Monday 14 September 2015

கவிதைகளின் உலகில். . .

கவிதைகளின் உலகில் . . .
                                                        ந.முருகேசபாண்டியன்
                                                        murugesapandian2011@gmail.com  

        கவிதை என்ற இலக்கிய வடிவம் என்னைப் பொறுத்தவரையில் லா..ரா.வின் அபிதா போல  ஸ்பரிசிக்க இயலாத மனவெளியில் மிதக்கிறது. சூலி, நீலி, அணங்கு போல கவிதையானது, மாயமான முறையில் ஈர்ப்புடையதாக வாசிப்பின் வழியே வாசகரை விநோத உலகினுக்குள் இழுத்துச் செல்கிறது. கவிதை பற்றிய தொன்மங்களையும் புனைவுகளையும் கடப்பதற்காகத் தொடர்ந்து முயன்றாலும், இறுதியில் குளத்து நீர்ப்பாசி போல மனம் மிதக்கிறது. கவிதை எழுதுவது மனம் சார்ந்த மொழி விளையாட்டு என்று சொல்லலாமா? யோசிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காட்சி அல்லது தருணம் எப்படியோ ஒருவருக்குள் நுழைந்து பதிவாகிடும்போது, ஏதாவது ஒருநிலையில் வெளிப்படும் சொற்கள், கவித்துவச் செழுமையுடன் மிளிர்கின்றன. தினமும் நடந்து செல்லும் ஒற்றையடி தடத்தின் ஓரமாகப் பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்களின் பக்கம் ஒரு கணம் பார்வை நிலைத்து நின்றால், கவிமனம் கொப்பளிக்கும். மேகத்தின் கோலங்கள், அந்தி வானச் சிவப்பு ஜாலங்கள் காண்பவரின் மனதினுள் உருவாக்கிடும் அதிர்வுகள் போதும், ஒருவர் தானாகவே கவிதைக்கு நெருக்கமானவராகி விடுகிறார்.

