Sunday 19 April 2015

அசோகமித்ரனின் தண்ணீர் நாவலும் தண்ணீருக்கான போராட்டமும்

அசோகமித்ரனின் தண்ணீர் நாவலும்  தண்ணீருக்கான போராட்டமும்
                                                               ந.முருகேசபாண்டியன்
                                                                                                                    mpandi2004@yahoo.com

   எழுபதுகளின் நடுவில் எழுத்தாளர் சுஜாதா பிரபலமான வாரப் பத்திரிகையில் எதிர்காலத்தில் தண்ணீர் பாட்டிலில் விற்கப்படும் என எழுதியிருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். வீட்டுக்கு யார் வந்தாலும் பெரிய செம்பில் தண்ணீர் தந்து உபசரிக்கும் தமிழகத்தில் தண்ணீரை விற்பது அதீதமான கற்பனை எனத் தோன்றியது. இன்று சின்னக் கிராமங்களில்கூட 200 மி.லி. தண்ணீர் பாலீதின் பாக்கெட்டில் ரூ.2/-க்கு விற்கப்படுகின்றது. அரசாங்கம் மேல்நிலை நீர்த்தொட்டி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் எனக் குழாய்களின்மூலம் வீடுகளுக்கு விநியோகித்த தண்ணீரைப் பாத்திரத்தில் சேகரித்துக் குடித்த நிலைமை இன்று மாறி விட்டது., தமிழக அரசினால் அம்மா தண்ணீர் ஒரு லிட்டர் ரூ.10/-க்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து சாலையில் நடந்து செல்கின்ற பயணிகளுக்குத் தண்ணீரைத் தர்மமாக வழங்கிய நிலை, இன்றைய தலைமுறையினர் அறியாததது. வான் சிறப்பு அதிகாரம்மூலம் நீரின் சிறப்பினை உலகுக்கு உணர்த்திய திருவள்ளுவர், நீரின்றி அமையாது உலகு எனக் குறிப்பிடுவது ந்தக் காலத்துக்கும் பொருத்தமானது. மாமழை போற்றுவோம் எனச் சிலப்பதிகாரத்தில் மழையைப் போற்றிய இளங்கோவின் குரலில் நீரின் அவசியம் வெளிப்படுகின்றது. பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் பற்றிய நீர் மேலாண்மை அறிவு பண்டைத் தமிழர்களுக்கு நிரம்ப இருந்தது. ஏந்தல், கண்மாய், ஊருணி, குளம், ஏரி, குட்டை எனப் பல்வேறு நீர்த்தேக்கங்களின்மூலம் ஆற்று நீர், மழை நீரைச் சேகரித்துப் பயன்படுத்திர். இன்று நீர்நிலைகள் வீட்டுமனைகளாக மாறிக் கொண்டிருக்கின்ற. தீடிரெனப்  பேய்மழை, பெருவெள்ளம் என மழைக்காலத்தில் தத்தளிக்கும் நகரங்கள், கோடைகாலத்தில் தண்ணீருக்காகத் தவிக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழில்மிகு நதியாகப் பாய்ந்தோடிச் சென்னை நகருக்கு வளம் சேர்த்த  கூவம் ஆறு இன்று பிரமாண்டமான கழிவுநீர் வாய்க்காலாக மாறி விட்டது.. சென்னை போன்ற பெரு நகரத்தில் நிலத்தடி நீருக்காகப் பூமியைத் துளைத்துத் தோண்டப்படும் குழாய்க் கிணறுகள் காலப்போக்கில் வறண்டு போகின்றன. ஒவ்வொரு நாளும் சென்னை நகருக்குள் குடியேறும் மக்களின் தொகை அதிகரித்துக் கொண்டே போகின்றது. எல்லாத் திசைகளிலும் நகரமானது அடிவானத்துக்கப்பால் விரிந்து கொண்டிருக்கின்றது. எல்லோருக்கும் தேவைப்படும் தண்ணீர் தாரளமாகக் கிடைக்க வாய்ப்புள்ளதா? இன்னும் இருபதாண்டுகளில் சென்னை நகரமானது பாலைவனமாகிவிடும் அபாயம் உள்ளது என நீர் மேலாண்மையியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதன் அறிகுறியாகச் சென்னையை ஊடறுத்து அங்குமிங்கும் விரைகின் ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரிகளைச் சொல்ல முடியும். புறநகர்ப் பகுதியிலிருந்த தண்ணீரை லாரிகளில் கொண்டுவந்து விற்பது லாபகரமான பிசினஸாக உருவாகியுள்ளது.
        இன்று சென்னை நகரின்  நிலப்பரப்பில் 10 கி.மீ. தொலைவிற்கு நிலத்தடியில் கடல் நீர் உள்ளே புகுந்து விட்டது. குடிப்பதற்கோ குளிப்பதற்கோ லாயக்கற்ற ஆழ்குழாய் நீரினை வைத்துக்கொண்டு என்ன செய்ய? அரசாங்கத்தை நம்புவதைவிட, லாரி தண்ணீரை விலைக்கு வாங்கித் தொட்டியில் சேகரித்து பயன்படுத்துவது இன்னும் எத்தனை காலம் தாக்குப் பிடிக்கும்? தண்ணீர் பயன்பாட்டினுக்கு அரசாங்கம் ரேஷன் முறையைக் கறாராக அமல்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை பூமித்தாயின் மடியிலிருந்து அளவுக்கதிகமாக நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் வியாபாரம் ஒருநிலையில் வறண்டுவிடும். அப்பொழுது சென்னையில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

