Wednesday 1 November 2017

மலையகத் தமிழரின் புலம்பெயர்தலின் வலி : தமிழ்மகனின் வனசாட்சி நாவலை முன்வைத்து ந.முருகேசபாண்டியன் அறுபதுகளில்கூட மதுரை வட்டாரத்தில் தாடியும் மீசையுமாகச் சோர்ந்த முகத்துடன் வறுமையான தோற்றத்துடன் யாராவது எதிர்பட்டால், ‘என்ன கண்டிக்குப்போன ஆளு மாதிரி இருக்கீங்க’ என்று சொல்வது வழக்கம். அன்றைய காலகட்டத்தில் இலங்கைக்குப் போய் ஏதாவது வேலை செய்து, பணம் சம்பாரிப்பதுவிட்டுத் திரும்புவது, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவலாகக் காணப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து இலங்கையிலுள்ள தலைமன்னார் நகருக்குச் செல்ல ராமேஸ்வரம் வரை ரயிலிலும், அங்கிருந்து கப்பலிலும் பயணம் செய்திட ரூ.10/-தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது. என்ற தகவல் இளைய தலைமுறையினர் அறியாததது. இலங்கைக்கும் தமிழகத்திற்குமான தொடர்புகள் இரண்டாயிரமாண்டுகளாகத் தொடர்கின்றன. இடையில் கடல் பிரிவை ஏற்படுத்தினாலும், தமிழகத்துத் தமிழர்களைப் பொருத்தவரையில், இலங்கையை நேச நாடாகவே கருதினர். தூத்துக்குடியில் இருந்து தோணிகள்மூலம் இலங்கைக்குச் சரக்குகளைக் கொண்டுசென்ற தமிழ் வியாபாரிகள், கொழும்பு மாநகரில் வளமாக வாழ்ந்தனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட நிலப்பகுதியில் பூர்விகக் குடிகளாக வாழ்ந்துவந்த தமிழர்களின் நிலை, செல்வாக்குடன் விளங்கியது. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்திற்குப் பின்னர் தேயிலை, ரப்பர் போன்ற பணப்பயிர்களை இலங்கையின் மலையகப் பகுதியில் விவசாயம் செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட விளிம்புநிலையினரான தமிழர்களின் அவல வாழ்க்கை, துயரம் தோய்ந்தது. பொருளியல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் காரணமாகத் தமிழர்களிடையே வலுவாக நிலவிய பாகுபாடுகள் கவனத்திற்குரியன. சிறிய தீவான இலங்கையில் இன அடிப்படையில் பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கும், சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்களும் அதன் விளைவான ஆயுதப் போராட்டமும் அழுத்தமான வரலாற்றுப் பின்புலமுடையன. ஐந்தாறு தலைமுறைகளுக்கும் கூடுதலாகக் கடுமையாக உழைத்திட்ட மலையகத் தமிழர்களைக் கட்டாயமாக நாடு கடத்திய சிங்கள அரசாங்கத்தின் முயற்சியின் போது, தலை தூக்கிய இனஅடிப்படைவாதம், பின்னர் வலுவடைந்தது. சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி கணிசமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்ட பின்னரும், அங்கேயே தங்கி மலையகத்தி வாழ்கிறவர்களின் பொருளியல் நிலைமையும் பெரிய அளவில் வளமாக இல்லை. கடந்த இருநூறு ஆண்டு வரலாற்றுப் பின்புலத்தில், இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் போய் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்கிற தமிழர்கள் குறித்த பதிவுகள், படைப்புகளாகப் பதிவாகியுள்ளன. துன்பக்கேணி என உருவகமாக மலையகத் தமிழர்களின் சீரழிவான வாழ்க்கையை எழுதியுள்ள புதுமைப்பித்தன் ’முன்னத்தி ஏர்’ ஆவார். பொதுவாக மலையகத் தமிழரின் வாழ்க்கை குறித்து ஆய்வுகளும் படைப்புகளும் கணிசமான எண்ணிக்கையில் தமிழில் எழுதப்படாமைக்கான காரணங்கள் ஆய்விற்குரியன. இத்தகு சூழலில் தமிழ் மகன் எழுதிய வனசாட்சி (2011) நாவல் சித்திரித்துள்ள