   நான் பணியாற்றிய கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இதுவரை கவிதைப் பயிலரங்குகள் ஏழு தடவைகள் நடைபெற்றுள்ளன. கவிஞர்கள் கந்தர்வன், பழமலய், கலாப்ரியா பா.வெங்கடேசன், மனுஷ்யபுத்திரன், சுதீர்செந்தில், சுகிர்தராணி, செல்மா ப்ரியதர்சன், யவனிகா, சக்திஜோதி போன்ற கவிஞர்கள் கவிதை எழுதுவது மிகவும் எளிது என மாணவர்களிடம் பேசுவதைக் கேட்கும்போது எனக்கு உற்சாகம் பொங்கும். அவர்களுடைய உரையைக் கேட்டவுடன் சில மாணவியர் அருள் வந்ததுபோல அருமையான கவிதை வரிகளை எழுதியது, ஆச்சரியத்தைத் தந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் கவிதை இயல்பாக ஊற்றெடுக்கிறதா? சொற்களினால் வடிவமைக்கப்படும் மந்திரம்தான் கவிதையா?. கவிதை எழுதுவது என்பது உண்மையிலே எளிமையானதுதானா? ஆயிரக்கணக்கான பக்கங்கள்  கட்டுரைகள் எழுதிக்குவித்த  மார்க்சிய ஆசான் லெனின், தனது உடலில் சாட்டையால் அடித்தாலும் ஒரு வரி கவிதை எழுத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் புரட்சியைச் சாதித்த மாவோவின் கவிதை வரிகள், சீனத் தொன்மங்களும் பழமரபுக் கதைகளும் எனச் செறிந்துந்துள்ளன; வர்க்கப் போராட்டத்தை வரவேற்றுப் பாடுவதாக வரிகள் இல்லை. தமிழில் புரட்சிக்குக் கட்டியங்கூறும் வகையில் அனல் பறக்கக் கவிதை எழுதிய வானம்பாடிக் கவிஞர்களுக்கு யார் முன்னோடி?  ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்களை எழுதிக்குவித்த மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையைக் கவிதைப் பிசாசு பிடித்தாட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். கவிதை இயற்றுவதில் ஒருவரைப் போல இன்னொருவர் என ஒப்பிட்டுச் சொல்ல முடியாது. எழுதப்படும் கவிதைகளின் எண்ணிக்கையைவிடக் கவிதை மனம், ஒருவருக்கு வாய்த்திருப்பதுதான் ஒருவரைக் கவிஞராக்குகிறது. அதைவிட எது நல்ல கவிதை என்று இனங்கண்டு ரசிக்கும் மனநிலை வாய்த்திருப்பின், ஒருவர் நாளடைவில் கவிஞராகி விடுவார். அழகை நேசிக்கின்ற மனநிலையுடையவர் கவிதைக்கு நெருக்கமானவர் என்ற பார்வை, மரபு அடிப்படையிலானது. படித்தால் மட்டும் போதுமா` திரைப்படத்தில் அழகான மனைவியைப் பெற்றவர்கள் எல்லோருமே கவிஞர்கள் என சிவாஜிகணேசன் பேசிய வசனம், பதின்பருவத்தில் எனக்குக் குதூகலத்தைத் தந்தது.
       பொதுவாகக் கவிதை எழுதுவது என்பது பெரிதும் அகம் சார்ந்ததாக உள்ளதுஇருபதாண்டுகளுக்கு முன்னர்  பெரும்பாலான கவிஞர்கள் ஜிப்பா அணிந்திருந்து கவிஞர் எனத் தனித்த அடையாளத்துடன் விளங்கினர். ஜிப்பா உடுத்திய கவிஞர் இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்கும்போது, காற்றில் மிதந்து செல்வதாகத் தோன்றும். அன்றைய காலகட்டத்தில் திருமணத்தின்போது மணமக்களை வாழ்த்தி எதுகை மோனையுடன் ஏதாவது எழுதித் தந்தவரும் கவிஞர் எனக் கருதப்பட்டார். திருமணநாளில் கவிஞரின் பெயருடன் வண்ணத்தாளில் அச்சிட்டு வழங்கப்பெறும் கவிதைகளை மணமக்கள்கூட வாசிப்பார்களா என்பது  சந்தேகம்தான். கவிதைத்தாளுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாக்லேட்டினை எடுத்துக்கொண்டு அதை உடனடியாகத் தரையில் வீசுவதைப் பார்க்கும்போது, அந்தக் கவிஞரை நினைத்துக் கொள்வேன்; மனதில் மெல்லிய வருத்தம் தோன்றும்.

         இரு நாவல்கள் எழுதியவர்கூட தான் ஒரு நாவலாசிரியர் என்ற பெருமையுடன் சொல்வதற்குத் தயங்குவது கவனத்திற்குரியது. ஏழெட்டுக் கவிதைகள் எழுதியவர், தான் ஒரு கவிஞர் என்று தன்னை அறிந்து, பெருமிதத்துடன் பிறரிடம் தனது கவிதைகள் பற்றிப் பேசுகிறார். ஒருவர் தன்னைக் கவிஞராக உணரும்வேளையில், அவருக்குள் ஏற்படும் மாற்றங்கள் அளவற்றவை. இரண்டாயிரமாண்டுக் கவிதை மரபுடைய தமிழில், கவிஞர் என்ற சொல், சமூகரீதியில் ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்துகின்றது. ஆசுகவி, வரகவி என மக்களிடம் கலந்திருந்த புலவர்கள் விளைச்சலின்போது களத்துமேட்டில் அரியைப் பங்காகப் பெற்றனர். புலவர் ஏதாவது சொன்னால், அவருடைய வாக்குப் பலித்துவிடும் என்று அவரிடமிருந்து கிராமத்தினர் விலகி நின்றதை எண்பதுகளில் நேரில் பார்த்திருக்கிறேன்ஒருவருடைய பெயரைக் கேட்டவுடன் அவரைப் போற்றி வெண்பா எழுதிய கிராமத்துப் பாவலர்கள் சுவராசியமானவர்கள்தான். 1989-ஆம் ஆண்டு பொன்னமராவதியில் என்னைப் பார்த்தவுடன், இராமையா பாவலர் கடகவென எனது பெயரினை மூன்றாவது வரியில் அமைத்துச் சொன்ன வெண்பாவினை எழுதிப் பதிவாக்காமல் விட்டுவிட்ட வருத்தம் இப்பவும் எனக்கு உண்டு. கடை அல்லது வணிக நிறுவனத்தினை வாழ்த்திப் புலவர் எழுதித் தந்த செய்யுளைக் கண்ணாடிச் சட்டகமிட்டுச் சுவரில் தொங்கவிட்டால், தொழில்  விருத்தியாகுமென்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. ஆனால் கிராமத்தினர்  தங்களிடம் இருந்து வேறுபட்டுச் செய்யுள் இயற்றிய பாவலரைப் பித்துகுளி போலக் கருதினர் என்பதும் உண்மைதான்.  
        
       இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்நதம் வந்தது போல நான் எழுதிய கவிதைகள் இருக்கட்டும். எனக்குள் ஒருவன் போல உருவாகியிருந்த கவிஞர் என்ற பிம்பம் முக்கியமானது அல்லவா? கல்லூரி விடுதியில் சில நண்பர்கள் கவிஞரே என அழைத்தபோது எனது மனம் ததும்பியது. கவிதை வரிகள் ஒருவனின் அகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தரும் போதைக்கு அளவேது? கவிதையே ஒருவகையில் போதை வஸ்து எனச் சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம். எப்பொழுதும் மங்கலாகவும் கலங்கலாகவும் சொற்களின் வழியே புதிய அர்த்தங்களை உருவாக்க முயலும் சொற்கள் மாந்திரிகத் தன்மையுடையனவாக மாறுகின்ற விந்தை, கவிதையில் மட்டுமே சாத்தியம். கவிதை எழுதுகின்றவனை இறுமாப்புக்கொள்ளச் செய்வதில், கவிதைக்கு நிகராக எதுவுமில்லை. மொழியின் அதிகபட்ச சித்து விளையாட்டு கவிதையில் பொங்குகிறது. கவிதை என்றவுடன் பின்நவீனத்துவம்கூட மெல்லப் பம்முகிறது.
       தமிழகத்தில் பேருந்து போக வழியற்ற குக்கிராமத்தில்கூட பெயர் இல்லாத ஒருவர் வெள்ளைத்தாளில் கவிஞராக வெளிப்படும் விந்தை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தினமலர் நாளிதழின் வாரமலரில் பிரசுரமாகும் நான்கு வரிகள், அதை எழுதியவரை வேறு ஒருவராக மாற்றுகின்றன. அப்புறம் ஹைக்கூக் கவிதைகள் எழுதுவதன்மூலம் கிடைக்கும் சக கவிஞர்களின் ஆதரவு வேறு சிலரைப்  பாடாய்ப்படுத்துகிறது. தமிழில் கவிதைப் பேய் பிடித்தாட்டும் கவிஞர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. வத்தலக்குண்டு போன்ற ஊர்களில்கூட குறைந்தது இருபது கவிஞர்களின் கவிதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. ஆனால் கவிதை பற்றிய பேச்சுகள் மிகக்குறைவாக உள்ளன. அழகிய அச்சமைப்பில் வெளியிடப்படும் கவிதைத் தொகுதிகள் கவர்ச்சிகரமாகக் கண்ணைச் சிமிட்டுகின்றன. இலக்கிய உலகில் ஒருவர் நுழைவதற்கான கடவுச்சீட்டாகக் கவிதை உள்ளது. கவிதை எழுதாத ஒருவர் கூட  இலக்கிய உலகில் இருக்க வாய்ப்பில்லை. முதல் தொகுப்பு போடுவதற்காக இரண்டு பெரிய மஞ்சள் பைகளில் கொண்டு வரப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் நிரம்பி வழிந்த கவிதைகளைப் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். நண்பர்களுக்குத் தேநீர் வாங்கித் தருவதற்கு யோசிக்கின்றவர்கூட, தனது கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்க ரூ.25,000/- செலவழிப்பது நடைபெறுகிறது. பொருளியில் நிலையில் செல்வாக்கு மிக்கவர்கள், எப்படியாவது முன்னணிக் கவிஞராகிட கடுமையாக முயலுவது வேடிக்கையாக உள்ளது.

