Thursday 4 February 2016

ப. சிங்காரம்: தமிழின் முதல் புலம்பெயர் நாவலாசிரியர்

      ப. சிங்காரம்: தமிழின் முதல் புலம்பெயர் நாவலாசிரியர்
                                                                                                                            ந.முருகேசபாண்டியன்                                   
                                                                                                                              


             புலம்பெயர்தல் என்பது மனிதன், நாகரிக வளச்சியடையத் தொடங்கியது முதலாக இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்றது. வேட்டைச் சமூகமாக வளர்ந்தபோது, இனக்குழுவினர் உணவுதேடலுக்காக இடம் விட்டு இடம் பெயர்தல் இயல்பாக நடந்தேறியது. சமூக வளர்ச்சி என்பது புலம்பெயர்தல் மூலமாகவே தொடங்கியுள்ளது. ’வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகுஎனப் பனம்பாயிரனார் தொல்காப்பியத்தின் பாயிரத்தில் தமிழ் மொழியை முன்வைத்து தமிழக நிலப்பரப்பை அடையாளப்படுத்தினாலும், அதற்கப்பால் தமிழர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதலாகத் தமிழக நிலப்பரப்பு முகமதியர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் போன்ற பிற மொழியினரின் அரசியல் ஆதிக்கத்திற்குள்ளாகியிருந்தது. அன்றையக் காலகட்டத்தில் வைதிக சமயம் ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்துகொண்டு, சநாதன நெறியைத் தக்க வைத்துக்கொண்டது. இத்தகைய அரசியல் சூழலில் உழவுத்தொழில் நசிவுற்றது; தீண்டாமை வலுவடைந்தது. வறுமையால் வாடிய விளிம்புநிலையினர் தங்களைக் கோவில்களுக்கும் மடங்களுக்கும் அடிமைகளாக விற்றுக்கொள்ளும் அவலநிலை நிலவியது. குறிப்பாக ஐரோப்பியரின் காலனியாதிக்கம் வலுவடைந்த நிலையில், பொருளாதாரச் சுரண்டலையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே அனுபவிப்பதற்காக, மனிதவளம் மலிவாகக் கிடைக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து, பிறநாடுகளுக்கு மனிதர்களை ஏற்றுமதி செய்வது நடைபெற்றது. வறுமை, தீண்டாமை காரணமாகத் தமிழகத்தில் வாழ்வதைவிட வேறு நாடுகளுக்குச் சென்று வளமாக வாழலாம் என்று நம்பிய உடலுழைப்பாளர்கள் கூட்டமாகக் கப்பலேறினர். தமிழர்கள் மலேசியா, இலங்கை, மொரிஷியஸ், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா, டச்சுக்கயானா, நியூகினி போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். கடலில் பயணம் செய்து கப்பலேறிய தமிழர்களின் வாழ்க்கை அங்கும் கடினமாக இருந்தது. காடுகளை அழித்தல், சாலைகள் போடுதல், விவசாயம் செய்தல் எனத் தமிழர்களின் வாழ்க்கை துயரம் நிரம்பியதாக இருந்தது. இவ்வாறு கொத்தடிமைகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலோனோர், மீண்டும் தமிழகத்திற்குத் திரும்பவே இல்லை. அவர்களின் வாரிசுகள் தமிழைப் பேச அறியாமல், அரைகுறையான தமிழ் அடையாளங்களுடன் இன்றும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
         புலம்பெயர்தல் என்பது தாயத்தை மறுவிளக்கம் செய்ய அடிப்படையாக விளங்குகிறதுஒவ்வொருவருக்குள்ளும் இயல்பாகப் பொதிந்துள்ள தாயகம் குறித்த ஏக்கம், புலம்பெயர்ந்த மண்ணில் ஒப்பீட்டு நிலையை உருவாக்குகின்றது. பூர்விக நாடு, புகலிட நாடு என்ற முரணில். பண்பாட்டு வேறுபாடுகளைக் கண்டறிதல் தொடர்ந்து நடைபெறுகின்றது. இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் தமது நினைவுகளில் பதிவாக்கியுள்ளவை, படைப்புகளாக வடிவெடுக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் கதையாடல்கள் தொடக்கத்தில் நாட்டுப்புறப் பாடல்களாகப் பதிவாகியுள்ளன. பின்னர் கதைகளாக உருவெடுத்தன. தென் கிழக்காசிய நாடுகளுக்குக் கணிசமான அளவில், தமிழர்கள் புலம்பெயர்ந்திருந்தாலும் நாவல்கள் எழுதப்படாத நிலையே நிலவியது. இத்தகைய சூழலில் நாவலாசிரியர் .சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால் (1959), புயலிலே ஒரு தோணி (1972), ஆகிய இரு நாவல்களும் வெளியாகின என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
        .சிங்காரத்தின் நாவல்கள் வெளியானபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தெற்காசிய நாடுகளில் நடைபெற்ற உலகப் போரின் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதைகளின் புதிய வகைப்பட்ட மொழி, பலரையும் ஈர்க்கவில்லை. எண்பதுகளுக்குப் பின்னர் புயலிலே ஒரு தோணி நாவல் பற்றி உருவான பேச்சுக்கள், பரவலாகின. தமிழில் பொதுவாக ஓற்றைத்தன்மையில் வெளியாகிக்கொண்டிருந்த புனைவுப் பிரதிகளுக்கு மாற்றாகப்புயலிலே ஒரு தோணிஎன நாவலை அணுகும் போக்கு, தொண்ணூறுகளில் வலுவடைந்தது. இன்று .சிங்காரம் என்ற நாவலாசிரியரின் பெயர் தமிழ் நாவல் வரலாற்றில் நிரந்தரமாக இடம் பெறத்தக்க அளவில், வாசிப்பினில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழின் முதல் புலம்பெயர் நாவல் எனக் கடலுக்கு அப்பால்  நாவல் கருதப்படுகிறது.
