Wednesday 1 November 2017

கரிசல்காட்டுச் சம்சாரி வாழ்க்கைச் சீரழிவுகள்: கி.ராஜநாராயணன் புனைகதைகளை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோல் மிஞ்சாது என்ற சொலவடை எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றாலும், நிலத்தில் உழுகிறவரைத் தொழுதுண்டு வாழ்கிற சூழலைக் கொண்டாட்டமாகக் குறிப்பிடுகிற திருக்குறளையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆயிரமாயிரமாண்டுகளாகக் கிராமத்தில் சம்சாரித்தனம் செய்து வாழ்ந்திட்ட இயற்கைச் சூழல் கடந்த அறுபதாண்டுகளில் ஆட்டங் கண்டுள்ளது. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் ஆறு, ஏரி, கண்மாய்ப் பாசனம் மூலம் நடைபெற்ற விவசாயமானது, நாட்டின் விடுதலைக்குப் பின்னர் பெரும் மாற்றமடைந்துள்ளது. நிலம், கண்மாய் பற்றி எதுவும் அறியாத வேளாண் துறை அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் விவசாய மேம்பாட்டிற்கென வகுத்த திட்டங்கள், விவசாயிகளிடம் போய்ச் சேரவில்லை. அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த செய்கிற முயற்சிகள், பொதுவாக விவசாயிகளுக்குச் சார்பாக இல்லை. குடி மராமத்து என்ற பெயரில் பராம்பரியமாகச் செய்த நீர் மேலாண்மை கைவிடப்பட்டபோது, கிணறுகள் வெட்டப்பட்டன. இன்று ஆழ்குழாய்க் கிணறுகளை நம்பி வாழ்கிற நெருக்கடியான சூழலில் விவசாயிகள் சிக்கியுள்ளனர். பசுமைப் புரட்சி என்ற பெயரில் அறிமுகமான வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லியான நச்சுப் பொருட்கள் தமிழகத்து விவசாயத்தை மெல்ல அழித்துக்கொண்டிருக்கின்றன. பன்னாட்டு உரக் கம்பெனிகள், பூச்சிக்கொல்லி தயாரிப்புத் தொழிற்சாலைகள், மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தயாரிக்கிற ஆராய்ச்சி நிறுவனங்கள் எனத் தமிழகத்து விவசாயத்தைத் தீர்மானிக்கிற கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ள சம்சாரிகள் மீளவியலாத நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இத்தகு சூழலில் கி.ராஜநாராயணன் கிராமத்து வாழ்க்கையை முன்னிறுத்தி எழுதியுள்ள கதைகளை மறுவாசிப்பிற்குள்ளாக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் விவசாயம் அழிவிற்குள்ளாகிட நேரிடும் என முன்அறிவிப்புச் செய்யும்வகையில் 1950களில் புனைகதைகள் எழுதியுள்ள கி.ராஜநாராயணனின் தொலைநோக்குப் பார்வை, வியப்பளிக்கிறது. அவர் கரிசல் பூமியை முன்வைத்து விவரித்துள்ள கதைகள், ஒருவகையில் தீர்க்கதரிசனம். வானம் பார்த்த பூமியான கரிசல் மண்ணில் சம்சாரிகள் படுகிற பாடுகளைச் சொல்கிற கி.ரா.வின் கதைகள், அடிப்படையில் இனவரைவியல் தன்மையுடையன. கரிசல் நிலவெளியில் கிளைத்தெழுகிற படைப்புகளுக்குச் சொந்தக்காரரான முன்னத்தி ஏர் கி.ராஜநாராயணனின் 95வது அகவை நிறைவைக் கொண்டாடும்வகையில், அவருடைய சிறுகதைகளில் வெளிப்பட்டுள்ள கரிசல் சம்சாரிகளின் சீரழிவுகளைப் பற்றிய பதிவுக.ள் பண்டைய நாட்டார் மரபின் தொடர்ச்சியில் கதைசொல்லியாகியுள்ள கி.ரா. சொல்கிற கதைகள் இயல்பிலே மண்ணின் நெடியடிப்பவை. கி.