிப்ராயம்தான் ஒருநிலையில் விமர்சனம் உருவாவதற்கு அடித்தளம். இன்று விமர்சனத்தின் இடத்தைக் கோட்பாடு பிடித்துக்கொண்டு விட்டது. கோட்பாடு என்பதும் கோட்பாட்டு விமர்சனம் என்பதும் தமிழில் உருவானவை அல்ல. அதற்காகக் கோட்பாடு வேண்டாமென நான் மறுக்கவில்லை. இன்று எல்லாவற்றுக்கும் கோட்பாட்டை வைத்துக்கொண்டு அதன் பின்னால் ஓடவேண்டியதாக உள்ளது. நான் கண்ணை மூடிக்கொண்டு கோட்பாட்டின் பின்னால் ஓடுவதற்குத் தயாராக இல்லை. ஒரு படைப்பை அனுகுவதற்கு கைவிளக்குப் போல கோட்பாட்டை வைத்துக் கொள்கிறேன். கோட்பாடுதான் ஒரு படைப்பை முழுக்க தீர்மானிக்கக்கூடியதாக அமைந்துவிடக்கூடாது. தமிழ் போன்ற பாரம்பரியமான மொழியில் அமெரிக்க போன்ற நாடுகள் உருவாக்கிய கோட்பாடு எந்த வகையில் பொருந்துகிறது? குடும்பம், ஆண்- பெண் உறவு, மூத்தோரைப் போற்றுதல், குழந்தைகளை நேசித்தல், விருந்தோம்புதல் போன்றனவற்றுக்கு நமது மரபில் முன்னுரிமை தரப்படுகிறது. பண்டையத் தமிழிலக்கியப் படைப்புகள் பற்றி விமர்சிக்கிற இலக்கண நூலான தொல்காப்பியம் முன்னிறுத்துகிற கோட்பாடுகள் தமிழில் காத்திரமானவை. இயற்கையோடு இணைந்து மனித வாழ்வில் பூவுக்கும் பெண்ணிற்குமான தொடர்பு முக்கியமானது. பூப்பெய்தல், கருவுறுதல், போன்ற சொற்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் கோட்பாடு உள்ளது. ஆனால் தியரியை வெச்சு அப்போ யாரும் எழுதலே, பேசவில்லை. கோட்பாடு வலுவடைந்து முன்னிலை அடையும்போது, படைப்புகள் சோனிக் குழதைகளாகச் சவலை பாய்ந்திட நேர்கிறது. அதுதான் பிரச்சினை. விமர்சனம் என்பது அறிமுகம் செய்யும் வேலை மட்டும்தான். விமர்சகன் தனது மேதாவித்தனத்தைப் பூதாகரமானதாக்கித் தூக்கிப்பிடிக்க வேண்டியதில்லை. வாசகன்தான் ஒரு பிரதியை வாசித்து ஆச்சரியப்பட வேண்டும்.

