Saturday 8 November 2014

தில்லானா மோகனாம்பாள்

             தில்லானா மோகனாம்பாள்
                                                                             ந.முருகேசபாண்டியன்
      காவிரி ஆறு பாய்ந்து செழிப்பு நிலவிய  தஞ்சை மாவட்டத்தில் நூறாண்டுகளுக்கு முன்னர் கலைகள் உன்னதநிலையை அடைந்திருந்தன. பாமரர்களும்கூட இசையின் நுட்பங்களையும் நாட்டியத்தின் எழிலையும் ரசித்தனர். இத்தகைய பின்புலத்தில் கலைமணி என்ற கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள் என்ற பெயரில் ஆனந்தவிகடன் இதழில் எழுதிய தொடர்கதை, ன்றைய காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  நாட்டியப் பேரொளியாகப் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கிய மோகனாம்பாளை மையமாகக்கொண்டு விரியும் நாவலில் தமிழகக்  கலைச்சூழல் உயிரோட்டமாகப் பதிவாகியுள்ளது.
            இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்த தமிழகத்தில், தேவதாசி இனத்துப் பெண்கள் வாய்ப்பாட்டு, நாட்டியம் போன்றவற்றில் சிறந்து விளங்கியதுடன் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்தனர். அவர்கள் ஜாக்கெட் அணிந்திருந்ததுடன் நெற்றியில் பச்சைக் குத்திக்கொள்ளாமல் சுயேச்சையாக விளங்கினர். பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண் எனச் சமூக மதிப்பீடு இழிவானதாக இருந்தாலும், பெண் எனற நிலையில் ஆணைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை தாசியருக்கு இல்லை. இத்தகைய சுதந்திர மனநிலை இயல்பாகவே மோகனாவிடம் படிந்திருந்தது. நாட்டியமாடுகின்ற பெண்ணின் உடலின் வழியே வெளிப்படும் கலையின் உன்னதத்தை விட, அந்த உடலை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் அற்ப மனநிலையை வெறுக்கின்ற  மோகனாம்பாளின் னம் தனித்துவமானது. திருமண வீட்டில் மைனராகத் திரியும் ஆண்களின் மார்பில் சந்தனத்தைப் பூச வேண்டியது தாசியர் வழக்கம் என்ற நடைமுறையினை மறுக்கின்ற  மோகனாவின் செயல் அன்றைய காலகட்டத்தில் துணிச்சலானது. அழகர்மலையில் நாட்டியமாடுவதற்காகப் போன இடத்தில், மைனர் நாகலிங்கம் தந்த வைர மூக்குத்தியை வேண்டாம் எனப் புறக்கணிக்கின்றாள். நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த சூழலில், மோகனா தன்னிச்சையுடன் செயல்பட்டு முடிவெடுப்பது வழமையிலிருந்து மாறுபட்டது.
                                அழகியாகச் சித்திரிக்கப்பட்டுள்ள மோகனா பரத நாட்டியமாடுவதில் பெற்றிருந்த திறமை காரணமாகப் புகழின் உச்சியில் மின்னுகின்றாள். ஒருவிதமான பகடியான மொழியில் பேசுகின்ற மோகனா எந்தவொரு விஷயம் குறித்துத் துணிச்சலுடன் முடிவெடுக்கின்றாள். சண்முகசுந்தரத்தின் நாகசுர இசைத்திறமையில் மயங்கிய மோகனா, அவனது  அகங்காரமான பேச்சு, புறக்கணிப்பைப் பொருட்படுத்தாமல், அவனை விரும்புகின்றாள்.  இளவயதிலே புகழ் பெற்ற வித்துவானாக விளங்கிய சண்முகசுந்தரம் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டு வருந்துகின்ற இயல்புடையவன்.  மோகனா, தான்  விரும்பிய  சண்முகசுந்தரத்தின் மீது ஏற்பட்ட காதலினால் உருகுவதும் ஏங்குவதும், வாய்ப்புக் கிடைத்தபோது அவனுடன் தயக்கமற்றுப் பேசுவதும் என இயல்பாக இருக்கின்றாள்.
                மோகனாவின் தாய் வடிவாம்பாள் யதார்த்ததில் வகைமாதிரியான தாசி. எல்லாவிதமான தந்திரங்களும் அறிந்திருக்கும் வடிவாம்பாள் பண விஷயத்தில் கறாரானவள். பெரிய ஜமீந்தார் அல்லது பண்ணையாருடன் மகளுக்குப் பாலியல் தொடர்பு ஏற்பட்டால், பணம் குவியும் என்று நம்புகின்றாள். மோகனா தனது தாயின் கெடுபிடிகளுக்கு இணங்கியவாறு  தனது காதலை நிறைவேற்ற முயலுவது சுவாரசியமானது. தாயின் அன்பும் ஆதிக்கமும் ஒருபுறம் எனில், சண்முகசுந்தரத்தின் புறக்கணிப்பு இன்னொருபுறம் எனக் குழம்பினாலும் அவளது மனம் காற்றினில் மிதக்கின்றது.
   பெரிய வித்துவான் என்றாலும் சண்முகசுந்தரம் ஒருவகையில் குழந்தை மாதிரி.  மோகனா மீதான ஆழமான காதலினால், அவள் தனக்கு மட்டும் உடமையானவள் என முடிவெடுத்துச்  சிறிய மனவேறுபாடு அல்லது சம்பவத்தைக்கூட தாங்கவியலாது அவதிப்படுகின்றான். அவனது இயல்பினை நனகறிந்துள்ள மோகனா, அவன் தவறான முடிவெடுக்கும்போதும்  சமநிலையுடன் செயல்படுகின்றாள்.

                                காதலா கலையா என்ற முரண் தோன்றியபோது, தனது பரத நாட்டியம் மூலம் சண்முகசுந்தரத்தின் நாகசுர இசையை வெல்ல வேண்டும் எனத் துடிப்புடன் மோகனா முயலுகின்றாள். கலையின் வழியே தனது அடையாளத்தைக் கண்டறிய முயலும் மோகனா, எல்லாப் பெண்களையும் போல வாழ முடிவெடுக்கின்றாள்.  அந்திமழை.2014 நவம்பர்

No comments:

Post a Comment