ரா. தான் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்த கரிசல் பூமியில் கண்ட காட்சிகளை அழகியல்தன்மையுடன் விவரிப்பதன் மூலம், அந்தச் சமூகத்தின் வரலாறும் மதிப்பீடுகளும் கதைகளில் இடம் பெற்றுள்ளன. கி.ரா. தான் சார்ந்த தெலுங்கு பேசுகிற மக்களின் பண்பாட்டு அடையாளத்தைப் புனைவாக்கும்போது, இனவரைவியல் தன்மைக்கு முக்கியத்துவம் தந்துள்ளார். அவருடைய கதையாடல் மொழியும் விவரிப்பும் அழகியல் தோய்ந்துள்ளன. கி.ரா. புனைவாக்கத்தில் தான் சார்ந்த இனக்குழுவின் எழுத்து, சமூகத்தின் நினைவிலி எழுத்து, கரிசல் பூமியின் எழுத்து என விவரிக்கும்போது, அவர் மற்றமையாகி விடுகிறார். மரபான மொழியில் ஒருவிதமான பகடியை முன்னிறுத்துகிற கி.ரா. வின் சிறுகதைகள், அன்றாட வாழ்க்கையின் நல்லதும் கெட்டதும் குறித்து நுட்பமான கேள்விகளை எழுப்புகின்றன. கிராமம் என்ற அமைப்பு ஒருவகையில் வெளிப்படையாகவும் அதேவேளையில் மூடுண்டதாகவும் இருக்கிறது. எல்லோரும் அறிந்திட்ட கிராமத்து வெளிக்கு அப்பால், யாருக்கும் புலப்படாத ரகசியங்களைப் பொதிந்திருக்கிற கிராமத்துச் சம்பவங்களை எழுத்தாக்குகிற கிரா.வின் முயற்சி, தனித்துவமானது. கரிசல் மண்ணையும் மக்களையும் நேசிக்கிற கி.ரா. தொடர்ந்து எழுதிய புனைவுகள் மண்ணின் குரலாக வெளிப்பட்டுள்ளன. வெறுமனே தகவல்களைத் தொகுத்து வட்டார எழுத்து என்று உருவாக்குவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. சராசரியான கிராமிய வாழ்க்கையில் இப்படியாகத்தான் மனிதர்கள் வாழ்ந்தனர் எனக் காட்சிப்படுத்துகிற கி.ரா.வின் எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை; ஒப்பீடு அற்றவை. கரிசல் மண்ணுக்கெனத் தனித்த அடையாளம் இருக்கிறது என்று கண்டறிந்திட்ட கி.ரா.வின் புனைகதைகள், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதிய போக்கினுக்கு வழி வகுத்துள்ளன. விவசாயத்தையே நம்பி வாழ்ந்த சம்சாரிகள், பெண்கள், குழந்தைகள், ஆதரவற்றோர், மனப்பிறழ்வாளர்கள், விளிம்புநிலையினர் சிறிய கடைக்காரர்கள் எனக் கி.ரா. சித்திரிக்கிற மனிதர்கள், அன்றாட வாழ்க்கையினைத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். பொருளியல் வளமற்ற சூழலினால் வறுமை விடாமல் துரத்தி வந்தாலும், கௌரவமாக வாழ்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கி.ரா. எழுதியுள்ள தொடக்ககாலக் கதைகளில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த நுண்ணரசியல் பிரச்சினைகள் கதைக் களன்களாகியுள்ளன. மார்க்சிய சித்தாந்தத்தின் மீது இளம் வயது முதலாக ஈடுபாடுகொண்ட கி.ரா. அன்றாட கிராமத்து வாழ்க்கையில் சம்சாரிகள் எதிர்கொண்ட சிக்கல்களை அணுகுவதிலும் படைப்புகளாகச் சித்திரிப்பதிலும் அரசியல் நோக்குடன் செயல்பட்டுள்ளார். எல்லாம் தலையெழுத்து, நேரம் சரியில்லை என்று கிராமத்து சம்சாரிகள் புலம்புவதற்கு மாற்றாக அவர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளுக்கான காரணங்களை அரசியல்ரீதியில் புனைகதைகளில் கி.