Monday 29 May 2017

சி.எம்.முத்துவின் நாவல்கள்

             சி. எம். முத்துவின் இனவரைவியல் நாவல்கள்
         ந.முருகேசபாண்டியன்                                   

           பண்டைத் தமிழிலக்கியமான சங்க இலக்கியம்,  நிலமும் பொழுதும் சார்ந்து மனித இருப்பினை மையப்படுத்தி விரிந்துள்ளது. ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிப்பதை இலக்கியப் பிரதிகள் பதிவாக்கியுள்ளன. வளமையான முல்லை நிலத்தின் தெய்வமாக மாயோனும், வறண்ட பாலை நிலத்தின் தெய்வமாகக் கொற்றவையும் கொண்டாடப்படுவது, நிலத்துடன் தொடர்புடையது. மலையில் வேட்டையாடுகிற குறவர்களின் தொழிலுக்கும், பாலையில் திரிகின்ற எயிணர்களின் வழிப்பறித் தொழிலுக்கும் ஒருவகையில் மண்தான் காரணம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற குறிப்பிட்ட மக்கள் திரளின் செயல்பாடு, செறிவான முறையில் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. கார்ப்பரேட்களின் ஆதிக்கம் நிலவுகிற இன்றைய காலகட்டத்திலும் தமிழ் மொழியின் வழியாக அடையாளப்படுத்தப்படுவதைவிடத் தமிழர்கள், சாதி அடையாளத்தை முதன்மையாகக் கருதுகின்றனர். நிலமான்ய அமைப்பு உருவாக்கியிருக்கும் ஆண்டான்–அடிமை உறவு ஒருபுறம் எனில், இந்திய மண்ணிற்கே உரித்தான சநாதனம் உருவாக்கி இருக்கும் சாதிய மேல்-கீழ் அடுக்கு இன்னொருபுறம் ஆதிக்கம் செலுத்துகிறது. வயலின் உரிமையாளர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் என்றால் வயலில் வேலை செய்கிற விளிம்புநிலையினர் ஒடுக்கப்பட்ட சாதியினராகவே உள்ளனர். இத்தகைய சூழலில் தஞ்சை மண்ணுக்கே உரித்தான நிலவுடமைப் பின்புலத்தில் கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதில் சி.எம்.முத்துவின் நாவல்கள், இனவரைவியல் தன்மையுடன் தனித்து விளங்குகின்றன.
             தஞ்சை டெல்டா மக்களின்  நிலத்துடனான உறவு, வட்டார மொழி, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், தெய்வ வழிபாடு, சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை தந்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. தஞ்சை வட்டார இலக்கியம் என்றால் தி.ஜானகிராமனின் மோகமுள் என்று பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருப்பதற்கு மாறான நாவல்கள் என்றால், சி.எம்.முத்துவின் யதார்த்த நாவல்களைச் சொல்ல வேண்டும். சி.எம்.முத்து பல்வேறு காலகட்டங்களில் தஞ்சை வட்டாரக் கள்ளர் சாதியினரை மையமிட்டு எழுதியுள்ள நெஞ்சின் நடுவே(1982),  கறிச்சோறு(1989), பொறுப்பு(2000), வேரடி மண்(2003), அப்பா என்றொரு மனிதர்(2010) ஆகிய ஐந்து நாவல்கள் குறிப்பிடத்தக்கன. கள்ளர் சாதியைச் சார்ந்தவரான சி.எம்.முத்து, கள்ளர் சாதியில் பிறந்தவர்களின் சமூக வாழ்க்கையை முன்வைத்துப் புனைவாக எழுதினாலும்’ இனவரைவியல்தன்மை காரணமாக, அவருடைய நாவல்கள் சமூக ஆவணமாகியுள்ளன.
          . சாதியத்தின் கோரப்பிடியில் சிக்கியவர்களின் கதையைக் கறிச்சோறு நாவலில் சி.எம்.முத்து பதிவாக்கியுள்ளார். தஞ்சை வட்டாரக் கள்ளர் சாதியினருக்கிடையில் ஏகப்பட்ட உட்பிரிவுகள். ஏதோ ஓர் அளவுகோலினால் கள்ளர் சாதியினரிடையே உயர்வுதாழ்வு கற்பிக்கப்படும் சூழல் நிலவுகிறது. வாகரைக் கள்ளர் உயர்ந்தவர்கள் என்ற நிலையைப் பொருட்படுத்தாமல், முத்துக்கண்ணு விசுவராயர், பத்து மைல் தொலைவில் இருக்கும் நெல்லுப்பட்டுக் கிராமத்தில் தனது மகள் கமலாவிற்குச் சம்பந்தம் பேச முயலுகிறார். அவருடைய நிலைப்பாடு, அதே ஊரைச் சார்ந்த தருமையா நாட்டாருக்கும் கோபால் குச்சிராயருக்கும்  பிடிக்கவில்லை. தெக்குச்சீமைக் கள்ளருக்குப்  பெண்ணைத் தருவது முறையன்று எனப் பிரச்சினையை ஊருக்குப் பொதுவானதாக மாற்றுகின்றனர். கமலத்திற்கும் அதே ஊரிலிருக்கும் வந்தாருகுடி என மட்டமாக அழைக்கப்படும்  சாம்பவசிவம் என்ற இளைஞனுக்கும் இடையில் காதல் என்ற தகவல் அறிந்தவுடன், விசுவராயர் உள்ளிட்ட ஆதிக்கவாதிகள் பதறுகின்றனர். வடுவக்குடி கள்ளர்கள் அறுத்துக் கட்டுகிற வழக்கமுடையவர்கள் என்பதற்காகச் சாம்பசிவத்தைக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஆதிக்கவாதிகளின் தூண்டுதலினால் மாயாண்டிக் கொத்தபிரியன், தங்கவேலுவின் தலையைத் துண்டாக்குகிறான். ஊரின் கௌரவத்திற்காக, தனது மகனைக்  கொலை  செய்யத் தூண்டிய நாயக்கரைக் கொல்வதற்காக விசுவராயர் கத்தியுடன் பாய்கிறார். சாதிக்காக நடைபெறுகிற கொலைகளின் எண்ணிக்கை பெருகுகிறது.    . முப்போகம் விளைகிற வளமான கிராமத்தில் நிலவிய மனிதர்களின் கொடூரமான மனநிலையையும் சாதியத்தின் கோரமுகத்தையும் சி.எம்.முத்து அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளார். கதைசொல்லலில் செயற்கையான சம்பவங்கள் இடம் பெற்றிருந்தாலும், கிராமம் சார்ந்த விவரிப்பு, வாசிப்பில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கறிச்சோறு நாவல் முன்னிறுத்தும் சாதியத்தின் பெருமையை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகள், தமிழகத்தில் உள்ள எல்லா ஆதிக்க சாதியினருக்கும் பொருந்தும்.. சாதியின் பெருமையைப் பேசுவது சி.எம்.முத்துவின் நோக்கம் அல்ல. இன்று சாதி எப்படியெல்லாம் கிளைவிட்டுப் பரந்திருக்கிறது என்ற நோக்கில், சாதிக்குள் சாதியாக விரிந்திருக்கும்  சாதிய அரசியலைக் கறிச்சோறு நாவல் விவரிக்கிறது
       சாதியத்தின் மேலாதிக்கத்தில், தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு அர்த்தம் எதுவும் இல்லை. குடும்ப உறவுகள் என்ற எல்லையைமீறி எதுவும் செய்யமுடியாத கிராமத்து வாழ்க்கை பற்றிப் பொறுப்பு நாவலில், சி.எம்.முத்து சித்திரிக்கும் சம்பவங்கள், இனக்குழு வாழ்க்கையின் எச்சங்கள். அகமணத் திருமணமுறை இன்றளவும் நீடிக்கும் தமிழர் வாழ்க்கையில், மாமன்-அத்தை வழியிலான திருமண உறவினுக்கு முக்கியத்துவம் தருவதைத் தஞ்சை வட்டாரத் தன்மையுடன் நாவல் விவரித்துள்ளது. பள்ளியூர் ஊர்ப் பண்ணையாரான வாஞ்சிநாத மாங்கொண்டாரின் தங்கையான ரஞ்சிதத்தின் கணவர் சாமிநாத குருக்கொண்டார். மாங்கொண்டாரின் மனைவியான சரசுவதி, குருக்கொண்டாரின் தங்கை. இருவரும் மைத்துனர்கள்.   மாங்கொண்டாரின் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் குருக்கொண்டாரின் மகள் வசந்தாவிற்கும் இடையிலான திருமணப் பேச்சு, வசந்தாவின் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தினால் தடைபடுகிறது. மாங்கொண்டார் வேறு இடத்தில் மகனுக்குப் பெண் பார்ப்பதால், குருக்கொண்டார் கோபமடைகிறார்.
     மாங்கொண்டார், தென்சீமையான கம்பர்நத்தம் ஊர்ப் பண்ணையாரான பொன்னுச்சாமி தென்னம்பிரியார் -மங்களாம்பாள் மகள் பத்மாவைத் தனது மகன் கிருஷ்ணமூர்த்திக்குப் பேசி முடித்துப் பரிசம் போடுகிறார். தென்னம்பிரியாரின் மைத்துனரான பனையக்கோட்டை மிராசுதாரான முத்தையா குச்சிராயர் சம்மதம் இல்லாமல் பரிசம் நடைபெறுகிறது. குச்சிராயரின் தங்கையான மங்களாம்பாளைத் தென்னம்பிரியாரும், தென்னம்பிரியாரின் தங்கையான கோதைநாயகியைக் குச்சிராயரும் திருமணம் செய்துள்ளனர். குச்சிராயர் ஏற்கனவே தென்னம்பிரியாரின் மகன் சண்முகத்தை படிக்கவைத்து டாக்டராக்கியவர். அவன் அவருடைய  மகளைத் திருமணம் செய்யாமல், வேறு பெண்ணை மணம் முடித்ததால், இரு குடும்பங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இல்லை.