மலையகத் தமிழரின் வரலாற்றுச் சம்பவங்களும் கதைகளும் தனித்துவமானவை. முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லை, என்ற தொல்காப்பியரின் பதிவுடன் திரை கடலோடியும் திரவியம் தேடு என்ற சொலவடையைப் பொருத்திக் காண வேண்டியுள்ளது. சோழரின் ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் இலங்கை உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடற்படை வலுவாக இருந்தது. மும்மடிச் சோழமண்டலம் என்பதில் இலங்கை தீவும் உள்ளடங்கியதுதான். கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரையில் ஏற்பட்ட டில்லி சூல்தானின் ஆட்சியைத் தொடங்கி, தெலுங்கர், மராட்டியர், போர்த்துகீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என அறுநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவிய வேற்றுமொழியினரின் ஆட்சியதிகாரத்தில், அடிப்படைத் தொழிலான வேளாண்மை நலிவடைந்தது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற சூழலில்தான் உழுதவன் கணக்குப் பார்த்தால் உழவுக்கோல் மிஞ்சாது என்ற பழமொழி தோன்றியிருக்க வேண்டும். பாளையக்காரர், ஜமீந்தாரின் ஆட்சியில், ஈவிரக்கமற்றவாறு வசூலிக்கப்பட்ட வரியினால் சிறு விவசாயிகள் கைவிடப்பட்ட சூழல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக மழை பொழியாமல், பஞ்சம் நிலவியபோது, நிலத்துடன் தொடர்புடைய உழைப்பாளர்களும், கைவினைஞர்களும் வறுமைக்குள்ளாயினர். அதேவேளையில் வைதிக சமயத்தின் மேலாதிக்கம் காரணமாகத் தீண்டாமையும் பால்ரீதியில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் அதிகரித்தன. நிலத்தில் பாரம்பரியமாக உழுது, பயிர் விளைவித்த பள்ளர் போன்ற உழைக்கும் மக்கள் தீண்டத்தகாதவரென ஒதுக்கப்பட்டனர். அன்றாட உணவிற்குக்கூட குடும்பத்துடன் சிரமப்பட்ட விளிம்புநிலையினர், தமிழகத்தில் நாளும் துயரப்படுவதைவிட, வேறு எங்காவாது சென்று வாழலாம் என்ற முடிவெடுத்துப் புலம்பெயரத் தொடங்கினர். செல்லும் இடத்திலாவது வயிறார உணவு உண்ணலாம் என்பது கப்பலேறியவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கும். கிராமத்தில் வாழ்ந்த எழுதப் படிக்க அறியாத தமிழர்கள் புலம்பெயர்ந்ததில், அன்றைய சாதியக் கொடூரமும், வறுமையும் முக்கியக் காரணிகளாகும். ஐரோப்பியரின் காலனிய நாடுகளில் கடுமையான உடலுழைப்புச் செய்வதற்காக மந்தைகளாக ஓட்டிச் செல்லப்பட்ட தமிழர்களில் பெரும்பான்மையினர் தலித்துகளும் இடைநிலைச் சாதியினரும்தான். சொந்த மண்ணில் நாயைவிடக் கேவலமாக நடத்தப்படுவதைவிட, கங்காணிகளின் பேச்சுகளை நம்பி, ஏதோ ஒரு நாட்டுக்குக் கப்பலேறிய தமிழர்கள், அங்கும் கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காடுகளை அழித்தல், காப்பி, தேயிலை, ரப்பர் எஸ்டேட் உருவாக்குதல், சாலைகள் போடுதல் போன்ற வேலைகளில் அடிமைகளைப் போல நடத்தப்பட்டனர். ஒருவகையில் கொத்தடிமைகளாகப் புலம்பெயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்துவிட்டு, மீண்டும் தமிழகம் வரலாம் என்ற நம்பிக்கையுடன்தான் பயணமாயினர். ஆனால் பெரும்பாலானோர் அந்த மண்ணிலே மடிந்து போயினர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் உலகமெங்கும் கூலிகளாகப் பயணமான தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள், சோகங்கள் காற்றில் மிதக்கின்றன. இலங்கைத் தீவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றைப் புனைவாக்கி