Saturday 8 November 2014

கத்தி திரைப்படம்

கத்தி திரைப்படம் முன் வைக்கும் அரசியல் பேச்சுகள்

                                                                                         ந.முருகேசபாண்டியன்       
           
     தீபாவளி போன்ற பண்டிகை நாளில் புத்தாடை அணிந்து  இனிப்புகள் ,அசைவ உணவு அல்லது சைவ உணவு சாப்பிட்டுவிட்டு, பட்டாசுகளைக் கொளுத்திபோட்டு வேடிக்கை பார்க்கும் தமிழர் பொதுப்புத்தியில் திரைப்படமும் எப்படியோ உறைந்துள்ளது. சாகச வீரனான கதாநாயகன், குறைந்த உடையில் குத்தாட்டமாடும் கதாநாயகி, கடித்துக் குதறும் நகைச்சுவை, காற்றில் சுழன்று அடிக்கும் சண்டை என ஏதோ ஒரு மசாலாவைப் பார்ப்பது  பல்லாண்டுகளாக நடைபெறுகின்றது. இப்படியான சூழலில் இருந்து  ஒதுங்கியிருக்கும் நான் ,எனது பிள்ளைகளுடன் கத்தி திரைப்படத்திற்குப் போக வேண்டியதாயிற்று. ஜிகர்தண்டா மாதிரி வன்முறை கொப்பளிக்கும் அபத்தமான திரைப்படம் வித்தியாசமானது என்பதற்காகப்ர் போட்டி போட்டு விமர்சனம் எழுதும் தமிழ்ச்சூழல் எனது நினைவிலாடியது. காதைப் பிளக்கும்  ரசிகர்களின்                கூச்சலுக்கிடையில் விஜய்  திரையில் தோன்றிய காட்சி, எப்படி இவ்வளவு பேருக்கு உற்சாகம் அளிக்கிறது?.அப்புறம் சமந்தா தேவதை போல ஒளிர்ந்தார். மீண்டும் விசில். முப்பது நிமிடங்கள் நகர்வதே சலிப்பாக இருந்தது. ஒற்றை ஆளாகப் போயிருந்தால் அரங்கினை விட்டு வெளியேறுவது நடைபெற்றிருக்கும். திடீரெனத் தெருவில் சுடப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற            இன்னொரு விஜய்யை விஜய் பார்ப்பதிலிருந்து                கதையின் போக்கு மாறுகின்றது. அப்புறம் அடுத்தடுத்துக் கார்ப்பரேட்களின் ஆதிக்கமான திட்டங்களும் அவற்றை விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதாகத் திரைப்படம் விரிகின்றது. திரைமொழியின் வழியே சொற்களைத் திருகி சாதாரணமான திரைப்படத்திற்கு அறிவுஜீவித் தோற்றம் தருவதன்மூலம் காட்சி ஊடகத்துறையில் முக்கியமான விமர்சன ஆளுமையாகக் காட்சியளிக்கும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. கத்தி திரைப்படத்திற்கென ஒளிவட்டம் எதுவும் இல்லை. சராசரியான தமிழ்த் திரைப்படம். எனினும் அது மையப்படுத்தும் அரசியல் கருத்துகள் கவனத்திற்குரியன. அந்தத் திரைப்படம் சமகால அரசியல், பொருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து விவாதங்களை உருவாக்கியிருப்பது எனக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் வழியே எனது பதிவுகள்.
     ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற புத்தகம் ஜான் பெர்க்கின்ஸ் என்பவரால் எழுதப்பட்டுத் தமிழில் வெளியாகியுள்ள புத்தகம் எனது நினைவுக்கு வந்தது. ஏகாதிபத்திய நாட்டின் விசுவாசியாகப் பல்லாண்டுகள்  சர்வதேச நிதி நிறுவனத்தில் பணியாற்றிய ஜான் பெர்க்கின்ஸ் பதிவாக்கியுள்ள அனுபவங்கள் வாசிப்பினில் அதிர்ச்சியை அளிக்கின்றன.   நவீன காலனியாக ஒரு நாட்டினை மாற்ற வேண்டுமெனில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்க்கமான வரையறைகளை முன்வைத்துள்ளது. இப்படியான சிந்தனைப்போக்கினுக்குப் பின்புலமாகப் பன்னாட்டுக் கம்பெனிகள் தந்திரத்துடன் செயல்படுகின்றன. உலகமயமாக்கல்  என்ற முழக்கத்தினுக்குப் பின்னர் பன்னாட்டுக் கம்பெனிகள் கொலை, விபச்சாரம், தரகு என எல்லாவகையான ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. இன்று ஒரு நாட்டின் இறையாண்மையையும் அடையாளத்தையும் அழித்து யார் ஆட்சி செய்ய வேண்டுமெனத் தீர்மானிப்பதுகூட பன்னாட்டு நிறுவனங்கள் எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். உலக வங்கி, ஆசியன் வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின்மூலம் நாட்டின் வளர்ச்சிக்குக் கடன் கொடுப்பதாக ஒரு நாட்டிற்குள் நுழைந்துவிட்டால் போதும். ஆறு வழிச்சாலை, பிரமாண்டமான மின்திட்டம், தொழில்பூங்கா, சிறப்பு தொழில் மண்டலம், பன்னாட்டு விமானதளங்கள், மெட்ரோ ரயில், அணைக்கட்டு போன்ற திட்டங்களுக்குக் கடன் தருவதாகச் சொல்லி, ஆட்சியாளர்களிடம் போடப்படுகின்ற  ஒப்பந்தங்கள் முக்கியமானவை. உலக வங்கியிடம் கடன் பெறுவது அந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பெறப்படுகின்றது என்ற பொதுக்கருத்து, மக்களிடம் ஊடகங்களின்மூலம் பரப்பப்படுகின்றது.  இத்தகைய ஒப்பந்தங்களை ஏற்று நடத்துகின்றவை பெரும்பாலும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள். ஒரு கையில் பணத்தைத் தருவது போல இருந்தாலும், அது அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளுக்கே மீண்டும் போய்ச் சேர்ந்து விடுகின்றன. கூடவே ஒருசில இந்தியக் கார்ப்பரேட்டுகளின் பணமும் பன்மடங்கு அதிகரிக்கின்றது. குப்பையை அகற்றுவதற்குக்கூட பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வருவது ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருப்பது கவனத்திற்குரியது. ஏழை மக்களுக்கான மான்யங்கள், இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கச்சொல்லி சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆணையிட்டுக் கொண்டிருக்கின்றன. இப்ப்டியே போனால்.  ஊரான் தோட்டத்திலே போட்ட வெள்ளரிக்காயைக் காசுக்கு இரண்டு விற்கச் சொல்லிக் காகிதம் போட்ட வெள்ளைக்காரன் காலத்து நிலை திரும்ப ஏற்படும்.  உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகள் வட்டியைக் கட்டுவதிலே காலப்போக்கில் திவாலாகி விடும் நிலையேற்பட்டுள்ளது. அப்புறம் ஆலைக்கழிவுகளைக் கொட்டி வளமான ஆறுகளை மாசுபடுத்துவதனால், பாரம்பரியமான விவசாயம் அழிந்து கொண்டிருக்கின்றது.. இன்னொருபுறம் பன்னாட்டு ஆராய்ச்சி நிலையங்களில் உருவாக்கப்பட்ட மலட்டு விதைகளும் பூச்சிக் கொல்லிகளும் வேதியியல் உரங்களும் மண்ணையும் சூழலையும் மாசுபடுத்துகின்றன. புதிதுபுதிதாக உருவாகும் நோய்களினால் மாண்டுபோகும் மக்கள் ஒருபுறம் எனில், இன்னொருபுறம் விவசாயம் கட்டுபிடியாகாமல்  கூட்டம்கூட்டமாகத் தற்கொலை செய்யும் விவசாயிகளின் என்ணிக்கை கணிசமாகப் பெருகியுள்ளது. இப்படியான  புதிய காலனித்துவச் சூழலை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கின்றது. வெறுமனே பொருளாதாரச் சுரண்டல் மட்டுமல்ல, யார்  இந்தியாவை  ஆண்டாலும் என்ன  செய்ய வேண்டுமெனத் தீர்மானிப்பதுகூட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். இதனால்தான் முன்னொரு காலத்தில் சுதேசியம் பேசிய ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் சார்பு அமைப்பான பாரதிய ஜனதா கட்சி  இன்று கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்பு தருகின்றது. கார்ப்பரேட் நிறுவனங்களுடான  உடன்படிக்கையில் மன்மோகன்சிங்கிற்கும் மோடிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.   நாட்டை சர்வதேச நிறுவனங்களிகளின் காலடியில் போட்டுவிட்டு ரொட்டித்துண்டுகளுக்காக வால்களை ஆட்டுவதில்தான் போட்டி நடக்கின்றது. இன்று அரசியல் ராணுவம் ,பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை சார்ந்து, அமெரிக்காவின் கைப்பாவையாக மாறும் நிலையை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கின்றது.