                சோழப் பேரரசின் கடல் ஆதிக்கம் காரணமாக மலேயா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தமிழரின் அதிகாரம் நிலவியது. அன்றைய தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் இன்றளவும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன. அதற்குப் பின்னர் 19-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், தமிழகத்தில் நிலவிய வறுமை, தீண்டாமை காரணாமாக  மலேசியா, இந்தோனேசியா, சுமத்ரா, பாங்காங் போன்ற பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுபவித்த அவலங்கள் ஏராளம். சிறிய அளவில் வணிகம், வட்டித் தொழில் செய்வதற்காகக் கப்பலேறியவர்கள் அந்த நாடுகளில் செழிப்புடன் வாழ்ந்தனர். இவ்வாறு பயணப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்கள் காற்றில் மிதக்கின்றன. இத்தகைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து வட்டிக் கடையில் வேலை செய்வதற்காகச் சென்றிருந்த நாவலாசிரியர் .சிங்காரம் தனித்து விளங்குகின்றார். தமிழகம், தென் கிழக்காசிய நாடுகள் என்ற இரு வேறு நிலங்களில் மனிதர்களின் தேடல்கள் எப்படியெல்லாம் விரிந்துள்ளன என்ற புனைவின் வழியே .சிங்காரம் விவரித்துள்ள காட்சிகள், வாசிப்பின் வழியே முடிவற்ற உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. ஒருபோதும் முடிவற்ற மனித இருப்பின் அபத்தம், எல்லாவற்றையும் முடிவற்ற விவாதத்திற்குள்ளாக்குகிறது. .சிங்காரம் எழுதியுள்ள கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய இரு நாவல்களும் சர்வதேச நிலையில் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்க்கையினைப் பதிவாக்கியதுடன், நுட்பமான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. அவை புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை குறித்த நுண்ணிய விசாரணைகளாகவும் விளங்குகின்றன.
                தமிழகத்தின் வறண்ட நிலப்பகுதியான புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாட்டங்களில் இருந்து தெற்காசிய நாடுகளுக்குப் பொருள் ஈட்டுவதற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின்  குடும்பம், ஊர் என விரிந்திடும்  நாவல் பரப்பில் நல்லதும் கெட்டதுமான மனிதர்களின் இருப்புப் பதிவாகியுள்ளது. போன நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை, திருப்பத்தூர்,  செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்தவர்களின் மேன்மைகளும் கசடுகளும் புனைவாக வெளியாகியுள்ளன. சக மனிதர்களுக்கிடையிலான உறவு பற்றிய விவரிப்பு, சூழல் குறித்த நுண் அவதானிப்பாகியுள்ளது. மனித இயல்பை நுட்பமாக விவரித்துள்ள .சிங்காரம், வெறுமனே காட்சிப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டவர் அல்லர். உச்சம், வீழ்ச்சி, உன்னதம், கசடு என இருவேறு எதிரெதிர் முனைகளில் வாழ்கின்ற மனிதர்கள், எப்பொழுதும் மேன்மையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பது புனைவின் வழியே .சிங்காரம் உணர்த்தும் தகவலாகும்.
    மலேசியா உள்ளிட்ட தென் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதிய ஏற்றத்தாழ்வுகள், பால் சமத்துவமின்மை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர். அவை தமிழரின் பெருமை என உயர் சாதியினர் நம்பிய வேளையில், இரண்டாம் உலகப்போர் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டதுஅடிமைத்தனமும் விசுவாசமும்தான் வாழ்வின் லட்சியங்கள் என நம்பிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த தமிழரிடையே மாற்றங்கள் நிகழ்ந்தன. வட்டி வசூலிக்கப்போன இடத்தில் யாராவது அடித்துவிட்டால், அதை வட்டிக் கடையில் வந்து சொல்லக்கூடாது என்பதை எழுதாத விதியாகப் பின்பற்றிய தமிழ் இளைஞர்கள், இந்திய தேசிய ராணுவத்தில் துணிச்சலுடன் சேர்ந்து, கையில் துப்பாக்கியை ஏந்தியது, குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் பயிற்சி பெற்று ஆயுதத் தாக்குதல்களில் ஈடுபட்டது, புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது.
