Sunday 9 November 2014

தமிழ்த் தத்துவ மரபில் பட்டினத்தார்

         தமிழ்த் தத்துவ  மரபில் பட்டினத்தார்
                                     ந.முருகேசபாண்டியன்
   
                      தமிழ்த் தத்துவமரபில் சித்தர்களின் சிந்தனைப் போக்குகள் தனித்துவமானவை. வைதிக சமயமும் அவைதிக சமயங்களான ஜைனமும் பௌத்தமும் ஏற்படுத்தியிருந்த கருத்தியல்களுக்கு மாற்றாகப் புதிய போக்கினைச் சித்தர்கள் முன்னிறுத்தினர். தமிழக வரலாற்றைப் பொறுத்தவரையில் , சோழர் காலம் தொடங்கிப் புராணங்களும் வேதங்களும் சாஸ்திரங்களும்      ஒப்பீட்டளவில் முக்கியத்துவம்  பெற்றன. இயற்கையிறந்த அதியற்புத ஆற்றல்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக மனித உடல்கள் ஒடுக்கப்பட்டன. பால் அடிப்படையில் பெண்களும் பிறப்புரீதியில் தலித்துகளும் ஒதுக்கப்பட்டனர். பிறவி, கர்மம் பற்றிய கற்பிதங்களுடன் விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும் சொர்க்கம் குறித்த புனைவினை  மதங்கள் கட்டமைத்தன. சமூக அடுக்கில் மேலோங்கியிருந்த சநாதன தருமத்தினைப் புராணங்கள்  நியாயப்படுத்தின. பெண்ணுடல்களை வெறுமனே போகப்பொருளாக மாற்றியிருந்த ஆண்களின் உலகம்  வலுவாக இருந்தது. இத்தகு சூழலில் ஏற்கனவே தமிழகத்தில் நிலவிய சமூக மதிப்பீடுகளின்மீது ஆழமான கேள்விகளை முன்வைத்த சித்தர்கள், மாற்று  மரபுகளை முன்வைத்தனர். தமிழ்ச் சித்தர் மரபு ஒற்றைத்தன்மையானது அல்ல; பல்வேறுபட்ட போக்குகள் நிலவுகின்றன.. வேதங்கள், சாஸ்திரங்கள் ,சம்பிரதாயங்கள்மீது கடுமையான விமர்சனங்களை வைத்த சிவவாக்கியர், திருமூலர் ஒருபுறம்      . நிலையாமை காரணமாக மனித இருப்பினையும் பெண்ணுடல்களையும் கண்டனம் செய்த பட்டினத்தார் இன்னொருபுறம். இருவேறு போக்குகளும் நிறுவனமயமாக்கத்திற்கு  எதிர்ப்பு என்ற நிலையில் ஒன்றுபடுகின்றன.  
      கோவில், ஆகம விதிகள், சடங்குகள் போன்றவற்றை மறுதலித்த சித்தர்கள் ஞானத்தை முதன்மையாகக் கருதினர். உருவ வழிபாட்டினை ஏற்றுக் கொள்ளாத சித்தர்கள், தாங்கள் கண்டறிந்த ஆன்மீக அனுபவத்தைப் பாமர மக்களின் மொழியில் பாடல்களாக எழுதினர். சித்தர்கள் நாத்திகக் கருத்தை வலியுறுத்தவில்லை. ஆனால் அவர்கள் புனிதம் என்ற பெயரில் நகரம், ,ஆறு, விலங்கு, மரம், கோவில் போன்றவற்றைப் புனிதமாக்குவதை மறுத்தனர். மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் அடையாளங்கள் சித்தர் நெறிக்கு முரணானவை.
      இதுவரை மதங்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள சட்ங்குகள், மரபுகள் போலியானவை என்பது சித்தர்களின் நம்பிக்கை.  அன்றைய காலகட்டத்தில் மதங்கள் செல்வாக்குச் செலுத்திய சூழலில், சித்தர்களின் கருத்துகள் கலகத்தன்மையுடையனவாக விளங்கின. வீடுபேறு அடைவதற்குச் சித்தர்கள் பின்பற்றிய ` தந்திர யோகம்` வைதிக சமயத்தினரால் ஏற்கப்படவில்லை. கஞ்சா போன்ற லாகிரிப் பொருளின்மூலம் சில சித்தர்கள் வேறு உலகில் உலாவிய உன்மத்தநிலையைக் கீழான செயலாக மத நிறுவனங்கள் கருதின.. மேலும் மருத்துவத்தின்மூலம் உடலை நலமாக்க முடியும் என்று  சித்தர் மரபு கருதியது. இதுவரை நோய் என்பது பாவபுண்ணியத்தினாலும், கருமவினையினாலும் உண்டானது என்று மதங்கள் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையைச் சித்தர்கள் ஏற்கவில்லை. உடலை வளர்ப்பதன்மூலம் உடலோடு வீடுபேறு அடையலாம் என்று சித்தர்கள் கருதினர்.