         நிதி மூலதனக் கொடுங்கோன்மையினால் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த  ஐம்பதாண்டுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதுடன் எல்லா மட்டங்களிலும் ஊடுருவி ஆதிக்க  அரசியல் செலுத்துகின்றது. இன்னும் கூடுதல் தகவல்கள் வேண்டுவோர் ஜான்பெர்க்கின்ஸ் வாக்குமூலம் தந்துள்ள புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.( விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது)
       கத்தி திரைப்படம் சித்திரிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களின் பின்புலத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பிரிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் விலையை வைத்து எல்லாவற்றையும் சந்தைக்கானதாக மாற்றுவதில் கார்ப்பரேட்டுகள் கில்லாடிகள். அதிலும் இந்தியா போன்று எல்லா மட்டங்களிலும் ஆழமாக ஊழல் ஊடுருவியுள்ள சமூகச்சூழலில் அவர்களின் செயல்பாடுகள் எளிதானவை. அரசியல்வாதிகள், காவல்துறையினர், நீதிமான்கள், உயர் அதிகாரிகள் என எங்கும் நுழைந்து ஒன்றுக்கு இரண்டாகப் பணத்தைக் கார்ப்பரேட்டுகள் வீசும்போது, பாரம்பரியமாக விவசாயம் செய்யும் விவசாயிகளைப் பற்றி அக்கறை கொள்ள யாருமில்லை. கத்தி திரைப்படத்தில்  ஜீவானந்தம்  விவசாயிகளின் நலனுக்காகச் சேர்ந்து போராடும்போது, அவர்களை அற்பமாகக் கருதுக் காவல்துறை அதிகாரி’’ இன்னும் கூடக் காசை வாங்கிக்கொண்டு ஓடிப்போங்கடா’’ என விரட்டுகிறான். எதிர்த்து நியாயம் பேசும் ஜீவா கைது செய்யப்பட்டு அடித்துச் சித்ரவதை செய்யப்படுகின்றான். மாவட்ட ஆட்சியர் தன்னூத்து கிராம மக்களின் பிரச்சினையைக் கேட்கவே தயாராக இல்லை. அச்சு ஊடகமான பத்திரிகைகளும், காட்சி ஊடகமான தொலைக்காட்சிகளும் நிலத்திற்காகப் போராடும் கிராமத்து விவசாயிகளின் பிரச்சினைகளைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை. பாரம்பரியமான நிலம், தண்ணீர் எனப் போராடும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மட்டும் போராடவில்லை. உழுது பயிரிட்டு உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் பெரும் பணியையும் விவசாயிகள் செய்கின்றனர். இன்று நுக்ர்பொருள் வாழ்க்கையினை மாற்றாக வைக்கின்ற சூழலில், எல்லாவிதமான மனிதஉறவுகளும் சந்தைக்கானதாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த கிராமத்து மக்களை முன்வைத்து இயக்குநர் முருகதாஸ் கட்டமைத்துள்ள கத்தி திரைப்படம் வெளிப்படையான அரசியலை முன்வைத்துள்ளது.