                  கடலுக்கு அப்பால் நாவலில் வட்டிக் கடையில் வேலை செய்வதற்காகத் தமிழகத்திலிருந்து கிளம்பி மலேசியா போன செல்லையா, அரசியல் சூழல் காரணமாக தென்கிழக்காசியாவில் செயல்பட்ட இந்திய தேசிய இராணுவத்தில் லெப்டினன்டாகச் சேர்கிறான். போர் முடிந்தவுடன் மீண்டும் வட்டிக்கடை வேலைக்குத் திரும்புகிறான். இளம் வயதிலிருந்தே செல்லையாவும் கடை முதலாளி வயிரமுத்துப் பிள்ளையின் ஒரே மகள் மரகதமும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். அவர்களின் காதலை, முதலில் ஆச்சி காமாட்சியம்மாளும் பிறகு பிள்ளையும் ஏற்கின்றனர். தற்சமயம் பிள்ளையின் மனதில் மாற்றம். போருக்குச் சென்று மீசையும் கால் சராயுமாகத் திரும்பியுள்ள செல்லையா, வட்டித் தொழிலுக்கு உதவ மாட்டான் என்பது அவரது எண்ணம். எனவே மரகதத்தை வேறொருவனுக்கு மணம் முடிக்கத் திட்டமிடுகிறார். இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாமெனச் செல்லையா ஆலோசனை கூற, மரகதமோ தன் பெற்றோர் சம்மதம் வேண்டும் என்கிறாள். இதற்கிடையே உலகப் போரின் இருண்ட கரும்புகை பர்மா முதலிய பகுதிகளையும் சூழ்கிறது. புகை மண்டலத்தில் மூச்சுவிடத் திணறி ஆச்சியும் மரகதமும் இறுதியில் தமிழ்நாட்டிற்குக் கிளம்பிச் செல்ல, கலங்கிய மனத்துடன் செல்லையா தனித்து நிற்கிறான்.
                ஆண் - பெண் மனங்களுக்கிடையில் தோன்றும் காதல், சாதி, சமயம், பொருளியல் ஏற்றத்தாழ்வு காரணமாக அடையும் முரண்களே நாவல்களாக எழுதப்பட்டுள்ள தமிழ் நாவல் சூழலில், காதலர் பிரிவினுக்குப் போர் காரணமாக்கப்பட்டிருப்பது மாறுபட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைப் பற்றி விவரிக்கும் சம்பவங்கள் அழுத்தமான பதிவுகளாக வெளிப்பட்டுள்ளன.
                எப்படியாவது மரகதத்தை மணக்கத் துடிக்கும் செல்லையா, மகளின் காதலை அங்கீகரித்தாலும் கணவனுடன் ஒத்துப்போகும் காமாட்சியம்மாள், தனக்குப் பின்னால் வட்டித் தொழிலை முன்னாள் ராணுவத்தினனான செல்லையாவால் நடத்த முடியாதெனத் திருமணத்திற்கு அனுமதி மறுக்கும் வயிரமுத்துப் பிள்ளை, தந்தையின் சம்மதத்துடன் செல்லையாவை மணக்க விரும்பும் மரகதம் என நான்கு கோணங்களில் கதை விரிந்துள்ளது. ஒருவரின் முடிவு இன்னொருவருக்கு ஏற்புடையதாக இல்லையெனினும், அம்முடிவிற்கான காரணத்தைத் தருக்கரீதியில் அவர்கள் விளங்கிக் கொள்கின்றனர்.
                நாவலின் இறுதியில் பிள்ளைக்கும் செல்லையாவுக்குமிடையில் நடைபெறும் சொல்லாடல், மனிதமனத்தின் அடுக்குகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது சுயமுயற்சியினால் தனக்கான உண்மையைக் கண்டறிந்துள்ளான். வாழ்க்கையனுபவத்தின் விளைவுகள், சகமனிதனுக்கு எதிரானதாயினும் அவனது சுயஅனுபவச் செறிவினை மறுதலிக்க முடியாது. வயிரமுத்துப்பிள்ளை, தனது ஒரே மகன் வடிவேலு குண்டு வீச்சில் கொல்லப்பட்டதைக்கூடச் செரித்துக்கொண்டு மீண்டும் வட்டித் தொழிலுக்குத் தயாராகிவிட்டது தான் நடப்பியல் நிலைமை. தான் சிரமப்பட்டு வளர்த்த வட்டித் தொழிலைத் தனக்கு மருமகனாக இருந்து செல்லையாவால் நடத்த முடியாது எனக் கருதும் பிள்ளை, அவனுக்கு வேறுவசதிமிக்க- அழகான பெண்ணை மணம் முடித்துத் தனது சொந்தச் செலவில் சூலியாக் கடைத் தெருவில் ஜவுளிக்கடை வைத்துத் தர முன்வருவது, அவரது இன்னொரு முகம். சராசரி மனிதன், தான் வாழும் வாழ்க்கையிலிருந்து தன்னைப் பிரித்துக் காண்பதில்லை. அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தனக்கானதாக மட்டும் சுருக்குவதன்மூலம், புறத்தில் வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்குக் காரணமாகிறான். சுயஅனுபவங்களின்மூலம், பொருளியல் வாழ்க்கையில் பெற்றுள்ள வெற்றியைச் சக மனிதர்கள்மீது அத்துமீறலாகக் கருத்தினைத் திணிப்பதற்காக அடிப்படையாக்கிக் கொள்கிறான்.