         குடும்ப உறவுகளில் கசிந்திடும் வெக்கை எங்கும் வீசிக்கொண்டிருந்த அறுபதுகளின் காலகட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கதையில், மாமன் உறவு பற்றிய விவரிப்பு முக்கியமானது. பொறுப்பு நாவலில் இடம் பெற்றுள்ள ஆண்கள், தங்கள் விருப்பத்தினுக்கேற்பப் பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் ஈடுபடும்போது, அம்மாக்கள் வெறுமனே பார்வையாளர்கள்தான். மாமன்- மச்சான் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்ற நிலையில், ஒருவர்மீது இன்னொருவர் செலுத்தும் அன்பு, ஒருநிலையில் ஆதிக்கமாக மாறுகிறது.        காலங்காலமாகத் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து சொந்தமாகி மகிழ்கிறவர்கள், பின்னர்  திருமணத்தின் காரணமாக ஒருவரையொருவர் எதிரியாக வெறுத்து, செத்துப் போனவர்களாகக் கருதி ஒதுக்குவது, ஒருவகையில் நகைமுரண். ஒரே சாதிக்குள் ஒன்றாக வாழ்ந்தவர்கள், முரண்பட்டாலும், குடும்ப உறவிற்குள் கசிந்து உருகுவது, நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.  அறுபதுகளில் நிலவிய குடும்ப உறவுகளைப் பதிவாக்கியுள்ள பொறுப்பு நாவல், இனவரைவியல் பதிவாகும்.
       சி.எம்.முத்து எழுதிய முதல் நாவலான நெஞ்சின் நடுவே, அறுபதுகளில் தமிழகக் கிராமங்களில் நிலவிய ஆதிக்க சாதியினரின் பாலியல் அத்துமீறல்களைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. வயலில் உழைக்கிற ஒடுக்கப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்குகிறவேளையில், அந்த இனத்துப் பெண்ணுடல்களைப் பாலியல் வேட்கைக்குள்ளாக்குதல் சாதாரணமாக நடைபெற்றது. தஞ்சை வட்டாரத்து உழைப்பாளிகளான தலித்துகள் பட்ட துயரங்கள் அளவற்றவை.  வயல்களும் வாய்க்காலும் சூழ்ந்த சிறிய கிராமத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பச்சை பசும் பயிர்கள்; கோரைப்புற்கள்; நொச்சி, ஆடாதொடை. புராதனமான கோவில், அல்லி பூத்திருக்கும் குளம், குடிசைகள். இப்படியான வளமான கிராமத்தில் வாழ்கிற மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்? 
     . மழவராயரின் மகன் அண்ணாமலை,  அவனது  நண்பன் சின்னத்தம்பி, வளையாபதி, நாவலில் முக்கிய பாத்திரங்கள். சின்னத்தம்பி தனது தங்கை கௌசல்யா 20 வயதில் கணவனை இழந்ததால், அவளுக்கு மறுமணம் செய்ய முயற்சிக்கிறான். ஊர்க்கூட்டம் போட்டுக் கௌசல்யாவிற்கு மறுமணம் செய்தால், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என எச்சரிக்கின்றனர். ஊரில் இருக்கிற பெரும்பாலான ஆண்கள், ஒடுக்கப்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். அதேநேரம்  இளம் விதவையான கௌசல்யாவிற்குத் திருமணம் நடந்தால், கள்ளர் சாதியின் பெருமைக்கு இழுக்கு வந்துவிடும் என்று அரற்றுகின்றனர். வெளியே இருந்து பார்க்கும்போது, எளிமையாகத் தோன்றும் கிராமத்தில் கண்காணிப்பு என்பது சாதிய அடிப்படையில் வலுவாக இருப்பதை நாவலாக்கியுள்ளார் சி.எம்.முத்து. பாலியல் ஓழுக்கக்கேட்டை இயல்பானதாகக் கருதுகிற ஆதிக்க சாதியினர், இளம் வயதில் விதவையான சொந்த சாதிப் பெண்ணை ஆசாரம் என்ற பெயரில் ஒடுக்குவதை எதிரிணையாக முன்வைத்துப் புனைவாக்குவதுதான் நாவலாசிரியரின் நோக்கமா? யோசிக்க வேண்டியுள்ளது.
        வேரடி மண் நாவல் தஞ்சைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. கீழ் வெண்மணியில் தீயிலிட்டுக் கொல்லப்பட்ட 44 தலித்துகளின் படுகொலைகளுக்குப் பின்னர் தீண்டாமையும் பொருளாதாரச் சுரண்டலும் எப்படி மறியுள்ளன என்பதை சி.எம்.முத்து வேரடி மண் நாவல்மூலம் விவரித்துள்ளார். கொட்டும் மழையினால், மாரியம்மன் கோவிலுக்குள் ஒதுங்கிய தலித்துகளான அம்மாசியையும் அவரது மகளான சின்னாத்தாளையும் சின்னையா, கோவிலைவிட்டு வெளியே பிடித்துத் தள்ளினார். ஊர்ப் பண்ணையாரான மாணிக்கம் பிள்ளை, அம்மாவாசியை அடித்து உதைக்கிறார். பள்ளர் சாதியினரின் நாட்டாமையான அம்மாசியை அடித்தது, சேரிக்குள் எதிர்ப்பைக் கிளப்பியது. பண்ணையாரின் வயலில் இறங்கி வேலை செய்ய மறுத்து, தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். மாணிக்கம் பிள்ளை வெளியூர் ஆட்களை வைத்து வயல் வேலை செய்ய முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில், இரு பக்கமும் வெட்டுக்குத்தானது. தலித்தான சின்னச்சாமியும் மாணிக்கத்தின் தம்பி மகனான தனபாலும் சேர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர். சிவப்புக் கொடி பறக்கத் தொடங்கியது. பண்ணையார்களான வேர்களைத் தாங்கிப் பிடிக்கும் மண்ணாக இருப்பவர்கள், வயலில் வேலைசெய்யும் கூலிகளான தலித்துகள்தான் என்ற உண்மையை இரு பக்கத்தினரும் புரிந்துகொண்டபோதும் நிலமையில் மாற்றம் இல்லை. கூலி நெல்லின் அளவைக் கூட்டுவதற்காகப் போராடிய தலித்துகளைக் கொன்றுகுவித்த தஞ்சை வட்டாரத்து ஆதிக்கசாதிப் பண்ணையார்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேரடி மண் நாவல் உதவும். நெஞ்சினில் நடுவில் நாவலில் வாயில்லாப் பூச்சிகளாகச் சித்திரிக்கப்பட்டிருந்த தலித்துகள், வேரடி மண்ணில் துணிவுடன் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது மாறுகிற சமூகச்சூழலைக் காட்டுகிறது.
       எழுபதுகளுக்குப் பின்னர் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வருவது நின்று போனது. வேதியியல் உரம், பூச்சிக்கொல்லி மருந்து என விவசாயம் மாறியது. சிறு விவசாயிகளின் பொருளாதாரநிலை நலிவடைந்தது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கோல் மிஞ்சாது என்ற பழமொழி நிஜமானது. அப்பா என்றொரு மனிதர் நாவல்மூலம் இன்றைய தஞ்சை டெல்டா விவசாயியின் துயர வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. சரவணன் என்ற இளைஞனின் கண்ணோட்டத்தில் அவனது அப்பாவான சந்தரகாசு  குச்சிராயர், மிராசு என்ற பட்டத்துடன் மண்ணுடன் போராடிய கதையை சி.எம்.முத்து விவரித்துள்ளார்.  உழுது, விதை விதைத்து, நாற்றுப் பிடுங்கி, தொழியில் நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு, காவல் காத்து, அறுவடை செய்து, மகசூல் நெல்லைக் கடன்காரனுக்குக் குடுத்துவிட்டு, மீண்டும் அடுத்த வருஷ உழவில் விடிவு கிட்டும் எனக் காத்திருக்கும் மனிதர்களை என்னவென்று சொல்ல? அதிலும் திடீரென மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி, எங்கும் வெள்ளக்காடானால், அந்த வருடம் சாப்பாட்டு நெல்லுக்கே பஞ்சம்தான்.       
     குச்சிராயர், வறட்டுக் கௌரவத்திற்காகப் பணத்தைச் செலவழிக்கிறார். கிராமத்து எளிய வாழ்க்கை மாறி, நுகர்பொருள் பண்பாடு நுழையும்போது, விவசாயம் கட்டுபிடியாகாமல் போவதை அறியாமல் நிலத்துடன் மல்லுக்கட்டும் அப்பாவின் கடன்கள், ஒருபோதும் தீரப்போவது இல்லை. அம்மாவின் அப்பா இறந்தபோது கடனை வாங்கிச் சிரமத்துடன் கருமாதி செய்முறைகள் செய்த அப்பா, கொட்டுகிற மழையில் குடும்பத்தினருடன் நனைந்தவாறு உட்கார்ந்திருந்தார். அப்பாவுக்கு நாலு வேலி மிராசுதாரர் பெரிய பெயர் இருந்தாலும், யதார்த்ததில் வறுமையான வாழ்க்கை. நிலத்தில் உழல்வதுதான் தனது பொருளியல் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை அறியாதது அப்பா மட்டுமல்ல. தஞ்சை டெல்டாவில் உழவை நம்பி வாழ்கிற பெரும்பாலான விவசாயிகள்தான் என்பதை அப்பாவை முன்வைத்து சி.எம்.முத்து சொல்லியுள்ளார்.          
      1982-இல் கறிச்சோறு நாவல் மூலம் அடியெடுத்த வைத்த சி.எம்.முத்து, தஞ்சை மண்ணின் மணத்துடன் கள்ளர் சமூகத்தினரிடையே நிலவும் சாதிய உள்ளடுக்குப் பிரச்சினையை முன்வைத்திருந்தார்.. கிராமத்தில் உறவினர்கள் இடையில் திருமணம் காரணமாக ஏற்படும் மோதல்களை விவரித்த பொறுப்பு நாவல், ஒரு காலகட்டத்தின் பதிவு. வயலில் வேலை செய்யும் தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளும் ஆதிக்க சாதியினரின் அடாவடித்தனம் பற்றிய நெஞ்சின் நடுவே  நாவலுக்கு மாற்றாக வேரடி மண் நாவல், தலித்துகளின் எழுச்சியைச் சித்திரித்துள்ளது. அப்பா என்றொரு மனிதர் நாவலில் வரும் மனிதர், தஞ்சை மண்ணில் வாழும் சிறு விவசாயிதான். கடந்த ஐம்பதாண்டுகளில் தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குச் சாட்சியாக விளங்கும் சி.எம்.முத்து, தனது வாழ்வில் எதிர்கொண்ட விஷயங்களை நாவல்களாகப் படைத்துள்ளார்.