     தமிழில் இதுவரை ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. எனினும் உலகத்துச் சிறந்த படங்களுடன் ஒப்பிடுமளவு ஒரு திரைப்படம் கூட தமிழில் வெளியாகவில்லை என்பதுதான் உண்மை.  குறிப்பிடத்தக்க அரசியல் படம் ஏதாவது வந்திருக்கிறதா எனத் தேடினாலும் விடை உற்சாகம் அளிப்பதாக இல்லை. அரசியல் என்ற பெயரில் உள்ளூர் அரசியலை வைத்து மேலோட்டமான நிலையில் சில திரைப்படங்கள் வெளி வந்துள்ளன, அரசியல் வேண்டாம் எனப் போலியாகப் பேசுவதிலும் நுண்ணரசியல் பொதிந்துள்ளது. அரசியல் என்பது மக்களின் வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடையது, அரசியல் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிலையில் இயக்குநர் முருகதாஸ் முன் வைத்துள்ள அரசியல் கருத்துகளை ஆராய வேண்டும்.
           இந்தியா போன்ற நாடுகளைத் தங்களின் பிடிக்குள் தக்க வைத்துக்கொண்டு, தங்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய விமர்சனம்தான் கத்தி திரைப்படத்தின் மூலமாகும். தன்னூத்து கிராமத்து நிலத்தடி நீர் இரு மாவட்டங்களின் விவசாயத்திற்குப் போதுமானது, முதியவர்களும் ஜீவானந்தமும் மூன்று நாட்கள் நாட்கள் தண்ணீர் செல்லும் பெரிய குழாய்களுக்குள் தங்கியிருந்து நடத்தும் போராட்டம் போன்றவை தருக்க முரண். என்றாலும் அவற்றை நம்புமாறு திரைப்படக் காட்சிகள் அடுத்தடுத்து விரிகின்றன. அரசு இயந்திரத்தின் கையாலாகாத்தனம்  எளியவர்களான கிராமத்தினரை புறக்கணிக்கின்ற சூழலில், தடுமாறுகின்ற கிராமத்தினர் ஆறு பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். என்றாலும் விடிவு இல்லாத சூழலில், சட்டப்படி போராடுகின்ற ஜீவா, கார்ப்பரேட்டுகளின் கைகூலிகளினால் சுடப்படுகின்றான். தற்செயலாக அங்கு வந்த திருடனான கதிரேசன், சூழல் காரணமாக ஜீவாவாக நடிக்கின்றான். தன்னூத்து கிராம மக்களின் போராட்ட காணொளியைக் கண்டவன், அடிதடி, வன்முறை எனப் பிரச்சினையை வேறு திசையில் மாற்றுகின்றான். குழாயினுள் மூன்று நாட்கள் உள்ளிருப்புப் போராட்டத்தினுக்குப் பின்னர் ஊடகங்களின் முன்னர் ஜீவா பேசுகின்ற  பேச்சுகள் அரசியலின் உச்சம். இந்தியாவில் பீர் கம்பெனி வைத்திருப்பவன் 5000 கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. அவனுக்குக் கடன் தந்த வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்து கொள்ள்வில்லை. நிலத்தில் விவசாயம் செய்வதற்காகக் 5000 ரூபாய் கடனை வாங்கிய சிறிய விவசாயி  வட்டி கட்ட முடியாமல் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறான். ஏன்? என ஜீவா கேட்கும் கேள்வி முக்கியமானது. விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கும்போது ஒரு கோலா  குளிர்பானக் கம்பெனி ஒரு நாளைக்கு ஒன்பது லட்சம் லிட்டர் தண்ணீர் தாமிரபரணியில் உறிஞ்சுவது ஏன்? கார்ப்பரேட் நிறுவனமான மீதேன் வாயுக் கம்பெனியின் நலனுக்காக 1,69,817 ஏக்கர் விவசாய நிலங்களைக் கைப்பற்றுவதற்காக ஆயிரக்கணக்கான      தஞ்சை நாகபட்டினம் மாவட்ட விவசாயிகளை நிலத்தை விட்டுத் துரத்த முயலுவது எதற்காக? கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காகப் பூர்விக நிலத்தைவிட்டுத் துரத்தப்படும் விவசாயிகளின் குடும்பத்தினர் எதிர்காலத்தில் என்ன செய்வார்கள்? இந்தியாவில் முப்பது நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கின்ற அவல நிலை இருக்கிறதே? நகரங்களில் மட்டும் தண்ணீர் இருந்தால் போதும், கிராமத்தினர்  பல்லாண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் அவதிப்படும்போது நமக்கு என்ன என மெட்ரோவாசிகள் இருப்பது சரிதானா? 