Saturday 18 April 2015

மனுஷ்ய புத்திரனின் கவிதைகளில் அரசியல்

      மனுஷ்ய புத்திரனின் கவிதைகளில் அரசியல்                                                       

              தமிழ்க் கவிதை சங்ககாலம் முதலாகவே புறம் சார்ந்த நிலையில் அரசியலுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில்  இனக்குழுத் தலைவன், குறுநில மன்னன், வேந்தன் என ஆளுவோரைச் சார்ந்து பாணர், புலவர் வாழ்ந்தனர். தமிழ் மொழி என்ற அடையாளத்தை முன்னிறுத்தி தமிழக நிலப்பரப்பினை விரிவாக்கும் அரசியல், புலவர்கள் மூலம் துரிதமாக நடந்தது. வீரத்தை மேன்மைப்படுத்திய கவிதை வரிகள் அரசியல் அன்றி வேறு என்ன?  அதற்கடுத்த நிலையில்  மதத்தை முன்னிறுத்திக் கட்டமைக்கப்பட்ட அரசியல், காலந்தோறும் கவிதைகளில் வெளிப்பட்டுள்ளது. விடுதலைப் பாடல்கள் எழுதிய பாரதியார், பகுத்தறிவு பாடல்கள் பாடிய பாரதிதாசன் என இருபதாம் நூற்றாண்டுக் கவிதையானது, அரசியல் பின்புலத்திலிருந்து தொடங்குகின்றது. சமூகத்தில் மனித இருப்பு முழுக்க அரசியலை முன்வைத்து இயங்குகையில் கவிதை மட்டும் விதிவிலக்காக இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு செயலின் பின்னரும் அரசியல் நுட்பமாக வினையாற்றுகின்றது. எல்லாவிதமான கவிதைகளும் ஏதோவொரு வகையான அரசியலை முன்னிலைப்படுத்துகின்றன. அரசியலற்ற தன்மை என்ற பேச்சுக்கூட ஒருவகையில் அரசியல்தான். சூழலுடன் ஒத்திசைந்தும் முரண்பட்டும் வாழ்கின்ற  நிலையில், அன்றாட வாழ்வில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் கவிதையாக்கத்தில் வெளிப்படுவது தவிர்க்கவியலாததது. ஆட்சியதிகாரம்மூலம் ஆளுகை செலுத்துகின்ற அரசியல் ஸ்தூலமாக ஒருபுறம் எனில், அதற்கு இணங்குகின்ற உடல்களைத் தயாரிக்கின்ற அரசியல் இன்னொருபுறம் உள்ளதுநவீன கவிதை என்பது புனித வஸ்து போலக் கருதி, சொற்களின் வழியே மங்கலான மொழியில் இருண்மையாக இருப்பதை உன்னதமானது எனக் கருதும் போக்கு தமிழில் வலுவாக உள்ளது. ஐம்பதுகளில் எழுத்து இதழில் வெளியான அகம் சார்ந்து வெளியான கவிதைப் போக்கு, நவீன கவிதைக்கு உன்னத அந்தஸ்தை உருவாக்கி விட்டது. சமகாலத்திய அரசியல் சம்பவங்கள் ஏற்படுத்திய பாதிப்பினால் எழுதப்படும் கவிதைகளை இரண்டாம் நிலையில் மதிப்பிடுவது வழக்கமாகி விட்டது. அரசியல் என்பது வாழ்வின் ஆதாரமானது என்ற புரிதலுடன் எழுதப்படும் கவிதைகள் குறித்து பெரிய அளவில் பேச்சுகள் இல்லாதபோதும்கவிஞர் ஆத்மாநாம் சமரசமின்றி, தனது அரசியல்  விமர்சனங்களைக் கவிதையாக்கியுள்ளார். அவருக்குப் பின்னர் சுகுமாரன் போன்ற சில கவிஞர்கள் முயன்றாலும், தமிழில் பாப்லோ நெரூடா மாதிரி ஆளுமை தோன்றவில்லை. பொதுவாக அரசியல் என்றாலே அலர்ஜியாகும் தமிழ்க் கவிஞர்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

       தமிழகத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் போராட்டம் , திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம் ஆகியன அரசியல் தளத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. எனினும் இன்று அரசியலற்ற நிலைமை ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்நிலையில் மத அடிப்படைவாத இயக்கங்கள், நுண்ணிய அளவில் மத அரசியல்மூலம், மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயலுகின்றன. இதனால் மத அடிப்படைக்கேற்ற பாசிச உடல்களைத் தயாரிக்கப்படுகின்றன. இத்தகு அரசியல் பின்புலத்தில் மனுஷ்ய புத்திரனின் அரசியல் கவிதைகளை மதிப்பிட முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது.