ரா. அம்பலப்படுத்தியுள்ளார். ஐம்பதுகளின் பிற்பகுதியில் சரஸ்வதி பத்திரிகையில் பிரசுரமான கி.ரா.வின் மாயமான் (1958) கதை, இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடங்கி இன்றைய அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்களின் ஓட்டாண்டித்தனம் வெளிப்படையானது. விவசாயம் நலிவடைந்ததால் கூலி விவசாயிகளும் கொல்லர், தச்சர் போன்ற கைவினைஞர்களும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்குப் போய்விட்டனர். நான்கைந்து ஏக்கர் நிலத்தை வைத்துச் சாகுபடி செய்து பருத்தி, கம்பு, மிளகாய், கேழ்வரகு விளைவித்த கரிசல் காட்டு சம்சாரிகள், விவசாயம் கட்டுபடியாகாத காரணத்தினால், நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டனர். அருமையாகச் சாகுபடி செய்யக்கூடிய வளமான கரிசல் நிலத்தில் தீப்பெட்டி ஆபீஸ்களும் வெடி மருந்து தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. இத்தகைய நிலத்தை ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் மலிவான விலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தருவதற்கு அரசாங்கம் முயலுகிறது. விவசாயம் செய்தால் நஷ்டம் என்ற சூழலை ஏற்படுத்தியதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு கணிசமானது. பன்னாட்டுக் கம்பெனிகளின் கையாளாகச் செயல்படுகிற அரசாங்கத்தின் கபட வேடத்தைக் கி.ரா. மாயமான் எனச் சுட்டுகிறாரா? யோசிக்க வேண்டியுள்ளது. கரிசல் மண்ணில் நாலரை ஏக்கரில் புஞ்சை வேளாண்மை செய்து, அதன்மூலம் கிடைக்கிற தானியத்தை உணவிற்கும், கிராமத்தில் வைத்திருக்கிற சின்னக் கடையின் மூலம் கிடைக்கிற வருவாயில் குடும்பச் செலவுகளையும் சரிக்கட்டுகிற அப்பாவு செட்டியாரின் வாழ்க்கை எளிமையானது; கௌரவமானது அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட கிணறு வெட்ட அரசாங்கம் இலவசமாகத் தருகிற ரூ.400/- என்ற விளம்பரம், மாயமானாக மாறியதுதான் கதை. அரசாங்கம் கிணறு வெட்டுவதற்கு இரண்டாயிரம் ரூபாய் கடனாகத் தந்து, அதைப் பத்து வருடத்திற்குள் திருப்பிக் கட்டலாம் எனச் செட்டியாரின் தந்தை சொல்வதுதான் சரியானது. சராசரி கிராமத்துச் சம்சாரிக்குத் தெரிந்த விஷயம் கூடத் தெரியாத அதிகாரிதான் இலவசத் திட்டத்தை வகுத்துள்ளார். புஞ்சையில் தோட்டம் போடலாம் என்று ஆசைப்படுகிற செட்டியார் கிராமத்து அதிகாரிகள், தாலுகா அலுவலகத்தினரைச் சரிக்கட்டுவதில் ஐம்பது ரூபாய் செலவழித்ததுடன் நடையாய் நடக்கிறார். கடைசியில் அவர் கைக்குக் கிடைத்தது ரூபாய் முந்நூறுதான். அரசாங்கம் அறிவிக்கிற இலவசத் திட்டங்களில் கணிசமான தொகையானது, இன்றளவும் ஊழலில் திளைத்திருக்கிற அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்குத்தான் போய்ச் சேர்கிறது. அந்தப் பணம் போதாமல் நாயக்கரிடம் நூறுக்கணக்கில் கடன் வாக்கி வெட்டிய கிணற்றில் பெரிய அளவில் தண்ணீர் ஊற்றெடுக்கவில்லை. விவசாயத்திற்கான செலவீனம் பெருகியதால் நாயக்கரிடம் வாங்கிய கடனும் வட்டியும் அதிகமாகின. அந்த வருடம் மழையும் சரியாகப் பொழியவில்லை. மகசூல் சாவியாகிப் போனது. வட்டி கட்ட முடியாமல் மனைவியின் நகைகளை விற்ற செட்டியார், கடைசியில் அசலுக்காக நிலத்தையும் வீட்டையும் நாயக்கருக்கு எழுதிக் கொடுத்துவிட்டுப் பஞ்சம் பிழைப்பதற்காகத் தஞ்சாவூருக்கு ரயிலேறினார். அரசாங்கம் போட்ட திட்டம், கிராமத்தில் கண்ணியமாக வாழ்ந்திட்ட சிறு விவசாயின் வாழ்க்கையைச் சிதைத்து ஓட்டாண்டியாக்கி விட்டது எனக் கி.