2 ஜி என்றால் என்ன? அலைக்கற்றை, காற்று. வெறும் காற்றை மட்டும் விற்று கோடிகோடியாகப் பணம் பண்ணும் ஊர் இது. செல்போன் ஆடம்பரம், தண்ணீர் அத்தியாவசியம் என ஜீவானந்தம் கேட்கும் கேள்விகள் வெறுமனே ஊடகங்களை நோக்கிக் கேட்கப்பட்டவை மட்டுமல்ல: இந்திய அரசியல்வாதிகள் , உயர் அதிகாரிகள், நீதியரசர்கள், காவல்துறை, மேல்தட்டினர், நடுத்தர வர்க்கத்து அறிவிஜீவிகள்  எனப் பலரையும் நோக்கி வீசப்பட்டுள்ளன. விஜய்யின் அரசியல் பேச்சுகள் ஒவ்வொன்றும் குறி பார்த்து வீசப்பட்ட கத்திகளாக மாறியுள்ளன. அவை சமூகத்தில் அழுத்தமாகப் புரையோடியுள்ளவற்றை அகற்ற முயலும். சமகாலத்து அரசியலை இவ்வளவு வெளிப்படையாகப் பேசிய தமிழ்த் திரைப்படம் கத்தி போல எதுவுமில்லை.
        ஆங்கிலேய ஏகாபத்தியத்திடமிருந்து இந்திய நாடு  விடுதலையடைந்து அறுபத்தேழு ஆண்டுகள் கடந்த பின்னர் எங்கும் குப்பை இல்லாமல் நாட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென ஊடகங்களின்மூலம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுப்பது என்னவொரு கேலிக்கூத்து? இந்தியாவின் ஆன்மாகவாக விளங்குகின்ற விவசாயத்தை மேம்படுத்துவதற்குக் காத்திரமான திட்டங்கள் எதுவும் இல்லாமையினால், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகின்றது. இத்தகைய விவசாயிகளின் நலன் குறித்து அக்கறை எதுவும் செலுத்தாமல், குப்பையை அகற்றுவதுதான் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்பதுபோல மக்களை நோக்கிப் பிரதமர் ஆவேசமாக முழங்குவது, பிரச்சினையைத் திசை திருப்பும் வேலை. இத்தகைய சூழலில் நாட்டைக் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அடகு வைத்துவிட்ட இந்திய ஆட்சியாளர்களான அரசியல்வாதிகள் மீதான விமர்சனமாகத் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உன்னதமான திரைமொழியில் நுட்பமாகக் காட்சிப்படுத்துவதைப் பொருட்படுத்தாமல், இன்று இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சினையைப் பிரச்சாரமாகச் சொல்வேன் எனத் துணிந்து கதைசொன்ன இயக்குநர் முருகதாஸின் நேர்மை பாராட்டத்தக்கது. எந்தவொரு சமூகப்பிரக்ஞையும் இல்லாமல் வெறுமனே சண்டையும் காதலும் எனக் கூத்தடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜய், பலர் பேசத் தயங்கும் வசனங்களைத் துணிச்சலுடன் பேசி, கத்தி திரைப்படத்தில் நடித்திருப்பது வரவேற்கத்தக்கது. வெகுஜன சினிமாவில் இது போன்று சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருகின்ற அரசியல் திரைப்படங்கள் தமிழில் நிரம்ப வரவேண்டும் என்ற எண்ணத்துடன் திரையங்கினை விட்டு வெளியே வந்தேன்.
                 
                                    உயிர் எழுத்து, 2014, நவம்பர்
                                                                                         












No comments:

Post a Comment