       1983-இல் மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் என்ற தொகுப்பின் மூலம் கவிஞராக அறிமுகமான மனுஷ்ய புத்திரன் இன்று வரை தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார். பன்னிரண்டு கவிதை தொகுதிகள் வெளியிட்டுள்ள மனுஷ்ய புத்திரனின் கவிதைகள், வாழ்க்கை குறித்த விமர்சனங்களைப் பதிவாக்கியுள்ளன. அண்மையில் ஒவ்வொரு மாதமும் உயிர்மை இதழில் வெளியாகும் அவருடைய கவிதைகளின் எண்ணிக்கை, இளங்கவிஞர்களைப் பெருமூச்சு விடச் செய்யும். கவிதை எழுதுவதைத் தவம் போலத் தொடர்ந்து முயலும் மனுஷ்ய புத்திரன் அண்மைக்காலமாக தி.மு..வின் அரசியலைப் பேசுவதுடன், இடைவிடாமல் பல்வேறு சேனல்களில் உரத்து முழங்குகின்றார்.  .அவருடைய கவிதைகளில் பருண்மையாக வெளிப்படும் அரசியல்தான் என்ன? ம் பார்க்கலாம்.

                     தொண்ணூறுகளின் முற்பகுதியில் வெளியான என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்ற தொகுப்பில் மனுஷ்ய புத்திரன் பெரிதும் தன்னிலை சார்ந்து கவிதையாக்கியுள்ளார். போர்கள் முடிந்து/ போர்கள் தொடங்குகின்றன/ ஒவ்வொருநாளும்/ தொலைக்காட்சிச் செய்தியின் முன்/பதட்டத்துடன் அமர்ந்திருக்கிறேன்/ செய்தி வாசிக்கும் பெண்ணே/கடைசி நம்பிக்கையாகிய/ உன் கடைசிப் புன்னகைக்காக. எதன் மீதும் நம்பிக்கையற்று இருத்தலின் மீதான கசப்பான மனநிலையின் வெளிப்பாடு தான் ’’தோழர் ஹிட்லர்’’ கவிதை வரிகள். ஹிட்லரின் வாளும் கவிஞரின் குண்டூசியும் ஒன்றாகி விடாது என்பதை அறிந்தும் கவிஞருடைய பிரகடனம் ஆதிக்க அரசியலை ஏற்பது போல நுட்பமாக மறுதலிக்கின்றது. தொடக்ககாலக் கவிதைகளில் சூழல் பற்றிய அபிப்ராயங்கள் பெரிதும் கவிதையாகியுள்ளன.

       21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் நவீனமான போக்குகளை முன்னிலைப்படுத்திய நிலையில், கவிதையின் பாடுபொருளும் மாற்றமடைந்தது. இன்று முக்கியமான கவிஞர்களாகக் கருதப்படுகின்றவர்கள் பலரும் 90களில் களமிறங்கியவர்கள். இதுவரை வாழ்வின்மீது நம்பிக்கை கொள்ளச் சொன்ன தத்துவங்கள் பலவீனமடைந்த நிலையில், இருப்புக் குறித்த அவநம்பிக்கை பரவலானது. தமிழகத்தில் நிலவிய .தி.மு..வின் ஆட்சியதிகாரம், சில தனிநபர்கள் சார்ந்து எதுவும் நிகழலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருந்தது. தமிழகக் கவிஞர்கள் சொந்த விவகாரங்கள் குறித்துக் கவிதை எழுதிக் கொண்டிருந்த நிலையில், அரசி என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் காலச்சுவடு இதழில் எழுதிய ஆறு கவிதைகளும் அரசியல்ரீதியில் முக்கியமானவை. அவை நீராலானது(2001) தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
              கூந்தல் முடித்தெழுந்த அரசி
              வென்ற நகருக்குள் பிரவேசித்தபோது
              நகரம் ஸ்தம்பித்து நின்றது
              அரசி கண்ணுக்கெட்டியவரை
              ஸ்தம்பித்த நகரையே பார்த்தாள்
              எங்கோ ஒருமரம் அசைந்தது.
              பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது
              அது தன்னுடைய நகரமே என்று
              நிச்சயப்படுத்திக் கொண்டாள்
              அரசி ஸ்தம்பிக்கும் நகரங்களை
              மிகவும் நேசித்தாள்
              ஸ்தம்பித்தல் சக்தியின் வெளிப்பாடு
              மெதுவாக கையை உயர்த்தி
              ’’இனி நகரம் வழக்கம் போல இயங்கலாம்’’
              என்றபோது யாரும் அதை நம்பவில்லை
              மகத்தான அரசி
              மகத்தான மக்கள் சக்திக்கு
              மகத்தான தன் முதல் செய்தியை
              மீண்டும் வலியுறுத்துகிறாள்
              ’’வாகனங்களும் மனிதர்களும்
              வழக்கம் போல சாலைகளில் செல்லலாம்’’