    தமிழ்ச் சிந்தனை மரபில் சித்தரான பட்டினத்தாரின் பாடல்கள் இன்றளவும் வெகுஜனரீதியில் பிரபலமாக விளங்குகின்றன. பட்டினத்தார் பற்றிச் செவி வழியாக வழங்கிவரும் வாழ்க்கை வரலாற்றுக்கதை ஆதாரமற்றது. பட்டினத்தாரின் பாடல்கள் கருத்து வெளிப்பாடு காரணமாகப் பிற சித்தர்களின் பாடல்களைவிட பாமரர்களிடமும் ஊடுருவியுள்ளன. ` ஒவ்வொரு சீவனிலும் சிவத்தைக் காண்பவனே சித்தன் ` என்ற திருமூலரின் கூற்று பட்டினத்தாருக்குப் பொருந்தும். கி.பி. 16-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பட்டினத்தார் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது தமிழறிஞர்களின் பொதுவான கருத்து. அன்றைய காலகட்டத்தில் தமிழகமானது முஸ்லிம், நாயக்கர், மராட்டியர் என வேற்று மொழியினரின் ஆளுகைகுட்பட்டிருந்தது. அதேவேளையில் வேள்வியை முன்வைத்த வைதிக சமயம் வருணாசிரம பின்புலத்தில் ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டது. சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு  விடிவு எதுவுமில்லை. பெண்கள் ஒருபொருட்டாகக் கருதப்படவில்லை. வெறுமனே உடலுழைப்புத் தருவதற்கான அடிமையான ஆண் உடல்களும், போகத்திற்கான பெண்ணுடல்களும் என்றிருந்த சூழலில் பட்டினத்தாரின் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. அன்றைய சமூகச்சூழல் ஏற்படுத்தியிருந்த நெருக்கடி ,பட்டினத்தாரின் பாடல்களில் சூசகமாக வெளிப்பட்டுள்ளது.
     பண்டிதர்கள் சிலேடை, யமகம், சித்திரக்கவி எனச் சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டுச் செய்யுள்களைக் கடினமான நடையில் எழுதிக் கொண்டிருந்த சூழலில், எதிராளியை முன்னிறுத்தி எளிய சொற்களில் பாடிய பட்டினத்தார் பாடல்கள் வாய்மொழி மூலமாக மக்களிடம் பரவின. நம்பிக்கை வறட்சி, கசப்பு, வெறுமை, நிலையாமை, உடல்கள் பற்றிய இழிவான எண்ணம், பெண்ணுடலைக் கேவலமாகக் கருதுதல் என விரியும் பாடல்கள் தனிமனிதப் புலம்பல்கள் எனச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. பூமியில் மனித இருப்பிற்கான உடல்கள்மீது பட்டினத்தாருக்கு ஏன் இத்தனை வெறுப்பு?  அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான அனுபவங்கள் உடல்களைப் புறக்கணிக்கும் நிலைக்கு இட்டுச் சென்று விட்டனவா? அல்லது அன்றைய அரசியல் நிலைமைகள் கடுமையான நெருக்கடியைத் தந்தனவா? சித்தின்மூலம் சீவனைத் தேடும் பட்டினத்தாரின் சொற்களில் கசப்புப் பொங்கி வழிகின்றது.
    பட்டினத்தார் அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டியவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். ஓயாமல் பொய் சொல்வார்/ நல்லோரை நிந்திப்பவர்/ தாயாரைத் திட்டுகின்றவர் / சதி செய்வார்/ சாத்திரங்கள் ஆராயார்/ பிறருக்கு உதவி செய்யாதவர்/ நாடி வந்தவருக்கு ஒன்றும் ஈயாதவர்.. போன்றோர் பூமியில் இருந்தால் என்ன இறந்தால் என்ன? போன்றவை சமூக வாழ்க்கைக்கு ஆதாரமானவை. பனை மரம் போல வளர்ந்து நல்லோரின் பேச்சுகளை அறியாத இடும்பரை ஏன் படைத்தாய் இறைவா என்ற பட்டினத்தாரின் ஆதங்கம் தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது.
     இறை வழிபாட்டினை மனம் ஒன்றாமால் வெறுமனே சடங்காகச் செய்வதினால் பயன் எதுவுமில்லை என்பது பட்டினத்தாரின் கருத்து. முழுமுதற் பொருளான பேராற்றலை நினைந்து வழிபடாமல் பூசை செய்வது பொருளற்றதுதான்.
                  கைஒன்று செய்ய விழிஒன்று
                        நாடக் கருத்தொன்றெண்ணப்
                  பொய்ஒன்று வஞ்சக நாஒன்று
                        பேசப் புலால்கமழும்
                  மெய்ஒன்று சாரச் செவிஒன்று
                        கேட்க விரும்புமியான்
                  செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்
                        வாய்வினை தீர்த்தவனே
     