        தமிழகத்தில் வாழ வழியற்றுப் தென் கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களின் நம்பிக்கையைப் புரட்டிப்போட்ட உலகப் போர் பின்புலத்தில் .சிங்காரம் சொல்லியுள்ள கதையான கடலுக்கு அப்பால் நாவல், புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லைஎன்ற தேறுதலுடன் முடியும் நாவலின் இறுதி வரிகள்தான் .சிங்காரம் சொல்ல விழைவதா? யோசிக்க வேண்டியுள்ளது.
                ‘புயலிலே ஒரு தோணிநாவல் ஒப்பீட்டளவில் பரந்துபட்ட கதைப் பின்னல்களுடன் விரிந்துள்ளது. புலம் பெயர்ந்து வாழ்தலின் வலிகளை உள்ளடக்கிய இந்நாவல், தமிழ் நாவல் பரப்பில், புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கடலுக்கு அப்பால் நாவலின் தொடர்ச்சியென விரிந்துள்ள புயலிலே ஒரு தோணி நாவல், தென் கிழக்காசிய நாடுகளின் பின்புலத்தில்  விரிந்துள்ளது.      தமிழகத்திலிருந்து மலேயாவிற்குப் புலம்பெயர்ந்து போன தமிழர்கள் .என்..வில் சேர்ந்ததும், கெரில்லாப் போரில் பங்கேற்றுப் போராடியதும் முக்கியமான வரலாற்று நிகழ்வுகள். மலேசியாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தகவகல்கள் நாவலில் இடம் பெற்றிருந்தாலும், அவர்கள் பட்ட அவலங்கள் பதிவாகிடவில்லை. இரண்டாம் உலகப்போர்ச் சூழலும் ஏகாதிபத்திய நாடுகளின் காலனியாதிக்க அரசியலும் பின்புலமாக அமைந்திட தமிழ் அடையாளம் நாவலில் மதிப்பிடப் பெற்றுள்ளது. தமிழகத்து வாழ்க்கைச் சூழலுடன்  புலம்பெயர்ந்தோரின் இருப்பினை ஒப்பிட்டுப் பார்த்தலானது, நாவலின் கதைப்போக்கினில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளது.
      கடலுக்கு அப்பால் நாவலின் இறுதியில் செல்லையா நினைத்துப் பார்க்கும் காட்சி முக்கியமானது. பன்முகக் குணாதிசயங்கள் நிரம்பிய மாவீரனான பாண்டியன் பற்றிய செல்லையாவின் நினைவினில் இடம் பெற்ற சம்பவங்கள், வளர்ச்சி பெற்றுப் புயலிலே ஒரு தோணி நாவலாக வடிவெடுத்துள்ளன. அந்த விவரணை:
செல்லையாவின் நினைவுப் பாதையில் பளிச்சென்று ஒரு வீரன் தென்பட்டான்.   பாண்டியன்! ஆஅஅ! மாவீரன். தமிழறிஞன். அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய்த் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா? அங்கு வாளா இருப்பானா? மாட்டான். புரட்சிப் படையில் சேருவது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது. நாற்பத்திரண்டில் மெடானிலிருந்து படகில் சரக்குப் போட்டு வந்து சீனி முகமது ராவுத்தர் கடையில் இறங்கியிருந்தான். அவனும் அப்துல் காதரும் பினாங்கு ஸ்ட்ரீட்டில் நடந்து வந்த பொழுது கடைக்கு முன்பாக முதன் முதலில் பார்த்தேன். எல்லாருமாகப் படையில் சேர்ந்து சிங்கப்பூர் ராணுவ அதிகாரிகள் பள்ளியில் பயிற்சி பெற்றோம். பிறகு மெடான் செல்வதற்காக பேங்காக்கிலிருந்து திரும்பியவனைப் பார்த்தேன். அதற்கிடைய…   கோத்தாபாலில் ரகசியப் பள்ளியில் சிறப்புப் பயிற்சி பெற்றான். ஜாராங்கில் படைப் புரட்சிக்குத் தலைமை தாங்கி முகாமைக் கைப்பற்றி, சில பெரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றினான். பெயரைக் கேட்டதுமே எதிரிகள் கிடுகலங்கும் கெம்பித்தாய் மேஜர் சடாவோ யாமசாக்கியை விரட்டிச் சென்று தீர்த்துக் கட்டினான். சுந்தரத்துக்கு மாரடைப்பு. அவனையெல்லாம் இனிமேல் பார்க்கப் போகிறேனோ? எந்த ஊரான்? சின்ன மங்கலம் சின்ன மங்கலம். எல்லோரும் எங்கெங்கோ தத்தம் மனதுக்கு ஒட்டிய வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். நான் ஒருவன்தான் ” (கடலுக்கு அப்பால்)
                கடலுக்கு அப்பால் நாவலாக்கத்தில் .சிங்காரத்தின் மனதில் படிந்திருந்த பாண்டியன் பற்றிய பிம்பம் வளர்ச்சியடைந்து, புயலில் ஒரு தோணி நாவல் முழுக்கப் பரவியிருப்பது வியப்பளிக்கிறது. படைப்பாக்கத்தால் .சிங்காரத்தின் கற்பனை வளம் அளவற்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாவலின் உரையாடல்கள் புனையப்பட்டுள்ளன.