              அன்றைய காலட்டத்தில் அதிகாரத்தின் ருசியைப் பருகியவாறு, எல்லாவற்றையும் தனது ஆளுகையின்கீழ் வைத்து அரசாண்ட முதலமைச்சர் ஜெயலலிதா மீது விமர்சனம் வைப்பதற்குக் கூட ஊடகங்கள் பயந்து கொண்டிருந்தன. அவர் ஒருவர் மட்டும்தான் கட்சியின் மையம். பிறர் எல்லோரும் பூஜ்யங்கள் என்ற நிலையில், எதுவும் பேச முடியாத நிலை உச்சமாக இருந்தது. அரசியின் கையசைப்பில் எல்லாம் இயங்குகின்றன என மனுஷ்ய புத்திரன் விவரிப்பது, கவிதைக்கு ஒருவிதமான அமானுட ஆற்றலை அளிக்கின்றது. அரசியின் பிரவேசத்தினால் நகரம் ஸ்தம்பித்தது என்ற வரிகள் அதிகாரத்தின் உச்சத்தினை வெளிப்படுத்துகின்றன.
              அரசியின் கைகளில் சாவிகளும் கனத்துக் கொண்டிருக்கின்றன. அவளது குரல் ஓங்கி ஒலிக்கின்றது. அரசி/ அவ்வளவு தெளிவான முகத்துடன் கூறுகின்றாள்./ இனி குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது/வேறெந்தக் காலத்திலும்/ நம்முடைய காலத்தினைப்போல் நீதியின் குரல்/இவ்வளவு திடமாக ஒலித்திருக்க முடியாது/ அரசியின் தன்னம்பிக்கை/ அவளை எல்லாக் குற்றங்களுக்கும்/ மேலானவளாக்குகிறது/ குற்றமும் நீதியும்/ அரசியின் உறைந்த கண்களில் ஒடுங்குகின்றன.

              சாத்தான் வேதம் ஓதும் காலகட்டத்தில் எதுவும் நடைபெறும் என்பதைவிட, கண்ணுக்குப் புலப்படாத பயத்தை நிரந்தரமாக மக்களின் மனதில் ஏற்படுத்தி விடுவதுதான் முக்கியமானது. அஞ்சியஞ்சி சாவார் என்ற பாரதியின் வரிகள் எப்பொழுதும் பய பீதிக்குள் உறைந்திருக்கும் மக்கள் பற்றிய விமர்சனம். அதிகாரத்தினுக்கு எதிரான சிறிய முணுமுணுப்பினால்கூட கொடிய விளைவுகள் ஏற்படுமென நடுங்கியிருக்கும் உடல்களைத் தயாரிப்பதுதான் பாசிசத்தின் முதன்மைப் பணி. இன்று வரையிலும் அடிமை உடல்களை உருவாக்குவது தமிழக அரசியலில் நுட்பமாக நடைபெறுகின்றது. ஆட்சி பீடத்தில் இருப்பவரால் சகலமும் சாத்தியம் என நம்ப வைத்து ’’அம்மா அம்மா’’ என ஒற்றைச் சொல்லை மந்திர உச்சாடனமாகச் சொல்வது அதிகாரத்தின் உச்சம். அரசி என மனுஷ்ய புத்திரன் உருவாக்க முயலும் பிரதி அதிகாரம் பற்றிய விமர்சனமாகும். அரசியின் தன்னம்பிக்கை காரணமாக எல்லாக் குற்றங்களுக்கும் மேலானவளாகிறாள் என்பது கவிஞரின் நுண்ணரசியல் தொடர்புடையது.

              அரசி நகரத்து மக்களிடம் பயமும் வெறுப்பும் கொள்ளத் தொடங்கினாள். அரசி எல்லாவற்றையும் ஓரிரவுக்குள் முடிக்க விரும்புகிறாள். எல்லாவற்றையும் வேகமாகவும் அதேவேளையில் சட்டப்படியாகவும் செய்து முடிக்க முயலும் படைத்தலைவன் களைப்படைந்து விட்டான் என்று கவிஞர் புனைந்திருப்பது முக்கியமானது. அரசி எல்லா இடங்களுக்கும்/ ஒரு சித்திரமாக வருகிறாள் என்பது அரசி பற்றிய பிம்பம் பொது வெளியில் கட்டமைக்கப்படுவதைப் பதிவாக்கியுள்ளது. அரசியல் பற்றிய பதிவுகள்   கவிதைகளில் இடம் பெறாமல்  கவனத்துடன் ஒதுங்கியிருந்த தமிழ்க் கவிதைச் சூழலில் மனுஷ்ய புத்திரனின் அரசி பற்றிய கவிதைகள் தனித்துவமானவை. அரசி குறித்த கவிதைகள் இன்றைய தமிழக அரசியல் சூழலில் இன்றும் பொருத்தமாக உள்ளனஒரு காலகட்டத்தில் அரசி குறித்த பேச்சு இல்லாத நிலையில் அந்தக் கவிதை மறைந்து போக வாய்ப்புண்டு. எனினும் அரசி வரலாற்று ஆவணமாக மாறி விடும்.
            நீரடியில் கிடக்கிறது/ கொலை வாள்/ இன்று இரத்த ஆறுகள்எதுவும்ஓடவில்லை/ எனினும் ஆற்று நீரில் கசக்கிறது இரத்த ருசி/ இடையறாத /நதியின் கருணை/ கழுவி முடிக்கட்டுமென்று/ நீரடியில் கிடக்கிறது/ கொலை வாள்நீரினால் சகலமும் புனிதமாகும் என்ற நம்பிக்கையுள்ள சமூகத்தில்  தெய்வமாகக் கருதி வணங்கப்படும் ஆற்று நீருக்கடியில் கொலை வாள் கிடக்கிறது. எப்பொழுதும் கொலைகளை நம்பி நடைபெறுகின்ற அரசியல் என்பது வரலாறு முழுக்க தொடர்கின்றது. இரத்தக் கவிச்சி அடிக்கும் வரலாற்றில் அதிகாரப் போட்டியில் ஆயுதம் ஏந்தப்படும்போது, வெளியெங்கும் மனித உடல்கள் மிதக்கின்றன. மதம் ,சாதி என அரசியல் முன்னிலைப்படுத்தும்போது, காற்றின் பக்கங்களில் ரத்தச் சுவடுகள் அழுத்தமாகப் பதிவாகின்றன. நீருக்கடியில் கிடக்கும் வாள் என்பது  எப்பொழுதும் வெளியே வந்து குருதியைச் சுவைக்கக் காத்திருக்கிறது எனவும் கவிதை வரியை வாசிக்கலாம்.