       மனம்,மொழி,மெய்யினால் நினைந்து வழிபட வேண்டிய பரம்பொருளை மன ஓர்மையற்றுத் துதிப்பது  ஏற்புடையது அல்ல என்கிறார் பட்டினத்தார். சமுகச் சூழல் காரணமாகப் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மனிதன் தனது இருப்பினையே மறக்கின்றான். இதனால் மன ஒருமைப்பாடு இல்லாமல் வெறுமனே வழிபடுவது கடமை போல நிகழ்கின்றது. இந்நிலை மாற வேண்டும் என்பது பட்டினத்தாரின் கருத்து. வழிபாட்டிற்கு மட்டுமல்ல எந்தவொரு விஷயத்திற்கும் இது பொருந்தும். நவீன வாழ்க்கைச் சூழலில் வேகம்வேகமாக மனிதன் இயங்க வேண்டியபோது ,அற்புதமானவற்றை நழுவ விட்டு விடுகின்றான் . மனிதன் தான் என்ற நிலையில் தன்னையும் சூழலையும் அவதானித்துச் செயல்படும்போது வாழ்க்கை செம்மை அடையும்.

      பூமியில்மனித இருப்பு நிலையானது என்ற நம்பிக்கையில் அதிகாரத்தைக் கட்ட்மைப்பவரும், சொத்துகளைச் சேர்ப்பவரும் பெருகுகின்றனர். இதனால் மனிதர்களுக்கிடையில் நடைபெற்ற சண்டைகள், போர்களில் ஏற்பட்ட அழிவுகளுக்கு கணக்கேது? `காதுஅற்ற ஊசியும் வாராது/ காணும் கடை வழிக்கே ` என்ற போதனைமூலம் இருப்பின் அபத்தம்  பாடலில் பதிவாகியுள்ளது
.
    வாசி என்னும் மூச்சுக்காற்றினை அடக்கிச் சித்தர் நெறியில் வாழ்ந்த பட்டினத்தார் யோகத்தினைப் போற்றுகின்றார்
அட்டாங்க யோகமும் ஆதாரம்
   ஆறு அவத்தை ஐந்தும்
விட்டுஏறிப் போன வெளிதனி
   லேவியப்பு ஒன்று கண்டேன்
வட்டுஆகிச் செம்மதிப் பால்ஊறல்
   உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை
   விழுங்கி இருக்கின்றதே  
 .
எட்டு யோகங்களும் ஆறு அவத்தைகளும் என ஞான வழியில் இறைவனின் ஆற்றலை அறிய முயலுவது சித்தர் மரபு சார்ந்ததாகும். யோகத்தின்மூலம் கிடைப்பது பேரின்பம் என மனவெளிதனில் பட்டினத்தாரின் மனம் சிறகடிக்கின்றது.                   
               