அசோகமித்ரனின் தண்ணீர்

              இன்றைய தண்ணீர்ப் பற்றாக்குறையுடன் ஒப்பிடும்போது 1971-ஆம் ஆண்டில் சென்னை நகரில் நிலவிய தண்ணீர்ப் பிரச்சினை ஓரளவு சமாளிக்கக்கூடியதுதான். என்றாலும் நாவலாசிரியர் அசோகமித்ரனின் படைப்பு மனம், எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினை வடிவெடுக்கவிருக்கும் விஸ்வரூபம் பற்றிய பிரக்ஞையுடன் தண்ணீர் நாவலைக் கட்டமைத்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் மக்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீர் என்பது எளிதானது போலத் தோன்றினாலும், அதற்கு பின்னர் பொதிந்துள்ள நுண்ணரசியல் வலுவானது. எல்லா உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் நீரினைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களும் விதிவிலக்கு அல்ல. நகரத்து முடுக்குகளில் ஒண்டுக்குடித்தன வீடுகளில் முடங்கிப் பொழுதைப் போக்கிடும் மனிதர்கள் அத்தியாவசியமான தண்ணீருக்குப் படுகின்ற பாடுகள் அளவற்றவை. ஐம்பூதங்களில் ஒன்றான தண்ணீருக்கும் மனிதர்களுக்குமான உறவினை முன்வைத்து அசோகமித்ரன் எழுதியுள்ள தண்ணீர் நாவல், சூழலியல் பிரச்சினையை றுபரிசீலனை செய்திடப் பின்புலமாக விளங்குகின்றது.