                நுனைஅரும்புமுகைமலர் ஆகிய நான்கு பெரும் பகுதிகளின் மூலம் பாண்டியனின் வாழ்க்கையனுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. பாண்டியனின் நடப்பியல் வாழ்க்கை மலேயாவில் இருப்பினும் அவனது மனம், தமிழகத்தில் சின்னமங்கலம் கிராமம், திருப்பத்தூர், மதுரை என நனவோட்ட நிலையில் பின்னோக்கிச் செல்கிறது. புலம்பெயர் வாழ்க்கையின் ஊசலாட்டமும் மனத்துயரங்களும் வலுவான தளத்தில் பிணைந்திருக்கின்றன. பிழைக்கப்போன அயல் மண்ணிலே நின்று கொண்டு தமிழகத்து நினவுகளை அசைபோடும் அவலம் இயல்பானதுதான். சின்னமங்கலம் கிராமத்துச் சிறுவர்கள், பள்ளிக்கூடம், சந்தை, கடைத்தெரு, பெண்கள் என விரியும் கிராமத்து வாழ்க்கை முறை, திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் நடைபெறும் சம்பவங்கள், மதுரைக் கடைவீதிகள், தெருக்கள், தாசிகள் என அன்றைய தமிழ்நாட்டு யதார்த்தச் சூழலை அந்தக் காலகட்டத்திய பேச்சு வழக்கில் அழுத்தமாகச் சொல்லியுள்ள நாவலாசிரியரின்  மொழியாளுமை, சொல்வளம், நடை ஒப்பீடு அற்றவை.
                கதையின் மையப்புள்ளி பாண்டியன். காப்பியம் போல கணக்கற்ற பாத்திரங்கள் தலைகாட்டுகின்றன. சந்தை வியாபாரிகள், வட்டிக் கடைச் செட்டியார்கள், மேலாட்கள், அடுத்தாட்கள், சமையலாள்கள், பெட்டியடிப் பையன்கள். ஆச்சிகள், பள்ளிச் சிறுவர்கள், ஆசிரியர்கள், கிராமத்தினர், ராணுவத்தினர், டாபர் மாமாக்கள், தாசிகள், மைனர்கள், கார் ஏஜென்ட்கள், நேதாஜி, டில்ட்டன் லாயர், யொஹான்கைசர், கலிக்குஸுமான், யாமசாக்கி, முத்து, ஆயிஷா, சுந்தரம், நடராஜன், தங்கையா, ரேஷன், விலாசினி, நாவான்னா, ஆடிட்டர். பாண்டியனின் நடப்பியல் வாழ்க்கையில் எதிர்ப்படும் மனிதர்களின் தொகுப்பாகப் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாத்திர வளர்ப்பும் செயற்பாடுகளும் மிகவும் சுவாரசியமாக உள்ளன. ஆண்டியப்பிள்ளை, விலாசினி, கலிக்குஸுமான், ஆயிஷா, முத்து போன்ற சிறு பாத்திரங்கள்கூட தம்மளவில் முழுமையாக வாசகர் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.   