                ஆசை என்ற கயிற்றினால் சுழற்றி விடப்பட்ட பம்பரம்போல உடலினைக் கருதும் பட்டினத்தார் , சீவனைத் தஞ்சமடைவதுதான் விடிவு என முடிவெடுக்கின்றார். பூமியில் மனித இருப்பு என்பது நிலையற்றது என்பதைக் குறிப்பிட  ` இறுதியில் சட்டகம் சுட்ட எலும்பாகும்` என்கிறார். தாயின் வழியே உயிராக வெளிப்பட்ட உடல் வளர்ந்து ,பின்னர் இறப்பது என்பது இயற்கையின் விதியாகும். எனினும் `தான்` அல்லது ஈகோ வின் முனைப்பினால் மரணத்தினை ஏற்றுக் கொள்ளவியலாத பட்டினத்தாரின் மனம் எதிர்மறையாக வெளிப்பட்டுள்ளது. ஊற்றைச் சரீரத்தை ஆபாசக்/ கொட்டிலை ஊன்பொதிந்த/ பீற்றல் துருத்தியைச் சோறிடும்/ தோற்பையைப் பேசரிய/ காற்றில் பொதிந்த நிலையற்ற/ பாண்டத்தைக் காதல் செய்தே/ எனத் தன்னையே விமர்சனம் செய்துகொள்ளும் பட்டினத்தாருக்கு உடல் கேவலமாகப்படுகின்றது. மதங்கள் மனித உடல்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களைப் பட்டினத்தார் ஏற்றுக் கொள்கின்றார்.

    பூமியில் மனித இருப்பு என்பது முழுக்க உடல் சார்ந்தது. மொழியினால் உருவான சமூகமயமாக்கல் சமூகத்தின் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளது. மனித உடல் மொழியினால் தனக்கு வெளியே பரந்திருக்கும் நிலமும் வெளியும் குறித்த புரிதல்மூலம் பிரபஞ்சத்தைக் கண்டறிந்தது. இயற்கையிறந்த பேராற்றல் பற்றிய கருத்தினைக் கட்டமைத்த மதங்கள் மனித உடல்களையும் அதிகாரம் செய்கின்றன.  இயற்கையின் உந்துதலால் ஆணுடலும் பெண்ணுடலும் சேர்ந்து துய்க்கும் பாலியல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மறுஉற்பத்தியில் ஈடுபடும் ஆற்றல்மிக்க பெண்ணுடலை வெறுமனே போகப்பொருளாகச் சுருக்கிப் பாலியல் கொண்டாட்டத்தினைக் கட்டமைத்த ஆண் மேலாதிக்க மனம் இன்று வரை வலுவாக உள்ளது..
   
     இயற்கையான பாலியல் துய்ப்பை விடுத்து ஆண் மனம் புனைந்திட்ட பெண் பற்றிய பிம்பங்கள் பட்டினத்தாருக்கு எரிச்சல் தருகின்றன.. எனவே அவர்  பெண் பற்றிய மாற்றுப் பிரதியை உருவாக்கினார். பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாமல் அவளை வேறுபட்ட உறுப்புகளின் தொகுதியாகப் பார்த்துக் கிளுகிளுப்படையும் ஆண் மேலாதிக்க மனநிலையைத் தகர்க்க முயன்றுள்ளார். கயல் போன்ற கண்கள் எனப்  பெண்னைப் பாராட்டப்படும் நிலைக்கு மாற்றாகப் பீளை ஒழுகும் கண்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கச்சித் திருஅகவல் பகுதியில் பெண்ணின் உறுப்புகள் குறித்து ஆண் மனம் கட்டமைத்துள்ள புனைவுகள் சிதலமாக்கப்பட்டுள்ளன.

                   வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
                  பாரினில் இனிய கமுகுஎனப் பகிர்ந்தும்
                  வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
                  துப்பு முருக்கின் தூயமலர் என்றும்
                  உள்ளும் குறும்பி ஒழுகும் காதை
                  வள்ளைத் தண்டின் வளம் வாழ்த்தியும்
                  …   …   …
                  சொற்பல பேசித் துதித்து நீங்கள்
                  நச்சிச் செல்லும் நரக வாயில்

பெண்ணைப் பற்றிப் புலவர்கள் புனைந்துரைத்து உருவாக்கும் பிரேமைக்கு மாற்றாகவும் பட்டினத்தாரின் பாடல்களைக் கருதலாம். பெண் பற்றிய  பட்டினத்தாரின் கண்டனம் முழுக்க ஆண்  மேலாதிக்க மொழியில் அமைந்துள்ளது. பெண்ணை மனுஷியாகப் பார்க்காமல் உடலின் உறுப்புகளாகப் பார்க்கும் பார்வை அவரின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.
      