நாவல் வடிவில் தந்துள்ள தந்துள்ள தமிழ்மகனின் படைப்பாக்க முயற்சி, குறிப்பிடத்தக்கது. கடந்த ஐம்பதாண்டுகளில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குக் கட்டாயமாகத் துரத்தப்பட்ட மலையகத் தமிழர்களைப் பற்றிப் பெரிய அளவில் பதிவுகள் வெளியாகாத சூழலில், வனசாட்சி நாவல், கடந்த காலத்தின் சாட்சியமாக விளங்குகிறது. இன்று தென்மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் குற்றேவல் செய்தும், கொடைக்கானல், ஊட்டி, கூடலூர் போன்ற மலைப் பிரேதசங்களில் உள்ள எஸ்டேட்டுகளில் வேலை செய்துகொண்டிருக்கிற மலையகத் தமிழர் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. தமிழகப் படைப்பாளர்களும் மலையகத் தமிழர் உள்ளிட்ட புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் கவனமற்று உள்ளனர். தமிழ்மகனின் வனசாட்சி நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரிய படகுகள் மூலம் இலங்கைக்குப் பயணமான தமிழகக் கிராமத்தினர் பற்றிய விவரிப்புடன் தொடங்குகிறது. இராமேஸ்வரம் அருகிலுள்ள மண்டபம் என்ற இடத்திலிருந்து கங்காணி வைத்தியின் ஆசை வார்த்தைகளை உண்மையென நம்பிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சீறுகிற கடலில் பயணிக்கின்றனர். இதுவரை கடலை நேரில் பார்க்காதவர்கள், திடீரெனப் படகில் இரவுவேளையில் பயணிப்பது, அவர்கள் மனதில் பீதியைக் கிளப்பியிருக்கும். இதுவரை சொந்தபந்தமென வாழ்ந்தவர்கள், பூர்வீகக் கிராமத்தைவிட்டுப் பிரிவது, மனதில் ஏக்கத்தையும் வலியையும் தவித்திருப்பார்கள். ஏதோவொரு நம்பிக்கையினால் இலங்கைக்குக் கிளம்புவது சாதாரணமானது அல்ல. இருப்பதைவிட எங்காவது சென்று வாழ்ந்திடலாம் என்ற விருப்பம்தான் அவர்களைப் புலம்பெயர்ந்திடத் தூண்டியிருக்க வேண்டும். இலங்கையின் கடற்கரையில் இறங்கியவுடன் கங்காணியின் அதிகாரக் குரல் ஓங்கி ஒலிக்கிறது. வெள்ளைச் சிப்பாய்கள் காவலுடன் கால்நடையாக அழைத்துச் செல்லப்படுகிறவர்கள், வழி முழுக்கத் துயரங்களை எதிர்கொள்கின்றனர். கிராமத்தினர், உடலில் உயிர் தங்கிடுவதற்காகத் தரப்படுகிற உணவை உண்டுவிட்டுக் குளிரிலும் கொட்டுகிற மழையிலும் நனைந்தவாறு மலையகத்தை நோக்கி நடக்கின்றனர். வளமான வாழ்க்கை காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் கிளம்பியவர்கள், காட்டு வழியில் கங்காணியின் அதிகாரத்தினுக்குக் கட்டுப்படுகின்றனர். சிறிய அளவில் உலகநாதன் கிளப்பிய முணுமுணுப்புக்கூட தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. கைக்குழந்தையுடன் வந்த கங்கம்மா நோயின் பாதிப்பினால், வழியிலே இறந்திட, பிணத்தை இரண்டடி ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, துயரத்துடன் நடக்கின்றனர். நடு ஆறு தோட்டம் என்று அழைக்கப்பட்ட தேயிலை எஸ்டேட்டில் சிறிய வீடுகளில் குடியேறியவர்கள், எஸ்டேட் வாழ்க்கையில் படுகிற பாடுகள் அளவற்றவை. இதுவரை மனிதர்களின் கரங்கள் தொட்டிராத காட்டை அழித்துத் தோட்டமாக்கியதில் ஆண்களும், தேயிலைக் கொழுந்து பறிப்பதில் பெண்களும் என அன்றாடம் கடுமையான உழைப்பில் ஈடுபடுகிற சூழலில், நாளை மற்றுமொரு நாளாகக் கழிகிறது. மலைநாட்டிற்குரிய கொட்டுகிற பனியிலும், அட்டைக் கடியிலும் வாடி வதங்குகிற