Monday 29 May 2017

சி.எம்.முத்துவின் நாவல்கள்

             சி. எம். முத்துவின் இனவரைவியல் நாவல்கள்
         ந.முருகேசபாண்டியன்                                   

           பண்டைத் தமிழிலக்கியமான சங்க இலக்கியம்,  நிலமும் பொழுதும் சார்ந்து மனித இருப்பினை மையப்படுத்தி விரிந்துள்ளது. ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிப்பதை இலக்கியப் பிரதிகள் பதிவாக்கியுள்ளன. வளமையான முல்லை நிலத்தின் தெய்வமாக மாயோனும், வறண்ட பாலை நிலத்தின் தெய்வமாகக் கொற்றவையும் கொண்டாடப்படுவது, நிலத்துடன் தொடர்புடையது. மலையில் வேட்டையாடுகிற குறவர்களின் தொழிலுக்கும், பாலையில் திரிகின்ற எயிணர்களின் வழிப்பறித் தொழிலுக்கும் ஒருவகையில் மண்தான் காரணம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்ற குறிப்பிட்ட மக்கள் திரளின் செயல்பாடு, செறிவான முறையில் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. கார்ப்பரேட்களின் ஆதிக்கம் நிலவுகிற இன்றைய காலகட்டத்திலும் தமிழ் மொழியின் வழியாக அடையாளப்படுத்தப்படுவதைவிடத் தமிழர்கள், சாதி அடையாளத்தை முதன்மையாகக் கருதுகின்றனர். நிலமான்ய அமைப்பு உருவாக்கியிருக்கும் ஆண்டான்–அடிமை உறவு ஒருபுறம் எனில், இந்திய மண்ணிற்கே உரித்தான சநாதனம் உருவாக்கி இருக்கும் சாதிய மேல்-கீழ் அடுக்கு இன்னொருபுறம் ஆதிக்கம் செலுத்துகிறது. வயலின் உரிமையாளர்கள் பெரும்பாலும் ஆதிக்க சாதியினர் என்றால் வயலில் வேலை செய்கிற விளிம்புநிலையினர் ஒடுக்கப்பட்ட சாதியினராகவே உள்ளனர். இத்தகைய சூழலில் தஞ்சை மண்ணுக்கே உரித்தான நிலவுடமைப் பின்புலத்தில் கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதில் சி.எம்.முத்துவின் நாவல்கள், இனவரைவியல் தன்மையுடன் தனித்து விளங்குகின்றன.
             தஞ்சை டெல்டா மக்களின்  நிலத்துடனான உறவு, வட்டார மொழி, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், தெய்வ வழிபாடு, சாதிய ஒடுக்குமுறை போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை தந்து எழுதப்பட்ட நாவல்கள் குறைவு. தஞ்சை வட்டார இலக்கியம் என்றால் தி.ஜானகிராமனின் மோகமுள் என்று பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருப்பதற்கு மாறான நாவல்கள் என்றால், சி.எம்.முத்துவின் யதார்த்த நாவல்களைச் சொல்ல வேண்டும். சி.எம்.முத்து பல்வேறு காலகட்டங்களில் தஞ்சை வட்டாரக் கள்ளர் சாதியினரை மையமிட்டு எழுதியுள்ள நெஞ்சின் நடுவே(1982),  கறிச்சோறு(1989), பொறுப்பு(2000), வேரடி மண்(2003), அப்பா என்றொரு மனிதர்(2010) ஆகிய ஐந்து நாவல்கள் குறிப்பிடத்தக்கன. கள்ளர் சாதியைச் சார்ந்தவரான சி.எம்.முத்து, கள்ளர் சாதியில் பிறந்தவர்களின் சமூக வாழ்க்கையை முன்வைத்துப் புனைவாக எழுதினாலும்’ இனவரைவியல்தன்மை காரணமாக, அவருடைய நாவல்கள் சமூக ஆவணமாகியுள்ளன.