       ஓரளவு வசதியானவர்கள் கவிதை உலகினுள் நுழைந்திட ஆசைப்படுவதும், அதற்கு ஏற்கனவே பிரபலமான கவிஞர்கள் கோஸ்டாக மாறுவதும், இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருவர் வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பேடுகளில் கிறுக்கியவற்றை நான்கைந்து மூத்த கவிஞர்கள் கைபார்த்துக் கவிதைத் தொகுதியாக வெளியிடுவதும் இன்று நடைபெறுகின்றதுதமிழ்க் கவிதையுலகில் முதல் கோஸ்ட் கவிஞரான சிவபெருமான் காட்டிய வழியில், இன்றைய கவிஞர்களில் சிலர் பொருளுக்காகச் செல்கின்றனர். அது சரியா தவறா என்பது புலப்படவில்லை. இன்னொருவரின் கவிதையைத் தனது பெயரில் வெளியிடுவது குற்றமெனில், அவருக்கு ஏதோவொரு ஆதாயம் கருதிக் கவிதை எழுதித் தருவதும் அதே அளவிலான குற்றம்தான். ஒரு காலத்தில் கமுக்கமாகக் கவிதை எழுதித் தந்த விஷயம், பின்னர் எப்படி அம்பலமேறுகிறது? யோசிக்க வேண்டியுள்ளது.  
  
       குறைந்தது பத்தாண்டுகளாவது கவிதை எழுதிப் பல்வேறு பத்திரிகைகளில் கவிதைகள் பிரசுரமான பிறகு, ஓரளவு இலக்கிய உலகில் அறிமுகமான நிலையில் கவிதைத் தொகுதி வெளியிடுவது முன்னர் நடைபெற்றது. (இருபது வயதில் பாடல்கள் புனைந்திட்ட பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பு, அவருடைய 47- ஆம் வயதில்தான் வெளியானது). துரித உணவு காலகட்டத்தில் உடனடியாகக் கவிதைத் தொகுதி வெளியிடுவது ஏற்புடையதுதான். ஆனால் கவிஞராக அங்கீகாரம் பெறுவதற்காக நடைபெறும் கூத்துகள் எல்லாம் கவிதையை முன்வைத்து நடைபெறுகின்றனசிறிய நகரங்களில் ஒன்றாகச் சேர்ந்து திரியும் கவிஞர்கள், எந்த வகையிலாவது முயன்று கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நடத்துகின்றனர். முதல் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவிற்கு ரூ.1,00,000/- செலவழித்த கவிஞரை எனக்குத் தெரியும். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்திட நடைபெறும் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா, குடும்ப விழா போல நடைபெறுகிறது. உறவினர்கள், நண்பர்கள் கவிஞருக்குச் சால்வை மரியாதை செய்கின்றனர். சிறிய அளவில் வெளியீட்டு விழா நடத்தும் கவிஞர்கூட அன்றிரவு டாஸ்மாக்கில் ரூ.4000/- செலவழிக்கின்றார். கவிதை நூலை எப்படி பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது முக்கியமான கேள்வி. கவிதைத் தொகுதியை விலைக்கு விற்பதற்கான வழிகள் புலப்படாமல், தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவது நடைபெறுகின்றது. அப்படி வாங்கியவர்கள் யாராவது அபிப்ராயம் சொல்ல மாட்டார்களா எனக் காத்திருக்கும் கவிஞருக்கும் இலவு காத்த கிளிக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏதாவது பத்திரிகையில் தனது கவிதைத் தொகுதிக்கு மதிப்புரை வெளிவருமா எனக் கவிஞர் காத்திருப்பதும் துயரமானதுதான். கவிஞர் தன்னுடைய சொந்த முயற்சியினால்  கவிதை நூலுக்கு விமர்சனக் கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. விமர்சகர் யாராவது எழுதும் கட்டுரையில் தனது கவிதை இடம் பெற்றால், அதை நினைந்து மகிழ்ச்சியடைவதுதான்கவிஞர் அடைந்த பெரும்பேறு.