சூழலில், பொருளியல் நிலையிலும் மாற்றம் எதுவுமில்லை. எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்தில் இளம்பெண் ரத்தினம், கங்காணியின் ஆலோசனையின்பேரில், எஸ்டேட்டின் உரிமையாளரான ஆங்கிலேயருடன் நிரந்தரமாகப் பாலுறவு வைத்துக்கொள்கிறாள். தமிழகத்தின் கிராமப்புறத்தில் நிலவிய கொடுமைகளுக்குப் பயந்து, இலங்கைத் தீவுக்குப் போனவர்களின் துயரம் வெவ்வேறு வழிகளில் தொடர்கிறது. காம்பெரா என அழைக்கப்படுகிற லைன் வீடுகளில் வசிக்கிறவர்கள் எப்பொழுதும் கைக்கும் வாய்க்கும் போதாத வருமானத்தில், கஷ்டப்பட, தோட்டத் துரைமார்களும் கங்காணிகளும் வளமான வாழ்க்கை வாழ்கின்றனர். இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசுகிறவர்களில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பிக் கூலி வேலைக்குப் போனது வெறுமனே வறுமை மட்டுமல்ல. சாதிய இழிவின் அடையாளத்தைத் தொலைதூரப் பிரேதசத்திற்குச் செல்வதன்மூலம் மறைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பியவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் என நாவலாசிரியர் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. சிறிய அளவில் முன் பணம் தந்து அழைத்து வரப்பட்டவர்களின் அபிப்ராயங்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லாத கங்காணிகள், சந்தையில் மாடுகளைக் கைமாற்றி விடுவதுபோல தோட்ட உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் என்பது, அன்றைய காலகட்டத்தில் மனித உயிர்கள் பற்றிய மதிப்பீட்டினை வெளிப்படுத்துகிறது. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாத சூழலில், பெரிய கங்காணி இதுவரை சம்பாதித்த பணத்துடன், தமிழக்திலுள்ள திருச்சி நகருக்குப் போய் செட்டில் ஆனார். திடீரெனத் துரை, மாரப்படைப்பால் மரண்மடைந்தவுடன், துரைசாணி சுமாரான விலைக்குத் தோட்டத்தைச் சில்லறை கங்காணியான வைத்திக்கு விற்றுவிட்டு லண்டனுக்குப் பயணமானார். ஆங்கிலேயரின் வசமிருந்த தேயிலை எஸ்டேட் தமிழனுக்கு உரிமையான பிறகும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாறம் எதுவுமில்லை. இந்தியாவில் இருந்து வந்த நடேசய்யரும் அவருடைய மனைவி மீனாட்சியும் தோட்டத்திற்குத் துணி விற்பது போல வந்து, தொழிலாளர்களைச் சம்மேளனத்தில் உறுப்பினர்களாக்க முயன்றனர் என்ற வரலாற்றுத் தகவல், நாவலில் இடம் பெற்றுள்ளது. ஓரளவு அரசியல் விழிப்புணர்வு பெற்றாலும், கல்வியறிவற்ற தோட்டத் தொழிலாளர் நிலைமை வழமை போலத் தொடர்ந்தது. 1931 ஆம் ஆண்டை ஹட்டன் தொகுதியில் பெரி.சுந்தரம் போட்டியின்றி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தோட்டத் தொழிலாளர் அமைப்பு வலுவானது. ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையான இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழரசுக் கட்சியின் துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வந்தேறிகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை என்ற சட்டத்தை இயற்றி அமல்படுத்திய பிரதமர் டி.