17. க.நா.சு., வெங்கட்சுவாமிநாதன், சுந்தரராமசாமி இவர்களின் விமர்சன அனுகுமுறைக்கும் உங்களது விமர்சன அனுகுமுறைக்கும் ஒருவகையில் தொடர்பு உள்ளதாக நினைக்கிறேன். இவர்களின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் நீங்கள் இருக்கிறதாக உணர்கிறீர்களா?
   அப்படி முழுக்கச் சொல்லமுடியாது. நான் பள்ளிப் பருவத்தில் திராவிட இயக்கச் சூழலில் வளர்ந்தவன். எங்களது தாத்தா பெரியாரின் தொண்டர். அப்பா தி.மு.க.காரர். பள்ளி மாணவனாக இருக்கையில் நிரம்ப நாவல்கள், சிறுகதைகள் வாசித்தேன். கல்லூரி நாட்களில் மார்க்சிய லெனினியப்  புத்தகங்களை நிறைய வாசித்து அமைப்புப் பணிகளில் ஈடுபட்டேன். கருத்தியல்ரீதியில் நான் இடதுசாரி பின்புலத்தில் இருந்து வந்தவன்.  இந்தியாவில் புரட்சி வருமென நம்பிய லட்சக்கணக்கான தோழர்களில் நானும் ஒருவன். அது ஒரு லட்சிய கனவுலகம். இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே அந்தக் காலத்தில் இருந்துவிடக்கூடாதா என்கிற ஏக்கம் இருக்கிறது. அப்பொழுது டால்ஸ்டாய், ஜாக்லண்டன், ஹெமிங்வே, தாஸ்தாவ்ஸ்கி, செகாவ், மாபாசான், கார்க்கி, எமிலிஜோலா என்று எனது இலக்கிய ரசனை உருவாகியது..  ஜாக்லண்டன் போல ஒரு சிறுகதை எழுதினால் போதும் என நினைத்திருக்கிறேன். எழுபதுகளில் வெளியான பெரும்பாலான தமிழ்க் கதைகளில் காதல், குடும்பம், உறவு, சாப்பிடுகிறான், வேலைக்குப் போகிறான், பிள்ளை பெற்றுக்கொள்கிறாள் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. தமிழ் கதைகளின் மேல் எனக்கு இப்படியாகக் கசப்புணர்ச்சி உருவாகியது.

18. தமிழில் ரஷ்ய நாவல்களின் பாதிப்பு உருவானது என்பது உண்மைதான். ரஷ்ய படைப்புகளைப் போலத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது கதை உலகத்தைக் கட்டமைக்கவில்லையா?
   சிறிய அளவில் முயற்சிகள் நடந்தன. கார்க்கியின் தாய் நாவல் பாதிப்பினாலும், சோசலிச யதார்த்தவாதத்தின் தாக்கத்தினாலும் சிலர் தமிழில் எழுத முயன்றனர். பஞ்சும் பசியும், கரிசல், ஊருக்கு நூறு பேர், தேநீர், தோழர், மலரும் சருகும் போன்ற நாவல்கள் ஒருமாதிரியான பொறுக்குகளாகத்தான் இருந்தன. முழுமையாக இல்லை. ரஷ்ய மேதமைகள் எப்படி உருவானார்கள் என்பதை இவர்கள் அறியவில்லை. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன்  போன்றோரிடம் ரஷ்ய நாவல்களின் தாக்கம் இருக்கிறது. இன்னொரு விஷயம். உருது மொழியில் மண்ட்டோ சிறுகதைகளைப் பிரம்மாண்டமாக எழுதி குவிக்கிறார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த புதுமைப்பித்தன் என்ன எழுதினார்? பிள்ளைமார் சமூகத்தைப் பற்றித்தான் பெரும்பாலும் எழுதித் தள்ளியிருக்கிறார். இந்த இரண்டு எழுத்தாளர்களின் படைப்புகளையும் ஒப்பிட்டுப்  பாருங்கள். ஒரே இந்தியா. ஒரே காலனிய ஆட்சி. ஏன் கதைசொல்லல் வித்தியாசப்படுகிறது?
   இன்னொரு விஷயம். தமிழைப் பொருத்தவரையில் பாரதி, பாரதிதாசன் இருவரும் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிர் வினையாற்றி உள்ளார்கள். அவர்களிடம் பரந்துப்பட்ட பார்வை இருந்தது. அதற்குப் பிறகான தமிழ்ப் படைப்பாளிகளிடம் சர்வதேச அளவிலான பார்வை எதுவுமில்லை. தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் எனச் சுருங்கிக்கொண்டார்கள். இந்தப் போக்குப் பின்னர் வலுவடைந்து விட்டது. இது தமிழ் மரபுக்கு எதிரானது. சங்க இலக்கியத்தில் மன்னன் ஒருவன், தனது எதிரி நாட்டு மன்னனின் பிள்ளைகளைக் கொல்லப்போகிறான். பிள்ளைகள் யானையின் காலால் மிதிக்கப்படும்போது, கோவூர்க் கிழார் என்கிற புலவர், அவர்களைக் சொல்லாதே என்று பாட்டாகப் பாடியிருக்கிறார். இந்தத் துணிச்சல் மிகவும் முக்கியமானது.  அந்தப் போக்கு சீரழிந்தமைக்கான காரணம், வைதிக சமயத்தின் மேலாதிக்கம்தான் இனொருபுறம் 1331- இல் மதுரையில் ஏற்பட்ட தொடங்கிய டில்லி சுல்த்தான்களின் ஆட்சி. அதற்குப் பின்னர் உருது, மராத்தி  தெலுகு, ஆங்கிலம், பிரெஞ்சு  போன்ற மொழிகளின் ஆதிக்கத்தில் தமிழ் மொழி தன்னிருப்பைத் தக்க வைத்துக்கொள்ளப் படாத பாடுகள் பட்டது. கடந்த 600 ஆண்டுகளில் தமிழ் மொழிக்குப் பெரும் சோதனைகள். அப்பொழுது புலவர்களுக்கு நிறைய நெருக்கடிகள். குமரகுருபரர் தமிழைப் பற்றிப் பாடுகிறார். ஆனால் நாயக்கர்களைப் பற்றிப் பாடவில்லை. தமிழ்ப் புலவர்கள் கூனிக்குறுகி வந்தடைந்த இடம்தான் இது. பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி . இந்தச்சூழலில் சுயமாகப் புலவர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் சொல்வதற்கு எதுவுமில்லை; பிழைப்புவாதத்திற்காக ஏதாவது எழுதுகிறார்கள். கேரளாவில் நாட்டுப்புறக்கலையை இப்போதும் வைத்திருக்கிறார்கள். கேரள மன்னர்கள் அதற்கான முக்கியத்துவத்தைத் தந்தார்கள். தமிழ் நாட்டில் தமிழ்க் கலை என எதுவும் இருக்கிறதா? பொய்க்கால் குதிரை, பாவைக்கூத்து, லாவணி, என எல்லாம்  பிறமொழியினரின்  நிகழ்த்துக்கலைகள்.