ரா. சொல்கிற கதை, அழுத்தமான குரலில் கரிசல் சம்சாரியின் துயரத்தைப் பதிவாக்கியுள்ளது. விவசாயத்தின் யதார்த்த நிலையை அறிந்திடாமல், அப்பாவு செட்டியார் இலவசமாகக் கிடைத்த சிறிதளவு பணத்தினால் கிணறு தோண்டிட விரும்பியதனால் அடைந்த இழப்புகள், மாயமானைப் பிடித்திட விரும்பிய சீதைக்கு ஏற்பட்ட துயரங்கள் போன்றன. இலவசத் திட்டத்தின் மறுபக்கத்தினைக் கி.ரா. அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளார். மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசியுடன் இலவச கிரைண்டர், மிக்சி, தொலைக்காட்சி பெட்டி வழங்குவதுடன் வருடத்திற்கு 100 நாட்கள் வேலைத்திட்டம் என ஒரு தலைமுறையைச் சார்ந்த தமிழகத்து இளைய தலைமுறையினர் உழைப்பிலிருந்து அந்நியப்பட்டுள்ளனர். இன்று கிராமத்தில் வயல் வேலை செய்வதைக் கேவலமாகக் கருதுகிறவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கிறது. எந்தவொரு சமூகம் உழைப்பிலிருந்து விலகுகிறதோ, அது காலப்போக்கில் சிதலமாகிடும் என்ற சூழலில், தமிழர்களின் வளமான எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையை ஊகித்தறிந்து, எதிர்காலத்தில் தமிழகத்துச் சம்சாரிக்கு ஏற்படலாம் என 1958 இல் மாயமான் கதை சொன்ன கி.ரா. ஒருவகையில் தீர்க்கதரிசி. காலங்காலமாக கமலையினால் நீர் இறைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த ராமசாமி நாயக்கர், இரண்டாயிரம் ரூபாய் செலவில் பம்புசெட் நிறுவி கரண்டு இணைப்பு வாங்கிய பின்னர் எதிர்கொண்ட பிரச்சினைகள், கரண்டு(1962) கதையாகியுள்ளன. மின்சார விநியோகம் ஷிப்ட் முறையில் ஒரு வாரம் மத்தியானம் வரையிலும் அடுத்த வாரம் மத்தியானத்திற்கு மேலும் நடைபெறுகிறது. விதைக்கப்பட்ட சோளம் முளைக்கட்டிட இன்னும் தண்ணீர் தேவை என்ற நிலையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைகிற சம்சாரியின் வேதனையை எந்த அதிகாரி பொருட்படுத்தப் போகிறார். பம்ப்ஷெட்டை ஓட்டினாலும் ஓட்டாவிட்டாலும் வருடத்திற்கு ரூ.160/- கட்ட வேண்டும். ஆனால் எப்படி ஓட்டினாலும் அறுபது ரூபாய்க்கு மேல் ஓட்ட முடியாது. மாதாமாதம் கரண்டு பில்லுக்கான தொகையைக் கட்டுவதற்காகக் கிராமத்திலிருந்து கோவில்பட்டிக்குப் போக வேண்டும். அங்கேயும் பணத்தை வசூலிக்கிற அலுவலர் செய்கிற நொம்பலம் வேறு. ‘நாள் முழுவதும் கரண்ட் வேண்டும். சோளம் முளைக்கட்ட தற்காலிகமாவது நாள்பூராவும் கரண்ட் வேண்டும்’ என ராமசாமி நாயக்கர் மனு எழுதி, மின் துறை அதிகாரிகளைப் பார்த்துத் தரும்போது அவர் அடைந்த அனுபவங்கள் கசப்பானவை. சமூக இருப்பின் ஆதாரமான தானியத்தை உற்பத்தி செய்கிற