எஸ். சேன் நாயகாவின் முடிவு, இலஙகையின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. தமிழகத்தில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கையின் மலையகப் பகுதியில் குடியேறி, மண்ணுடன் போராடிய தமிழர்களின் வாழ்க்கை இன்னும் சிரமத்திற்குள்ளானது. கள்ளத்தோணி, பனங்கொட்டை, வடக்கத்திக்காரன், தோட்டத்துக்காரன் போன்ற பெயர்களால் இழிவாகக் குறிப்பிடப்படுகிற மலையகத் தமிழர்கள், வெளி உலகம் அறியாமல், மலைத் தோட்டத்திற்குள்ளேயே வாழ்கின்றனர். மலேரியா காய்ச்சல், கொசுக்கடி, குளிர் என உடல்நலப் பாதிப்பிற்குள்ளானாலும், உழைப்பைத் தவிர வேறு எதுவும் அறியாத அப்பாவிகளாக இருக்கின்றனர். தொண்டைமான் தலைமையிலான தொழிலாளர் அமைப்பினாலும் பெரிய அளவில் விடிவு எதுவுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமின்றி பல தோட்டங்களுக்கும் உரிமையாளரான தொண்டைமான், மலையகத் தமிழர்கள் பற்றிய ஆளும் வர்க்கத்தினரின் முடிவுகளுக்கு உடன்படுகிறார். ’’இந்த மொத்த மலையிலும் பத்து லட்சம் பேர் இருக்கோம். கேட்டியா? அதில் பாதிப்பேர் இங்கன கெடந்து சாகணும். பாதிப்பேர் இந்தியா போய்ச் சாகணும்னு இரண்டு ராஜாங்கமும் சேர்ந்து முடிவு பண்ணி வெச்சுப்புட்டாங்க’’ எனக் காசி சொல்வது அரசியல் பின்புலமுடையது. நூறாண்டுகளுக்கும் கூடுதலாக மலையகத்தில் தங்கியிருந்து, தேயிலையை உற்பத்திசெய்து, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்திய தோட்டத் தொழிலாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல், சரிபாதியான எண்ணிக்கையினரான ஐந்து லட்சம் பேர்கள் உடனடியாகக் கிளம்பிட வேண்டுமென இலங்கை அரசின் உத்திரவு போட்டது, பாசிசமாகும். தோட்டத்தினரின் நினைவுகளில் இந்தியாவிலுள்ள தமிழகம் இருந்தாலும், பல்லாண்டுகள் பிரிந்திருந்த பின்னர், மீண்டும் அங்கே போனால் என்ன செய்ய என்பது முக்கியமான கேள்வி. அரசின் ஆணைக்கேற்ப கடவுச்சீட்டு பெற்று உடனடியாகக் கிளம்பாவிட்டால், சிறைக்குள்ளாக நேரிடும் என்ற பயத்தினால், தோட்டத்தை விட்டு வேண்டா வெறுப்பாகக் கிளம்பியவர்கள், மீண்டும் ஒரு புலம்பெயர்வை எதிர்கொள்கின்றனர். பெரியசாமியின் பதின் பருவ மகள் லட்சுமிக்குக் கிளம்பிட ஆணை கிடைக்காத காரணத்தினால், அவளைத் தோட்டத்திலே விட்டுவிட்டு தாங்கமுடியாத வருத்தத்துடன் குடும்பத்தினர் கிளம்பிட நிர்பந்திக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தினரை அனுப்பாமல், அதிகாரிகள் செய்த தவறினால், பிரிந்திட்ட குடும்பங்கள் பிரிவின் வலியினால் துடித்தன. தாய்நாடு என இந்தியாவைச் சொன்னாலும் முற்றிலும் புதிய நிலத்திற்குப் போய், அங்கே எப்படி வாழ்வது என்ற கேள்வி, புலம்பெயர்ந்தவர்களை விடாமல் துரத்துகிறது. ஓரளவு கல்வியறிவினை மலையக இளைய தலைமுறையினர் பெற்றிருந்தாலும், அரசியல் சூதாட்டத்தில் எதுவும் செய்ய முடியாமல் தத்தளிப்பதுதான் யதார்த்தம். மலைத்தோட்டம் சிங்கள முதலாளிமார் வசம் கைமாறும்போது, அங்கே சிங்களத் தொழிலாளர்களை குடியேற்றிட முயலுகின்றனர். இன்னொருபுறம் மலையகத் தமிழர்களுக்குத் தேர்தலில் வாக்குரிமை அளிக்கும் உரிமை தரும்போது, நாடாளுமன்றத்தில் அவர்களுடைய பிரநிதித்துவம் அதிகரிக்கும். இந்நிலையில் ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிற தமிழர்களின் ஆதிக்கம் இன்னும் மேலோங்கிடும் எனக் கண்டறிந்திட்ட சிங்களப் பேரினவாதத்தின் அரசியல் சூழ்ச்சிதான், மலையகத் தமிழர்கள் நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டதற்கு முதன்மைல் காரணம். நடேசய்யர் ஒன்று திரட்டிய மலைத்தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடத் தலைவர் தொண்டைமான் இருக்கும்போது, இலங்கை குடியுரிமை