          . சாதியத்தின் கோரப்பிடியில் சிக்கியவர்களின் கதையைக் கறிச்சோறு நாவலில் சி.எம்.முத்து பதிவாக்கியுள்ளார். தஞ்சை வட்டாரக் கள்ளர் சாதியினருக்கிடையில் ஏகப்பட்ட உட்பிரிவுகள். ஏதோ ஓர் அளவுகோலினால் கள்ளர் சாதியினரிடையே உயர்வுதாழ்வு கற்பிக்கப்படும் சூழல் நிலவுகிறது. வாகரைக் கள்ளர் உயர்ந்தவர்கள் என்ற நிலையைப் பொருட்படுத்தாமல், முத்துக்கண்ணு விசுவராயர், பத்து மைல் தொலைவில் இருக்கும் நெல்லுப்பட்டுக் கிராமத்தில் தனது மகள் கமலாவிற்குச் சம்பந்தம் பேச முயலுகிறார். அவருடைய நிலைப்பாடு, அதே ஊரைச் சார்ந்த தருமையா நாட்டாருக்கும் கோபால் குச்சிராயருக்கும்  பிடிக்கவில்லை. தெக்குச்சீமைக் கள்ளருக்குப்  பெண்ணைத் தருவது முறையன்று எனப் பிரச்சினையை ஊருக்குப் பொதுவானதாக மாற்றுகின்றனர். கமலத்திற்கும் அதே ஊரிலிருக்கும் வந்தாருகுடி என மட்டமாக அழைக்கப்படும்  சாம்பவசிவம் என்ற இளைஞனுக்கும் இடையில் காதல் என்ற தகவல் அறிந்தவுடன், விசுவராயர் உள்ளிட்ட ஆதிக்கவாதிகள் பதறுகின்றனர். வடுவக்குடி கள்ளர்கள் அறுத்துக் கட்டுகிற வழக்கமுடையவர்கள் என்பதற்காகச் சாம்பசிவத்தைக் கேவலமாகப் பேசுகிறார்கள். ஆதிக்கவாதிகளின் தூண்டுதலினால் மாயாண்டிக் கொத்தபிரியன், தங்கவேலுவின் தலையைத் துண்டாக்குகிறான். ஊரின் கௌரவத்திற்காக, தனது மகனைக்  கொலை  செய்யத் தூண்டிய நாயக்கரைக் கொல்வதற்காக விசுவராயர் கத்தியுடன் பாய்கிறார். சாதிக்காக நடைபெறுகிற கொலைகளின் எண்ணிக்கை பெருகுகிறது.    . முப்போகம் விளைகிற வளமான கிராமத்தில் நிலவிய மனிதர்களின் கொடூரமான மனநிலையையும் சாதியத்தின் கோரமுகத்தையும் சி.எம்.முத்து அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளார். கதைசொல்லலில் செயற்கையான சம்பவங்கள் இடம் பெற்றிருந்தாலும், கிராமம் சார்ந்த விவரிப்பு, வாசிப்பில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. கறிச்சோறு நாவல் முன்னிறுத்தும் சாதியத்தின் பெருமையை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வுகள், தமிழகத்தில் உள்ள எல்லா ஆதிக்க சாதியினருக்கும் பொருந்தும்.. சாதியின் பெருமையைப் பேசுவது சி.எம்.முத்துவின் நோக்கம் அல்ல. இன்று சாதி எப்படியெல்லாம் கிளைவிட்டுப் பரந்திருக்கிறது என்ற நோக்கில், சாதிக்குள் சாதியாக விரிந்திருக்கும்  சாதிய அரசியலைக் கறிச்சோறு நாவல் விவரிக்கிறது