மிகவும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிற சம்சாரியைக் கன்ஸ்யூமராக்கியதுடன், அற்ப மானவர்களாகக் கருதி அலட்சியப்படுத்துகிற நிலைமையில் இன்றுவரையிலும் மாற்றமில்லை. நகரத்தில் திரையரங்குகளில் மூன்று காட்சிகள் திரைப்படங்கள், ரைஸ்மில்கள், பகல்வேளையிலும் மின் விளக்குகள் ஒளிர்ந்திடும் கடைகள், இரவினில் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் என எங்கும் பிரகாசமாக இருந்திட, சம்சாரியான ராமசாமி நாயக்கர் மன இருட்டில் புழுங்கித் தவித்தார் எனக் கி.ரா. சொல்லியுள்ள கதை, இன்றைக்கும் தொடர்கிறது. டிரான்ஸ்பார்மரை இயக்கி மின்சாரத்தைப் பெறலாம் என்று யோசித்த நாயக்கர், செய்ய வேண்டிய காரியம் சக விவசாயிகளை நோக்கி நடப்பதுதான் என்ற முடிவினுக்கு வருகிறார். தனிமனிதனாகப் போராடுவதைவிட சம்சாரிகள் ஒன்று சேர்ந்து போராடினால், தீர்வு கிடைக்குமென்ற விஷயம் கதையில் சூட்சுமாகச் சொல்லப்பட்டுள்ளது. சம்சாரிகளின் நலன் குறித்து அக்கறையற்ற அரசு இயந்திரத்தின் போக்கினையும், முதலாளிகளுக்குச் சார்பான திட்டமிடுதலையும் கரண்டு கதையின் மூலம் பதிவாக்கியுள்ள கி.ரா.வின் சமூக அக்கறை அழுத்தமானது. போத்திநாயுடுவுக்கு இன்னும் விடியவில்லை எனத் தொடங்கும் விடிவு(1980) கதை, கரிசல் காட்டுச் சம்சாரித்தனத்தின் அவலத்தைப் பதிவாக்கியுள்ளது. கரிசல் காட்டில் கரண்டு கட் வர்றதுக்கும் பருத்தி வெடிக்கிறதுக்கும் சரியாக இருக்கும்போது, விளைச்சலைக் கொள்முதல் செய்கையில் விலையைக் குறைப்பது சாதாரணமாக நடைபெறுகிறது. பருத்தி, அவுரி என எந்தவொரு வேளாண்மைப் பயிருக்கும் விலையை நிர்ணயம் பண்ணுற உரிமை மில்லுக்காரனுக்கும் வியாபாரிக்கும்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் சம்சாரிகளைப் பற்றி அக்கறை இல்லாமல், முதலாளிகளுக்கு அடிமையாகி விட்டனர் என நினைக்கிற நாயுடுவின் எண்ணம், சரியானது. ஊருக்குள் இருந்த விவசாயக் கூலிகள் தீப்பெட்டி போடப் போய்விட்டதால், களையெடுப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. ‘’ புஞ்சைக் காடுகள் விதைக்காமலே தரிசுகள் விழுந்து போகிறது. வருஷா வருஷம் இந்த தரிசுகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. லட்சக்கணக்கான கரிசல்காட்டு விவசாயிகளும் அவர்களது குடும்பங்களும் போண்டியாகிக்கொண்டு வருகிறார்கள். இந்த நெருக்கடி எந்த அரசியல்காரனின் கண்ணிலும் பட்டதாகத் தெரியலையே. அவன்களுக்கு வேண்டியதெல்லாம் ஓட்டு…’’ கி.ரா. எழுபதுகளின் இறுதியில் எழுதிய கதை இன்னமும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல். நடப்பில் இன்னும் வலுவாக நிலவுகிறது. ஏர் எழுபது எனப் பாடிய கம்பன் இப்பொழுது எதிரே வந்தால் சாட்டைக்கம்பால் அடி வாங்காமல் போகமாட்டான் எனச் சம்சாரியான நாயுடு பகடி செய்வது, ஒருவகையில் கதையை அழகியலுடன் வெளிப்படுத்துகிறது. விவசாயி யதார்த்ததில் படுகிற பாடுகள் நாளும் பெருகிடும்போது, கம்பன் விவசாயியைப் புகழ்ந்து பாடியது ஏமாற்று வேலை என்ற கருத்து, வெறுமனே வெறுப்பினால் விளைவு அல்ல. விடிவு என்பது கரிசல் காட்டு சம்சாரிக்கு ஒருபோதும் இல்லை என்பதுதான் கி.