    சென்னை நகரம் எப்பொழுதும் எதிர்கொண்டுள்ள தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறம், திரைப்பட மோகத்தினால் சிக்குண்டுள்ள பெண்களின் அவலம் இன்னொருபுறம் என தண்ணீர் நாவலின் கதைப்பரப்பு விரிகின்றது.  சாதாரண குடும்பப் பின்புலத்திலிருந்து வந்த ஜமுனா, சாயா என இரு சகோதரிகளின் பிரச்சினைகள் தனித்துவமானவை. திரைப்பட உலகினுள் நுழைந்து நடிகையாகிப் பெறவிருக்கும் வாழ்வு குறித்துக் கனவு காணும் ஜமுனா, உதவி இயக்குநர் பாஸ்கர் ராவின் கேவலமான செயல்களுக்குத் தெரிந்தே துணை போகின்றாள். விரைவில் கிடைக்கும் திரைப்பட வாய்ப்புமூலம் தது துயரம் நீங்கிவிடும் எனக் கற்பனையான உலகில் சஞ்சரிக்கின்றாள். இராணுவத்தில் பணியாற்றும் கணவன் விரைவில் சென்னைப் பக்கம் மாறுதலாகி வருவான் என்ற நம்புகின்ற சாயா எப்பொழுதும்  துணிச்சலாக முடிவெடுக்கின்றாள். தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறம், சகோதரி ஜமுனாவின் ஏமாளித்தனம் இன்னொருபுறம் என எரிச்சலடைந்த சாயா, சகோதரியின் வீட்டைவிட்டு ஹாஸ்டலுக்குப் போகின்றாள். பாஸ்கர் ராவின் கபடத்தனம், துரோகம், அயோக்கியத்தனம் ஏற்படுத்தும் அவலத்திலிருந்து விடுபடும் வழி அறியாமல் திகைக்கும் ஜமுனாவைத் திசை திருப்பும் வேலையை சாயா நுட்பமாகச் செய்கின்றாள். ஒரு கட்டத்தில் அவனைத் திட்டுவதுடன், குடைக்கம்பியினால் குத்துகின்றாள்.

   கதாபாத்திரங்களின் மனவோட்டங்களை நாவல் முழுக்க அசோகமித்ரன் நுட்பமாகப் பதிவாக்கியுள்ளார்.’’ ஒரு கணத்தில், ஒரே ஒரு கணத்தில் சாயா மணிக்கணக்கில் நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு விடுவாள்’’ என யோசிக்கும் ஜமுனா தற்கொலைக்குத் துணிந்து விடுகின்றாள். இருப்பின் அழுத்தமும் நடப்பின் வெக்கையும் தாங்கவியலாமல் ஜமுனா, சாயாவைப் பிரிந்து வருந்துகின்றாள். சாயா பிரிந்து போனதற்குத் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணம்தான். தண்ணீரை முன்வைத்து ஜமுனா எதிர்கொள்கின்ற அனுபவங்களாக அசோகமித்ரன் சித்திரிக்கின்ற சம்பவங்கள் நாவலின் போக்கினை வேறு தளத்திற்கு நகர்த்துகின்றன.

   தண்ணீர் நாவல் 1971-இல் கணையாழி இதழில் தொடர்கதையாக வெளிவந்து பின்னர் 1973-இல் நூல் வடிவம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் சென்னை நகரில் நிலவிய கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம் பருவ மழை பொய்த்ததுதான். வீடுகளில் தோண்டப்பட்டிருந்த கிணறுகளின்மூலம் தண்ணீர் இறைத்துப் புழங்கிய நிலையில் மாற்றம். வறண்டு போன கிணறுகளைத் தூர் வாருவது மும்மரமாக நடைபெற்றது. கிணறுகளை ஆழப்படுத்தி சிமிண்டு உறைகளை இறக்கினாலும், தண்ணீர் ஊறாத நிலை. விளிம்புநிலையினர் கார்ப்பரேஷன் குழாய்களில் வந்த தண்ணீரைப் பானைகளில் பிடித்துக் குடிக்கவும், சமையலுக்குப் பயன்படுத்துவதும் செய்தனர்.. தண்ணீர் வராத பகுதிகளில் மாநகராட்சி லாரிகளில் தெருவுக்குக் கொண்டுவரப்பட்ட தண்ணீரைப் பிடிக்க இரவு பகலாகப் பலரும் காத்திருந்தனர்.  வீடுகளுக்கு இணைப்புத் தரப்பட்ட கார்ப்பரேசன் குழாயில் அடி பம்பினைப் பொருத்தித் தண்ணீர் அடிப்பது தனிக் கலை. சில இடங்களில் குழாய்களில் குடிநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து கருப்பாக வந்தது. தண்ணீரைப் பிடித்துப் பாத்திரத்தில் வைத்தால் சில நாட்களில் புழுக்கள் நெளிந்தன. ஆழ் குழாய்க் கிணறுகள் பிரபலமாகாத நாளில் விளிம்பு நிலையினரின் தண்ணீருக்கான போராட்டம் கடுமையாக இருந்தது. வாழ்க்கையின் ஆதாரமான தண்ணீருக்காக அன்றைய சென்னைவாசிகள் பட்ட பாடுகளை நாவலாக அசோகமித்ரன் விவரிப்பது இன்றைய சூழலுக்கும் பொருந்துவதாக உள்ளது.