       இளம் கவிஞர்கள்  ஏற்கனவே பிரபலமான கவிஞரிடமிருந்து அணிந்துரை வாங்கி தொகுப்பில் சேர்த்திடக் கடுமையாக முயலுகின்றனர். சீனியர் கவிஞரின் முன்னுரையினால் அந்தக் கவிதைத் தொகுப்பு பத்து பிரதிகள்கூட விற்பனையாகாது என்பதை நன்கறிந்தும் முன்னுரை பெறுவது, நுண்ணரசியல் சார்ந்ததாகும். ஏற்கனவே ஐந்தாறு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ள மூத்த கவிஞர்களில் சிலர் தந்துள்ள முன்னுரையை வாசித்தால், அது செறிவான மொழியில் கவிஞரின் பண்டிதத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. தொகுப்பிலுள்ள கவிதைகளைப் புரிந்துகொள்வதற்கு மாறாக, இருண்மையில் ததும்பும் முன்னுரையினால் என்ன பயன்? கவிதைத் தொகுதியின் பின்னட்டையில் இடம்பெறும் வாசகங்கள், தொகுப்பினை அறிமுகம் செய்வதற்கு மாறாக, விநோதமான சொற்களின் கலவையில் புதிர் போல அச்சிடப்படுவது ஒருவகையில் கொடுமைதான்.

       திரைப்படப் பாடாலாசிரியராக விளங்கும் கவிஞர் ஒருவர், முன்னுரை எழுதித் தருவதற்கு ஒரு லட்சம் கேட்கிறார். அவரை வைத்துக் கவிதை நூலினை வெளியிட வேண்டுமெனில் கணிசமான தொகையினைக் கப்பமாக முன்கூட்டியே செலுத்த வேண்டும்.

              எவ்விதமான இடதுசாரி அரசியல் மனோபாவமும்  இல்லாமல், கலை இலக்கிய பெருமன்றம், .மு...சங்கம் போன்ற இலக்கிய அமைப்புகளில் சேர்ந்து, தங்களைக் கவிஞராக நிறுவிட முயலுவதும் நடைபெறுகின்றது.

       சிறுபத்திரிகை சார்ந்த மரபில் தங்களை அடையாளப்படுத்தும் கவிஞர்களின் உலகம் தனித்துவமானது. கவிதை என்பது உருப்பளிங்கு போல நேர்த்தியுடன் எழுதப்பட வேண்டியது அவசியம். தத்துவத்தின் வாகனமாகக் கவிதையை மாற்றி, இருண்மையுடன் செறிந்திருப்பது முக்கியமானது. ஏதாவதொரு நடப்பியல் பிரச்சினையை முன்வைத்து எழுதப்படும் கவிதைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. கவித்துவம் என்ற சொல்லின் பின்புலத்தில், பொய்மானைத் தேடியது போலக் கவிதையைத் தேடிக்கொண்டிருப்பவர்கள் வேறு உலகில் சஞ்சரிக்கின்றனர்.   கவிதைச் செருக்குடன் திரிகின்ற சீனியர் கவிஞர்களிடையே அங்கீகாரம் தேடுகின்ற முதல் தொகுதி வெளியிட்டவரின் நிலை உற்சாகம் தருவதாக இல்லை. காத்திரமான கவிஞர்களின் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதா என ஆவலுடன் கவிதை அரசியலில் ஈடுபடுகின்ற கவிஞர்களின் மனநிலை,. பலவீனமாக உள்ளது. கவிதையை முன்வைத்து ஆதிக்கம் செலுத்துகின்ற கவிதை அரசியல், இன்று வலுவடைந்துள்ளது.