ரா. சொல்ல விரும்புவதா? மாவட்டக் கலெக்டருக்குப் பெண் தர மறுத்த பாரம்பரியமான விவசாயக் குடும்பமான கோனேரி செங்கன்னா இருநூறு நெய்க்கரிசல் பூமிக்குச் சொந்தக்காரர். சம்சாரிகள் புஞ்சையிலிருந்து தலைச்சுமையாகப் பருத்தியைத் தூக்கிச் சென்றபோது, தினமும் வண்டியில் பருத்தியைக் வீட்டிற்குக் கொண்டு வருகிற வளமையான குடும்பம். முன்னர் நான்கு ஏக்கர் நிலம் சொந்தமாக இல்லாத கலெக்டருக்கு எப்படி பெண் தருவது யோசித்த கோனேரியின் முப்பத்தோரு வயதான மூத்த பேரனுக்குப் பெண் தர யாரும் இன்று முன்வரவில்லை. ’’காத்துட்டுச் சம்பளமானாலும் கவர்மெண்டு சம்பளம் இருக்கணும்; மாசம் இருநூறு சம்பாதிக்கிற வாட்ச்மேனாக இருந்தாலும் சரி அவனுகளைக் கட்டத்தயார்’’ என்ற நிலையில் சம்சாரியால் என்ன செய்ய முடியும்? ‘’ காப்படி அரிசி பொங்க; தின்னுட்டு லாந்தலா ஒரு சினிமாவோ நாடகமோ போக, நல்லாப் படுத்து எந்திரிக்க; ஒரு பிள்ளையோ ரண்டோ பெத்துக்கிட்டு குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கிட: இப்படி ஆயிட்டது பிழைப்பு’’. இத்தகைய சூழலில் ’’சம்சாரிகளுக்கு இனிமேல் நம்ப பொட்டைப்பிள்ளைகள் வாக்கப்படாது; வந்து கேக்காதீங்க’’ என்று பெண்களைப் பெற்ற தகப்பன்மார்கள் கோனேரியிடம் சொன்னது வெறுமனே நுகர்பொருள் சம்பந்தபட்ட விஷயம் அல்ல. முன்னர் தாட்டியமாகக் கரிசல் காட்டில் வாழ்ந்த சம்சாரியின் நிலையானது, இன்று கொத்தைப் பருத்தியிலும் கேவலமாகப் போய்விட்டது என்ற கோனேரியின் வேதனையான சிரிப்பினுக்குப் பின்னால் பொதிந்திருக்கிறது பேரவலம். பாரம்பரியமான சம்சாரிக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த 31 வயதான முதிர்இளைஞனுக்கு யாரும் பெண் தர முன் வராத சூழல்தான், சம்சாரி வாழ்க்கை சீரழிந்துள்ளதன் காத்திரமான வெளிப்பாடு. முன்னர் சமூக மதிப்பீட்டில் உயர்ந்திருந்த சம்சாரியின் நிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம், அதல பாதாள வீழ்ச்சியாகும். மனித இருப்பின் ஆதாரமான விவசாயத்தைப் புறக்கணிக்கிற சூழல் உருவானதற்குக் காரணத்தைத் தேடுகிற கொத்தைப் பருத்தி(1982) புனைகதை, அவல நாடகமாக வெளிப்பட்டுள்ளது.. கரிசல் நிலத்தில் அவுரிப் பயிரை விதைத்துவிட்டுக் களையெடுக்கப் போதுமான ஆட்கள் இல்லாமல் சிரமப்பட்டு, ஒருவழியாக அறுவடை செய்த அவுரிக்கு விலையில்லாமல் போனதால், தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிற தாசரி நாயக்கர் பற்றிய பதிவுதான் அவுரி(1982) கதை. ஆட்சியாளர்கள் சம்சாரிகளைக் கைவிட்டதைக் குறித்த கி.ரா.வின் ஆதங்கம்தான் கதையாடலின் மையம். வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் அவுரியினால் கிடைக்கிற அந்நியச் செலவாணியினால் ஆதாயமடைகிற நடுவண் அரசு, அவுரியை விளவிக்கிற சம்சாரிக்கு ஏற்படுகிற நஷ்டம் குறித்து ஒருபோதும் அக்கறை கொள்ளவில்லை. ஒரு காலத்தில் பக்கா படி நூறு ரூபாய்க்கு விற்ற அவுரியை இன்று ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும் குறைவாகக் கேட்கிற வியாபாரிகளின் கபடமான தந்திரத்தினால் ஏற்படுகிற இழப்பினை எப்படி ஈடு செய்வது? நாயக்கர், காய் அறுவடை செய்த கூலிக்குக்கூட கட்டுபிடியாகாத நிலையில், பொன்னரிவுக் காய்களைக் குப்பைக்குழியில் போடுகிறார். கதைசொல்லியான கி.