புயலிலே ஒரு தோணிநாவலின் நாயகன் போர் அல்லது பாண்டியன். நாவலாசிரியரின்  பாண்டியன் பற்றிய புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்புத்தி, மதிப்பீடுகளைச் சிதைத்து எழும் பாண்டியன் சாகசக்காரன்,  புரட்சிக்காரன்,  கலகக்காரன்,  அராஜகவாதி. பூகோளத்தின் மீதான பிரமாண்டமான அனுபவங்கள் குறித்து உற்சாகத்துடன் கிளர்ந்தெழும் பாண்டியனுக்கோ எதுவும் பொருட்டல்ல. பாண்டியன், ஒழுங்கற்ற விதிகளின் அடிப்படையில் எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டுத் தன் மூப்பாகச் செயலாற்றுகிறான். பாண்டியன் பற்றிய புனைவானது செறிவான கோட்பாடுகளை மூலமாகக்கொண்டுள்ளது. தேர்ந்த சாகசக்காரன்,  கலகக்காரன் எவ்வாறு செயல்படுவான் என்பதற்கு இலக்கணமாகப் பாண்டியன் விளங்குகிறான். எது குறித்தும் தீர்க்கமான நோக்கு அவனுக்கு உண்டு. விதிகளற்ற வாழ்தலைத் தேடியலையும் பாண்டியன். பொதுப்புத்திக்கு எதிரான போக்கு, சாகசச் செயலில் ஆர்வம், தொடர்ந்து மது அருந்துதல், அளவற்ற பெண்களுடன் தொடர்பு, மரணம் குறித்து அக்கறையின்மை, வாழ்தலில் மிகவும் ஆர்வம், செயல்திறன், தனித்துவம், சுய ஒழுங்கு, இடம் பெயர்ந்துகொண்டேயிருத்தல், பரபரப்பான மனநிலை போன்ற போக்குகளின் குவிமையமாக இயங்குகிறான்.
                வட்டிக்கடைத் தொழில் நடத்தும் செட்டிமார் வாழ்க்கைப் பின்புலத்திலிருந்து பாண்டியன் வெளிப்படுவது, எரிமலையின் வெடிப்பு என்றுதான் கூற வேண்டும். கடனை வசூலிக்கப் போன இடத்தில் அடிவாங்கி அவமானப்பட நேர்ந்தால்கூட வெளியே சொல்லாமல் வாழ்தலே வாழ்வின் நெறி என்று கட்டமைக்கப்பட்ட ஒழுங்கினுக்குப் பாண்டியன் முற்றிலும் அந்நியமானவன். தமிழ் அறநூல்கள் போதிக்கு வாழ்நெறிக்கு முரணான வாழ்வு, பாண்டியனுக்கு உவப்பானதாக இருக்கிறது. இடைவிடாமல் பெட்டியிலிருந்து உருவியெடுத்துச் சிகரெட்டைப் புகைப்பவன்; குடிப்பதில் ஆர்வம் மிக்கவன்; கணக்கற்ற வேசைகள்,  பெண்களுடன் உறவு கொள்பவன். மரபு வழிப்பட்ட பிம்பத்தினைச் சிதைக்கும் பாண்டியனுக்குப்போர்மிகவும் விருப்பமானதாகிறது. இந்திய தேசிய ராணுவத்தில் (.என்.) சேர்ந்து செயலாற்றும்போது, பேசுவதைவிட செயலில் விருப்பமுடையவனாக உள்ளான. அவனுடைய செயலின் விளைவாகமரணம்காத்திருப்பது அறியாத விஷயமல்ல. மரணம் பற்றிய கருத்தியலின்மீது தீவிரமான அக்கறைகூட உண்டு. யோசித்துப் பார்க்கும் வேளையில் எல்லாம் உண்பதும் உறங்குவதுமாய் பொழுது கழியுமென்ற தாயுமானவரை அடிக்கடித் துணைக்கு அழைத்துக் கொள்கிறான். இருப்பின் நிச்சயமின்மை குறித்து அக்கறையுடையவன், எதிர்நிலையில் மரணத்தை ஒன்றுமற்ற நிகழ்வாகக் கருதுகிறான். புவியில் வாழ்ந்திடும் வாழ்க்கை தொடர வேண்டுமென்ற விருப்பம் அவனுக்குண்டு. மரணத்தை மறந்துவிட்டுச் சாகசச் செயலில் ஈடுபடுவது பாண்டியனின் அடிப்படைக் குணாம்சம். பாண்டியனின் அகமானது அமைதியற்றுத் தத்தளிக்கிறது. எனினும் அவனுடைய திட்டங்களும் செயற்பாடுகளும் வெற்றியடைகின்றன. போர்ப்பயிற்சியின் போது முகாமில் நடைபெற்ற கலவரத்தின் காரணமாக ரக்பீர்லாவைக் கொன்றது, ஜப்பான் கம்பித்தாய் மேஜர் யாமசாக்கியைக் கொன்றது, துரோகியான சுந்தரத்தைக் கொன்றது எனப் பாண்டியனின் துணிச்சலான செயல்கள் தொடர்கின்றன. இந்தோனேஷியா விடுதலைப் போரில் கலந்துகொண்டு தாக்குதல்களில் ஈடுபடுகிறான். பாண்டியன் பிறரைக் கொல்லும்போது என்ன வகையான மனநிலையிலிருந்தான் என்பதற்கு நாவலில் பதிவு இல்லை. சுந்தரம் உயிருக்காகக் கெஞ்சும் போதுமரணத்தைக் கௌரவமாக ஏற்றுக் கொள்என்று அறிவுரை சொல்கிறான். மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு மீளும் கட்டங்களில்கூட பாண்டியன் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. அது ஒருவகையான இயல்பான அம்சம் என்ற கண்ணோட்டம் அவனுக்குண்டு. மரணத்தைத் துணிந்து சவாலாக எதிர்கொண்ட போதும், அவனது முரட்டுத்தனத்தில் வீரம், ஒழுங்கு, பரிவு, கனிவு எல்லாம் உண்டு.