              ஒருவன் மௌனமாக இறந்து போகிறான்/ அதுதான்/ அனைவரையும் பொறுப்பாக்கிக் கொண்டிருக்கிறது என முடியும் மரண அறிக்கை கவிதை எவ்விதமான தடயமும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றவர்களைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றது. சமூகத்தில் அதிருப்தியடைந்து அல்லது வெறுப்படைந்து தனது இருப்பினை முடித்துக்கொள்ள விரும்பும் ஒருவனின் முடிவுகூட ஒருவகையில் அரசியல் சார்ந்தது.. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டவனின் மரணத்திற்கு வாழ்கின்ற அனவரும் பொறுப்பு என்ற மனுஷ்ய புத்திரனின் கவிதை வரிகள் அழுத்தமான அரசியல் பின்புலமுடையவை.
     
இடமும் இருப்பும்(1998) தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த நகரத்தைத் தூங்க வைக்க வேண்டும் கவிதை நகரப் பின்புலத்தில் பருண்மையான அரசியலை முன் வைத்துள்ளது. நகரத்தில் வாழ்கின்ற நெருக்கடியினால் வேறுபட்ட பிரச்சினைகளினால் துயரமடையும் அவலம் நுட்பமாகப் பதிவாகியுள்ளது. யுத்தத்தின் நெறிமுறைகள்/துமில்லாதஇந்தநகரம்/ துரோகம்/பெட்ரோல்/தூசு/குற்றங்களால்/தன்வழி முறைகளை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றது/ இன்றும் சில பெண்களும்/குழந்தைகளும் காணாமல் போயிருக்கிறார்கள். நகரத்து வாழ்க்கையில் அடையாளமற்றுப் போகும் மனித இருப்பின் நிலையானது எளிய கவிதை வரிகளாகியுள்ளது அக்கவிதை வாசிப்பினில் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகின்றது. இரவு வேளையில் விழித்திருக்கும் நகரம் ஒருபோதும் உறங்காதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

              அதிகாரத்தின் சிறிய திருகாணியான போலீஸ்காரர்கள் பற்றி மனுஷ்யபுத்திரன் உருவாக்கும் பிம்பம் நுட்பமானது. ஏதோ ஒரு குற்றம் சுமத்தப்பட்டு கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காட்சியைக் காண்கின்ற கவிஞரின் சுதந்திரமான மனம் சங்கடப்படுகின்றது.
        இழை
       கைவிலங்கிடப்பட்ட வயோதிகனுடன்
       அப்போதுதான் சலவை செய்த
       முகங்களோடு அவ்விரு போலீஸ்காரர்கள்
       பஸ் ஏறி வந்தபோது
       நான் எப்போதும்
       என்னோடு கொண்டுபோகும் மரத்திலிருந்த
       பறவைகள் திடுக்கிட்டுக் கலைந்தோடின
       இழுத்துச் செல்லப்படும் மனிதர்களின்
       சக பிரயாணியாகும்
       அவமானகரமான துயரங்கள்
       சுற்றிலும் எரியும் கண்களாகியின
       எதிர்கொள்ளலின் நிச்சயங்களோடிருந்த
       கிழவனுக்கு ஒரு போலீஸ்காரன்
       சொல்கிறான்
      கையில் துண்டைப் போட்டு மூடிக்க
       பறவைகளைப் போல எப்பொழுதும் சுதந்திரமாகத் தன்னை அறிகின்ற கவிஞருக்குக் கைகளை மூடிக்கொள் என்ற போலீஸ்காரரின் சொற்கள் விடுவிடுப்பாக உள்ளன. வயதானவர்  கைது செய்யப்பட்டு விலங்குடன் பேருந்தில் செல்கின்ற காட்சியை முன்வைத்து மனுஷ்ய புத்திரன் உருவாக்கியுள்ள வரிகள், கவிதை என்பதில் இருந்து விலகி, மனித இருப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. சக மனிதர்களுக்கு ஏற்படுகின்ற துயரமானது உருக்கமான மொழியில் கவிதையாகியுள்ளது