19.தமிழின் முதல் நாவல் சிலப்பதிகாரம்தானே?
   யார் சொன்னது?. நாவல் என்ற சொல்லே தமிழுக்குச் சொந்தமானது இல்லை. அது தமிழின் முதல் காப்பியம்.  தமிழில் அம்மானை என்ற சொல் உண்டு. அம்மானை என்றால் கதை சொல்வது என்று பொருள். பொன்னர் சங்கர் அம்மானை கவிதை வடிவில் சொன்ன கதை. முறையான கதை சொல்லும் மரபு, தமிழில் நாட்டுப்புறப் பாடல் வடிவில் மக்களிடையே வழக்கினில் இருந்து வந்துள்ளது.

20. தமிழில் பெருங்கதையாடல் சிறுகதையாடல்களாகப் பல பிரதிகள் இருக்கின்றன. மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, நல்லதங்காள், மதுரைவீரன் இப்படி ஏராளமான கதைகள் உள்ளன. அவற்றின் வடிவ நீட்சியும் கதை கூறும் மரபும் இன்று அழிந்துவிட்டன. தீடீரென மார்க்வேஸ், ஹெமிங்வே, சல்மான்ருஷ்டி என்று தமிழுக்குள் குதித்துவிட்டார்கள். நாம் அவர்களுக்குப் பின்பாக கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். மரபான கதை சொல்லும்முறை தமிழில் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் இல்லையா?
   உண்மைதான். அதே சமயம் இந்தியாவில் பிற மாநிலங்களைவிடத் தமிழ்நாடுதான் நுகர்பொருள் பண்பாட்டில் அதிகஅளவு மூழ்கிவிட்டது என்று தோன்றுகிறது. மலையாளத்தில் மனோஜ்குரூர் என்ற சம்ஸ்கிருதப் பேராசிரியர் ஒருவர், நிலம் பூத்த மலர்ந்த நாள் என்றொரு நாவல் எழுதியுள்ளார். சங்க காலப் பாணர் மரபையும் ஐந்திணை நிலப் பாகுபாட்டினையும் கருவாகக்கொண்டு நுணுக்கமாகச் சொல்லப்பட்டுள்ள  நாவல், தமிழரின் அடையாளமாக இருக்கிறது. தமிழர்கள் வேர்களை வேகமாகத் தொலைத்து வருகின்றனர். இதைச் சொல்வதற்கு ஒரு மலையாளி வரவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பேராசிரியர்கள் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய காரியத்தை மலையாளி செய்திருக்கிறார். இத்தகைய சூழலில் தமிழ்  இலக்கியப் படைப்புகள், மரபைவிட்டு விட்டு விலகுவது ஆச்சரியம் அல்ல. நாம் உடலால் தமிழனாகவும் மனதால் அமெரிக்கக்காரனாகவும் இருக்கிறோம்.