ரா. கதைகளின் வழியாக எழுப்புகிற சம்சாரியின் வாழ்க்கை குறித்த கேள்விகள், இன்றுவரை தொடர்வது அவலத்தின் உச்சமாகும். ஊர் மடத்தில் யாரோ புது ஆள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, அவனைக் கூட்டிட்டுப் போய் தனது வீட்டு வேலைக்கு வைத்துக்கொண்ட சுப்பா நாயுண்டு, அவனுக்குச் சம்பளம் என எதுவும் தரவில்லை. ஒருவகையில் அவனுடைய உழைப்பைச் சுரண்டுகிற நாயுண்டுவின் மறுபக்கம் கசப்பானது. அவருடைய வயலில் விளைந்த பருத்தியை வாங்கிய வியாபாரி செல்லையா நாயக்கர், வெங்கடாசலபதி முன்னிற்க லாபம் என நிறுக்கிறார். அந்த வருடம் பஞ்சு விலை இறங்கியதால், செல்லையாவினால் உடனடியாகச் சம்சாரிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் வெங்கிடாசலபதி மில் நிர்வாகம் புதிதாக ஜப்பான் மிஷின்களை நிறுவிப் புதியதாகப் பெரிய மில்லைத் தொடங்குகிறது. பருத்தியை உற்பத்தி செயத சம்சாரியும் வாங்கி விற்கிற வியாபாரியும் கஷ்டப்படும்போது, ஆலை முதலாளியின் லாபம் மட்டும் கோடிக்கணக்கில் அதிகரிப்பதன் சூட்சுமம் என்னவென்ற கேள்வியை முன்வைக்கிறது தாவைப் பார்த்து(1984) புனைகதை. கார்ப்பரேட்டுகளின் மூலதன ஆதிக்கம் எதிர்காலத்தில் வலுவான நிலையில் ஆதிக்கம் செலுத்தப் போகிறது என்பதுதான் கி.ரா. புனைவின் வழியாகச் சொல்ல விரும்பியதா? சம்சாரித்தனம் சீரழிந்த சூழலில் கரிசல் மண்ணில் வாழ்வது என்பது ஒருவகையில் சவால்தான். கரிசல் கிராமத்தின் முகம் முழுக்க மாறிவிட்ட சூழலைச் சித்திரிக்கிற ஒரு செய்தி(1982) கதையானது, வளமான வண்டல் பகுதிகளான வைகை, காவிரி பாய்ந்திடும் பிரேதசங்களிலும் இன்று நடைமுறையாகி விட்டது. அதிகாலையில் கிராமத்திற்குள் நுழைந்திடும் பஸ்கள் பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு நகரத்திற்குப் போகிறது. அங்கு நாள் முழுக்கத் தீப்பெட்டி ஆபிஸில் வேலை. விட்டில் இருக்கிற பெண்களும் தீப்பெட்டியை ஒட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போன இளைஞர்களில் மிச்சமிருப்பவர்களும் துபாய், குவைத் எனக் கனவு காண்கின்றனர். தச்சாசாரிகளும் கொல்லாசாரிகளும் டவுன் பஸ் பிடித்து நகருக்குப் போகிறார்கள். அப்படியே கொத்தனார்களும் சித்தாள் பெண்களும் நகரத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். எருமைகளை வளர்த்துப் பாலைக் கூட்டுறவு பால் பண்ணை அல்லது தனியார் பால் டிப்போ மூலம் நகரத்திற்கு அனுப்பும் வேலை மும்மரமாக நடைபெறுகிறது. என்றாலும் இன்னும் சில பைத்தியக்கார விவசாயிகள் களையெடுக்க ஆள் கிடைக்க மாட்டார்களா எனத் தேடி அலைகின்றனர். ’இன்னும் சில வருஷங்களில் இந்தக் கரிசல் காடு பூராவும் நிஜமாகவே ஒரு வனம்போல் ஆகிவிடும்’ எனக் கதைசொல்லி விருப்பு வெறுப்பற்றுச் சொல்கிற கதைக்குப் பின்னால், மாறிப்போன