Saturday 8 November 2014

சென்னை மாநகர்வெளியில் ராஜீவ்காந்திசாலை மதிப்புரை

     சென்னை மாநகரவெளியில் ராஜீவ்காந்திசாலை
                                ந.முருகேசபாண்டியன்
  நகரம் என்பது புவியியல்ரீதியில் திசைகளெங்கும் விரிந்திடும் நிலப்பரப்பில், காங்கிரிட் காடுகளாகப் பரவியிருக்கும் கட்டடங்கள் மட்டுமல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மக்களின் விருப்புவெறுப்பு சார்ந்து ஒவ்வொரு நகரமும் தனக்கெனத் தனித்த முகத்துடன் விளங்குகின்றது. இன்று பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள சென்னை நகரத்தின் பூர்வீகக்கதை விநோதமானது. சோழமண்டலம் எனப்படும் வங்காள விரிகுடாவிலுள்ள தீவுத்திடலைக் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பெனியார் 1639 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியபோது நெய்தல் நிலப்பரப்பில் வாழ்ந்த பூர்வீகக்குடிகள் யார்? ஆங்கிலேயர், கோட்டை கொத்தளம் கட்டியபோது, புனிதஜார்ஜ் கோட்டை என அழைக்கப்படும் மாபெரும் கட்டடம்தான் எதிர்காலத்தில் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகின்றது என யாராவது நினைத்திருக்க முடியுமா? எல்லாமே நினைவுகளின் வழியே மங்கலாகக் குழம்பித் தோன்றுகின்றன. எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ?  கோட்டையிலிருந்து அதிகாரத்தின் நெடி இன்றளவும் வீசுகின்றது. தொடக்கத்தில் ஆங்கிலேயரின் எடுபிடிகளாகக் குற்றேவல் செய்யக் குடியேறியவர்களால் கருப்பு நகரமென விரிவடைந்த சென்னப்பட்டினம் இன்று  மக்களால் ததும்பி வழிகின்றது.
                       
      கி.பி.9-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் பகல்வேளையில் நரிகள் ஊளையிடுமளவு அடர்ந்த காட்டுப் பகுதியாக மயிலாப்பூர் இருந்திருக்கின்றது. இன்று  வானளாவிய கட்டடங்களால் மயிலைநாதர் கோவில் சூழப்பட்டிருந்தாலும், மக்கள் அவரவருக்கான வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ்கின்றனர். இன்னொருபுறம் கிராமப்புறத்திலிருந்து கிளம்பிச் சென்னையை நாடித் தினமும் வருகின்றவர்களை உள்வாங்கிக்கொண்டு  நகரம் இயல்பாக இருக்கின்றது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசுகின்றவர்கள்கூடச் சென்னையைப் பூர்வீகம் என்று சொல்லுமளவு சூழல் மாறியுள்ளது. என்ன இனம்? என்ன மதம்? என்ன சாதி? என்ன மொழி? போன்ற கேள்விகள் நகரத்துப் பரப்பில் அர்த்தமிழக்கின்றன. அவசரமான நகரத்து இயக்கத்தில் தனிப்பட்ட குறுகிய மனத்தடைகள் மறைகின்றன. ஒவ்வொருவரின் மனதில் ஆழமாக உறைந்துள்ள சாதியப் பெருமை அல்லது அடையாளங்களை கிராமத்திலே விட்டுவிட்டுத்தான் நகருக்குள் நுழைய வேண்டியுள்ளது. அலுவலக நேரத்தில் பிதுங்கி வழியும் மின்சார ரயில்களும், நகரப் பேருந்துகளும் அவரவர் சாதிய அடையாளங்களைச் சிதலமாக்குகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் இயங்கினாலும், ஒவ்வொருவரின் புழங்குவெளியும் தடைகள் அற்று விரிந்து கொண்டே போகின்றது.  சென்னை மாநகரம் தன்னை நாடி வந்தவர்களைக் கை விடாது என்பதற்கு அடையாளமாக மேன்சன்களும் மெஸ்களும் உள்ளன. கண்களில் கனவுகளுடன் கையில் சிறிய தொகையுடன் சென்னை நகருக்குள் நுழைந்தவர்கள் சில பத்தாண்டுகளில் மாபெரும்  ஸ்டோர்ஸின் முதலாளிகளாகும் விந்தை நகரத்தில்தான் சாத்தியம்.
               
      பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள். சாப்ட்வேர் கம்பெனிகள் எனப் புதிய வகைப்பட்ட கம்பெனிகளால் சென்னையின் முகம் மாறிக் கொண்டிருக்கின்றது. கட்டட வேலை செய்யப் பீகார், ஓடிசா, ஆந்திர மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் நகருக்குள் கணிசமாகக் குவிந்துள்ளனர். ஏதோவொரு வட இந்தியக் கிராமத்தில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள், மனைவி, பெற்றோர் பசியைப் போக்கிடக் கட்டுமான வேலையில் கடினமாக உழைக்கின்றவர்களின் துயரத்தினுக்கு அளவேது? ஓப்பீட்டளவில் சிரமமான வாழ்க்கை எனினும் நகரம் யாரையும் கைவிட்டு விடவில்லை. எல்லோருக்கும் ஏதாவது செய்திட வாய்ப்புவசதிகள் உள்ளதனால், நகரம் கவர்ச்சிகரமாக உள்ளது. அதியற்புதப் புனைகதையில் வரும் அண்டரண்டப் பறவை போலச் சென்னை நகரம், திசைகள் எங்கும் தனது பிரமாண்டமான சிறகுகளை விரித்துள்ளது.