       நாவலின் தொடக்கமே பம்பின்மூலம் தண்ணீர் அடிப்பதில் இருந்து தொடங்குகின்றது. ஒட்டுக் குடித்தனக்காரர்களிடையே பம்ப் அடிக்கப் போட்டா போட்டி. வீடுகளைக் கட்டி வாடகைக்குவிடும் உரிமையாளர்களுக்குக் குடித்தனக்கார்களுக்குத் தண்ணீர் தர வேண்டும் என்ற அக்கறை எதுவுமில்லை. தெருக்கோடி வீட்டில் மட்டும் எப்படியோ குழாயில் வரும் தண்ணீரைப் பிடிக்கப் பெண்கள் கூட்டம். தண்ணீர் பிடிப்பதில் பழக்கமான குண்டு டீச்சரம்மாவுடன் ஏற்பட்ட சிநேகிதம் காரணமாக ஜமுனா, டீச்சர் வீட்டிற்குப் போகின்றாள். அங்கு டீச்சரின் மாமியார்க் கிழவியுடன் ஏற்படும் அனுபவங்கள் அவளுக்குத் திகைப்பை ஏற்படுத்துகின்றன.

       தெருவில் வைக்கப்பட்டுள்ள வாட்டர் டாங்கில் லாரி மூலம் கொண்டு நிரப்பப்படும் தண்ணீர் விட்டிற்கு இரண்டு பக்கெட் அளவில் கிடைக்கும். அதைப் பிடிக்கவும் அடிதடி, தள்ளுமுள்ளு. அதிகாலை இருளில் ஜமுனாவும் டீச்சரும் அரை மைல் தொலைவு நடந்துபோய், யாரையோ கெஞ்சி இரு தவலைகள் நிரம்பத் தண்ணீர் அடித்துக் கொண்டு வருகின்றனர். தண்ணீருக்காகப் பெண்களின் அலைச்சல் தொடர்கின்றது.