                பாண்டியன் தன்னுடைய பால்யகால அனுபவங்கள், அண்மைகாலச் சம்பவங்களை யாரிடமும் விவாதிக்கவில்லை. பாய்மரக் கப்பலில் தனித்திருக்கும் போதும், மதுவருந்திவிட்டு ரிக்ஷாவில் செல்லும்போதும் அவனது நினைவுகள் பின்னகர்ந்து கடந்த காலத்தைப் பரிசீலனை பண்ணுகின்றன. கடந்த கால வாழ்க்கை குறித்து அக்கறை கொள்ளும் பாண்டியன், எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்திக்கின்றான்.
                நாவலின் அறிமுகக் காட்சியிலிருந்து பாண்டியன் இடைவிடாமல் பயணித்துக் கொண்டேயிருக்கிறான். நாடு விட்டு நாடு, ஊர் விட்டு ஊர் எனத் தொடர்ந்து சுற்றுகிறான். எந்த இடத்திலும் நிலைத்து நிற்க முடியாத நிலையில், அவனுடைய மனம் அமைதியற்றுக் கொந்தளிக்கிறது. புறநிலையில் பரபரப்பும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற முனைப்பும், இருத்தலின்மீது ஆர்வமின்மையும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஓடிய கால்களுக்கு ஓய்வேது? முடிவற்ற ஓட்டமாகப் பாண்டியன் இடம் விட்டு இடம் பெயர்கிறான். இறுதியில் இந்தோனேஷியாவிற்குப் பயணமாகின்றான், டச்சுக்காரர்களுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்றுராஜா உத்தாங்குவாகிறான். அவன் செயல்ரீதியில் போட்ட திட்டங்கள் பெரும் வெற்றி அடைகின்றன. எனினும் அவனுடைய மனம் திருப்தியற்று அலைபாய்கிறது. வெற்றியின் காரணமாகக் குதூகலிக்கும் மனநிலையற்ற பாண்டியன், தான் செய்த சாகசச் செயலையும் சாதாரணமாகக் கருதி, அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கின்றான். இதனால்தான் காட்டு வாழ்க்கை அவனுக்கு அலுக்கிறது. சின்னமங்கலம் கிராமத்திற்கு உடனே போக வேண்டுமென முடிவெடுக்கிறான். ‘அபாயங்கள் காத்திருக்கின்றனஎன்பது அறிந்தும் வழமையான சாகச மனநிலையுடன் வெளிப்படும்போது சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒருக்கால் டச்சுப் படையினரிடமிருந்து தப்பி, சின்னமங்கலம் கிராமத்திற்குப் போனால், அங்கு அவனால் ஒருவாரம் கூட தங்கியிருக்க முடியாது என்பதுதான் உண்மை.              
     பாண்டியனன் பினாங்கு, நான்யாங் ஹோட்டலில் நண்பர்களுடன் சேர்ந்து இரவு முழுக்க மருவருந்திவிட்டு விவாதங்களில் ஈடுபடுகிறான். உலகத்துச் சாதனைகளையும் பிரமாண்டமான செயற்பாடுகளையும் தமிழரின் பழம்பெருமையுடன் ஒப்பிட்டுத் தமிழ் பற்றிய புனைவுகளையும் கற்பிதங்களையும் நொறுக்குகிறான். சங்கத் தமிழர் மாட்டுக்கறி, யானைக்கறி சாப்பிட்டனர் என்றும், இரு கிராமத்துத் தலைவர்களிடையெ நடைபெற்ற மோதுதல்களைப் புலவர்கள்போர்கள்என்று வருணித்து விட்டனர் என்றும் தமிழ் மரபில் கட்டியமைத்துள்ள மாண்புகளைச் சிதைக்கிறான். அவனது சொல்லாடல் திறன்மிக்கது. கர்னல் குலிக்ஸ்மானிடம் நகைச்சுவையாக உரையாடும் போதும், விசாலினியுடன் காதல்வயப்பட்ட மொழிகளைக் கூறிடும்போதும் பாண்டியனின் பேச்சுத்திறன் வெளிப்படுகிறது. இக்கட்டான நிலையில் என்ன செய்ய வேண்டுமென்று உடன் முடிவெடுக்கும் திறன் பாண்டியனுக்கு உண்டு. அம்முடிவின் விளைவாகத் தோன்றவிருக்கும் சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியதுதான் என்று நம்புகிறான். சில வேளைகளில் அதுகுறித்து அவனுக்கு அக்கறையுமில்லை. இத்தகைய போக்கு ஒருவகையில் அராஜகத்தன்மையுடையது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் தான் விரும்பியவற்றை அல்லது அவனிடம் ஒப்படைக்கப்பட்ட செயலை எவ்வாறாயினும் முடித்துவிடத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறான். ஒருவகையில் ஆராய்ந்தால் பாண்டியனுக்கு விசுவாசம், நேர்மை, புகழ், துணிச்சல், வீரம் போன்றவற்றில் மரியாதை இல்லை. அவை, அவனைப் பொறுத்தவரையில் இருண்மையானவை. அவைதரும் மதிப்பீடுகள் குறித்துப் பெரிதும் அக்கறையில்லை. வரலாற்றில் பிரமாண்டமான செயல்களையும், அவற்றைச் செய்தவர்களில் இன்றைய நிலையையும் பற்றிய வரலாற்று அறிவானது, பாண்டியனைச் சுயவிமர்சனம் செய்யத் தூண்டுகிறது. இந்நிலையில் மக்கள் சிலாகிக்கும் மேன்மையான மதிப்பீடுகள், குணங்களைப் பாண்டியன் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் அவன் சுயகட்டுப்பாடுடைய செயல் வீரன், சிந்தனையாளன்.