      நிலத்தை முன்வைத்து தஞ்சை வட்டார மொழியில் விரிந்திடும் நாவல்களைப் படைத்துள்ள சி.எம் .முத்துவின் கதைசொல்லல், பாத்திரப்படைப்பு, மொழி நடை போன்றன அழுத்தமானவை. அவருடைய எல்லா நாவல்களிலும் முடிவு என எதுவும் இல்லை. நாவலின் போக்கு, திடீரென அறுபட்டது போல  முடிவது, எதுவும் முடியாதது என்பதைச் சூசகமாக உணர்த்துகிறது. துல்லியமான முடிவுகள் எதையும் எந்தப் பாத்திரத்தின் மீதும் திணிக்காமல், யதார்த்த வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதைப் பாசாங்கற்றுப் புனைவாக்கியதில் சி.எம்.முத்துவின் படைப்பாளுமை தனித்துவமானது. தஞ்சை வட்டாரத்து மக்களின் இயற்கைச் சூழல், சாதியக் கட்டுமானம், பெண்கள் நிலை,  சமுதாய அடுக்கு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள்  போன்றவற்றைப் பற்றிய விவரிப்புடன் கள ஆய்வையும் அனுபவவாதத்தையும் அடிப்படையாகக்கொண்ட இனவரைவியல் தன்மையுடன்கூடிய சி.எம்.முத்துவின் நாவல்கள், சமகாலத்தின் பதிவுகளாகும்.

                                                                             

                                                        

                                               
         
        



சமகாலச் சிறுகதைகள்

            சமகாலச் சிறுகதைகளின் புதிய போக்குகள்  
                                                 ந.முருகேசபாண்டியன்                                                                                                                                                            

        பூமியில் மனித வரலாறும் இருப்பும் என்பது ஒருபோதும் தீராத கதைகளினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லாம் துல்லியமான திட்டமிடல் பின்புலத்தில் சரியாக நடப்பதாக  நம்புகிற மனிதர்களின் நம்பிக்கைக்குப் பின்னால் எல்லாம் கதைகளாக மாறுகின்றன.  கடந்த நூற்றாண்டில் ஈழத்தமிழர் வாழ்க்கையைச் சிதைக்கும்வகையில் ரத்தமும் சதையுமாக நடைபெற்ற கொடூரமான நிகழ்வுகள், இன்று வெறும் சம்பவங்களாக மாறிப் புனைகதைகளாகி விட்டன. நவீன வாழ்க்கையைச் சிறுகதையின் மூலம் விசாரிப்பது, முன்னெப்போதையும்விட இன்று  காத்திரமாக நடைபெறுகிறது. தமிழ்ச் சிறுகதை வடிவம் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அறிமுகமானாலும் காலந்தோறும் உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் பருண்மையான மாற்றங்களை  எதிர்கொண்டுள்ளது. அதிலும் இருபத்தோராம் நூற்றாண்டில் ஏற்பட்ட உலகமயமாக்கல் காரணமாகத் தமிழர் வாழ்க்கையில் நுகர்பொருள் பண்பாடு விளைவித்துள்ள பாதிப்புகள், அடையாள இழப்பு அரசியலுக்கு வழி வகுத்துள்ளன. இந்நிலைக்கு மாற்றாகத் தமிழின் வேர்களைக் கண்டறியும்வகையிலான தொன்மம் சார்ந்த கதைகள், சிறப்பிடம் பெற்றுள்ளன. அதேவேளையில் புனைவுத்தன்மையுடன் மொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் சொல்லப்படும் புனைகதைகள், தொடர்ச்சியறு நிலையில் வாசகனை வேறு உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. பின் நவீனத்துவம், மாந்திரிக யதார்த்தம் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாகக் கதைசொல்லிகள், புதிய வகைப்பட்ட விவரிப்பில் கவனம் செலுத்துகின்றனர். நவீனம் எனப் புதைமொழியில் பரிசோதனையாகச் சொல்லப்படுகிற புனைகதைகள், மாறுபட்ட வாசிப்பைக் கோருகின்றன. யதார்த்தக் கதைசொல்லிகள் தேர்ந்தெடுக்கிற கனமான விஷயம், வித்தியாசமான விவரிப்பினால் வாசகரின் மனதில் உறைந்திடும் கதைகளும் இன்று வெளியாகின்றன. 2001 ஆம் ஆண்டு முதலாக வெளியாகியுள்ள அண்மைக்காலச் சிறுகதைகளின் புதிய போக்குகள் கவனத்திற்குரியன. அவை தமிழ்ப் புனைகதைப் பரப்பில் ஏற்படுத்தியுள்ள காத்திரமான செல்நெறிகளைக் கண்டறிய வேண்டியுள்ளது.
          தமிழ்ச் சிறுகதைகளைப் பொறுத்தவரையில் எழுபதுகள் காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாளர்களின் முக்கியமான சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன, அன்றைய அஃக், கசடதபற, கணையாழி, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகைகள் புனைகதை வெளியீட்டினுக்கு முக்கியத்துவம் தந்தன. வண்ணநிலவன், பிரபஞ்சன், சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன், ஆதவன், லா.ச.ரா., ராஜேந்திர சோழன், வண்ணதாசன், பூமணி முதலான பலரின் சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகிக் கவனம் பெற்றன. அதற்கடுத்த காலகட்டத்தில் விமலாதித்த மாமல்லன், சுரேஷ்குமார இந்திரஜித், கௌதம சித்தார்த்தன், சில்வியா, கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம்-ரமேஷ் போன்றோரின் புனைகதைகள் அதற்கு முந்தைய காலகட்டத்தின் போக்குகளை மறுதலித்துப் புதிய வகைப்பட்ட கதைசொல்லலை முன்னிறுத்தின. தொண்ணூறுகளில் வெளியான கோணங்கியின் பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம், உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டிருந்த சிறுகதை மரபினைக் கேள்விக்குள்ளாக்கின. மாயக்கதைகளின் பிரதிகளாகத் தொல்நிலத்தில் தோன்றிய ஆதிக்குடிகளின் மொழியை கதைச் சிமிழுக்குள் அடைக்க முயன்ற கோணங்கியின் புனைவுலகு தந்த அதிர்ச்சியினால், மரபார்ந்த கதைசொல்லிகள் திணறினர். கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் நவீன சிறுகதையை உருட்டிக்கொண்டு போய் மலைஉச்சியில் வைத்து விட்டனர். இனிமேல் எழுத்கிறவர்கள் அதைத் தாண்டிப் போய் எழுதுவது சவால்தான் என்று அந்தக் காலகட்டத்தில் பேச்சு நிலவியது. இன்னொருபுறம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி, வேகம்வேகமாக அச்சு ஊடகத்தின் இடத்தைச் சிதலமாக்கியது. வெகுஜன பத்திரிகைகளில் பொழுதுபோக்கினுக்காகச் சிறுகதை வாசித்தவர்கள்,  கையில் ரிமோட்டுடன் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உறைந்து போயினர். இணையத்தின் அறிமுகத்தினால் பிளாக்கில் தினமும் எதை வேண்டுமானலும் எழுதலாம் என்ற நிலையில் இளைய தலைமுறையினர் கதை சொல்ல முயன்றனர். சுஜாதாவின் மின்னம்பலம் மின்னிதழ், சிறிய அளவில் மின்னணு மெய்மையை அறிமுகப்படுதியது. வண்ண அட்டைகளுடன் வெளியான இடைநிலை இதழ்களான காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, அமிர்தா, உயிர் எழுத்து போன்றவற்றுடன் கல்குதிரை,  புதுஎழுத்து, கதைசொல்லி, திசைஎட்டும், மணல்வீடு, சிலேட், வலசை போன்ற சிறுபத்திரிகைகள் காரணமாக உத்வேகத்துடன் சிறுகதை எழுதுகிற படைப்பாளர் எண்ணிக்கை பெருகியது. கணினியினால் வடிவமைக்கப்பட்ட புத்தகங்களின் அழகிய அச்சமைப்பும், நேர்த்தியும் சிறுகதைத் தொகுப்புகள் வெளியாவதை ஊக்குவித்தன. 2001—க்குப் பின்னர் சமகாலத்தின் பதிவாகச் சிறுகதை எழுதுகிற படைப்பாளிகள், படைப்பாக்க முயற்சியை வெறுமனே பொழுதுபோக்கு எனக் கருதாமல், வாழ்க்கைக்கு இணையான தீவிரமான செயல்பாடு என்ற நோக்கில் எழுதுகின்றனர் என்று சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது.   
       இன்றைய புனைகதை எது என்ற கேள்வி முக்கியமானது. தமிழ் மொழி பயன்பாட்டுக்குரியதா என்ற சந்தேகப்படுகிற இளைய தலைமுறையினர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கையில் ஸ்மார்ட் போனுடன் 24 மணிநேரமும் மின்னணு உலகில் மிதக்கிறவர்கள், புனைகதையை வாசிப்பதன்மூலம் மகிழ்ச்சியவடைவதற்கான வாய்ப்புக் குறைவு. என்றாலும் பின் காலனியச் சூழலில் நெருக்கடிக்குள்ளான வாழ்க்கையை வாழ்கின்ற நிலையில், இலக்கியப் படைப்புகளின்மூலம் சூழலை விசாரிக்க முயலுவது தொடர்கிறது. குறிப்பாக விளிம்புநிலையினரின் வாழ்க்கையைப் புனைவாக்குவதன் மூலம் மையத்தில் வலுவாக உறைந்திருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பின் நவீனத்துவத் செயல்பாடு நடைபெறுகிறது. பால் சமத்துவமின்மை, சாதிய ஒடுக்குமுறையுடன் மதஅடிப்படைவாத அமைப்புகளின் ஆதிக்கம் இன்று மேலோங்கிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவாவை முன்னிறுத்தும் காவிகள், பாசிசத்தை அமல்படுத்திடத் துடிக்கின்றனர். இன்னொருபுறம் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதஅடைப்படைவாதிகளும் மக்களை மதத்தின் பெயரால் ஆளுகை செலுத்துவது வலுவடைந்து கொண்டிருக்கிறது.  இத்தகு சூழலில் அடக்கியொடுக்கப்பட்டவர்களின் குரல்களைப் பதிவாக்கும் சிறுகதைகள் தேவைப்படுகின்றன. மனிதர்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கும் வன்மம், வன்முறை, குரோதம், அற்பத்தனம், பொறாமை, கருமித்தனம், பொறுக்கித்தனம் போன்றவற்றைக் கதையாக்கும் போக்கு, இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும், மேன்மை குறித்து அக்கறை கொள்கிற கதைசொல்லிகள், சூழலின்மீது எதிர்வினையாற்றுகின்றனர். சுருங்கக்கூறின்,  சிறுகதை இலக்கிய வடிவத்தில் கவனத்துடன்   ஈடுபட்டுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகள், சமகாலத்தின் குரல்களாக விளங்குகின்றன. கட்டுரைப் பரப்பின் வரையறை காரணமாகக்  காத்திரமாக எழுதுகிற ஈழத்து எழுத்தாளர்களான ஷோபா சக்தி, தமிழ்நதி உள்ளிட்டோரின் ஆக்கங்களையும், மலேசியா, சிங்கப்பூர் படைப்பாளர்களின் புனைகதைகளையும் சேர்க்கவில்லை. அண்மைக்காலத்தில் சிறுகதை எழுதுகிற எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய பருந்துப் பார்வையாக என் அபிப்ராயங்களைப் பதிவாக்கிட முயன்றுள்ளேன்.