21. நீங்கள் ஏன் சிறுகதை, நாவல் என எதுவும் எழுதவில்லை?
  எனது சிறுகதைகள் அடங்கிய ’இரு வேறு உலகம்’ என்ற தொகுப்பு வெளியாகியுள்ளது. எண்பதுகளில் சிறுபத்திரிகைக்காரனாக இலக்கிய உலகில் அறிமுகமானபோது, கவிதைகளும் சிறுகதைகளும் எழுதினேன். ஆனால் எனது வாசிப்பு, என்னை வேறு உலகினுக்கு இட்டுச் சென்றது. தமிழிலுள்ள முக்கியமான நாவல்களை எல்லாம் 18 வயதிற்குள் வாசிக்க ஆரம்பித்து முடித்துவிட்டேன் என்று சொல்லவேண்டும். அப்புறம் வாசித்த ரஷ்யா,  ஜரோப்பிய இலக்கியப் படைப்புகள் என்னை எழுதவிடாமல் செய்தன. தமிழரின் வாழ்க்கைப் பரப்பு சிறிதளவுதான். வீடு, வாழ்க்கை, படிப்பு, திருமணம், வேலை என இதுதவிர வேறு புதிதாக எதுவும் இல்லை.. ஒரு பாட்டில் மது குடித்தால் கலகக்காரன். இது அருவருப்பாக இருக்கிறது. இயேசு கலகக்காரன். புத்தன் புரட்சியாளன். நான்கு பெக் மது ஒருவனைக் கலகக்கார எழுதாளனாக மாற்றுவது அவமானகரமாகவும் அபத்தமாகவும் உள்ளது. உலகத்தின் பெரிய மாஸ்டர்களை வாசித்ததால் எழுத்தின் மேல் பெரிய மரியாதை ஏற்பட்டதால் எழுதவில்லை. ஆனால் தொடர்ந்து வாசித்து வருகிறேன். லேர்மன் தவ் எழுதிய நம் காலத்து நாயகன் நாவலைப் பத்து முறைகள் இதுவரை வாசித்திருக்கிறேன். ஹெமிங்வேயின் போரே நீ போ, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி போன்ற நாவல்களைப் பலமுறைகள் வாசித்து வருகிறேன். நாவல்கள் என்னைச் சோர்வில் இருந்து மீட்கின்றன.