       சாதியத்தின் மேலாதிக்கத்தில், தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு அர்த்தம் எதுவும் இல்லை. குடும்ப உறவுகள் என்ற எல்லையைமீறி எதுவும் செய்யமுடியாத கிராமத்து வாழ்க்கை பற்றிப் பொறுப்பு நாவலில், சி.எம்.முத்து சித்திரிக்கும் சம்பவங்கள், இனக்குழு வாழ்க்கையின் எச்சங்கள். அகமணத் திருமணமுறை இன்றளவும் நீடிக்கும் தமிழர் வாழ்க்கையில், மாமன்-அத்தை வழியிலான திருமண உறவினுக்கு முக்கியத்துவம் தருவதைத் தஞ்சை வட்டாரத் தன்மையுடன் நாவல் விவரித்துள்ளது. பள்ளியூர் ஊர்ப் பண்ணையாரான வாஞ்சிநாத மாங்கொண்டாரின் தங்கையான ரஞ்சிதத்தின் கணவர் சாமிநாத குருக்கொண்டார். மாங்கொண்டாரின் மனைவியான சரசுவதி, குருக்கொண்டாரின் தங்கை. இருவரும் மைத்துனர்கள்.   மாங்கொண்டாரின் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் குருக்கொண்டாரின் மகள் வசந்தாவிற்கும் இடையிலான திருமணப் பேச்சு, வசந்தாவின் ஜாதகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷத்தினால் தடைபடுகிறது. மாங்கொண்டார் வேறு இடத்தில் மகனுக்குப் பெண் பார்ப்பதால், குருக்கொண்டார் கோபமடைகிறார்.
     மாங்கொண்டார், தென்சீமையான கம்பர்நத்தம் ஊர்ப் பண்ணையாரான பொன்னுச்சாமி தென்னம்பிரியார் -மங்களாம்பாள் மகள் பத்மாவைத் தனது மகன் கிருஷ்ணமூர்த்திக்குப் பேசி முடித்துப் பரிசம் போடுகிறார். தென்னம்பிரியாரின் மைத்துனரான பனையக்கோட்டை மிராசுதாரான முத்தையா குச்சிராயர் சம்மதம் இல்லாமல் பரிசம் நடைபெறுகிறது. குச்சிராயரின் தங்கையான மங்களாம்பாளைத் தென்னம்பிரியாரும், தென்னம்பிரியாரின் தங்கையான கோதைநாயகியைக் குச்சிராயரும் திருமணம் செய்துள்ளனர். குச்சிராயர் ஏற்கனவே தென்னம்பிரியாரின் மகன் சண்முகத்தை படிக்கவைத்து டாக்டராக்கியவர். அவன் அவருடைய  மகளைத் திருமணம் செய்யாமல், வேறு பெண்ணை மணம் முடித்ததால், இரு குடும்பங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை இல்லை.
         குடும்ப உறவுகளில் கசிந்திடும் வெக்கை எங்கும் வீசிக்கொண்டிருந்த அறுபதுகளின் காலகட்டத்தில் சொல்லப்பட்டுள்ள கதையில், மாமன் உறவு பற்றிய விவரிப்பு முக்கியமானது. பொறுப்பு நாவலில் இடம் பெற்றுள்ள ஆண்கள், தங்கள் விருப்பத்தினுக்கேற்பப் பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் ஈடுபடும்போது, அம்மாக்கள் வெறுமனே பார்வையாளர்கள்தான். மாமன்- மச்சான் உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்ற நிலையில், ஒருவர்மீது இன்னொருவர் செலுத்தும் அன்பு, ஒருநிலையில் ஆதிக்கமாக மாறுகிறது.        காலங்காலமாகத் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து சொந்தமாகி மகிழ்கிறவர்கள், பின்னர்  திருமணத்தின் காரணமாக ஒருவரையொருவர் எதிரியாக வெறுத்து, செத்துப் போனவர்களாகக் கருதி ஒதுக்குவது, ஒருவகையில் நகைமுரண். ஒரே சாதிக்குள் ஒன்றாக வாழ்ந்தவர்கள், முரண்பட்டாலும், குடும்ப உறவிற்குள் கசிந்து உருகுவது, நாவலில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.  அறுபதுகளில் நிலவிய குடும்ப உறவுகளைப் பதிவாக்கியுள்ள பொறுப்பு நாவல், இனவரைவியல் பதிவாகும்.