     சிறுகதை மொழியானது கவிதைக்கு நெருக்கமாகச் செறிந்த நிலையில், மனதின் விகாசங்களைப் பதிவாக்குவது முக்கியமானது. கதைசொல்லல் என்பது வாசிப்பின்மூலம் வாசகரின் மனதில் உருவாக்கும் படிமங்களும் காட்சிகளும் முடிவிலியாகத் தொடரும்போது புதிய எழுத்து உருவாகிறது. குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை, காலபைரவன், ஜே.பி.சாணக்யா கார்த்திகை பாண்டியன், போன்றோரின் கதைகள் புதிய வகைப்பட்ட மொழியினால் வெளிப்பட்டுள்ளன. அவை கதையுடன் பின்னிப் பிணைந்து உருவாக்கும் உலகம் கவர்ச்சிகரமானது.
    கோணங்கி உருவாக்கிய பித்து மொழியின் வழியே பயணிக்கத் தொடங்கிய குமார் அம்பாயிரம் தனக்காக உருவாக்கிய புனைவுவெளியில் சொல்லியுள்ள கதைகள் காற்றில் மித்க்கின்றன.. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான தமிழ் மொழியினால் உருவாகியுள்ள நிலவெளியைப் புறக்கணித்து, ஆங்கிலேயக் காலனியாதிக்கம் உருவாக்கிய அறிவியல், பகுத்தறிவின் துய்ப்பு ஏற்படுத்திய சேதங்களில் முக்கியமானது, திணைசார் வாழ்க்கைச் சூழலை நாசமாக்கியது. என்ன இழந்தோம் என்பது குறித்துப் புரிதலற்ற பெரும்பான்மைத் தமிழரிடையே குமார் அம்பாயிரம் தொல்குடியினராகத் தன்னைக் கருதிடும் நிலையில், மரபின் தொடர்ச்சியாக நாட்டார்  தொன்மங்களைக் கதைகளாக்கியுள்ளார்; குறியீட்டு நிலையில் இயற்கையைப் புரிந்துகொள்ள முயன்றுள்ளார். ன்யாக் என்ற புனைகதை ஆவிகளுடனான கதைசொல்லியின் அனுபவங்களைப் பதிவாக்கியுள்ளது. ஆவி என்ற சொல்லை அப்படியே உச்சரித்தால், அதனுடைய பொருள் பலவீனமாகிவிடும் என ன்யாக் என்ற சொல்லைப் பயன்படுத்துவது, கதையை வேறுதளத்திற்கு நகர்த்துகிறது. கொடிய விஷமுள்ள பாம்பினை நல்லது, நீண்டது, பூச்சிபொட்டு என அழைக்கும் நாட்டார் மரபில் ஆவியும் ன்யாக் என மாறுகிறது. அகாலமாக மரணமடைந்தவரின் ஆவியுடனான கதைசொல்லியின் உரையாடல் ,மாந்திரிகத் தன்மையுடையதாக மாறி விநோதமான உலகினுக்குள் இட்டுச் செல்கிறது. ஃ என்றொரு கதையில் புராதனமான மனநிலையுடைய கதைசொல்லிக்கும், விலங்குகளுக்குமான உறவு சொல்லப்பட்டுள்ளது. மனைவியோடும், காட்டில் வசிக்கிற பெண்ணுடனும் உறவு வைத்துள்ள கதைசொல்லியின் நம்பிக்கை கேள்விக்குள்ளாகிறது. தாயை இழந்த கன்றுவையும், கன்றை இழந்த பசுவையும் ஒன்று சேர்க்க, போலியான பிரசவ வலியைப் பசுவிற்கு உருவாக்கிடும் முயற்சியைத் தடுத்திடும் பெண்ணின் மனநிலை, ஆதித்தாயின் வெளிப்பாடு. இறந்தவர் நினைவாகப் படைக்கப்பட்ட உணவைக் காகம் சாப்பிட்டால் இறந்திட்ட முன்னோர் சாப்பிட்டனர் என்ற புராதன நம்பிக்கையைக் க்காக்கா கதையின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய கதைசொல்லியான அம்பாயிரம் வேறு வகைப்படவர். பித்ருக்களைச் சாந்தி செய்வதற்காகத் திதி உள்ளிட்ட சடங்கினைப் பயன்படுத்தி பொருள் ஈட்டுகிற பிராமணர்களின் செயல்பாட்டின் பரவல், கதைசொல்லிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனவேதான் கதைசொல்லி காகத்தை முன்வைத்து நடத்துகிற வைதிக சடங்கைப் பகடி செய்வதுடன் கடுமையாக விமர்சிக்கிற நவீன மனிதனாக மாறுகிறார். அம்பாயிரம் தொன்மையானவராகிக் கதைகளின் வழியாக விநோதமான உலகினுக்குள் இட்டுச் செல்வதற்குப் பயன்பட்டுள்ள மொழி, ஆளுகையானது. அம்பாயிரத்தின் எட்டுக் கதைகள் அடங்கிய ஈட்டி தொகுப்பு, அளவில் சிறியது எனினும், சமகாலத்தின் பதிவாக விளங்குகிறது.
       .
   ’அவநம்பிக்கை கொண்டவனாகவும் துல்லிய முடிவெடுக்கவியலாதனவாகவும் என்னை அறிந்துகொண்ட பிறகு குற்றவுணர்வுகளையும் எழுத்தாக்கத் தொடங்கியவனாகத் தனது கதைசொல்லல் பற்றிக் குறிப்பிடும் பா.திருச்செந்தாழையின்  புனைவு மொழி, நவீனமானது. சிறுகதை ஆக்கத்தில் இதுவரை முன்னோடிகள் பயன்படுத்தாத மொழியைத் திருச்செந்தாழை பயன்படுத்தியுள்ளது, கதைகளுக்குப் புதிய பரிமாணத்தைத் தந்துள்ளது.  ’காலம் ஒரு திருடனைப் போல அவளின் வனப்புகளைத் திருடிச் சென்று விட்டது’ என நினைவின் வழியே பயணிக்கிற கதைசொல்லியின் அத்தையின் கதை காலங்காலமாகப் பெண் எதிர்கொள்கிற துயரங்களால் நிரம்பி வழிகிறது. கிராமத்தில் டவுசர் அணிந்திருக்கும் சிறுவனின் பார்வையில் விரிந்திடும் நினைவில், குன்னத்தூரில் இருந்து மாமாவால் மொட்டையடித்து விரட்டப்பட்ட அத்தை, வெய்யிலின் மௌனத்துடன் உரையாடிக் கொண்டிருக்கும் சொற்கள் ரகசியமானவை. புதிர் நிறைந்தது போல விடை கண்டறியப்படாத கேள்விகளுடன் யதார்த்தம் இருக்கிறது என திருச்செந்தாழை சொல்ல விழைகிறாரா? இவ்வளவு நேர்த்தியுடன் சொற்களைக் கையாண்டு, மொழியின் பூடகத்தன்மையைக் கதையின் மையச்சரடுடன் இணைத்து, வாசிப்பினில் மௌனத்தைப் பதிவாக்கியதில் திருச்செந்தாழையின் எழுத்து,  புதிய செவ்வியல் தன்மைமிக்கது. மழைப்பொழுதில், கோடைப்பகல் பிம்பச்சிதைவு என திருசெந்தாழை விவரிக்கும் கதைகள், விளிம்புநிலையினரின் வாழ்க்கையில் ஏன் இப்படியெல்லாம் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற கேள்வியை எழுப்புகின்றன. நாளை மற்றுமொரு நாளே என வாழ்கிற அழகுவின் கோடைப்பகல்கள், வெய்யில் எங்கும் பரவிட புழுதி பறக்கும் கிராமத்து தெருக்களின் ஊடாகக் கழிகிறது.  வறுமையான சூழலில் தகிக்கிற காமத்தின் வெக்கையானது, முன்னர் சங்கிலியுடன் இணைந்திருந்த அற்புதமான கணங்களை நினைவூட்டுகின்றன. வறுமை காரணமாக இப்பொழுது அவள் செய்கிற செயலின் விளைவான கசப்பு மனதில் ஆழமாக ஊறிக் கிடப்பது, வயிற்றுப்பசியுடன் தகிக்கிறது. எளிய மனிதர்கள் என்றாலும் அவர்களுடைய மனதின் துடிப்புக் கட்டுக்கடங்காமல் பெருகுகிறது. சிறுகதையாக்கத்தில் மொழியை அதிகபட்ச சாத்தியங்களுடன் பயன்படுத்தியுள்ள திருச்செந்தாழையின் கதைசொல்லல், தமிழுக்குப் புதுசு.