22. தமிழ் எழுத்துக்களில் பெரும்பாலான ஆண் படைப்புகளில் பெண் என்கிற கதாபாத்திரம் உன்னதமானதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பல கதைகளில் அவர்களின் கருணை மிகுந்தவர்களான சித்திரம் உள்ளது. அதேசமயம் பெண் எழுத்தாளர்கள், ஆண்களைக் குற்றவாளிகளைப் போலவும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாகவும் எழுதுகிறார்கள். பெண்ணின் உன்னதமான சித்திரம் ஆணின் பொய்களில் ஒன்றா? அல்லது பெண் எழுத்துக்களில் வரும் ஆண் பாத்திரம் பொய்யானதா?
   பொய் என்று சொல்லவேண்டியதில்லை. தமிழ் நவீன கவிதையில் மட்டும்தான் பெண்கள் அதிக அளவில் நீங்கள் சொன்ன குற்றச்சாட்டைப் பதிவு செய்கிறார்கள். சில பெண் கவிஞர்களின் கவிதைகளில் மட்டும் ஆண்கள் அசலாகவும்  சுயமாகவும் வருகிறார்கள்; ஆணின் மேலாதிக்கம், ஆண்-பெண் உறவுச் சிக்கல் பற்றிப் பேசுகிறார்கள். அகத்திலும் புறத்திலும் சுயமாக ஆணின் இருப்பிடத்தை அவர்கள் கண்டடையவில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். ஆண் எழுத்தாளன் பெண்ணைத் தனது சகோதரியாகவும் தாயை வைத்து அவர்களைக்கொண்டே முன்மாதிரிகளை உருவாக்குகிறான்; எழுதுகிறான். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. பெண்களான   ஜெயலலிதா, சசிகலாவை தமிழர்கள் எப்படி பார்த்தனர்? ஆயிரக்கணக்கான ஆண்கள் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார்கள். இனிவரும் காலங்களில் சசிகலாவின் காலில் எத்தனை ஆயிரம் ஆண்கள் காலில் விழப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இருவரும் ஆண்களை புறக்கணித்தவர்கள். ஏதோ ஒருவகையில் இவர்களுக்கு அப்பா, அண்ணன், தம்பி என்று வேறுமாதிரியான ஆண்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதை முன்மாதிரியாக வைத்துப் பெண் பற்றிய சித்திரத்தைப் படைப்பில் நுழைப்பது சரியல்ல. பெண்களில் ஆண்களை நேசித்துக் கவிதை எழுபவர்கள் இன்று பெருகியுள்ளனர்.

23. முப்பது வருடங்களுக்கும் மேலாக மதிப்புரை எழுதி வருகிறீர்கள். உங்களது விமர்சனத்துக்கு எதிர்வினை எவ்வாறு இருக்கிறது?
  இதுவரை இருநூறு புத்தகங்களுக்கு மேலாக மதிப்புரை எழுதியுள்ளேன். பத்துக்கும் குறைவானவர்கள்தான் எனது மதிப்புரையைப் பற்றி என்னிடம் பேசியிருப்பார்கள். என்னுடைய கருத்து தவறாகக்கூட இருக்கலாம். புத்தக ஆசிரியர் விமர்சனம் குறித்து தனது கருத்தை என்னிடம் தெரிவித்து உரையாடலை நிகழ்த்தலாம். இதுவரை அது பெரிய அளவில் நிகழவில்லை. சுந்தரராமசாமி உயிருடன் இருந்தபோது நீங்கள் அவருடைய வீட்டிற்குப் போய் பேசலாம். அவருடன் வாக்கிங் போகலாம். அவரது நாவல் குறித்துக் கருத்தைச் சொல்லலாம். அவர் கவனமாகக் கேட்பார்; எழுதித் தரச்சொல்வார்; அடுத்த பதிப்பில் குறையை நிவர்த்தி செய்து பதிப்பிப்பார். அவர் போன்றவர்களுக்கு காதுகள் இருந்தன. கிராமத்து விவசாயி உழப்பட்ட வயலில் நெல்லை விதைத்துவிட்டு ஆறு மாதங்களுக்கும் மேலாகக் காத்திருப்பது போல முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் காத்திருந்தார்கள். ஆனால் இன்று அப்படியல்ல. அவசரம். ஒரே இரவில் புகழடைந்திட நடந்துவிடவேண்டுமென்கிற அவசரம் இளம் எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. துரித உணவு போல  துரித இலக்கிய மோகம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. விமர்சனம் என்பது thanksless job என்பது எனக்குத் தெரியும். என்றாலும்  ஏதோ ஒரு ஊரில் இலக்கியக்கூட்டத்தில் பேசிவிட்டு இறங்கும்போது, முகம் அறியாத சிலர் எனது விமர்சனக் கட்டுரை குறித்துத் தீவிரமான அபிப்ராயம் சொல்லும்போது, மனதில் நிறைவு ஏற்படுகிறது. வேறு என்ன வேண்டும் செந்தில்?


No comments:

Post a Comment