       சி.எம்.முத்து எழுதிய முதல் நாவலான நெஞ்சின் நடுவே, அறுபதுகளில் தமிழகக் கிராமங்களில் நிலவிய ஆதிக்க சாதியினரின் பாலியல் அத்துமீறல்களைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. வயலில் உழைக்கிற ஒடுக்கப்பட்டவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்குகிறவேளையில், அந்த இனத்துப் பெண்ணுடல்களைப் பாலியல் வேட்கைக்குள்ளாக்குதல் சாதாரணமாக நடைபெற்றது. தஞ்சை வட்டாரத்து உழைப்பாளிகளான தலித்துகள் பட்ட துயரங்கள் அளவற்றவை.  வயல்களும் வாய்க்காலும் சூழ்ந்த சிறிய கிராமத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை பச்சை பசும் பயிர்கள்; கோரைப்புற்கள்; நொச்சி, ஆடாதொடை. புராதனமான கோவில், அல்லி பூத்திருக்கும் குளம், குடிசைகள். இப்படியான வளமான கிராமத்தில் வாழ்கிற மனிதர்களில்தான் எத்தனை நிறங்கள்? 
     . மழவராயரின் மகன் அண்ணாமலை,  அவனது  நண்பன் சின்னத்தம்பி, வளையாபதி, நாவலில் முக்கிய பாத்திரங்கள். சின்னத்தம்பி தனது தங்கை கௌசல்யா 20 வயதில் கணவனை இழந்ததால், அவளுக்கு மறுமணம் செய்ய முயற்சிக்கிறான். ஊர்க்கூட்டம் போட்டுக் கௌசல்யாவிற்கு மறுமணம் செய்தால், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என எச்சரிக்கின்றனர். ஊரில் இருக்கிற பெரும்பாலான ஆண்கள், ஒடுக்கப்பட்ட பெண்களுடன் உறவு வைத்திருப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். அதேநேரம்  இளம் விதவையான கௌசல்யாவிற்குத் திருமணம் நடந்தால், கள்ளர் சாதியின் பெருமைக்கு இழுக்கு வந்துவிடும் என்று அரற்றுகின்றனர். வெளியே இருந்து பார்க்கும்போது, எளிமையாகத் தோன்றும் கிராமத்தில் கண்காணிப்பு என்பது சாதிய அடிப்படையில் வலுவாக இருப்பதை நாவலாக்கியுள்ளார் சி.எம்.முத்து. பாலியல் ஓழுக்கக்கேட்டை இயல்பானதாகக் கருதுகிற ஆதிக்க சாதியினர், இளம் வயதில் விதவையான சொந்த சாதிப் பெண்ணை ஆசாரம் என்ற பெயரில் ஒடுக்குவதை எதிரிணையாக முன்வைத்துப் புனைவாக்குவதுதான் நாவலாசிரியரின் நோக்கமா? யோசிக்க வேண்டியுள்ளது.