     குற்றவுணர்வுடன் வாழப் பழகியவர்களாக மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.       தொலைக்காட்சி செய்தி சேனலில் ஒளிபரப்பாகும் விபத்தில் கொத்தாக இறந்தவர்களின் கோரமான சடலங்களைப் பார்த்தவாறு இரவு உணவை ருசித்துச் சாப்பிடுவது இயல்பாகி விட்டது. இத்தகைய சூழலில்  காலபைரவன் எழுதியுள்ள சிறுகதைகள் நினைவுக்கு வருகின்றன. திரும்ப ஆட முடியாத ஆட்டத்தின் விதிகள் புனைகதையில் சொல்லப்பட்டுள்ள சம்பவம், மூன்று ஆட்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சாந்தியின் கதை மட்டுமல்ல. போதை தந்த ஊக்கத்தினால் கண நேரத்தில் முடிவெடுத்துக் கொடூரமாக மாறிய சதாசிவம், அவனுடைய இளம் மனைவி, குழந்தை பற்றிய கதையும்தான். சதாசிவனின் இடத்தில் யார் வேண்டுமானாலும் இருப்பதற்கான சாத்தியத்தை முன்னிறுத்திய காலபைரவனின் எழுத்து, நம் காலத்தின் குரல்.  சிறிய தடுமாற்றம் யாரையும் மீளவியலாத சூழலுக்குள் இழுத்துச் செல்லும் என்பதை புனைவாக்கியுள்ளார் காலபைரவன். முறுக்காத்தி கதை நடந்துமுடிந்த ஒரு சம்பவத்தின் மறுபக்கத்தை விவரிக்கிறது. குடும்ப உறவின் புனிதம் என்ற எல்லையை எளிதாக அத்துமீறுகிற கணவன் மனைவிக்கிடையிலான உறவு பற்றிச் சொல்வது காலபைரவனின் நோக்கமல்ல. அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகிற சம்பவங்கள், எந்தவொரு படைப்பாளியாலும் கற்பனை செய்ய இயலாதவாறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என முருகனின் அகால மரணத்தை முன்வைத்துக் கதை சொல்லப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நடக்குமா என யோசிக்க வைக்கிற விநோதங்கள் நிரம்பிய யதார்த்த வாழ்க்கையின் அசலான முகத்தைக் காலபைரவனின் படைப்புகள் பதிவாக்கியுள்ளதும் ஒருவகையில் விநோதம்தான்.
     என் வீட்டின் வரைபடம் எனக் கதைக்கத் தொடங்கிய ஜே.பி.சாணக்யாவின் கதைகள்,  புறநிலையில்  சாதரணமாகக் கருதப்படும் செயல்கள், மனதில் வேறு ஒன்றாக மாறி, முக்கிய இடம் பெறுவதைச் சித்திரிக்கின்றன. அன்றாட வாழ்க்கை யதார்த்தமானது என்ற புரிதல் அற்ற நிலையில் மனிதர்கள் எதிர்கொள்கிற சம்பவங்கள், சாணக்யாவின் கதைசொல்லலில் முக்கிய இடம் பெறுகின்றன. சாணக்யவின் பெண்கள் இதுவரை பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இறுக்கமான விதிகளை மீறுகின்றனர்.  சுழலின் நெருக்கடிக்கு அப்பால் பெண் தனக்காகக் கட்டமைத்திடும் பெண்ணுக்கான வெளியில், ஆண் மையம் தகர்கிறது. ஊரிலுள்ள பல ஆண்களிடம் தனது விருப்பம் போல பாலுறவுகொள்ளும் பெண், அதிகாரத்திற்கு எதிரான ஒன்றாகத் தனது தீவிரமான பாலியல் விழைவைக் கட்டமைப்பது, இனக்குழுச் சமூக வாழ்க்கையின் எச்சமாகும். அங்கு ஆண் மேலாதிக்கம் அர்த்தமிழக்கிறது. அமராவதியின் பூனை, ஆண்களின் படித்துறை கதைகள் மூலம் சாணக்யா சொல்கிற கதைகள், பெண்ணின் தனிப்பட்ட பாலியல் துய்ப்பை முன்வைத்து ஆண் இருப்பை அர்த்தம் இழக்கச் செய்கின்றன. உடலை மர்மப்படுத்தும் தமிழ்ச் சமூகத்தில், இதுவரை பூடகப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடல் பற்றிய மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் சாணக்யாவின் எழுத்து, வெறுமனே பாலியல்  பேச்சுகள் மட்டுமல்ல.  பாலுறவை முன்வைத்துப் புனைந்துள்ள கதைகளின் வழியே சாணக்யா கண்டறிய விழைவது, சமகாலத் தமிழர் வாழ்க்கையின் இன்னொரு முகம். புனைவுவெளியில் மிதக்கிற சொற்கள் கட்டமைக்கிற புனைகதைகள், இதுவரை கண்டும், கேட்டிராத வழியில் வாசகனை இட்டுச்செல்லும்போது, புதிர்த்தன்மையும் விநோதமும் கலந்த நிலையில் மங்கலாகத் தோன்றுகின்றன.
     மாநிறப் பட்டாம் பூச்சிகள் தொகுப்பின் மூலம் சிறுகதை உலகில் அடியெடுத்து வைத்துள்ள இளைஞரான கார்த்திகைப் பாண்டியன், மனிதர்கள் யாருடைய கைப்பாவைகள் என்ற கேள்வியைப் படைப்பின் வழியாகக் கேட்கிறார். மரபான சிறுகதை வடிவம், கதைசொல்லல் முறையிலிருந்து விலகி, யதார்த்தம் ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறது என விசாரிக்கிறார். அந்தர மீன் கதையில் கதைசொல்லி விவரிக்கிற சாந்தியை முன்வைத்த புனைவு முடிவற்ற கேள்விகளை எழுப்புகிறது. மாய விலங்கின் கரத்தினால் சிக்குண்டது போல சாந்தியின் மனப்பிறழ்வு  பற்றிய விவரிப்பின் வழியே கனத்த மௌனம் வாசகனைத் துரத்துகிறது. மனவெளி மனிதர்களின் இன்னொரு முகம் அந்தரத்தில் மீனாக மிதக்கிறது. இருப்பின் வலியுடன் அபத்தமாகிப்போன சூழல் குறித்த நிலையில் நடுத்தர வக்கத்து இளைஞனின் அனுபவங்கள், மரநிறப் பட்டாம் பூச்சிகளாகச் சிறகடிக்கின்றன ஐந்து நட்சத்திர விடுதியின் பிரமாண்டத்தில் தன்னைத் தொலைத்தவன், விரும்பி வந்தவளுடன் கைகூடாத புணர்ச்சி, முகவரியை மறந்த பெரியவர், ரயில் இஞ்சின்முன் தாவும் குழந்தை எனக் காட்சிகள் தொடர்கின்றன. இவையெல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்க நேரிடும் அவலம்தான் இன்றைய வாழ்க்கையின் நெருக்கடி என கார்த்திகைப் பாண்டியன் சொல்ல விழைந்துள்ளார். நவீன வாழ்க்கை உருவாக்கியிருக்கும் அன்றாட நிகழ்வுகளைக் கதையாக்குவதில் கையாளப்பட்டுள்ள செறிவான மொழி, வாசகனைக் கதையுடன் ஒன்ற விடவில்லை.  மரணமடையும் நிலையில் இருக்கும் பெரியப்பாவை முன்வைத்துக் கதைசொல்லி நினைக்கிற நினைவுகள்,  பரமபதம் கதையில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.  சுய முன்னேற்றம் என்பது தாரகமந்திரமாக எங்கும் ஒலிக்கிற சூழலில், எந்தவொரு விஷயமானாலும் எட்டிப் பார்த்து ஒதுங்கிப் போகிற நவீன மனிதன் பற்றிய பாண்டியனின் கதைகள், சமகாலத்தின் போக்கை அழுத்தமாகச் சித்திரித்துள்ளன.
      யதார்த்தமாகக் கதை சொல்வது, தமிழில் பெரு வழக்காக உள்ளது. பொருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து எழுதப்படுகிற கதைகள், வாசிப்பினில் கண்ணீரை வரவழைக்க முயலுவது, சிறந்த கதையின் இலக்கணமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் யதார்த்தமான விவரிப்பு மூலம், இருப்பின் இன்னொரு பக்கத்தை விவரிப்பதும் நடைபெறுகிறது. பவாசெல்லத்துரை, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், என்.ஸ்ரீராம், வா.மு.கோமு, லக்ஷ்மி சரவணக்குமார் போன்றோரின் புனைவுகள் வெறுமனே யதார்த்தமானவை மட்டுமல்ல.
    நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற தொகுப்பின்மூலம் அறிமுகமான பவாசெல்லத்துரையின் கதைகள், விளிம்புநிலையினரைப் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளன. சூழலின் வெக்கையினால் கடுமையான நெருக்கடியிலும் வாழ்கிறவர்கள், இக்கட்டான ஒரு கணத்தில் எப்படி மனிதமையத்துடன் எதிர்வினையாற்றுகின்றனர் என்பது பவாவின் கதைகள் சித்திரிக்கும் மையம். இருள் என்பது புரியாத புதிராகிப் பெரும்பாலான உயிரினங்களை உறக்கத்திற்குள் ஆழ்த்திடும் வேளையில், வேட்டை கதையில் வரும் ஜப்பான் கிழவன், இருளுக்குள் இயங்குகிறான். அம்மாவாசை இருளில் காட்டுக்குள் திரிகிற வேட்டைக்காரனின் நினைவுகளில் பூர்விகத்தில் வாழ்ந்த காடு உறைந்திருக்கின்றது. நவீன வாழ்க்கையில் வேட்டை என்பது, ஜப்பான் கிழவனே வேட்டைப் பொருளாக மாறுவதை உணர்த்துகிறது. இருளும் கசப்பும் நிரம்பி வழியும் வாழ்க்கைப் போக்கில், மனித இருப்பை அர்த்தமாக்கிட விழையும் விளிம்புநிலையினரின் மனநிலை, பவாவின் கதைகளில் முக்கிய இடம் பெறுகிறது. பச்சை இருளன், சத்ரு ஆகிய இரு கதைகளிலும் சித்திரிக்கப்பட்டுள்ள கிராமத்தினருக்கும் திருடர்களுக்குமான உறவு, இதுவரை தமிழில் எழுதப்படாத பதிவு. கடுமையான பஞ்சம் நிலவிய வறண்ட காலகட்டத்தில் அம்மனுக்குக் கூழ் படைப்பதற்காகச் சிரமப்பட்டுச் சேகரித்த தானியத்தைத் திருடிய திருடனைக் கொல்வது என்று கிராமத்தினர் முடிவெடுகின்றனர். அதற்காக நச்சு இலையைத் தேடி, ரங்கம்மா கிழவிக் காட்டிற்குள் திரிகிறாள். மாவுக்காகக் கம்பு தானியத்தை இடிக்கிற வறுமையுற்ற பெண், பசியால் வாடுகிற தாய் தனது மூன்று பிள்ளைகளுக்காகப் பிச்சை கேட்டவுடன், மாவைத் தருவது சாதாரண விஷயமல்ல. மாவைப் பெற்ற தாயின் கண்ணில் இருந்து நீர் சொட்டுகிறது. அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் துளிர்க்கிறது. திடீரென வானம் பொத்துக்கொண்டு பேய்மழை கொட்டுகிறது என்ற பவாவின் கதைசொல்லலை நாட்டார் மரபில்தான் புரிந்திட முடியும். மழையினால் மண் ஈரமானது போல கிராமத்தினர் நெகிழ்ந்துபோய் திருடனை விடுவிக்கின்றனர். விளிம்புநிலையினரின் மனதுக்குள் பொதிந்துள்ள சகமனிதர்கள் மீதான நேசம்  இக்கட்டான நேரத்திலும் வெளிப்படும் என்பதைக் கதைசொல்லல் விவரித்துள்ளது. தெருக்கூத்துக் கலைஞரை முன்வைத்திடும் ஏழுமலை ஜமா சிறுகதை, பவாவின் கதைசொல்லலுக்குச் சான்று. கலையுடன் தன்னைப் பொருத்திக்கொண்ட ஏழுமலையின் சீரழிந்த பொருளியல் வாழ்க்கை, அவரை இடைவிடாமல் துரத்துகிறது. சாராய போதையுடன் துள்ளிக் குதித்து அடவுகளை ஆடிடும் எழுமலை மயங்கி கீழே விழுந்தவுடன், அவருக்குத் தண்ணீர் தருவதற்காகப் பல கால்கள் ஓடின என்பது கதையை வேறு தளத்திற்கு மாற்றுகிறது.  விடுவிப்பு இல்லாத சூழலிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை முன்னிலைப்படுத்திப் பவாசெல்லத்துரை கதை சொன்னாலும், கதையாடல், வாசிப்பில் தொந்தரவை ஏற்படுத்துகிறது
         இளம்பிராயம் முதலாக இடைவிடாமல் கதை கேட்டலின் விளைவாகக் கதைசொல்லியாக மாறியதாகத் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் என்.ஸ்ரீராம், மாறுபட்ட சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதுவதில் ஆர்வமுடையவர். கொங்கு வட்டாரப் பின்புலத்தில் வாழ்வியல் சார்ந்து எழுதுகிற ஸ்ரீராமின் கதைசொல்லல் ஆபூர்வமான தருணங்களைக் காட்சிப்படுத்துகிறது. கூறு கதையில் படையன் மாதாரி, மாட்டை விலைக்கு வாங்கிக் அறுத்துக் கறியைக் கூறு போட்டு விற்கும் தொழில் செய்கிறவன். அவனது மனைவி கமலம். திருமணமாகிப் பல வருடங்களாகியும் குழந்தை பிறக்காத காரணத்தினால் மன உளைச்சலில் இருக்கிறான். கமலம்தான் குழந்தை பிறக்காமல் இருப்பதற்குக் காரணம் என அவன் சொன்ன பொய்யினால் மனமுடைகிறாள். சினை தங்காமல் விற்கப்பட்ட  பசுவை விலைக்கு வாங்கி வந்து அறுத்துக் கூறு போடுகிறான். ”நா மாடாப் பிறந்திருந்தா என்னையும் வெட்டிக் கூறுதானே போடிருப்பாங்க”  என்ற கமலத்தின் பேச்சு அவனைத் திகைப்படையச் செய்கிறது. ஆண் பெண் உறவில் பிள்ளையை முன் வைத்து எழும் பூசலை முன்வைத்துச் சொல்லப்பட்டுள்ள கதை, வாசிப்பில் அதிர்வை ஏற்படுத்துகிறது. மீதமிருக்கும் வாழ்வு புனைகதையானது கோமதி , குடிகாரக் கணவன், வீட்டிற்க்கு வந்த தந்தை என மூவரை மையமிட்டு விரிந்துள்ளது. அருமையான பெண் கோமதி, அன்பான அப்பா  என விவரிக்கிற ஸ்ரீராம், வாழ்க்கை ஏன் சிலருக்கு  இவ்வளவு கருணையற்றதாக இருக்கிறது என்பதை வாசிப்பில் உருக்கமாகக் கேட்கிறார். யதார்த்தமான கதைசொல்லல் மூலம், மனித இருப்பின் வலியைப் பதிவாக்குவது ஸ்ரீராமின் பெரும்பாலான கதைகளின் தளமாக உள்ளது.    
  
     கொங்கு வட்டாரப் பின்புலத்தில் எளிய மனிதர்களின் வாழ்க்கை, இப்படியெல்லாம் இருக்கிறது என  விலகி நின்று விவரிக்கின்றன வா.மு.கோமுவின் பெரும்பாலான சிறுகதைகள். மரபான கிராம வாழ்க்கை இன்று சிதலமாகி, மனிதர்கள் அற்பமானவர்களாக மாறிக்கொண்டிருப்பதைப் பகடியுடன் கொங்கு வட்டார மொழியில்  விவரிப்பது கோமுவிற்கு இயல்பாகக் கைவரப் பெற்றுள்ளது. பண்ணையம் கட்டுபிடியாகாத நிலையில், விவசாயம் நசிந்துபோய் கிராமத்தினர் நகரத்தை நோக்கித் தள்ளப்படுகின்றனர். பனியன் கம்பெனி, தறி என இயந்திரங்களின் மேலாதிக்கம் பெற்ற சூழலில், மனித மதிப்பீடுகளின் வீழ்ச்சி வலுவாக உள்ளது.  இதுவரை சாதி ஏற்றத்தாழ்வினால் நலிவடைந்தவர்களும், பால் சமத்துவமின்மையினால் ஒடுக்கப்பட்ட பெண்களும் சுவாசித்த சுதந்திரக் காற்று, ஏற்படுத்திய பின்விளைவுகளைப்  பற்றிய கோமுவின் கதைகள் குறிப்பிடத்தக்கன. ஆண்கள் குவார்ட்டர் பிராந்தி பாட்டில் போதையுடன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என யோனி தேடி அலைகிற நிலை, தனிமனித ஒழுக்கம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த ஓட்டலில் உணவு சுவையாக இல்லை என்பதால், வேறு ஓட்டல் தேடிப் போவது போல ஆணும்பெண்ணும் நடந்துகொள்வது இன்று சிறிய அளவில் இருப்பினும்  எதிர்காலத்தில் பொதுப்புத்தியாகிவிடும். அலைபேசியை வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் நானகைந்து ஆண்களுடன்  காதல் பேச்சு பேசுகிற கீதாவை முன்வைத்துக் குட்டிப்பிசாசு கதையில் கோமு சொல்லியுள்ளதை இயல்பானது என்று கருத வேண்டியதுதான். முதலாளித்துவம் குடும்ப உறவுகளைச் சிதைத்துப் பெண்கள், குழந்தைகளை எப்படி வீட்டை விட்டு வெளியே எறியப் போகிறது என 1848-இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயம்,, இன்று நடைபெறுகிறது என்பதற்கு ஆதாரமாக கோமுவின் கதைகள் உள்ளன.
     இரவுக் காட்சி தொகுப்பின்மூலம் கே.என் செந்தில் சொல்லியுள்ள கதைகள், இருள் உலகில் வதங்கியிருக்கும் மனிதர்கள் பற்றிச் சொல்கின்றன. வாழ்க்கை இத்தனைக் கசப்பும் வெறுப்பும் ததும்பிட கைவிடப்பட்ட நிலையில் தத்தளிக்கிறவர்கள் பற்றிய கதைகள், அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. செறிந்த மொழியில் காட்சிகளாக விரிந்துள்ள இரவு மிருகம், விடாமல் கதைசொல்லியைத் துரத்துகின்றது. வன்முறையும் கொடூரமும் நிரம்பிய  நகரச் சூழலில் விளிம்புநிலையினர்  மனவக்கிரமும் ,கையாலாகாத காமமும், வறட்சியும் மிக்க வாழ்க்கையை வாழ்ந்து தீர்வதற்கான வெளிதான் செந்தில் சித்திரித்துள்ள கதைகளின் மையம். கதவு எண்13/73, மீட்சி, வாக்குமூலம், வருகை போன்ற சிறுகதைகளின் களன் யதார்த்தமாக இருந்தாலும், ஏன் இப்படி வதைகளின் தளமாக மனிதர்கள் துயரப்படுகின்றனர் என்ற கேள்வி தோன்றுகிறது. பொருளியல்  நெருக்கடியுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்க்கையை நகர்த்திச் செல்கிற சூழலில் மனித இருப்பு அர்த்தமற்றதாகிறது. விழுமியம் எதுவுமற்றுச் சிதலமாகிப்போன மனிதர்களையே குறி வைத்துப் படைப்பாக்குகிற செந்திலின் கதைகள், இன்றைய வாழ்க்கையின் இன்னொரு முகம்தான்.