        . சதுப்பு நிலங்களும் ஏரிகளும் வயல்களும் நிரம்பிய கடற்கரையைத் தழுவிய கிராமங்கள்  சென்னையைச் சுற்றி முன்னர்  இருந்தன.  நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய  கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதலமாகிக் கொண்டிருக்கின்றன  இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ்காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல. பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இருவேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ்காந்தி சாலை விளங்குகின்றது . பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாயமுருகன் எழுதியுள்ள ராஜீவ்காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும். கடந்த நானூறு ஆண்டுகளாகச் சென்னை நகரம் அடைந்துள்ள வளர்ச்சியில், இன்றைய சூழலில் ஐ,டி.கம்பெனிகள் எத்தகைய போக்குகளை முன்னிறுத்துகின்றன என்பது பற்றிய நாவலின் விவரிப்பு, அதிர்ச்சி மதிப்பீடுகளை உள்ளடக்கியுள்ளது.

     கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப்பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகினுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள்  அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது. கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமையாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின்மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன்றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன. முன்னொரு காலத்தில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தில் இன்று விரைத்து நிற்கும் அடுக்குமாடிக் கட்டடத்தினைத் தள்ளி நின்று ஏக்கத்துடன் பார்க்கிறவர்களின் நடப்பு வாழ்க்கை, துயரம் தோய்ந்துள்ளது. தொண்ணூறுகளில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம் எல்லாவற்றையும் சந்தைக்கான சரக்காக மாற்றிவிட்டது. இன்னொருபுறம் வலுவடைந்துள்ள நுகர்பொருள் பண்பாட்டில் செம்மஞ்சேரி போன்ற கிராமங்கள் வேகம்வேகமாக அழிகின்றன.
     
        நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற்றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்பவும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணியாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கின்றது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடைபெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மனஅமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம்பெண்கள் ,காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன்  வாழ முயலுகின்றனர். வரவுக்கு மீறிய செலவு, நுகர்பொருள் மீதான ஈடுபாடு பலரையும் பாடாய்ப்படுத்துகின்றது. இதனால் வாழ்வதற்குத் தேவையான மகிழ்ச்சியை இழக்கின்றனர். கணவன் மனைவிக்கிடையிலான இயல்பாக இருக்கவேண்டிய உறவினைக்கூடப் போற்றாத ப்ரணவ் கம்பெனியின் வேலைப்பளுவில் மூழ்கித் தனது குடும்பத்தைப் புறக்கணிக்கிறான். அவனது மனைவி சுஜாவிற்குக் கௌசிக்குடன் ஏற்படும் தொடர்பின் விளைவுகள் கொடூரமானவை. பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப்பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார்.  சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும்  அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள்  பற்றிய விவரிப்பு ஐ.டி,நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

       ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும்  பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும்  மனிதர்கள்.  இப்படியெல்லாம்  தங்களுடைய  வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன்  என வாசிப்பினில் நாவல் யோசிக்க வைக்கின்றது.

    வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. இளைஞர்கள், காலங்காலமாக இந்திய வைதிக சநாதனம் உருவாக்கியுள்ள விதிகளை எளிதில் புறக்கணிக்கின்றனர். சாதியை மறுக்கும் காதல் திருமணம் எனப் புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

              மனப்பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டடதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. ராஜீவ்காந்தி சாலையில் விரைந்திடும் வாகன்ங்கள் ஒருபுறம் எனில் வீட்டைவிட்டுத் துரத்தப்படும் மனப்பிறழ்வினர் இன்னொருபுறம். விரையும் வாகனங்களின் டயர்களில் சிக்கி மரணமடையும் எளிய மனிதர்களின் துயரம் அளவற்றது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாக தேடி அலையும் மனிதர்கள் மனப்பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கின்றார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவியலாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது. மனித இருப்பில் ஒவ்வொரு கணமும் பொங்கி வழியும் கசப்பின் வழியே, மனித இருப்புக் குறித்துத் தோன்றும்  கேள்விகள் முக்கியமானவை.

      சென்னை மாநகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சிக்குப் பின்னால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்கின்ற இழப்புகள் தவிர்க்கவியலாதவை. தினமும் ஆயிரக்கணக்கில் சென்னைக்கு வரும் மக்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் எதுவும் உள்ளதா? யோசிக்க வேண்டியுள்ளது. இத்தகு சூழலில், நகரமயமாதலினால்  சிதலமாகிக் கொண்டிருக்கும்  நகரத்து வாழ்க்கை பற்றிய விநாயக முருகனின் கவலை அல்லது அக்கறை புனைகதையாகியுள்ளது,. நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்து கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ்காந்தி சாலை  நாவல் நீள்கின்றது எனவும் வாசிக்கலாம்.


  ராஜீவ்காந்தி சாலை (நாவல்). விநாயக முருகன். உயிர்மை பதிப்பகம். சென்னை .பக்கம்:328: விலை:ரு.240/- :தொலைபேசி:044-24993448
                                               தி இந்து 2014
             
 

     
                                                                     



No comments:

Post a Comment