       நவீன கவிதை என்றால் அண்மைக்காலத்தில் எழுதப்பட்டது என்ற போக்கு இன்று சில கவிஞர்களால் முன்வைக்கப்படுகின்றது. பத்தாண்டுகளில் அறிவியலில் பெரிய மாற்றம் ஏற்படுவது போல, கவிதையும் முழுக்க மாறி விடுகின்றது என்ற கருத்து, ஏற்புடையது அல்ல.  சங்ககாலத்திய வெள்ளிவீதியார், ஔவை, கபிலர் தொடங்கி இளங்கோ, ஆண்டாள், திருமூலர், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன், .பிச்சமூர்த்தி என விரியும் கவிதை மரபினில் எந்தக் கவிஞரையும் புறக்கணிக்க இயலாது. முன்னத்தி ஏர்களாக விளங்கும் கவிஞர்களை மறுதலிப்பதன்மூலம் இன்றைய கவிஞர்கள் முன்னிலை பெற முடியும் என்ற வாதம் பொருத்தமன்று. எஸ்.வைத்தீஸ்வரன், சி.மணி, தேவதச்சன், கலாப்ரியா, சுகுமாரன் போன்ற சீனியர் கவிஞர்கள் காலாவதியாகி விட்டனர். எனவே இப்ப நான் தான் முக்கியமான கவிஞர் என்ற சவடால் பேச்சு, அபத்தமின்றி வேறு என்ன? அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்பது போன்று, கவிதை உலகில்  தனக்கான அங்கீகாரம் தேடி அலைகின்றவர்களைக் கோமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வருஷம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான கவிதை நூல்களில் என்னுடையதுதான் முதன்மையானது என்று பீற்றித் திரியும் கவிஞரை எப்படி அணுகுவது? இதுதான் கவிதை என நுட்பமாக வரையறுப்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?. எந்தக் கவிஞர் தன்னை மரபின் தொடர்ச்சியாக நம்புகின்றாரோ, அவரிடமிருந்துதான் ஆக்கப்பூர்வமான கவிதைகள் வெளிப்படும்.

       இரு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ள இளைஞியான பெண் கவிஞர் ஒருவர் அண்மையில் என்னைச் சந்தித்தபோது, சுகிர்தராணி, சல்மா, மாலதிமைத்ரி, லீனா மணிமேகலை என்ற பட்டியலைத் தாண்டி எங்க பெயர் எல்லாம் எப்ப இடம் பெறும் என்றார். அவருடைய கேள்வி நியாயமானது. மனுஷி, ரத்திகா, சுஜாதா செல்வராஜ், கலை இலக்கியா, விஜயலட்சுமி, ரோஸ்லின், பரமேஸ்வரி போன்ற பல பெண் கவிஞர்களின் பெயர்கள் எந்தப் பட்டியலிலும் ஏன் இடம் பெறவில்லை எனத் தோன்றியது. அதைவிட முக்கியமானது பத்தாண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாகப் பேசப்பட்ட பெண் கவிஞர்களின் கவிதைகள் பற்றிய பேச்சுகள் இன்று மௌனமானதற்குக் காரணம் என்ன என்பது ஆகும். முப்பதாண்டுகளில் ஏழெட்டுக் கவிதைத் தொகுதிகள் வெளியிட்ட ஆண் கவிஞரின் கவித்துவம் பற்றிய மதிப்பீடு இல்லாத நிலையில், பெண் கவிஞர்களைப் புறக்கணிக்கும் ஆண் மேலாதிக்க அரசியல் வலுவடைந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு கவிஞரும் தனது கவிதைத் தொகுதிக்காக ஏதாவது `லாபி` செய்யாவிடில், அந்தத் தொகுதியானது, குளத்தில் போட்ட கல்லாக மாறி விடும் அவலமான சூழல் நிலவுகின்றது. பெண் கவிஞர்களின் நிலையும் அதுதான்.