    தமிழில் அதிக எண்ணிக்கையில் எழுதுகிற எஸ்.செந்தில்குமாரின் சிறுகதைகள் பெரிதும் பாத்திரங்களை மையமிட்டுச் சம்பவங்களுக்கு முன்னுரிமை தருகின்றன. நடப்பு வாழ்க்கைக்கும் மனிதர்களுக்குமான உறவைத் தேடுவது இவருடைய கதைகளில் இயல்பாக நடைபெறுகிறது. அன்றாட வாழ்வில் எதிர்கொள்கிற மனிதர்கள் பலரும் ஏதோ ஒருவகையில் நெருக்கடியான வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். கிராமத்தில் வாழ்கிற விவசாயி, கைவினைஞர் போன்றோர் பொருளாதாரரீதியில் அடைகிற வறுமை இடைவிடாமல் துரத்துகிறது. அதேவேளையில் தனிமனிதரீதியில் எதிர்கொள்கிற அவமானங்களும், வெறுமையும் குறிப்பிடத்தக்கன. குறிப்பிட்ட கால இடைவெளியில் எல்லாவற்றையும் மனிதர்கள் மறந்து போனாலும், இப்படியெல்லாம் வாழ்கிறார்கள் எனப் புனைவிற்குள் கொண்டுவர முயலும் செந்தில்குமாருக்குப் பருண்மயான நோக்கம் உள்ளது. அனார்க்கலியின் காதலர்கள் என்ற கதைத் தலைப்பு உருவாக்கும் எதிர்பார்ப்பினுக்கு மாற்றாக விளிம்புநிலையினரின் காதல், எப்படி எல்லாவற்றையும் சீரழிக்கிறது என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அனார்க்கலி தனது பெண்ணுடலை முன்வைத்து, ஆண்களின் பாலியல் வேட்கையை வேடிக்கையானதாக மாற்றி செய்கிற சாகசத்தின் பின்புலத்தை வாசிப்பின்மூலம் வாசகர் தேடும்போது, முடிவற்ற சாத்தியங்கள் தென்படுகின்றன. ஏன் இப்படியெல்லாம் ஏதோ ஒன்றின் பெயரால் மனிதர்கள் தங்களை வதைக்குள்ளாக்குகின்றனர் என்ற செந்தில்குமாரின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒருபோதும் தீராத கதைகளின் பின்னால் பயணிக்கிற செந்தில்குமாரின் யதார்த்தமான புனைவுலகு, திசைகளெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
     விளிம்பு நிலையினர் குறித்துக் கதைசொல்கிற லக்ஷ்மி சரவணக்குமார் சிறுகதை வடிவத்தில் தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்படுகிறார். புதிரான நிலையில் எதுவும் நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகளுடன் அவநம்பிக்கையின் காரணமாகத் தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கிற மனிதர்களின்  ஒழுக்கமீறல்கள், குற்றவுணர்வுகள், தடுமாற்றங்கள் எங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லாவிதமான மதிப்பீடுகளும் அர்த்தமிழக்கிற சூழலில் கிராமம், நகரம் என இரு வேறு வெளிகளில் சொல்லப்பட்டுள்ள சரவணக்குமாரின் கதைகள் வாழ்க்கையின் இடைவிடாத நெருக்கடியைப் பேசுகின்றன. விட்டேத்தியான மனநிலையுடன் வாழ்கிறவர்கள் மட்டுமின்றி, எதற்கும் துணிந்தவர்கள் பற்றிய கதைகள், வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இப்படியான உலகத்தில் உனது இருப்பு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியை முன்னிறுத்துகிற கதைகள், ஒரு நிலையில் அபத்தத்தைச் சித்திரிக்கின்றன. முதல் தகவல் அறிக்கை கதையில் வாக்குமூலங்களாகச்  சொல்லப்பட்டுள்ள விவரங்கள், வெறுமனே  தகவல்கள் மட்டுமல்ல. கிராமத்து வயதான  உழைப்பாளிப் பெண், கடந்த கால வாழ்க்கையில் எதிர்கொண்ட சம்பவங்கள் வழியாக முடிவற்ற கதை, சொல்லப்பட்டுள்ளது. யதார்த்த விவரிப்பு என்றாலும், ஒரு புள்ளியில் கதை, திடீரென வேறு தளத்திற்கு நகர்த்தப்படுகிறது வசுந்தரா எனும் நீலவர்ணப் பறவை என்ற கதை ஃபாண்டஸி வகைப்பட்ட எழுத்து. சிறுமியை முன்வைத்துப் பெண்ணுக்கான வெளியைப் புனைந்திட அவளுக்குச் சிறகுகள் முளைத்து விண்ணில் பறந்தாள் என விரிந்திடும் கதை, சுவராசியமானது. தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் கதைசொல்கிற சரவணக்குமாருக்கு சோதனை வடிவங்களில் இருக்கிற நம்பிக்கை, அவருடைய கதைகளில் வெளிப்பட்டுள்ளது.
  கவிஞர்களுடன் ஒப்பீடும்போது, பெண் மையச் சிறுகதை எழுதுகிற பெண் படைப்பாளர்களின் எண்னிக்கை மிகவும் குறைவு. பெண் என மனதாலும் உடலாலும் அறிந்திட்ட நிலையில் எழுதப்படுகிற சிறுகதைகள் ஆழமான கேள்விகளை எழுப்பும் வல்லமையுடையவை. உமா மகேஸ்வரி, சந்திரா ஆகியோரின் எழுத்துகள் தனித்துவமானவை.
          ஆண்களின் அதிகார மையமாக விளங்கும் குடும்பத்தில் பெண்ணின் இடம் பதிலியாக்கப்பட்டு, பொறுக்காகக் கருதப்படுகிற நிலையைக் கதைகளாகியுள்ள உமா மகேஸ்வரியின் எழுத்து, பெண்ணெழுத்துவிற்கு அடையாளமாக விளங்குகிறது. குடும்ப அமைப்பு என்பது நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் வெளியை ஒடுக்குவதுடன், அடுத்தடுத்துச் சுமைகளைச் சுமந்துகொண்டு, ஓர் உயிராகக் கருதாத சூழலை, மகேஸ்வரியின் பெரும்பாலான கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆண் கட்டமைக்கிற வட்டத்திற்குள் வாழ்கிற நிர்பந்தம் காரணமாகச் சுயமாக வாழமுடியாமல் புழுங்கித் தவிக்கிற பெண்ணின் வலிகளைப் பேசுகிற கதைகள், அழுத்தமானவை. மரப்பாச்சி கதையில் உற்சாகத்துடன் துள்ளித்திரிகிற சிறுமி தனது இளமைக்கனவுகள் சிதையுமாறு, நெருங்கிய உறவினரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகிறாள். பதின்பருவத்தை எட்டிப் பார்க்கவிருக்கும் சிறுமியின் உடலைப் பாலியல் களமாக்கும் கொடுரமானவனின் கையில் சிக்கிய மரப்பாச்சியாகப் பெண்ணுடல் மாற்றப்படுவதை விவரிக்கிற கதை, ஒட்டுமொத்தச் சமூகத்தின் துயரத்தைப் பேசுகிறது. அன்றாட வாழ்க்கைச் சம்பவங்கள்கூட மகேஸ்வரியின்  மொழியினால் உருக்கமான கதைகளாகின்றன.
     பெண் எனத் தன்னியறிந்து, இன்றைய சூழலில் பெண்ணுக்கான தனிப்பட்ட பிரச்சினைகளைப் புனைகதைகளாக்குவதில் சந்திராவின் எழுத்து தனித்துவமானது. அறைக்குள் புகுந்த தனிமை கதையில் கதைசொல்லிக்கும் இளைஞனுக்குமான தொடர்பு பற்றிய விவரிப்பு, பெண்ணை வெறும் உடலாக மட்டும் அணுகுகிற இளைஞனின் நிலைப்பாடும், அதற்கெதிரான பெண்ணின் செயலும் என விவரிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கான தனிப்பட்ட மனம் உண்டு என அறியாமல், அவளை உடலாக மட்டும் பார்க்கிற ஆண்மையப் போக்கினால், அவள் அடைகிற துயரங்கள், அளவற்றுப் பெருகுவதைச் சந்திராவின் பெரும்பாலான கதைகள்  பேசுகின்றன. சந்திராவின் புனைகதைகளில் ஆணை முற்றிலும் புறக்கணிக்கும் பார்வை இல்லை. ஏன் இப்படி பெண்ணைப் புரிந்திடாமல் ஆண் அலைகிறான் என்ற கேள்வி சில கதைகளில் வெளிப்பட்டுள்ளது. காலங்காலமாகப் பெண் மீது தொடர்கிற வன்முறையை நாட்டார் மரபு எங்ஙனம் எதிர்கொள்கிறது என்பது அழகம்மா கதையில் பதிவாகியுள்ளது.  ஓரளவு பொதுவெளிக்குப் வந்த பின்னரும் இளம் பெண் காதலை முன்வைத்து அளவுக்கதிகமான வெறியினால், தன்னையே சிதைத்துக்கொள்ள  முயலுவதன் விளைவுகள் குறித்து  ஆண் பார்வையில் சொல்லப்பட்டுள்ள தொலைவதுதான் புனிதம் கதை, குற்றமனம் தொடர்புடையது. காட்டின் பெருங்கனவு என மலைக்கிராமப் பின்புலத்தில் கதைசொல்லி பகிர்ந்துகொள்கிற சம்பவங்கள், இயற்கைப் பின்புலத்தில் பெண் மனதின் நுணுக்கங்களைப் பதிவாக்கியுள்ளன. பாலூட்டியின் இயல்பான குட்டியின் மீதான அன்பு விரிந்து, சக உயிரினங்களை நேசிக்கிற உன்னதமான மனநிலையை ஒருபோதும் புரிந்து கொள்ளவியலாத பெரும்பான்மை ஆண்களின் உலகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சந்திராவின் எழுத்து ஈரத்துடன் ததும்புகிறது.
     இஸ்லாமியரின் வாழ்க்கைக்கு முன்னுரிமை தரும் கதைகள் என கீரனூர் ஜாகிர்ராஜா, எஸ். அர்ஷியாவின் கதைகளைப் பகுப்பது, வகைமாதிரிக்கான முயற்சிதான். மற்றபடி இருவரின் கதைகளும் மனித மனத்தின் நுட்பங்களையும், அன்றாடப் பிரச்சினைகளையும் முன்னிறுத்துகின்றன். ஒருவகையில் யதார்த்தமான விவரிப்பில் சமூகத்தின் இன்னொரு பக்கத்தையும் பதிவாக்கியுள்ளனர்.       