                பாண்டியன் சாகச நாயகனுக்கே உரிய மனநிலையுடன் சிக்கலான பிரச்சினைகளிலும் உற்சாகமாக ஈடுபடுகிறான். அளவுக்கதிகமான குடிபோதையிலும் பாண்டியன் தெருவில் கிடப்பதில்லை. புலன்கள் கலங்குமளவு மதுக்குப்பிகளைக் காலி செய்தாலும், சூழலைக் கட்டுப்படுத்தும் வலிய திறமையுடையவன். எவ்வளவு போதையிலும் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துத் தெளிவான முடிவெடுக்கும் வல்லமை அவனுக்குண்டு. பாங்காங் நகரிலிருந்தபோது போதையுடன்மூன்லிங்ரெஸ்டாரண்டிற்கு நண்பர்களுடன் சென்று செய்த கலகச் செயல், மது அருந்தியதன் பின்விளைவு அல்ல. முரட்டுத் துணிச்சலுடன் கையில் பிஸ்டலை உருவிக்கொண்டு எதிரெதிராகப் பலர் பொருதுமாறு சூழல் உருவாகின்றது. பிஸ்டல் கைகள் குறிபார்த்து இருந்தன. ஒரு விநாடி, ஒரு தோட்டா. பலரின் உயிர் ஒரு விநாடி ஒரு தோட்டாவில் அடங்கி நின்று வேடிக்கை பார்த்தது. ஒரே ஒரு தோட்டா வெடித்தால் போதும். இந்நிலையிலும் பாண்டியன் ஆழ்ந்த அமைதிக்குரலில், ‘துப்பாக்கி விளையாட்டு வேண்டாம், தயை கூர்கஎன்கிறான் வலக்கையில் பிஸ்டலுடன். இத்தகைய துணிச்சல் சாகசக்காரனுக்கே உரித்தானது. பாண்டியனைப் பொறுத்தவரையில் வாழ்க்கைதான் முதன்மையானது. மரணம் என்பது ஒன்றுமில்லை. பாண்டியனின் மரணம்அவலம்என்பதைவிடசாதனைஎன மாறுவது கதையாடலில் முக்கியமானது.        
    தமிழகத்தலுள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற சின்னக் கிராமமான சின்னமங்கலத்தில் தன்னிச்சையாகத் திரிந்த பாண்டியனை எது இந்தோனேசியா மலேசியா, சுமத்ரா, பினாங்கு நோக்கித் தள்ளியது? பொருள் தேடிப் போனவன் ராணுவ வீரனான சூட்சுமம் என்ன? மனித உறவுகள் என்ற அடிப்படையில் இருந்து விலகி, அரசியல் என்ற மையப் புள்ளியில் சுழன்ற பாண்டியனின் மனதில் வெறுமை அளவற்றுப் பொங்குவது ஏன்? பூமியில் சகலமும் நாடகத்தின் காட்சிகள் என .சிங்காரம் விவரிக்கும் காட்சிகள் கொண்டாட்டம், சாகசம், அவலம் எனத் ததும்பினாலும் இறுதியில் துன்பியலாக மாறியுள்ளன.
                .சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள், நாவல் ஆக்கத்தினுக்குப் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. நீட்டி முழக்கிப் பகடி செய்யும் போக்கு, நாவலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள இறுக்கமான மதிப்பீடுகளைப் பகடிக்குள்ளாக்குவதில், பாண்டியனுக்கு எப்பவும் உற்சாகம்தான். எந்தவொரு காத்திரமான விஷயத்தைப் பற்றியும், புதிய பேச்சுக்களை உருவாக்கிட விழையும் பகடியானது, நாவல் முழுக்கப் பதிவாகியுள்ளது.தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே .சிங்காரம் கண்டறிந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கினில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன.
( சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ப.சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் நாவல்களில் இடம் பெற்றுள்ள கட்டுரை)