    எழுபதுகளில் அன்னம் பதிப்பகம் வெளியிட்ட கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் விற்றுத் தீர்ந்தன. இன்று காத்திரமான கவிதைத் தொகுதிகூட ஒரு வருடத்தில் நூறு பிரதிகள் விற்பனையாவதில்லை. இதனால் பதிப்பகத்தினர் கவிதைத் தொகுதிகள் வெளியிடுவதில் பெரிதும் அக்கறையற்று உள்ளனர்.  காலச்சுவடு பதிப்பகம் 60%, உயிர்மை பதிப்பகம் 50% எனத் தள்ளுபடி அறிவித்துப் புத்தகக் கண்காட்சியில் ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் செய்வதைப் பார்க்கும்போது, பதிப்புச்சூழலின் வெக்கை புலனாகின்றது. எழுபதுகளுடன் ஒப்பிடுபோது, இன்று கவிஞர்களின் எண்ணிக்கையும், வாசகர் கூட்டமும் பன்மடங்கு பெருகியுள்ளது. ஆனால் கவிதை நூல்களை விருப்பத்துடன் வாங்குகின்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. கவிஞர் தனது கவிதைப் புத்தகத்தினை அன்பளிப்பாகத் தருவார் என்ற நம்பிக்கை, புத்தகம் விற்பனையாவதைத் தடுக்கிறது.   வாசகர்கள் கவிதை நூல்களைக் காசு கொடுத்து வாங்கி, அவற்றை வாசித்து உருவாக்குகின்ற பேச்சுகள்தான், கவிதை நூல்கள் பரவலுக்கு உதவும். காட்சி ஊடகங்களின் ஆதிக்கத்தினல், வெகுஜனரீதியில் கவிதையை வாசிப்பது  குறைந்திடும் சூழலில், தமிழ்க் கவிதைகள் இன்னும் எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும் என்பது முக்கியமான கேள்வி.

     கவிதை நூல்கள் பற்றி கும்பமேளா போல நடத்தப்படும் விமர்சனக் கூட்டங்களும் நம்பிக்கை தருவதாக இல்லை. அண்மையில் கவிதை விமர்சனம் என்ற பெயரில் முப்பது கவிதை நூல்களுக்கு இரு நாட்களில்  நடைபெற்ற விமர்சனக் கூட்டத்தினால் என்ன பயன்? பெரும்பாலான நவீன கவிதைகள், அகம் சார்ந்து இறுக்கமான மொழியில் எழுதப்படும்போது, பத்து நிமிடங்களில் கவிதை நூலினை விமர்சிப்பது இயலாததது. ஒருவர் கவிஞராக இருப்பது வேறு, கவிதைத் தொழில்நுட்பம் சார்ந்து விமர்சிப்பது வேறு என்ற புரிதல் வேண்டும். ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ள கவிஞர்கூட விமர்சனச் சிலம்பெடுத்துச் சுழன்றாடுகின்றார்ஒரு கையில் தனது கவிதை பற்றிய கொடியைப் பறக்கவிட்டு, அடுத்த கையினால் எதிராளியின் கொடியை வெட்டியெறியும் அரசியல் சரிதானா? பரஸ்பர சொறியலாக வருடிக்கொடுக்கும் விமர்சனத்தினால் கவிதை பற்றிய ஆழமான பேச்சுகள் உருவாக வாய்ப்பில்லை. கவிதையை முன்வைத்துக் காத்திரமான பேச்சுகளை உருவாக்கிடாமல், இது தாண்டா கவிதை என நெற்றியடியாகப் பேசுவது, ஆரோக்கியமான கவிதைச் சூழல் தோன்றுவதைத் தடுக்கின்றது. கவிதை என்றால் இதுதான் என வலுவாக நிறுவுவதற்கான கருவிகள் எதுவுமில்லாத சூழலில், ஏற்கனவே கவிஞர்கள் என அடையாளம் பெற்றவர்கள்,  பிற கவிஞர்களின்மீது செலுத்துகின்ற அதிகாரம் கேள்விக்குள்ளாகின்றது.

       இரண்டாயிரமாண்டு பாரம்பரியம் மிக்க தமிழ்க்கவிதை மரபு, ஒப்பீட்டளவில் இன்று தேங்கியுள்ளது. கவிதையை முன்வைத்துக் கவிஞர்களைக் கொண்டாடிய சூழல், இன்று வழக்கொழிந்து விட்டது. தமிழ்ச் சமூகத்தில் இன்னும் எத்தனை காலம் கவிதைகள் செல்வாக்குடன் விளங்கும் என்பது முக்கியமான கேள்வி. இத்தகு சூழலில் கவிஞர் என்ற பெருமிதத்துடன் தன்னைப் பற்றி மேன்மையாக நினைக்கின்றவர்கள், பிறருடைய கவிதைகளைக் கறாராகக் கவிதை இல்லை என ஒதுக்குவது ஒருவகையில் அரசியல்தான். அராஜகமும்கூட.

                                                         தீராநதி, செப்டம்பர், 2015