              அரசியல்  என்பது ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்கான போராட்டம் மட்டும் அல்ல. அது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நுட்பமாகச் செயலாற்றுகின்றது. பெற்றோர்-குழந்தை, கணவன்–மனைவி, நண்பர்களுக்கு இடையில் என அரசியல் அழுத்தமாகச் செயலாற்றுகின்றது. மனுஷ்ய புத்திரன் குறிப்பிடும் இறந்தவனுக்கும் அவருக்குமான உறவு பற்றிய குறிப்பு எதுவுமில்லை. நெருக்கமான உறவினர் அல்லது நண்பராக இருக்கலாம். என்றாலும் இறந்தவனுடன் ஏதோ ஒரு வகையில் நிலவும் அரசியல் கவிதையாகியுள்ளது.
        இறந்தவனின் ஆடைகள்
        இறந்தவனின் ஆடைகளை
       எப்படிப் பரமரிப்பதென்றே
       தெரியவில்லை
       ...   ...   ...
       இறந்தவனின் ஆடைகளை
       அழித்து விடலாம்தான்
       இறந்தவனைத்
       திரும்பத் திரும்ப அழிக்க
       கைகள் நடுங்குகின்றன்.
       இறந்தவனின் ஆடைகள்
       ஆடைகள் போலில்லை
       இறந்தவனின் தோலாக இருக்கிறது.
         இறந்து போனவனைப் பற்றிய நினைவு மீண்டும்மீண்டும் ஏதோ ஒரு வடிவில் தொடர்கின்றது. இறந்தவனின் ஆடைகள் அவனது தோலைப் போல இருக்கின்றன  என்பது கவிதையை அமானுடத்திற்குள் இழுத்துச் செல்கின்றது. இறந்தவன் மீதான பயம் அவனது ஆடையாக மாறியுள்ளது எனவும் கவிதையை வாசிக்கவும் இடமுண்டு.

                                வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி கவிதை (அதீதத்தின் ருசி;2009) ஈழத்தமிழர் போராட்டத்தையும் அதன் விளைவுகளையும் பற்றித் துயர் மொழியில் குறிப்பிட்டுள்ளது. தமிழ் மொழி அடையாளத்தை முன்னிறுத்தி நடைபெற்ற தமிழர் உரிமைக்கான போரராட்டம் சிதலமடைந்த நிலைக்கான அரசியல் மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் அளவற்றுப் பெருகுகின்றன.
              முப்பதாண்டுகளில்
              ஒவ்வொரு சதுர மைலாகச் சுருங்கி
              இப்போது ஒரு கண்ணீஈத் துளியாக
              எஞ்சி விட்டது
              தோழி
              நாம் இன்று அருந்துகிற
              ஒவ்வொரு கோப்பை மதுவும்
              உன் விடுதலைக்காக இறந்தவர்களின்
              குருதியால் நிரம்புகிறது     
       வரலாறு என்பது அழித்தொழிக்கப்பட்டு முகமற்ற மனிதர்களால் நிரம்பி வழியும் சூழலில் எங்கும் வலியும் வேதனையும் நிரம்பி வழிகின்றன. கொலைகாரர்கள் தன்னம்பிக்கையுடன் இறுதி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என வருந்துகின்ற மனுஷ்ய புத்திரனுக்கு இருப்பின் நிலை அபத்தமாகப்படுகின்றது. சுற்றி வளைக்கப்படுவதனால் சுருங்கிப் போவது நிலம் மட்டுமல்ல, மனிதர்களின் சுதந்திரமும்தான்.