       பட்டினத்தாரின் காலகட்டத்தில் விலைமகளிர் எங்கும் பரவியிருந்தனர் .` நினைவெழுந்தால் நல்ல மாதருண்டு இந்த மேதினியிலே` என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள் அதனை உறுதி செய்கின்றன. `பெண்ணாகி வந்த மாயப் பிசாசு`  எனத் திட்டுவது பொருளைப் பறிக்கமுயலும் பெண்ணைத்தான். பெண் மயக்கத்தில் மயங்கித் திரிந்த ஆண்களின் நிலையைக் கண்டிப்பது பட்டினத்தாரின் பாடல்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது. எத்தனை பேர் நட்ட குழி/ எத்தனை பேர் தொட்ட முலை/ எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்/ நித்தநித்தம் பொய் பேசும் புலைமாதர்..எனப் பட்டினத்தார் சித்திரிக்கும் பெண் விலைமகளிர்தான். அன்றைய காலகட்டத்தில் பெரு வழக்காக இருந்த விபசாரத்தை முன்னிறுத்தி ஆண்களிடம் எதிர்மறையான கருத்தினை உருவாக்க விழைந்துள்ளார்
.
        பெண்களைக் கேவலப்படுத்துவது பட்டினத்தாரின் நோக்கமல்ல. பெண்ணை இயல்பானவளாகக் கருதாமல் பாலியியல்ரீதியில் அணுகும் ஆண் மனநிலையைக் கண்டனம் செய்ய முயன்றவர் ,பெண்ணுடலை விமர்சனம் செய்து மாற்றுக் கருத்தினை உருவாக்க முயன்றுள்ளார். `நல்ல மங்கையரைத் தாய் போல் கருதுகினறவர் ஞானம் மிக்கவர்` என்ற பட்டினத்தாரின் பார்வை கவனத்திற்குரியது.

      அன்னையார் இறந்த பின்னர் துயரத்தில் வருந்திப் பட்டினத்தார் பாடியுள்ள பாடல்கள் சோகத்தின் உச்சம்.  தாய்க்கும் தனக்குமான உறவினைச் சொல்லி  அப்படிப்பட்ட தாயின் உடலுக்கா கொள்ளி வைக்கின்றேன் எனக் கதறி அழுவது அவரை மனிதனாகக் காட்டுகின்றது. துறவு மனநிலையில் வாழ்ந்தாலும் பாடினாலும் தாயின் மரணம் ஏற்படுத்தும் வேதனையைத் தவிர்க்க முடியாது என்பதற்குப் பட்டினத்தாரின் பாடல் வரிகள் சான்று.

    முடியணிந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவது கண்டும் சிவனின் அடியைப் பரவி உய்ய வேண்டுமென்ற எண்ணம் பலரிடமும் இல்லையே என்ற பட்டினத்தாரின் ஆதங்கம் நிலையாமையைப் பற்றியது மட்டுமல்ல: மனித உயிருக்கும் பூமிக்கும் இடையிலான உறவினைக் கண்டறியும் முயற்சியுமாகும்    
  
      எல்லாவற்றையும் துறந்து ஒதுங்கிப்போய் மௌனமாக உறைந்து போகாத மனநிலை பட்டினத்தாருக்கு வாய்த்திருந்தது. அவருடைய சொந்த அனுபவங்களின் விளைவாகச் சிவனை நாடிச் சித்தராக மாறினாலும் தனது  கருத்துகளைத் துணிச்சலுடன் பாடியுள்ளார். தமிழ்த் தத்துவ மரபில் தனக்கெனத் தனியிடத்தை உருவாக்கியுள்ள பட்டினத்தார் இறைவனைப் பற்றிப் பாடியுள்ளதைவிட மனிதனைப் பற்றிப் பாடியவை அதிகம். சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகளை விசாரணைக்குட்படுத்திய பட்டினத்தார் கலகக்காரராகவும் விளங்குகின்றார்.
                        தி இந்து சிறப்பு மலர்
                                               murugesapandian2011@gmail.com    

      

            

No comments:

Post a Comment