       கீரனூர் ஜாகிர்ராஜா சிறுகதை ஆக்கத்தில் தொடர்ந்து காத்திரமாக எழுதி வருகிறார். மைய நீரோட்டத்தில் இருந்து விலகியிருக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள கதைகள் வாசிப்பில் சுவராசியமாக உள்ளன.தமிழ்நாட்டுக் கதைகளில் முஸ்லிம் வாழ்க்கை சித்தரிக்கப் பெறாததற்குக் காரணம் தமிழ் எழுத்தாளர்கள் அவர்களைப் புரிந்து கொள்ளாததுதான். தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. முஸ்லிம்கள் மத உணர்ச்சி மிக நுண்ணியது. வாழ்க்கை முறை மிகக் கட்டுத்திட்டமுள்ளது. முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாதது.“  என்று கவிஞர் இன்குலாப் கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாம் வலியுறுத்தும் நெறி மட்டுமின்றி, ஐந்து வேளை தொழுது, இறை நம்பிக்கையுடன் வாழ்வதாக நம்புகிற ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை மதத்தின் காவலராக நினைத்து, கறாரான விதிகளை வலியுறுத்துவது நடைபெறுகிறது. கண்காணிப்பின் அரசியல் நடைபெறும் சூழலில் அன்றாடம் வாழ வேண்டிய நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் மிக்க சமூகத்தைப் பற்றியும், அதன் முரண்பாடுகள் குறித்தும்  புரிந்துகொள்ள முடியாத நிலையை மாற்றுவதாகக் கீரனூர் ஜாகிர்ராஜாவின் கதைகள் உள்ளன. சைத்தான் மீது எறிந்த கல் கதையில் ஜாகிர்ராஜா வெறுமனே தள்ளி நின்று கதை சொல்கிறார். புனிதக்கடமையை நிறைவேற்றுவதற்காக ஹஜ் பயணம் சென்ற ஆபீதன், சைத்தான்மீது கல்லெறியும் சடங்கில் பங்கேற்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி மௌத்தானார். சக மனிதர்கள் மீதான நேசத்தை மறந்து, கற்கள் ஏறிவதில் ஏன் இத்தனை வெறி? எது மனிதர்களை இப்படி சைத்தானாக மாற்றுகிறது என்ற கேள்வி வாசிப்பில் தோன்றுகிறது.  இஸ்லாமியர்கள் கதாபாத்திரங்கள் என்றாலும் எல்லோரையும் போல அவர்களுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் ஏற்றஇறக்கத்துடன் இருக்கிறது என்ற விவரிப்பு, பெரும்பாலான கதைகளில் பதிவாகியுள்ளது. திரைப்படம், இலக்கியம் சார்ந்து எழுதப்பட்டுள்ள ஜாகிர் ராஜாவின் கதைகள் பெரிதும் மனிதமையமாக விரிந்துள்ளன.
     இஸ்லாமியரின் வாழ்க்கைப் பின்புலத்தில் பெரும்பான்மையான கதைகளை எழுதியுள்ள எஸ்.அர்ஷியாவின் கதைசொல்லல், சம்பவங்களின் வழியாக விரிந்துள்ளது. பெரிதும் யதார்த்தத்தளத்தில் தன்னைச் சுற்றிலும் நடைபெறும் நல்லதுக்கும் கெட்டதுக்குமான நிகழ்ச்சிகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ள புனைகதைகள், அர்ஷியாவை நவீன கதைசொல்லியாக மாற்றுகின்றன. உப்புக்குழி கதையில் வரும் பிணத்திற்குக் கபர்க்குழி வெட்டும் பாபுகான் பற்றிய பகடியான பதிவுடன், மகளை இழந்த தந்தையான தாவூத் சாயபூவின் துயரமும் ஒரு புள்ளியில் ஒத்திசைவது, இருப்பின் அபத்தத்தைச் சொல்கின்றன. அதியற்புதப் புனைவு எந்த நொடியிலும் நிகழ்ந்திடுவதற்கான சாத்தியப்பாடு யதார்த்தக் கதைகளிலும் இடம் பெற்றுள்ளது. மௌனச்சுழி புனைவில், வரிகளுக்கிடையில் கணக்கற்ற பாம்புகள் ஊர்ந்து திரிகின்றன. மின்விசிறிகளின் இறக்கைகள் தட்டைப் பாம்புகளாகச் சுற்றிச் சுழல்வது தொடங்கி, இறுதியில் அலிகான் கையில் ஏந்தியிருக்கும் ஹஜரத்தின் சடலத்துக்குள்ளிருந்து ஒரு கட்டுப் பாம்புகள் நெளிகின்றன. பிரச்சினைகள் துரத்துகிறபோது, எங்கு பார்த்தாலும் பாம்புகள் எனச் சொல்லப்பட்டுள்ள  விவரிப்பானது, கதைக்கு வேறு அர்த்தத்தைத் தருகிறது. எத்தகைய நெருக்கடியிலும் மனிதமையத்துடன் செயல்படுவதற்கான நிலை இருப்பதைப் புனைகதை கட்டமைத்துள்ளது. கட்டில் பலகையை ஓசியாக வாங்கி, வீட்டிற்குத் தூக்கிப்போன உசேன், அன்றிரவில் அந்தக் கட்டிலில் படுத்திருக்கும்போது, எப்போதோ இறந்தவர்கள் மீண்டும் வந்து பேசுகின்றனர். கட்டிலை முன்வைத்து விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், கதையை விநோதமாக்குகின்றன. கதைகளின் மூலம் மனித இருப்பை  ஆர்வத்துடன் விசாரிக்கிற அர்ஷியாவின் புனைவுலகு, முடிவற்றது.        
        எனக்குப் பிடித்த படைப்பாளர்கள் மட்டுமின்றி, கதைசொல்லலில் புதிய வகைமாதிரியை உருவாக்குவதுடன், தொடர்ந்து எழுதுகிற படைப்பாளர்கள் குறித்துக் கோட்டோவியம் போலச் சொற்களைப் பதிவாக்கியுள்ளேன். பதினைந்து ஆண்டுகளுக்கும் கூடுதலான காலகட்டத்தில் சிறுகதை வெளியீட்டில்  நடைபெற்றுள்ள வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் பற்றிய எனது கருத்துகள், குறிப்பிட்ட வரையறைக்குள் வெளிப்பட்டுள்ளன. இன்னும் பேசப்பட வேண்டிய படைப்புகளும் படைப்பாளர்களும் நிரம்ப உள்ளனர். 2001-ஆம் ஆண்டு முதலாகச் சிறுகதை ஆக்கத்தில் செயல்படுகிற ஜீ.முருகன், குமாரசெல்வா அஜயன்பாலா, கணேசகுமாரன், விஜய் மகேந்திரன், மனோஜ், சைலபதி, பாலைநிலவன், ஆத்மார்த்தி, ஏக்நாத், ஷாராஜ், புகழ், இளஞ்சேரல், சு.தமிழ்ச்செல்வி, லக்ஷ்மி மணிவண்ணன், மு.குலசேகர், அமலநாயகம், கலைச்செல்வி, குமாரநந்தன், வே.ராமசாமி, புலியூர் முருகேசன், போகன் சங்கர், பாப்லோ அறிவுக்குயில் போன்ற படைப்பாளுமைகள் குறிப்பிடத்தக்க அளவில் சிறுகதைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும்வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்பட்டியல் முழுமையானது அல்ல. இன்னும் நீளும். அவர்கள் எழுதியுள்ள புனைகதைகள் குறித்து பேச்சுகளைத் தொடங்கிட வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளின் முழுமையான செல்நெறி புலப்படும்

           இதுவரை இல்லாதஅளவில் அன்றாட வாழ்வில் எல்லா நிலைகளிலும் நெருக்கடிகள் அதிகரித்தபோதும், மனிதமையத்துடன் செயல்படுவதற்கான தேவையைப் பெரும்பாலான சமகாலப் புனைகதைகள் கட்டமைத்துள்ளன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள் சிறுகதையின் வடிவம், உத்தி, செய்நேர்த்தி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்தனர். கதையில் ஒரு பாத்திரம் சற்றுக் குரலை ஓங்கிப் பேசிவிட்டால், கதையின் அழகியல் குறைவுபட்டதாகப் புலம்பி, ஒதுக்கினர். இன்று எப்படி வேண்டுமானாலும் கதை சொல்வதற்கான சாத்தியப்பாடுகள் பெருகியுள்ள நிலையில், அழகியல் அம்சத்திற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சமகால எழுத்தாளர்கள் புதிய களங்களைத் தேடியவாறு பயணிக்கையில், இதுவரை படைப்பாக்கத்தில் கையாளப்படாமல், ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களையும் கதைகளாக்க முயலுகின்றனர்.. பாலியல் குறித்து மூடுண்ட மனநிலையுடைய தமிழர் வாழ்க்கையில் பெண்ணுடல் பற்றிய பிரேமைகளைத் தகர்த்துவிட்டு, புதிய பேச்சுகளைக் கதைகளின் வழியாக உருவாக்குகின்றனர். காமம் பெண்ணையும் ஆணையும் உயிரியல்ரீதியாகப் படுத்துகிற பாடுகளையும், அவை சமூகத்துடன் முரண்படுகிற/ஒத்திசைகிற நிலைகளையும் கதைகளாக்குவதில் இன்று தயக்கம் எதுவுமில்லை. பெண்ணியம், தலித்தியம், சூழலியம் என நுண்ணரசியல் எழுச்சி பெற்றுள்ள தமிழ் அரசியல் சூழல், சிறுகதை ஆக்கத்தில் புத்தொளி பாய்ச்சுகிறது. இனவரைவியல் தன்மைக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்படும் கதைகளில் மண் சார்ந்து இருப்பினைக் கேள்விக்குள்ளாவது, தொடர்ந்து இடம் பெறுகிறது. பொருளியல் ஏற்றத்தாழ்வு, வறுமை காரணமாக விளிம்புநிலையிரின் வாழ்க்கை இன்று மதிப்பீடு இழந்து வதைக்குள்ளாகியுள்ளது. இன்னொருபுறம் நகரமயமாதல் காரணமாக தொலைந்து கொண்டிருக்கும் கிராமத்து நிலவெளியில், குடும்ப உறவுகள் பெரிய அளவில் சிதலமடைகின்றன. இருப்பினில் இருந்து அந்நியமாதல் எங்கும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இருப்பதா? இறப்பதா? என்ற கேள்விகளின் வழியாகத் சுயத்தைத் தொலைத்தவர்களும் மனப்பிறழ்வாளர்களும் பெருகிடும் சூழலில், பொங்கி வழிந்திடும் கசப்பின் நெடியடிக்கும் சிறுகதைகள் எழுதப்படுவது தற்செயலானது அல்ல. தமிழர்களின் வாழ்க்கையைக் கதைகளாக மாற்றி, வெளியெங்கும் பரப்பிடும் சமகாலப் படைப்பாளர்களின் முயற்சிகள், இன்று காட்டாறு போல பொங்கிக் கொண்டிருக்கின்றன.
.