              மயான பூமியை நோக்கிக்
              கிளம்புகின்றது
              இறுகிய முகங்களுடன்
              சமாதானத்தின் மரக் கப்பல்
              வரலாற்றில்
              இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள்
              இதற்கு முன்பு
              எப்போதாவது பறவைகளாக மாறி
              வனாந்திரங்களுக்குள்
              பறந்து சென்றிருக்கிறார்களா?
       இப்படியெல்லாம் ஏன் நடைபெறுகின்றன என்று காலங்காலமாகப் பேரிலக்கியம் எழுப்பும் கேள்வியை நவீன கவிதைமூலம் மனுஷ்ய புத்திரன் கேட்கின்றார். சக மனிதர்கள் மீதான வதையின் வழியே அதிகாரத்தைக் கட்டமைக்க முயலும் அரசியல் கவிதை  வாசிப்பின் வழியே வாசகரின் சமநிலையைச் சிதலமாக்கியுள்ளது. ஈழத்தமிழரின் ஒடுக்குமுறைக்கெதிரான முப்பதாண்டு காலப் போராட்டம், அடக்கியொடுக்கப்பட்ட நிலையில், வரலாறு இதற்கு முன்பும் இப்படித்தான் ஒரு பைத்த்தியக்கார விடுதியாக இருந்தததா? என்று கையறு நிலையில் மனுஷய புத்திரன் கேட்பது அவல நாடகத்தின் உச்சம்.
              தோல்வியின் பக்கம் நிற்கிறோம் கவிதையும் இழப்பின் வலியைப் பதிவாக்கியுள்ளது.
              வேறெந்தப் புனித நீரையும்விட
              நம்மைப் பரிசுத்தமாக்குகிறது
              தோல்வியின் கண்ணீர்
              வேறெந்தத் தனிமையைவிடவும்
              பயப்படவும் வைக்கிறது
              தோல்வியின் கண்ணீர்
              வேறெந்த நாளையும்விட
              நம் நினைவுகளில் பிரகாசிக்கிறது
              தோல்வியின் நாள்
       தோல்வியைவிட அதனால் ஏற்படும் கண்ணீர் பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தோல்வியிலிருந்து விடுபடும் மனநிலையை முன்வைத்துக் கலங்குகின்ற மனிதமனம் அதிலிருந்து மீள்கின்ற வழியைத் தேட வேண்டும் எனக் கவிதையின் வழியே மனுஷ்ய புத்திரன் சொல்ல விழைகிறாரா ? யோசிக்க வேண்டியுள்ளது.
       சாத்தானோடு வாழ்வதற்கு சில எளிய பயிற்சிகள் கவிதை, வசன நடையில் சில விஷயங்களை வாசகனோடு பகிர்ந்து கொள்கின்றது. யார் சாத்தான் என்ற கேள்வி எதுவுமில்லாமல் மனுஷ்ய புத்திரன் பகிர்ந்திடும் ஆலோசனைகள் முழுக்க அரசியலானவை. ஒரு சாத்தானை/நீங்கள் திருத்த முயலாதீர்கள்/அதற்கு மனித்த் தன்மையை/கற்றுக் கொடுக்க விரும்பாதீர்கள்/அதற்கு தத்துவப் பயிற்சி அளிக்க விரும்பாதீர்கள்/அதற்குப் புரட்சி செய்ய/கற்றுக் கொடுக்காதீர்கள்/பிற்கு அது உங்களிடம் வரும்போது/உங்களால் அடையாளம் /கண்டுகொள்ள முடியாமல் போய்விடும்.

              சாத்தான் என்பது மனிதர்களுடன் நாளும் உறவாடும் நிலையில் சாத்தனை எங்ஙனம் எதிர்கொள்வது முக்கியமான பிரச்ச்சினை. சாத்தான் இல்லாமல் யாருடைய வாழ்க்கையும் இல்லாத சூழலில் யார் சாத்தான் என்ற கேள்வி தோன்றுகின்றது. இந்தக் கவிதையை நுட்பமாக வாசித்தால் எல்லோரும் ஒரு நிலையில் சாத்தானாக இருப்பதை அவதானிக்க முடியும். உறவினர், நண்பர் என வாழ்கின்ற நிலையில் சாத்தானோடு சமரசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. சாத்தனும் கடவுளும் அவ்வப்போது இடம் மாறிடும் வல்லமை மிக்கவர்கள். சாத்தானை அடையாளம் காண்பது எளிதான விஷயம் அல்ல. இக்கவிதையில் சாத்தானை முன்வைத்து மனிதஉறவில் வெளிப்படும் நுண்ணரசியல் அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது.