  கார்ப்பரேஷன் ஆட்கள் வீட்டிற்கு இணைப்புத் தரப்பட்டுள்ள தண்ணீர்க் குழாய்களைத் தோண்டி, நிப்புளைக் கைப்பற்றுகின்றனர். போன வருடம் தண்ணீர் வர்வில்லையென்று வீட்டிற்கு இவ்வளவு என்று பணத்தை வாங்கிக்கொண்டு கார்ப்பரேஷன் ஆட்களால் போடப்பட்டதுதான் அந்த நிப்பிள். தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததனால் தெருவெங்கும் மேடுபள்ளம். அப்பொழுது மழை பெய்ததனால் எங்கும் ஒரே சேறும் சகதியும். ஜமுனா குடியிருக்கும் வீட்டில் அடி பம்பில் அடித்த தண்ணீரில் ஃபிளஷ்ஷவுட் தண்ணீர் கலந்து அடிக்கும் மூத்திர நாற்றம் அருவருப்பை மட்டுமா ஏற்படுத்துகின்றது? கார்ப்பரேசன் என்ன செய்கின்றது என்ற கேள்வியும்  தோன்றுகின்றது. தண்ணீரை முன்வைத்து இப்படியெல்லாம் நடைபெறுகின்ற சம்பவங்களை விவரிப்பது மட்டும் அசோகமித்ரனுக்கு நோக்கம் இல்லை. என்றாலும் தண்ணீருக்காகப் பெண்கள் எதிர்கொள்கின்ற சிரமங்கள் வாசிப்பினில் வலியை ஏற்படுத்துகின்றன. நாவலில் எந்தவொரு இடத்திலும்  அநியாயமான நிகழ்வினுக்கெதிராகக் கண்டிக்கின்ற உரத்த குரலைக் கேட்க முடிவதில்லை. இப்படியெல்லாம் தண்ணீருக்காகத் துயரங்களைச் சென்னைவாசிகள் எதிர்கொண்டாலும், அவர்களுடைய மனதில் ஈரம் ததும்புவதை வாசிப்பினில் அறிய முடிகின்றது. ஒருபோதும் வற்றி விடாத அன்புடன் மனிதர்கள் இருப்பது என்னவொரு மேன்மையானது என்பதை டீச்சரம்மா, சாயா கதாபாத்திரங்கள்மூலம் அறிய முடிகின்றது.
         ஜமுனா, சாயாவின் அம்மா படுக்கையிலே மலஜலம் போவதுடன் மனப்பிறழ்வுடன் பேசுகின்றார். பிள்ளைகள் இருவரும் கவனிக்க முடியாத சூழலில் பாட்டியும் மாமாவும் அம்மாவைப் பராமரிக்கின்றனர். எல்லோருக்கும் நடப்பு வாழ்க்கை கசப்பை வழங்கினாலும், சக மனிதர்கள் மீதான ப்ரியம் ஈரத்துடன் இருப்பதை அசோகமித்ரன் தண்ணீர் எனக் குறியீடாகச் சொல்கிறாரா? யோசிக்க வேண்டியுள்ளது.


     தண்ணீர் நாவல் எழுதப்பட்டு 43 ஆண்டுகள் கடந்து விட்டன. அசோகமித்ரன் தண்ணீர் நாவலில் சித்திரித்துள்ள அடிப்படையான விஷயங்களில் இன்றளவும் பெரிய மாற்றம் எதுவுமில்லை.  ஒராண்டில் சற்றுக் கூடுதலாக மழை பொழிந்தால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கின்றது; அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகினறது. தொடர்ந்து இரு ஆண்டுகள் பருவ மழை பொய்த்தால், சென்னை நகரம் தண்ணீருக்குத் திண்டாடிவிடும். இன்று கூவம் ஆற்றின் கரையோரம் வாழ்ந்த மக்களைக் கண்ணகி நகருக்கு மாற்றியாகி விட்டது. தெருவோரத்தில் வாழும் விளிம்பு நிலையினரை அப்புறப்படுத்தி விட்டால், சென்னை சிங்காரமாகி விடுமா என்ற கேள்வியில், நகரம் பணக்காரர்களுக்கு மட்டும்தானா என்று தோன்றுகின்றது.   சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசடைந்துவரும்  சென்னை மாநகரில் நடுத்தர  மக்களின்  வாழ்க்கையும் சிரமமானதாக மாறியுள்ளது. கையில் காசு வைத்துள்ளவனுக்குத் தண்ணீர் தரப்படும் என்பது தண்ணீர் லாரிகளின் முன்னால் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. தண்ணீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதுதான் முறை என்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் கட்டளையை அப்படியே அமல்படுத்தும் நிலை  விரைவில் ஏற்படலாம். அப்பொழுது விண்ணிலிருந்து பொழியும் மழைநீரைப் பாத்திரத்தில் பிடிப்பதற்கும் பணம் தர வேண்டிய சூழல் ஏற்படும். எதிர்காலத்தில் சென்னை நகரில் லட்சக்கணக்கில் பெருகவிருக்கின்ற மக்கள் தொகைக்கேற்ற வகையில், தண்ணீரைத் தருவதற்கு எவ்விதமான காத்திரமான திட்டங்களும் இல்லை என்பது கசப்பான உண்மை

No comments:

Post a Comment