சமூகத்தின் வலி பதிவாகியுள்ளது. சம்சாரிகள் உற்சாகத்துடன் ஈடுபட்ட விவசாயமும், நிலத்தில் உழைத்த கூலி விவசாயிகளும், துணையாக இருந்த கைவினைஞர்களும் என நிலத்துடன் தொடர்புடைய வாழ்க்கையை, ஒட்டுமொத்தமாகச் சீரழிவிற்குள்ளாக்கிய அரசியல், வலுவானது. அதேவேளையில் குழந்தைகள், பெண்களின் கொண்டாட்டமான உலகத்தைக் கையில் பிசுபிசுப்பான பசையுடன் எப்பொழுதும் தீப்பெட்டி ஒட்டுதல் எனச் சுருக்கிவிட்ட சூழல், வெக்கையானது. கரிசல் நிலத்தின் மீது காலங்காலமாகக் கிராமத்தினருக்கு இருந்த உரிமையைப் பறிப்பதுடன், அதிகார மையமாக வளர்ச்சியடைந்துள்ள அரசானது, கிராமத்து வாழ்க்கை முறையையும் மண்ணையும் நீரையும் இயற்கைச் சூழலையும் சீரழிவிற்குள்ளாக்கியுள்ளதைக் கதைகளாக்கியுள்ள கி.ரா.வின் எதிர் கதையாடல், தனித்துவமானது. விளிம்பு நிலையினரின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், அவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்களையும் சொல்வது மட்டும் கி.ரா.வின் நோக்கம் அல்ல. ஐம்பதுகள் தொடங்கி கி.ரா. தொடர்ந்து கவனித்துவந்த கரிசல் பூமியில் சீரழிவிற்குள்ளான சம்சாரித்தனம் குறித்து 1958 முதல் 1982 வரையிலும் தொடர்ந்து எழுதியுள்ள எழுத்துகள், ஒப்பனை அற்றவை. கி.ரா. தான் பிறந்து வளர்ந்த கிராமத்துச் சூழலையும் அங்கு வாழ்ந்த மனிதர்கள், சக உயிரினங்களைத் தள்ளி நின்று ரசித்ததுள்ளார், எல்லாவற்றையும் உற்று நோக்குகிற இயல்புடைய கி.ரா. தான் கண்டறிந்த விஷயங்களைச் சுவராசியமாகச் சொல்வது கதைகளில் நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது. ஐம்பதுகளில் கரிசல் பூமியில் நிகழ்ந்த மாற்றங்களின் அளவு சிறியதாக இருப்பினும், படைப்பாளி என்ற நிலையில் நடப்பு வாழ்க்கை குறித்த கி.ரா.வின் கண்டுபிடிப்புகள் தனித்துவமானவை. ஒருவகையில் கி.ரா. சமூக விஞ்ஞானி போலச் செயற்பட்டு, விவசாயச் சூழலையும் சம்சாரிகளின் கையறு நிலையையும் நுட்பமாகக் கண்டறிந்துள்ளார். இதனால் சம்சாரிகளின் வாழ்க்கை குறித்த பல்வேறு சம்பவங்கள் சிறப்பான கதைகளாக வடிவெடுத்துள்ளன. இன்று வெங்காயம், துவரம் பருப்பு, அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகிற சூழல் ஏற்பட்டுள்ளது. கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கிற பல்லாரி வெங்காயம், திடீரென நூறு ரூபாய்க்கு விற்கிற நிலை ஏற்பட்டதற்குக் காரணம், இணையத்தில் ஊக வணிகம் செய்கிற தரகு அதிகார வர்க்கச் சூதாடிகள் என்று சொல்வதுதான் கையலாகாத இந்திய அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. இன்னொருபுறம் விவசாயத்தையே நம்பி இருக்கிற சிறு விவசாயிகளின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையைக் கண்டும் காணாமல் இருக்கிற அரசாங்கத்தின் செயல்பாட்டினால் நசித்துப்போனது மரபான சம்சாரித்தனம் மட்டுமல்ல, பாரம்பரியமாகச் சூழலியலுடன் இயைந்து வாழ்ந்த தமிழகத்தின் திணைசார் வாழ்க்கையும்தான். உதவிய நூல் கி.ராஜநாராயணன் கதைகள். தஞ்சாவூர்: அன்னம், 2015.

No comments:

Post a Comment