I               இதற்கும் முன்பும் இதற்குப் பிறகும்(2010) கவிதைத் தொகுதியில் அரசியல் பற்றிய மனுஷ்ய புத்திரனின் பார்வையில் மாற்றமேற்பட்டுள்ளது. சுயம் சார்ந்த நிலையில் அரசியலை முன்னிலைப்படுத்தி எழுதுவதற்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. குறிப்பாக மனித உடல்கள், மனங்கள் பற்றிய நுண்ணரசியல் கவிதையாகியுள்ளன. அங்கே கடவுள்கள் பிறப்பதற்கு முன் என்ற கவிதையானது மதங்களை வைத்து நடைபெறும் அரசியலானது ஏற்படுத்தும் சேதங்கள் பற்றி விமர்சிக்கின்றது. கடவுள்களை  மனிதர்கள் உருவாக்குவதற்கு முன்னர் ஒரு காலம் இருந்தது, பின்னர் அந்தக் காலமும் அழிக்கப்பட்டது என்ற மனுஷ்ய புத்திரனின் அவதானிப்பு நுட்பமானதாகும். அகழ்வாராய்ச்சிகள் தரும் முக்கியமான தகவல்கள்மூலம் புதிய வரலாறு உருவாக்கப்படுகின்றது. நீதியரசர்கள் புதிய தீர்ப்புகளை எழுதுகின்றனர்
              ஆனால் அதில் ஒரு முக்கியமான
              தடயம் மறைக்கப்பட்டு விட்டது
              அது நம் அனைவரையும் மனம்
              உடையச் செய்வது
              நான் அந்தத் தடயத்தை
              இந்த வரிகளுக்குள் ஒளித்து வைக்கிறேன்
              நீங்கள் அதைக் கண்டுபிடிக்கலாம்
              இன்னும் உங்களுக்கு
              ஒரு இதயம் இருக்கிறது
              ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது
              இபோது அங்கே என்ன இருக்கிறது?
              வெற்றிடம் இருக்கிறது
              துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருக்கிறார்கள்
              கடந்து செல்லும் பறவைகளின் நிழல்கள் இருக்கின்றன
             மதங்களின் பெயரால் அரசர்கள் நடத்திய கூட்டக்கொலைகள், வன்முறைகளுக்கு அளவேது? கருணையே வடிவான கடவுளுக்கு ஒரு மன்னன் ஆலயம் கட்டியதில் இருந்து தொடங்குகின்றது மனித வேட்டை என விரியும் கவிதையின் வழியே விவரிக்கப்பட்டுள்ள அரசியல் காத்திரமானது. கொலைகளுக்கு இன்னும் எவ்வளவோ அவகாசம் இருக்கிறது/கொல்லப்படுவதற்கு இன்னும் எவ்வளவோ ஜனங்கள் இருக்கிறார்கள் என்ற மனுஷ்ய புத்திரனின் நெடுங்கவிதை வரிகள் மதத்தை முன்வைத்து இன்னும் தொடரவிருக்கும் கொலைகள் பற்றி முன்னறிவிப்புச் செய்துள்ளது.

  பசித்த் பொழுது(2011) கவிதை தொகுப்பு வெளியானபோது மனுஷ்ய புத்திரன் நிரம்பக் கவிதைகள் எழுதுகின்றவராக மாறியதுடன், பாடுபொருளிலும் மாற்றமேற்பட்டுள்ளதனை அறிய முடிகின்றது.       வாக்குமூலம் கவிதையில் எதையும் மாற்றிக்கொள்ளாமல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு கண்ணாடி அணிந்தால் போதும் என்ற ஆலோசனை தற்செயலானது அல்ல. எங்கும் போகாமல் எதையும் சமரசம் செய்யாமல், எதையும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லாமல் ஆகின்ற நிலை பற்றிய கவிதை சமகாலத்திய அரசியலின் துல்லியமான வெளிப்பாடு. எளிய மனிதர்கள், குற்ற உணர்வின் போதம் மிகுந்தவர்கள்தான் ஏதோ ஒன்றினைப் பற்றி இருப்பவர்கள் என்பது, கவிதை போகிற போக்கினில் உருவாக்கியுள்ள சூழலின்  மீதான விமர்சனமாகக் கருத வேண்டியுள்ளது.
              எனது எழுத்து
                இரண்டாயிரம் வருஷம்
              பழமையானது
              இந்தச் சுரஙகப் பாதை
              என்றார்கள்
              ...   ...   ...
              இருட்டு
              ஈரவாடை
              வௌவால்களின் றெக்கை ஒலி
              பாம்புகளின் மூச்சு
              ஒன்றுக்கும் பயந்தது இல்லை
              கூடவே பிறந்தது           
              பித்திலிருந்து பிறந்த மந்திரம்
              இன்னும்
              ஓரடி எடுத்து வைத்தால் போதும்
              வெளியேறி விடலாம்
              இப்போது செய்ய வேண்டியதெல்லாம்
              எப்படியாவது மீற வேண்டும்
              இந்த தமிழ் மனத்தை
       தமிழ் மொழியை முன்வைத்துத் தமிழகத்தில் நடைபெற்ற அரசியலினால் சலிப்படைந்த கவிஞரின் மனம் அதிலிருந்து வெளியேற விரும்புகின்றது.மொழி அரசியலின் விளைவாகச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ்க்கை குறித்த அக்கறையினால் அது குறித்த பேச்சுகளை உருவாக்க முயன்றதன் விளைவுதான் தமிழ் மீதான விமர்சனமாக வெளிப்பட்டுள்ளது. பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மனம் உருவாக்கியுள்ள சூழல் குறித்த எரிச்சல், அதை விட்டே விலக வேண்டுமென்ற பதிவு, நகைமுரண்.