        வேரடி மண் நாவல் தஞ்சைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. கீழ் வெண்மணியில் தீயிலிட்டுக் கொல்லப்பட்ட 44 தலித்துகளின் படுகொலைகளுக்குப் பின்னர் தீண்டாமையும் பொருளாதாரச் சுரண்டலும் எப்படி மறியுள்ளன என்பதை சி.எம்.முத்து வேரடி மண் நாவல்மூலம் விவரித்துள்ளார். கொட்டும் மழையினால், மாரியம்மன் கோவிலுக்குள் ஒதுங்கிய தலித்துகளான அம்மாசியையும் அவரது மகளான சின்னாத்தாளையும் சின்னையா, கோவிலைவிட்டு வெளியே பிடித்துத் தள்ளினார். ஊர்ப் பண்ணையாரான மாணிக்கம் பிள்ளை, அம்மாவாசியை அடித்து உதைக்கிறார். பள்ளர் சாதியினரின் நாட்டாமையான அம்மாசியை அடித்தது, சேரிக்குள் எதிர்ப்பைக் கிளப்பியது. பண்ணையாரின் வயலில் இறங்கி வேலை செய்ய மறுத்து, தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். மாணிக்கம் பிள்ளை வெளியூர் ஆட்களை வைத்து வயல் வேலை செய்ய முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில், இரு பக்கமும் வெட்டுக்குத்தானது. தலித்தான சின்னச்சாமியும் மாணிக்கத்தின் தம்பி மகனான தனபாலும் சேர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர். சிவப்புக் கொடி பறக்கத் தொடங்கியது. பண்ணையார்களான வேர்களைத் தாங்கிப் பிடிக்கும் மண்ணாக இருப்பவர்கள், வயலில் வேலைசெய்யும் கூலிகளான தலித்துகள்தான் என்ற உண்மையை இரு பக்கத்தினரும் புரிந்துகொண்டபோதும் நிலமையில் மாற்றம் இல்லை. கூலி நெல்லின் அளவைக் கூட்டுவதற்காகப் போராடிய தலித்துகளைக் கொன்றுகுவித்த தஞ்சை வட்டாரத்து ஆதிக்கசாதிப் பண்ணையார்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேரடி மண் நாவல் உதவும். நெஞ்சினில் நடுவில் நாவலில் வாயில்லாப் பூச்சிகளாகச் சித்திரிக்கப்பட்டிருந்த தலித்துகள், வேரடி மண்ணில் துணிவுடன் ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது மாறுகிற சமூகச்சூழலைக் காட்டுகிறது.
       எழுபதுகளுக்குப் பின்னர் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வருவது நின்று போனது. வேதியியல் உரம், பூச்சிக்கொல்லி மருந்து என விவசாயம் மாறியது. சிறு விவசாயிகளின் பொருளாதாரநிலை நலிவடைந்தது. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கோல் மிஞ்சாது என்ற பழமொழி நிஜமானது. அப்பா என்றொரு மனிதர் நாவல்மூலம் இன்றைய தஞ்சை டெல்டா விவசாயியின் துயர வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளது. சரவணன் என்ற இளைஞனின் கண்ணோட்டத்தில் அவனது அப்பாவான சந்தரகாசு  குச்சிராயர், மிராசு என்ற பட்டத்துடன் மண்ணுடன் போராடிய கதையை சி.எம்.முத்து விவரித்துள்ளார்.  உழுது, விதை விதைத்து, நாற்றுப் பிடுங்கி, தொழியில் நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, உரம் போட்டு, காவல் காத்து, அறுவடை செய்து, மகசூல் நெல்லைக் கடன்காரனுக்குக் குடுத்துவிட்டு, மீண்டும் அடுத்த வருஷ உழவில் விடிவு கிட்டும் எனக் காத்திருக்கும் மனிதர்களை என்னவென்று சொல்ல? அதிலும் திடீரென மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி, எங்கும் வெள்ளக்காடானால், அந்த வருடம் சாப்பாட்டு நெல்லுக்கே பஞ்சம்தான்.       