பெற்றவர்களைச் சிங்களக் காடையர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையையும் மலையகத்தில் நிலவியது. அதேவேளையில் ‘’… சிங்களவன், தமிழன் எல்லாம் ஒத்துமையாத்தான் வேலை பார்த்தானுக. எல்லாம் தொழிலாளிதானேய்யா? தொழிலாளி, முதலாளி பிரச்சினையை இப்ப தமிழன் சிங்களவன் பிரச்சினையா மாத்தியாச்சுன்னா முடிஞ்சது. யாழ்ப்பாணத்துலயும் கொழும்புலயும் இருக்கவன் சிங்களவன் மேலே கோபபடறான் செரி.. இங்க இருக்கிறவனுக்கு என்ன வந்தது? … எனத் தோட்டத் தொழிலாளர் ஒருவர் ஆத்திரத்துடன் சொல்வது புலம்பெயர்ந்த மக்களின் யதார்த்த நிலையைச் சுட்டுகிறது. ஓரளவு அரசியல் விழிப்புணர்வு மலையகத்தில் நிலவினாலும், அரசை எதிர்த்து எதுவும் செய்யவியலாமல், தலைமுறைகளாக வாழ்ந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும்போது, கையறு நிலையில் தவிப்பது மாபெரும் சோகம். நாவலாசிரியர் தமிழ்மகன் மலையக மக்களின் துயர வாழ்க்கையைச் சித்திரிப்பதுடன் நுண்ணரசியல் சார்ந்த கேள்விகளை வாசிப்பில் எழுப்பியுள்ளார். அரசியல் சூதாட்டத்தில் தன்னிலை இழந்த மலையக மக்களின் புலம்பெயர்வு பற்றிய விவரிப்பு, நுணுக்கமான பதிவாக வெளிப்பட்டுள்ளது. மலையகத் தமிழரான பெரியசாமி, தந்து மகள் லட்சுமியைப் பிரிந்த வேதனையுடன் இந்தியாவிற்கு வந்து, கூடலூர் எஸ்டேட்டில் வேலை செய்கிறார். அவருடைய பேரனான முருகன், கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். நவீன கங்காணியான கல்லூரி முதல்வரின் அதிகாரத்தின்கீழ் முருகன் ஒருவகையில் கொத்தடிமையாக இருக்கிறார். அவர் கல்லூரி நூலகத்தில் தற்செயலாகப் பார்த்த சி.வி.வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை என்ற புத்தகத்தில் இருந்த லட்சுமியின் கடிதம், அவருடைய தேடுதலைத் துரிதப்படுத்தியது. பின்னர் முருகன் இலங்கைக்குக் கல்லூரிப் பணியின் காரணமாகச் சென்றபோது, தனது அத்தை லட்சுமியைத் தேடிச் செல்கிறார். லட்சுமி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி, முள்ளிவாய்க்கால் போரில் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்படுகிறார். மலையகத் தமிழர் என்றால் உலகம் அறியாமல் விவரக் குறைச்சலானவர் என்று பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பத்தை லட்சுமியின் கதை சிதலமாக்குகிறது. சிங்களப் பேரினவாதத்திற்கெதிரான ஈழத் தமிழரின் ஆயுதமேந்திய போரில், மலையகத் தமிழர்கள் கணிசமாக இணைந்திருந்தனர் என்பது தமிழ்மகன் சொல்ல விரும்புவதா? யோசிக்க வேண்டியுள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழவழியற்ற நெருக்கடியான சுழலில் இலங்கைக்குப் புலம்பெயர்ந்திட்ட தமிழர்களில் முதல் தலைமுறையினர் அனுபவித்த கொடுமைகளும் உயிரிழப்புகளும் பற்றிய விவரிப்புடன் தொடங்கியுள்ள வனசாட்சி நாவல் காத்திரமான பதிவாகும். அடுத்த நிலையில் மலையகத்தமிழர் அநியாயமாக இந்தியாவை நோக்கி விரட்டப்பட்ட கதையில், நாடற்றவரின் குரல்கள் வெளிப்பட்டுள்ளன. இன்றும் மலையகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழர்கள், பூர்வீகத் தமிழர்களுடன் இணைந்து போராடி உயிரைத் துறந்தது அண்மைக்காலத் தகவல்கள். காலந்தோறும் அதிகாரத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிற சூழலில் மனித உயிர்கள் எதிர்கொண்ட வலிகளைப் புலம்பெயர்ந்த தமிழர்களை முன்வைத்துத் தமிழ்மகன் விவரித்துள்ள வனசாட்சி நாவல், வரலாற்றைப் புனைவுடன் மீட்டுருவாக்கம் செய்துள்ளது.

No comments:

Post a Comment