                சூரியனுக்கு அருகில் வீடு (2013) கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கல்மரம், நம் காலத்து நாயகர்கள் கவிதைகள் குறிப்பிடத்தக்கன. பெண்ணைக் கல்மரமென மதிப்பிடும் மனுஷ்ய புத்திரன் பெண்ணரசியலின் முக்கியமான அம்சத்தைக் கவிதையாக்கியுள்ளார்.
              … … …
              ஒரு மரம் கல்லாக
              எத்தனையோ வருடங்கள் வருடங்கள் ஆகின்றன
              என்கிறார்கள்
              ஒரு பெண்ணைக் கல்மரமாக மாற்றுவதற்கு
              அவளது
              கனவைச் சிதைப்பது போதும்
              ஒரு நம்பிக்கையை முறிப்பது போதும்
              ஒரு வாக்குறுதியால்
              அவளைக் காத்திருக்கச் செய்தால் போதும்
              ஒரு குற்ற உணர்ச்சிக்கு
              அவளை ஆளாக்கினால் போதும்
              ஒரு துரோகத்தினால்
              அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கினால் போதும்
              எல்லாவற்றையும் விட
              ஒரு கல்மரத்தை முறியடிப்பது கடினம்
              அது அத்தனை வீம்புடன்
              அங்கே அமர்ந்திருக்குகின்றது
       பெண்ணைக் கல்மரமாக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்ற விவரணையின் வழியே மீண்டும் உடல்ரீதியாகப் பெண்ணை அணுகிடும் போக்கினைக் கவிஞர் விவரித்துள்ளார். பெண்ணுடல் கல்லானது என்ற இதிகாச காலத்துக் கவிதை மரபு புதிய வடிவில் கவிதையாகியுள்ளது. ஆண் மனம் கட்டமைக்கும் பெண்ணுடல் குறித்த புதிர்களுக்கு மனுஷ்ய புத்திரனும் விதி விலக்கில்லை என்பது கவிதையில் வெளிப்பட்டுள்ளது. கசப்பு பொங்கிடும் வேளையில் காதலைக் கல்மரத்தினுக்குச் செலுத்துவது அபாயகரமானது என்ற கவிஞரின் கண்டுபிடிப்புப் பற்றிப் பெண்ணியவாதிகள் என்ன சொல்லக்கூடும்?
              நம் காலத்து நாயகர்கள் கவிதை நவீன வாழ்வில் பரிதாபகரமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாயகர்களின் நிலையைப் பதிவாக்கியுள்ளது. குரூரமாக வேட்டையாடப்படும் நம் காலத்து நாயகர்கள் கொடிய குற்றவாளிகளைப் போல கடுமையாக நடத்தப்படுவதன்மூலம் தண்டனைக்குள்ளாகிறார்கள். யாரோ ஒருவன்/ நாயகர்கள் மேல் எறிவதற்கு/சாலையில் கடைசிக் கல்/எதுவும் மிஞ்சியிருக்கிறதா/என ஆவேசத்துடன் தேடிக்கொண்டிருக்கிறான். செய்வதற்கு எதுவுமற்ற நெருக்கடியான சூழலில்முன் மாதிரியாக விளங்க வேண்டிய நம் காலத்து நாயகர்களும் வீழ்ச்சியடையும்போது அவநம்பிக்கைதான் மிச்சமாகிறது. சமூக மாற்றம் குறித்த அக்கறையுடன் கவிதை எழுதத் தொடங்கிய தொடங்கிய மனுஷ்ய புத்திரனின் அரசியல் நம்பிக்கை இன்று சிதலமாகிக் கொண்டிருக்கிறது.
              நூற்றுக்கணக்கில் கவிதைகள் எழுதியுள்ள மனுஷ்ய புத்திரனின் பொதுவான அரசியல் பார்வை காலந்தோறும் மாறி வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதே வேளையில் அவருடைய அரசியல் ஈடுபாடும் கவனத்திற்குரியது. இன்று அவர் தி.மு.. வின் அரசியலை முக்கியமானது எனக் கருதி மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்: சேனல்களில் ஆவேத்துடன் தனது தரப்பு அரசியல் கருத்துகளை அழுத்தமாக முன் வைக்கின்றார்; அன்றாட வாழ்வில் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் குறித்துச் சமரசமற்றுப் பேசுகின்றார். இவையெல்லாம் அரசியல்தான். இத்தகைய அரசியல் குறித்து மனுஷ்ய புத்திரன் ஏன் கவிதைகள் எழுதவில்லை என்ற கேள்வி தோன்றுவது இயற்கை. என்றாலும் சமகாலத்திய சூழலின் தாக்கத்தினால் மனுஷ்ய புத்திரன் உருவாகியுள்ள கவிதைகளில் வெளிப்படும் அரசியல் காத்திரமானது. அரசியல் இல்லாமல் எதுவுமில்லை என்ற கருத்தியல் அடிப்படையில் மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ள கவிதைகள் சம காலத்தின் பதிவாக விளங்குகின்றன.
             
                                                  உயிர் எழுத்து 2014     
      

             
      


No comments:

Post a Comment