     குச்சிராயர், வறட்டுக் கௌரவத்திற்காகப் பணத்தைச் செலவழிக்கிறார். கிராமத்து எளிய வாழ்க்கை மாறி, நுகர்பொருள் பண்பாடு நுழையும்போது, விவசாயம் கட்டுபிடியாகாமல் போவதை அறியாமல் நிலத்துடன் மல்லுக்கட்டும் அப்பாவின் கடன்கள், ஒருபோதும் தீரப்போவது இல்லை. அம்மாவின் அப்பா இறந்தபோது கடனை வாங்கிச் சிரமத்துடன் கருமாதி செய்முறைகள் செய்த அப்பா, கொட்டுகிற மழையில் குடும்பத்தினருடன் நனைந்தவாறு உட்கார்ந்திருந்தார். அப்பாவுக்கு நாலு வேலி மிராசுதாரர் பெரிய பெயர் இருந்தாலும், யதார்த்ததில் வறுமையான வாழ்க்கை. நிலத்தில் உழல்வதுதான் தனது பொருளியல் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பதை அறியாதது அப்பா மட்டுமல்ல. தஞ்சை டெல்டாவில் உழவை நம்பி வாழ்கிற பெரும்பாலான விவசாயிகள்தான் என்பதை அப்பாவை முன்வைத்து சி.எம்.முத்து சொல்லியுள்ளார்.          
      1982-இல் கறிச்சோறு நாவல் மூலம் அடியெடுத்த வைத்த சி.எம்.முத்து, தஞ்சை மண்ணின் மணத்துடன் கள்ளர் சமூகத்தினரிடையே நிலவும் சாதிய உள்ளடுக்குப் பிரச்சினையை முன்வைத்திருந்தார்.. கிராமத்தில் உறவினர்கள் இடையில் திருமணம் காரணமாக ஏற்படும் மோதல்களை விவரித்த பொறுப்பு நாவல், ஒரு காலகட்டத்தின் பதிவு. வயலில் வேலை செய்யும் தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குள்ளும் ஆதிக்க சாதியினரின் அடாவடித்தனம் பற்றிய நெஞ்சின் நடுவே  நாவலுக்கு மாற்றாக வேரடி மண் நாவல், தலித்துகளின் எழுச்சியைச் சித்திரித்துள்ளது. அப்பா என்றொரு மனிதர் நாவலில் வரும் மனிதர், தஞ்சை மண்ணில் வாழும் சிறு விவசாயிதான். கடந்த ஐம்பதாண்டுகளில் தஞ்சை வட்டாரத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குச் சாட்சியாக விளங்கும் சி.எம்.முத்து, தனது வாழ்வில் எதிர்கொண்ட விஷயங்களை நாவல்களாகப் படைத்துள்ளார்.
      நிலத்தை முன்வைத்து தஞ்சை வட்டார மொழியில் விரிந்திடும் நாவல்களைப் படைத்துள்ள சி.எம் .முத்துவின் கதைசொல்லல், பாத்திரப்படைப்பு, மொழி நடை போன்றன அழுத்தமானவை. அவருடைய எல்லா நாவல்களிலும் முடிவு என எதுவும் இல்லை. நாவலின் போக்கு, திடீரென அறுபட்டது போல  முடிவது, எதுவும் முடியாதது என்பதைச் சூசகமாக உணர்த்துகிறது. துல்லியமான முடிவுகள் எதையும் எந்தப் பாத்திரத்தின் மீதும் திணிக்காமல், யதார்த்த வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கலாம் என்பதைப் பாசாங்கற்றுப் புனைவாக்கியதில் சி.எம்.முத்துவின் படைப்பாளுமை தனித்துவமானது. தஞ்சை வட்டாரத்து மக்களின் இயற்கைச் சூழல், சாதியக் கட்டுமானம், பெண்கள் நிலை,  சமுதாய அடுக்கு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள்  போன்றவற்றைப் பற்றிய விவரிப்புடன் கள ஆய்வையும் அனுபவவாதத்தையும் அடிப்படையாகக்கொண்ட இனவரைவியல் தன்மையுடன்கூடிய சி.எம்.முத்துவின் நாவல்கள், சமகாலத்தின் பதிவுகளாகும்.

                                                                             

                                                        

                                               
         
        



1 comment:

  1. The Perfect Casino: Top Offers & Bonuses at
    The Best Casino Offers. 바카라 Casino https://febcasino.com/review/merit-casino/ Bonuses & Promotions. With an worrione emphasis on septcasino casino games, the gambling industry หารายได้เสริม is expected to explode

    ReplyDelete